Thursday, August 6, 2009

இந்த வினாடி என்ன செய்கிறோம்? -ஒலிப்பதிவு

மறுபடியும் ரேடியோ...மறுபடியும் அறிவுரை மழை..!

இஷ்டப்பட்டவுங்க நனையலாம்!

இல்லைன்னாலும் தூறல் விடாது!

:)


Get this widget | Track details | eSnips Social DNA



பயன்படுமா?

Wednesday, July 29, 2009

ஒலிப் பதிவு

வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காமல்
திருச்சிராப்பள்ளி வானொலியில் ,இருபது வாரங்கள்,
ஒவ்வொரு செவ்வாயன்றும் இரவு 8 மணிக்கு
பேசிய 'தளராதே விழித்தெழு ' நிகழ்ச்சியிலிருந்து ஒரு துளி !


Get this widget | Track details | eSnips Social DNA




பிடிச்சிருந்தா அடுத்தடுத்து போட முயற்சிக்கிறேன்.
இல்லைன்னா ...விட்ருவோம் !
:)

Tuesday, July 14, 2009

அஜினோமோட்டோ அரக்கனா? அழகனா?

அஜினோமோட்டோ எனும் அரக்கன் என்ற பதிவில்..உள்ள அதிகாரப்பூர்வ தகவல்களைப்பற்றி நண்பர்கள் சிலருக்கு சந்தேகம் எழுந்தது.

அவர்கள் சொல்வது சரிதான்..!

ஆனால்..இவர்கள் (அமெரிக்க உணவுக்கழகம் அல்லது அஜினோமோட்டோ நிறுவனம் ) கூறும் அளவில்தான் விளையாட்டே உள்ளது. ஒரு நாளைக்கு அல்லது, மனிதனின் மொத்த உடலுக்கு MSG எவ்வளவு தேவையென்று இவர்கள் அறுதியிடவில்லை.அப்படியே சில இடங்களில் கூறினாலும்..அந்த அளவை தயாரிப்பாளர்கள் சேர்ப்பதில்லை..ஏனெனில் அந்த அளவால் எந்தவொரு சுவை சேர்ப்பும் நடந்துவிடாது.

மேலும்..அளவுக்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் உணவுப்பழக்கம் உள்ள நம் நாட்டிற்கு இந்த வகை உணவுக்கலப்புகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
'கனியிருப்பக்காய் ஏன் கவருவானேன்' னு தான் சொன்னேன்!

அதிகாரப்பூர்வமில்லாத, ஆனால் அரசியல் நிறைந்த ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.

சீனாவின் தயாரிப்பாக வரும் MSGக்கள்தான் இந்தியாவுக்கு வருகின்றன. அவற்றில்தான் நமக்கு சந்தேகமே.. ஏனெனில்..சீனாவிடம் இந்தியா தோற்காமலிருக்கும் ஒரு விஷயம் .மென்பொருட்கள். காரணம் நமது LOGICAL BRAIN..! இதனை அஜினமோட்டோவால் மழுங்கடிக்கமுடியும்...குழந்தையாய் இருக்கும்போதே கொடுக்க ஆரம்பித்துவிட்டால் கண்டிப்பாக இழப்பு ஏற்படும்..சீனா எதையும் செய்யத்துணிந்த நாடு.......என்று செல்கிறது அந்தச்செய்தி!

மேலும் இங்கு விற்கப்படும் அஜினோமோட்டோவில் இத்தகைய பொருட்கள் உள்ளதை எங்கள் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கமே ஆய்வுக்குட்படுத்தி..வேதிப்பொருட்களின் அளவு மற்றும் பெயர்களைத்தெரிந்துகொண்டோம்.

மெத்தனால் இருப்பதை உறுதிப்படுத்தினோம்.

மேலும்...உணவுப்பொருட்களை பெரிய அளவில் தயாரிக்கும் எந்த நிறுவனமும்.. MSGஐ தயாரிப்பதில்லை என்று அறிகிறேன். (அப்படித்தயாரித்தால் தயவுசெய்து நண்பர்கள் தெரியப்படுத்தவும்..அந்த நிறுவனம் மீதும் வழக்குத்தொடர வசதியாக இருக்கும்! :) )

