Tuesday, July 22, 2008

ஒரு பண்ணையின் மரணப்படுக்கை - இரண்டாம் பாகம்




இதெல்லாம் இங்க இருக்கும் அலுவலகங்களின் பெயர்ப்பலகைகள்....ஆனா அலுவலகங்கள் !?  :(

இங்கு ஆயிரக்கணக்கான தாவரங்கள் வளர்ப்பதும், அதை ஆராய்ச்சி செய்வதும்..  தமிழகத்தில் பண்ணை வளத்தை பெருக்கவும் உருவாக்கப்பட்டு...இன்று இந்த அளவில் இருக்கு!

இதையெல்லாம் காணச்சகிக்காம அரசாங்கத்துக்கு ஒரு மாதிரியா லெட்டரும் போட்டு விட்டுட்டேன்.....!

அய்யா என்ன நினைச்சு ஒரு விஷயத்த ஆரம்பிக்கிறீங்க! அதை ஏன் அப்புறம் அம்போன்னு விட்டுடுறீங்க!  
எங்க அடுத்த தலைமுறையெல்லாம் இப்படி ஒரு பண்ணை 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டதுன்னு வரலாறுல படிக்கவா? எவ்வளவு அழகான பகுதி! இதை இன்னும் மேம்படுத்தினா...இந்த மாவட்டத்துக்கான சுற்றுலா வருமானத்தை சர்வசாதாரணமா வாங்கித்தரும் போல இருக்கே!ன்னு புலம்பித்தள்ளிட்டேன்.

அவுங்களுக்கு போட்டோ எல்லாம் அனுப்பலை! கெடுத்தவுங்களுக்குத் தெரியாதா ...அதை எப்படிக்கெடுத்தோமுன்னு? அதை படம் போட்டு வேற விளக்கணுமாக்கும் !? :)

இதுதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையோட நிலைமை!

இதுதான் அந்த அழகான சாலை! (சூப்பரா பராமரிச்சிருக்க வேண்டியது ! )

ஆனா ஒண்ணுமட்டும் நல்லா தெரிஞ்சுச்சு..!

அந்த அழகான அண்ணா பண்ணை
இன்று மரணப்படுக்கையில் இருக்கிறது..!
கடைசில பால் ஊத்தக்கூட ஆள் இல்லாம
போகப்போவுது!
அதுக்கு முன்னாடி ஏதாவது வைத்தியம் பாத்தாத்தான் உண்டு.!
இதுல பெரிய நகைச்சோகம் என்னன்னா, 
இதை பராமரிக்கிறதா கோடிக்கணக்குல சுருட்டிக்கிட்டிருக்காய்ங்க 
எல்லா கயவாளிக்கனவாண்களும் !

Wednesday, July 16, 2008

ஒரு பண்ணையின் மரணப்படுக்கை

   மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ன்னு காச் காச்ன்னு கத்திக்கிட்டே இருந்தாலும் கான்கிரீட் பில்லரும் மரம் மாதிரிதானே   இருக்குன்னா   கன்னா   பின்னான்னு  வீங்கிக்கிட்டே போகும் பூமில.... முப்பது வருசத்துக்கு   முன்னாடி   தோட்டக்கலை மூலமா சிறு மரங்களை பயிரிட்டு, ஆராய்ச்சி செஞ்சு  பல்வேறு  பண்ணைகளை உருவாக்க முன்னோயா இருக்கணும்னு .. அண்ணா பண்ணைன்னு ஒரு பண்ணையை புதுக்கோட்டைக்கிட்ட  குடுமியான் மலைல தோட்டக்கலைத்துறை மூலமா அரசாங்கம் உருவாக்கியிருக்கு! (எம்.ஜி.ஆர் அரசு என்று கேள்வி) 

அது ஒரு காலத்துல சோலைவனமா இருந்துச்சு! 

இனிமே இது வரண்ட மாவட்டமில்லை! வளங்கள் அனைத்தும் திரண்ட மாவட்டம்ன்னு அடுக்குமொழி வசனமெல்லாம் பேசினாங்க! 

