Friday, November 5, 2010

பிரபு சால’மைனா’!


          கமர்ஷியல் வெற்றியைப்பற்றி நினைக்காமல் கிங், கொக்கி, லீ, லாடம் என்று தரமான படங்களையே எடுத்துவந்த பிரபு சாலமன் இயக்கி, ஊரே எதிர்பார்த்த மைனா - கதாநாயகியின் பெயர். 

பெரியகுளம் கிளைச்சிறையில் இருக்கும் கைதி சுருளி.  ஏன் ஜெயிலுக்கு வந்தான் என்று நினைத்துப்பார்க்கிறான்.சிறுவயதில் சுத்தமாகப் படிப்புவராததால், மலைக்கிராமத்துக்கு வந்துசெல்லும் ஜீப்பில் உதவியாளனாகப் போய் வந்துகொண்டிருக்கிறான் சுருளி.அப்போது ஒருநாள் 
கடன்சுமையால் வீடிழந்து நிற்கும் மைனாவுக்கும் அவள் அம்மாவுக்கும் தனக்குத் தெரிந்த பாட்டி வீட்டில் தங்க ஏற்பாடு செய்து கொடுக்கிறான்.  அவள் அம்மா, சுருளியை ‘மருமகனே’ என்று கூப்பிடும் அளவுக்கு குடும்பத்து தினசரிச் செலவுக்கு மூட்டை தூக்கி ,உதவுகிறான். மைனாவின் மேல் இவனது அன்பு வளர்ந்துகொண்டே வந்து அவள் பூப்பெய்தும்போது காதலாக முழுமையடைகிறது. அவள்மேல் உயிரையே வைக்கிறான். அவள் தனக்குத்தான் என்று நம்புகிறான். 

ஒருநாள் மின்சாரம் போனதால் அவளால் படிக்கமுடியாமல் போகிறது. அவளுக்கு வெளிச்சம் தர, சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஓட்டி, டைனமோ லைட்டை எரியவைக்கிறான். அதுவும் எரியாமல் போக, மின்மினிப்பூச்சிகளை ஒரு சீசாவில் போட்டுக்கொண்டுவருகிறான். இதைப்பார்த்து அவனது காதலைப்புரிந்துகொண்ட மைனா, உணர்ச்சிமிகுதியில் அவனை முத்தமிடுகிறாள். அந்த நேரத்தில் மின்சாரம் வர, மைனாவின் அம்மா அதைப்பார்த்துவிடுகிறாள். படிக்காத, கூலிக்காரனுக்கு மகளைக்கட்டிக்கொடுக்க விரும்பாத அவள், அவனிடமே மைனாவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதைப்பற்றிப்பேச, அப்போது நடக்கும் தகராறில் சுருளி , மைனாவின் அம்மாவை கல்லைத்தூக்கிப்போட்டு கொல்ல முயற்சிக்கிறான். கோபத்தில் மைனாவின் அம்மா சுருளியைப்பற்றி போலீசில் புகார் தந்துவிடுகிறாள். 15 நாள் ரிமாண்டில் வைக்கப்படுகிறான். 


