Sunday, November 6, 2011

யுடான்ஸ் நன்றி




வாய்ப்பு நல்கி
வாசிக்க உள்ளங்களும் நல்கி
காய்ப்பு இல்லாத மரமாய் இருந்ததை
கல்லால் அடிக்காமல்
கனிவாய்க் கொஞ்சம் காய்க்க வைத்து,
இரண்டு மாதப் பதிவுகளை
ஏழு நாளில் போட வைத்து,
எழுதும் ஆர்வம் தூண்டிவிட்டு
எத்தனையோ பதிவருக்கு
எளியோனை அறிமுகப்படுத்தி,
என்னைக்கொஞ்சம் ஆடவைத்த
யுடான்ஸுக்கு என்
உடான்ஸ் இல்லாத நன்றி!


பெயருக்குப் பின்னால்






            பள்ளி செல்ல ஆரம்பித்து, கொஞ்சம் விபரம் தெரிந்த வயதில்,  பெயருக்குப்பின்னால் படித்த பட்டம் போட்டுக்கொள்ளும் ஆசிரியர்களைக்கண்டு, பிரமிப்பாக இருக்கும். அவர்கள் வீட்டுக்கதவில் பெயர் எழுதி, பின்னால். M.A. என்று போட்டுக்கொள்வதை மிகவும் ஆச்சர்யமாவும், மரியாதையாகவும் பார்ப்பேன்.

      நண்பர்களிடையே, ஒருவரைப்பற்றி பேசும்போது, அவரது படிப்பையும் சேர்த்துத்தான் பேசுவோம். அவுங்க மாமா இளங்கோ பி.எஸ்ஸி தெரியுமுல்ல! என்போம். அந்த இரண்டு அல்லது மூன்று எழுத்தைப்பெறுவது மிகவும் கடினம் என்று கவலைப்படுவோம். நாமெல்லாம் இப்படிப் படித்துவிடுவோமா என்று ஏங்குவோம்.

        எங்கள் பள்ளி தட்டச்சு ஆசிரியர் கன்னாபின்னாவென்று படித்து, அவர் பெயர்ப்பலகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பட்டத்தை சேர்த்துக்கொண்டே போவார்.

      ’இந்த ஆளு எப்பதான் படிக்கிறாரு? எப்படி இவ்ளோ பட்டம் வாங்கினாரு?’ என்று பேசிக்கொண்டே அவரது வீட்டைக் கடந்திருக்கிறேன்.

      என் தோழி ஒருத்திக்கு, தன் பெயருக்குப்பின்னால், ஆங்கில எழுத்துக்கள் எல்லாவற்றிலும் பட்டம் இருக்கவேண்டும் என்று வெறிகொண்டு திரிவாள். தனக்கான பெயர்ப்பலகையின் நீட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் என்னைக் கொல்லுவாள்.
      
       சில வீடுகளின் வாசலில் பெயரை சிறியதாகப்போட்டுவிட்டு படிப்பை பெரியதாகப்போட்டிருப்பார்கள். அதிலும்.. M.Sc(Hons) என்று இருக்கும். அது என்ன துறை என்று தெரியாமல் தவித்திருக்கிறேன். ஹானர்ஸ் என்பது தனித்துறை இல்லை, அதிக மதிப்பெண்கள் எடுத்தால் கொடுப்பது என்று தெரியவந்தபோது, பிரமிப்பை விட கடுப்புதான் கிளம்பியது.

   ஒரு சில குடும்பங்களில், திருமணப்பத்திரிகையில் பெயருக்குப்பின்னால் போடுவதற்கென்று படிக்கச்சொல்லி ஆண்களைக் கல்லூரிக்கு அனுப்புவார்கள். பெண்களாக இருந்தால் தொலைதூரக் கல்வி இயக்ககத்துக்கு விண்ணப்பம் பறக்கும்.
  
  எனக்குத்தெரிந்து ஒரு அரசியல்வாதி நண்பன். கையெழுத்துப்போட்டுவிட்டு அதன் கீழ் பெயர் எழுதவேண்டிய கட்டாயம் வந்தால், பெயர்..படித்த பட்டம் இரண்டையும் எழுதுவான். ஏனென்று கேட்டால், ‘நம்பளை கைநாட்டுன்னு நினைச்சுறக்கூடாது மச்சான்’ ! என்பான்.
  
  திருமணப்பத்திரிகைகள், போஸ்டர்கள் இவற்றில் பெயருக்குப்பின்னால்,பட்டம் போடாவிட்டால்,பெரிய களேபரங்கள் நடக்கும். என் நண்பன் ஒருவனுக்கு கல்லூரி முடித்தவுடன் ஓரிரு வருடங்களில் திருமணமானது. இவன் B.E., மணமகள் B.Sc,PGDCA. கடுப்பாகிவிட்டான். தன் படிப்பைவிட அவள் படிப்புதான் பெரிதென்று மற்றவர்கள் எண்ணுவார்கள் என்று சொல்லி, அவள் படிப்பில் PGDCA வை எடுக்கச்சொன்னான். அவர்கள் வீட்டில் முடியாது என்றார்கள்.

அவன் வருங்கால மாமனார்,
காசு செலவு பண்ணி படிச்ச படிப்பை எப்படித் தம்பி போடாம விடுறது? என்று என்னிடம் புலம்பினார்.

சின்னகோடு,பெரியகோடு முறையில், நான் ஒரு யுக்தி சொன்னேன். இவன் பெயருக்குப்பின்னால் .B.E (Computer Science) என்று போட்டுவிட்டால், இவனுடையது நிறைய எழுத்துக்கள் வந்துவிடும் என்றேன். அதையே ஒத்துக்கொண்டார்கள்.

பின்னர் பத்திரிக்கை இப்படி வந்தது.

Er. சாமிநாதன் B.E (Computer Science Engineering)
கௌரி .B.Sc. PGDCA

இரு குடும்பத்தாரின் மகிழ்வுடன் திருமணம் நடந்தேறியது.

     இதற்கெல்லாம் பயந்தே, என் திருமணப்பத்திரிகையில் இருவரது படிப்பும் போடவில்லை. நம் படிப்பைப்பார்த்து யாரும் திருமணத்துக்கு வரவோ, நிராகரிக்கவோ போவதில்லை. நம் குணம், பழகும் விதம் இவை தவிர, அதிகபட்சமாக, அவர்கள் வீட்டு விழாக்களுக்கு கூப்பிட்டபோது நாம் சென்றிருக்கிறோமா என்று பார்ப்பார்கள் என்பதுதான் என் வாதம். எங்கள் வீட்டில் படிப்பு போடுவதா, வேண்டாமா என்ற பேச்சு வந்தபோதே நான் மறுத்ததால் பெயர்கள் மட்டும் தாங்கி பத்திரிகை வந்தது. என் மாமனார் வீட்டுப்பத்திரிகையில் அடம் பிடித்துப் போட்டார்கள். நான் மறுத்ததற்கு அவர்..
      படிப்பு போடவேண்டாம்னு நல்லவிதமா நீங்க நினைக்கிறீங்க! ஆனா, படிக்காத மாப்பிள்ளை போலிருக்குன்னு என் சொந்தக்காரனும், ஊர்க்காரனும் நினைப்பான் என்றார்.

