Monday, February 21, 2011

இளைஞர்கள் இரண்டுபேர்!



       ஒரு சில விஷயங்கள்  நடக்கும்போது கேயாஸ் தியரிபோல், ஒன்றுக்கொன்று சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள மனம் தானாக முயல்கிறது.


         ஊழல் நிறைந்துபோய், எதற்கெடுத்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடி, ஒவ்வொரு சராசரிக் குடிமகனும் நொந்துபோய் வாழ்ந்துகொண்டிருந்த துனிசியாவில், இராணுவ வேலைக்கு முயன்று அதுவும் லஞ்சமில்லாமல் முடியாது என்ற நிலையில் காய்கறிவண்டி வைத்து பிழைப்பு நடத்துகிறான் Mohamed Bouazizi  என்ற அந்த இளைஞன். அன்று அங்கு வந்த பெண் போலீஸ் அதிகாரி, மாமூல் குறைவாகக் கொடுத்தான் என்று அவனது வண்டியை பறிமுதல் செய்து, இன்னும் இரு பெண் போலீஸ்களுடன் சேர்ந்து காறி உமிழ்ந்து அவமானப்படுத்துகிறார்கள்.வெகுண்டுபோன அவன் கிளம்பி கவர்னர் அலுவலகம் சென்று முறையிடுகிறான். அங்கும் அவமானமே மிஞ்ச, தான் கொண்டு சென்ற பெயிண்ட் தின்னரை ஊற்றிக்கொண்டு தன்னையே கொளுத்திக்கொள்கிறான். இது மக்களிடையே வெறியேற்றுகிறது. அரசின் அகம்பாவத்தை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். தன்னை எரித்துக்கொண்ட பதினெட்டு நாட்களில் அந்த இளைஞன் இறந்துபோகிறான். அவன் ஏற்றிவைத்த பொறி பற்றிக்கொள்கிறது. மக்கள் புரட்சி வெடிக்கிறது. ஒரு சர்வாதிகாரி அதிபராக அநியாய ஆட்சி நடத்திய பென் அலியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இவை அனைத்தும் அந்த இளைஞன் தன்னை எரித்துக்கொண்ட் டிசம்பர் 17 ம் தேதி ஆரம்பித்து, ஜனவரி 17ம் தேதியில் நடந்துவிடுகிறது.



அந்த தீக்குச்சி இளைஞன் முகமது பௌ அஸீஸி
     
ஒரு தனி இளைஞன் பற்றவைத்த நெருப்பு, பற்றிக்கொண்டு ஒரு நாட்டின் ஊழல் நிறைந்த ஆட்சியை முடிவுக்குக்கொண்டுவர 31 நாட்கள் எடுத்துக்கொண்டு, ஒரு ஓய்வுபோல், இடையில் 8 நாட்களுக்குப்பிறகு ஜனவரி 25ம்தேதி எகிப்தில் புரட்சியாக வெடிக்க ஆரம்பிக்கிறது. மக்கள் லட்சக்கணக்கில் ஒரே மைதானத்தில் கூடுகிறார்கள். போராட்டங்களின் உயிரிழப்புகளுக்குப்பிறகு புரட்சி இன்னும் வேகம்பிடித்து அதிபர் முபாரக்கை பதவியிறக்கி, தலைமறைவாக ஆக்குகிறது. இந்த இரண்டு புரட்சியிலும், பொதுமக்களின் கொந்தளிப்பும், பங்களிப்பும்தான் இப்படி ஒரு முடிவைத் தந்திருக்கிறது. மேலும் இதில் இணையத்தின் பங்கும் அதிகம் இருக்கிறது. இதோ அடுத்து பஹ்ரைனில் தொடங்கியிருக்கிறது. இது தொடரும் எனத்தெரிகிறது.




     இந்தப்படத்திலுள்ள இளைஞனும் ஒரு அராஜகத்தை நிறுத்துவதற்காகத்தான் உயிர் மாய்த்துக்கொண்டான். கொஞ்சம் கூட அசரவில்லையே நாம்! ஒரு நாள்கூட அவன் நோக்கத்துக்காக எல்லோரும் ஒன்று கூடவில்லையே?  அவன் நோக்கத்தை புதைத்துவிட்டு, ஆண்டுக்கணக்கில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம். அதுக்கும்மேல, தமிழ்நாட்டு மீனவனைக் கொன்னா என்ன குறைஞ்சா போவுது? புரட்சியாவது..பொடலங்காயாவது…போங்க பாஸு! போய் ஓட்டுக்கு 1000 ரூபா சேத்துக்குடுப்பாங்களான்னு கேட்டுச்சொல்லுங்க!! நம்ப வீட்டில் நாலு ஓட்டு இருக்கு! 

