Tuesday, May 12, 2009

ஓ - போடப்போறேன்

அன்பு நண்பர்களே..!

உண்மையிலேயே உங்கள் வேட்பாளர் சரியில்லாதவர் என்று தெரிந்தால்
49 (O) போடுங்கள்.செய்யவேண்டியதெல்லாம்..

வாக்குச்சாவடிக்கு செல்லவேண்டும்.

வாக்குச்சாவடி அலுவலரிடம் சென்று நம் முகவரியையும் , பெயரையும் சரி பார்த்து 17A புத்தகத்தில் கையெழுத்திட்டுவிட்டு. மையிட்டுக்கொண்டு....49 (O) என்று சொல்லுங்கள்!

அவரே அதை பூர்த்தி செய்வார்...காரணமாக...நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள்..எழுதப்படும்..
மீண்டும் கையெழுத்திட்டுவிட்டு....கையைத்தட்டிக்கொண்டு வந்துவிடுங்கள்..!


நான் 49 (O) தான் போடப்போகிறேன்..காரணமாக , புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியை நீக்கியது பொறுக்காமல் -என்று சொல்லப்போகிறேன்.

விபரம் அறிய தயவு செய்து இதையும் படியுங்கள்.

Sunday, May 3, 2009

நியூட்டனின் 3ம் விதி - அட !

தமிழில் , பழிவாங்கும் கதைகளில்,அடிதடியை விட்டால் வேறு ஒன்றுமே திரைக்கதையாக இல்லையா என்று அடிக்கடி நாங்கள் விவாதித்துக்கொள்வோம்.

அதில் பெரும்பகுதியை நிவர்த்தி செய்ய வந்துள்ளது நியூட்டனின் 3ம் விதி!

எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு சிறந்த படம் அமைந்தது அவர் செய்த புண்ணியம்!
முழுக்க முழுக்க புத்திசாலித்தனத்தை மட்டும் பயன்படுத்தி, ஒரு திருப்தியான படத்திற்கு அடிகோலியிருக்கிறார் இயக்குநர் தாய்முத்துச்செல்வன்



குரு(எஸ் ஜே சூர்யா) , ஈகிள் டிவி காம்பியரான ப்ரியாவை(ஷாயாலி பாகத்) க்காதலிக்கிறான். ஒரு சில கலாட்டாக்களுக்குப்பிறகு காதல் கைகூடி திருமணம் செய்யலாமென்று முடிவெடுத்த தினத்தன்று ஓரிரு சம்பவங்களுக்குப்பிறகு...ப்ரியா தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறார்.
ஏன் என்று அவன் அலையத்தேவையே இல்லாமல், ஒரு ஆதாரத்தை ப்ரியா விட்டுச்செல்கிறாள்.

அடுத்த ஆண்டு அவள் இறந்த அதே நாளில், காலை 10 மணிக்கு , குரு பிரம்மாண்டமான மீடியா சாம்ராஜ்ய மன்னன் ஈகிள் டிவியின் ஜேப்பி(ராஜீவ் கிருஷ்ணா)க்கு ஒரு போன் செய்கிறான் ! இன்று பகல் சரியாக 12 மணிக்கு உன்னைக்கொல்கிறேன் என்று !
அதை முதலில் நம்பாத ஜேப்பியை நம்பவைக்க, அடுத்த 3 நிமிடங்களுக்கு சேனல்களை நிறுத்திக்காட்டுகிறான். ஜேப்பி போலீஸின் உதவியை நாட,
அவர்கள் செல் நம்பர் மூலம் ஆளைக் கண்டுபிடிக்க, அது ஜேப்பியின் சின்னவீடான தாரிகாவை அடைகிறது. போலீஸ் விபரம் தெரியாமல் அவள் மீது கைவைக்க, விஷயம் குரு மூலமாக மீடியாவுக்குப்போய் மானம்
கப்பலேறுகிறது.