எல்லாவற்றையும் விட...
பெப்ஸி, கோக்கில் பூச்சி மருந்து அளவு அதிகம் என்று எப்படி நிரூபிக்கப்பட்டபோது.. சொன்னவர்களை எதிர்த்து எந்த வழக்கும் போடாமல், தங்கள் சரக்கு உத்தமமானது என்று கூவிக்கொண்டிருந்தார்களோ..
அதுபோல்தான் உலகளாவிய அளவிலும்..அஜினோமோட்டோ செய்துகொண்டிருக்கிறது. மேலும் இந்தோனேஷியாவில்..பன்றிக்கொழுப்பு இதற்காகப்பயன்படுத்தப்படுவதாக செய்தி வந்து நாடே அல்லோகலப்பட்டது. அது உண்மையா இல்லையா என்பதைவிட...நூற்றாண்டு காலங்களாய் நல்ல ,ஆரோக்யமான உணவு வகைகளை உண்டு வந்த நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றுதான்.. அஜினோமோட்டோவுடன் உலக நுகர்வோர் அமைப்புகள் போராடுகின்றன.

கண்மூடித்தனமாக ஏன் நாம் அதை எதிர்க்கவேண்டும்? பிஸா, பீட்ஸா, பர்கர்..என்று எண்ணற்ற உணவுவகைகள் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் எதிர்க்கவில்லையே..மேலும் ..நமக்கு நெருக்கமான மருத்துவர்கள் நம்மையோ.நம் குழந்தைகளையோ இந்தவகை JUNK FOOD களை சாப்பிட பரிந்துரைப்பதில்லை.
காபியே உடம்புக்குக் கெடுதல் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சத்தியமாக அஜினோமோட்டோ காபியை விடக்கெடுதல் ஜாஸ்தி!

அதற்காகத்தான் எழுதினேன்.

அஜினோமோட்டோவுக்கும் எனக்கும் எந்த ஒரு முன்விரோதமும் கிடையாது சாமியோவ்!


மேலதிக தகவல்களுக்கு!

http://www.opposingdigits.com/forums/viewtopic.php?t=1594

http://www.rense.com/general67/msg.htm

http://www.truthinlabeling.org/

http://www.truthinlabeling.org/Proof_BrainLesions_CNS.html

நாஞ்சில் நெஞ்சம் - பாகம் இரண்டு


நாஞ்சில் நெஞ்சம் முதல் பாகம் இங்கே!

*************************************************************************************

அது, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். நன்றாகப் படித்து, குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவரவேண்டுமென்று நினைத்த எனக்கு பெண்கள் சகவாசம் காதலில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால் வாழ்க்கை கெட்டுவிடும் என்ற எண்ணம் வலுவாக இருந்தது. வகுப்பில் பலர் கல்யாணி, சுமதி, மஹாலெஷ்மி, ஜெயஸ்ரீ, கற்பகம், ராஜவேணி என்று நினைவில் நிற்கக்கூடியவர்களாக இருந்தனர்.

இவர்களில் ஒரு சிலர் நன்கு பேச, பழகக்கூடியவர்களாகவும், பணக்காரர்களாகவும், படிப்பைத்தவிர மற்ற அனைத்து பொழுதுபோக்குச் செயல்பாடுகளிலும் அதீத நாட்டம் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஆனால் ராஜவேணி மட்டும் ஒரு தீர்க்கமான பார்வையுடன், என்னுடைய பெண் வெர்ஷனாக இருந்தாள். எல்லோரிடமும் பழகுவாள். ஆனால் அதில் மிகச்சரியான கண்ணியம் இருக்கும்.!
வகுப்பின் முதல் நாளில் ..லட்சியம் என்னவென்று பேராசிரியர் கேட்டதற்கு மிகத்துல்லியமாக பதில் சொன்ன சொற்பமானவர்களில் நாங்கள் இருவரும் இருந்தோம். எனக்கு என் லட்சியத்தைவிட..அவள் சொன்ன கலெக்டர் என்பது சரியோ என்றுகூட சில நாட்கள் தோன்றியிருக்கிறது. அதே போல் அன்றைய செய்திகளை மிகச்சரியாக அலசுவாள். மிகவும் அழகாக உடை அணிவாள். தன் புத்தகங்களை நேர்த்தியாக வைத்துக்கொள்வாள். அவள் மேல் மட்டும் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை.
இந்தச்சமயத்தில்தான் ராஜவேணியிடம் என் நண்பன் அருண் தன் காதலை ஒரு கடிதத்தில் சொல்ல, கல்லூரி முடிந்து எல்லோரும் சென்றபின் அவனைத் தனியே அழைத்து, எனக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் முடித்துவிட்டுத்தான் என் திருமணத்தையே யோசிக்கமுடியும். மேலும் நான் ஐ ஏ எஸ் தேர்வுக்காக தயாராகும்போது பல தோல்விகள் ஏற்படும். கடைசி முயற்சிவரை காத்திருக்க உன்னால் முடியாது. இவற்றையெல்லாம் மீறி உன்னிடம் எனக்கு எந்த் ஈர்ப்பும் ஏற்படவில்லை. என்று மிகத் தெளிவாகக்கூறி, எனக்கான எச்சரிக்கை மணியையும் அடித்திருந்தாள்.
திடீரென்று தலையைச்சிலுப்பிக்கொண்டவனாக, இனிமேல் அவளிடம் மிகவும் மரியாதையாகப்பழகவேண்டும். நமக்கு இந்த சிந்தனை வந்ததே தவறு என்று எண்ணிக்கொண்டேன். பாழாய்ப்போனவள் நான் இப்படி நடக்க ஆரம்பித்தபின் தான் என்னிடம் மிக மிகப்பிரியமாக பழக ஆரம்பித்தாள். என்ன செய்வது? எதுவுமே வெளிப்படுத்தாமல், என்றாவது அவள் நல்ல நிலைக்கு வந்தால் போதும் என்ற எண்ணத்துடன் ஒதுங்கிவிட்டேன். ஒரு நண்பனாகவே படிப்பை முடித்தேன். பின்னர் ராஜவேணியைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை. எனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யும்போது அவளது முகம் ஒரு வினாடி வந்துபோனதை மறுப்பதற்கில்லை.