Monday, February 7, 2011

யுத்தம் செய்!

காட்சியமைப்புகளில் ஜப்பானியத்திரைப்படங்களையும், ஜெர்மானியப்படங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி, ஒரு உள்ளூர் திரைக்கதையில் மக்களை அமரவைப்பதில் மிஷ்கின் வெற்றி கண்டிருக்கிறார்.




சேரனொரு 
சிறந்த காவலர்!
புலனாய்வில் 
தேர்ந்த ஆர்வலர்!
பொது இடங்களில்
வெட்டப்பட்டகைகள் கிடக்க,
இவ்வழக்கை எடுத்து ஆய்கிறார்!
காணாமல் போன தன்
தங்கையையும் தேடி நோகிறார்!

கைகள் கிடந்த வழக்கில்
கட்டம் கட்டமாய் நகர
பொய்கள் கூறும் போலீஸை
புலனாய்ந்து இவரே பகர

துணிக்கடை அதிபரின்
துச்சாதன லீலை விளங்க
அதனால் பாதித்த 
மருத்துவர் குடும்பமே நொறுங்க,
அவர்களின் தற்கொலையே
அடிநாதமாய்த் துலங்க,
சேரனுக்கு தங்கையின்
இருப்பிடம் தெரிய
குற்றத்தின் கொடுமையான
காரணமும் புரிய
நேர்மையான காவலனும்,
நீதிபெறா கொலையாளியும்
நின்றாடும் சதிராட்டத்தில்
இரத்தம் பெய்கிறது.
தீமை கண்டு கொதித்தெழும்
யுத்தம் செய்கிறது!!

சேரனுக்கு ஒரு அமர்த்தலான ஆக்‌ஷன் படம்.!
அதுவும் அந்த இடைவேளை சண்டைக்காட்சியில் விசில் பறக்கிறது!

   இசையும், ஒளிப்பதிவும் மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. கே, சத்யா இருவருமே மிஷ்கினின் தேர்வில் தவறில்லை என்று நிரூபித்திருக்கிறார்கள்.
நம்மைப்பார்த்து ஜெயப்பிரகாஷ் கூறும் வசனங்கள் உண்மை ஊசியாய்க் குத்துவதை தவிர்க்கமுடியாது. போலீஸாக வரும் கண்ணும்,கண்ணும் இயக்குநர் மாரிமுத்து மிக நன்றாக நடித்திருக்கிறார். கொலைசெய்யபப்ட்டவனை லாட்ஜில் கண்டவுடன் சேரன் ஓட ஆரம்பிப்பது, போலீஸ் ஸ்டேஷனில் ப்ளாஷ்பேக் ஆரம்பித்து, வாசலுக்குச் சென்றுவிட்டு, அப்படியே டீ வாங்கிவரும் காவலரில் முடிவது என சின்னச்சின்ன காட்சிகள் கவனம் கவர்கின்றன.

   காட்சியமைப்புகளில், மிஷ்கின் டச் இருந்தாலும், வித்தியாசமான கோணம் என்ற பெயரில் அதிகமாக காலைமட்டும் காட்டும் காட்சிகள் வருவது அயர்ச்சி ஏற்படுகிறது. அதேபோல் சேரனை ஒரு சில இடங்களில் தலை குனிந்து நிற்க வைத்திருப்பது மிஷ்கினின் அடிப்படைக்காட்சியாக எண்ண வைக்கிறது. முதல் பாதியில் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வைத் தவிர்த்திருக்கலாம். இவையெல்லாம் மீறி, அந்த கிளைமாக்ஸ் காட்சிகளிலும், கொலைகாரர்கள் யார் என்பதிலும் நல்ல வித்யாசம் காட்டி,  காமெடி, டூயட்,காதல், சென்ட்டிமெண்ட் என்று எந்த மாவையும் தொடாமல், புதிய விதத்தில் படம் கொடுத்ததற்காகவே இந்தப்படத்தை இன்னொருமுறை பார்க்கலாம். 

Saturday, January 8, 2011

சத்தியமாகக் கடவுளைப்பார்த்தேன்.!







பயணங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை ! கவனம் கவர்பவை! 
எனக்கு எவ்வளவோ கற்றுக்கொடுத்திருக்கின்றன எனக்கான பயணங்கள் ! ஆகவே ஒவ்வொரு பயணத்திலும் என் விழிப்புணர்வு (தூங்காதபோது) கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்!

