Thursday, December 17, 2009

சுகம் எங்கே?


கதைசொல்லிகளால்தான் கதைகள் எப்பவும் மெருகடையும் என்பதில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு. சொல்லும் விதத்தில் உள்ள வேறுபாட்டால், ஒரு நல்ல கதையை சுவாரஸ்யமாகவும் ஆக்கலாம். அப்படியே சொதப்பவும் செய்யலாம்.

இந்தக்காலகட்டத்தில் பல யுக்திகள் கையாளப்படுகின்றன. ஆனால், 1940 களில் மராட்டிய எழுத்தாளர் வி.ஸ. காண்டேகர் (1898 - 1976) இந்த அற்புதத்தை சுலபமாகச்செய்துவிட்டுப்போயிருக்கிறார்.

ஞானாலயா நூலகத்தின் (இந்த நூலகத்தைப்பற்றி இன்னொரு சமயம் விரிவாக எழுதுகிறேன்) நிறுவனர் திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், 'சினிமால வேலை பாக்குறேங்கிறீங்க! இதைப் படிச்சுப்பாருங்க! ' என்று கொடுத்ததுதான் வி.ஸ.காண்டேகரின் 'சுகம் எங்கே?' என்ற நாவல்.
இதை தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்த்துள்ளார்.
இவரைப்பற்றி மேலதிக தகவல்களை முவளர் என்ற பதிவர் குறிஞ்சி எனும் வலைப்பூவில் அழகாக எழுதியுள்ளார். சுட்டி இதோ!


சுகம் எங்கே நாவலின் பாத்திரங்கள் ஆனந்தன், முத்தண்ணா, உஷா, மாணிக்கம்(பெண்), சஞ்சலா,தனஞ்சயன் ஆகியோரைச்சுற்றி பின்னப்பட்டது.

ஆனந்தன் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் , வக்கீலுக்குப்படித்திருக்கிறான். அவன் அண்ணன் முத்தண்ணா..அவர் சமூகப் பிரசங்களில் காலம் கழிப்பவர். குடும்பத்தைப்பற்றி சிறிதும் நினைப்பதில்லை. மனைவியை இழந்தவர். மீரா, பாலு என்ற இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை. ஆனந்தனும் முத்தண்ணாவும் தங்களது தாயுடன் சேர்ந்து வாழ்ந்துவருகிறார்கள். முழுக்குடும்பமும் ஆனந்தனின் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறது.

ஆனந்தன் ஒரு வேலையாக பயணிகள் படகில் செல்லும்போது, கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயலும் உஷாவைக்காப்பாற்றுகிறான். அவளுடன் பேசி தன் வீட்டுக்குக்கூட்டி வருகிறான். உஷா சிறுவயதிலேயே பெற்றோரையும் , திருமணமானவுடனே கணவனையும் இழந்து, மைத்துனரால் பாலியல் பாதிப்புக்குள்ளாகி வாழ்க்கை வெறுத்துப்போய் தற்கொலை முடிவெடுத்தவள். அன்றிலிருந்து ஆனந்தனை தெய்வமாகவே வழிபட ஆரம்பித்துவிடுகிறாள். உள்ளத்துக்குள் உண்மையான காதலும் துளிர்க்கிறது.

ஆனால், ஆனந்தனுக்கு, முத்தண்ணா தான் பிரசங்கம் செய்யுமிடங்களில் பார்த்த புத்திசாலிப்பெண் மாணிக்கத்தை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அது ஆனந்தனின் சம்மதத்துடன் நடந்தும் விடுகிறது. ஆனந்தன் ரசனை மிக்கவன். மாணிக்கமோ நடைமுறை வாழ்க்கையில் பிடிப்பானவள். பிரசங்கி, அதிகம் படித்த மமதை கொண்டவள். அவள் ஆனந்தனை இம்மியளவும் மதிக்காமல், அவனது ரசனையான அணுகுமுறைகளை, தன் உணர்வால் பார்க்காமல், அறிவால் பார்த்து முட்டாள்தனமென்று சொல்லி அவமானப்படுத்திக்கொண்டே இருக்கிறாள். உஷாவின் இருப்பு அவளுக்கு இன்னும் எரிச்சலை ஏற்படுத்தி அவளை அவமானப்படுத்துகிறாள். ஆதலால், உஷா ஒரு மகளிர் விடுதியில் போய் தங்கிக்கொள்கிறாள்.

