Friday, February 15, 2008

விருந்து @ சலூன் (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

நான் சலூனுக்குப்போய் முடி வெட்ட ஆரம்பிச்சதை இங்க சொல்லியிருக்கேன் பாருங்க!

அந்த நேரம் பாத்து எனக்கு முடி வெட்டி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது.
முதலில் சுவாரசியம் இல்லாதது மாதிரி இருந்துட்டு..அப்புறம் நண்பனிடம் ...

டேய்..அந்த ஒரு புக்குதான் இருக்கா..இல்லை வேற நிறைய இருக்கா?

நான் பாத்தப்ப ஒரு புக்குதாண்டா இருந்துச்சு!

இது என்னடா வம்பா இருக்கு..நாம போற நேரத்தில் நிறைய பேர் இருந்து அதுல கொஞ்சம் வலுவானவன் அதை எடுத்து படிச்சிக்கிட்டிருந்தான்னா ஆசையெல்லாம் வீணா போயிருமேன்னு ஒரே கவலை.!

அப்புறம் ஒரு நாள் மீண்டும் அவனிடம்..!

ஆமா..அங்க முடி வெட்ட எவ்வளவுடா?

3 ரூபா! -

இதுவேறு கவலையா போச்சு. நம்ம குடும்ப சலூனில் 2 ரூபாதான். 50% நிதி இழப்பை ஏத்துக்கமாட்டாங்களேன்னு யோசிச்சு.. சலூனுக்குன்னு 2 ரூபாதான் வாங்குறது..ஆனா அதுக்கும் முன்னாடி எப்படியாவது ஒரு ரூபாய் தேத்தி வச்சிக்கிறதுன்னு ஒரு சாணக்கியத்திட்டம் போட்டேன்.

அப்பதான் வந்து சேந்தது..குழந்தைகள் திரைப்படம்..!அதைக்காட்டி ஒரு ரூபாய் அதிகமா வாங்கி (என்ன பொய் சொன்னேன்னு நினைவில்லை)
அதை திக் திக்குன்னு பாதுகாத்து வச்சிருந்தா..........

முடிவேற அந்த முறைன்னு பாத்து வேகமாவே வளராத மாதிரி ஒரு உறுத்தல்.. எப்படா அந்த நல்ல நாள் வரும்னு காத்திருக்கும்போது.. நண்பனிடம் சொன்னேன்.

டேய்..! நீ சொன்னது உண்மையான்னு செக் பண்ணப்போறேன்.! நாளைக்கு முடி வெட்டிக்கப்போறேன். அதுவும் குமார் சலூனில்னு சொல்லவும்,

அடடா! அதுக்கு இவ்வளவு நாளா காத்திருந்த..? ஏன் முடி வெட்டிக்கத்தான் அங்க போணுமா? சும்மா தலை சீவுற மாதிரி போய் பாத்துட்டு வரவேண்டியதுதானேடா? நான் பாரு..ஒரு தடவைதான் முடிவெட்டபோனேன். இப்பல்லாம் அடிக்கடி போய்...புது புக் வந்துருச்சான்னு பாத்துட்டு வந்துடுறேன். என்று சொன்னதோடு அல்லாமல்..

அதில் படித்த ஒரு கிளு கிளு கதையையும் எடுத்து விட்டான்.

ச்சை..நம்மல்ளாம் ஒரு ஜென்மமா? வகுப்பில் முதல் மாணவனா இருந்து என்ன பயன்.? ஒரு 'விருந்து' படிக்க இப்படி அல்லாடுறோமேன்னு..வீரம் அதிகமாக..பள்ளிவிட்டவுடன் நேராக குமார் சலூனுக்கு நடையைக்கட்டினேன்.

அங்குதான் எனக்கு அடுத்த ஆப்பு காத்திருந்தது.எங்களுக்கு வீட்டுக்கு முடிதிருத்த வருபவரின் மகன்தான் அந்த குமார்.! சலூனுக்குள் மெல்ல நுழைந்தபின் தான் அந்தக்கொடுமை
தெரிய வந்தது.

என்ன தம்பீ! நல்லா இருக்கியா? நீ அப்பாக்கிட்ட இல்ல வெட்டிக்குவ?

இல்லண்ணே ! சும்மா தலை சீவிக்கிட்டு போகலாம்னு வந்தேன்..

சீவிக்க! சீவிக்க!

என்று சொல்லிவிட்டு..ஒரு சீப்பையும் எடுத்து கையில் திணித்தார். அது மாலை நேரம்.. 3 பேர் அமர்ந்திருந்தார்கள்.அவர்கள் நோக்கம் சரியாகத்தெரியவில்லை. ஒருவருக்கு குமார் அண்ணன் ஷேவிங் செய்துகொண்டிருந்தார்.சலூனை ஒரு சுற்று பார்த்தேன். நல்ல பிள்ளை மாதிரி!

அது ஒரு 10க்கு 8 அடி அறை ! நீளமான கண்ணாடி..எதிரில் ஒரு சுழலும் நாற்காலி..அதற்கு
பின்புறம் ஒரு சிறிய பென்ச். அதில் பல புத்தகங்கள், நாளிதழ்கள்! பென்ச்சுக்கு மேலும் ஒரு நீளமான கண்ணாடி..ஆக உட்கார்ந்திருப்பவருக்கு அவரது பின் தலையும் தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதெல்லாம் அந்த காலகட்டத்தில் மிகவும் அபூர்வம்! மெதுவாக என் பார்வையை அந்த புத்தக, பேப்பர் குவியலில் ஓட்டி 'விருந்தை' தேடினேன்.உட்கார்ந்திருந்த ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருந்தது அது!ஒரு மஞ்சள் ஜாக்கெட் போட்ட பெண்ணின் வித்யாசமான புகைப்படம்.! மேலே 'விருந்து' என்று பெரிய எழுத்தில் எழுதி இருந்தது..!