அது ஒரு குறுகிய தூரப் பேருந்துப் பயணம். பேருந்தில் உட்கார இடம் கிடைப்பது, அதுவும் நாமே தேர்ந்தெடுக்கும் வகையில் கிடைப்பது ஒரு மகிழ்வான அனுபவம். கொஞ்சம் குழப்பமானதும் கூட..! நாம் தேர்ந்தெடுத்த இருக்கையை விட இன்னும் கொஞ்சம் நல்ல இருக்கை பக்கத்தில் இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றும்..! கூட்டமாக இருந்தால் குழப்பமே இல்லை. எந்த இருக்கை கிடைக்கிறதோ அதுதான் சொர்க்கம்! எப்போதுமே எந்த அவசரமாக இருந்தாலும், நின்றுகொண்டு பேருந்துப்பயணம் செய்வதில், எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை!

அப்படி ஒரு குழப்பம் ஏற்படாதவகையில் -சொர்க்கமாக - மூன்று பேர் அமரும் இருக்கையின் உள் ஓர இடம் எனக்குக்கிடைத்தது. மெதுவாக கூட்டம் சேர ஆரம்பித்து, பேருந்தும் நகர ஆரம்பித்தது.
வழக்கம்போல் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கியும் போனேன்.

ஒரு குலுக்கலில் , கண்விழித்தபோது கூட்டத்தில் நெருக்கிக்கொண்டு ஒரு பத்து வயதுச்சிறுவனும், அவன் இடுப்பில் மூன்றுவயதுச்சிறுவனும் இருந்தார்கள். அந்தப்பத்துவயதுச்சிறுவன் நல்ல கறுப்பாக, ஒரு பச்சை நிற பள்ளி பெயரிட்ட பனியனும், வறுமையைப்பறைசாற்றும் ஒரு ஜீன்ஸும் அணிந்திருந்தான். குட்டிச்சிறுவன் இன்னும் கறுப்பாக, ஆனால் அழகாக, ஒரு வெள்ளை டிராயரும், இரண்டு மேல் பொத்தான்கள் இல்லாத சட்டையும் அணிந்திருந்தான். இதுதவிர பெரியவனின் இன்னொரு கையில் ஒரு ஜவுளிக்கடையின் அழுக்கேறிய கட்டைப்பை இருந்தது. இவர்கள், தன் உடல்நலமில்லாத தாயுடன் வந்திருந்தார்கள். தாய் என் அருகில் நின்றிருந்தாள். சிறுவன் எனக்கு முன் இருக்கையின் அருகில் நின்றுகொண்டிருந்தான். 

அப்போதுதான் எனக்கு முன் இருக்கைப்பயணியை கவனித்தேன். 
அவள் ஒரு கல்லூரி மாணவி, சுடிதார் அணிந்துகொண்டு, ஒரு சிறு பையை வைத்துக்கொண்டு, காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இருந்தாள். அது செல்போனாக இருக்கலாம், ஐ பாடாகவும் இருக்கலாம்!

இப்போது அந்த பெரிய சிறுவன் கூறினான்..

டேய்! தம்பி! வழுக்குதுடா..!

டேய் தம்பி! வலிக்குதுடா ..!

அவன் வயதுக்கு அந்தக்குட்டிச்சிறுவனை தூக்கி வைத்துக்கொண்டு ஓடும்,-நம்மூர் சாலையில் ஆடும்- பேருந்தில் நிற்பது என்பது கொஞ்சம் கடினம்தான்.! இதை நான் நினைத்துக்கொண்டிருக்கும்போதே...
அவன் அந்தப்பெண்ணிடம்..

அக்கா! தம்பியை உக்கார வைச்சுக்கிறீங்களா? -என்று கேட்க,

ஹெட்போனை காதிலிருந்து எடுத்து அவன் சொன்னதை மறுபடியும் கேட்டு, பின்னர் ஆக்ரோஷமாக மறுத்தாள்..அவளது முழு முக அசைவும் தெரியாவிடினும், திரும்பிச்சுளித்ததை தெளிவாக கவனித்தேன். என்ன பொண்ணு இவள்!? ஒரு சின்னப்பையன் இப்படிக்கேட்கிறான். கூப்பிட்டு வைத்துக்கொள்ளாமல் , பெரிய அலம்பல் பண்ணுகிறாளே? என்று வருந்தினேன்.

