Saturday, November 7, 2009

மகிழ்துக்கம்...!


மறுபடியும் யூத்புல் விகடனில்...கவிதை!

இன்னிக்கு யூத்ஃபுல் விகடனில் என் கவிதை வந்திருக்கு! ஆச்சர்யமா இருக்கு!




கவிதை இதுதான்..!


காணாமல் போன
தோழியைத் தேடும் முயற்சியில்
காவலர்கள் வந்து
பார்க்கச்சொன்ன,
விபத்தில் இறந்த பெண்ணை
அடையாளம் காட்டும்
அந்த விநாடியில்
அவளில்லை என்று
சொல்லும்வரை
பரிதவித்த மனம்
அகமகிழ்ந்தாலும்
அடுத்து
யாரோ ஒருவனுக்கு
அந்தப் பெண்ணை
’அவள்தான்!’
என்று கூறவேண்டியதன்
அவலம் கொஞ்சம்
அதிகமாகவே கனத்தது.

நன்றி: யூத்ஃபுல் விகடன்.காம்

Saturday, October 31, 2009

செய்யாச் சிந்தனை!




எதை எழுத நினைத்தாலும்
ஒன்றும் எழுத முடியாமல்
நண்பர்கள் சிந்தனையை
வேடிக்கை பார்த்துவிட்டு
கணிணியை மூடும்போதுதான்
மூளைக்குள் முளைத்திருக்கும்
வேர்களுக்கு
நான் ஊற்ற நினைத்த நல்நீர்
நாக்கில் ஊறியும்
வெளிப்படாமல்
விரல்களின் வழியும்
இலைவிடாமல்
சோம்பேறித்தன வெந்நீராய்
வேர்களைப் பொசுக்கிவிட்ட
செய்தியொன்று
கைதவறிய பூங்கொத்தாய்
என்னை ஏளனப்படுத்திச்
சிரிக்கிறது!
பொசுக்கிய வேர்களின்
ஏதாவதொரு வித்து
நண்பரின் மூளைக்குள்
முளைவிடும்போது
வெந்நீரைக்குளிரவைக்க
வெட்டிச் சமாதான
பனிப்பாறைகளை
கொட்டக்கொட்ட
விஞ்ஞானம் மீறி
வெந்நீர் கொதித்து
வெடித்தெழும் எரிமலையாய்
விடியல்கள் கனக்கிறது!

ஒன்றுமட்டும் தெரிகிறது

சிந்திப்பது சுலபம்!
செயல்படுவதே கடினம்!


Wednesday, October 21, 2009

மகளென்னும் தேவதை!

காணாமல் போன
செல்போனை
வீடெங்கும் தேடினால்
தண்ணீர் அண்டாவில்
கிடக்கிறது!

பால் காய்ச்ச வைத்திருந்த
பாத்திரத்தைக்காணவில்லை
என்று அம்மா அலற, அது
குப்பைக்கூடைக்குள்ளிலிருந்து
எட்டிப்பார்க்கிறது !

தொலைக்காட்சியின்
ரிமோட்டின்
உடலெங்கும் கட்டுக்கள்!
அடுத்த ரிமோட்
வீட்டுக்குள் அடியெடுத்து
வைக்கிறது!

வெளியில் கிளம்பும்
எல்லோருக்கும் விளையாட்டு
காத்திருக்கிறது!
உங்கள்செருப்பைத்
தேடுங்கள் பார்ப்போம்.!

படுக்கையறையில்
இடம்மாறிய பலபொருட்களை
கண்டுபிடிப்பதே பாதிநாள் பணியாய்
வேலைக்காரி கூறுகிறாள் !

அசந்த நேரங்களில்
தண்ணீர்ப் பாத்திரங்கள்
தலையில் ஊற்றியதுபோக
மீதத்துடன் நிற்கின்றன!

கதவுகளின் சாவித்துவாரங்களெங்கும்
குச்சிகள் அடைக்கப்பட்டு
அவசரத்துக்கு பூட்டமுடியலை
என்று அத்தனைபேரும்
அலறுகிறோம்.!