தலையை அப்படி இப்படி சீவிவிட்டு...மிகவும் யதார்த்தமாக போய் அமர்ந்தேன். கையில் ஒரு பாடாவதி நாளிதழை ( 'விருந்து' க்கு முன்னால் மற்ற எல்லாமே பாடாவதி தானே) எடுத்துக்கொண்டு இப்படி அப்படி நோட்டமிட்டேன். என் அருகில் அமர்ந்திருந்தவர் என்னைவிட மிகவும் உயரம். ஆக என் கண்மட்டத்துக்கு மேல்தான் விருந்து அமர்ந்திருந்தது. மீண்டும் அட்டையை மட்டும் தரிசிக்கும் பாக்கியம்.!
அந்த ஆள் ஒரு வரிவிடாமல் படிப்பான் போலிருந்தது..(நமக்கு புத்தகம் கிடைக்கவிடாமல் பண்ணியவனுக்கு எதுக்கு அவர் இவர் என்று மரியாதை?) 20நிமிடத்துக்கும் மேல ஓடிவிட்டிருந்தது. இதுக்கும் மேல் இங்கு இருந்தால் கண்டிப்பாக அப்பா கையால் டின், தகரடப்பா, எல்லாம் நிச்சயம் என்று பயந்து நான் போய்ட்டு வரேன்ண்ணே என்று கூறிவிட்டு....அப்புறம்..நாளைக்கு இங்க வ்ந்து முடிவெட்டிக்கிறேன் என்று ஒரு வியாபாரக்கொக்கியும் போட்டுவிட்டு கறுவிக்கொண்டே வீட்டுக்கு நடையைக்கட்டினேன்.

அடுத்தநாள் காலைவரை...அந்த மஞ்சள் ஜாக்கெட் அழகியைப்பற்றி படிக்கப்போகிறோம் என்று மிகத்தீவிரமான எண்ணம் வேறு என்னை வாட்டி வதைக்க அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து, படிப்பது போல் பாசாங்கு காட்டி, 6மணிக்கெல்லாம் கிளம்பி..முடிவெட்டிக்கொள்ளப்போகிறேன் என்று பிரகடனப்படுத்திவிட்டு....கிளம்பினேன்.
6:15க்கெல்லாம் கடைவாசலில் போய் நின்றேன். கடை பூட்டியிருந்தது.ஆகா! இது என்னடா ? இன்று கடை லீவோ? நமக்கு நேரம் சரியில்லையோ? என்றெல்லாம் யோசித்துவிட்டு..கையைப்பிசைந்து கொண்டு இருக்கும்போது குமார் அண்ணனின் சைக்கிள் மணி காதில் தேவகானமாய் ஒலித்தது.
அப்பாடி ஒருவழியாய் வந்து சேர்ந்தாரய்யா மனிதர்ன்னு நினைத்துக்கொண்டே,

நான் சீக்கிரமே வந்துட்டேண்ணே!

அப்படியா? சரி இரு வந்துர்றேன்..

என்று கடையைத்திறந்துவிட்டு.. விளக்குமாறை எடுத்து கூட்டி..பத்தி கொளுத்தி காலைத்தொழிலுக்கான ஆயத்தங்களில் இறங்கிக்கொண்டிருந்த வேளையில்.. மீண்டும் நல்லபிள்ளை மாதிரி..பென்ச்சில் அமர்ந்து..'ஆஹா..போட்டிக்கு ஆளே இல்லை' என்று நினைத்துக்கொண்டே சுவரஸ்யம் இல்லாதமாதிரி நடித்துக்கொண்டே, புத்தகக்குவியலில் தேடினேன். தேவி, ராணி, சாவி, தாய், தினத்தந்தி, தினமணி, மாலைமுரசு என்று எனக்குத்தேவையில்லாத பத்திரிகைகளாக கண்ணில் பட 'விருந்தை' மட்டும் காணவில்லை! எப்படி இதைப்போய் குமார் அண்ணனிடம் கேட்பது? சீதையை இழந்த இராமன் போல துடிதுடித்துப்போனேன்.

சரி..இந்த புக்குக்காகத்தானே இந்த சலூனுக்கே வந்தோம்.3 ரூபாயை இப்படி அனாவசியமாக இழக்கப்போகிறோமே என்று குமுறிக்கொண்டே இருக்கும்போதே, அவர் கேட்டார்..

தம்பி ! நேத்து நீ வந்துட்டுப்போனில்ல?

ஆமா!

அப்ப இங்க விருந்து ன்னு ஒரு புக்கு கிடந்துச்சே பாத்தியா?

நான் படிக்கலையே அண்ணே..! ஆனா உயரமான ஒருத்தர் வச்சு படிச்சிக்கிட்டிருந்தார்.

அப்படியா? என்று விட்டு.. பல்வேறு அடையாளங்களை விசாரித்தார்.

இதே எழவாப்போச்சு..! ஆசைப்படுறாங்களேன்னு வெளியூர்லேருந்து வாங்கி கொண்டாந்து போட்டா. அதைப்போய் ஆட்டையப்போட்டுர்றாய்ங்க!

இப்போதுதான் எனக்கு விளங்க ஆரம்பித்தது..அய்யய்யோ..! நேற்று பேப்பரும் ,படமுமாகப்பார்த்த 'விருந்து' இன்று இல்லையா? அப்போது நான் தேர்வில் தோற்றுவிட்டேன் என்று கூறியிருந்தால் கூட அது எனக்கு பெரியதாகப்பட்டிருக்காது. அந்த அளவுக்கு சோகம் அப்பிவிட்டது.பூமி கீழே நழுவுவதுபோல் இருந்தது.