ஜேப்பியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிக்கும் குரு , அவனது அலுவலக பாத்ரூமிற்கு வரச்சொல்லி அங்கும் ஒரு விளையாட்டு காட்டி - முழுமையாக பயமுறுத்துகிறான். பின்னர் தனியாக ஒரு ஏரியாவுக்கு
வரச்சொல்லி, அங்கு போக்குக்காட்டி அவனைவிட்டு ஒரு காரை எடுக்கச்சொல்ல, ஜேப்பிக்கு திக் என்கிறது. ஏனெனில் அது அவனது கள்ளப்பணம் வைத்திருக்கும் கார். அதை எடுத்துக்கொண்டு கோயம்பேடு
பஸ்டாண்டுக்கு வரச்சொல்கிறான். அங்கு -குருவைத்தாக்க -தேவா (யுகேந்திரன் ) என்ற ரவுடியின் ஆட்களையும் ஜேப்பி வரவழைத்திருக்க, அதைக்கண்டுபிடித்து, அவர்களுக்கு தர்ம அடி வாங்கிக்கொடுத்து, அதிலிருந்து ஜேப்பியை
காப்பாற்றுவதுபோல் நடித்து, தன்னைப்பற்றி ஒரு பெரிய பயத்தை உருவாக்கி தப்புகிறான்.

ஆனால் பஸ்டாண்டில் , வருமான வரி அதிகாரிகள் காரில் உள்ள கள்ளப்பணத்தை கைப்பற்றுகிறார்கள்.
இப்படியே ஒவ்வொன்றாகச்செய்து ஜேப்பியின் எல்லா கருப்புப்பக்கங்களையும் வெளிக்கொண்டுவந்து , அலற அடிக்க, தன்னை மிரட்டுவது யார் என்றே தெரியாமல் ஜேப்பி தடுமாற, தேவா மூலம் ஐடியா கிடைக்க , குரு ,ஜேப்பி கையில் சிக்கி சின்னாபின்னமாகி, கடைசியில் 12 மணிக்கு ஜேப்பியைக் கொன்றானா இல்லையா என்பதுதான் கதை..!

ஒரு சில லாஜிக் மீறல்களை நீக்கிவிட்டுப்பார்த்தால், காட்சிகளை வீணாக்காததற்கு டைரக்டருக்கு ஒரு பெரிய பூங்கொத்து!

சூர்யாவும் மிகவும் அடக்கி வாசித்து, கதாபாத்திரத்தின் பழிவாங்கும் உணர்ச்சியை மிகவும் அற்புதமாக நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்.

போலிசாக வரும் தலைவாசல் விஜய் " Sir ! This is my phone ! " என்பது மிகச்சரியான யதார்த்தம்!

யுகேந்திரன் , தேவா என்ற ரௌடியாக வந்தாலும் ரசிக்க வைக்கிறார். யார் இதைச்செய்திருக்க முடியும் என்று அவரை விட்டு விளக்க வைத்திருப்பது மிகச்சரியான காட்சி! 'அவன் இந்த ஒரு நாளுக்காக 365 நாள் வேலை பாத்திருக்கான் ' என்று உணர்ந்து சொல்லும்போது அவருக்கே கைதட்டல் விழுகிறது.

மற்றபடி எல்லாக்கதாபாத்திரங்களும் தன் பங்களிப்பை சீராக வழங்கி தமிழுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்குப் படத்தைத்தந்திருக்கிறார்கள்.

ஹீரோவை விட்டு ஒரு சண்டைகூடப்போடச்சொல்லாமல், ஆனால் வில்லனுக்கு அடி மேல் அடி விழ வைத்திருக்கிறார்கள்.

கடைசிக்காட்சியில் மட்டும்தான் எஸ் ஜே சூர்யா 1 நிமிடம் சண்டை போடுகிறார். மற்றபடி எல்லாமே புத்திசாலித்தனமான காட்சிகள்தான்.!