இந்நிலையில், ஆண் வர்க்கமே தனக்கு அடிமை என்று தன் அழகில் பெருமை கொண்ட சஞ்சலா என்ற நடிகையை இன்ஷூரன்ஸ் பாலிஸி விஷயமாக ஆனந்தன் சந்திக்கிறான். அவனது அலட்சியம் அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தி, அவனை வசியம் செய்ய தன்னாலான எல்லா முயற்சிகளும் எடுத்து மயக்கிவிடுகிறாள்.

மாணிக்கத்துக்கு ஒரு செல்வந்தரான, படித்த நண்பன் தனஞ்செயன். அவனும் சேர்ந்துகொண்டு ஆனந்தனின் குடும்பத்தையே அவமதிக்கிறார்கள். இதை முத்தண்ணா மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. அதே தனஞ்செயன் சஞ்சலாவின் வீட்டுக்குள்ளும் தன் செல்வத்தை வைத்து நுழைந்து, ஆனந்தனை சஞ்சலாவை வைத்து கேவலப்படுத்துகிறான்.

இந்நிலையில், சஞ்சலாவே கதி என்று ஆனந்தன் மதுவின் பிடியில் மயங்கிக்கிடக்க, இதை அறிந்த உஷா, அவனை சஞ்சலாவின் வீட்டிலிருந்து வெளியில் கொண்டுவந்து புதிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறாள். ஆனந்தன் ஒரு குடிசைப்பகுதி மக்களுக்கு உதவும் வக்கீலாக உருவெடுக்கிறான். இருவரும் அதே குடிசைப்பகுதியில் புதிய வாழ்க்கை வாழத்துவங்குகிறார்கள். என்றாவது மாணிக்கத்துக்கு ஆனந்தனை தாரை வார்க்க வேண்டியிருக்கும் என்று உஷா பயந்துகொண்டே இருக்கிறாள். இந்நிலையில் ஒருநாள் மாணிக்கத்திடமிருந்து ஒரு கடிதம் வருகிறது.

அதில் தனஞ்செயன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அதனால் தான் கர்ப்பமடைந்துவிட்டதாகவும், இப்போதுதான் ஆனந்தன், உஷாவின் நற்பண்புகள் தெரியவந்ததாகவும், சுகம் என்பது அறிவில் இல்லை என்பதைப்புரிந்துகொண்டதாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்துவாழ்வதே நியாயம் என்றும், தனக்குப்பிறக்கும் குழந்தைக்கு ஆனந்தன் அல்லது உஷா என்றே பெயர் வைக்கப்போவதாகவும் எழுதியிருக்கிறது என்று முடிகிறது நாவல்.

இந்தக்கதையில் பல்வேறு யுக்திகளை மிகவும் அற்புதமாகக்கையாண்டிருக்கிறார் காண்டேகர். அவை..... .


(தொடரும்)

Saturday, November 28, 2009

என்ன செய்யலாம்?

லவ்டேல் மேடியின் திருமணம், ஈரோட்டில்..

கண்டிப்பாகப்போய்விடவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். திருமண கொண்டாட்டங்களை மீறி அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. ஆனால் இப்போது செய்ய ஆரம்பித்துள்ள வேலையின் திடீர் அழைப்பால் , போக இயலவில்லை. நிறைய பதிவர்கள் வருவதாக வால்பையன் கூறியிருந்தார். நண்பர்களைச் சந்திப்பதில் வெறி பிடித்தலையும் எனக்கு இது மிகப்பெரிய வாய்ப்பை நழுவவிட்டதில் பெருத்த ஏமாற்றம்தான்.

