Showing posts with label நேர்முக்கியத் தேர்வு தொடர். Show all posts
Showing posts with label நேர்முக்கியத் தேர்வு தொடர். Show all posts

Monday, September 14, 2015

நேர் முக்கியத் தேர்வு – பாகம் 3


பட்டப்படிப்பு முடிக்கும்போது இறுதி ஆண்டின் இறுதிக் கட்டத்தில், கல்லூரியிலேயே வளாக நேர்முகத் தேர்வு (CAMPUS INTERVIEW) நடப்பது இப்போது பெருகிவிட்டது. அப்படி நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்போதே, அனைத்து இறுதியாண்டு இளைஞர்களிடமும் ‘அவரவர் ரெஸ்யூமை ரெடி பண்ணிக்குங்க’ என்றிருப்பார்கள். உடனே அரக்கப்பரக்க, ஒருவர் தயாரித்த ரெஸ்யூமுக்கு, டிங்கரிங் பார்த்து, பெயிண்ட்டை மாற்றி அடித்து – அதாவது- பெயர், சொந்தவிபரங்களை மட்டும் மாற்றி, ஒரு ரெஸ்யூமே தயாரித்து அதனைக் கல்லூரிக்கு எடுத்துச் செல்வதுதான் இன்று பொதுவான வழக்கமாகப் போய்விட்டது. இதில் கொடுமை என்னவென்றால், யாருடைய ரெஸ்யூமே காப்பியடிக்கப்பட்டதோ, அவரை விட மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக மற்றவர்கள் தயாரித்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு விடுவார்கள். ஒரிஜினல் ஓனர், ஓரங்கட்டப்படுவார்.
      இப்படியாக தயாரிக்கப்பட்ட ரெஸ்யூமேகளை வளாக நேர்முகத்தேர்வில் பயன்படுத்திவிட்டு, அதில் தேர்வு செய்யப்படாமல், வெளியில் வேலை தேடும் நிலை வந்தால், அதே ரெஸ்யூமில், கடைசி செமஸ்டரின் மதிப்பெண்களை மட்டும் சேர்த்துக்கொண்டு, புதிதாக பிரிண்ட் எடுக்கத் துவங்குவார்கள். ரெஸ்யூமேகளை பிரிண்ட் எடுப்பதில் இரண்டுவகை திறமையாளர்கள் உண்டு !
      ஒருவர், நேர்முகத்தேர்வு அன்று காலை, ஒவ்வொரு இண்ட்டெர்நெட் பிரவுசிங் செண்ட்டராகத் தேடி, அவசர அவசரமாக ஒரு பிரிண்ட் எடுத்துக்கொண்டு செல்பவர்.
      இன்னொருவர், தான் வாழ்நாளில் கலந்துகொள்ளப்போகும் அனைத்து நேர்முகத்தேர்வுக்கும் மொத்தமாக 50 பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளும் முன் ஜாக்கிரதை முகேஷ் !
      இதில் இரண்டுபேருமே, கொஞ்சம் தங்களைச் சரி செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.
      முதலில், ரெஸ்யூமே எப்படித் தயாரிக்கவேண்டும் என்று தெரிந்துகொள்வது. அப்படித் தெரியவில்லையென்றால், இந்தக் கட்டுரையின் முந்தைய பாகங்களைப் படித்துப் பார்த்து அறிந்துகொள்வது. பின்னர்.. அதனை எத்தனை பிரிண்ட்டுகள் போடுவது என்று முடிவெடுப்பது.
      வேலைக்கான இண்டர்வ்யூ தினத்தில் , ரெஸ்யூமை பிரிண்ட் போடுவது, நமது மெத்தனத்தைக் காட்டுகிறது.
ரெஸ்யூமேகளை மொத்தமாக 50 பிரிண்ட் எடுத்துவைத்துக்கொண்டு சுண்டல் போல் விநியோகம் செய்வது அதைவிடக் கொடுமை.! முதல் வேலையே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு தன்னம்பிக்கை இருப்பவர்களாகத்தான் நாம் வளரவேண்டும். அப்படியானால், எத்தனை பிரதிகள் ரெஸ்யூமே வைத்துக்கொள்ளலாம்.?
அதிகபட்சம் 5 பிரதிகள் எடுத்துவைத்துக்கொள்ளலாம். ஏனெனில் அதில். இடைப்பட்ட காலத்தில் படித்த ஒரு டிப்ளமோவைச் சேர்க்கலாம். திருத்தலாம். மாற்றங்கள் ஏற்படுத்தும்போது  இரண்டு மூன்று ரெஸ்யூமே தாள்கள்தான் வீணாகும். ஆனால் மொத்தமாக வைத்துக்கொள்ளும்போது , நம் ரெஸ்யூமே ஒருபக்கக் குறிப்பு நோட்டாவதை (One side rough note) தவிர்க்கமுடியாது.
      பொதுவாக, பல்வேறு நிறுவனங்கள் தங்கள் மின்னஞ்சலுக்கு ரெஸ்யூமை அனுப்பச் சொல்லி கேட்பார்கள். அப்படிக் கேட்கும்போது, ஒரு முறைக்கு இரண்டுமுறை படித்துப்பார்த்து, தவறுகளைச் சரிசெய்து அனுப்புவதுதான் சாலச் சிறந்தது.
      அய்யா… இத்துடன் எனது ரெஸ்யூமை இணைத்திருக்கிறேன். தகுந்த வேலைக்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
