Monday, October 29, 2012

பண குணம்



பணம்..நம் அன்றாடத்தேவைகள் மட்டுமன்றி, நம் வாழ்க்கையையே நிர்ணயிப்பதாக அமைந்துவிட்டது. அதை வைத்து மனிதர்களுக்குள் வரும் பிரச்னை கொஞ்ச நஞ்சமல்ல.!

ஒருவரது அடிப்படை குணத்தை, அவர் பணத்தைக் கையாளும் தன்மையையும் வைத்துத்தான் நாம் எடைபோடுகிறோம். அதுவும் அவர் எப்படி தனக்கான கொடுக்கல் வாங்கல்களைச் செய்கிறார் என்பதை வைத்து அவரது குணாதிசயத்தை நிர்ணயிக்கிறோம். உண்மையில், பண குணம்தான் எல்லோரையும் பற்றி நமக்கு உலகுக்கு எடுத்துரைக்கிறது.

இதில் அடிப்படையாக இரண்டு விதம்..

கொடுப்பவர்,- 50 பைசா பிச்சை கொடுப்பவரிலிருந்து, அரை லட்சம் அவசரத்தேவைக்குக் கொடுப்பவர் வரை அனைவரும் கொடுப்பவரே!

 வாங்குபவர்..!! -கடையில் சாக்லெட் வாங்குவதிலிருந்து, கால் கோடி கடன் வாங்குவது வரை – அனைவரும் வாங்குபவரே..!

இருவருக்குமிடையேயான உறவில்தான் ஒருவருடைய பணகுணம் நிர்ணயிக்கப்படுகிறது.

நம்மில் எத்தனையோ நண்பர்கள், உறவினர்களுடன் பல்வேறு காலகட்டங்களில் செலவுகளைப் பகிர்ந்துகொள்ளும் நிலை வரும். அது ஒரு உணவகத்தில் சாப்பிடும்போது இருக்கலாம். மொத்தமாக ஐந்தாறு குடும்பங்கள் ஒரு பிரயாணம் செய்யும்போது இருக்கலாம். இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் வெவ்வேறு தளத்தில் உள்ள ஒரு குழுவாகச் செல்லும் மனிதர்கள் தங்கள் செலவுகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.

இதிலும், ஒரு சில மனிதர்கள் உண்டு.

ஒரு கூட்டத்தில் எல்லோரும் செலவழிக்கட்டும். நாம் பேசாமல் இருப்போம். நமக்கான செலவு என்ன பெரியதாக ஆகிவிடப்போகிறது? அப்படியே ஆனாலும் வலுவாக இருப்பவன் செலவழிக்கட்டுமே என்று இருப்பார்கள். அதில் அதிகமாகச் செலவழிப்பவர் பைசா சுத்தமாக கணக்கும் கேட்கமுடியாது. திரும்ப வாங்கவும் கூசும். ஆனால், தனக்காகத்தானே செலவழித்தார்கள் என்று எண்ணி அந்த ஆளே தானாகத் தந்திருக்கவேண்டும் அதுவும் நடக்காது.

இதுவாவது பரவாயில்லை.

ஒருவருக்கு கஷ்டமான நேரத்தில் உதவுகிறேன் என்று தன்னிடமிருக்கும் கொஞ்சம் தொகையைக் கொடுத்துவிட்டு, அதே தொகை தனக்குத் தேவைப்படும்போது பிறரிடம் கையேந்தும் நிலையும் சிலருக்கு ஏற்படும். இதற்குக் காரணம். அந்த உதவியை அடைந்தவர், முன்னவரின் துன்பத்தைப்பற்றியே கவலைப்படாததும். இவரிடம் நிறைய காசு இருக்கும். நம்மிடம் திரும்ப வாங்கத்தான் நடிக்கிறார் என்று எண்ணி அவர் திரும்பக்கொடுக்கும் ஒரே விஷயம் டிமிக்கிதான்.!

எந்த ஒரு சூழலிலும் தன்னிடம் , திரும்பக்கொடுப்பதற்கு இப்போது பணம் இல்லை, குறிப்பிட்ட நாளுக்குள் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லும் நேர்மையான மனநிலை வந்தால்தான், அவரைப்பற்றிய பணகுணம் நல்லவிதமாக அமைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்றும்.. பல்வேறு பொய்க்காரணங்களிலும் தன் தரத்தை தாழ்த்திக்கொள்பவர்களின் பணகுணம் அவர்களைப் பற்றிய மோசமான அபிப்பிராயத்தை விதைத்துவிடுகிறது.