அண்ணா பண்ணைக்கு கல்விச்சுற்றுலாவா பசங்க எல்லாம் போய்ட்டு வந்த காலமெல்லாம் உண்டு.! 

விவரம் தெரியாத வயசுல ஒரு தடவை பஸ் அந்தவழியா போகும்போது பாத்திருக்கேன். பள பளன்னு நிறைய கட்டிடங்களும், மரங்களுமா வளமா பாத்த ஞாபகம் அலையடிக்குது ! 

இங்கதான் இருக்கே பாத்துக்கலாம்ன்னு...இவ்வளவு வருஷமா ஓட்டிட்டேன். ( பக்கத்துல இருக்குற அற்புதமான ஆள், பயனுள்ள பொருள், புகழ்பெற்ற இடத்தோட மகிமை எப்பத்தான் நமக்கு தெரியப்போகுதோ?) அன்னிக்கு அந்த வழியா வேலை இருந்ததால, வண்டிய விட்டேன்.


அண்ணா பண்ணைங்கிற அந்த வரவேற்பு வளைவை பாத்ததுமே பக்குன்னு இருந்துச்சு! போகப்போக பல அதிர்ச்சிகளை நான் சந்திக்க வேண்டி இருந்தது.



நீங்களே பாருங்க..! பல கோடி ரூபாய் பொருள் செலவுல, அரசு நல்லது பண்ணலாம்ன்னு யோசிச்சு செய்ய ஆரம்பிச்ச திட்டத்தோட இப்போதைய 
நிலமைய! ரொம்ப கொடுமை என்னன்னா..பல கட்டிடங்கள்ல ஆள் நடமாட்டமே கிடையாது. இதுலதான் பயிற்சிக்கூடமும் இருக்கு..! அதுல என்ன பண்றாங்கன்னே தெரியலை!
எப்பவும் அதுக்குன்னு நியமிக்கப்பட்ட சொற்ப ஊழியர்கள் வந்து போறதுனால, ஏதோ மனித நடமாட்டம் இருக்கு! ரோட்டுக்கு ரெண்டுபக்கமும் கட்டிடங்களும், மரங்களுமா இருக்கும் இந்த பண்ணையோட மொத்த பரப்பளவு 34000 ஏக்கராம். ரோட்டில் மொத்தம் 4 கிலோமீட்டர் நீளத்துக்கு இருக்கு!
அந்த பிரம்மாண்டமெல்லாம், வேலையே நடக்காம அங்கொன்னும் இங்கொன்னுமா இருக்கும் முந்திரி மரங்களோட முடிஞ்சு போயிடுது..! 
இங்க என்னன்ன அலுவலகங்கள் இருக்குன்னு தெரியவந்தப்ப...வந்த டென்ஷனை அடக்க திண்டாடிப்போயிட்டேன். அதிலயும் ஒரு பேங்க் இருக்கு பாருங்க! அடேயப்பா! அந்தப்படங்களெல்லாம்...... அடுத்த பதிவில்...தொடரும்..!


Wednesday, July 9, 2008

இதோ வந்துட்டேன்...!

பதிவுலகத்துக்கு வணக்கம்.

இவ்வளவு இடைவெளி விழும்ன்னு நான் நினைக்கவே இல்லை!
(நல்லவேளை தப்பிச்சீங்க)

இந்தமாசம் பதிவு மாசம்தான்..!


வாழ்வின் ஒரு மாத நிகழ்வுகள்
நிறையவே ஆகிவிட்டது.
பல்வேறு சந்திப்புகள்
சில வெற்றிகள்
பல நகைச்சுவைகள்
கொஞ்சம் குமுறல்கள்
நிறைய கருத்துக்களங்கள்
குறைய தட்டிக்கேட்டல்கள்
அதிலும் சில உடனடி வெற்றிகள்
இரு ஜனனங்கள்
பல மகிழ்ச்சிகள்
என

ஜூன்மாதம் உணர்வுகளால் நிறம்பி வழிந்தது.
அது தந்த மயக்கமும், அயர்ச்சியும் எழுத விடவில்லை..!