      என்று நல்ல பிள்ளையாக, தன்மையாக மெயில் டைப் செய்துவிட்டு, ரெஸ்யூமை அட்டாச் செய்ய மறந்துபோகும் அறிவுக் கொழுந்துகளாக சிலர் இருப்பார்கள். ஒரு அழகான கடிதம் எழுதி, அதனை உள்ளே வைக்காமல், வெறும் கவரை மட்டும் அனுப்புவதைப் போன்ற தவறு அது !! 
ஆனால், நிறுவனங்கள் - நம் ஆள், மீண்டும் ரெஸ்யூமை அட்டாச் செய்தால் கூட- உடனடியாக நிராகரித்துவிடும். ஏனெனில், தன் ரெஸ்யூமைக்கூட அட்டாச் செய்யாமல் அனுப்பும் அளவுக்கு கவனக்குறைவான ஆளை அவர்கள் வேலைக்குத் தேர்ந்தெடுக்க விரும்பமாட்டார்கள்.
ஆக, நேராகப் போய், சந்திக்கும்போதுதான் நேர்முகத்தேர்வு நடக்கவேண்டும் என்று இல்லை. அந்த நிறுவனத்துடன், நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தகவல் தொடர்பிலிருந்தே நமது தேர்வு துவங்குகிறது.
அவர்களுடன் நாம் இரண்டு விதங்களில்தான் தொடர்பு கொள்ளுவோம். ஒன்று மின்னஞ்சல், இரண்டாவது நேராகச் செல்வது. இந்தக் காலகட்டத்தில், முதல் வேலைக்கு நிறுவனத்தை அணுகுபவர்கள் பொதுவாக கடிதப்போக்குவரத்து மேற்கொள்வதில்லை.
அப்படி , தகவல் தொடர்பில் முதலாவதாக விளங்கும் மின்னஞ்சல் அனுப்ப நமக்கு ஒரு மெயில் ஐடி எனப்படும் மின்னஞ்சல் முகவரி வேண்டும். ஆனால், அதுவே நம் வேலைத் தகுதியை நிர்ணயம் செய்யும் அளவுக்கு முக்கியமானது.
மெயில் ஐடியில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்காக ஒரு புள்ளிவிபரம். உலகளாவிய வகையில் 86% நிறுவனங்கள் மின்னஞ்சல் முகவரியை வைத்து விண்ணப்பதாரரை எடைபோடும் பாணியைப் பின்பற்றுகின்றன. அதாவது, ஒரு தனிமனிதனின் குணாதிசயத்தை அவரது பெயரை வைத்து எடைபோட முடியாது. ஏனெனில், அந்தப்பெயர் அவரது பெற்றோர்கள் வைத்தது. மேலும் அவர் குழந்தையாக இருக்கும்போது வைத்தது. ஆனால், மின்னஞ்சல் முகவரியை மட்டும் தனக்குத்தானே வைத்துக்கொள்கிறோம். அப்படி நமக்கு நாமே திட்டத்தில் வைத்துக்கொள்ளும் மின்னஞ்சல் முகவரி. நமது குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும் என்பது நிறுவனங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.!
உதாரணமாக கோபு என்ற புதிய மனிதரை ஒரு கூட்டத்தில் சந்திக்கிறீர்கள். பேசுகிறீர்கள். பின்னர் விலகும்போது, மின்னஞ்சல் பரிமாறிக்கொள்கிறீர்கள். அப்போது அவர் மின்னஞ்சல் முகவரியைச் சொல்கிறார். அது GUJAAL_GOPU@GMAIL.COM என்று இருக்கிறது. உடனே அவரைப்பற்றி நமக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும் ?
நிறுவனங்களுக்கும் நமது வேடிக்கையான மின்னஞ்சல் முகவரிகளைப்பார்த்து அதே அபிப்பிராயம்தான் ஏற்படும்.
இங்கே சில மின்னஞ்சல் உதாரணங்களைப்பார்ப்போம்.
anushka_fan_anand@yahoo.com – இவர் வேலையை விட, அனுஷ்காவைத்தான் அதிகம் நேசிப்பார் என்பதை நிறுவனத்துக்குச் சொல்லுகிறார்.
Sweetlittlebabybanu@rediff.com  - இவ்வளவு சின்னக்குழந்தையான பானுவை வேலைக்குச் சேர்த்தால், குழந்தைத் தொழிலாளர் சட்டம் பாயும் என்ற பயம் நிறுவனத்துக்கு ஏற்படும்.
pulsarpandian@gmail.com – பைக் மட்டும் ஓட்டிக்கொண்டிருக்கட்டும் என்று நிறுவனம் விட்டுவிடும்.
Ilovejothi_martin@hotmail.com இவர் ஜோதிக்குத்தான் சரியாக வருவார் என்று நிறுவனம் நிராகரித்துவிடும்.
மேற்கண்ட முகவரிகள் அனைத்தும் கற்பனையே.. அந்த முகவரிக்கு மின்னஞ்சல் செய்துபார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். சில நேரங்களில், உண்மையிலேயே அத்தகைய முகவரிகள் இருந்தால், அவர்கள் பாவம். தான் செய்தது என்னவென்று தெரியாமல் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று விட்டுவிடலாம்.
மின்னஞ்சல் முகவரி எப்படி இருக்கக்கூடாது என்று பார்த்தோம். அப்படியானால், இமெயில் ஐடி எப்படி இருக்கவேண்டும்.?