பதிவர்களின் நட்பு மிகவும் அன்பும், ஆச்சர்யமும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், உதவும் எண்ணமும் நிறைந்ததாக உணர்கிறேன். பள்ளி, கல்லூரிக்கால நண்பர்கள்கூட எங்கெங்கிருக்கிறார்கள் என கண்டுபிடித்து நட்பைத்தொடர்வது மிகவும் இயலாத சூழலாக உள்ளது. ஆனால் பதிவர் நட்பு, உலகம் முழுக்க வியாபித்து, எல்லாத்துறைகளிலும் கோலோச்சி, நம்மை வேறொரு தளத்துக்குக்
கொண்டுசெல்வதை நான் பலமுறை அனுபவித்துள்ளேன்.

இத்தகைய சந்திப்புகளை, நம் நட்பை பலப்படுத்தும் நிகழ்வாக மட்டுமின்றி, நமக்குள் இருக்கும் சமூக அக்கறைக்கு செயல்வடிவம் கொடுக்க ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்தவேண்டும் என்று விரும்புகிறேன்.

நாம் பல்வேறு செயல்பாடுகளால் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த முனையலாம். எனக்குத்தோன்றிய சிலவற்றை (ஈரோட்டில் பகிர நினைத்தவை) இங்கு பகிர்கிறேன்.

1. பதிவர்கள் அனைவரும் லஞ்சம் கொடுப்பதில்லை (வாங்குவதில்லை) என உறுதி எடுப்பது...அதை செயல்படுத்துவது!

2. பதிவர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகையில் விவசாயத்துக்கு தன் பங்களிப்பை அளிப்பது. (அதற்கான திட்டம் தயாராக உள்ளது)

3. அந்தந்தப்பகுதி பள்ளி , கல்லூரி இளைஞர்களின் படைப்புத்திறனை அதிகப்படுத்த கூட்டுப்பயிற்சிகள் அளிப்பது.

4 பதிவர் சமூகம் மூலம் ஒரு சிறு காட்டையே உருவாக்குவது ( இது சாத்தியம் )

5. நுகர்வோர் விழிப்புணர்வை நாம் இருக்கும் பகுதிகளில் நாள்தோறும் ஏற்படுத்துவது. (குறைந்தபட்சம் MRP க்கு மேல் விற்கும் பொருட்களை புறக்கணிப்பது அல்லது போராடி நியாய விலைக்கு வாங்குவது)

6. நம் பகுதி இளைஞர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அல்லது அதிகப்படுத்துவது.

7. கல்விக்கூடங்களில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகளை - ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து மின்னஞ்சல் மூலம் - அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வது.

8. இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைப்பயிற்சிகள் அளித்து அவர்களின் சுயஒழுக்கத்தை மேம்படுத்துவது.

9. எல்லாத்துறைகளிலும் நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்க்க , நாமே ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி ஆலோசனை அளிப்பது. - ( இணையம்வழிதான் )

10. இது சாத்தியமா என்று தெரியவில்லை...கொஞ்சம் ஓவராகவே இருந்தாலும்.....பதிவர்கள் பொது இடங்களில் புகைப்பதை நிறுத்துவது.


இவற்றில் சிலவற்றை சாத்தியப்படுத்தினால்கூட...மீதமுள்ளவை தானே சாத்தியமாகும் காலம் சீக்கிரம் வந்துவிடும். பின்னர்தான் என் 11 வது விஷயமான மிகப்பெரிய திட்டத்தைக் கூற முடியும்.


இது முதலில் படிக்கும்போது சிறுபிள்ளைத்தனமாகவோ, லூசுத்தனமாகவோ இருந்தால்....மன்னிக்கவும்!

எனக்கு நம்பிக்கையிருக்கிறது.







Friday, November 27, 2009

வாழ்த்துக்கள் மேடி


நமது அன்புப்பதிவர், நண்பர் லவ்டேல் மேடிக்கு இன்று திருமணம்...!




அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற்று



அன்பே அரசாய்
அறிவே அமைச்சாய்
அறமே அரணாய்
இல்வாழ்க்கை அமைய
எல்லோரும் வாழ்த்துவோம்....!




Saturday, November 7, 2009

மகிழ்துக்கம்...!


மறுபடியும் யூத்புல் விகடனில்...கவிதை!