ஆக..என் 'விருந்து' கனவு, கனவாகவே போனது. அந்த வயதில் அது ஒரு பெரிய ஏமாற்றமாக ஆனது.

பிறகு ஒரு 8 வருடங்களுக்குப்பிறகு..'விருந்து' ஒருமுறை படிக்கும் வாய்ப்பு கிடைத்த்து. ஆனால் அப்போது அந்த அளவு ஆர்வம் இல்லை..மேலும் அந்த மஞ்சள் ஜாக்கெட் போட்ட அழகியின் அட்டைப்படம் போட்ட 'விருந்தை' படிக்காத ஏக்கம் இன்று வரை இருந்து வருகிறது.

Thursday, February 14, 2008

சலூனில் விருந்து

 நான் சின்னப்புள்ளையா இருக்கும்போது எங்க குடும்பத்தில், தாத்தா, அப்பா, சித்தப்பா, பெரியப்பா பையன் ஒருத்தன், அத்தை பையன் ஒருத்தன், நான் என ஆண்கள் கூட்டம் அதிகம்.

மாசத்தில் ஒரு நாள் ஒரு முடிதிருத்துபவர் வீட்டுக்கே வந்து எல்லாருக்கும் சகட்டுமேனிக்கு போட்டுத்தள்ளிட்டு போவார். அது ஒரு திருவிழா மாதிரி நடக்கும். வரிசையா போய் அந்த பலகையில் உட்காருவது...
பெரியவுங்களுக்கு மட்டும் பிளேடு போட்டு முகச்சவரம் செய்வதை ஏக்கமா பாத்துக்கிட்டே.. எப்படா எனக்கு இந்தமாதிரி முகமெல்லாம் முடி வரும்னு அண்ணன் கிட்ட கேக்கறதுன்னு..சந்தோஷமும் சண்டையுமா நகரும் முடிவெட்டுற நாள்..

அன்னிக்கு எல்லாருக்கும் மிளகு ரசம் மட்டும் வச்சு, சுட்ட அப்பளம், கருவேப்பிலை துவையலுடன் சாப்பாடு பலமா இருக்கும்.

அப்புறம் நாட்கள் போச்சு...நானெல்லாம் சுயமா (?) சிந்திக்க ஆரம்பிச்சேன். பள்ளிக்கூடம் போற வழியில் அழகான கண்ணாடி கதவு வச்சு சலூன்கள், உள்ளே பாட்டுக்கேட்கும் சலூன்கள் என பல்வேறு சலூன்கள் இருந்தது. அதில் போய் அந்த குஷன் சீட்டில் உட்கார்ந்து
முடிதிருத்திக்கொள்ளவேண்டும் என்று ஆவல் அதிகமானது.

மேலும் சில சமயங்களில்..முடி வளரும் வேகம் குறைவான தாத்தாவின் தலை நிலையைப்பொறுத்து எங்களுக்கு முடிவெட்டும் காலம் வரும்போது நாங்கள் பழைய டோனி நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம்.

இதில் பல்வேறு சதிகள் உள்ளடங்கி இருக்கும்..அதிகம் முடிவளர்ந்தபின் வெட்டினால்தான் கொடுக்கும் காசுக்கு அவரிடம் வேலை வாங்கிய திருப்தி இருக்கும். மேலும் வளரும் பிள்ளைகளுக்கு ஒட்ட வெட்டவேண்டும் என்று அவரை டார்ச்சர் செய்வது என்று!

ஒரு முறை அவர் ஆத்திரமும், இயலாமையுமாக சீப்பு மட்டத்துக்குக்கீழ வெட்டமுடியாதும்மா என்று புலம்பியேவிட்டார்.

இந்த நிலையில் சலூன் கோரிக்கை வைத்து நான் மெதுவா வீட்டில் பிட் போட ஆரம்பிக்கவும், எல்லோருமே இந்த சுதந்திர தாகம் எடுக்கவும் சரியாக இருந்தது.ஆகவே அவரவர் விருப்பப்படி முடி திருத்திக்கொள்ளலாம் என்று விடுதலை பிரகடனப்படுத்தப்பட்டது.நாளை முடிவெட்டிக்கொள்ளப்போகிறோம் என்றால்...சலூன் கனவுகள் இரவெல்லாம் வந்து போனது.

அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. எல்லோரும் ஒரே சலூனுக்குத்தான் போகவேண்டும் என்று.!
அதற்கும் அழுது அடம்பிடித்து பல நாட்கள் முடிவெட்டிக்கொள்ளாமல் போராடி...வேண்டுமென்றே குதறலாக வெட்ட வைத்து கெட்டபெயர் உருவாக்கி என்று
பல்வேறு டகால்டி வேலையெல்லாம் பார்த்த பிறகு..எந்த சலூனிலும் யாரும் வெட்டிக்கொள்ளலாம் என்று குடும்பத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்படியாக, சலூனுக்கு சென்று முடிதிருத்தும் அளவுக்கு தலைமுறைப்புரட்சி செய்த எனக்கு 13 வயது ஆகிவிட்டிருந்தது.

அடுத்த புரட்சியாக வந்து சேர்ந்தான்..என் பள்ளித்தோழன் ஒருவன்.

டேய்! நம்ம பரக்கத் ஸ்டோர்க்கிட்ட இருக்குல்ல..குமார் சலூன்...?

ஆமா!

அங்க இன்னிக்கு முடிவெட்டபோனேன்..

ம்

பேப்பரு..புக்கெல்லாம் கிடந்துச்சு..