Friday, August 28, 2015

சுயமான விபரம் - நேர்முக்கியத்தேர்வு: 2

பொதுவாக நாம் ஒருவரைச் சந்திக்கும்போது, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்வோம். அல்லது வேலை பார்த்துக் கொண்டிருந்தாலோ, தொழில் செய்து கொண்டிருந்தாலோ, அந்த நிறுவனத்தின் பெயருடன், நம் பெயரும் அச்சிடப்பட்டிருக்கும் விசிட்டிங் கார்ட் எனப்படும் அறிமுக அட்டையைக் கொடுப்போம்.
வேலை இன்னும் கிடைக்கவில்லை என்றால்… வேலைக்காகச் சந்திக்க வேண்டியவரிடம் நம்மைப் பற்றி ஏதாவது சொல்லலாம். அதைவிட, நம் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, விருப்பங்கள் போன்ற விவரங்களுடன் நம்மைப் பற்றிய கொஞ்சம் பெரிய அறிமுக அட்டையாக அளிக்க வேண்டியதைத்தான் தமிழில் ‘சுய விவரக் குறிப்பு’ என்ற பொருளில் ‘BIO DATA’ என்று பெயரிட்டு அழைத்துக்கொண்டிருந்தோம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, அதன் பொதுவான பெயர் பயோடேட்டாதான். பிறகு உலகளவிய அளவில், அதன் வடிவம் மாறி இப்போது RESUME, CV என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.