      விழா போஸ்டர்கள் இன்னும் பெரும்பாடு படும். வாழ்த்துத் தெரிவிக்கும் 35 பெயர்களில் ஒருவரது படிப்பு தவறாகவோ, இல்லாமலோ வந்துவிட்டால் போஸ்டர் செலவுக்கு அவர் தரவேண்டிய பங்கு கட்!
போஸ்டரில் படிப்பைப் போடாததால், விழாவுக்கே போகாத மனிதர்களெல்லாம் உண்டு.
    அதுவும் அச்சகத்தின் கணிப்பொறியில், தட்டச்சுபவருக்கும், விழாவினருக்கும் ஏதாவது ஏடாகூடம் நடந்தவாறே இருக்கும். ஒன்று..இவரே ஏதாவது தவறு செய்திருப்பார். கமலநாதன் B.Tech என்று அடித்துவிட்டு, மற்றவர்களுக்கும் அதே எழுத்து வடிவம் வருவதற்காக காப்பி,பேஸ்ட் செய்துவிடுவார்.
     அவசரத்தில், கமலநாதன் படிப்பு, சாகக்கிடக்கும் மணமகள் பாட்டிக்கும் செல்லாயி B.Tech  - என்று வந்து நிற்கும்.  இதுவாவது பரவாயில்லை. உண்மையில் M.Com.B.Ed படித்தவரை வெறும் பெயராக விட்டுவிட்டு, நான்கு வயதாகும், மணமகனின் அக்காள் மகனுக்கு பட்டம் கொடுத்துப் பாட்டு வாங்கிய அச்சகங்களைத் தெரியும்.
    
    இன்னொன்று, இவர்களே தவறாக எழுதிக்கொடுத்துவிட்டு, அச்சகத்தின் மேல் குறை கூறிவிடுவார்கள். எனக்குத்தெரிந்த அச்சக உரிமையாளர் ஒருவர் படிப்பு ப்ரூஃப் பார்ப்பதை ஒரு வேலையாகச் செய்வார். 
        இவுங்க காசு குறைக்கிறதுக்கு, இதை குறையாகச் சொல்லுவாங்க! பேருக்குப்பின்னால படிப்பு போட ஆரம்பிச்சவனைக் கண்டேன்….செத்தான் என்று குமுறுவார்.

     இந்தப்பழக்கம் எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் இது நமது கௌரவ அடையாளமாக ஆகிவிட்டது. பெயருக்குப்பின்னால் படிப்பு போட்டிருப்பதை வைத்து அவரது நம்பகத்தன்மையை ஆராயாமல் ஏற்கும் கலாச்சாரம் இன்னும் குறையவில்லை. அதனால்தான் தனியார் மருத்துவமனை மருத்துவர்களில் MBBS படித்தவர் கொஞ்சமாகக் கொள்ளையடிப்பார். MD படித்தவர் அதிகமாகக் கொள்ளையடிப்பார் என்று கிராமத்தார்களே பேசும் அளவுக்கு வந்திருக்கிறது.

     பெயருக்குப்பின்னால் பட்டம் போட்டுக்கொள்ளும் பழக்கம் நம் நாட்டில் மட்டும்தான் இருக்கிறதாக நினைக்கிறேன். நான் சென்ற நாடுகளில் இதுவரை அப்படிப்பார்த்ததாக நினைவில்லை.

நம்மிடம் பழகுபவர் என்ன படித்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருப்பது தவறில்லை. அதை அவர் விசிட்டிங் கார்டில் தேடுவது ஆச்சர்யமாக இருக்கும். கேட்கும்போது, தேவை இருக்கும் இடத்தில், அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது, இன்ன படித்திருக்கிறேன் என்று சொல்வதிலோ , அச்சிட்டுக்கொடுப்பதிலோ தவறில்லை. ஆனால் பெயருக்குப்பின்னால் என்பது….

இப்போதெல்லாம், படிப்பை பெயருக்குப்பின்னால் போட்டுக்கொள்பவர்களைத்தான், நான் படிக்காதவர்களாகப் பார்க்கிறேன். படிக்கப் படிக்க, அறிவு வளரும். அறிவு வளர வளர பணிவு வளரும். பணிவு வளர்ந்தால், பெயருக்குப்பின்னால் எதுவும் போடத்தோன்றாது.

ஒரு படப்பிடிப்புக்காக பசுமையான வயல் தேவைப்பட்டது. அதன் உரிமையாளரைத்தெரிந்துகொள்ள, வயலில் நின்றிருந்த ஒரு அரையாடைப் பெரியவரை அணுகி, பேச ஆரம்பித்தோம்.

எடத்துக்காரரை ஏன் பாக்கணும்?

ஒரு படப்பிடிப்பு விசயமா?

என்ன படம்?

விளம்பரப்படம்!

”ஓ..அப்புடியா? இப்ப சம்பா போட்டிருக்கு, இன்னும் ஏழெட்டு நாளுல உரம் தெளிப்போம். நீங்க கூட்டமா வந்தீங்கன்னா உங்க மேல தெளிக்கும். ’இன்பெக்‌ஷன்’ ஆகும்!” என்றார்.

தெரிந்த ஆங்கிலத்தை அள்ளிவிடுகிறார் என்று நினைத்து, நாங்களும் ஆங்கிலம் கலந்து பேசினோம்.

அவரும் தெளிவான ஆங்கிலத்தில் பதில் சொன்னார். கொஞ்சம் ஜெர்க்கானாலும்..
”சரி! ஓனர் வீட்டைக்காட்டுங்க” என்றோம்.

”நானே வரேன்” என்று அழைத்துச்சென்றார்.

பண்ணை வீடு சுத்தமாக, தெளிவாக இருந்தது. வாசலில் பெயர் மட்டும் போட்டிருந்தது.

உள்ளே சென்றால், வரவேற்பரையில் , கோட் போட்டுக்கொண்டு எங்களுடன் வந்த பெரியவர் உரையாற்றும் புகைப்படம் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தோம்.

உடனே..
”நீங்கதான் ஓனரா? ஸாரி சார்! உருவம் பாத்து மதிப்பிட்டே பழகிட்டோம். மன்னிச்சுருங்க!  நீங்க நல்லா ஆங்கிலம் பேசுனீங்களே! என்ன படிச்சிருக்கீங்க?”

”சும்மா M.Sc Agri. Ph.D தான் தம்பீ!”

அடைக்கலக் காதல்




'அடைக்கலம்?'

'என்ன மாப்புள?'

'இந்தவாட்டி 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்துல ஜெயிக்கிற!'

'கண்டிப்பா! எனக்காக இல்லாட்டியும், மல்லிகாவுக்காக ஜெயிப்பேன்.'

அடைக்கலத்துக்கும் எனக்குமான உரையாடல் இப்படித்தான் தொடங்கியது அன்று!

அதேபோல், அந்த விளையாட்டுப் போட்டியில் அவன் பெயரை நான்குபேர் கொடுத்தோம். அந்த அளவுக்கு அவனது ஓட்டத்தின் மீது நம்பிக்கை!

மல்லிகாவைக் கடுமையாகக் காதலித்த அடைக்கலம், எங்களிடம் சொல்லிய கண்டிஷன் ஒன்றுதான்.!