அம்மா என் புத்தகத்தின்
ஆறாம் பக்கத்தை காணலை!
அலறுகிறான் அஸ்வின்!


அடுக்கிவைத்திருந்த
துணிகளெல்லாம்
அறையெங்கும் சிதறிக்கிடக்க
மனைவியின் புலம்பலால்
நிறைகிறது இரவு உணவு!

நடமாடும் பகுதியெல்லாம்
சோற்றுப்பருக்கை,
கஞ்சி என
காலெங்கும் பிசுபிசுப்பு!

என் மகளென்னும் தேவதை
நடமாட ஆரம்பித்துவிட்டாள்!

அவள் எச்சில் படாத இடமிருந்தால்
எங்கள் வீட்டில் காட்டுங்கள்!
அவளிடம் தரச்சொல்கிறேன்
அன்பான ஒரு எச்சில் முத்தம் !









Thursday, October 1, 2009

ஒரே சமயத்தில் 22 !



இந்தமாதிரி மேட்டருக்குத்தான் இவன் லாயக்குன்னு ..டேக்கின அன்னத்துக்கு....! நற...நற...நன்றியுடன்! :)


1.Grab the book nearest to you, turn on page 18 and find line 4?

எடுத்துவிட்டேன்...ஆம்...18ம் பக்கம்..4வது வரி இருக்கிறது...! (எப்புடி?)


புத்தகம் : ஒரு தமிழ்ப்பாமரனின் பயணம் - மு.தனராசு

"நான் தலையை மட்டும் ஆட்டினேன். நான் சந்தேகப்..."

2. Stretch your left arm out as far as you can & touch air?

இல்லை...அதற்குமுன்னரே அது என்னைத்தொட்டுவிட்டது


3.What is the last thing you watched on TV?

சுஃபி ஞானிகளைப்பற்றிய டிஸ்கவரி தொகுப்பு

4.Without looking, guess what time it is?

இரவு 8 மணி....15 நிமிடங்கள் 20 வினாடிகள்


5. Now look at the clock, what is the actual time?

இரவு 8 மணி ....17 நிமிடங்கள் 10 வினாடிகள்

6. With the exception of the computer, what can you hear?

தொலைக்காட்சி


7. When did you last step outside? What were you doing?

நட்சத்திரங்கள் மொட்டைமாடியில்...! நண்பனிடம் உலாபேசிக்கொண்டே!

8.Before you started this Q&As, what did you look at?

அப்துல்லாவின் பதிவு


9. What are you wearing?

இதுவேறயா....டீ ஷர்ட்..


10. When did you last laugh?

ஸ்வாமி ஓம்காரின் பதிவை அப்துல்லா பதிவு வழியே சென்று படித்துவிட்டு..!

11. What is on the walls of the room you are in?

இந்திய வரைபடம்....


12. Seen anything weird lately?

இல்லை!


13. What do you think of this quiz?

என்னத்த சொல்ல...! வேலையில்லாம இருக்கேன்னு யாரோ அன்னத்திடம் சொல்லியிருக்காங்க! :)


14. What is the last film you saw?

SURROGATES

15. If you became a multimillionaire overnight, what would you buy?

அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை (எவ்வளவு செலவானாலும் ) வாங்குவேன்! :)


16. Tell me something about you that I dunno!

எல்லாம் உங்களுக்குத்தெரியும்...சும்மா விளையாடாதீங்க!


17. If you could change one thing about the world, regardless of guilt or politics, what would you do?

மனிதர்களின் தட்டிக்கேட்கும் மனோபாவத்தை அதிகரிப்பேன்

18. Do you like to Dance?

கண்டிப்பா!


19. Imagine your first child is a girl, what do you call her? .

சைந்தவி


20.Imagine your first child is a boy, what do you call him?problem..

அஸ்வின்


21. Would you ever consider living abroad?

எல்லாம் 4 வருஷம் வாழ்ந்து பாத்தாச்சு..!


22. What do you want GOD to say to you when you reach the pearly gates?

கொஞ்சம் இங்க இருந்து பாத்துக்க..! நான் வெளில போய்ட்டு வரேன்..!


இனிமே யாரைக்கோத்துவிடறது..