முந்தைய அத்தியாயத்தில் RESUME-க்கும் CV-க்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். பொதுவாக நான் சந்திக்கும் கல்லூரி மாணவர்கள் இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று சொல்வார்கள். ஆனால், RESUME – CURRICULAM VITAE இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னாலே வேலை கிடைக்கும் என்றால் என்ன செய்வோம்? உண்மையிலேயே ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் ரெஸ்யூமுக்கும் சிவிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கேட்டிருக்கிறார்கள். நம் ஆள் இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் கடவுளுக்குப் பல பெயர்கள் இருப்பது மாதிரி இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று வாதாடியிருக்கிறார். அப்புறம் என்ன ஆச்சு? என்ற உங்கள் கேள்விக்கு “இதுகூடத் தெரியாத உங்களுக்கு இங்கு வேலை தர இயலாது’ என்ற அவர்களது பதில்தான், பதில்!!
ரெஸ்யூமே என்பது ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் நறுக்குத்தெறித்த அறிமுகப் படிவம். இதில் உங்கள் சுய விவரம், கல்வித் தகுதி, திறமைகள் மற்றும் முன் அனுபவம் இருந்தால் அதனைப் பற்றிய ஒற்றை வரிச் செய்தி இவற்றுடன் நிறுத்திக்கொள்ளலாம்.
கரிக்குலம் விட்டே எனப்படும் CV என்பது, இரண்டுக்கு மேற்பட்ட பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களை கொஞ்சம் விரிவாக, ஆற அமரப் படிக்கும் வகையில் அமைக்கும் அறிமுகப் படிவம். இதில் சுய விவரம். கல்வித் தகுதி. அந்தப் படிப்பில் செய்த ப்ராஜக்ட்கள் (செயல்முறைகள்), சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள், விளையாட்டில் வாங்கிய பரிசுகள், பொது நிகழ்வுகளில் பங்களிப்பு, NSS, NCC, RED CROSS, ரோட்டரி, லயன்ஸ் போன்ற சங்கங்களின் கல்வி நிறுவன அமைப்புகளில் வகித்த பதவிகள் ஆகிய அனைத்தும் இடம்பெறும்.
முதலில் நாம் ரெஸ்யூமை பற்றி விரிவாகப் பார்ப்போம். பொதுவாக முதலில் நிறுவனம் நம்மைப் பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்ள விரும்பும்போது, ரெஸ்யூமைத்தான் கேட்பார்கள். ஏனெனில் இதனை முதலாம் நிலை வடிகட்டலுக்குப் பயன்படுத்தமுடியும்.
ஒரு நிறுவனத்தில் புதிய வேலைகளுக்கு 6 பேர் தேவைப்படுகிறார்கள் என்றால், முதலில் விண்ணப்பிக்கும் 250 நபர்களைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்வது கடினம் என்பதால், அவர்களது ரெஸ்யூமை பார்த்துத்தான் முதல்கட்ட முடிவு எடுப்பார்கள். அப்படியெனில், உண்மையிலேயே ஒரு வேலை தேடும் நபர், நிறுவனத்தின் மனத்துக்குள் நுழைய முதலில் வீச வேண்டிய அம்பு, ரெஸ்யூமேதான். அப்படியெனில் அது எப்படி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். பொதுவாக நாம் செய்வது என்னவென்றால், நண்பனுடைய ரெஸ்யூமை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து, அதில் நம் தகவல்களை மட்டும் மாற்றிக்கொண்டு அப்படியே தேவையான நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துவிடுகிறோம்.
இதனை இப்படி ஒப்பிடலாம். ஒரு பெண்ணைக் காதலிக்க கடிதம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற சூழலில், ஏற்கெனவே ஒரு நண்பன் அதே பெண்ணுக்குக் கொடுத்த கடிதத்தை அப்படியே காப்பி அடித்து, அதில் பெயரை மட்டும் மாற்றிக்கொடுத்தால், அந்தப் பெண் நம்மைப் பற்றி என்ன நினைப்பாள்? (இந்தக் காலகட்டத்தில் அதனை இ-மெயில், SMS என்றுகூடக் கொள்ளலாம்) ஒரு பெண்ணுக்கு நண்பன் அனுப்பிய காதல் ப்ரோப்பஸல் SMS-ஐ அப்படியே பெயர் மாற்றி அவளுக்கே FORWARD செய்தால் எப்படிச் சொதப்புமோ… அதேபோல்தான் காப்பி அடித்து ரெஸ்யூமே அனுப்பினாலும் சொதப்பும்.
சொந்தமாகச் சிந்தித்து கொஞ்சம் கற்பனையும் கலந்து அனுப்பப்படும் ரெஸ்யூமேக்கள் நிறுவனங்களை வெகுவாகக் கவர்கின்றன. ஆனால், அது எந்த வேலை என்பதைப் பொறுத்து மாறுபடும். இங்கே சில கற்பனை மிகுந்த ரெஸ்யூமேகளை பார்க்கலாம்.
இதனையும் அப்படியே காப்பி அடித்துவிட வேண்டாம். உங்களைப்போலவே, நிறுவனத்தினரும் இந்த மாடல் ரெஸ்யூமேக்களை இணையத்தில் நிறையப் பார்த்திருப்பார்கள். அதனால், எச்சரிக்கையாக இருக்கவும்.
ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக, உண்மையிலேயே சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட ரெஸ்யூமிற்கு மதிப்பு அதிகம். அதனை பெயருக்குக் கீழ் எழுதும் OBJECTIVE என்ற விவரத்திலேயே நிறுவனம் கண்டுபிடித்துவிடும். பொதுவாக, அதில்தான் வேலை தேடும் அனைத்து நபர்களும் மாட்டுவார்கள். தன்னுடைய சுயசக்தியால், நேர்மையால், உழைப்பால், நிறுவனத்தையும் நிமிர்த்தி, தன்னையும் வளர்த்துக்கொள்வதுதான் நோக்கம் என்றபோக்கில் இருக்கும் அந்த வார்த்தைகள். இதெல்லாம் சினிமா வசனத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆனால் யதார்த்தமாக எழுதப்படும் OBJECTIVE மீதுதான் நிறுவனம் அதிகக் கவனம் செலுத்தும்.
புதுப் பட்டதாரியாக இருந்தால், OBJECTIVE–ல் முதல் வேலையாக இருப்பதால், வேலை கற்றுக்கொண்டு, அதனை திறம்பட இங்கேயே செயல்படுத்திப் பார்க்க விரும்புகிறேன். வேலையில் என் திறமைகள் என்னவென்று கண்டுணர்ந்து, வளர்த்துக்கொள்ள என்னை இங்கு ஒப்படைக்க விரும்புகிறேன் என்ற ரீதியில் இருந்தால் ஓரளவுக்கு நன்றாக இருக்கும்.
ஏனெனில் HARD WORKING என்ற பதத்தை, முதலில் வேலை தேடுபவர்கள் பயன்படுத்தவே முடியாது. அவர்கள் படிப்பதற்காகச் செய்த கடின உழைப்பு வேறு. அதில் அவர்கள் பணம் செலவழித்து உழைத்தார்கள். ஆனால், வேலை என்று வரும்போது நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு உழைக்க வேண்டும். இதில் மனநிலையே மாறும். அதனை நிறுவனம் கண்டறிந்துகொள்ளும். கடினமாக உழைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாலே போதும்.
அடுத்த அத்தியாயத்தில் தொடர்வோம்...