**********************************************************************************
எனக்கான இட்லியையும் வடையையும் எடுத்துக்கொண்டுவந்தது, நான் பார்த்துப்பார்த்து பெருமைப்பட்ட, படிப்பில் வெறியைத்தூண்டிய, இன்றைய என் நல்ல நிலைக்கு அடையாளமாக இருந்த, ராஜவேணி!

எனக்கு உண்மையிலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை!

'என்ன ராஜவேணி! எப்படி இருக்க? நான் குணா! தெரியலையா?'

தெரியலையே! யாரு நீங்க? நான் நீங்க சொல்ற ஆளு இல்லையே! என்று கூறி விருட்டென்று உள்ளே ஓடிவிட்டாள்.

எனக்கு இட்லியை விழுங்குவது, கிரானைட் கல்லை விழுங்குவது போல் இருந்தது. இல்லை..இவள் ராஜவேணிதான்..எதற்காகவோ நம்மிடம் மறைக்கிறாள். என்னவென்று பார்த்துவிடவேண்டும். என்ற எண்ணத்துடன் அந்த சூப்பர்வைசரிடம் இன்னும் ரெண்டு இட்லி என்றேன். மற்ற உணவுகளாக இருந்தால். கொஞ்சம் தாமதமாகும்.

உடனே அடுத்த தட்டு இட்லிக்களுடன் அவளே வந்தாள். முகம் சிவந்திருந்தது. வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டு இடம் மாறியிருந்தது.

'இங்க பாருப்பா ! நான் யார்க்கிட்டயும் சொல்லமாட்டேன். என்ன ஆச்சு? ஏன் இப்படி? 'என்று மிகத்தாழ்வான குரலில் கேட்டேன்.

'என்ன சார்! நீங்க சொல்ற பொண்ணு நான் இல்லைன்னு சொல்றேன். புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறீங்க!' - என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டுவிட்டாள்.

'எனக்கு நீ ராஜவேணிதான்னு கண்டிப்பா தெரியும்..எனக்கு இட்லி போடச்சொன்னபோது கூட, வேணின்னு அவர் கூப்பிட்டாரே' !

'ஏன் ஒரே பேரில் , ஒரே மாதிரி வேற ஆள் இருக்கக்கூடாதா?' என்றாள் மிகத்தெளிவுடன்.....சிவில் சர்வீஸஸுக்கு தயார் செயதவள் ஆயிற்றே!

இனிமேல் பேசிப் பயனில்லை என்றபோதும்...கடைசிவரை அவளையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு..பில் எடுத்து வந்த தட்டில் என் விஸிட்டிங் கார்டைப்போட்டு விட்டு எழுந்து வந்துவிட்டேன்.