நியூட்டனின் மூன்றாம் விதியில் - அட போட வைத்திருக்கிறார் இயக்குநர்!
வாழ்த்துக்கள் சார்!

Friday, April 17, 2009

சங்கரின் காதல் - 2

சங்கரின் காதலைச் சொன்னதில்
எனக்கு கடுமையான அதிர்ச்சி!
ஒருபக்கம் என்னடாது இப்படி திடீர்ன்னு ஒரு முடிவு எடுத்துருக்கானேன்னு !
மறுபக்கம்..இவனுக்கெல்லாம் காதலிக்க பொண்ணு கிடைக்குதே, நாமளும்தான் இருக்கோமேன்னு புகைச்சல் வேற !

சரிடா...இருந்தாலும் இதெல்லாம் தப்புடா ! நீ மரியாதையா அந்தப்பொண்ணை அவுங்க வூட்டுல விட்டுட்டு ஒழுங்கா உன் வேலையப்பாருன்னு லேசான வில்லத்தனத்துடன் நான் சொல்ல,

பரவாயில்ல மாப்புள ..! செஞ்சது செஞ்சுட்ட ! நல்லபடியா போய்ட்டுவான்னு என் நண்பன் சொல்ல...

சங்கருக்கு வந்ததே கோபம்..
என்னது? உங்கிட்ட ஆசீர்வாதமோ அட்வைஸோ வாங்கவா நான் வந்தேன்.! நீங்கள்லாம் ப்ரெண்டாடா.. ? நட்புன்னா என்னன்னு தெரியுமா? உங்களுக்கு எங்க தெரியப்போகுது...இந்த வயசிலேயே பிஸினஸ் பண்ணி சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டீங்கங்கிற திமிரு! சரி சரி...அதெல்லாம் போகட்டும். 1000 ரூபா காசு குடுங்க! ன்னு அடுத்த அதிர்ச்சி கொடுத்தான்.

என்னது? காசா?

ஆமா ! கிளம்புற அவசரத்துல காசைப்பத்தி யோசிக்கலை! எங்கிட்ட காசு சுத்தமா இல்ல! அந்தப்பொண்ணுக்கிட்ட அதைச்சொன்னா என்னை என்ன நினைக்கும்..? அதான் உங்கிட்ட குடுத்து வச்சிருக்கேன், வாங்கிட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்னு அடுத்த குண்டை தூக்கிப்போட்டான்.

காசெல்லாம் தரமுடியாது! - இது நான்!

போனாப்போறான்டா ! ஏதாவது குடுத்தனுப்புவோம்...நம்பளை நம்பி வந்துருக்கான்! - இது என் நண்பன்!

என்னடா பட்டிமன்றம் நடத்திக்கிட்டிருக்கீங்க! மரியாதையா காசைக்கொடுத்து
அனுப்பிவைங்கடா! பெத்த அப்பா அம்மாக்கிட்டகூட சொல்லிக்காம ,வாழலாம்னு ஓடிப்போக உங்ககிட்ட வந்து நிக்கிறேன் பாரு...! என்னையச்சொல்லணும்! என்னமோ உண்மையிலேயே குடுத்துவச்சவன் மாதிரி கோவிச்சுக்கிட்டான்.

நான் பிடிவாதமா மறுத்தேன். டேய் இந்தக்காச வச்சுக்கிட்டு 3 நாள்கூட ஓட்டமுடியாது! அப்புறம் எப்படிடா சமாளிப்ப?

இல்ல..! கோயமுத்தூர்ல எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்காங்க அவுங்க வேலை வாங்கித்தந்துருவாங்க! சமாளிச்சுருவேன்.

சரிடா..வேலயே கிடைச்சாலும் ஒரு மாசம் கழிச்சுத்தானே சம்பளம் கிடைக்கும்...! அதுவரைக்கும் என்ன பண்ணுவ? நான் இப்ப கிளம்பாத....உன்னைய கொஞ்சம் ஸ்டடி பண்ணிக்கிட்டு ஓடிப்போன்னு சொல்றேன்.