சரி..அதுக்கென்ன?

அதுலதாண்டா விசயமே இருக்கு..! அதுல 'விருந்து' ன்னு ஒரு புக்கு இருந்துச்சு பாரு! ஆஹா.!

அப்படி என்னடா இருக்கும் அதுல?

எல்லாம்...மேட்டர்தான்..கதைதான்...!படமெல்லாம் சூப்பர் சூப்பரா இருக்கும்!

(உண்மையா இருக்கணுமே என்ற கவலையுடன்) ச்சீ..பொய் சொல்லாத..!

சத்தியமாடா! (இதுக்கெல்லாம் சத்தியம் வேற)

மேலும் விவரமாய் அவன் சொல்ல ஆரம்பிக்க விருந்து பார்த்தே ஆகவேண்டும் என்ற வெறியை கடுமையாகத் தூவிவிட்டான்..அந்த கடன்காரன்!

அன்றைக்கே முடிவுக்கு வந்துவிட்டேன்...அடுத்தமுறை குமார் சலூனில்தான் முடி வெட்டிக்கொள்வது என்று..!


அப்ப 'விருந்து'? - இருங்கப்பு! அடுத்த பாகத்துல சொல்றேன்.!

Monday, February 11, 2008

சாமி காட்டிய தங்கசாமி!

மரம் தங்கசாமி அய்யா வீட்டுக்குள் போனபோது...
அது ஒரு சாதாரண ஓட்டு வீடு.!
சுற்றிலும் மரங்கள்...அந்த தோப்புக்குள்தான் அவரது வாசம்!
நான் சென்ற நாள் தீபாவளி!      பலகாரம் எல்லாம் கொடுத்து நன்கு கவனித்தார்.
அவர் மனைவிக்கு காது கேட்பதில் கொஞ்சம் சவால், ஆகவே சத்தமாகவும், சைகையுடனும் பேசி..அவரையும் அன்பாக நடத்தி உணவு வழங்கினார்.
(எவ்வளவு பெரிய முறுக்கு..சீயம்..அடேயப்பா!)

தேக்கு..செஞ்சந்தனம், சந்தனம், வேம்பு என்று பல மரங்களைப்பற்றி நிறைய தகவல்கள் சொன்னார்.
சாலமன் தீவுகளில் மரங்களைத்திட்டித்தான் பட்டுப்போகவைத்துவிட்டு வெட்டுவார்கள் என்றும் சொன்னார்.பயமாக இருந்தது...வாக்கின் வலிமை பற்றி யாரோ எழுதியது நினைவுக்கு வந்தது...
இப்போது தாரே சமீன் பர் படத்திலும் அதே தகவலை ஆமீர்கான் சொன்னதும் அடேயப்பா நம்ம ஆள் சாதாரணமானவரில்லை என்றிருந்தது.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நல்ல நண்பர் என்றார்.!

இப்படி பேசிக்கொண்டே,
வாங்க சாமி ரூமுக்கு போலாம் என்றார்..!

அது ஒரு சின்ன தடுப்பு இடப்பட்ட அறை! இந்தப்பக்கம் நாம்! அந்தப்பக்கம் கடவுள்! இடையில் திரை.!
நான் தங்கமணியுடன் போயிருந்ததால், அவர் தங்கமணியைப்பார்த்து நீங்க இதுவரைக்கும் பாக்காத கடவுளை பாக்கப்போறீங்க! நல்லா கண்ணை மூடி தியானம் பண்ணுங்க! என்றார். தங்கமணியும், 'எப்பயும் லொள்ளு பேசிக்கிட்டே இருப்பீங்களே..! இங்கயாவது ஒழுங்கா என் கிட்ட வந்து நில்லுங்க.. நான் வேண்டிக்கிறேன்' என்றார்..சரி ..! விதி வலியதுன்னு நானும் தங்கமணி பக்கத்தில் போய் நின்றுகொண்டேன்.

நல்லா கண்ணை மூடி தியானியுங்க! - தங்கசாமி அய்யா!

சரிங்கய்யா ! - தங்கமணி

என்னமோ வித்யாசமா மரம் தான் கடவுள்னு சொல்லப்போறார்ன்னு நினைத்துக்கொண்டே நான் நின்றுகொண்டிருந்தேன்.சில வினாடிகளுக்குப்பிறகு, திரையை அகற்றினார். (தங்கமணி இன்னும் ஆழ்ந்த வேண்டுதல்களோடு..கண்கள் மூடியபடி...)

எனக்கு உண்மையிலேயே ஒரு வினாடி அதிர்ச்சியாய் இருந்தது.. ஆனாலும் மகிழ்ச்சியாய் இருந்தது.

பக்கத்தில் தங்கமணியை 'பாரு' என்று நான் சொல்ல,
அவர் விழித்துப்பார்த்தபோது.....

அங்கே திரைக்குப்பின்னால் இருந்தது..

ஆளுயர நிலைக்கண்ணாடி.!
கைகளைக்கூப்பியபடி...தன்னைத்தானே பார்த்தபடி..தங்கமணி!

'உங்களைவிட கடவுள் யார் இருக்கா?'
என்று மென்மேலும் அதிர்ச்சியூட்டினார் (தங்கமணிக்கு)

'அய்யா..நீர் மரம் மட்டும் வளர்ப்பதில்லை! மனிதமும் வளர்க்கிறீர்கள்' என்று வாழ்த்துக்களை பதிந்துவிட்டு வந்தோம்.

வரும்போது தங்கமணி கேட்டார்..' முழுசா மனசார வேண்டிட்டு..திடீர்னு நம்ம உருவத்தையே பாத்தவுடனே நாம நினைச்சதெல்லாம் நடந்துரும்னு ஒரு நம்பிக்கை திடீர்ன்னு வந்ததுங்க..! என்னை நான் இதுவரைக்கும் வணங்கிருக்கேனான்னே தெரியலைங்க! ஒருவேளை நாமதான் கடவுளோ?'