இந்த நாஞ்சில் நாட்டில், இயற்கை அழகைப்போலவே அழகான இதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. என்ன ? கொஞ்சம் அழுத்தமானதாகவும் இருந்துவிடுகின்றன். அப்போதும் , என்னிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்த அவள் பக்க நியாயங்களே சரியாக இருக்கக்கூடும் என்ற எண்ணமே மேலெழுந்தது.


யாராவது அவளுக்கு என்ன நடந்தது என்று கேட்டுச்சொல்லுங்களேன்!


Monday, July 13, 2009

நாஞ்சில் நெஞ்சம்

நாஞ்சில் நாடனின் எழுத்தைப் போலவே கொஞ்சம் இதமாகவும், இயல்பாகவும் வரவேற்றது நாகர்கோவில்..

அது அதிகாலை ஐந்து மணி.

சாதாரணமாக ஏற்படும் வாய் வழுவலையும்..அதிகாலை தாகத்தையும் பின்னுக்குத்தள்ளி இதமான காற்றும் தூரலும்... கொஞ்சம் ரசனைக்கு முன்னிலை கொடுத்தது. சாலைகளின் வளைவுகளும், போக்குவரத்தின்மையும், மலை போல் மேடாகவும்...கீழ் நோக்கியும் செல்லும் பாதைகளும் ரசிக்க வைத்தன. இதற்கு முன்னால் நாஞ்சில் நாட்டிற்கு வந்தபோதெல்லாம்..அனேகமாக பகல் நேரங்களாகவே இருந்தன. மேலும் தங்கியதெல்லாம், கன்னியாகுமரியாக இருக்கும்.

எப்போது வெளியூர் சென்றாலும்..எனக்குக் கொஞ்சம் திமிர் அதிகம்.. எல்லா ஊரிலும் எனக்காக ஒரு விடுதியின் அறை காத்திருக்கும் என்ற மதர்ப்பில் மண்ணள்ளிப் போட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மனோகரனின் மண்.

முதலில் பேருந்து நிலையத்திலிருந்து தேடல் தொடங்கியது. செல்ல வேண்டிய இடமான காவல்துறை உயர் அலுவலகம் வரை எங்கெங்கிலும் எனக்காகவே ' அறை இல்லை' என்ற சொல்லை அழகாக, வெவ்வேறு முறைகளில் சொன்னார்கள்.

கொஞ்சம் குளிர்சாதனம்... ஒரு நல்ல தொலைக்காட்சி... அதைவிட மூட்டைப்பூச்சிகளின் மாநாட்டு மேடையாய் இல்லாத கட்டிலை கனவுகண்டுகொண்டு சென்ற நான் ஒதுங்க ஒரு இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வரும்போது மணி 6:40.

அதேபோல், எந்தவசதிகளுக்கும் வசதியில்லாத ஒரு அழகான அறை கிடைத்தது.
அதுவும், நான் நினைத்ததை ஐந்து மடங்கு குறைவான வாடகையில்..! 'அவ்வளவுதானா..அவ்வளவுதானா ' என்று இருமுறை விடுதியாளரிடம் கேட்டுவிட்டேன்.

விடிய விடிய அறை தேடியதில்..தூக்கம் என்னைக்கெஞ்ச. நான் அதனிடம் கடமைகள் பற்றி கெஞ்ச...போராட்டத்தில் நம்பிக்கையில்லாத கால்கள் தானாகப்போய் கட்டிலில் ஏறி தன் ஆதரவை தூக்கத்திற்கு அளித்தது. தூக்கம் வெற்றிக்களிப்புடன் தன் வேலையைச்செய்தது.

காலையில் கிளம்பும்போது 9 மணி ஆகிவிட்டிருந்தது. காலை உணவுக்கு தேடல் ஆரம்பம்.. சம்பந்தமே இல்லாமல் காட்டு விலங்குகளின் இரைதேடும் சிரமங்கள் நினைவுக்கு வந்தது. எவ்வளவு தேடித்தேடி வேட்டையாடி அன்றைய உணவை முடிக்கின்றன! ! அதேபோல் காட்சிசாலை விலங்குகளும் நினைவைத் தடவிச்சென்றன! அவைகளுக்கு சரியான நேரத்துக்கு உணவு கிடைத்துவிடுகிறது..ஆனால் சுதந்திரம்.? நாம் கையில் ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்துடனும்., அடுத்த சந்ததிக்கான சொத்துக்களுடனும், ருசியான உணவு எங்கு கிடைக்கும் என்ற வினாக்களுடனும் நாகர்கோவிலின் தெருக்களில் நடமாடிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டே ஒரு பழமையான சைவ விடுதியில் நுழைந்தேன்.