ஒருவரிடம் வாங்கும்போது இருக்கும் மனநிலை, அவருக்குக் கொடுக்கவேண்டும் எனும்போது இழுத்தடிக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி ஏற்படாமலேயே பல மனிதர்கள் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு மனிதன் தன் பணத்தை எந்த ஒரு சூழலிலும் ஏமாற்றப்பட்டோ, அநியாயமாகவோ இழக்க விரும்பாதவனாக இருந்தால் அவன் அதிகபட்சமாக அடுத்தவர் பணத்தை திரும்பக்கொடுத்துவிடுவான் எனக்கொள்க! (கேட்டால் கிடைக்கும் என்று போராடுபவர்கள் இந்த ரகம்தான்!) J


ஒரு நண்பர்கள் குழு டூர் செல்கிறதென்று வைத்துக்கொள்வோம். வண்டிக்கு பெட்ரோல் ஒரு நண்பர் போட்டிருப்பார். இறங்குமிடத்திலெல்லாம் தண்ணீர் பாட்டில், சிப்ஸ் என்று ஒரு நண்பர் வாங்கித்தள்ளிக்கொண்டிருப்பார். இடையில் உணவு சாப்பிடும்போது ஒரு நண்பர் சாப்பாட்டுக்குக் காசு கொடுப்பார். அதில் ஒருவர் மட்டும் ஒரு செலவும் செய்யாமல் வந்தால், மற்றவர்களுக்கு கொஞ்சம் வேகத்தான் செய்யும் அதே சமயம் குடும்பமாகச் செல்லும்போது, இவற்றை அனைவரும் பகிர்ந்துகொள்ளலாம் என்றுதான் முடிவெடுத்திருப்பார்கள். ஆனால் அதிலும் ஒரு குடும்பம் மட்டும் செலவே செய்யாமல் இருப்பதும் ஒருவிதமான சுயநல மனப்பான்மையே!

இது உன் பணம் என் பணம்… என் பணமும் என் பணம்! என்ற நிலை !

இது போன்ற சந்தர்ப்பங்களில், மொத்தமாகச் செலவு செய்ய ஒரு தொகையை ஒதுக்கிக்கொண்டு , எல்லாப் பொது செலவுகளையும் சேர்த்து, பின்னர் அந்தத்தொகையைப் பகிர்ந்துகொள்வதுதான் சிறப்பாக அமையும். அப்போதும் இன்னொரு பிரச்னை எழும். நான் அன்னிக்கு முட்டை தோசை சாப்பிடவே இல்லை. நானும் ஏன் அதுக்கு காசு தரணுமென்று சண்டைக்கு நிற்பார் ஒரு குடும்பத்தலைவி! இதையெல்லாம் சமாளித்து ஒரு சுற்றுலா செல்வதென்பது பெரிய காரியம்..!!

நான் வாங்குபவனாகவே இருக்கவேண்டும்.. கொடுப்பவனாக மாறமாட்டேன் என்பவர்களின் பணகுணம் அவர்களை கட்டாயம் குறைவாகவே மதிப்பிட வைத்துவிடுகிறது.

மேலும், நெருங்கிய சொந்தமாகவே இருந்தாலும், அடுத்தவர் சிரமப்படும் சூழலில், தன்னிடம் அதிகமாகப் பணம் இருந்தும் கொஞ்சம் கூடக் கொடுக்கும் மனநிலை இல்லாமல், ‘வெளியில் வேண்டுமானால் வட்டிக்கு வாங்கித்தரட்டுமா என்று கேட்டுவிட்டு,  அடுத்தவாரமே தனக்கென பத்து பவுன் அட்டிகை வாங்குபவர்கள் குணம் சொந்தத்துக்கிடையில் பல்லிளித்துவிடும். சிரமப்படும் நேரத்தில் நெருங்கிய சொந்தங்களுக்குக் கொடுப்பதும் உறவுகளை பலப்படுத்தும். அதே நேரத்தில், வாங்கியவர் கடனாக வாங்குகிறாரா, கொடையாக வாங்குகிறாரா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.!

இன்னொரு விதமான தன்மை இருக்கிறது.

எந்த ஒரு செலவாக இருந்தாலும் நான்தான் செலவழிப்பேன் என்பது… அத்தகைய மனிதர்கள் தங்கள் கருணை உள்ளத்தையோ, தங்கள் செலவழிக்கும் திறனையோ , அனைவரையும்விட தன்னிடம் அதிகப் பணம் இருக்கிறதென்று காட்டுவதற்காகவோ இதைச் செய்வார்கள்.
ஒரு உதவி என்று வரும்போது அவசரமாக ஒரு சிறு தொகையை கடனாக அவர்களிடம் பெற்றால், நியாயமாக திரும்பச்சென்று கொடுப்பவரையும் ‘வேண்டாம்’ உனக்கு நான் சும்மாத்தான் கொடுத்தேனென்று அவரைத் திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

அதேபோல், ஒரு பிரயாணத்தில், பெரும்பான்மையான செலவுகளைச் செய்வார்கள். அவருடன் பயணித்த யாராவது, தங்களுக்கான செலவைக் கொடுத்தால் திரும்ப வாங்க மாட்டார்கள். அவர்கள் நினைப்பது, நாம் மற்றவர்களுக்குச் செய்யும் செலவை திரும்ப வாங்கவேண்டியதில்லை என்பது.! இதில் பயன்பெற்ற ஒருசிலர், சரி! இந்தத் தொகை நமக்கு மிச்சம்தான் என்று நினைத்துக்கொள்வார்கள். ஆனால், அவரைப்போலவே கொடுத்துப் பழகியவர்களின் பணகுணம் அதனை ஏற்காது. அவர்கள் தனக்கான செலவை கொடுத்தே தீரவேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். இந்த முதல் மனிதர் செலவை வாங்கமாட்டார். அங்கு வேறுவிதமான வாக்குவாதம் அரங்கேறும்.