1500 மீட்டர் போட்டியில் ஓடும்போது உற்சாகப்படுத்த மல்லிகாவும் சேர்ந்து கத்தவேண்டும். ஓடிக்கொண்டிருப்பவனிடம் , குளுக்கோஸ் பவுடர் அல்லது பாதியாக வெட்டப்பட்ட எலுமிச்சையை அடுத்தடுத்த சுற்றுக்களில் கொடுக்கவேண்டும். அது அந்த நேரத்தில் பெரிய சவாலாகத் தோன்றவில்லை.

நான் மல்லிகாவிடம் தூது போனேன். விபரம் சொன்னேன்.

’மல்லி! அடைக்கலத்துக்கு அடைக்கலம் குடேன்!’

‘இதப்பாரு பீட்டரு! அவன நான் காமெடிப் பீசாத்தான் பாக்குறேன். காதலிக்கிற அளவுக்கு அவனும் ஹீரோ இல்லை. எனக்கும் நேரமில்லை’ என்று இந்திரா நூயியின் எதிர்வீட்டுக்காரி போல் பேசினாள்.

'சரி! லவ் பண்ணவேணாம். ஒரு சக மாணவன் ஓடுறதை உற்சாகப்படுத்துறதா நெனைச்சுக்க!

'நெனச்சுக்குறதா? லேசா சிரிச்சாலே, மல்லிகாவை மடக்கிட்டேன்னு மாநாடே நடத்திருவான்.'

'இல்லப்பா! நான் பாத்துக்குறேன். அவன் ஒரு ஓட்டப்பந்தய வீரன் ! நீ ஒரு மாணவி! அவ்வளவுதான்.. இதுக்குமேல எதுவுமே இல்லை ! போதுமா?'
அவன் காதல் எக்கேடு கெட்டால் என்ன? பரிசு கிடைத்தால், பார்ட்டி நிச்சயம் என்ற நம்பிக்கையில் அவளுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசினேன்.
அவள் எளிதில் ஒத்துக்கொள்ளவே இல்லை. 

'நம்ப காலேஜ் மானத்தை நீதான் காப்பாத்தணும்!

'ஓடுறது அவன்! நான் ஏன் காப்பாத்தணும்!'

'உனக்குத்தான் தெரியுமே! ஊக்குவிப்பவர்கள் ஊக்குவித்தால், ஊக்கு விற்பவன்கூட தேக்கு விற்பான்.!' –அவள் கவிதை அறிவில் கைவைத்தேன்.
அரைகுறை எரிச்சலுடன்…'ஸ்ஸ்சரி! அவனுக்காக இல்லை! அவன் ஜெயிக்கணும்னு நினைக்கிற உன் ஃப்ரெண்ட்ஷிப்புக்காக!' என்று முடித்தாள்.

'ரொம்ப தேங்க்ஸ்ப்பா!!' –சொல்லி மறுநிமிடம் அடைக்கலத்தைப் பார்க்க பறந்தேன்.

அடைக்கலம் ஒல்லியாக, உயரமாக, கொஞ்சம் வெளுப்பாக, ராவணன் பிருதிவிராஜ் போல் இல்லாமல், ரெயின்போ காலனி ரவிகிருஷ்ணா போல் இருப்பான். மல்லிகா குள்ளமென்றாலும், இருக்கும் உடையை அழகாக அணிந்து வந்து, அலைபாயுதே ஷாலினி போல் இல்லாமல், அஞ்சாதே  விஜயலட்சுமி போல் இருப்பாள்.

இருவருக்கும், ஒரு சாதாரண குடும்பப்பின்னணிதான்! அடைக்கலத்துக்கு , படிப்பைவிட ஓட்டம் நன்றாக வரும் என்பதால், பள்ளியிலிருந்து ஓட்டப்பந்தயங்களில் முதல் பரிசு வென்று வருகிறான். மல்லிகா, நன்கு படிப்பாள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவாள். நல்ல பெண்!

அடைக்கலத்திடம் விபரம் சொன்னவுடன், துள்ளினான். என்னைத் தூக்க முயன்று,  இருமுறை கீழே போட்டான்.

‘அடச்சீ! இப்ப எதுக்கு இப்புடிக் குதிக்கிற? நீ நல்லா ஓடணும்னு ஒத்துக்கிட்டிருக்கா!’

'அதில்ல மச்சி அவளுக்குள்ளயும் லவ் இருக்கு! அதான் லேசா வெளிய காட்டுறா!'
'அது என்ன கருமாந்திரமோ? நீ உன் ஓட்டத்திறமையை வெளில காட்டு!

சரி மச்சி! நாளைக்குக் காலைலேருந்து ப்ராக்டிஸ் பண்ணுறேன்.

போட்டிகள் நடக்க ஆரம்பித்தன. 1500 மீட்டர், ஏழரை சுற்றுக்கள்.!
     மல்லிகா ,கொஞ்சம் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு அழகாக உடையணிந்து, மிகவும் அழகான முகத்துடன் வந்திருந்தாள். கூடியிருந்தவர்கள் எல்லோரும் அவளை ஒருமுறை திரும்பிப்பார்த்தார்கள். அவளைத் தாஜா செய்து, வேறு சில தோழிகளுடன் மைதானத்தின், ஒரு இடத்தில் நிற்க வைத்து நாங்களும் அருகில், நின்றுகொண்டோம். வாய் நிறையச் சிரிப்புடன் அடைக்கலம் தன் 7ம் எண் பனியனை, ரேமண்ட் கோட்டைச் சரிசெய்யும் லாவகத்துடன் இழுத்துவிட்டுக்கொண்டு, எங்கள் பகுதியையே பார்த்துக்கொண்டு நின்றான்.

ஓட ஆரம்பித்தான். மைதானத்தின் எந்தப்பகுதியில் ஓடினாலும், எங்களை…இல்லை..இல்லை…மல்லிகாவைப் பார்த்துக்கொண்டே ஓடினான்.. 

நாங்களும் ‘அடைக்கலம்’ அடைக்கலம், அடைக்க்க்க்கலம்..! அன்று அதிர அதிரக் கத்தினோம்.  அவன் எங்கள் பகுதியைக் கடக்கும்போது, அடைக்கலம்…என்று ஆரம்பித்துவிட்டு நாங்கள் நிறுத்தி…மல்லிகா குரல் மட்டும் அவனுக்குக் கேட்குமாறு பார்த்துக்கொண்டோம். படுவேகமாக ஓடினான்.
      மல்லிகா கையில் பாதி எலுமிச்சையைக் கொடுத்தேன். அவன் அருகில் வரும்போது நீட்டு! அவனே வந்து வாங்கிக்கொள்வான் என்று சொல்லியிருந்தேன். அவளும் மில்லிமீட்டர் புன்னகையுடன் மைதானம் நோக்கி நீட்டினாள். எதிர்பார்த்துக்காத்திருந்தவன் கையை நீட்டிக்கொண்டே, டைட்டானிக் டி காப்ரியோ போல் ஓடி வந்தான். அவள் கையிலிருந்து வாங்கும்போது, கண்மூடித்திறந்தான். அடுத்த சுற்றில், மல்லிகாவின் புன்னகையின் நீளம் செண்ட்டி மீட்டரானது. மீண்டும் உற்சாகக் கத்தல்!
     கடைசிச்சுற்றுகளில், எங்கள் கத்தல் அதிகமானது! அதுவும் மல்லிகா, வீறுகொண்டுக் கத்தினாள்.
‘அடைக்கலம்…அப்..அப்! அடைக்கலம்! அப்..அப்! அடைக்க்க்கலம்ம்…அப்..அப்!
     மைதானத்தின் எதிர்ப்பகுதியில் அவன் வரும்போதே, எலுமிச்சை நீட்டினாள். குளுக்கோஸை அள்ளிக்கொடுத்தாள். அங்கு கடந்துசெல்லும் வேறு வீரர்களும் வாங்கிச் சென்றார்கள்.  நாங்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடைக்கலம் ஒரு மாயமான் போல் ஓடிக்கொண்டிருந்தான்.