இப்போதெல்லாம் பெண்கள் வேலைக்கு நுழையாத துறையே இல்லை எனலாம். அதில் சில ஆச்சர்யங்களும் , அசௌகரியங்களும் இருக்கவே செய்கின்றன. பெட்ரோல் போடும் இடங்களில் உள்ள பெண்கள் தங்கள் கடமையை மிகச்சரியாக ஆற்றினாலும், வேறு சில இடங்களில் பெண்களிடம் , பொருள் பெயர் சொல்லி கேட்க முடியாமல் ஆண்கள் தவிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கும் இந்த சங்கடம் இருந்திருக்கும் என்பதையும் உணர முடிகிறது. ஆனால் வீட்டில் ஒரு ஆண் உணவு பரிமாறுவதைவிட பெண்கள் பரிமாறுவதில்..பரிவும் கலந்திருப்பதாகவே தோன்றும். ஏனெனில் ஆண்கள் போதும் என்றால் உடனே நிறுத்திவிடுவார்கள். அதுதான் சரியானதும்கூட....! இருந்தாலும், 'பரவாயில்லை..சாப்பிடு (ங்க )! 'என்று பெண்கள் ஒரு கவளம் அதிகம் வைக்கும்போது பரிமாறுதலின் வாஞ்சை தானாகவே தட்டில் வந்து விழுந்துவிடும். அதனால்தானோ என்னவோ அந்த உணவு விடுதியிலும் பெண்கள் சிலரையும் பரிமாறுபவர்களாக வைத்திருந்தார்கள். ஆனால் உணவு விடுதியில் அதிகமாக ஒரு கவளம் விழாவிட்டாலும் , ஆண்களைவிட ஒரு படி மேல்தான் கவனிப்பு இருக்கும் என்ற கணிப்பு எனக்கு!

வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு , நல்ல முக அலங்காரத்துடன்..ஒருவர் வந்து என் அருகில் நின்றார்...சாருக்கு என்னவேணும்?'

இட்லி!

வடையும் வைக்கச்சொல்லவா?

ம்..வைங்களேன்..!

வேணி..! 6ம் நம்பருக்கு 2 இட்லியும் வடையும்..சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார்..

இவ்வாறாக எனக்கான காலை உணவை நான கேட்டுவிட்டுக் காத்திருந்தபோதுதான் எனக்கான அந்த அதீத அதிர்ச்சியும் காத்திருந்தது.

(தொடரும்..)

Monday, June 29, 2009

அஜினோமோட்டோ எனும் அரக்கன்

அஜினோமோட்டோ எனும் ஒரு சுவை சேர்க்கும் பொருள் இப்போதெல்லாம், எல்லாவகை சைனீஸ், இந்திய உணவு வகைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இது ஒரு நச்சுப்பொருள் என்பது தெரியாமலேயே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் தீமைகள் தெரிந்தால் அதை யாரும் பயன்படுத்தவோ, சாப்பிடவோ மாட்டார்கள் என்பது உறுதி.

இதில் பென்லிலானைன் எனும் ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கப்படக்கூடிய தன்மை கொண்டது. மேலும் இதைப்பயன்படுத்துபவர்களுக்கு அதிகப்படியான கோபம், மன அழுத்தம் ஆகியவை தேவையில்லாமல் ஏற்படும்.மேலும் இது வன்முறை எண்ணங்களையும் தூண்டும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மேலும் அஜினோமோட்டோவில் 10% மெத்தனால் கலந்துள்ளது. அது ஒரு நேரடி விஷம். கள்ளச்சாராயங்களில் காணப்படும் மெத்தனால்தான் இது. இதன் மூலம் கண் எரிச்சல், நரம்புத்தளர்ச்சி போன்றவை நாளடைவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதைவிட பயங்கரமாக இது மரபுக்கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

அடுத்ததாக அஸ்பார்டிக் ஆஸிட் எனப்படும் அமிலம் அஜினோமோட்டோவில் கலந்துள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கக்கூடியது. குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஊடுருவி, ஞாபக மறதி, வலிப்பு நோய், மனநோய் போன்றவற்றில் கொண்டுவிட்டுவிடும். இதுவும் அஜினோமோட்டோ கலந்த நூடுல்ஸ் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