டேய் என்னடா இவன் இவ்வளவு விதண்டாவாதமா பேசுறான்..! என் நிலைமையப்புரிஞ்சுக்குங்கடா ! அந்தப்புள்ள காத்துக்கிட்டிருக்கு ! இப்ப உங்க அட்வைஸெல்லாம் வேண்டாம்டா...காசுதான் வேணும்...நண்பன்னா அவனவன் வேன் வச்சு கூட்டிட்டுப்போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிவைக்கிறாய்ங்க..நீங்க என்னடான்னா பிச்சைக்காசு(!) 1000 ரூவாய்க்கு அழுவுறீங்க! - நாங்கள் அவன் பாக்கெட்டில் இருந்து எடுத்ததை குடுக்காதது மாதிரி ராவடி பண்ண ஆரம்பிச்சான்.

என் வாதம் பலவீனப்பட ஆரம்பிக்க, என் நண்பன் காசை எடுத்துக்கொடுத்துட்டான்.

அப்பவும்....என்னமோ அவன் சோத்தில் மண்ணள்ளிப்போட்டமாதிரியே
முறைச்சுக்கிட்டே...போய்ட்டு வரேன்டா..! உன் காசை மணியார்டர் பண்ணி வச்சுடுறேன் னான்.

அப்புறம் அவனை மறந்தே போனோம்....!

7 வருஷத்துக்கப்புறம் , கோயம்புத்தூரில் ஒரு சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்துக்கு உதவி செய்யப்போனப்ப, பாத்திரம் வாங்க ஒரு பெரிய கடைக்குப் போனோம். பாத்திரமெல்லாம் வாங்கிட்டு , பேர் வெட்டணும்னா அங்க வாசல்ல உக்காந்திருக்கிறவர்க்கிட்ட கொடுங்கன்னு சொல்ல, பாத்திரத்தைக்கொண்டு போய் வச்சா...பேர் வெட்டுற எடத்தில்...அட..! நம்ம சங்கரு!

பாத்தவுடனே...டேய் ! சங்கரு! எப்படிடா இருக்க?

திடீர்ன்னு எழுந்தான்..என் சட்டையப்பிடிச்சான்..!

நீயெல்லாம் ப்ரெண்டாடா..? நட்புன்னா என்னன்னு தெரியுமாடா?

எனக்கு ஒண்ணுமே புரியலை! என்ன ஆச்சு இவனுக்கு?

ஏண்டா..நாங்கதான் பணம் குடுத்துத்தானே அனுப்பி வச்சோம்!

அதத்தாண்டா சொல்றேன்....ஏன்டா அனுப்பி வச்சீங்க! ஒரு அறை அறைஞ்சு ரூமுக்குள்ள வச்சு பூட்டியிருந்தீங்கன்னா...இப்படி நான் சீரழிஞ்சு சிரிப்பா சிரிக்கமாட்டேன்ல..! ஓடிவந்து...சரியான வேலை இல்லாம, நாங்க ரெண்டுபேருமே செரமப்பட்டு ....அந்தப்புள்ளயும் வேலைக்குப்போய்,
தெனம் சண்டை போட்டுக்கிட்டு - பொழப்பே நாறிப்போச்சு..! என் வாழ்க்கையையே கெடுத்துட்டீங்களேடா...- இன்னும் பேசிக்கொண்டே போனான்.

அன்னிக்குத்தான் நான் உண்மையிலேயே மண்டை காஞ்சேன்...!

Thursday, April 16, 2009

சங்கரின் காதல்!