இவ்வளவு முயற்சிக்குப்பின்னும், அடைக்கலம் இரண்டாவதுதான் வந்தான். தன் கடமை முடிந்ததுபோல், மல்லிகா, கூட்டத்திலிருந்து நகர ஆரம்பித்தாள்.

வெற்றிபெற்றவர்களை 1,2,3 என்ற படிகளில் நிற்கவைத்தாரகள். முதல் பரிசு 11ம் எண், இரண்டு 7, மூன்று 23 என்று நின்றார்கள்.
அறிவிப்பு ஆரம்பித்தது.

1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வென்றவர்கள் விபரம்.
முதல் பரிசு கே. அடைக்கல ராஜ்
இரண்டாம் பரிசு எஸ்.அடைக்கலம்.
மூன்றாம் பரிசு பி.அடைக்கல ஜான்ஸன்.

லவ் பண்ணுங்க பாஸு ! கூட ஓடறவனையும் சேத்து ஜெயிக்கவைக்கலாம்.!


இரண்டாவதாக வந்தாலும், காதல் போதையில், அடைக்கலத்தின் வசனம் இது!!

Wednesday, November 2, 2011

தொலையாமல் பேசுவோம்








இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்நாளின் ஒரு கணிசமான பகுதி தொலைபேசியில் போயிடுது! நமக்கு வரும் அழைப்புகளானாலும் சரி, நாம் அழைக்கும் ஆட்களானாலும் சரி! பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருக்கோம். இது எந்த அளவுக்கு நம்முடைய நேரத்தை சாப்பிடுதுன்னு யாருக்கும் தெரிவதில்லை. தெரிஞ்சாலும் நாம் அலட்டிக்கிறதில்லை

நாம் இன்னிக்கு சக மனிதர்களிடம் நேரா நாலு வார்த்தை பேசுவதைவிட, செல்பெசியில் அடுத்த முனையில் இருப்பவர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே பேசுறோம். அது நம்முடன் இருக்கும் குடும்ப நபர்கள், நண்பர்களை எரிச்சல் படுத்தும்கிறதுதான் உண்மை! ஆனா அதையும் மீறி தொலைபேசுவதையே தொழிலாக வச்சிக்கிட்டிருந்தா ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வீட்டில் இருப்பவர்கள் கிச்சனிலிருந்து, ஹாலில் இருக்கும் நமக்கு போன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மொக்கச்சாமி ஒரு டாக்டரைப்பாக்க அவர் கிளினிக்குக்கு போனாரு!
டாக்டர்! எனக்கு….  னு ஆரம்பிக்கும்போது , 
டாக்டருக்கு ஒரு போன் வந்து பேச ஆரம்பிக்கிறாரு! மொக்கச்சாமியும் காத்திருந்தாரு! டாக்டர் போனை வைக்கவும்…
      டாக்டர்! எனக்கு தினமும்  கிறார்..!
மறுபடியும் டாக்டருக்குப் போன்… அவர் பேசுறாரு! முடிக்கிறாரு! இப்பவும் மொக்கச்சாமி,
      டாக்டர்! எனக்கு தினமும் சாயந்திரமானா
மீண்டும் டாக்டருக்கு போன்…அவரும் மொக்கச்சாமியைப்பாத்துக்கிட்டே போன் பேசி முடிக்க… மொக்கச்சாமி எழுந்திருக்கிறாரு!
      உடனே டாக்டர்..!
      என்ன மிஸ்டர் மொக்கச்சாமி! வந்தீங்க ஒண்ணுமே சொல்லாம போறீங்கன்னாரு!
      மொக்கச்சாமி சொன்னாரு!
      இல்ல டாக்டர்! வெளில போய் உங்களுக்கு போன் பண்றேன்! அப்பதான் நான் சொல்லவந்ததை முழுசா சொல்லமுடியும்போலன்னாரு!

       நம்மிடையேயும், டாக்டர் மாதிரி ஆட்கள் நிறையபேர் இருக்கோம் ! எல்லாரும் நமக்கு முன்னால் இருக்கும் ஆட்களை விட, போனில் பேசுபவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.

      நாலு நண்பர்கள் ஒரு இடத்தில் சந்திச்சுக்கிட்டா, அவர்களுக்குள் பேசிக்கிறதை விட, அவர்களுக்கு வரும் செல் அழைப்புகளில் பேசுறதுதான் அதிகம்! அதுக்கு எதுக்கு சந்திக்கணும்?

      செல்போன் நாம கண்டுபிடிச்ச கருவி! அது நம் வசதிக்குத்தானே தவிர, வருத்தத்துக்காக இல்லை! அதை மனசில் வச்சுக்கிட்டு அந்தப் பொருளை நாம் பயன்படுத்தத்தொடங்கணும்!

 எல்லா இடங்களிலும் அலறுகிற மாதிரி ஒரு பாட்டை அழைப்புமணியா வச்சுக்கக்கூடாது. குறிப்பா மருத்துவமனைக்குள்ள அமைதியா இருக்கும்போது திடீர்னு ‘நாக்க முக்கா..நாக்க முக்கா’  னா கடுப்பாகும். சத்தம் வராத சைலண்ட் மோடில், வைப்ரேஷன் எனப்படும் உதறும் நிலையில் வச்சிருந்தா , அழைப்பு வருவது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். யாரையும் தொந்தரவு பண்ணாது.

யாராவது உங்களிடம் நேராகப் பேசிக்கிட்டிருக்கும்போது, உங்கள் போனை நோண்டிக்கொண்டிருக்கக்கூடாது. அது அவர்களுக்கு உங்களைப்பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இவர் நம்ப பேச்சை கவனிக்கலை என்று எண்ணவைக்கும். நேராக ஒருவரிடம் பேசும்போது, போனை பையில் வைத்துக்கொள்வதுதான் நலம்.

காலர் ட்யூன் எனப்படும், உங்களை அழைத்தால் , அழைப்பவருக்குக் கேட்கும் பாடல் வைப்பது ஒரு சிறந்த பண்பாகப் பார்க்கப்படுறதில்லை! நீங்க உங்களுக்குப்பிடித்த பாடலை வைக்கிறீங்க!  ஆனால் கேட்பது எதிராளி! இது , தனக்குப்பிடித்த உணவை, அடுத்தவர் வாயில் திணிப்பதற்குச்சமம்தான். அப்படியே அது நல்ல பாட்டா இருந்தாலும், அதை யாராலும் முழுசா கேட்கமுடியாது! டயலர் ட்யூன்ங்கிறது செல்பேசி நிறுவனங்கள் நம்மகிட்ட  காசு பிடுங்க ஏற்படுத்திய யுக்தி!