பாவம்..ஏதாவது பொழப்பிருந்தா பாருங்கப்பா! புள்ளைங்கள படிக்கவைங்கப்பா! :))

Sunday, September 27, 2009

காகங்களல்ல! மேகங்கள்!









நீங்களா இப்ப்டி ரிப்போர்ட்டில்
இத்தனை தவறு செய்கிறீர்கள்?
மேலதிகாரியின் மெயிலில் 
அனலாய்க் காய்கிறது வேலையிடம்!

சாதம் ஏன் இனிக்கிறது?
பாயசம் ஊற்றிப்பிசைந்தபின்னே
குழம்புக்கிண்ணம் பக்கத்தில்
கொக்கரித்துச் சிரிக்கிறது.

ஆறுமாதமாய் அடிக்காமல விட்ட
பாழாய்ப்போன சரக்குகூட 
சகலத்துக்கும் உதவிசெய்யும்
சகோதரனாய்த் தோன்றுகிறது!

வாகனம் ஓட்டிக்கொண்டே
சிந்தித்ததில் வழியெங்கும்
வசவுப்போக்குவரத்தின் 
வாய்கொள்ளா இரைச்சல்!

இருந்தாலும் மாப்பிளை நீ
இப்படி எழுதியிருக்கக்கூடாது!
சூப்பர்டா என்றவன் கூட
சூத்திரம் சொல்லித்தருகிறான் !

இதுக்கு என்ன பதில் எழுதலாம்?
அதை எப்படி மறுத்துச்சொல்லலாம்!
எண்ணச்சங்கிலிகள் சுற்றிவந்து
என்னைக் கொல்லாமல் விடாதுபோல!

இத்தனை நாள் காத்திருந்த
எல்லா ஹிட்டும் தாண்டிவிட்டேன்!
தேடித்தேடித் தின்னும்
பின்னூட்டங்கள் கசக்கின்றன.

மனம் நோகவேண்டாமென்று
மட்டுறுத்தினாலும் பின்னூட்டம்
பெருகுகிறது.
கூரான வார்த்தைகளால்
குறையாமல் விழுகிறது குருதி!

அந்தப்பதிவை மட்டும்
அனேகம்பேர் படிக்கக்கூடாதே..
அல்ப ஆசை ஒன்று
ஆக்கிரமிக்கும் நெஞ்சுக்குள்!


சொன்னது சரிதானென்று
சொக்காய் கிழிய வாதிடலாம்!

சொன்னது முற்றிலும் தவறே என்று
சொக்கவைத்து காலில் விழலாம்!

அப்படிச்சொல்லவே இல்லை என்று
அழித்துவிட்டு அரசியல் செய்யலாம்!


ஒரு எழவும் எழுதாமல்
ஒழுங்காக இருந்திருக்கலாம்.!

'ஒளியத்தெரியாதவன்
தலையாரி வீட்டில் ஒளிந்த கதையா'

சோக்கா சொன்னய்யா சுரேகா!


(இப்ப இருக்குற  ' ட்ரெண்ட'  பாத்துட்டு எண்ணத்தில் தோன்றியது ! )



நாம் ஒரு பிரம்மாண்டமான பதிவர்கள் சமூகத்தை நம்மையறியாமல் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். அதன் வளர்ச்சி நிலையில் ஏற்படும் சில குளறுபடிகள்தான் இப்போது நடந்து கொண்டிருப்பதும்!  

இது ஒரு தனிமனிதனை எப்படி பாதிக்கும் என்று நினைத்தபோது வந்த வார்த்தைகள்தான் இவை!  :)

திரு. செந்தில்நாதனை காப்பாற்ற தோள்கொடுத்த கூட்டம்தான் நாம்!

பதிவர் பட்டறைகளை நடத்திய கூட்டம்தான் நாம்!

சிறுகதைப்போட்டிகளை சிறப்பாக நடத்தியவர்கள்தான் நாம்!

குட் டச்! பேட் டச்! குறைவில்லாமல் நடத்திக்(கொண்டு) காட்டியவர்கள்தான் நாம்!

எத்தனையோ பத்திரிகைகளின் எதிர்(நிகழ்)காலத்தீனிதான் நாம்!