நன்றி : http://goo.gl/XMv1gM

Wednesday, August 26, 2015

நேர் முக்கியத் தேர்வு

   இன்றைய இளைஞர்களுக்கு வேலை தேடுவது என்பது கற்கால மனிதனின் வேட்டையைப் போன்ற ஒரு சாகஸமாகவே ஆகிவிட்டது.
மான் எதிரில் இருக்கிறது. கையில் அம்பும் இருக்கிறது. மானைக் கொல்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். அம்பு மட்டும் இருந்தால் போதுமா? மானை வீழ்த்த சாதுரியம் வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதே சக்ஸஸ் ஃபார்முலாதான், வேலைக்கான வேட்டைக்கும்.
அம்பைப்போல் கல்வித் தகுதியை வைத்துக்கொண்டு, வேலை என்ற மானை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று இன்றைய இளைஞர்கள், குறிப்பாக புதிய பட்டதாரிகள் பாவம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த வேட்டையின் முக்கிய அம்சமே நேர்முகத் தேர்வுதான். அப்படிப்பட்ட நேர்முகத் தேர்வு என்ற இலக்கை/ஒற்றைக் கதவை எப்படி எட்டுவது/ஓங்கித் திறப்பது என்று எளிமையாகப் புரியவைக்கும் முயற்சிதான் இந்த நேர்முக்கியத் தேர்வு என்ற தொடர்.


நேர்முக்கியத் தேர்வு !





அது ஒரு நீண்ட இரயில் பயணம். நம் எதிரில் மூன்றுபேர். அருகில் இரண்டு பேர்.
.
முதலில் நேர் எதிரில் இருப்பவர்தான் நம் இலக்கு… அவருக்கும் நாம்தான் இலக்கு.!