ஒருவரை நீங்க அழைக்கிறீங்க! அவர்கள் உங்கள் அழைப்பை எடுக்காம கட் செய்யுறாங்க! அவுங்களுக்கு நம்ப மேல் ஏதாவது கோபமா இருக்குமோ? வேற எதாவது பிரச்னையோ? என்று மனசைப்போட்டு உழட்டிக்கிட்டு மீண்டும் மீண்டும் அவர்களுக்கு போன் செஞ்சுக்கிட்டே இருந்தா, அதுதான் மிகப்பெரிய எரிச்சலூட்டும் விஷயம். ஒருவர் உங்கள் அழைப்பை நிராகரிச்சா, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு அவருக்கு அழைக்காமல் இருக்கலாம். அல்லது நீங்கள் ப்ரீயா இருக்கும்போது அழைக்கவும் என்று குறுஞ்செய்தி அனுப்பலாம். அதுதான் நல்ல பழக்கம்!

மிகப்பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைச்சா, அவர்களின் எண்களை வைத்துக்கொண்டிருக்கும்போது கவனம் அதிகம் வேணும். நாம் சும்மா இருக்கும்போது அவரை அழைச்சு எரிச்சலூட்டக்கூடாது. அப்புறம்..எப்படி இருக்கீங்க? சும்மாதான் கூப்பிட்டேன் என்று சொதப்பக்கூடாது. ஏதாவது தகவல் இருந்தால் மட்டுமே கூப்பிடணும். அவர் வேலையில் இருக்கார் என்று தெரிஞ்சால் அதற்கேற்றார்போல் பேச்சை கட் செய்யனும். அதுதான் உண்மையிலேயே அவர்களது நட்பை பலப்படுத்தும்.

முக்கியமானவர்களுக்கு அழைப்பதற்குமுன்னால், அவர்களை அழைக்கலாமா னு ஒரு குறுஞ்செய்து அனுப்பிட்டு காத்திருந்தால், உங்கள் இந்த நல்ல செயலுக்காகவே அவரே உடனடியா உஙகளைக்கூப்பிட்டு பேசிடுவார்!

நாம் முக்கிய வேலையில் இருக்கும்போதும், வாகனம் ஓட்டிக்கிட்டிருக்கும்போதும் யார் அழைத்தாலும் எடுக்காதீங்க! பிறகு அழைத்த நபர்களுக்கு கூப்பிட்டு பேசுங்க! அதேபோல், மிஸ்டு கால் விடுவது ஒரு மிகப்பெரிய தவறு!

ஒரு செல்போன் பேச்சு வாக்குவாதமா மாறும்போது, நீங்க இருக்கும் இடத்தை கவனிச்சுப்பாத்துக்குங்க! ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பேசிக்கிட்டு குடும்ப விவகாரங்களை சத்தமா பேசுறது, கேக்குறவங்களுக்கு சுவாரஸ்யமான கிசுகிசு அல்லது உங்களைப்பற்றின அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் முயற்சியா மாறிடும்.

அதேமாதிரி, ‘அந்த பச்சை பீரோவில் மேல்தட்டுல நகையெல்லாம் வச்சிருக்கல்ல,! அங்கதான் இந்த ப்ரீமியம் ஸ்லிப்பும் வச்சிருக்கேன்.!

நாளைக்கு மத்தியானம் குடும்பத்தோட ஊருக்குப்போறேன் மாப்ள! வரதுக்கு நாலு நாளாகும்! வந்தவுடனே பேசலாம்’னு பொது இடங்கள்ல பேசறது, திருடுறவங்களுக்கு செலவில்லாம நீங்க கொடுக்குற க்ளூ!

இத்தனைக்கும் மேல, செல்பேசியில் பதிஞ்சு வச்சிருக்கும் எல்லா எண்களையும் ஒரு நோட்டில் எழுதிவைக்கலாம். கம்ப்யூட்டரில் போனை இணைச்சு எண்களை ஏத்தி வச்சுக்கலாம். இது இரண்டில் எது செய்யாமல் விட்டாலும், செல்பேசி தொலைஞ்சு போனாலோ, பழுதா போனாலோ மொத்தமா எல்லா எண்களையும் இழந்துட்டு அம்போன்னு நிக்கவேண்டியதுதான். அந்தத்தருணம் பெரிய மன உளைச்சலை உண்டுபண்ணும்.

பொது இடங்களில் கேமரா செல்லில் படங்கள் எடுப்பதை தவிர்க்கணும். இதனால் ஏகப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. அதேபோல், நம் வீட்டுப்பெண்களின் படங்களை செல்பேசியில் வைத்திருப்பது ஆபத்தானது. நம்ம செல்தானே என்று நினைப்போம். ப்ளூடூத் மூலமாகவும், பழுது பார்க்கும் இடத்திலும் அந்தப்படங்கள் பரவி, தவறு நிகழ்வதற்கான சாத்தியங்கள் ஏராளம்.

ஒரு நாளில், அதிக நேரத்தை செல்பேசுவதில் செலவழிப்பதை தவிர்க்கணும். மாசத்துக்கு ஒருமுறை ஒருநாள் முழுக்க, செல்பேசி பயன்படுத்தாம இருக்கலாம்.

ஒருவரிடம் பேசுறதுக்கு முன்னால், என்னென்ன பேசப்ப்போறோம்னு குறிப்பெடுத்துவச்சுக்கலாம். அதுமட்டும் பேசிட்டு முடிச்சுக்கலாம். இது உங்கள் நேரத்தையும், அடுத்தவுங்க நேரத்தையும் சேமிக்கும். குறிப்பிட்ட இடங்களில் போன் வந்தாலும் எடுக்காமல் இருப்பதுதான் நல்லது. கோவில்கள், மேடைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் ,கல்லூரிகள் இங்கெல்லாம் செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தவே கூடாது.

நண்பர்களிடம் வெட்டிப்பேச்சு பேச , உங்கள் இருவருக்கும் உகந்த நேரத்தை தேர்ந்தெடுத்து பேசுறதுதான் அந்த வெட்டிப்பேச்சைக்கூட சுவையா வச்சிருக்கும். 

செல்பேசிங்கிற ஒரு அற்புதமான கருவியை நல்லபடியா பயன்படுத்தினா, வாழ்நாள் முழுக்க நட்பு , உறவுகளை தொலைக்காமல் பேசலாம்! அதுக்குள்ளயே தொலையாமலும் பேசலாம்.!


பி.கு : எனது ‘நீங்கதான் சாவி’ புத்தகத்திலிருந்து....

நன்றி : நாகரத்னா பதிப்பகம்.   


Monday, October 31, 2011

பெயருக்கு முன்னால்



 

           பிறந்தவுடன் , அழைப்பதற்காக வைக்கப்பட்ட பெயர் சிலருக்கு ஒன்றோடு நின்றுவிடும். ஆனால் சிலருக்கு, வீட்டில் கூப்பிட ஒரு பெயர், அதிகாரப்பூர்வமாக பதிவேடுகளிலும், பள்ளியிலும் ஒரு பெயர், நண்பர்கள் மத்தியில் ஒரு பட்டப்பெயர் என்று பல்வேறு பெயர்களில் வலம் வருவது உண்டு.
     அதில் விதவிதமான பெயர்கள் கொண்டு இருந்தால், எந்தக்கூட்டத்தில் இருக்கிறோமோ, அதற்கு ஏற்றார்ப்போல் காதுகளையும் தயார் செய்து கொள்ளவேண்டும். 