என் பள்ளி நாட்களில் சங்கர் ன்னு கிளாஸ்மேட் ஒருத்தன் இருந்தான், படிக்கும்போதே ரொம்ப அலைப்பறையக்குடுப்பான். எல்லாரையும் கலாய்ப்பான். நட்புன்னா இப்படித்தான் இருக்கணும்னு லெக்சரெல்லாம் குடுப்பான்.எல்லாரையும் காலைக்காட்சிக்குபோகலாம்னு கிளப்பிவிட்டுட்டு பசங்க எல்லாம் கவுண்ட்டரில் வரிசையில் நிக்கும்போது நைஸா எஸ்கேப் ஆகி வாத்தியார்க்கிட்ட போட்டுக்குடுப்பான்.
ஏண்டா இப்படிப்பண்ணினன்னு கேட்டா...
நட்புன்னா நீங்க கெட்டுப்போறதை தடுக்கணும்டான்னு கருத்து சொல்லுவான்!
நீதானேடா கூப்புட்டன்னா,
நான் உங்களை டெஸ்ட் பண்ணினேன்னு சொல்லி டெரர் பண்ணுவான்.
அவன் நல்லவனா ? கெட்டவனா? ன்னு யோசிச்சு யோசிச்சே பசங்க எல்லாம் படிப்பை கோட்டை விடும் அளவுக்கு லந்து பண்ணுவான்.

கட் பண்ணினா...நாங்கள்லாம் +2க்கு அப்புறம் ஏதோ படிச்சு ஆளுக்கொரு வேலையில் தொத்திக்கிட்டோம்.

அது நான் சென்னையில் வேலைக்கு சேந்திருந்த நேரம்..! பட்டுக்கோட்டையில் நண்பனோட சேந்து டீ ஏஜென்ஸி எடுத்து நடத்திக்கிட்டிருந்தோம். நான் வாரம் ஒருதடவை அல்லது ரெண்டு வாரத்துக்கு ஒருமுறைன்னு போய்வந்துக்கிட்டிருந்தேன்.

அப்படி ஒருநாள் வந்தப்ப ,முருகையா தியேட்டருக்கு படம் பாக்கப்போகும்போது, டிக்கெட் கவுண்ட்டரில் கையை வுட்டா உள்ளேருந்து -நட்பைப்பத்தி ஒரு லெக்சர் கேக்குது- அட நம்ம சங்கரு! ன்னு சந்தோஷமாகி...

என்னடா இங்கன்னு கேக்க!

அது ஒரு மேட்டரு மாப்புள! ன்னான்.

என்ன மேட்டருடா?

இரு டிக்கெட் குடுத்துட்டு வந்து சொல்றேன்.

சரின்னு..படத்தின் சுவாரஸ்யத்தைவிட நம்ம நண்பன் ஒருத்தன் ஒரு தியேட்டரில் டிக்கெட் குடுக்குற அளவுக்கு வளந்திருக்கானேன்னு பெருமையா (!) அதன் பிண்ணனி தெரிஞ்சுக்குற ஆவலில் காத்திருந்தேன்.
கிடைச்ச கேப்பில் அவனைப்பாத்து என்னடான்னு கேக்க,
அது ஒரு இது நம்ம ப்ரெண்டோட தியேட்டர்...டிக்கெட் யாருமே சரியா குடுக்குறதில்லையாம் ! (அதுல என்ன சரியா குடுக்குறதுன்னு இன்னிக்கு வரைக்கும் நான் தலையைப்பிச்சிக்கிட்டிருக்கேன் )நான் கரெக்டா வேலை பாப்பேன்ல ! அதான் நான் நட்புக்காக உதவி பண்ண வந்தேன்னான்.
(உள்ளபடியே படிப்பை நிறுத்திட்டு சம்பளத்துக்கு தியேட்டரில் வேலைக்கு சேந்திருக்கான் டுபாக்கூரு)

சரிடா ! எப்படியோ நல்லா இருன்னுட்டு.....பெரிய மேட்டரா எதிர்பார்த்தது இப்படி 'சப் 'ன்னு போச்சேன்னு கவலைப்பட்டுக்கிட்டே படம் பாத்துட்டு வெளில வந்தா...மறுபடியும்
சங்கரு!
என்னடா..!
நீ எங்க தங்கியிருக்க?
இடத்தைச்சொன்னேன்.
தியேட்டருக்குள் யாரோ அழைக்க உள்ளே போய்ட்டான்.