முதலில் ஒரு புன்னகையை வீசிப்பார்ப்போம். அவர் அதை கேட்ச் பிடித்து திரும்ப புன்னகையாகவே வீசினால், பிழைத்தோம்.. இல்லையென்றால், அந்த வரிசையில் யார் புன்னகைக்கிறார்களோ அவரிடம் தாவுவோம். அதன்பிறகு..பேச்சு இந்த விதமாகத்தான் துவங்கும்..

ஒரே புழுக்கமா இருக்குல்ல?

நீங்க எங்க இறங்கணும்? ( சென்னையா, பெங்களூரா என்ற ரீதியில் )

டயத்துக்கு எடுத்துருவாங்களா?

ட்ரெயினைப் பிடிக்கிறதுக்குள்ள ஒரே டென்ஷனாய்டுது !

என்று ஆரம்பித்து.. “தம்பி என்ன பண்றீங்க?” என்று அவர் கேட்கத் துவங்கி…(பெண்ணாக இருந்தால்.. “என்னம்மா பண்றீங்க?)  பேச்சு வளரும். அப்போது நம்மைப்பற்றி கொஞ்சம் அறிமுகம் கொடுப்போம். அவர் கேள்வியாகக் கேட்டுத் தள்ளுவார். பிறகு, அவருக்கு நம்மையோ, நமக்கு அவரையோ பிடித்திருந்தால்தான் அந்த உரையாடல் கூட அடுத்த கட்டத்துக்குப் போகும்.

இதே நிலைதான் , ஒரு வங்கிக்குள் நுழையும்போதும் ஏற்படும். எதிரில் அமர்ந்திருக்கும் வங்கி அதிகாரிகளில், எந்த கவுண்ட்டரில் உள்ள நபர் நம்மைக் கவர்கிறார்களோ, அவரைத்தான் தேர்ந்தெடுத்து நம் சந்தேகத்தைக் கேட்போம்.

இரு நபர்கள் ஒருவரை ஒருவர் கண்டறிந்து..இவர் நமக்கு ஒத்துவருவாரா என்று மனதுக்குள் அனுமதித்த பிறகுதான் ஒவ்வொரு சந்திப்பும் வெற்றிகரமாக நிகழும்.

பெண்பார்க்கும் படலத்தில், ஆண், பெண் அழகைத் தவிர, அவர்கள் இருவரும் எப்படிப் பேசுகிறார்கள், அவர்களது எண்ணம் எப்படிச் செல்கிறது. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியுமா என்பதைத்தான் பார்த்துக்கொள்கிறார்கள். அதில் ஏதேனும் சிறு இடர் ஏற்பட்டால்கூட, அப்போதே கௌரவமாகத் தவிர்த்துவிடலாம் என்பதுதான் பெண்பார்க்கும் படலத்தின் நோக்கம்.

 மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும், ஒரு மனிதர் இன்னொரு மனிதரைத் தேர்ந்தெடுத்துப் பழகுவதோ, சந்தேகம் கேட்பதோ, வாழ்வதோ நடக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், எதை வைத்து ஒருவர் இன்னொருவரைத் தேர்ந்தெடுக்கிறார்? எந்த விஷயங்கள் ஒருவரை ஈர்க்கிறது என்பதுதான் இங்கே கேள்விக்குறியாக இருக்கும்.

ஒரு ஆளுக்குப் பிடிக்காதவர், வேறு ஒருவருக்கு மிகவும் பிடித்தவர் ஆவதன் மர்மமும் இதுதான் !

ஆனால், சில பொதுவான நல்ல குணாதிசயங்கள் உள்ளவரை எல்லோருக்கும் பிடிக்கும். அதற்கும் மேல் ஒரு மனிதர் சேர்த்துவைத்திருக்கும் அறிவை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதும் மற்றவர்களைக் கவரும் வாய்ப்பிருக்கிறது.

இதே போலத்தான், ஒரு நிறுவனம், தனக்கு ஒரு துறையில் ஊழியர் வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, அதற்குத் தகுதியான ஆளைத் தேர்ந்தெடுக்க ,நடத்தும் ஒற்றைச் சந்திப்பில்தான், ஒரு தனிமனிதரின் அடிப்படை குணாதிசயங்கள் மற்றும் அறிவு கணக்கிடப்படுகிறது. அந்தச் சந்திப்புதான் அவரை “இவர் இதுக்கு ஒத்துவருவாரா? மாட்டாரா?” என்று முடிவெடுக்க வைக்கிறது.