14ம் நாள் சிறைவாசத்தில் தீபாவளிக்கு முதல்நாள், ரோட்டரி நடத்தும் விழா நடக்கிறது. மைனாவுக்கு அடுத்தநாள் திருமணம் என்று தெரிந்து சிறையில் இருந்து தப்பிக்கிறான். அந்த இடத்திலிருந்து அது கிளைச்சிறை காவலர்களின் பிரச்னையாகிறது. ஒரு கைதி சிறையிலிருந்து தப்பினால், எல்லா போலீஸாருக்கும் வேலை பிரச்னையாகும். மேலும் அடுத்த நாள் தீபாவளி என்பதால் அவரவர் குடும்ப எதிர்பார்ப்புகள் வேறு நெருக்குகிறது. இந்நிலையில் மேலிடத்துக்குத்தெரியாமல், சூப்பிரண்டெண்ட் அனுமதியுடன்,  இன்ஸ்பெக்டர் பாஸ்கரும், வார்டனும் (தம்பி ராமையா) கைதி சுருளியைத்தேடி புறப்படுகிறார்கள். இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு அது தலைதீபாவளி. ! அவரது மனைவி , தலைதீபாவளி கொண்டாட மதுரை செல்ல 
ரெடியாகி கூப்பிட்டுக்கொண்டே இருக்க, இவர் சுருளியின் கிராமத்துக்கு வந்துகொண்டிருக்கிறார்.
சிறையிலிருந்து தப்பி , மலை கிராமத்துக்கு வரும் சுருளி, மைனா வீட்டுக்கு செல்ல, அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடத்தும் அவள் அம்மா, வீட்டை உள்ளே பூட்டிக்கொண்டு தீ வைத்துவிடுவேன் என்று மிரட்டுவதால், வாசலிலேயே காத்திருக்கிறான். உள்ளே மைனாவும் , சுருளியிடம் வர போராடுகிறாள். தீபாவளி அன்று அதிகாலை மாப்பிள்ளை வீட்டார் வர, மைனாவின் அம்மா கதவைத்திறக்கிறாள். மைனா ஓடி சுருளியிடம் வந்துவிடுகிறாள். அப்போது நடக்கும் பிரச்னையில் திருமணம் நின்றுவிடுகிறது. 

அதேநேரத்தில் இன்ஸ்பெக்டரும், வார்டனும் சுருளியைப்பிடித்து கைது செய்து திரும்ப பெரியகுளத்துக்குக் கொண்டுவரும் வழியில் ஏகப்பட்ட பிரச்னைகள், மலையில் நடை பயணம்!  மீண்டும் ஒருமுறை சுருளி தப்பித்துப்பிடிபடுகிறான். அவனை கொன்றுவிட போலீசார் திட்டமிடுகிறார்கள். இந்நிலையில்இவர்கள் வரும் பேருந்து மலைப்பாதையில் விபத்துக்குள்ளாக, இரண்டு போலீசாரின் உயிரையும் சுருளி காப்பாற்றுகிறான். அப்போது அவர்கள் மனம் மாறினாலும், பெரியகுளம் வந்தபின் சுருளியும், மைனாவும் என்ன ஆனார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இரண்டு நாட்களில் நடக்கும் சம்பவங்களை எடுத்துக்கொண்டு யதார்த்த பதார்த்தமாக தந்திருக்கிறார் இயக்குநர். வசனங்களில் பல இடங்களில் நியாயம் தெறிக்கிறது. அவரது பழைய படங்களில் இல்லாத காமெடி நிறைய இருக்கிறது. நடிகர்கள் தேர்விலும் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். சுருளி, மைனாவின் சிறுவயது பையனும்,பெண்ணும் அதே முகச்சாயலில் இருப்பது சிறப்பு! காட்சியமைப்புகளில் நிறைய மெனக்கட்டிருக்கிறார். இந்தப்படத்தில் வேலைபார்த்த நண்பர் ஒருவர் முழுக்கமுழுக்க இயற்கை வெளிச்சத்திலேயே மலைமுழுவதும் எடுத்ததாகச்சொன்னார். அது தெரியாத அளவுக்கு ஒளிப்பதிவு தெளிவாக உள்ளது. இசையமைப்பாளர் இமான், நகர இசைகளிலிருந்து வெளிவந்து கிராமிய இசையையும், சாதாரண ஒலிகளையும் வைத்துக்கொண்டு பின்னணி இசையிலும், பாடலிலும் தெளிவு காட்டியிருக்கிறார். ‘ஜிங்கு ஜிங்கு’ பாடலும், பேருந்தில் படமாக்கப்பட்ட விதமும் அருமை! 