அதைவிட ஆபத்தைவிளைவிக்கக்கூடியது, MSG எனப்படும் மோனோ சோடியம் க்ளூட்டாமேட் எனும் வேதிப்பொருள்! இது ஒரு நச்சு உணவு! இது கலந்த உணவை உண்டவர்கள் அதிகம் தூங்க ஆரம்பிப்பார்கள். மேலும் வயிற்றில் புண் மற்றும் சரியான நேரத்துக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் அல்சர் ஆகியவை ஏற்படும். மேலும் எப்போதும் ஒரு சோர்வான உடல்நிலையை இது ஏற்படுத்தும். இவ்வளவு கெடுதல்களையும் கொண்ட ஒரு உணவை காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உணவகங்கள் அவர்களை பலவீனப்படுத்தவேண்டாம். மேலும் ஹோட்டல்களுக்கு உணவு உண்ணச்செல்லும்போது, அஜினோமோட்டோ கலக்காமல் நூடுல்ஸ் கேட்டு வாங்கி உடல் நலத்தைப்பேணுங்கள் !
அஜினோமோட்டோ எனும் அரக்கனைப்புறக்கணித்து, பணம்
செலவழித்து வியாதி வாங்குவதை தவிர்ப்போம்.

பார்க்கமுடியாததைப் பார்ப்போம்!

சில திரைப்படங்கள் பார்த்தவுடனேயே -அதைப்பற்றி நண்பர்களிடம் - சொல்லவோ, விமர்சனம் எழுதவோ தோன்றும்..தூண்டும்!

ஆனால் சில திரைப்படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கவைத்து- பிரமிக்கவோ,விதிர்க்கவோ வைத்து , அசைபோட்டு பின்னர் சொல்லத்தூண்டும்.
இது இரண்டாவது ரகம் போலும்! ( லேட்டா பதிவு போடறதுக்கு இப்படி ஒரு பில்டப்பா?)

ஆம்..
BLINDNESS - அப்படிப்பட்ட படம்தான்.!

ஒரு நகரம்- அதன் காலைநேரப் போக்குவரத்துச்சந்தடிகளில் சிக்னலில் ஒரு மனிதர் காரில் - பச்சைவிளக்குக்காகக் - காத்திருக்கிறார். பச்சை விளக்கு எரியும்போது அவருக்கு, கண் தெரியாமல் போய்விடுகிறது. அது ஒருவிதமான வெள்ளைக்கண் குறைபாடு- WHITE BLINDNESS-காரை எடுக்கமுடியாமல் தவிக்கிறார். அவருக்கு உதவ வந்த மனிதன் இவரது பார்வையின்மையைப் பயன்படுத்தி காரைத்திருடிக்கொண்டு செல்ல, அவரைச்சோதிக்கும் மருத்துவர் கண்ணில் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் எப்படி ஆனதென்று
தெரியவில்லையென்று சொல்லிவிட, வீடு வந்து சேருகிறார். அப்போது பிடிக்கிறது கதையில் சூடு!

அவர் பார்த்த, அவரைப்பார்த்த எல்லோருக்கும் தொற்றுநோயாக பார்வையின்மை ஏற்பட, மக்கள் தவித்துப்போகிறார்கள். இதில் மருத்துவரும் அடக்கம்.உடனே அரசு இந்த வகை நோயாளிகளை வெளியுலகத்திலிருந்து தனிமைப்படுத்துகிறது.அப்படி தனிமை முகாமிற்கு மருத்துவர் அழைத்துச் செல்லப்படும்போது அவரது மனைவியும் வருகிறார். ஆனால் அவருக்கு பார்வை நன்றாகத்தெரிகிறது. (எப்போதுவேண்டுமானாலும் தனக்கும் பார்வை போய்விடும் என்று அவரும் நம்புகிறார்)

அவர்கள் அடைக்கப்படும் தனிமை முகாமுக்குள்தான் மீதிக்கதை பயணிக்கிறது.