இன்னிக்கு யூத்ஃபுல் விகடனில் என் கவிதை வந்திருக்கு! ஆச்சர்யமா இருக்கு!




கவிதை இதுதான்..!


காணாமல் போன
தோழியைத் தேடும் முயற்சியில்
காவலர்கள் வந்து
பார்க்கச்சொன்ன,
விபத்தில் இறந்த பெண்ணை
அடையாளம் காட்டும்
அந்த விநாடியில்
அவளில்லை என்று
சொல்லும்வரை
பரிதவித்த மனம்
அகமகிழ்ந்தாலும்
அடுத்து
யாரோ ஒருவனுக்கு
அந்தப் பெண்ணை
’அவள்தான்!’
என்று கூறவேண்டியதன்
அவலம் கொஞ்சம்
அதிகமாகவே கனத்தது.

நன்றி: யூத்ஃபுல் விகடன்.காம்

Saturday, October 31, 2009

செய்யாச் சிந்தனை!




எதை எழுத நினைத்தாலும்
ஒன்றும் எழுத முடியாமல்
நண்பர்கள் சிந்தனையை
வேடிக்கை பார்த்துவிட்டு
கணிணியை மூடும்போதுதான்
மூளைக்குள் முளைத்திருக்கும்
வேர்களுக்கு
நான் ஊற்ற நினைத்த நல்நீர்
நாக்கில் ஊறியும்
வெளிப்படாமல்
விரல்களின் வழியும்
இலைவிடாமல்
சோம்பேறித்தன வெந்நீராய்
வேர்களைப் பொசுக்கிவிட்ட
செய்தியொன்று
கைதவறிய பூங்கொத்தாய்
என்னை ஏளனப்படுத்திச்
சிரிக்கிறது!
பொசுக்கிய வேர்களின்
ஏதாவதொரு வித்து
நண்பரின் மூளைக்குள்
முளைவிடும்போது
வெந்நீரைக்குளிரவைக்க
வெட்டிச் சமாதான
பனிப்பாறைகளை
கொட்டக்கொட்ட
விஞ்ஞானம் மீறி
வெந்நீர் கொதித்து
வெடித்தெழும் எரிமலையாய்
விடியல்கள் கனக்கிறது!

ஒன்றுமட்டும் தெரிகிறது

சிந்திப்பது சுலபம்!
செயல்படுவதே கடினம்!


Wednesday, October 21, 2009

மகளென்னும் தேவதை!

காணாமல் போன
செல்போனை
வீடெங்கும் தேடினால்
தண்ணீர் அண்டாவில்
கிடக்கிறது!

பால் காய்ச்ச வைத்திருந்த
பாத்திரத்தைக்காணவில்லை
என்று அம்மா அலற, அது
குப்பைக்கூடைக்குள்ளிலிருந்து
எட்டிப்பார்க்கிறது !

தொலைக்காட்சியின்
ரிமோட்டின்
உடலெங்கும் கட்டுக்கள்!
அடுத்த ரிமோட்
வீட்டுக்குள் அடியெடுத்து
வைக்கிறது!

வெளியில் கிளம்பும்
எல்லோருக்கும் விளையாட்டு
காத்திருக்கிறது!
உங்கள்செருப்பைத்
தேடுங்கள் பார்ப்போம்.!

படுக்கையறையில்
இடம்மாறிய பலபொருட்களை
கண்டுபிடிப்பதே பாதிநாள் பணியாய்
வேலைக்காரி கூறுகிறாள் !

அசந்த நேரங்களில்
தண்ணீர்ப் பாத்திரங்கள்
தலையில் ஊற்றியதுபோக
மீதத்துடன் நிற்கின்றன!

கதவுகளின் சாவித்துவாரங்களெங்கும்
குச்சிகள் அடைக்கப்பட்டு
அவசரத்துக்கு பூட்டமுடியலை
என்று அத்தனைபேரும்
அலறுகிறோம்.!

அம்மா என் புத்தகத்தின்
ஆறாம் பக்கத்தை காணலை!
அலறுகிறான் அஸ்வின்!