சுருளியாக வரும் விதார்த் நன்றாக நடித்திருக்கிறார்.ஆனால் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. மைனாவுக்காக ஏங்கும்போதும், எந்த மகராஜன் வரப்போறானோ? என்று சொன்ன பெண்ணை குட்டும்போதும் நன்றாக இருக்கிறது. மைனாவுக்காக அவர் சைக்கிள் மிதித்து ஓளிதரும் இடத்தில் ஸ்கோர் செய்கிறார்.
மைனா- அமலா பால்! சிந்துசமவெளி பார்க்கும்போதே கேபிள்ஜியும் நானும் பேசிக்கொண்டோம்.! சூப்பரா நடிக்குதுல்ல இந்தப்பொண்ணு என்று! அதை வீணாக்காமல் விளையாடியிருக்கிறார். அம்மா செத்தாலும் பரவாயில்லை என்று சுருளிமேல் காதலைக்காட்டுமிடத்திலும், அவனை விழுங்குவதுபோல் பார்க்குமிடத்திலும், ஓடும்போது ஏற்படும் இடர்களை முகத்தில் காட்டும்போதும் பின்னியிருக்கிறார்.

முழு ஆச்சர்யம் - தம்பி ராமையா! இந்திரலோகத்தில் நா.அழகப்பன் இயக்குநர்! வார்டனாக கலக்கியிருக்கிறார். படத்தின் கலகலப்புக்கு மொத்த குத்தகைதாரர். பல்வேறு இடங்களில் கதையில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களை தனது வசனத்தால் தெளிவிக்கிறார். ‘கிளம்புங்க’ என்று இன்ஸ்பெக்டர் சொன்னதுக்கு மனைவியிடம் கொடுக்கும் விளக்கத்துக்கு தியேட்டர் அதிர்கிறது. புலி தீபாவளி கொண்டாடிடும் என்று சொல்லும்போது குலுங்கவைக்கிறார்.

இன்ஸ்பெக்டர் பாஸ்கராக வரும் நடிகர் சேது கதஎன்ன தேவையோ அதை சிறப்பாகச்செய்திருக்கிறார். ஒரு விரைப்பான, அதேசமயம் நல்ல போலீசாக மனதில் நிற்கிறார். பஸ் சம்பவத்துக்குப்பிறகு லேசாகப்புரியும் புன்னகை சரியாகச் செய்திருக்கிறார். அவர் மனைவியாக வரும் நடிகையும் அவரை நன்றாக டார்ச்சர் செய்கிறார். ஆனால் , அவரது மனைவியின் குடும்பத்தாரின் அராஜகம் ஏற்கமுடியாததாக இருக்கிறது. க்ளைமாக்ஸை கமல் மாற்றச்சொன்னாராம்.  அவர் சொல்லியதைக் கேட்டிருக்கலாம். க்ளைமாக்ஸில் சுத்தமாகத் திருப்தி இல்லை. திணிக்கப்பட்ட க்ளைமாக்ஸ் படுத்துகிறது.

கைவிலங்கிட்டு போலீசுடன் கொண்டுசெல்லப்படும் எத்தனையோ கைதிகளை பொது இடங்களில் பார்த்திருப்போம். ஆனால், அந்த இருவரும் சேர்ந்து பயணிக்கும்போது நடக்கும் நிகழ்வுகள் சுவாரஸ்யமாக  படமாக்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் காட்சியமைப்புகளாலும் , சம்பவங்களாலும் கொடி நாட்டியிருக்கிறது. இயக்குநர் படமான, பிரபு சால மைனா! 

Saturday, October 30, 2010

இலவசங்கள் வசப்படுமா?



உங்களுக்காக இவ்வளவு விஷயங்களை இலவசமாகச் செய்திருக்கிறோம். எங்களையா வீழ்த்தவேண்டும் என்று திராவிட முன்னேற்றக்கழகம் ஒரு பக்க விளம்பரம் ஒன்றை நாளிதழ்களில் தந்திருக்கிறது. மிகவும் அபத்தமான கையேந்தலாகத்தான் இதைப் பார்க்கமுடிகிறது.

இலவசமாக ஒரு பொருளைத்தருவதற்குமுன் தனி மனிதனின் கணக்கொன்று உண்டு.
உண்மையிலேயே பிரதிபலன் பார்க்காமல் அவனுக்குத்தந்துவிடுவது.! 

அல்லது  
இவனால் கட்டாயம்  காரியம் ஆகும் என்று இலவசமாக அதைத்தருவது!