எங்கள் வீட்டில் எனக்கு சுரேஷ் என்று பெயர்! பள்ளியில் சுந்தர்…! 

     வீட்டில் என்னை யாரும் பள்ளிப்பெயர் கொண்டு அழைக்கமாட்டார்கள். ஆனால் பொதுவில், பள்ளியில், கடைவீதியில் சுரேஷ் என்று யாராவது கூப்பிட்டால், ஒரு கணம் திரும்பிப்பார்க்கத் தோன்றிவிடும். ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்த பள்ளி நண்பர்கள், அந்தத்தெருவில் வந்து பெயர் சொல்லிக்கேட்க, அப்படி யாரும் இந்தத் தெருவில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பின்னர் பல்வேறு விளக்கங்களுக்குப் பிறகு..ஓ..சுரேஷா..! அடுத்தவீடுதான் .என்று சொல்லி, வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.

           அனேகமாக எங்கள் தெருவில் எல்லோருக்கும் அந்தப்பிரச்னை இருந்தது. எனக்காவது பரவாயில்லை. இரண்டு பெயர்களும் சொல்லிக்கொள்ளும்படி இருக்கும். சிலருக்கு வீடுகளில் கூப்பிடும் பெயரில் பல்வேறு ஆச்சர்யங்களும், அதிர்ச்சியும் ஒளிந்திருக்கும்..


எங்கள் வீட்டுக்கு வைக்கோல் கொண்டுவரும் பெரியவரைக் கூப்பிடும் பெயர் கூளார்.! எதிர்வீட்டு பெரியம்மாவை அழைக்கும் பெயர் அக்கம்மா ! அவரின் அக்கா பெயர் பட்டம்மா! அவர்களின் இயற்பெயர் அனேகமாய் நாங்கள் அறிந்திருக்கவே இல்லை.

     பெயர் வைப்பது வைபோகமாகக் கொண்டாடப்பட்டாலும், ஆண்டாண்டு காலம் நம்மை அடுத்தவர் அழைக்கும் பெயர் கணநேரத்தில் வைக்கப்பட்டு விடுகிறது. காரணப்பெயர் நிலைத்துப்போய் , காகிதப்பெயர் ஒளிந்து நிற்கிறது. அதையும் மீறி பதிவுலகம், எழுத்து என்று வரும்போது, நாமே ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்கிறோம்



  சில நேரங்களில் காரணப்பெயரை வேண்டாமென்று நினைத்தாலும், இறுக ஒட்டிக்கொண்டுவிடுகிறது. பின்னர் அதுவே பழகிப்போய் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் வந்துவிடுகிறது.. சில நேரங்களில் காரணமில்லாத பெயர்கள் காலாகாலத்துக்கு வருகிறது.

   எங்கள் அத்தையின் மூன்றாவது மகனுக்கு ‘இண்டாயி’ என்று பெயர்..! இன்றுவரை அதற்கான சரியான அர்த்தம் எங்கள் யாருக்கும் தெரியாது. இப்போதுதான் அவன் இயற்பெயர் சொல்லிக்கூப்பிடுகிறோம்.

என் நண்பன் ஒருவனை நாங்கள் அழைக்கும் பெயர் – அப்புரு, அவன் உண்மையான பெயர் அந்தோணி ராஜேந்திரன். 

    இன்னொரு நண்பனை மாரிமுத்து என்று அன்போடு அழைத்துவந்தோம். ஒருமுறை திருவிழாவுக்கு வாங்கடா என்று அவர்கள் கிராமத்துக்கு எங்களை வலுக்கட்டாயமாக அழைத்து வினையை வீட்டுக்கு அழைத்துச்சென்றான். ஆரம்பத்தில் வீட்டில் அனைவரிடமும் கண்ணைக்காட்டிக்கொண்டே இருந்தான். அவன் அக்கா ஒரு முறை..கூ..மாரிமுத்து ! என்று அழைத்ததை கவனித்தாலும் அர்த்தம் தெரியவில்லை. இரவு சாப்பிட்டுவிட்டு நானும், இன்னொரு நண்பனும் ஊரில் நடக்க ஆரம்பிக்க, எங்களைப்பார்த்து ஒரு பெரிசு..’ கூளையன் கூட்டாளிகளா?’ என்று கேட்டார். நாங்கள் குழப்பமாக, ‘இல்லை! மாரிமுத்து வீட்டுக்கு வந்திருக்கோம் என்றோம். ஓ! இப்படித்தான் பேரு வச்சிக்கிட்டு பள்ளிக்கூடத்துல திரியிறானா அந்தக் கூளையன்? என்று பெரிசு கேட்க, எங்களுக்கு ஏரியலில் துவைத்ததுபோல் 'பளிச்'சென்று விளங்கியது. பின்னர் இரண்டு ஆண்டுகள், மாரிமுத்து என்ற பெயரை அவனே மறக்குமளவுக்கு கூளையனுக்குக் கொடி ஏற்றிவிட்டோம்.

      என் தூரத்து உறவுக்காரப்பையன் ஒருவனை ‘அய்யா’ என்றுதான் அவன் குடும்பம் அழைக்கும். நிறைய குடும்பங்களில் ‘தம்பி’, சின்னவனே, ராஜா, குட்டி என்ற பெயர்கள் மிகப்பிரபலமாக இருக்கும். கொஞ்சம் அன்பான பிள்ளையை ‘சாமீ’ என்று அழைப்பார்கள்.

    கிராமங்களில் அழைக்கும் பெயர்களில் இருக்கும் நையாண்டி உலமறியாதது. பெருமூக்கன், கோழிவாயன், சிலுப்பி, செண்ட்டரு, பாவாடை, சொம்பு, ஊத்தை, புளிச்சட்டி, கிளீனு, எலந்தப்பழம்…இவர்களெல்லாம் நான் சந்தித்த கிராமத்து மனிதர்கள்.! இவர்களது உண்மையான பெயர் இன்றுவரை எனக்குத்தெரியாது.
        
        வட இந்தியக்குடும்பங்களில் மிகவும் வேடிக்கையான பெயர்கள் இருக்கும். ஜிக்கு, பப்லூ, பண்ட்டி, முன்னா, சோனு, புஜ்ஜு என்று அழைக்கும்போது மூன்றெழுத்தில் அவர்கள் காட்டும் அன்பு வியக்கவைக்கும். நான் டெல்லி நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, எனக்கு ஒரு வட இந்திய அதிகாரி இருந்தார். அவர் பெயர் சதீஷ் அஹுஜா..! ஆனால் போனில் பேசும்போது ‘மைன் டிங்கி போல்ரஹாஹூம்! என்று ஆரம்பிப்பார். எனக்குச் சிரிப்பாக வரும்.