அங்கு, முதலில் காரில் பார்வை இழந்தவரும், ஏனையோரும் வந்து அடைக்கப்படுகிறார்கள். அதற்கு கடுமையான காவலும், கதவுகளும் உள்ளன. உணவுமட்டும் வெளி உலகத்திலிருந்து வரும்.அப்போது சின்னச்சின்ன பிரச்னைகளை அவர்கள் சந்திப்பதையும், கண் தெரியாதவர்களின் உலகம் எவ்வளவு ஒழுங்கற்றதாக ஆகும் என்று மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.ஒரு சமயத்தில், உணவுப்பொருள் உள்ளே வரும் ஒரு வார்டில் இருக்கும் ஒருவனுக்கு ஆதிக்க வெறி வந்து,கையில் துப்பாக்கியோடு மற்ற வார்டில் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள பணம், பொருட்களை கொடுத்தால்தான் உணவு கிடைக்கும் எனக்கூற, அதன்படியே செய்கிறார்கள். இவர்களிடம் ஒன்றுமில்லாமல் போகும்போது , அடுத்த வேளை உணவுக்கு வில்லன் கேட்பது மற்ற வார்டில் உள்ள பெண்களை ! வேறு வழியின்றி உணவுக்காக, தம் வார்டில் உள்ள பெண்களையும் அனுப்புகிறார்கள்!இந்த நிலையிலும், ஆச்சர்யமாக மருத்துவரின் மனைவிக்கு மட்டும் அந்த நோய் தொற்றாமல், பார்வை போகாமல் இருக்கிறார்.
இந்நிலையில், வெளியிலிருந்து உணவு வருவதும் நின்றுபோகிறது.மேலும் மேலும் வில்லனின் அராஜகம் அதிகமாக, வேறு வழியின்றி கண் தெரியும் மருத்துவரின் மனைவி அவனைக் கொன்றுவிடுகிறார். மீதமுள்ளவர்களுடன் அந்த முகாமிலிருந்து வெளிவருகிறார். அப்போதுதான் நமக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த நகரமே பார்வையின்மையால் பாதிக்கப்பட்டு சீரழிந்துபோய் இருக்கிறது. அந்த நகரத்திலேயே பார்வை தெரிந்தவர் கதாநாயகி மட்டும்தான்! மெதுவாக தன் கணவருடன் மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு தன் வீட்டை அடைகிறார். அங்கு அவர்கள் மெதுவாக தங்கள் வாழ்க்கையை வாழத்துவங்குகிறார்கள். முதலில் பார்வை இழந்தவருக்கு, மீண்டும் பார்வை வருகிறது . அத்துடன் படமும் நிறைவு பெறுகிறது.

இது நாவலாக வந்து படமாக்கப்பட்டிருக்கிறது. அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
José Saramago எழுதிய கதையின்
இயக்குநர் Fernando Meirelles.
கதாநாயகி Julianne Moore

படத்தின் ஒவ்வொரு காட்சியும் வீணாக்காமல் எடுக்கப்பட்ட்டிருக்கிறது.
கணவனின் மீது இவ்வளவு அன்பு மிகுந்த ஒரு மனைவியின் பாத்திரத்தை ஜுலியான் மூர் மிகச்சிறப்பாகச்செய்திருக்கிறார்.
அந்த முகாம் ஆரம்பத்தில் இருப்பதற்கும், போகப்போக அதில் ஏற்படும் மாற்றங்களையும் அதிர்ச்சிகரமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

வில்லனின் வார்டில் ஒரு இயற்கையிலேயே பார்வை இழந்தவர் இருக்கிறார். அவர் இவர்களைவிட பார்வையின்மைக்கு பழக்கப்பட்டிருக்கிறார் என்பது சிந்திக்கவைக்கிறது.அவருக்கு ப்ரெய்லி தெரியும் என்பது கூடுதல் திறமையாகப்பார்க்கப்படுகிறது.

முகாமிலிருந்து இவர்கள் வெளியேறியவுடன்,ஒரு சூப்பர்மார்க்கெட்டில் உணவுப்பொருட்களை எடுத்துக்கொண்டு வெளிவரும் ஜூலியான் மூரை கண்தெரியாதவர்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டு உணவைப்பிடுங்குவது சூழலுக்கேற்றவாறு பழகும் மனிதவளர்ச்சியை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் தேவைகளையும், அதற்காக அவன் போராட்டங்களையும், அவனுக்கு ஏற்பட்ட ஆதிக்க வெறியையும் அதற்காக அவன் அடைந்ததும் , இழந்ததுமான பாதையை இந்த முகாம் என்ற போர்வைக்குள் நமக்கு காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இன்னும் இந்தப்படத்தைப்பற்றி பேசிக்கொண்டே போகலாம்.

எப்ப வாய்ப்பிருந்தாலும்கண்டிப்பா பாருங்க !

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...