பொதுவாக, ஒரு நிறுவனம், தங்களிடம் காலியாக உள்ள வேலைக்கு – தொழில்நுட்பத் தகுதி மற்றும் வேலைக்கான குணாதிசயம் இருக்கிறதா என்பதை ஒரு சில நிமிடங்களில் அல்லது ஓரிரு சுற்றுகளில் கண்டறிய ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார்கள். அந்த வார்த்தைதான் நம் இளைஞர்களின் வயிற்றில் பந்தாக உருளவைக்கும் ஒற்றைச்சொல்லாகி கபடி ஆடிக்கொண்டிருக்கிறது.

இண்ட்டர்வியூ – நேர்முகத்தேர்வு!

ஒரு இளைஞர் ( ஞன், ஞி இருவரும் சேர்த்துத்தான் ) கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தின் இண்ட்டர்வியூவுக்குச் செல்கிறார் என்றால்..

ட்ரெஸ்ஸை இன் பண்ணிக்க !
கேட்ட கேள்விக்கு ..தெரியுதோ தெரியலையோ.. பட் பட்டுன்னு பதில் சொல்லு !
நிதானமா பேசு!
நேரா உக்காரு!
லைட் கலர் சட்டை போட்டுக்க !
தலையை லூசா விடாத!
கண்ணைப் பாத்து பேசு!
உக்காரலாமான்னு கேட்டுட்டு உக்காரு!
ஒரு சிரிப்போடயே இரு!
சீரியஸா முகத்தை வச்சுக்க!
சொந்த விபரங்களை ரொம்ப சொல்லாத !
சம்பளம் என்னன்னு கேளு!
சம்பளைத்தப்பத்தியே கேக்காத !!

என்று பல்வேறு தரப்பிலிருந்தும் அறிவுரைகள் பறக்கும். அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டு, அங்கே போய்.. கேள்வி கேட்பவரின் முன்னால் எப்படி அமர்வது என்றுகூட முடிவெடுக்க முடியாமல்,  திகில் படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுபோல, சீட்டின் நுனியிலேயே அமர்ந்து… ஏற்கனவே காதில் வாங்கிய அறிவுரைகளில்.. எதைச் செய்வது என்று தெரியாமல், மொத்தமாகச் சொதப்புவதுதான் நமது வேலையாக இருக்கும்.

கேட்கும் கேள்விக்கு, பதில் தெரிந்தால் ஹீரோவாகவும்,  பதில் தெரியாவிட்டால் வில்லனாகவும் ஒரே நேரத்தில், நமக்கு நாமே உணரவைக்கும் உன்னத நிகழ்வான இண்ட்டர்வியூ பற்றி ஒரு தொடராக எழுதலாம் என்று உத்தேசம்..!

இண்ட்டர்வியூ – இது ஒரு மாயச்சொல்லாகவே மாறியிருக்கிறது.
இண்ட்டர்வியூவைத் தமிழில் நேர்முகத் தேர்வு என்று சொல்கிறோம். இன்னும் சரியாகத் தமிழாக்கினால், உள்பார்வை என்று பொருள்படும்.
இந்தப் பொருளுடன் இதனை அணுகினாலே பாதி வேலை முடிந்துவிடும்.
இருந்தாலும், இன்றைய நிறுவனங்கள் என்னென்ன ஒரு ஊழியருக்கான உள்பார்வைப் பேட்டியில் எதிர்பார்க்கின்றன என்று பார்ப்போம்.
முதலில் பார்க்கவேண்டியது ரெஸ்யூம் எழுதுவது..

அதற்கு முன்னால், ஒரு கேள்வி ! Resume … Curriculam Vitae எனப்படும் CV ..இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
-   

    பார்க்கத் துவங்குவோம் !

தினமணி.காம் இணைய தளத்தில் ”ஜங்ஷன்” என்ற பகுதியில் கடந்த 27 வாரங்களாக இந்தத் தொடரை எழுதி வருகிறேன்.. அதன் நகல்தான் இது !!   http://goo.gl/oTWCla




இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...