எல்லாம் முடிச்சு....

இதோ வந்துட்டேன்.

Wednesday, June 11, 2008

தசாவதாரம் - விமர்சனம் !

இன்று படத்தை முழுமையாகப்பார்த்தாகி விட்டது.அருமையாக வந்திருக்கிறது.
இந்தப்படத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் நான் எழுதினால் பாராட்டித்தான் எழுதுவேன்.

படத்தை பார்த்துவிட்டு உடனே விமர்சனம் எழுதுங்கள்.

ஒரு முழுமையான திரை அனுபவத்தை திரை அரங்கில் உணருங்கள்.தயவு செய்து டிவிடி வேண்டாம்.படத்தின் பிரம்மாண்டத்தை உணராமலேயே போய்விடுவீர்கள்.எல்லா முன்செய்திகளையும் ஓரம் கட்டிவிட்டு, முழுமையாக திரைப்படத்தை பாருங்கள்.

கொஞ்சம் குழந்தை, கொஞ்சம் பெரிய மனித தோரணையுடன் , எந்த
ஒரு முன்முடிவும் இல்லாமல் தியேட்டருக்குள் நுழையுங்கள்...!
ஒரு அற்புத அனுபவம் காத்திருக்கிறது.

Saturday, June 7, 2008

இரு திருமணங்கள்

இரு திருமணங்கள்


நேற்று முகூர்த்த நாள்..
ஊருக்குள் பலப்பல விழாக்கள்.. நானும் சில விழாக்களில் கலந்துகொண்டேன்.

அது ஒரு மருத்துவர் குடும்ப திருமணம்.! அவரது மகனுக்கு ஈரோட்டில் உள்ள பிரபலமான தொழிலதிபர் குடும்பத்துப்பெண்ணை மணம் முடிக்கிறார்கள். நல்ல கூட்டம். சுமார் ஆயிரம்பேர் அமரக்கூடிய மண்டபம். ஆயிரம் பேர் அமர்ந்தும் இருந்தோம். முகூர்த்த வேளை நெருங்கியது. யாருக்கும் அட்சதை கொண்டு தரப்படவே இல்லை. ஏன் இப்படி செய்கிறார்கள்? மறந்துவிட்டார்களோ? என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். அந்த விஷயம் மணமகனின் தந்தை (மருத்துவர்) காதுக்குப்போனது. அவர் மேடையில் இருந்தே ' நான் இருக்கிறேன்' என்பதுபோல் ஒரு பாவனை செய்தார்.

முகூர்த்த நேரமும் வந்தது. தாலியும் கட்டியாகிவிட்டது. எல்லோரும் எழுந்து அமர்ந்தார்கள். அதற்குப்பிறகுதான் அந்த மருத்துவர் (மணமகனின் தந்தை)
ஒரு அற்புதமான காரியம் செய்தார். மணமக்களை கீழே அழைத்துவந்தார். ஒவ்வொரு வரிசை நாற்காலிகளுக்கு அருகிலும் , அவர்களை நிறுத்தினார்.
அட்சதை தட்டை எடுத்துவரச்செய்து, அந்த வரிசைக்காரர்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கச்செய்தார். அதேபோல் மண்டபத்தில் இருந்த
ஒவ்வொருவரும் வாழ்த்தும்படிச்செய்தார். உண்மையிலேயே மனநிறைவாகவும், 'அட! இது நல்லா இருக்கே!' என்று நினைக்கும்படியும் செய்தார்.
தாலிகட்டும்போது , என் பின் வரிசைக்காரர்களின் அட்சதையும், வாழ்த்தும் என் தலைக்கு வருவது தவிர்க்கப்பட்டது. இதை இனிமேல் நம் குடும்ப திருமணங்களில் பின்பற்றுவது என்று சபதமே எடுத்துக்கொண்டேன்.

**************************************************************************

அடுத்த திருமணம்... என் ஒன்றுவிட்ட அண்ணன் மகளுக்கு!