Monday, February 4, 2008

மரம் தங்கசாமி

அந்த நகரத்தில் வந்து இறங்கி தன் நண்பர்களைப்பார்த்துவிட்டு பேருந்து நிலையத்தில் வந்து தேனீர் அருந்திக்கொண்டிருக்கிறார் அவர்!

அவர் அருகில் ஒரு இளம் வயது ஆள் வந்து பிச்சை கேட்கிறார்.

'அய்யா காசு குடுங்கய்யா!'

ஏம்ப்பா நல்லாத்தானே இருக்க? ஏதாவது வேலை  செய்யலாமில்ல?

'என் உருவத்துக்கும் அமைப்புக்கும் யாரும் வேலை தர்றதே இல்லைங்க.! அதுவும், பிச்சை எடுக்கறது பழகிப்போச்சு!'

அதெல்லாம் பண்ணாத..! நான் உனக்கு வேலை தர்றேன். பாக்குறியா?

நல்லா பாக்குறேன் அய்யா

'அப்ப இந்தா...! 'தன் சட்டைப்பையில் இருந்து 10 ரூபாயை எடுத்துக்கொடுக்கிறார்.

கையில ஏதாவது காசு வச்சிருக்கியா...?

ம். 18 ரூவா இருக்குங்க!

சரி அந்த காசுக்கு ஏதாவது சாப்பிடு... (தன் பெயரும் முகவரியும் கொடுக்கிறார்) அப்புறம் சேந்தங்குடிக்கு வந்து சேரு..8 ரூபாதான் டிக்கெட்டு...கொத்தமங்கலம் தாண்டி, கீரமங்கலத்துக்கு முன்னால இருக்கு! தெரியுமில்ல?

சரிங்கய்யா..!

என்று விட்டு அவன் நகர...குடித்த தேனீருக்கு சில்லறை எடுத்துக்கொடுக்கும்போதுதான் தெரிந்தது..! கையில் மீதி 5 ரூபாய்தான் இருக்கிறது.ஊருக்குப்போவதற்குக்கூட பணம் இல்லை என்று!

உடனே ஒரு உள்ளூர் நண்பருக்கு செல்பேசியில் பேசி , பத்து ரூபாய் வாங்கிக்கொள்கிறார். இப்போது அவர் கையில் இருப்பது 15 ரூபாய்.!

ஒரு போன் வருகிறது. அய்யா..! நான் கீரமங்கலத்திலேருந்து சீனிவாசன்
பேசுறேன்.

சொல்லுங்க!

உங்ககிட்டதான் நம்ம வீடு கட்டும்போது தேக்கு மரம் வாங்கினேன்..இப்ப நம்ம சகலை வீட்டுக்கும் அதேமாதிரி.2 தேக்கு மரம் வேணுங்கய்யா!

சரி! தந்துட்டா போச்சு! ஒரு மரம் 25000 ரூவா ஆகும்! கிளையெல்லாம் கிடைக்காது.! நடுமரம் மட்டும்தான் தருவேன் பரவாயில்லயா?

தெரியுங்கய்யா.! எப்ப வாங்கிக்கலாம்?

உங்களுக்கு எப்ப வேணும்?

இன்னைக்கு கிடைச்சாக்கூட பரவாயில்லங்கய்யா?

அப்படியா? அப்ப ஒரு லாரியை எடுத்துக்கிட்டு கீரமங்கலத்துலயே காத்திருங்க..! இன்னும் ஒரு மணி நேரத்துல நான் அங்க வரேன். ! தோட்டத்துக்குப்போய் வெட்டிக்கலாம்.!

என்று கூறிவிட்டு...

கண்டக்டர்...கீரமங்கலம் ஒண்ணு குடுங்க! என்று 13 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்கிறார்.

இப்போது அவர் கையில் இருப்பது 2 ரூபாய்.!

கீரமங்கலம் சென்று சீனிவாசனை சந்தித்து மரம் வெட்டும் ஆட்களுடன் லாரியில் சென்று தேக்குமரங்களை வெட்டிக்கொடுத்துவிட்டு, அந்த இடத்திலேயே மீண்டும் இரண்டு மரக்கன்றுகளை , வெட்டியவர்களை விட்டே நடச்சொல்லிவிட்டு, அவர்கள் கொடுத்த தொகையான ரூபாய் 50000த்தை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்குள்
நுழைகிறார்.!

அப்போது சொல்கிறார்..
நான் வளத்த மரங்கள்தான் எனக்கு ஆதாரம்...2 ரூபாயோட பஸ்ஸில் வந்தவனுக்கு....50000ரூபாயோட காத்திருக்குதுங்க என் புள்ளைங்க! இந்த மரங்க! இதுங்களை இத்தனை ஆண்டுகளா வளக்குறதுனாலதான். அதுங்க என்னை வளக்குதுங்க! -இப்படி சிலாகித்துப்பேசுகிறார்.!

அவர்...தங்கசாமி!

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தங்குடியைச்சேர்ந்த இவர்...கடந்த 30 ஆண்டுகளாக மரம் வளர்ப்பதையே ஒரு தவமாகச் செய்துவருகிறார். தன் பெயரான தங்கசாமி என்பதையே மரம்
தங்கசாமி என்று எல்லோரும்அழைக்கும்படி, ஊருக்கு மரங்களால் புகழ்சேர்த்தவர்!