இது நடந்து 2 மாசத்தில்..
ஒரு நாள் நள்ளிரவு...அன்று நானும் அங்க இருந்தேன். டப டபன்னு கதவு தட்டப்பட...
திறந்தால்...கையில் ஒரு பையுடன் வேர்க்க விறுவிறுக்க சங்கர் !
என்னடா இந்தக்கோலம்?

இல்ல மாப்புள ஓடிப்போறோம்.

என்னது ? ஓடிப்போறியா? எங்க ? யாரோட?

அப்பதான் சொன்னான்.

டிக்கெட் கொடுக்கும்போது உள்ள ஒரு வெள்ளைக்கை நுழைஞ்சது...அதுக்கான முகம் எதுன்னு பாக்கப்போய்...அந்தப்பொண்ணு பழக்கமாச்சு...! நான் தியேட்டர்க்காரரோட ப்ரெண்டுன்னு (எங்களிடம் சொன்ன அதே கதையை) அந்தப்பொண்ணிடமும் சொல்ல, நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சோம். இப்ப அவுங்க வூட்டுல ஒத்துக்கமாட்டேங்கிறாங்க! நாங்க ஓடிப்போலாம்னு முடிவுக்கு வந்துட்டோம். அதான் பஸ்ஸ்டாண்டுல ஒளிச்சுவச்சுட்டு வந்திருக்கேன். கோயம்புத்தூர் போலாம்னு ப்ளான் போட்டிருக்கேன்னான்.
(தொடரும்..)

Wednesday, April 1, 2009

தயவுசெய்து பாத்துப் போங்க!

பழனி..

என்ன சார்..

ஏன்ப்பா இந்தப்பெரிய வண்டிய வச்சிக்கிட்டு
ரொம்பதூரம் வந்துட்டு போற..அதுவும் ரொம்ப பெட்ரோல் சாப்டுதுன்னு சொல்ற!
அதுனால பஸ்ஸுல வந்துட்டுப்போயேன்...பிரச்னையே இல்லை!

பரவாயில்ல சார்..நான் பாத்துக்குறேன்.

அடுத்தநாள்

சார்...
என்னப்பா பழனி..
இன்னிக்கு லீவு போடலாம்னு நினைச்சேன் ..நீங்க ப்ரான்ச்சுக்கு வரேன்னு சொன்னீங்களாம். அதுனால இன்னிக்கு வந்துடுறேன் சார்..ஆனா நாளைக்கு ஒரு நாள் லீவு வேணும் சார்!

சரிப்பா..ஆனா நான் கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன். அதுக்கு முன்னாடி பெண்டிங் வேலையெல்லாம் பாத்துடு !

சரி சார்..!

அன்று நண்பகல் வரை பழனியிடமிருந்து எந்தத்தகவலும் இல்லை.!
ஆனால் அவன் அலுவலகத்துக்கு வரவும் இல்லை!
என்ன ஆயிற்று என்று கேட்கலாமென்று செல்லுக்கு தொடர்புகொண்டால், அது அணைந்திருந்தது.
சில நிமிடங்களில் பழனியிடமிருந்து போன்..!

சார்..

என்னப்பா ! ஏன் இன்னும் ஆபீஸ் வரலை போல?

நான் ஆபீசுக்கு வந்துக்கிட்டிருந்தேன்.

சரி..

அப்ப ஒரு அம்மா குழந்தைகளோட ரோட்டை க்ராஸ் பண்ண வந்தாங்க
வண்டியப்பாத்ததும் அவங்க நின்னுக்கிட்டாங்க..ஆனா குழந்தையைப்பிடிக்காம விட்டுட்டாங்க
திடீர்ன்னு நாலுவயது பெண் குழந்தை குறுக்க வந்துடுச்சு..!
ஆஹா மோதிரப்போறோமேன்னு நினைச்சு ப்ரேக் போட்டேன். பைக்கோட கீழ விழுந்துட்டேன்.