ஆனால், அத்தகைய மனிதர்கள், எதிராளியின் தன்மானத்தை உரசிப்பார்க்கிறார்கள் என்பதை எப்போதும் அறிவதில்லை.

நாம் சென்ற பிரயாணத்தில் நீங்கள் எனக்கும் சேர்த்து செலவழித்தீர்கள். எனக்கான தொகையை வாங்கிக்கொண்டால்தான் எனக்கு நிம்மதி என்று கேட்டால், ‘ உனக்கும் சேர்த்து நான் செலவழித்ததாக இருக்கட்டும்’ என்று பொருள்படும் வகையில் ‘வேண்டாம்’ என்று இவர்கள் மறுப்பது, பயனடைந்தவரை மிகவும் தாழ்வாக இவர் மதிப்பிடுவதாக அமைந்துவிடும். ‘நான் சம்பாதிக்கவில்லையா? என் செலவை பார்த்துக்கொள்ள எனக்குத்தெரியும் எனும் தன்மானம் ‘  வேறுவிதமாக வெளிப்பட்டு அது மனக்கசப்பாக மாறும் வாய்ப்பிருக்கிறது.

இத்தகைய மனிதர்கள் தங்கள் கொடுக்கும் குணத்தை கொஞ்சம் நீட்டி, தான் மட்டுமே கொடுப்பவராக இருக்கவேண்டும் என்று இறுமாப்புக் கொள்ளும்போது, இவரைப்போன்றே சிந்திக்கும் இன்னொரு மனிதரால் காயப்பட வேண்டியிருக்கிறது. இவர்கள்தான் முதலில் மற்றவர்களைக் காயப்படுத்தினார்கள் என்பதை மறந்தும் விடுகிறார்கள். மற்றவர்களை வலிய கையேந்திகளாக ஆக்குகிறார்கள் என்பதை விட்டு, தனது வள்ளல்தன்மையை நீட்டிக்கவே சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

வாங்கியே பழக்கப்பட்டவருக்கு பணத்தின் மீது இருப்பது ஈர்ப்பு – அது வெறியாக மாறி, மற்றவர் பணத்தையும் கொடுக்கவிடாமல் செய்கிறது.

கொடுத்தே பழக்கப்பட்டவருக்கு பணத்தின் மீது இருப்பது இறுமாப்பு – அது வெறியாக மாறி தன் பணத்தைக் கூட வாங்கவிடாமல் செய்கிறது.

முதல் பிரச்னையில் இரண்டு மிச்சங்கள்!
தன்னால் கொடுக்கப்படும் தொகை, திரும்பக்கிடைத்தால், பணம் மிச்சம்!
திரும்பக்கிடைக்காவிட்டால், எதிரி மிச்சம்!
கொடுத்த பணத்தைக் கேட்காவிட்டால் பணம் மிச்சம்.! கேட்டால், எதிரி மிச்சம்!

இரண்டாவது பிரச்னையிலும் இரண்டு மிச்சங்கள்!
தான் செலவழித்த தொகையை, திரும்ப வாங்கிக்கொண்டால் மரியாதை மிச்சம்…! மறுத்தால், மனக்கசப்பு மிச்சம்!
தனக்காக அடுத்தவர் செலவழித்த தொகையை திரும்பக்கொடுத்தால் மரியாதை மிச்சம்.! கொடுத்தவர் வாங்க மறுத்தால், மனக்கசப்பு மிச்சம்!

வாங்கியவர் முறையாகக் கொடுத்தால் போதும்!
கொடுத்தவர்  முறையாக வாங்கிக் கொண்டால் போதும்!

ஈர்ப்பும் இறுமாப்பும் இன்றி… நட்புடன் அணுகுவோம்..பணகுணம் மேம்படும்.!

Sunday, September 30, 2012

வலைப்பதிவர் திருவிழா – வாசற்படி நன்மைகள் # 2




பதிவர் சந்திப்பு நடந்தேறி, அதைப்பற்றிய நேர், எதிர் விவாதங்களும் சூடேறி, கொதித்து, அடங்கி் மீண்டும் அவரவர்கள் அடுத்த வேலைகளைப் பார்க்கச் சென்றுகொண்டிருக்கும் இந்நேரத்தில்..எனது அடுத்த பாகம்…

இந்தப் பதிவர் சமூகத்தை சமூகமும், ஊடகங்களும் ஒரு ஓரப்பார்வை பார்த்தபடிதான் உள்ளன. பதிவுலகத்துக்கென்று ஒரு சில பக்கங்களை ஒதுக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு புத்திசாலிகளின் ஒருங்கிணைப்பாகத்தான் பார்க்கின்றன. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை கணிப்பொறியில் வேலை பார்த்துக்கொண்டே , அதிலேயே கருத்துக்களையும், படைப்புகளையும் எழுதுபவர்கள் மிகவும் அறிவாளிகளாகவும், சமூக சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது அவர்களது கணிப்பு..!! பாவம்! J