தன் சொந்த நிலத்தில் மரக்கன்றுகளை மட்டுமே நட்டு அவற்றை, குழந்தைகளை விட அற்புதமாய் பராமரித்து.. அவைகளே உலகம் என்று வாழ்ந்து வருபவர்.!

மரத்தைப்பற்றி பேச ஆரம்பித்தால், ' இத்தனை தகவல்களா?' என்று வியக்க வைப்பவர்!

அவரைப்பார்க்க வருபவர்களுக்கு அவர் தரும் முதல் மரியாதை.. ஒரு மரக்கன்றும் .,.அதை நடும் இடமும் காட்டி...நம் கைகளாலேயே நட வைத்து ஒரு நோட்டில் எழுதி அதனைப் பதிவு செய்வது.!

இங்கு 100க்கும் மேற்பட்ட வகை மரங்களை வளர்ப்பதாகச்சொன்னார்.

செஞ்சந்தனம் மரங்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.!

சந்தன மரங்கள் நிமிர்ந்து நிற்கின்றன...!

தேக்கு மரங்கள் சிலிர்த்து நிற்கின்றன! ( எல்லா மரங்களையும் நேர்க்கோட்டில் வளர்ப்பது எப்படி என்றுசொல்லித்தந்தார்)

..அய்யா! இதுங்களோட மதிப்பு யாருக்குமே தெரியல.! சுற்றுச்சூழலுக்கு மட்டுமில்ல!சாதாரணமா பாத்து வளத்ததுக்கு..ஒரேநாளில்ஐம்பதாயிரம் ரூவா யாரு குடுப்பா? இந்த மரங்கள் குடுக்கும்ங்க!

நான் கிராமத்தான்...என்று ஆரம்பித்து.,பல்கலைக்கழகமாணவர்களுக்கு, 3 மணி நேரம்
வகுப்பெடுக்கும் அளவுக்கு யதார்த்தமான பேச்சு நடை!எளிமை! இப்படிப்பட்டவர்கள் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்யுதுன்னு...

இவரைப் பார்த்து தாராளமாகச் சொல்லலாம்..!


இவரைப்பார்க்கச்சென்றபோது....இன்னொரு அதிர்ச்சிகாத்திருந்தது..!

ஆம்...இவர்...கடவுளை கண்முன்னேகாட்டினார்..அது...........

(தொடரும்)

Wednesday, January 30, 2008

உன்னைத்தேடும் முயற்சியில்..




எழுத யத்தனிக்கும்
எல்லாக்
கவிதைகளுக்குள்ளும்
ஓடி ஒளிந்துகொள்கிறாய்
நீ !

உன்னைத்தேடும்
முயற்சியில்
வார்த்தை
வசப்படாமல்,
ஏதோவொன்றை
கிறுக்கவும் முடியாமல்
காகிதச்சிறையில்
சிக்கி முடிகின்றன
என் எல்லாக்
கவிதைகளும்!

எப்படியாவது
கண்டுபிடித்து
விடலாமென்று
பேனா மையை
அனுப்பினால்
அதற்கும் கரிபூசி
வெண்மையாய்
சிரித்து வைக்கிறாய்!

உன்னை
வெளியே
கொண்டுவர
அதிக வார்த்தைகளை
வீணாக்க
விரும்பவில்லை!

ஒரு அறிவிப்பு
வெளியிடுகிறேன்.
'முத்தமிடும்
நேரமிது!'
இதழ்களை
மட்டுமாவது
அனுப்பிவை!

நான் எழுதவேண்டும்.!

Monday, January 28, 2008

குழப்பம் மட்டுமே நிரந்தரம்.



இப்படி ஒரு பதிவு போட்டுட்டு அதுக்கு தொடரும் வேற போட்ட எனக்கு எந்த ஜென்மத்திலும் மோட்சம் :-) கிடைக்காது ன்னு தெரிஞ்சிருந்தும்....


கடவுள் யார் யாருக்கு தேவையில்லைன்னு பாக்கவேண்டிய கட்டாயத்தில்...இறங்கிட்டேன்..!
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன?


நிறைய தப்பு பண்ணிட்டு.. தனக்கெதிரா ஒண்ணுமே நடக்காம இருக்கவும்..இன்னும் தவறுகளின் செறிவை அதிகப்படுத்திக்கிட்டு..ஒரு ஈன மானமே இல்லாத எல்லா ஆளுங்களுக்கும்....கடவுள் தேவை இல்லை!


இன்னிக்கு செத்தா...நாளைக்கு பீருன்னு..! (எங்க பால் கிடைக்கும்?) தன் சந்தோஷம் மட்டுமே குறியா வாழ்ந்து..தன் சார்பான குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துற எல்லா குடிகார ஓநாய்களுக்கும்...கடவுள் தேவை இல்லை!

எல்லா இயமும் பேசிக்கிட்டு...அவர்கள் சொன்னதில் கடவுள் மேட்டரை மட்டும் எடுத்துக்கிட்டு..ஆனா சொன்னவுங்களுக்கே சிலை வச்சு மாலை போடும் எல்லா கலர் சட்டைக்காரங்களுக்கும்...கடவுள் தேவை இல்லை!


தன் சார்ந்த மக்களுக்கு எல்லா நன்மையும் செய்து. அடிப்படையில் அன்பை மட்டுமே வேலையாகவும்..மனிதாபிமானமே தொழிலாகவும் கொண்ட எல்லா மனிதனுக்கும்....கடவுள் தேவை இல்லை!

தன் தாய் தந்தையை அன்புடனும்..மனைவி (அ) கணவனை பரிவுடனும்..குழந்தைகளை அறிவுடனும் பேணும் எல்லா இயல்பான மனிதருக்கும்...கடவுள் தேவை இல்லை.!