எத்தனையோ திரைப்படங்களின் இலவசக்  காட்சி வழங்கிகள் நாம்! 

பிரபலங்களும் தன்னை இச்சமூகத்தின் அங்கமென்று பெருமைப்பட வைத்தவர்கள்தாம் நாம்!

நமக்குள் ஏற்படும் சச்சரவுகள் நம் வீட்டுப் பிரச்னை!

நாம் பொழுதுபோக்காய் ஆரம்பித்தது , மன உளைச்சலின் சாவியாகக்கூடாது!

அழகாகச்சிந்திப்போம்..! 
அனைவரையும் அரவணைப்போம்!  
தெரியாமல் தவறுசெய்தால் 
தெளியவைக்கும் திறன் கொடுப்போம்!
தனிமனிதத் தாக்குதல்களை
தரம்பிரித்து தள்ளி நிற்போம்!

மீண்டும் மீண்டும் பணிவுடன் விளம்புகிறேன் !

கூடிக்கரையும் காகங்களல்ல நாம்!
கூடி மழை பொழியும் மேகங்கள்!

Saturday, September 26, 2009

டெக்னாலஜி குலோத்துங்கன் - 5


நாடகத்தின் முந்தைய பாகங்கள் 1, 2, 3, 4....


இளவரசி என்ன யோசனை சொல்லவேண்டும் தந்தையே!?

மன்னர்        வாம்மா..இளவரசி! உன் லேப்டாப் சரியாகிவிட்டதா..அந்த அடிமை வந்தானா?

இளவரசி வந்தார்..நன்றாக லேப்டாப்பை ரிப்பேர் செய்தார் (மனதுக்குள்)(என் மனத்தைத்தான் கெடுத்துவிட்டுப்போய்விட்டார்)

மன்னர் மிக்க மகிழ்ச்சி!

இளவரசி அது கிடக்கட்டும்.  என்னவோ யோசனை என்று அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தீர்களே அது என்ன?

மகாராணி : அதுவா! உன் தந்தை தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்.

இளவரசி என்ன தும்பு? என்ன வால்? ஒன்றும் புரியவில்லையே!

மன்னர் இவளுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் என்னை ஓட்டுவதில்தான் இன்பம்! அது ஒன்றுமில்லை மகளே! நாட்டில் உணவு உற்பத்தியை பெருக்கலாம் என்று யோசித்தேன். அதனைச்செயல்படுத்த தகுந்த ஆள் இல்லை..அதான்..!

இளவரசி நீங்கள் எப்போதுமே இப்படித்தான் அப்பா! கையிலேயே ஆளை வைத்துக்கொண்டு ஊரெங்கும் அலைவீர்கள்!

மன்னர் நீ யாரைச்சொல்கிறாய்? உங்கள் அம்மாவையா? அவளுக்கு உணவு உண்ணத்தான் தெரியுமே அன்றி உற்பத்தி பற்றிய யோசனைகள் எதுவும் தெரியாது!

இளவரசி அய்யோ ! தந்தையே! நான் சொல்லவந்தது வேறொரு ஆளைப்பற்றி!

மன்னர் வேறொரு ஆளா? யாரது?

இளவரசி நீங்கள் தண்டனை கொடுத்து என் லேப்டாப்பை சரி செய்ய வந்தாரே திரு.புவன் அவர்கள் -அவர்தான்!

மன்னர் யார்!? அரசுக்கு வருமானவரி கட்டாமல், என்னைத்திட்டிக்கொண்டே சென்றானே அவனா?


இளவரசி அவர் பக்க நியாயத்தை நீங்கள் யோசிக்கவே இல்லை !

மன்னர் கிடையவே கிடையாது! அவன் திமிர் பிடித்தவன். அவனை என் பக்கத்தில் வைத்துக்கொண்டால், நாட்டில் ஒரு புரட்சியையே கிளப்பிவிடுவான். 