அடுக்கிவைத்திருந்த
துணிகளெல்லாம்
அறையெங்கும் சிதறிக்கிடக்க
மனைவியின் புலம்பலால்
நிறைகிறது இரவு உணவு!

நடமாடும் பகுதியெல்லாம்
சோற்றுப்பருக்கை,
கஞ்சி என
காலெங்கும் பிசுபிசுப்பு!

என் மகளென்னும் தேவதை
நடமாட ஆரம்பித்துவிட்டாள்!

அவள் எச்சில் படாத இடமிருந்தால்
எங்கள் வீட்டில் காட்டுங்கள்!
அவளிடம் தரச்சொல்கிறேன்
அன்பான ஒரு எச்சில் முத்தம் !









Thursday, October 1, 2009

ஒரே சமயத்தில் 22 !



இந்தமாதிரி மேட்டருக்குத்தான் இவன் லாயக்குன்னு ..டேக்கின அன்னத்துக்கு....! நற...நற...நன்றியுடன்! :)


1.Grab the book nearest to you, turn on page 18 and find line 4?

எடுத்துவிட்டேன்...ஆம்...18ம் பக்கம்..4வது வரி இருக்கிறது...! (எப்புடி?)


புத்தகம் : ஒரு தமிழ்ப்பாமரனின் பயணம் - மு.தனராசு

"நான் தலையை மட்டும் ஆட்டினேன். நான் சந்தேகப்..."

2. Stretch your left arm out as far as you can & touch air?

இல்லை...அதற்குமுன்னரே அது என்னைத்தொட்டுவிட்டது


3.What is the last thing you watched on TV?

சுஃபி ஞானிகளைப்பற்றிய டிஸ்கவரி தொகுப்பு

4.Without looking, guess what time it is?

இரவு 8 மணி....15 நிமிடங்கள் 20 வினாடிகள்


5. Now look at the clock, what is the actual time?

இரவு 8 மணி ....17 நிமிடங்கள் 10 வினாடிகள்

6. With the exception of the computer, what can you hear?

தொலைக்காட்சி


7. When did you last step outside? What were you doing?

நட்சத்திரங்கள் மொட்டைமாடியில்...! நண்பனிடம் உலாபேசிக்கொண்டே!

8.Before you started this Q&As, what did you look at?

அப்துல்லாவின் பதிவு


9. What are you wearing?

இதுவேறயா....டீ ஷர்ட்..


10. When did you last laugh?

ஸ்வாமி ஓம்காரின் பதிவை அப்துல்லா பதிவு வழியே சென்று படித்துவிட்டு..!

11. What is on the walls of the room you are in?

இந்திய வரைபடம்....


12. Seen anything weird lately?

இல்லை!


13. What do you think of this quiz?

என்னத்த சொல்ல...! வேலையில்லாம இருக்கேன்னு யாரோ அன்னத்திடம் சொல்லியிருக்காங்க! :)


14. What is the last film you saw?

SURROGATES

15. If you became a multimillionaire overnight, what would you buy?

அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை (எவ்வளவு செலவானாலும் ) வாங்குவேன்! :)


16. Tell me something about you that I dunno!

எல்லாம் உங்களுக்குத்தெரியும்...சும்மா விளையாடாதீங்க!


17. If you could change one thing about the world, regardless of guilt or politics, what would you do?

மனிதர்களின் தட்டிக்கேட்கும் மனோபாவத்தை அதிகரிப்பேன்

18. Do you like to Dance?

கண்டிப்பா!


19. Imagine your first child is a girl, what do you call her? .

சைந்தவி


20.Imagine your first child is a boy, what do you call him?problem..

அஸ்வின்


21. Would you ever consider living abroad?

எல்லாம் 4 வருஷம் வாழ்ந்து பாத்தாச்சு..!


22. What do you want GOD to say to you when you reach the pearly gates?

கொஞ்சம் இங்க இருந்து பாத்துக்க..! நான் வெளில போய்ட்டு வரேன்..!


இனிமே யாரைக்கோத்துவிடறது..

பாவம்..ஏதாவது பொழப்பிருந்தா பாருங்கப்பா! புள்ளைங்கள படிக்கவைங்கப்பா! :))

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...