ஊரில் இருப்பவனையெல்லாம் இளிச்சவாயனாக எண்ணி அரசு வருமானத்தை மீறி..பேனாவை எடுத்து ஒரு பேப்பரில் இங்க் தெளிப்பதற்கே..காசு கேக்கும் லஞ்ச வேட்டை ராஜாக்களுக்கு....கடவுள் தேவை இல்லை!


'அவனை'க்காண நம்ம்ம்பி வரும் பக்தர்களை அடிமாடுளை விடக்கேவலமாய் நடத்தியும், பிச்சையெடுக்க வந்தவர்கள் போல் அணுகியும் அவர்கள் போடும் உண்டியல் காசில் வயிறு வளர்க்கும் ஏமாற்றுக்காரர்களுக்கு..........கடவுள் தேவை இல்லை!

என் மதம்தான் சிறந்தது! என் சாமிதான் புனிதமானது..இங்கு வந்தால்தான் மோட்சம் கிடைக்கும்னு புத்திசாலித்தனமா எமாற்றி ( அப்படி இருந்தா , ஏண்டா .அவன் என்னை இந்த மதத்தில் படைச்சான்?ன்னு ஒரு புள்ளையும் கேக்காது ங்கிறதெல்லாம் வேற விஷயம்) ஆள்சேர்க்கும் எல்லா கூட்டத்துக்கும் அடுத்த மதக் கடவுள் தேவை இல்லை!

இன்னும்...

செய்த தவறையே திரும்பச்செய்யும் திருடர்கள். கொள்ளையர்கள்.

எந்தப்பாவத்துக்கும் அஞ்சாத கயவர்கள்..

வாழ்வின் சூழல் மேல் நம்பிக்கை உள்ளவர்கள்..வாழ்விலும் தன்னம்பிக்கை உள்ளவர்கள்...

எல்லோருக்கும்...கண்டிப்ப்பாக கடவுள் தேவை இல்லை..!


ஆக...சிலருக்கு வயிறுவளர்க்க.. கடவுள் தேவை!
சிலருக்கு அமைதியாய் வாழ... கடவுள் தேவை!
சிலருக்கு வயிறு வளர்க்க.. கடவுள் தேவை இல்லை.!
சிலருக்கு அமைதியாய் வாழ.. கடவுள் தேவை இல்லை !

முன்னர் சொன்னவர்களுக்கு கடவுள் தேவையில்லாமல் போகலாம்..அவன் இருப்பது ஊர்ஜிதமானால்..
பின்னர் சொன்னவர்களுக்கு கடவுள் தேவைப்படலாம்..அவன் இல்லாதது ஊர்ஜிதமானால்..!

எல்லாம் கலந்துதான் இருக்கிறோம்...!

அப்ப என் கருத்து.? அது இப்படித்தான் குழப்பமா இருக்கும்னு நினைக்கிறேன்..!

கடவுள் இல்லை..!     ஆனால்          கடவுள் தேவை!
கடவுள் இருக்கிறார்...ஆனால்   கடவுள் தேவையில்லை!



டிஸ்கி:  இதை மொக்கையா வேணும்னாலும் எடுத்துக்குங்க ! எனக்குத்ததோன்றியதை எழுதிட்டேன்.!

Thursday, January 24, 2008

கடவுள் தேவையா? தேவையில்லையா?

கடவுள் இருக்கிறாரா?

என் அறிவுக்கு எட்டாத, என் சிந்தனை போய் முட்டி நிற்கும் எல்லாச்செயலிலும் கடவுளைக்கொண்டுவந்து நிறுத்தி, திருட்டுப்போன பொருளுக்கு மட்டும் போலீஸைத்தேடியும், முடியாத உடலுக்கு மருத்துவரைத்தேடியும் கடவுளை நட்டாற்றில் நிறுத்துகிறான் ஆத்திகன்!

கடவுள் இல்லையா?

என் பகுத்தறிவை கூறாக்கி,,, பின் அதனைக்கூராக்கி..எல்லாம் உன்னால் முடியும்.! அதற்கு ஏன் இன்னொரு ஆளை இழுக்கிறாய் ? அதற்கு கடவுள் என்று பெயர் இடுகிறாய் என்று தெளிவான முடிவைச்சொல்லிவிட்டுவீட்டுக்கார அம்மாவின் பக்தியைத்தடுக்க முடியாமல் தவிக்கிறான் நாத்திகன்.!

எனக்கு இந்த இரண்டில்கூட குழப்பமில்லை!!
ஆனால் ஒரு முக்கியக்கேள்வி!

அதெல்லாம் சரி! கடவுளைப்பயன்படுத்தி நாம் சாதித்தது என்ன?

நாம் பெரியவர்களா? கடவுள் பெரியவரா? என்று எழும் கேள்விக்கு..எப்போதும் என் பதில், நாம்தான்..ஏனெனில்..நம்மைப்படைத்ததாகக்கூறி கடவுளையே படைத்தவர்கள் நாம்.! ஆனாலும் கடவுள் பெரியவராக ஆகிவிடுகிறார். நம்மைவிட்டே தம்மைப்படைக்கவைத்துவிட்டு!
என்னதான் கோயில்,சர்ச், மசூதி, இன்னபிற மத ஆலயங்கள் போய் கும்பிட்டு வந்தாலும் நாம் சொல்லும் பொய்களும், புரட்டும், திருட்டும்,வஞ்சகமும்...கொஞ்சம் கூடக்குறையாதவர்களாக நம்மைச்சுற்றியவர்களும்..சில சமயம், நாமும்... இருந்துவிடுகிறோம்.

அப்படியென்றால்....கடவுள் தேவையா?