உண்மையில் நம்மில் பலர், அப்படித்தான் இருக்கிறார்கள். சமூக அக்கறையுடனும், நியாயமான படைப்புகளுடனும் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், எதிர்வினைகளாலும், எதிரிவினைகளாலுமே காலம் கடத்தும் பதிவுகளையும் மற்றவர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். ஆனால் அப்படிப்பட்ட பதிவுகளை விலக்கிவிட்டுப் பார்த்தால், வலைப்பூக்கள் மிகப்பெரிய ஊடகமாக மிளிர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் எனக்குத்தெரிந்து கிட்டத்தட்ட  4500 பதிவுகள் வந்திருப்பதை கவனித்தேன். சராசரியாக தினசரி 150 பதிவுகள் ! ஒரு சிலர் தினம் எழுதுகிறார்கள். சிலர் ஒரு நாளிலேயே 2 பதிவுகள்!  சிலர் வாராவாரம் ! இதில் மாதம் 3,4 பதிவுகள் மட்டுமே எழுதும் என் போன்றவர்களும் அடக்கம்.! கண்டிப்பாக இது இன்னும் அதிகமாகத்தான் இருக்கும். ஆக ஒரே நாளில் 150 தனிக் கட்டுரைகள். அதில், அரசியல், சினிமா, நூல், சமூகம், அனுபவம் , சரித்திரம், ஆன்மீகம், குடும்பம், சமையல், தொழில்நுட்பம், இலக்கியம், படைப்புகள் என்று எல்லாமே அடக்கம். ஆக ஒரு பதிவுக்கு 2 பக்கங்கள் என்று ஒதுக்கினாலும், ஒவ்வொரு நாளும் சுமார் 300 பக்கங்கள் கொண்ட ஒரு இணைய இதழை நாமெல்லாம் சேர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறோம். அந்த இணைய இதழை எத்தனை பேர் புரட்டிப்பார்க்கிறார்கள் என்ற கணக்கு வழக்குக்குள் எல்லாம் நான் போகவில்லை. ஆனால், நம்மில் ஒவ்வொரு நாளும் 150 எழுத்தாளர்கள் வேலை பார்த்து இந்த கட்டமைப்பின் சுழற்சியை மேம்படுத்திக்கொண்டிருக்கிறோம்.


இதில் பல்வேறு விதமான துறை வல்லுநர்கள் சர்வசாதாரணமாக எழுதிக் குவிக்கிறார்கள். சில சிறப்பான தகவல்கள் நம்மிடையே அநாயாசமாகக் கடந்துபோகின்றன. ஆக மொத்தத்தில், இதுபோன்ற ஒரு அற்புத உலகம் கிடைத்திருப்பது நமது தலைமுறைக்கு ஒரு வரமென்றே திண்ணமாக எண்ணுகிறேன்.


அதையும் ஒரு குழுமமாக்க முயற்சித்து ஓரளவுக்கு வெற்றியும் பெற்றாகிவிட்டது. எந்தவொரு தனிமனிதனும் செய்யமுடியாததை ஒரு குழுமம் செய்யலாம் என்றுதான் சமூகம் என்ற கட்டமைப்பிலேயே சங்கங்கள், இயக்கங்கள், கட்சிகள் என்று வளர்ந்து அது அரசியலில் சங்கமித்து ஒரு தேசத்தையே நிர்வகிக்கும் நிலையை அடைந்திருக்கிறது. ஆகவே இந்தப் பதிவர் சமூகமும் குழுமமாக உருவெடுப்பது நன்மை பயக்கக்கூடியதுதான். ஆனால், யாருக்கு? எதற்கு? என்பதில்தான் ஆழமாக சிந்திக்கவேண்டியுள்ளது. அதை சிறப்பாகப் புரிந்துகொண்டால், இந்தப் பதிவர் குழுமம் மிகச்சிறப்பாகச் செயல்பட எல்லா வாய்ப்புகளும் வாசற்படியில் நிற்கின்றன.


நமது பதிவர் சமூகமும் என்னன்னவெல்லாம் செய்யலாம் என்று சிந்தித்தபோது கிடைத்த யோசனைகள் இவை : இவை தவிர , இதைவிட சிறந்த யோசனைகள் எல்லா வலைப்பதிவரிடமும் கிடைக்கும் என்பதிலும் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. முதலில்.. என்னமாதிரியான விஷயங்களைக் கையில் எடுத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.


தனிமனித வளர்ச்சி, சமூக வளர்ச்சி, இவை இரண்டுதான் இந்தக்குழுமத்தால் சாதிக்க முடிந்ததாக அமையும்.


முதலில்.. தனிமனித வளர்ச்சி:


ஒவ்வொரு பதிவரும் ஏதாவது ஒரு வேலையில் இருக்கலாம். தொழில் செய்யலாம். கலை வல்லுநராக இருக்கலாம். அவர்கள் தங்கள் வேலையில் என்னன்ன வளர்ச்சியை எட்டலாம் என்று முறையாக ஏற்பாடு செய்து பயிலரங்கங்கள் வைக்கவேண்டும்.

பதிவர்களின் Database ஒன்று தெளிவாக உருவாக்கி, அவர்களில் முகம்காட்ட விரும்புபவர்களிடம் முழுத்தகவல்களும் வாங்கி ஒரு கேள்வி பதில் தளம் உருவாக்கவேண்டும். எனக்கு ஒரு மைக்ரோவேவ் அவன் அல்லது நீர் சுத்திகரிப்பான் வாங்கவேண்டும் என்ற எண்ணம் வரும்போது அதைப்பற்றி விபரம் சொல்ல ஒரு பதிவரை நான் அணுகும் வகையில் குழுமத்திடம் தகவல்கள் இருக்கவேண்டும். அந்தத்தளத்தில் என் கேள்விக்கு அந்தப் பதிவரிடம் பதில் வாங்கிப் போடவேண்டும். இது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு மிகவும் பயனுள்ள தளமாக மாற 100 சதவீத வாய்ப்பு உள்ளது.