இதில், கலைஞரின் இலவசங்களுக்குப் பிண்ணனி என்னவென்று எல்லோருக்கும் தெரியும். என்றுமே மனிதர்கள் தன் தவறுகளை மறைக்க தானத்தில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், அது தன் பணத்தில்தான் இருக்கும்.  இவரோ, தன் குடும்பத்தினர் அனைவரது ஆக்கிரமிப்பும் கட்சி, சமூகம், அரசு அலுவலகங்கள் என்று சந்துபொந்தெல்லாம் வியாபித்திருப்பதை மறைக்க, இதோ இலவசம் ! அதோ இலவசம் என்று அறிவித்துக்கொண்டே இருக்கிறார். அவருக்கென்ன? சொந்தப்பணமா? அரசுதான் டாஸ்மாக் மூலம் அள்ளிக்கொடுக்கிறதே! இது உன் வீட்டைக் கொளுத்திக்கொள்கிறேன். அதில் கிடைக்கும் காப்பீட்டுத்தொகையில் உனக்கு உணவு வாங்கித்தருகிறேன் என்பதைப்போல் இருக்கிறது.

இலவச வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டி என்ற செயலே ஒரு சமூகத்தின் விழிப்புணர்வை திசைதிருப்பும் அரசியல் ஆயுதமாகத்தான் பார்க்கமுடிகிறது. நான் வெளியில் என்ன செய்கிறேன் என்பதை என் சொந்த ஒளிபரப்பு ஊடகத்தின்மூலம் காட்டுகிறேன். பார்த்துக்கொள்.! தேவையில்லாமல் கேள்வி கேட்க தெருவில் இறங்காதே! - இதுதான் அடிப்படை. மேலும் சொந்த இன்னோவாவிலும், இண்டிகாவிலும் வந்து  தொலைக்காட்சிப்பெட்டிகளை ஏற்றிச்செல்லும் சோற்றுக்கில்லாத ஏழைகளுக்குத்தான் இது அதிகம் பயன்படுகிறது.

கலைஞர் காப்பீட்டுத்திட்டம் ! இலவசம் என்று அறிவிக்கப்பட்ட இந்தத்திட்டத்தில் என்னென்ன அட்டூழியங்கள் நடக்கின்றன என்பதை கொஞ்சம் உள்ளே சென்று பார்த்தால்தான் தெரியும். ஒரு நோயாளி தனக்கான அறுவை சிகிச்சை செலவை இந்தத்திட்டத்தின்மூலம் ஈடுகட்டிக்கொள்ளலாம். அடிப்படையில் இலவசமாக மருத்துவம் செய்ய அரசு மருத்துவமனை இருக்கும்போது , என்னால் முடியாது! தனியார் மருத்துவமனையில் பார்த்துக்கொள்! அதற்கான செலவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லுவதே முழுமையான கையாலாகாத்தனம்! அதற்கும்மேல், இதைப்பயன்படுத்தும் நோயாளிகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதமும், மருத்துவமனைகளில் பெரும் சதவீதமும் கொள்ளையர்களாக மாறுவது எப்படி என்று வகுப்பெடுக்கும் அளவுக்குத் தேறியிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு மருத்துவமனை போலியாக நோயாளி விபரங்கள் தயாரித்து, அறுவை சிகிச்சை செய்ததாக பல லட்ச ரூபாயை சுருட்டியிருக்கிறது. ஒரு நோயாளி அறுவைசிகிச்சையே செய்துகொள்ளாமல், வரும் தொகையில் மருத்துவமனையிடம் பங்குபிரிக்கும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார். 