அவர் என் ஆதர்ச கம்யூனிச குரு! எங்கள் குடும்பங்களில் பக்தி முத்திப்போய் இருந்தபோது அவர் சர்வசாதாரணமாக மார்க்ஸையும், லெனினையும்
வீட்டுக்குள் உலவ விட்டவர். கடவுள் ஒரு ஏமாற்றுவேலை என்று எனக்கு போதித்தவர்.எண்பதுகளின் ஆரம்பத்தில் அவருக்கு திருமணமானபோது எந்த
சம்பிரதாயங்களும் செய்யாமல், புரோகிதர் இல்லாமல், சாதாரணமாக நண்பர்கள் வாழ்த்த தாலி கட்டியவர்.
கம்யூனிசத்தின் மேல் எனக்கு ஏற்பட்ட பற்றுக்கு அவரும் ஒரு காரணம். ஆனால் அதில் நான் தீவிரமாக இல்லை என்பதில் அவருக்கு என் மேல் இப்போதும் வருத்தம் உண்டு. சிறுவயதிலேயே மூலதனம் என்ற தலையணை அளவு புத்தகத்தை என்னைப்படிக்கவைத்த பெருமை அவருக்கு உண்டு! ( அப்போது பல புரியாத தகவல்களை எளிய நடையில் எனக்குப்புரிய வைத்தவர்) ! மனைவியை தோழர் என்று அழைத்துப்பழகியவர்....மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டங்களில்
தெளிவாக முழங்கியவர். தொழிற்சங்க வாதிகள் அனேகம்பேர் எப்போதும் அவர் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.
இடையில் பல வருடங்கள் அவருடன் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. நானும் உலகமெல்லாம் சுற்றிவிட்டு ஊருக்குள் வந்தபோது எங்காவது திடீர் சந்திப்புகள் நிகழ்வதுண்டு. நல்லா இருக்கீங்களா? எல்லாரும் நலமா? என்ற சின்ன உரையாடல்களுடன் எங்கள் சந்திப்புகள் முடிந்துவிடும். அவர் மகளுக்குத்தான் திருமணம்.

மண்டபத்துக்குச்சென்றபின் தான் தெரிந்தது. திருமணம் முழுமையான சாஸ்திர சம்பிரதாயங்களுடன் நடைபெறுவது! பெரிய திருப்பதி வெங்கடாஜலபதி படத்துக்கு முன்னால் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்து கொண்டி ருந்தார்.மனைவியை அழுத்தமாக பெயர் சொல்லி அழைத்தார்.முழுக்க முழுக்க
ஒரு ஆதர்ச அப்பாவாக மாறி இருந்தார். அனைத்து கம்யூனிஸ்ட் நண்பர்களையும் அழைத்திருந்தார். நம்ப கொள்கையெல்லாம் என்கிட்ட இப்ப எதிர்பார்க்காதீங்க என்று சத்தம்போட்டு சிரித்து சொல்லிக்கொண்டிருந்தார்.
அடடா வாழ்க்கை எப்படியெல்லாம் கொள்கை மாற்றம் கொள்ளவைக்கிறது? நல்லவேளை நமக்கெல்லாம் இந்தமாதிரி கொள்கை எதுவும் இல்லை :-)


யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.
40 வயது வரை கம்யூனிசம் விரும்பாதவன் மண் !
40 வயதுக்கு மேல் கம்யூனிசம் விரும்புபவன் முட்டாள் !


Monday, June 2, 2008

தெய்வத் தொழிலாளி - பாகம் 2

நான் அவரை ஒரு நெற்றிச்சுருக்கலுடன் பார்த்தேன். (முதல் பாகம் இங்கே)

'என் பேரு சண்முகம் சார் ! எதுத்தாப்புல தெரியுற இடத்தைப்பாத்தீங்களா?'

'எதைச்சொல்றீங்க?'

'எதிர்க்கடைக்குப்பக்கத்துல ஒரு இடைவெளி தெரியுதே?'

'ஆமா!'

'அதுதான் சார் 10 நாள் முன்னாடி வரைக்கும் என் கடை!'