அய்யய்யோ எதாவது அடிபட்டுருச்சா?

இல்ல சார்! ஒரு கீறல்கூட இல்லை சார்..! ஆனா அதைவிட பெரிசா நடந்துருச்சு சார்!

என்னப்பா..

அந்தக்குழந்தை மேல பைக் விழுந்துருச்சு !

அய்யய்யோ அப்புறம்..

குழந்தை பேச்சு மூச்சில்லாம கிடந்துச்சு!

ஆஹா..

உடனே எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்.

என்ன ஆச்சு!?

ஆனா ஆஸ்பத்திரியில் , குழந்தை இறந்து போச்சுன்னு சொல்லிட்டாங்க சார்!

அய்யய்யோ....என்னப்பா சொல்ற..? குழந்தை இறந்து போச்சா?

ஆமா சார்..நான் இப்ப ஜி ஹெச் சுக்கு வந்திருக்கேன். குழந்தையை போஸ்ட்மார்ட்டத்துக்காக கொண்டுபோயிருக்காங்க!
இப்ப என்ன சார் செய்யிறது?

எனக்கு கிடுகிடுவென்று ஆடிவிட்டது.
நம்மிடம் வேலைபார்க்கும் ஒரு ஊழியர், விபத்து நடந்துவிட்டது என்று சொன்னால் , பாத்துப்போகவேண்டியதுதானே என்று கூறிவிட்டு, முடிந்தால்
அவரைச்சேர்த்திருக்கும் மருத்துவமனையில் போய்ப் பார்த்துவிட்டு வரும் மனநிலையில் உள்ள நான், விபத்தில் இன்னொரு உயிர் போய்விட்டது எனும்போது ஸ்தம்பித்துப்போய்விட்டேன். அதுவும் ஒரு குழந்தை எனும்போது என்னால் சில நிமிடங்கள் அடுத்த கட்டத்தைப்பற்றி யோசிக்கவே முடியவில்லை.

உடனே போலீஸ் ஸ்டேஷனில் அவரைச் சரணடையச்சொல்லிவிட்டு,
அதற்குப்பிறகு, உள்ளூர் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிந்தவர்கள் என்பதால், அவர்களிடம் பேசி அவர்கள் மூலமாக அந்த ஊர் போலீஸ் அதிகாரிகளிடம்
பேசி, பழனி மேல் உண்மையிலேயே தவறில்லை என்பது விசாரிக்கப்பட்டு, அவர் அனேகமாக இன்று அல்லது நாளை பிணையில் வெளிவருவார்.

இந்தச்சம்பவம் சில கேள்விகளையும் பதில்களையும் தந்திருக்கிறது.

1. எப்போது வாகனத்தை வெளியில் எடுத்தாலும், விபத்து நடந்து நமக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்றுதான் நாமும் , நம் உறவினமும் எண்ணுவோம். நம்மால் இன்னொரு உயிரும் போய்விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
2. நம்மால் ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு உயிர் போய்விட்டால், அது சட்டப்படி மிகப்பெரிய தவறு அல்ல! கவனக்குறைவாக வண்டி ஓட்டியதற்காக அபராதம் ரூபாய் 250 கட்டினால் போதும். குற்றவாளிக்கு பெயிலும் உடனே கிடைத்துவிடும்.
3. போலீஸாரைப்பொறுத்தவரை விபத்தில் யார் இறந்தாலும், ஒன்றும் அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அவனுக்கு சிபாரிசு இருந்தால், அவனுக்கு கொஞ்சம் சலுகைகள் அதிகம்தான்.

4. வண்டி ஓட்டிச்சென்றவன் இவன், குழந்தையை பிடித்துக்கொள்ளாதவர் அந்தத்தாய்... ஆனால் மரண தண்டனை ஏன் அந்தக்குழந்தைக்கு அளிக்கப்பட்டது ?
இது எதுமாதிரியான வாழ்வமைப்பு?