எனக்கென்னமோ குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரிப் பார்க்கத்தோன்றும். ஆகவே , அவள் மறுத்த மறுவினாடி, என்கிட்ட குடுடா..என்று கேட்டு வாங்கினேன். சில நெருக்கல்களுக்குப்பிறகு, அந்த வானமே எல்லை அழகன், என் மடிக்கு வந்தான். ஆனால் அவனுக்கு என்னைப்பிடிக்கவில்லை. சிறிது முறைத்துக்கொண்டு, அண்ணனிடம் மழலையில் பேசிக்கொண்டே வந்தான். அம்மாவிடம் குடும்ப நிலைமைகள் பற்றியும், பள்ளியில் கேட்ட கட்டணம் பற்றியும் முதிர்ந்த மனிதனாக அந்த பத்துவயதுப்பையன் பேசிக்கொண்டு வந்தான். 

நான் இறங்கவேண்டிய நிறுத்தத்துக்கு இரண்டு நிறுத்தம் முன்னால் வண்டி வந்தபோது, அடுத்த நிறுத்தத்தில் இறங்க என் முன்னிருக்கை கல்லூரிமாணவி வேகமாக எழுந்தாள்....

டர்ர்ர்ர் !

அவள் அணிந்திருந்த சுடிதாரின் கீழ்ப்பகுதி (கால்சட்டை) மேலிருந்து கீழாக தொடைப்பகுதியில் ஒரு அடி நீளத்துக்கு கிழிந்துவிட்டது. அப்படியே அவளது தொடை மற்றும் உள்ளாடை பளீரெனத்தெரிந்தது. ஒரு வினாடி அவளுக்குத்தன் உடை கிழிந்தது தெரியவில்லை. நான் நேர் பின்னால் என்பதால் உடனே பார்த்துவிட்டேன். அவள் மானம் போவதை எண்ணிப்பதறுவதை மீறி, கடவுள் இருக்கான்ப்பா! ஒரு குழந்தையை வச்சுக்க மாட்டேன்ன்னு சொன்னவளுக்கு உடனே கூலி குடுத்துட்டான் என்று ஒரு சாத்தான் குரல் எனக்குள் ஓடியது.அவளுக்கு அருகில் இருந்த பெண் 'அய்யய்யோ! சுத்தமா கிழிஞ்சிருச்சுப்பா!' என்றாள். இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் நிறுத்தம் வந்துவிட்டது.

அந்தப்பத்துவயதுக்காரனும் பார்த்துக்கொண்டிருந்தான்.
படீரென்று தன் கட்டைப்பையைத்திறந்தான்.
ஒரு சிகப்புத்துண்டை எடுத்தான்! அவள் இடுப்பில் ஒருபக்கமாக சுற்றி, அவள் கையில் திணித்தான்.
அக்கா! ஸ்டாப்பிங் வந்துருச்சு ! எறங்குக்கா! கவலப்படாம போக்கா!
அவள் விழிகள் என்ன சொன்னதென்று எனக்குப்படிக்க முடியவில்லை!

நான் அவனையே கண்ணீர் முட்டப்பார்த்துக்கொண்டிருந்தேன்..

Monday, January 3, 2011

மீண்டும் ஒரு நற்செய்தி!

இனிய நண்பர் கேபிள் சங்கரின் சிறுகதைத்தொகுப்பான ‘ மீண்டும் ஒரு காதல் கதை’ நாளை (4.1.11) மாலை டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்படுகிறது. அனைத்து நண்பர்களும் வந்திருந்து சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.





விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுபவர்
பேராசிரியை : திருமதி. பர்வீன் சுல்தானா அவர்கள்
கலந்து கொண்டு சிறப்பிப்பவர்கள் :  இயக்குனர் திரு. சீனு ராமசாமி
ஒளிப்பதிவாளர்: திரு.செழியன்
நடிகர் : திரு. ஆர்.மோகன்பாலு


பதிவர்கள்
அப்துல்லா
லக்கிலுக் (யுவகிருஷ்ணா)
விதூஷ் வித்யா
ஆதிமூலகிருஷ்ணன்.
அகநாழிகை வாசுதேவன்

தேதி : 4/01/11
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : டிஸ்கவரி புக் ஸ்டால்
                நெ.6. முனுசாமி சாலை
               கே.கே.நகர். சென்னை

Tuesday, December 28, 2010

நீங்கதான் சாவி - புத்தகவெளியீட்டு விழா புகைப்படங்கள்!