நான் எழுந்து நின்று பார்த்தபோது அந்த இடம் முழுமையாகத்தெரிந்தது. சாலையின் அந்தப்பக்கம் தீயினால் எரிந்த ஒரு இடம். பலப்பல குழாய்களும்  அடையாளம் காணமுடியாத பொருட்களும் கருகிப்போய் குவிக்கப்பட்டிருந்தன.

'அதுதான் வடிவேலன் உணவகம்! வாசல்ல டீ ஸ்டால்! உள்ள டிபன் கடை! அன்னிக்கு காலங்காத்தால மண்ணெண்ணை ஸ்டவ்வை பத்தவச்சுட்டு பால   சுடட்டுமேன்னு வெளில வந்தேன். என்ன ஆனதுன்னே தெரியலை! ஒரு நிமிஷத்தில் ஸ்டவ் வெடிச்சு, வாசல் கூரையில் நெருப்பு பிடிச்சுக்கிச்சு! என்னால உள்ள போய் ஒரு சாமானைக்கூட எடுக்க முடியலை! உள்ளதான் கிரைண்டர் , மிக்ஸி, டேபிள் , சேர்ன்னு எல்லாம் சேத்து கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்க்கு பொருள் ! கொஞ்ச நேரத்தில் எல்லாமே நாசமாப்போச்சு சார்! 20 வருஷமா வச்சிருந்த கடை சார்.! அதை வச்சுத்தான் என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன். எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறேன்சார்!'

'வருத்தப்படாதீங்க முதலாளி! இப்ப ஒண்ணும் கெட்டுப்போயிடலை! இதுவும் உங்க கடைதான்!' என்று ஆறுதலாகச்சொன்னார். - கல்லாப்பெட்டியில் இருந்தவர்

அதெல்லாம் ஒண்ணுமில்ல குமரா ! என்னமோ சாரிடம் சொல்லணும் போல் இருந்துச்சு! சொல்றேன் அவ்வளவுதான்!  கடை எரிஞ்சப்பதான் சார், நல்லவன் எவன் கெட்டவன் எவன் நண்பன் எவன், நண்பன் மாதிரி நடிச்சவன் எவன்னு தெரிஞ்சுக்கிட்டேன். கடை எரிஞ்சுருச்சுன்னு முதல்ல என் மகனை விட்டு தகவல் சொல்லச்சொன்னது நான் உயிர் நண்பன்னு நெனச்சுக்கிட்டிருந்த ஒரு  கேடுகெட்டவன்கிட்டதான்.! ஆனா அவன் இன்னிக்கு வரைக்கும் வந்து, என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு கேக்கலை! எல்லாம் நான் ஏதாவது பண உதவி கேட்டுருவேனோன்னு பயந்துட்டானுங்க!

வருத்தப்படாதீங்க! இதெல்லாம் ஒரு சோதனைதான்! நீங்க தோத்துப்போயிட்டதா அர்த்தம் கிடையாது. இதைவிட பெரிய ஆளா வருவீங்க பாருங்க!
என்று நான் சொல்ல,

'இதான் சார்! இந்த மாதிரி ஆறுதல் வார்த்தைகளைத்தான் சார் நான் எதிர்பாத்து ஏங்கினேன். ஆனா ஒருத்தனும் பக்கத்துல வரலை! இதோ இருக்காப்புலயே குமரன்.! இவர் நம்மகிட்ட ஏழு வருஷம் வேலை பாத்தாரு! அப்புறம் கடந்த 2 வருஷமா சொந்தக்கடை வச்சுட்டாரு. எனக்கு இவர் மேல கொள்ளை வருத்தம். என்னடா கடைய விட்டுட்டு போய்ட்டானே! மேலும் என் கடைக்கு எதிரிலேயே கடையை வச்சிருக்கானேன்னு! அவர் எங்க எப்ப பாத்தாலும் முதலாளின்னு பணிவா இருப்பாரு. ஆனா என் சேக்காளியெல்லாம், அவனை கிட்டவே சேக்காதன்னு சொன்னதோட விளைவு நான் இவரை பல தடவை அவமானப்படுத்தி இருக்கேன். ஆனா இன்னிக்கு இவர்தான் எனக்கு தெய்வம்!'