கேள்விகளை ஒரு வலைப்பூவுக்கு அனுப்பினால், பதிலை குழுமமே வாங்கிப்போடவேண்டும். அல்லது புதிய வல்லுநர் ஒருவர் தன்னார்வத்துடன் வந்து பதில் போடவேண்டும்.

தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் பதிவர் சந்திப்புகளை குழுமம் ஊக்குவிக்கவேண்டும். அப்போது எந்தந்த ஊரில் எத்தனை பதிவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். (அதுவே தீர்மானமான தகவல் அல்ல! ) அதன்மூலம் அந்தந்த ஊர்களுக்குச் செல்லும்போது பதிவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளலாம். அந்த ஊரில் தனக்கு நடைபெற வேண்டிய வேலையில் உதவிகள் பெற்றுக்கொள்ளலாம். இது இப்போது தனித்தனியாக பழகிய பதிவர்களுக்கிடையே நடந்துகொண்டிருக்கிறது. இதுவே ஒரு குழுமத்தின் குடையின் கீழ் வந்தால் இன்னும் சிறப்பாகச் செயல்படும். (இதில் கடன், கொடுக்கல் வாங்கல்களுக்கு கம்பெனி பொறுப்பாகாது எனக்கொள்க!)

இன்னும் தனிமனித வளர்ச்சியில் சொல்லவேண்டியது நிறைய இருக்கிறது.. அடுத்த பாகத்தில் பார்ப்போமே..

Thursday, September 27, 2012

அகவை 70ல் அப்பா!


    



     எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் அவரை நான் பார்த்துவருகிறேன். ஒரு சாதாரணக் குடும்பத்தில் இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகள், ஒரு தம்பியுடன் பிறந்து ஒரு அரிசி மில்லில் வேலைபார்த்துக்கொண்டே படித்து, பின்னர் பள்ளிக்கல்வியை மிகுந்த சிரமத்துக்கிடையே முடித்து, ஆசிரியக்கல்வியும் கற்று, ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றத்தொடங்கி, பின்னர் மாநில அரசின் ஊரக வளர்ச்சித்துறையில் கிராமசேவக் எனப்படும் பணியில் நிலைபெற்று வாழத்துவங்கி ஊராட்சி ஆணையராக பணி ஓய்வு பெற்றவர் அவர்.!

     என்னிடம் அதிகம் பேசுபவரில்லை. நிறைய அறிவுரைகளும் சொல்பவரில்லை. நான் என்ன செய்யக்கூடாtது என்று பட்டும் படாமல் சொல்லிச் செல்வார். சிறுவயதில் இவர் எனக்கு சிம்ம சொப்பனம்.

அரசாங்க ஊழியராய் இருந்துகொண்டு லஞ்சம் வாங்காமல் இருந்தவர். ஒருமுறை லஞ்சம் கொடுக்க வந்த ஆளை அடிக்கச்சென்றவர்.

அந்த மனிதரிடமிருந்த நேர்மைதான் என்னை மிகவும் வியப்பிலாழ்த்தியது. எந்தக்காலகட்டத்திலும் அவர் நேர்மையை விட்டுக்கொடுத்து நான் பார்த்ததே இல்லை. தவறு யார் செய்திருந்தாலும், தைரியமாக தட்டிக்கேட்கும் உறுதி கொண்ட மனிதர்!

எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதன் ஆழம் வரை சென்று நன்கு கற்றறிந்து , பின்னர் விவாதிக்க ஆரம்பித்தால், மாற்றுக்கருத்துச் சொன்னவரை மண்டியிட வைத்துவிடுவார்.

பிறருக்கு உதவுவதில் இவரைப் பார்த்து அதிசயித்திருக்கிறேன்.

“எந்த வீட்டு சந்தோஷத்துல கலந்துக்கலைன்னாலும் பிரச்னை இல்லை. அவங்க சங்கடத்துல கட்டாயம் கலந்துக்கணும்! அவங்களுக்கு கஷ்டம்னு வந்தா உதவ நாம் இருக்கோம்னு நினைக்கணும்!” என்று சொல்லி அதன்படியே செய்து காட்டியவர்!

அவரது சகோதர, சகோதரிகளும் அவரிடம் அதீத அன்புகாட்டுபவர்களாக அமைந்ததுதான் இன்னும் சிறப்பு ! இன்றுவரை அவர்கள் 6 பேரின் அன்பு மாறாமல், மிகவும் ஒற்றுமையாக இருப்பதைக் கண்டு வியந்துகொண்டிருக்கிறேன்.

தனது பெற்றோரிடம் மிகவும் அன்புகாட்டினார். பெற்றோருக்காக தனது 10 ஆண்டுகால பணிமூப்பை விட்டுக்கொடுத்துவிட்டு வந்தார்.