 புத்தகத்தை திரு.சீமான வெளியிட, திரு.மனோஜ் கிருஷ்ணா பெற்றுக்கொள்கிறார்.

அனைவரும் கையில் புத்தகங்களுடன்...

 புத்தகத்தில், தான் படித்தவற்றைப்பற்றி, தெளிவாகவும், அழகாகவும் திரு.சீமான் பேசினார்.

 வந்திருந்த அன்பு நண்பர்களும், பதிவர்களும்.... ( சீமான வருவதற்கு முன்)

கூட்டத்தில் ஒரு பகுதி... (சீமான் வந்து சென்ற பின்)


புத்தகவெளியீட்டுவிழாவுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள்! மின்னஞ்சல் மூலம் வாழ்த்துத்தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

Monday, December 20, 2010

அழைப்பிதழ் இதோ!


இதை க்ளிக்கி பெரிதாக்கிப் பார்த்து, அழைப்பை ஏற்று அன்புடன் வரவும்.

ஒரு நல்ல செய்தி!

     சிறுவயதில் எல்லோருக்கும் அறிவுரை சொல்லும் சிலரைப்பார்த்திருக்கிறேன். அப்படிச் சொல்பவர்கள், தான் சொல்லியபடி நடந்துகொள்கிறார்களா என்றால், அதுவும் இருக்காது. ஆனால் தன் கடமையை விடாமல் செய்வார்கள். அறிவுரை கேட்டவர்கள் உண்மையிலேயே அதை எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்து, வளர்ந்துவிடுவார்கள். அறிவுரை சொன்னவர், இன்னும் சொல்லிக்கொண்டிருப்பார். வளர்ந்தவர்கள் மீண்டும் அவரிடம் வந்து கேட்பார்கள். அதைப்பார்த்துவிட்டு , அறிவுரை சொல்வதில் ஒரு போதை ஏற்பட்டது. ஆனால் ஒரு சிறிய மாற்றமாக, ’நாமும் வளரணும், அடுத்தவங்களுக்கும் அறிவுரை சொல்லணும்என்று எண்ணிக்கொண்டு, சின்னச்சின்ன விஷயங்களில் சரியாக இருக்க ஆரம்பித்தேன்.

        எது சரி, தவறு என்று பல்வேறு புத்தகங்கள் கற்றுக்கொடுத்தன. எப்படி கற்றுக்கொடுக்கவேண்டுமென்று ஜேஸிஐ ( Junior chamber International) மிகவும் உதவியது.தன்னம்பிக்கைப் பயிற்சியாளனாக 8 ஆண்டுகள் ஓடிவிட்டது. இன்றுவரை என்னைச் சரி செய்துகொண்டுதான் இருக்கிறேன். . யாருக்காவது அறிவுரை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். என் குறை என்று எண்ணிய -அதிகம் பேசும்குணத்தை ,பல்வேறு தலைப்புகளில் நாள்கணக்கில் பேசும் அளவுக்கு நிறையாக , வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது. சொல்லும் விஷயங்களையே எழுத ஆரம்பித்தபோதுதான் , நாகரத்னா பதிப்பக உரிமையாளரும் நமது பதிவருமாகிய குகன் அவர்கள், ஒரு சுயமுன்னேற்றப்புத்தகம் எழுதுங்கள் என்று பணித்தார். அதன்படி , சின்னச்சின்ன கட்டுரைகள் அடங்கிய ஒரு புத்தகம் இப்போது தயார்!


    
    ஆம் நண்பர்களே! ‘நீங்கதான் சாவி!’ என்ற தலைப்பில் , நாகரத்னா பதிப்பகம் வெளியிடும் எனது புத்தகம் வரும் 25ம் தேதி , சனிக்கிழமை மாலை 4:30க்கு , நமது டிஸ்கவரி புத்தக அரங்கில் வெளியிடப்பட இருக்கிற்து. புத்தகத்தை திரு.சீமான் அவர்கள் வெளியிடுகிறார். அவருக்கு அடுத்ததாக 5.30க்கு மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் ஒரு பொதுக்கூட்டம் இருப்பதால் குறித்தநேரத்தில் கூட்டம் ஆரம்பித்துவிடும். 

        தாங்கள் அனைவரும் , கண்டிப்பாக வந்திருந்து விழாவினை சிறப்பித்துத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முகவரி:

டிஸ்கவரி புக் பேலஸ். 
எண்:6 , மஹாவீர் காம்ளக்ஸ்
முனுசாமி சாலை,
கே கே நகர் மேற்கு. சென்னை- 78
செல்- 9940 44 6650

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...