'சும்மா இருங்க மொதலாளி! அதெல்லாம் ஒண்ணுமில்லை!'

'இருப்பா! நான் சார்க்கிட்டயாவது சொல்லிக்கிறேன். கடை எரிஞ்சதும் நான் அப்படியே முடங்கிப்போயிட்டேன் சார். பாக்க வர்ற கொஞ்ச நஞ்ச ஆளுகளும் எல்லாம் உன் கவனக்குறைவாலதான் நடந்துச்சுன்னு என்னைத்தான் குறை சொன்னாங்களே ஒழிய , வேற எந்த பிரயோஜனமும் இல்ல!அப்பதான் குமரன் வீட்டுக்கு வந்தாப்புல .! முதலாளி உங்களைப்பாத்துதான் எப்புடி தைரியமா தொழில் பண்றதுன்னு நான் கத்துக்கிட்டேன். நீங்க இப்படி முடங்கிப்போய் கெடக்காதீங்க! இப்பவே எந்திரிங்க, நம்ம கடைக்கு வாங்க ! அதுல கல்லாவுல உக்காருங்க.! லாபத்துல ஆளுக்கு பாதி! நீங்க மறுபடியும் கடையை தொடங்குற வரைக்கும் அங்க கௌரவமா இருங்கன்னு சொல்லி கூட்டிக்கிட்டு வந்துட்டாப்புல!'

இதோ நாலு நாள் ஆச்சு! இந்தக்கடையை என் கடை மாதிரி பாத்துக்குறேன். நாந்தான் சப்ளைலேருந்து எல்லாமே! ஆனா விடமாட்டேங்குறாப்புல! நான் என் கடைக்குத்தான் முதலாளி..! இந்தக்கடைக்கு அவருதான் முதலாளி! என்ன சொல்றீங்க!?

எனக்கு பிரமிப்பில் வாய் பேச வரவில்லை! ஒரு வார்த்தைதான் வந்தது...'சூப்பர்!'

குமரன் ஆரம்பித்தார்..
'சார்! தாழ்ந்தவன் வாழலாம்...ஆனா வாழ்ந்தவன் தாழ்ந்துரக்கூடாது. மொதலாளி ரொம்ப நல்ல டைப்! என் கிட்ட ரொம்ப அன்பா நடந்துக்கிட்டு தொழில் சொல்லிக்குடுத்தார். நம்மளும் ஹோட்டல் நடத்திரணும்னுதான் ஆரம்பிச்சேன். பல விசயங்களை அவர்க்கிட்டேருந்துதான் கத்துக்கிட்டேன். அவருக்கு இப்புடி ஒரு கஷ்டம் வரும்னு நான் எதிர்பாக்கவே இல்லை! அவ்ரைப்பாத்து பரிதாபப்படுறதை விட்டுட்டு ஏதாவது செய்யணும்னு மனசு சொன்னுச்சு! செஞ்சேன். அவ்வளவுதான் சார்! இதைப்போய் பெரிசா எடுத்துக்கிட்டு பெருமைப்படுறாரு..நான் அவரை கல்லாவிலதான் உக்காரச்சொன்னேன். ஆனா மாட்டேங்கிறார்.'

'அதில்ல குமரா! அப்புறம் எனக்கு ஒழைக்கவே பிடிக்காம போயிடும். இப்படி இருந்துதானே மேல வந்தேன். அதுவும் உனக்கு கால் செருப்பாக்கூட இருக்கலாம். சர்வராத்தானே இருக்கேன். இப்படி இருக்கிறதில் எனக்கு சந்தோஷம்தான்.!'