இரவு  9 மணிக்கு வீடு திரும்புவார். தந்தைக்கு அன்றிரவு உண்ண வாழைப்பழம் இல்லையென்றால், உடனே சென்று வாங்கித்தந்துவிட்டுத்தான் தனக்கான உணவை உண்ணுவார்.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, நடமாட இயலாமல் இருந்த 85 வயதான தாய்க்கு , தானே ஒரு தாயாக மாறி எல்லா உதவிகளையும் ஒரு குழந்தைக்குச் செய்வதுபோல் செய்தவர்.


செல்வம் பெரிதாக இல்லையென்றாலும், செல்வந்தர் மனநிலை என்னவென்று செயலில் காட்டியவர். வீட்டில் சில்லறைக்கென்று ஒரு சின்ன டப்பா, பணத்துக்கென்று ஒரு பெரிய டப்பா வைத்து யார் வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கான கணக்கு மட்டும் எழுதினால் போதும் என்று, பொருளாதார சுதந்திரத்தை மிகவும் அற்புதமாக உணர்த்திக்காட்டியவர்.! இன்றுவரை தான் செய்த செலவுகளுக்குக் கணக்கு எழுதிக்கொண்டிருப்பவர். 88ம் வருடம் திருச்சியிலிருந்து சென்னை வர எவ்வளவு செலவானதென்றும், மற்ற அத்தியாவசியப்பொருட்களின் விலைவாசி பற்றியும் இவரது கணக்குப்புத்தககம் கதைகளாய்ச் சொல்லும்.

50 ரூபாய் செலவாகும் இடத்துக்கு 100 ரூபாய் எடுத்துச்சென்றால் தவறில்லை. 49 ரூபாய் எடுத்துச்செல்வது முட்டாள்தனம் என்று தெளிவாகச் சொல்லுவார். அவர் செலவுக்கு அஞ்சி நான் பார்த்ததே இல்லை. தனக்காகப் பிறர் செலவழிப்பதை ஏற்றுக்கொள்ளாதவர்.

அவரது எழுத்து மிகவும் அழகாக இருக்கும். தன்னுடைய அலுவலகக் குறிப்பை , ஒரு சிற்பியின் நேர்த்தியுடன் கையாள்வதைப்பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன். அவரது அலுவல் நாட்களில் அதிகாலை 6 மணிக்குக் கிளம்பிச்சென்று, இரவு  11 மணிக்குத்தான் வீடு திரும்புவார்.

மிகுந்த கவனம் வாய்ந்தவர். ’
பொருட்களை நேர்த்தியாக வைத்துக்கொள்ளத்தெரிந்தவர்
காலத்தை சிறப்பாக நிர்வகிப்பவர்.
ஓவியம் தெரிந்தவர்!
நாடக நடிகர்!
வேலை பார்த்த ஊரில் சிறியதாக மெஸ் நடத்தியவர்
நிறைய பயணம் செய்திருக்கிறார். தமிழகத்தின் அனைத்து ஊர்களைப்பற்றியும் நிறைய தகவல் தெரிந்தவர்.
சகோதர, சகோதரிகளை மிகவும்  நேசிப்பவர்!
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புபவர்


தனது கருத்தை ஆழமாகவும், அழுத்தமாகவும், கொஞ்சம் ஆக்ரோஷமாகவும் வைக்கத்தெரிந்தவர்..

மகனை எந்த வயதுவரை கட்டுப்படுத்தலாம். எந்த வயதுக்குமே சுதந்திரமாக விடலாம் என்று தெளிவாகத் தெரிந்தவர்

இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அத்தனைக்கும் அவர்தான் காரணம்.!

நான் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு வந்து வீட்டில் சொன்னபோது, மிகவும் நிதானமாக “ இந்த வயசுல நல்லா பிரயாணம் பண்ணி நாலு எடத்தைப் பாத்துட்டு வா! “ என்று வித்தியாசமாக வாழ்த்தியவர்.

திருமண வயதில், ‘ நீ ஏதாவது பொண்ணை பாத்து வச்சிருக்கியா? சொல்லுடா! என்று காதலுக்கு மரியாதையாகக் கேட்டவர்.

நான் எது செய்வதாக இருந்தாலும். தடை சொல்லாமல், ‘மகன் செய்தால் சரியாகத்தான் இருக்கும்’ என்று என்னை நம்பி அப்படியே என்னை ஏற்றுக்கொண்டிருப்பவர்..!!

என் குழந்தைகளிடம் பேரன்பு கொண்டிருப்பவர்..! தாத்தாவிடம் சொன்னால் கிடைத்துவிடும் என்று அவர்களை நம்பவைத்திருப்பவர்!


இன்று என்னிடம் இருக்கும் அத்துனை நற்குணங்களுக்கும் அவர்தான் பொறுப்பு!

அவருக்கு நேற்று அகவை 70 நிறைவடைந்து 71ல் அடியெடுத்துவைத்தார்.
என்னால் முடிந்த வரையில், சிறியதும் பெரியதுமாக 70 பொருட்கள் வாங்கி அவருக்குப் பரிசளித்தேன். பெருமையாக அனைவருக்கும் தொலைபேசிச் சொன்னார் !!