நிறைய மதங்களைத்தோற்றுவித்தோம். இந்தக்காலத்தில் ஒரு மனிதவள ஆலோசகர் செய்யும் வேலையை..மத குருமார்களை விட்டு செய்யச்சொன்னோம். இன்றைய உயரதிகாரிகளின் சொகுசைப்போலவே அவர்களுக்கும், நிறைய சொகுசைப்பழக்கினோம். அவர்களும் கொஞ்சம் நல்லது பண்ணிப்பார்த்துவிட்டு..இதெல்லாம் வேலைக்காகாது என்று எதையெல்லாம் சிஷ்யர்களுக்கும், இவர்களது பக்தர்களுக்கும் செய்யவேண்டாமென்று சொல்லுகிறார்களோ
அதையெல்லாம் அச்சுப்பிறழாமல் செய்து வைத்து...அதிகமாகத் தப்பித்து..ஆசி வழங்க ஆரம்பித்தார்கள்! ஆக...அந்த மாதிரி மதகுருக்களுக்கு..பிழைப்பு நடத்த..கடவுள் தேவை!

இந்தக்கோயிலுக்கு இவ்வளவு நிதிவழங்கினோம்..அந்த பேராலயத்துக்கு அவ்வளவு நிதிவழங்கினோம் ஆகவே உங்கள் மதத்தார் மேல் எங்களுக்குத்தான் லவ்வு அதிகம்! உங்க ஓட்டெல்லாம்..எங்களுக்கே..ஹி ஹி எனும் அரசியல்வாதிகளுக்கு..... கட்டாயம்
கடவுள் தேவை!

உம்மாச்சி கண்ணைக்குத்தும்...கருப்புசாமி நகர்வலம்வருது..வெளியவராத! அப்பத்தை கடிச்சா இரத்தமாவரும்..அப்பம்தான் இயேசு!..எச்சில் முழுங்கினா நோம்பு நிக்காது.., மறுமை ன்னு
குழந்தைகளையும் மாற்று மதத்தினரையும் பயமுறுத்தும் -அப்போதைக்கு தவறுகளையும், தலையீட்டையும் தள்ளிப்போடும்-பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும்...கடவுள் தேவை!

என்னதான் தவறுசெய்யும் உறுதி இருந்தாலும், "கண்காணி இல்லாதார்...." ன்னு தமிழ் இலக்கியம் வந்து பயமுறுத்தும் நேரத்தில் எதுக்கு இந்த வேலை.? நடக்கறபடி நடக்கட்டும்னு 'அவன்' மேல் பாரத்தைப்போட்டுட்டு தவறு செய்ய அஞ்சும் சாமான்ய மனிதனுக்கு....நிச்சயம் கடவுள் தேவை!

எப்படா அவளைப்பார்ப்போம்னு பகலெல்லாம் காத்திருந்து, வீட்டில் டேக்கா கொடுக்கக்கூடிய ஒரே காரணமான கோயிலைச்சொல்லிவிட்டு அவனைப்பாக்கவே வரும் அவளுக்கும் அவனுக்கும் 'அவர்' இருப்பதாகச்சொல்லப்படும் கோயில் தேவைப்படுவதால்...அவர்களுக்கும் கடவுள் தேவை!   
வாழ்வில் எவ்வளவு துன்பம் வந்தாலும், கடவுள்விட்ட வழி என்று..அதை ஏற்றுக்கொண்டு சமூகத்தவறுகளில் ஈடுபடாமல் ஒரு வித கட்டுப்பாட்டுடன் வாழும் அப்பாவி மனிதனுக்கும்...கடவுள் தேவை!

கோயில்கோயிலாகச்சுற்றி, அந்த சாமி அதுக்கு நல்லது..இந்த மாதா இதுக்கு நல்லது..அந்த தர்கா
அதுக்கு நல்லதுன்னு பத்திரிக்கையில் எழுதி பளபளன்னு பென்ஸ் வாங்க நினைக்கும் எல்லா பக்தி எழுத்தாளிக்கும்...கடவுள் தேவை! (அங்க போனவன் நாசமாப்போனா இவனுக்கென்ன?)

அப்புறம்...கல்யாணம், கருமாதி, காதுகுத்துன்னு எல்லா எழவுக்கும் காசாகவே அவனைப்பாக்கும் புரோகிதர்கள்,

வாஸ்து நிபுணர்கள்,

இறை சிகிச்சை மருத்துவர்கள்,

உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் என்று ஊருக்கு ஊர் உண்டியல் வைத்து காலேஜா கட்டித்தீர்ப்பவர்கள்,

எங்க பரம்பரையே இந்தக்கோயில் சொத்துன்னு ஊர்க்காசை கொள்ளையடிக்கும் தீட்சிதர்கள்,

கோயில் ஆகம கொள்ளையர்கள்,

அனைத்துக்கோயில் பூசாரிகள்,

பாதிரிமார்கள்,
உழைக்காமல் ஊர்சுற்றும் பல்வேறு மத பிரசாரகர்கள்..

(இன்னும் பலர் பட்டியலில் விட்டுப்போயிருக்கும்) ஆகிய அனைவருக்கும் வயிறு வளர்க்க...
கடவுள் தேவை!


அப்ப கடவுள் தேவையில்லையா?

யாருக்கெல்லாம் தேவையில்லை?



                                                                                                                             - தொடரும்

டிஸ்கி: நீங்கள் என்னவேண்டுமானாலும் பின்னூட்டலாம். ஒரு விவாதம்தான் வேண்டும்!
இந்த சிந்தனையைத்தூண்டியவர், நண்பரும்..அண்ணனும் ஆன
சுரேஷ் என்ற கிருஷ்ணமூர்த்தி.! அற்புத சிந்தனையாளர்!

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...