என்ன மனிதர்கள் இவர்கள்! அடுத்தவன் அழிவை ரசிக்கும் கூட்டத்தில், தன்னை வளர்த்த முதலாளி அழியக்கூடாது என்று நினைக்கும் வேலைக்காரன். ! வேலைக்காரனாகத்தான் இருப்பேன் என்று வைராக்யத்துடன் வலம் வரும் முதலாளி.! காசு பணத்தைவிட நன்றிதான் பெரியது என்று நினைக்கும் அற்புத மனிதர்கள் கையால்தான் நான் சாப்பிட்டேன் என்று எண்ணும்போது, கண்களில் சுரந்த கண்ணீர்த்துளிகளை கட்டுப்படுத்த முடியவில்லை!
எந்தவிதமான உதவிக்கும் நானும் இருக்கிறேன் என்று உறுதியளித்துவிட்டு...

கவலையே வேண்டாம் ! ஈரமும் உயிர்ப்பும் உள்ள மனிதர்களுக்கிடையில்தான் நான் வாழ்கிறேன் என்ற மகிழ்ச்சியோடு.... கண்ணில் அடித்த வண்டுக்கு நன்றி சொல்லி புறப்பட்டேன்.


டிஸ்கி: தொடரும் போட்டதற்கு காரணம்...முதலாளிக்கு கடையை மீட்பதில் உதவி செய்யமுடியுமா என்று ஆராய்ந்து, அடிப்படை பொருட்களுக்கான தொகை + கூரை போடும் செலவாக ரூபாய் 69000 க்கு வங்கியில் கடன் ஏற்பாடு செய்து விட்டு...எனக்குத்தெரிந்த தவணைமுறையில் பொருட்கள் விற்பனை செய்பவரிடம் 5 லிட்டர் கிரைண்டருக்கு ஏற்பாடு செய்துவிட்டு எழுதுவோமே என்றுதான். ! (ஏற்பாடு ஆகிவிட்டது . செக் அனேகமாக நாளை கிடைத்துவிடும்.. கிரைண்டர் வந்துவிட்டது)

இதற்கும் காரணம் இருக்கிறது.

ரமேஷ் வைத்யாவின் ஒரு கவிதை

ஊரெல்லாம் மழை பொழிய
வயிற்றிலொரு தீயெறிய
கைக்குழந்தை சுமையோடு
கார் கதவை சுரண்டுகிறாள்
உதவுகிறான் உத்தமன்
மறுக்கிறான் மத்திமன்
கவிதை எழுதுகிறான் அயோக்கியன்

(நான் கட்டுரையாகவே எழுதினாலும் அயோக்கியனாக இருக்க விரும்பாததால்....)

Friday, May 30, 2008

தெய்வத் தொழிலாளி !

அது ஒரு 55 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம்.
இரவு மணி 12:40 க்கு கிளம்பினேன்.
அதுவரை இரவு உணவு சாப்பிடவில்லை.

சரி வழியில் ஏதாவது ஒரு ரோட்டோர ஹோட்டலில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டே பயணிக்க ஆரம்பித்தேன். காதில் 'முகுந்தா முகுந்தா....' வுடன் சென்று கொண்டிருக்கும்போது, மூன்று உணவு விடுதிகள் 3 கிலோமீட்டர் இடைவெளியில் கண்ணில் பட்டன. ஏனோ மனம் அதை நிராகரித்தது. பயணம் தொடர்ந்தது. முகத்தில் மோதிய வழிதவறிய வண்டொன்று கன்னத்தில் பளார் என்று அறைந்த அனுபவத்தைக்கொடுக்க, அதிர்ந்துபோய் நின்றபோது வலது பக்கம் அந்த உணவு விடுதி தெரிந்தது.

வாசலில், அடுப்பு தட்டுமுட்டுச்சாமான்களுடன் களேபரமாக இருந்தது. இடது பக்கம் டீ போடும் முஸ்தீபுகளுடன் ஒரு இடம். உள்ளே நுழைந்தேன். வண்டு அடித்த வலியை ஜீரணிப்பதற்காகவும், வயிற்றில் ஏற்பட்ட பசியை ஜீரணிப்பதற்காகவும்.!

'என்ன சார் சாப்பிடுறீங்க?' கேட்டவருக்கு 45 வயதிருக்கும். வளமாக இருந்தார்.