       நான் தஞ்சையில் வேலை பார்த்தபோது சொல்யூசன் என்ற சைக்கிள் ரிப்பேர் பார்க்கும் ஒரு பெரியவர் அறிமுகமானார்.. சிறுவயதிலிருந்தே அந்தப்பெயர்தான் என்றார். யார் வச்சாங்க? என்று கேட்டபோது புன்னகைத்தார். 
   சில மாதங்களில் அவர் நோய்வாய்ப்பட்டு, அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சென்று பார்த்தேன். அவரை உற்சாகப்படுத்தும் வகையில் பேச ஆரம்பித்து, உங்க உண்மையான பெயர் என்ன என்று கேட்டேன். 

        இதுவரைக்கும் யாருமே கேட்கலை! நீயாவது கேட்டியே? பாவம் எல்லாருக்கும் அவுங்க அவசரம். என்றுவிட்டு…’ரமணி’ என்று புன்னகைத்தார். 
 
     ’நான் சைக்கிள் கடையில் வேலை பாத்தப்ப ஒரு புள்ளையப் பாத்தேன். அதுவும்  பாக்கும். ரெண்டுபேருக்கும் பிடிச்சுப்போச்சு! ஏஞ்சொல்லு? அது பேரும் ரமணி! அதூட்டு சைக்கிளைப் பஞ்சர் பாக்க அன்னிக்கு கடையில சொலூஷன் இல்லை. மழைத்தூறல் வேற,! நானே அலைஞ்சு திரிஞ்சு வாங்கியாந்து ஒட்டிக்குடுத்தேன். அது சந்தோசத்துல வரேன் சொல்யூஷன்னு சொல்லிட்டுப் போச்சு! அதான் நானே அந்தப்பேரை வச்சுக்கிட்டேன்.!’ என்றார்.

அவுங்க எங்க ? என்றேன். 

அதெல்லாம் எதுக்கு? நாந்தான் தனியா இருக்கேனே! பத்தாதா? என்றார்.

பின்னர் நான்கைந்து நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்து பார்த்தபோது, சைக்கிள் கடையைப் பார்த்தேன். பூட்டியிருந்தது. பக்கத்துக்கடைப் பையன் சொன்னான். 

‘அண்ணே! விசயம் தெரியாதா? சொல்யூஷன் காலியாயிருச்சு!’

Sunday, October 30, 2011

யுடான்ஸ் வணக்கம்!




திரட்டியாக ஆரம்பிக்கும்போது , நண்பர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற அளவில்தான் தெரியும். அப்புறம் அது பதிவர்களிடையே பரவ ஆரம்பித்தது. அப்புறம் குறும்படங்கள் காட்ட டிவியும் இணைத்தார்கள். பின்னர் நேரடியாக ஒரு விழாவை ஒலிபரப்பினார்கள். திடீரென்று பரிசலும்,ஆதியும் நடத்தும் சவால் சிறுகதைப்போட்டியை வழங்கினார்கள். அலெக்ஸாவில் ரேட்டிங் அள்ளினார்கள். வார நட்சத்திரம் தேர்ந்தெடுத்து, முகப்பில் வைத்தார்கள். குடான்ஸாக ஆரம்பித்தவர்கள் யுடான்ஸாக , நீங்களும் ஆடுங்களென்று பிரமிக்கவைக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, கேபிள் அண்ணன் கூப்பிட்டு நீங்க அடுத்த வாரம் என்றார். நான் அதற்கடுத்த வாரம் என்றேன்.சரி என்றார். நானும் விட்டுவிட்டேன். சொன்னபடி சரியாகக் கூப்பிட்டார். நான் ஜகா வாங்க முயற்சித்தேன். நடக்கவில்லை. 

இதோ.. வந்து நிற்கிறேன்.

அதுவும் வாரம் ஒரு பதிவாவது எழுதாமல், மாதத்துக்கே இரண்டு, மூன்று என்று சுருங்கிப்போன சுண்டெலிப் பதிவனான என்னைத் தூக்கி நிறுத்தினால், இந்த வாரம் கட்டாயம் 7வது தேறிவிடும் போலிருக்கிறது. ஜெய் ஜோசப் சங்கர ஜேகே !  

திரட்டியின் முகப்பில், நான் இருப்பதைப் பார்த்து நம்பி எதிர்பார்த்தீர்களென்றால் ஏமாந்து போகும் சாத்தியம் நிறைய உண்டு! ம்க்கும்..என்று செருமினீர்களென்றாலும் ஏமாறும் வாய்ப்பு இருக்கிறது. பதிவர்களின் அன்பும், அறிவும் அறிந்தவன் என்ற முறையில், என்னால் முடிந்ததை..(சட்டியில்………..அகப்பையில்…..….) டைப்புகிறேன்.

இது..உளறலாகத் தெரிந்தால்,..மிகச்சரி! திடுக்கென்று மேடை ஏறி, அதுவும் ஸ்பாட் லைட் நம்மைத் துரத்தும்போது இருக்கும் கிடுக்….மிரட்சிதான்..! வேறொன்றுமில்லை.

அனைவருக்கும். யுடான்ஸ் வார வணக்கங்கள்!

Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு

    


      பிரம்மாண்டமான எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்த ஏழாம் அறிவு , தமிழர்களின் பெருமையை உலகத்துக்குப் பறைசாற்றும் படைப்பாக வெளிவந்திருக்கிறது.
1600 ஆண்டுகளுக்கு முன், காஞ்சியை ஆண்ட பல்லவ வம்ச போதிவர்மன் (சூர்யா) , ராஜமாதாவின் உத்தரவுப்படி சீனாவுக்குச் செல்கிறான். அங்கு ஒரு கிராமத்தில் ஏற்பட்ட கொடிய நோயைத் தன் மூலிகை மருத்துவத்தால் தீர்க்கிறான். அதன் சூட்சுமத்தை சீன மருத்துவர்களுக்குக் கற்றும் கொடுக்கிறான். மேலும், சீன மக்களை எதிரிகளிடமிருந்து காத்து, தற்காப்புக்கலைகளை போதிக்கிறான். அவர்களால் போற்றப்பட்டு தாமோ என்று அழைக்கப்படும் குருவாகிறான். இந்தியா திரும்ப நினைக்கும்போது, சீனர்களின் ஆசைப்படி, அவர்கள் கொடுத்த நஞ்சு கலந்த உணவை உண்டு அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறான்.
         
        கதை நிகழ்காலத்துக்கு வருகிறது.

       அர்விந்த் என்ற சர்க்கஸ் கலைஞனாக சூர்யா! அங்கு குரங்கு கேட்டு வரும் மரபணு அறிவியல் மாணவி சுபா (ஸ்ருதி)வைக் கண்டு மயங்கி,  அவளைச்சுற்ற ஆரம்பித்து, சில சுவாரஸ்ய கலாட்டாக்களுக்குப்பிறகு தன் காதல் சொல்ல, அவள் மறுக்கிறாள்.
      சீனா, இந்தியாவில் ஆபரேஷன் ரெட் என்ற ஒரு தாக்குதலை திட்டமிடுகிறது. அதற்காக அவர்கள் நியமிக்கும் ஆள், டாங்.லீ.(ஜானி). அவன்மூலம் இந்தியாவில் 1600 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் வந்த கொடிய நோய்க்கிருமியை ஒரு நாய் மூலம் பரப்பி, இந்தியா கைபிசைந்து நிற்கும்போது, அதற்கான மருந்தைக் கொடுத்து,  பதிலாக சீனா கேட்பதை இந்தியாவைச் செய்யவைக்கலாம் என்பதுதான் திட்டம். மேலும், இந்த மூலிகை ரகசியம் தெரிந்த, ஒரே ஆளான போதி தர்மரின் டி என் ஏ பற்றி ஆராய்ச்சி செய்து மீண்டும் அவரது வம்சாவளி மூலம்  போதி தர்மரை கொண்டுவரும் முயற்சியில் இருக்கும் ஸ்ருதியைக் கொல்லும் பணியும் டாங் லீக்குத் தரப்படுகிறது.
    