மகாராணி ஆமாம் ஆமாம் ! நம் மன்னர் புத்திசாலி! மொபைல் மணிவாசகம் போன்ற மொக்கைகளைத்தான் தம் அருகில் வைத்துக்கொள்வார் நமது அரசர்! அவனைப்போன்ற நல்லவர்களை வைத்துக்கொள்வாரா? அவனை வைத்து பின்னர் நாடு விளங்கிவிட்டால் என்னாவது?

மன்னர் போதும்.எப்போதுபார்த்தாலும் என்னை கிண்டல் செய்துகொண்டே இருக்காதே! அவன் நல்லவன் என்று உனக்கெப்படித் தெரியும்.?

மகாராணி என் மகள் ஆட்களின் தரம் அறிவதில் வல்லவள்! சைக்காலஜி படித்திருக்கிறாள். அவள் சொன்னால் கண்டிப்பாக ச்சரியாகத்தான் இருக்கும்.

மன்னர் ஓ..அப்படியா? சரி..இளவரசி.! அவன் எப்படி என் பிரச்சனைக்கு உதவுவான் என்று சொல்லமுடியுமா?

இளவரசி அவரையே அழைத்துப் பேசுங்களேன்.


மன்னர் அதுதான் சரி! நாளைக்காலை அரசவை கொலுமண்டபத்துக்கு அவனை அழைத்து வரும்படி எல்லா காவலர்களுக்கும் எஸ் எம் எஸ் செய்துவிடு! ஆனால் அவனை நான் மன்னிப்பதாக இல்லை ! சரியா!? 

இளவரசி சரி தந்தையே! மிக்க நன்றி!

காட்சி 7
(இளவரசி, புவன்)
(செல்போன் மணி அடிக்கிறது)

புவன் வணக்கம் ! புவன் பேசுகிறேன்!

இளவரசி வணக்கம் ! நான் இளவரசி பேசுகிறேன்!  

புவன் :     வணக்கம் ..சொல்லுங்கள் ! இதற்குமுன் இரண்டு மிஸ்டுகால் விட்டதும் நீங்களதானா?

இளவரசி ஆம். நான் தான் ! ஏன் நீங்கள அழைக்கவில்லை!

புவன் எனக்கு உங்கள் எண் என்று தெரியாது. மேலும் இளவரசியே ஆனாலும் பெண்கள் மிஸ்டு கால் விடுவதை நிறுத்தமாட்டீர்கள் போல!

இளவரசி சரி ! சரி ! என் தந்தையிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டேன்.

புவன் அதற்குள்ளாகவா? அவர் நம் திருமணத்துக்கு சம்மதித்துவிட்டாரா?

இளவரசி அய்ய! ஆசையைப்பாரேன்! நான் சொன்னது நீங்கள் நாட்டை வளப்படுத்த சொல்லப்போகும் யோசனைகளுக்கு !

புவன் ஓ..அதுவா? சரி ..சரி!

இளவரசி நாளைக்காலை ஷார்ப்பாக 9 மணிக்கு அரண்மனை கொலுமண்டபத்தில் உங்கள் யோசனைகள் அடங்கிய ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டுடன் போங்கள் வெற்றி நிச்சயம்.!

புவன் கண்டிப்பாக! தங்கள் உதவிக்கு இந்த நாடே நன்றி சொல்லும்!

இளவரசி தங்கள் உதவிக்குத்தான் நாடு நன்றிசொல்லும்.

புவன் சரி..சரி..வேலையைப்பார்க்கிறேன். பிறகு பேசலாம்!

இளவரசி ஓக்கே ! வாழ்த்துக்கள்!
              

(கடைசி பாகத்தை நோக்கிய பாய்ச்சலில்....)




Thursday, September 24, 2009

டெக்னாலஜி குலோத்துங்கன் - 4

டெக்னாலஜி குலோத்துங்கன் - நாடகம் தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கிறது..!

இளவரசி
ஏன் நிகழக்கூடாதா? யோசித்துப்பாருங்கள் ..ஏன் நீங்கள் வருமானவ்ரி கட்டாமல் இருக்க வேண்டும்.அதற்கு ஏன் என் தந்தையார் இந்த தண்டனை கொடுக்கவேண்டும்? என் லேப்டாப் ஏன் ரிப்பேராகவேண்டும்.? எல்லாம் நம் சந்திப்பு நிமித்தமாகத்தானே? என்னைப் பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடுங்கள்! :(

புவன் அப்படியில்லை!