மேலும் பல இலவசங்கள் முட்டிக்கொண்டு முன்னே வர முயற்சித்தாலும், மாநிலம் முழுவதும் மின்வெட்டு, அறிவிக்கப்படாத பேருந்துக்கட்டண உயர்வு, தமிழ் மீனவர்களின் கொலைகள், முல்லைப்பெரியார், இலங்கைத்தமிழர் பிரச்னையில் போட்ட வேடங்கள், கிழிக்கப்பட்ட முகமூடிகள் ஆகியவை மேலே வந்து தெளிவாக நிற்கின்றன.! இலங்கையைப்பற்றி வருத்தப்பட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதும்போது,பேரனின் மந்திரி பதவிக்காக நேரில் போனாரா? கடிதம் எழுதினாரா? என்று சிந்தனை சீண்டுகிறது.  நான் என்ன பெரிசா தப்பு செஞ்சுட்டேன்? அவன் செய்யலையா? இவன் செய்யலையா? என்று தன் தவறுகளை நியாயப்படுத்தும் அவரது குணம் கலைஞரிஸம் என்று கூறிக்கொள்ளும் அளவுக்கு புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

இதில் முக்கியமான விஷயம், மக்களை ஓட்டுக்காக பணம் வாங்குபவர்களாக மாற்றிய சாதனை! இவையெல்லாம் மீறி, ஜெயலலிதாவும் சமூக அக்கறையுடன் தனது எதிர்ப்பைக்காட்டுகிறாரா என்றால் அவரை கொடநாடு வளைத்துவைத்துள்ளது. அவரது அண்மைய போராட்ட முயற்சிகள் தேர்தலை நேசித்துப் போட்ட கூட்டங்களாகவே தெரிகிறது. ஆனால், அதில் மக்கள் கூட்டம், திமுக ஆட்சியின் மேல் உள்ள வெறுப்பை பிரதிபலித்திருக்கிறது. இதை ஜெயலலிதா ஆதரவு என்று தப்பர்த்தம் எடுத்துக்கொண்டுதான் அவரும் காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார். அம்மா! உங்களுக்கும் அவருக்கும் பெரிய வித்யாசம் ஒன்றுமில்லை!

மொத்தத்தில்,தமிழனின் எந்தவொரு உரிமைக்கும் போராடாமல் , தமிழ், தமிழன் என்ற பெயரை முகமூடியாகக்கொண்டு, ஒவ்வொரு படியாக ஊழலையும்,அராஜகத்தையும் அவிழ்த்துவிட்ட தலைவராகத்தான் கலைஞர் கருணாநிதியைப் பார்க்கமுடிகிறது. மிகவும் வருந்தக்கூடிய விஷயம் இலவசமாக இவ்வளவு கொடுத்திருக்கிறேன்! எனக்கென்ன செய்யப்போகிறீர்கள் என்று அவர் கேட்கும் கேள்வி! எதை எடுத்தாலும் இலவசம் என்று எங்களை பிச்சைக்காரர்களாக்குகிறீர்களே! எங்களுக்கான வேலை வாய்ப்புகளையும், தொழில் செய்யும் சுதந்திரத்தையும் நியாயமாக அளியுங்கள்! அதுபோதும்! உங்களிடம் இலவசமாக வாங்கி குடும்பம் நடத்தும் அளவுக்கு தமிழன் தரம் தாழ்ந்துவிடவில்லை. மேலும்..அய்யா! நாங்கள் இலவசமாக போனமுறை போட்ட ஓட்டுக்குத்தான் நீங்கள் இவ்வளவும் பிரதிபலனாகச் செய்தீர்கள். அடுத்தமுறை நாங்கள் உங்கள் இலவசங்களுக்கு மயங்கப்போவதில்லை என்றுதான் மக்களும் எண்ணவேண்டும். அதனால், காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் அவல நிலைக்கு எம்மக்கள் மாறிவிட்டால் எல்லோரும் கலைஞராவதைத் தடுக்க யாராலும் முடியாது.

Tuesday, October 5, 2010

’கேபிளால்’ எழுதலாம்!!

என்ன எழுதலாம்?

காமன் வெல்த் டகால்ட்டிகளைபபத்தி எழுதுவோம்னா..எல்லா நியூஸ் சேனலும் தின, வார, மாத, சாயங்கால, அதிகாலை, மதிய, ராத்திரி இதழ்களும்,டப,சக,டுப்,கரபுர எனும் அனைத்து ரேடியோக்களும் எல்லா விளையாட்டையும் வினையாக்கும் வெப்தளங்களும் போட்டுக் கிழித்துவிட்டன.