'என்ன இருக்கு?'

'புரோட்டா, தோசை அய்ட்டங்கள் இருக்கு சார்!'

'2 புரோட்டா போடுங்க! ஒரு ஊத்தப்பம்!'

சரி சார்.!

'முதலாளி ! தோசைமாவு புளிக்காம இருக்குல்ல!? ' - குரல் வந்த திசை பக்கம் திரும்பினேன். கல்லாப்பெட்டியில் அவர் அமர்ந்திருந்தார். நெற்றியில் குங்குமம்... கெச்சலாக இருந்தார். 55 வயதிருக்கும்.

என்ன இது ...? ஒரு சர்வரை கல்லாப்பெட்டியில் இருப்பவர் முதலாளி என்று கூப்பிடுகிறார்.! அல்லது இவர்தான் முதலாளியோ!? மனம் நினைத்துக்கொண்டிருக்கும்போதே பதில் இவரிடமிருந்து வந்தது.

'இல்ல குமரா! நல்லாத்தான் இருக்கு! கொஞ்சம் கொஞ்சமாத்தானே பிரிஜ்லேருந்து எடுத்துக்கிட்டு வரேன்.'

'அய்யய்யோ இல்ல முதலாளி! கஸ்டமருக்கு நல்லா இல்லாம போயிடக்கூடாதுன்னுதான் சொன்னேன்.'

'கவலையே படாத! சார் ரசிச்சு சாப்பிடுற மாதிரி செஞ்சுடுறேன்.'

'சரிங்க முதலாளி!'

இப்படியாக இவர்கள் சம்பாஷணை இருந்தது.
எனக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை! இது என்னவிதமான உறவுமுறை? இதற்குப்பின்னணி என்னவாக இருக்கும். ஒரு நிர்வாகப்பாடத்தை இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளப்போகிறேனோ? ஒரு நாள் முதல்வர் போல் இது ஒரு நாள் முதலாளி அமைப்போ? மனிதவள மேம்பாட்டு ஆலோசகன் என்ற முறையில், ..ஒரு நல்ல நிர்வாகத்திறன் கொண்ட தன்முனைப்பு (EGO) அற்ற ஒரு முதலாளியின் எண்ண விருட்சமோ? எல்லாரும் எல்லா வேலையும் பார்க்கவேண்டும் என்று இப்படி செய்து கொண்டிருக்கிறாரோ!

புரோட்டாவுக்கு குருமா போட வந்தவரை நிறுத்திக்கேட்டேன். 'நீங்கதான் இந்தக்கடை முதலாளியா?'

'அட நீங்கவேற சார்...முதலாளி அதோ அவர்தான்.!'

'அப்புறம் ஏன் அவர் உங்களை முதலாளின்னு கூப்பிடுறார்.?'

'அதுவா....?'

'சார்...நாந்தான் இந்தக்கடை முதலாளி! ஆனா அவர்தான் எனக்கு முதலாளி!' என்றார் கல்லாப்பெட்டிக்காரர்.

எனக்கு தலை சுற்றியது.

சிரித்துக்கொண்டே....'ஏன் இன்னிக்கு வேற யாருமே சிக்கலையா? நடு ராத்திரி 1 மணிக்கு ஏன் இப்படி என்னை மண்டை காய வைக்கிறீங்க?' என்றேன்.

இருவரின் முகமும் கருத்துப்போனது.
யாரும் எதுவும் பேசவில்லை..இரண்டு நிமிடம் கழிந்தது. ஊத்தப்பத்தை எடுத்துக்கொண்டு வந்து என் இலையில் போட வந்தவர் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர். கட்டாயம் அது புகையால் வந்தது அல்ல!

'அய்யய்யோ என்ன சார் ஆச்சு? நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா?
மன்னிச்சுக்குங்க சார்!' என்று நான் பதறினேன்.

'அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்..! என் நிலைமை அப்படி...!'
என்று கலங்கிவிட்டு..தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தார்.

(தொடரும்)

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...