இளவரசி அப்படியென்றால் பிடித்திருக்கிறது..சரிதானே!

புவன் பிடித்திருக்கிறது...ஆனால் நீங்கள் மன்னரின் மகள் ..நானோ ஒரு குடிமகன்! மன்னருக்குத்தெரிந்தால் என்னை கொன்றுவிடுவார்.

இளவரசி உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள் ! இனிமேல் நாம் நம் காதலை செல்பேசியில் வளர்ப்போம்.

புவன் எனக்கென்னமோ நெருடலாகத்தான் இருக்கிறது

இளவரசி எனக்கெந்த நெருடலும் இல்லை! நீங்கள் எனக்கெனவே பிறந்தவர் என்று உறுதி செய்துவிட்டேன்.

புவன் நீங்கள் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்துப்பார்த்துவிடுங்கள். ஒரு சாமனியனுக்கு இளவரசிமேல் காதல் வருவது இயல்பு..ஆனால் இளவரசிக்கு சாமானியன் மேல் காதல் வரும்போது பல்வேறு சோதனைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

இளவரசி நீங்கள் ஒன்றும் கவலைப்படவேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். முதலில் உங்கள் மொபைல் நம்பரைக்கொடுங்கள்

புவன் இதோ என் ஸ்மார்ட் கார்ட் க்ளோனையே வைத்துக்கொள்ளுங்கள்!


காட்சி—6

அந்தப்புரம்
(மன்னர், மகாராணி, இளவரசி)

மன்னர் : மகாராணி லினக்ஸி...பக்கத்து நாட்டில் சென்று சிகையலங்காரம்செய்துகொண்டு வந்தாயே! திருப்தியாகச்செய்தார்களா?

மகாராணி ஆமாம். மன்னா..இப்போது நான் செய்துகொண்டுள்ள சிகையலங்காரத்தின் சிறப்பு என்னவென்றால், தலைக்கு மேல் இருபுறமும்
ஆண்டெனா வைத்துள்ளார்கள். வேண்டுமென்றால் நீட்டிவிட்டுக் கொண்டால்...காதுக்குள்..அனைத்து சேனல்களும் கேட்கும். ஏதாவது
வேலைசெய்துகொண்டே இருப்பதால், சில நேரங்களில் மெகா சீரியல் பார்க்கமுடிவதில்லை. இது இருந்தால் அந்த நேரத்துக்கு காதில்
கேட்டுக்கொள்ளவாவது செய்யலாமே!

மன்னர் ஆஹா..என்ன ஒரு யோசனை! இதெல்லாம் ஒரு பிழைப்பு என்று அந்த நாட்டினர் பிழைக்கின்றன்ரா?

மகாராணி இங்குமட்டும் என்ன வாழ்கிறதாம்...சோற்றுக்கு வழியில்லாமல். ..செல்போன், எல்சிடி என்று செய்து தள்ளிக்கொண்டிருக்கிறீர்கள் !

மன்னர் நான் என்னடீ செய்வேன்! என்னை எல்லோரும் டெக்னாலஜி பென்டியம் செவன் பே சேனல் குலோத்துங்கன் என்று கூப்பிடுகிறார்களே என்று மயங்கி...எல்லா இடங்களிலும் தொழில்நுட்பத்தை வளர்த்தேன். அது வந்து இப்படி நிற்கிறது. இன்று காலையில் அரிசிச்சோறு இல்லாமல் நானே திண்டாடினேன் என்றால் பார்த்துக்கொள்ளேன்.

மகாராணி ஆமாம்..ஆமாம் எல்லாத்தவறையும் செய்துவிட்டு பின்னர் யோசிப்பதுதான் உங்கள் வழக்கம்!

மன்னர் நீ சொல்வது மிகச்சரி! உன்னைக்கூட ஏண்டா மணந்தோம் என்று இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

மகாராணி ம்..க்கூம்..இந்த கிண்டலுக்கொன்றும் குறைச்சலில்லை.! நம் மகளுக்கு திருமணவயதாகிவிட்டதே! அதைப்பற்றி ஏதாவது யோசித்தீர்களா?