   போதிவர்மரின் வாரிசான அரவிந்தை , சுபா நீண்ட நாட்களாக திட்டமிட்டு பின் தொடர்ந்து, அவனது டி என் ஏவை எடுத்து ஆராய முயற்சிப்பது அவனுக்குத் தெரியவருகிறது. இது பற்றி அவன் சுபாவிடம் கேட்க, அவள் கூறும் தகவல்களில் பற்றிக்கொள்கிறது பரம்பரை டி என் ஏவுக்கும், அதை பலி வாங்க நினைக்கும் சீன டாங்குக்குமான பகை!

    டாங்கின் மிகப்பெரும் சக்தி என்ன? அரவிந்த்துக்கு போதி தர்மரின் ஆற்றல் வருவது எப்படி? போன்ற சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளுடன்,  அறிவியல் கலந்து அழைத்துச்செல்கிறது மீதிக்கதை.!

    
     தமிழன் கற்றுக்கொடுத்த வித்தையை , தமிழனுக்கு எதிராகவே பயன்படுத்தினால் என்ன ஆகும்? என்பதுதான் அடிநாதம். அது மிகச்சிறிய முடிச்சில் ஆரம்பித்து, பிரம்மாண்டத்தைத்தொடுகிறது.

அதையும் மீறி, நம் தேசத்தின் அறிவியல் என்பது வாழ்வு சார்ந்தது. அதை நாம் காரணமே இல்லாமல் புறக்கணித்து இன்று வெளிநாடுகளில் கையேந்துகிறோம் என்று கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் இயல்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்!
ஒரு புராணக்கதையுடன் , நிகழ்காலத்தைப் புனையும்போது ஒரு சமூகக்காரணம் இருந்தால்தான் வெற்றிபெறும் என்பது திரை நியதி! அதை தெளிவாகப் பயன்படுத்தியிருக்கிறார். இயக்குநரின் பெயர் போடும்போது எழுந்த கைதட்டல் மற்றும் விசில் ஒலியே அவரைப்பற்றிய எதிர்பார்ப்பின் வெற்றி!
ஷாவ்லின் கோவில் வரலாறு, குங்பூவில் சூறாவளி உருவாக்கும் முறை, பல்லவ, சீன கால உடைகளில் கவனம், போதிதர்மனின் குதிரைப்பயண நிலப்பரப்புகள் என பார்த்துப் பார்த்து செய்த குழு முயற்சியைப் பாராட்டவேண்டும்.
எல்லாக் கொலைகளையும் காட்டிக்கொண்டிருக்காமல், சிறு சிறு சுவாரஸ்யங்களில் புரியவைத்திருக்கிறார் இயக்குநர். கால்டாக்சி அலுவலகத்திலிருந்து கடலை தின்றுகொண்டே படியிறங்கி வருவது, பாலத்தில் அனைவரும் ஒருபக்கம் ஓடிப்போய் எட்டிப்பார்ப்பது என தமிழ் ரசிகனை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.


போதிதர்மனான சூர்யாவை சீன மக்கள் எதிரியாகப் பார்க்கும்போது, ஒரு தீர்க்கமான புன்னகையுடன் குதிரையைப்பிடித்துக்கொண்டு வெளியேறும் காட்சியில், அவமானப்படும்போது இருக்கவேண்டிய அமைதியைக் கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார் சூர்யா!.. தமிழ், வீரம், துரோகம் பற்றிப்பேசும்போது காட்டும் உணர்ச்சிகளில் நடிப்பா, உண்மையா என்று இனம் காணமுடியவில்லை. சூர்யாவுக்கு அழுத்தமான வாய்ப்பு! அவரது அறுபது வயதுக்குப் பின்னும் பேரன்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம்.!
வித்தியாசமான குரல் வளத்துடன், நல்ல தமிழ்பேசும் நாயகியாக ஸ்ருதிஹாசன்! காட்சிப்பொருளாக வராமல் நன்றாகவே நடித்திருக்கிறார். அவர் தன் அப்பா பற்றி சொல்லும்போது தியேட்டரில் மிகப்பெரிய ஆரவாரம்.! அவர் கூறுவது வேறு! ஆனாலும் ஆடியன்ஸ் கமல், கமல் என்று கத்தாமல் அந்தக்காட்சி முடியவில்லை.
படத்தின் அடுத்த ஹீரோ...வில்லனான ஜானி! சிறு கண்ணில் சீற்றம் காட்டி, தன் வித்தையை வெளிப்படுத்துவதில் பின்னுகிறார். ஒவ்வொருவராகப் பார்த்து அடிக்க அனுப்பும் காட்சியில் அவருக்கும் கைதட்டல் அள்ளுகிறது.
அந்தச் சாக்கடை அள்ளும் தொழிலாளியும், பை வைத்த பெண்ணும் குங்பூ சண்டை போடும்போது அதகளப்படுத்தியிருக்கிறார்கள்.
இன்னும் ஒரு ஹீரோவைப்பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன்.! விளையாடியிருக்கிறார் மனிதர். ! ஒரு தவம்போல் சண்டைக்காட்சி அமைத்திருப்பது தெரிகிறது. தமிழ்ப்படத்துக்கு இது மிகவும் புதிது. அந்நியனின் கராத்தேவும், 7ம் அறிவின் குங்பூவும் முழுக்க வேறு விதமாகத் தெரியவைத்திருக்கிறார்.
இசையில் கொஞ்சம் கஜினி வாசனை! அதுவும் உன்னித்துப்பார்த்தால்(கேட்டால்)தான் தெரியும். நிறைய போலீஸைக் கொன்றவனை போலீஸ் தேடவே இல்லையா? நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விஞ்ஞானியை மாணவி ஏன் அரசிடம் ஒப்படைக்கவில்லை? சர்க்கஸ் கலைஞர் பாதிப் படத்துக்குப்பின் ஏன் வேலைக்கே போவதில்லை? இடையில் ஏற்பட்ட கொலைகள் மற்றும் டாங் லீ பற்றி ஏதாவது விசாரணைக் காட்சிகள் இருந்திருக்க வேண்டாமா? என சிறு சிறு கேள்விகள் எழுந்தாலும், சுவாரஸ்யமான திரைக்கதை தலையைத் தடவிக் கூட்டிச்செல்கிறது.


ஒரு முழுமையான பொழுதுபோக்குச் சித்திரத்தில் , அறிவியலும், அறிவுரையும் சுவாரஸ்யத்துடன் மிகச்சரியாகக் கலந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. 
எதிர்பார்ப்பில்லாமல் போனால் ஒரு வித்தியாசமான புனைவுடன் கூடிய பொழுதுபோக்குப்படம் பரிமாறப்படுகிறது.

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...