சிறுவயதில் அதிக கண்டிப்பு…!
கொஞ்சம் வளர்ந்த பருவத்த்தில் மிதமான கண்டிப்பு!
கல்லூரிக்குச் செல்லும்போது லேசான மேற்பார்வை!
வேலைக்குச் சென்றபின் தூரத்திலிருந்து ரசிப்பு!
நிறுவனம் நடத்தும்போது உற்றாரிடம் பெருமை!
இப்போது செய்யும் ஒவ்வொரு செயலிலும் தனது வாழ்த்துக்களைச் சொல்லி ஊக்குவித்தல் என..
ஒரு சிறப்பான ஊட்டச்சத்து உணவுபோல் இருக்கும் இந்த அற்புத மனிதரைத்  தந்தையாகப் பெற்றதுதான்  என் பேறு!





Saturday, September 1, 2012

முகமூடி.. – பாத்துட்டோம்ல..!






மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி திரைப்படத்துக்கான டிக்கெட்டை’ அன்புடன் கொடுத்த ஒரு திரையுலகப் பிரபலத்துக்கு எனது நன்றி..!

12 மணி காட்சிக்குச் சென்றேன். கமலா தியேட்டர் நிரம்பி வழிந்தது. ‘நான்’ திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள் நிறைய இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

நான் இணைய ஆதாரத்தைக் காட்ட, எனக்கு ஒரு டிக்கெட் கொடுத்தார்கள். என்னவோ நாந்தான் முகமூடி போல ஒவ்வொருவரும் நாலுமுறை டிக்கட்டைப் பார்த்து செக் செய்தார்கள்.

போய் இருக்கையில் அமர்ந்தேன். படம் பார்த்தேன்.

வில்லனின் பெயரும், ஜீவாவின் அப்பாவின் பெயரும் நரேன் என்று இருப்பதை இரசித்தேன். சிலருக்கு அப்பாதான் வில்லனே..!!

 எனது நண்பரும், மிஷ்கினின் இணை இயக்குநருமான தெய்வா கை நிறைய பாட்டிலை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராகக் கொடுத்துக்கொண்டே வந்து கடைசியில் ஜீவாவுக்கும் ஒரு பாட்டில் கொடுத்ததை இரசித்தேன்.

போதிதர்மர் கற்றுக்கொடுத்ததை, ஜீவா நினைவுபடுத்திக்கொண்டிருந்ததை இரசித்தேன்.

நரேன் வைத்திருந்த ஹார்டுவேர் கடையையும் அதன் உபதளவாடங்களையும் இரசித்தேன்.

அம்பாசிடர் வைத்திருப்பவர்கள்தான் ரோட்டில் வாழைப்பழத்தோலை போடுவார்கள் என்ற கூற்றை இரசித்தேன்.

அன்புநிறை மனிதரும், அதீத நூலறிவும் கொண்டவரான சச்சிதானந்தம் அய்யாவை இரசித்தேன்.

பன்னீர்சோடா குடிக்குமிடத்தில் இருந்த ட்யூட்களை இரசித்தேன்.

குங்ஃபூ பள்ளியில் படிப்பவர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள் என்ற பொதுமையை இரசித்தேன்.

இடைவேளையில் வந்திருந்தவர்களை இரசித்தேன்.  


இடைவேளை வரை சூப்பர் என்று டிவிட்டினேன். அதை முகப்புத்தகத்தில் லைக்கியவர்களை இரசித்தேன்.


என் அருகில் அமர்ந்திருந்தவர் ஆண்ட்ராய்டில் ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாடியதை இரசித்தேன்.

ஒரு சண்டைக்காட்சியில்… செல்வாதான் சூர்யா… நரேந்தான் டாங் லீ என்று மக்கள் ஏழாம் அறிவை இன்னும் நினைவூட்டியதை இரசித்தேன்.

எனக்கு பின்பக்கம் இருந்த ஜோடி முகமூடியே இல்லாமல் இருந்ததை இரசித்தேன். ( அந்தப்பையன் எனக்குத் தெரிந்தவரின் மகன் என்பதையும் சேர்த்து..)

இடைவேளைக்குப்பிறகு ஏ.சியில் வந்த தூக்கத்தையும் இரசித்தேன்.

படம் முடிந்து வெளியில் வந்தேன். ‘நான்’ திரைப்படம் ஃபுல் என்றார்கள். மிகவும் இரசித்தேன்.




பதிவுலகில் இதுபோன்று முகமூடி அணிந்துகொண்டிருந்துவிட்டு, இப்போதுதான் முகத்தைக் காட்டியிருப்பவர் ‘ சேட்டைக்காரன் அண்ணன் அவர்கள்.

அவர் பதிவர் சந்திப்பில் பேசும்போது. நான் தமிழ் இலக்கியத்துக்கு சேவை செய்கிறேன். ஏனெனில் நான் கவிதை எழுதுவதில்லை என்று சொன்னதை இரசித்தேன்.

அவருக்குக் கிடைத்த வரவேற்ப்பைப் பார்த்து, முகமூடி என்பது முக்கியமில்லை. நாம் அதைப்போட்டுக்கொண்டு என்ன செய்கிறோம் என்பது முக்கியம் என்பதை உணர்ந்தேன்

இப்போதும் பதிவுலகில் முகமூடியோடு திரியும் வவ்வால் வெளிவரும் நாளை எதிர்பார்க்கிறேன்..
.
முகமூடி படத்தைப் பற்றி நான் விமர்சிக்கவில்லை..நான் இரசித்தவைகளை மட்டுமே கூறியிருக்கிறேன். மிஷ்கினுக்கும் திரை சறுக்கும் அவ்வளவுதான்...ஆனால் மிஷ்கின் திறமைசாலிதான்!