5. விபத்துகளை எதிர்பார்க்கவேண்டாம். ஆனால் நடந்துவிடாமல் தவிர்ப்பதற்கு கடைசிவரை முயற்சிக்கவேண்டும்.


தயவு செய்து...வாகனங்களை ஓட்டும்போது...யாருக்கும் எதுவும் நடந்துவிடாமல் மிகவும் ஜாக்கிரதையாக செல்லுங்கள் நண்பர்களே! எத்தனையோ குழந்தைகள் கனவுகளுடன் சாலையின் இருபுறமும் காத்திருக்கின்றன.

Wednesday, March 18, 2009

நானா...? அவ்வளவு கூலா?


நம்ம சக பதிவர்...
அன்புச்சகோதரி..
பல்வேறு விஷயங்களில் சர்வசாதாரணமாக
மாற்றுக்கோணம் யோசிக்கும் எங்கள் ஊர் தந்த இனிய
தென்றல்,
தமிழ்மண விருதுகளில் இடம்பிடித்த பதிவுப்புயல்

....புதுகைத்தென்றல்
திடீர்ன்னு என்மேல் இருக்கும் அன்பினாலோ,

இனிமேலாவது கூலா இருக்கணும்கிற எண்ணத்தினாலோ...இந்த பட்டாம்பூச்சி விருதை எனக்கு கொடுத்திருக்காங்க!


மிக்க நன்றிங்க!
இதுக்கு நான் தகுதியான்னு தெரியாது!
இனிமேயாவது ஒழுங்கா எழுதுறேன் !

சொன்னதுக்காக கொஞ்சம் கூல்...
வெயிலுக்கு இதமாக..!


தெரியாம குடுத்துட்டோமோ? - புதுகைத்தென்றல் மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருக்கிறார் !

காலம் கடந்தாலும்... இந்த விருதை நான் கொடுக்க விரும்பும் பதிவர்கள்॥

அவர் என் நண்பர் என்று பதிவுலகமே கொள்ளும் அன்பு எம்.எம்.அப்துல்லா

சினிமாச்செய்திகளை அலட்டிக்கொள்ளாமல் அள்ளித்தரும் முரளிகண்ணன் அண்ணன்!

விருதெல்லாம் இவருக்கு மேட்டரே இல்லையென்றாலும் நம்ப டெம்ப்ளேட் சிங்கம், டெக்னாலஜி தங்கம்...சஞ்சய் ஜி

Sunday, March 8, 2009

பெண்களே...பெண்மையே வாழ்க நீங்கள் !


காடுகளுக்குள்
கரடுமுரடாய்த்திரிந்துகொண்டிருந்த
எங்களினத்திற்கு
கனிவுகாட்டி
முரட்டுத்தனம்
நீக்கி
மென்மையாக்கி
இன்றும்
வாழ்விற்கு அர்த்தம்
காணவைக்கும்

பாட்டிகளாய்
தாயாய்
சகோதரிகளாய்
நண்பர்களாய்
உறவினர்களாய்
மகள்களாய்
வாழ்ந்துகொண்டிருக்கும்


சென்ற ஆண்டில் இருந்த பட்டியல் போக..

இந்த ஆண்டில்
வந்த
நண்பர்கள்

பூமா
கஸ்தூரி ரத்னா
விமலா குணசேகரன்
காயத்ரி
ஜெனிபர்
லிண்டா
சாந்தா ஸ்ரீனிவாசன்
விஜயலட்சுமி ராம்குமார்
நாகசத்யா
டோரதி கிருஷ்ணமூர்த்தி
தீபா ரெபி

புதிய பதிவர்கள்
சந்தனமுல்லை
ஸ்ரீமதி

மருமகள்
மஹதி

மகளாகப்பிறந்த தேவதை
சைந்தவி...

என வாழ்வை
அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும்..

பெண்களே...
பெண்மையே..!
வாழ்க நீங்கள்!

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...