அப்புறம் என்னத்த எழுத?

சுரேஷ் கல்மாடி....! யோவ்...உனக்கு மேல் மாடில கல்தான்!


அயோத்தி...தீர்ப்பு...

அண்ணன் தம்பிக்கு ஆளுக்குப்பாதின்னு பிரிச்சதை எழுதலாம்னா முன்னாடி 10 நாள்,
பின்னாடி 3 நாளா எல்லாரும் கருத்தா சொல்லிச்சொல்லி இதாஞ்சரி! அதாஞ்சரி! என்று நல்ல நட்புகளையும் சேர்த்து இடித்து 18வயசுப்பொண்ணை , கெடுத்தவன்
கையில பிடிச்சுக்கொடுத்ததை நியாயப்படுத்தும் நடுநிலையாவது,வெங்காயமாவதுன்னு காங்கிரஸைப் பார்த்து கேக்கலாம்னா...

அதையும் எழுதிப்புட்டாங்க!

அலகாபாத்!! ஓட்டுவங்கி அகலா பாத்து!

எந்திரன்...

விமர்சனமோ ,வியாக்கியானமோ, வியந்தோ எழுதினா..வியாபரத்திலேயே குறியா இருக்கும் சூரியக் குடும்பம் சுடச்சுட அல்வா சாப்பிட்ட மாதிரி, எந்திரன் படத்தைப்பற்றி இணையத்தளங்களில் எண்பதாஆஆஆஆயிரம் இடுகைகள் இடப்பட்ட இமாஆஆலய சாதனை என்று அதையும் அஞ்சு நிமிசத்துக்கொருமுறை போட்டுக்காட்டி கல்லாவை கலகலன்னு நிரப்பிருவாங்க! மேலும், எல்லாரும் எழுதோ எழுதுன்னு எழுதி கீபோர்டில் இருக்கும் எந்திரன் காம்பினேஷன் யுனிகோட் இங்கிலீஷ் எழுத்தெல்லாம் சிதறி ஓடுது! அதையும் மீறி....எப்புடி எழுதறது?

எந்திரன்...
வசவோ வாழ்த்தோ ...வரவுதான்! 120 ரூவா டிக்கெட்டு 300 ரூவாதான்!


அப்புறம் எதைத்தான் எழுதுறது?

போனவாரம் படப்பிடிப்பில் இருந்தப்போ, நானும், கேபிள் அண்ணாச்சியும் மானிட்டர் கிட்ட நின்னுக்கிட்டிருக்கோம்.

 கேமராமேன் ஷ்யாம் சொன்னாரு...

பீல்டுல கேபிள்!
பீல்டுல கேபிள்!

கேமராவுக்கே சம்பந்தமில்லாம ஓரமா நின்னு பேசிக்கிட்டிருந்த கேபிள் அண்ணாச்சி, திரும்பத்திரும்ப பாத்துட்டு நகந்தாரு..! 

மறுபடியும் கேமராமேன்... கேபிள் பீல்டுல..!

நம்ம அண்ணாச்சி.... நான் ஓரமாத்தானே இருக்கேன்னு சொல்ல,

அப்பதான் தெரிஞ்சது...ஷ்யாம் சொன்னது தரையில் கிடந்த  உண்மையான கேபிளை..இந்த மனுசன்... உலகத்திலேயே தான்மட்டும்தான் கேபிள்ன்னு நினைச்சிருக்காரு!
என்ன கொடுமைன்னா...அங்க யாருக்குமே அவரோட கேபிள் சங்கர்ங்கிற பேர் தெரியாது.! என்னா ஒரு கடமை உணர்ச்சி!

இப்படி போய்க்கிட்டிருக்கு உலகம்!!

இப்ப சொல்லுங்க என்னத்த எழுதுறது?