மன்னர் யோசிக்காமல் இருப்பேனா? , அமெரிக்காவின் மிகப்பெரிய கணிப்பொறியாளரான பில்கேட்ஸின் தலைமுறையில் ஒரு பையனைப்பார்க்கச்சொல்லியிருக்கிறேன். மேலும் உலகமகா தொழில்நுட்பம் வளர்க்கும் மன்னர்களின் மகன்களுக்கும் சொல்லியிருக்கிறேன். எவனாவது ஒருவன் சிக்கிவிடுவான். ஒரே அமுக்கு ! முடித்துவிடுகிறேன்.

மகாராணி நம் மகளுக்கு ஒன்றும் குறைச்சலில்லை ! ஆனால் நம் நாட்டைப்பற்றிதான் குறைசொல்லிவிட்டு மாப்பிள்ளைகள் ஓடிவிடுவார்கள்.அந்த அளவுக்கு அல்லோகலப் படுத்திவைத்திருக்கிறீர்கள்!

மன்னர் சரி கோவித்துக்கொள்ளாதே லினக்ஸி! இப்போது என் தலையில் பல பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதற்கு யார் தீர்வு சொல்வார்களென்றே தெரியவில்லை!

மகாராணி அப்படி என்ன பிரச்னை? நீங்கள் அனுப்பிய சாட்டிலைட்டுகள் ஏதும் வேலை செய்யவில்லையா? ரோபோட்டுகள் சம்பளம் கேட்கின்றனவா? இணையத்தில் உங்கள் வெப்சைட்டை பார்க்க முடியவில்லையா? என்ன பிரச்னை ? சொல்லுங்கள்!

மன்னர் அய்யோ ! கொடுமைப்படுத்தாதே! நான் வளர்த்த டெக்னாலஜிதான் இப்போது பிரச்னை! அதனைப்பாலூட்டி சீராட்டி வளர்த்துவிட்டு , விவசாயம், கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்தாமல் இயற்கையையே சீரழித்துவிட்டேன்! இப்போதுதான் உணவு எனும் அத்தியாவசியத்தேவைக்காக நம்மையே அடகு வைக்கவேண்டியிருக்குமோ என்று அச்சப்பட ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு என்ன தீர்வு என்று சொல்ல வேண்டிய விவசாய நிபுணர்களையும், விஞ்ஞானிகளையும் இஷ்டம்போல கொன்றும், நாடுகடத்தியும் சுத்தாமாக அப்படிப்பட்ட மனிதர்களே இல்லாமல் செய்துவிட்டேன். இப்போது இடிக்கிறது. இதை வெளியிலும் சொல்லமுடியவில்லை!

மகாராணி சரி..சரி..இப்போது வருந்தி என்ன பிரயோஜனம்! எப்போதுபார்த்தாலும் ஈமெயில், சாட்டிலைட், தகவல் தொழில்நுட்பம், மொபைல் டெக்னாலஜி என்று பீற்றிக்கொண்டிருந்தபோதே யோசித்திருக்கவேண்டும். அண்டை நாட்டு மன்னன் விவசாயவேந்தனைப்பாருங்கள்! அங்கு எல்லா உணவுப்பொருட்களும் விலை குறைவு! மின்னணு சாதனங்கள் தான் விலை அதிகம்..! யோசித்துப்பாருங்கள்! ஒரு சாதாரண சிம் கார்டைக்கூட சாம்பாரில் கொதிக்கவைத்து சாப்பிட முடியாது.

மன்னர் சரி..சரி..நீயும் வேதனைப்படுத்தாதே! இப்போது எத்தனை கோடி கொடுத்தாவது உணவு உற்பத்தியை தொடங்க எண்ணுகிறேன் . யோசனை சொல்லத்தான் யாருமில்லை!

(மன்னிக்கணும் மக்கா..! அதுபாட்டுக்கும் வளந்துக்கிட்டே போயிருச்சு! )
அடுத்த பாகத்திலயாவது முடிக்கப்பாக்குறேன்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...