Monday, September 20, 2010

சிறு மூளை



உடனே ஒட்டும்
பசை விளம்பரம்!
பார்த்துக்கொண்டிருந்த
மகன் கேட்டான்.
அப்பா! அது
எல்லாத்தையும் 
ஒட்டுமா?
ஆமாம் என்றேன்.
போனை? ஆமாம்!
நோட்டை? ஆமாம்!
கார் பொம்மையை? ஆமாம்!
அப்புறம் ஏன்
அது வச்சிருக்கும்
குப்பியில்
ஒட்டிக்கலை?

24மணி நேர
மருத்துவமனை!
வாசலில் பலகை பார்த்து
கேட்க ஆரம்பித்தான்.
எல்லா நேரமும்
திறந்திருக்குமா?
ஆமாம்!
நடுராத்திரி? ஆமாம்!
தீபாவளிக்கு? ஆமாம்!
ஞாயிற்றுக்கிழமை? ஆமாம்!
அப்புறம் ஏன்
வாசல்ல கதவு
வச்சிருக்காங்க?

இவர்களுக்கு
பதில் சொல்ல
மூளைக்கு
என்ன செய்ய?

Tuesday, August 31, 2010

மூன்றுவரித் திரைப்படங்கள்

ராமாயணத்தை சுருக்கிச் சொல்லச்சொன்னால், இப்படித்தான் சொல்வார்களாம்..!

தம்பி கிழித்தான் கோட்டை!
அண்ணி தாண்டினாள் கோட்டை!
அண்ணன் விட்டான் கோட்டை!


இதுபோல் நமது படங்களைப்பற்றி கூறமுடியுமா என்று யோசித்தேன்!



படித்து கிராமம் சென்றான்!
ஊருக்காக நின்றான்!
பங்காளியைக் கொன்றான்!

----

பொய்யாய் வேலை வைத்தியம்!
பொதுவாய் கட்டிப்புடி வைத்தியம்!
மருத்துவமனைக்கே வைத்தியம்!

-----


பத்துபேரும் பினாமி!
கிருமிதான் எனிமி!
எனிமி கொல்ல சுனாமி!

-----
சேர்த்துவைத்த நட்புக்கு வலி!
நட்பினால் காதல் பலி!
மீண்டும் பிரிந்தால் பொலி!

------
ஆசையாய் இலவசப் படிப்பு !
ஆதிகேசவனால் இடிப்பு !
கள்ளப்பணத்தால் முடிப்பு!



பொழுதுபோகலைன்னா இதுமாதிரி சொல்லி விளையாடிக்கலாம்!
படங்களைக் கண்டுபிடிங்கன்னு சொல்லி படுத்தமாட்டேன். நீங்களே கண்டுபிடிச்சுருவீங்க!!

Thursday, August 19, 2010

எல்லாரும் வாங்க!

நமது பிரபல பதிவர் கேபிள் சங்கர் அண்ணாச்சி ( நான் மட்டுந்தான் யூத்து) எழுதிய சினிமா வியாபாரம் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவின் அழைப்பிதழ் இதோ!
(எப்பவும் போல க்ளிக்கி பெரிசா பாருங்க!)

சென்னைல இருக்குறவுங்க, அன்னிக்கு சென்னைக்கு வர்றவுங்க,இதுக்காகவே டிக்கெட் போட்டு வர்றவுங்க எல்லாரும் வாங்க!
வாழ்த்தி மகிழ்வோம்! 

Tuesday, August 10, 2010

நியாயம்!


அநியாய
நேரக்கணக்கில்
அதிகத்தொகை
பார்க்கிங்!

சில்லறை
பாக்கிக்காக
பிச்சைக்காரனாக்கும்
நடத்துனர்!


அசராமல்
அடாவடி
தொகை கேட்கும்
ஆட்டோ!

நோட்டீஸில்
அன்பாக
மிரட்டி
வாங்கும் பள்ளி!

யாவும் கண்டு
பொருமினாலும்,
யாராவது
கேள்வி கேட்பார்களென
பாராமல் இருந்ததால்
மாறாமலே இருக்கிறது!


இனிமேல் நானும்
இறப்புச் சான்றுக்குக்கூட
வாங்கவேண்டிய
லஞ்சத்தை
கூட்டித்தான் ஆகணும்.!

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...