Wednesday, August 29, 2012

வலைப்பதிவர் திருவிழா – வாசற்படி நன்மைகள் 1




சென்னை வலைப்பதிவர் திருவிழா இனிதே நிறைவுற்றிருக்கிறது. அதனை திறம்பட நடத்தி , வெற்றிகண்டிருக்கிற அத்துனை உள்ளங்களுக்கும் நம் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்வு பதிவூடகம் கொஞ்சம் மேலதான்  (க்ளிக்கிப் பாருங்கள்...காரணம் தெரியும்..) என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது.

     பதிவர் திருவிழா, ஒரு குடும்ப விழாவின் நேர்த்தியோடு நடந்தது.

ஒரு பாடலாசிரியர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்.
ஒரு மூத்த புலவர் வழிநடத்துகிறார்
ஒரு மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஒத்துழைத்து, ஒருங்கிணைக்கிறார்.
சில கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்கள் நிகழ்ச்சி அமைப்பின் முக்கியப்பங்கு வகிக்கின்றனர்.
ஒரு மென்பொருள் நிறுவன அதிபர் வந்தோரை வரவேற்கிறார்.
ஒரு பெண் கவிஞர் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் உறுதுணையாக இருக்கிறார்.
ஒரு கணக்காளர் தொடர்புகளை வலுப்படுத்துகிறார். சிறப்பு விருந்தினரை ஏற்பாடு செய்கிறார்.
ஒரு தனியார் நிறுவன அதிகாரி மேடையைப் பார்த்துக்கொள்கிறார்.
ஒரு திரைப்பட இயக்குநர் , சகஜமாக பதிவர்களை அறிமுகப்படுத்துகிறார்.
ஒரு ஒளிப்பதிவாளர் , இயல்பாக எல்லோரிடமும் பழகி, மேடையை அலங்கரிக்கிறார்.
ஒரு பதிப்பாளர், விளம்பரப்பட இயக்குநர், எழுத்தாளர் ஆகியோர் மிகச் சாதரணர்களாக அரங்கில் வந்து அமர்ந்திருக்கிறார்கள்.
ஒரு புத்தக விற்பனையாளர் நிகழ்ச்சி நடைபெற உறுதுணையாக இருக்கிறார்.
ஒரு மருத்துவர் சிறப்பாகக் கவிதை பாடுகிறார்.
ஒரு மனிதவளப் பயிற்சியாளர் நிகழ்ச்சியைத் தொகுக்கிறார்.
ஒரு மூத்த கணக்காளர், கவிதை வாசிக்கிறார்.
ஒரு புகைப்படக்கலைஞர் புன்னகையுடன் உபசரிக்கிறார்.
ஒரு உணவக நிறுவனர் உணவு ஏற்பாடு செய்கிறார்.
ஒரு மேலாண் அதிகாரி இருக்கை எடுத்துப்போடுகிறார்.
ஒரு மென்பொருள் வித்தகர் உணவு பரிமாறுகிறார்.
ஒரு கல்லூரிப்பேராசிரியை கவிதை வழங்குகிறார்.
ஒரு கதைசொல்லும் பாட்டி பாராட்டுப்பெறுகிறார்.
ஒரு முதுபெரும் எழுத்தாளர் கௌரவிக்கப்படுகிறார்.
ஒரு போக்குவரத்து நிறுவன நிர்வாகி நன்றி கூறுகிறார்.

     இது, ஒரு ஒற்றுமையான குடும்பத்தில் மட்டும்தான் நடக்கும். அப்பா,அண்ணன், தம்பிகள், மாமன்,மச்சான் என்று வெவ்வேறு பதவிகளில் இருந்தாலும் ஈகோ துறந்து, அனைவரும் இறங்கி வேலைபார்ப்பார்கள். அதுவும் இப்போது மறைந்துவிட்டது. அனைத்தையும் ஒரு கேட்டரிங் கம்பெனியிடம் கொடுத்துவிட்டு ஜாலியாக வந்துசெல்கிறார்கள். ஆனால், இந்தப்பதிவர் சந்திப்புத் திருவிழா மிகவும் நேர்த்தியாக, ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் தன் பங்களிப்பை கொஞ்சம்கூட ஈகோ இன்றி தந்ததுதான் இந்த நிகழ்வின் மிகப்பெரிய வெற்றி என்பேன்.

சரி.. எல்லோரும் ஒன்று கூடிவிட்டோம். நன்றாக விழா நடத்திவிட்டோம். எல்லோரையும் அறிமுகப்படுத்திவிட்டோம். மீண்டும் அடுத்த ஆண்டும் விழா நடத்துவோம். அதிலும் கவிதைகளை அரங்கேற்றுவோம். அற்புதமாகக் கொண்டாடுவோம். எல்லாம் சரிதான்.

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் சொன்னதுபோல், பதிவூடகம் மட்டுமன்றி இன்னும் பல ஊடகங்கள் நம்மைப் பார்த்துக்கொண்டுள்ளார்கள். நம் போக்கு எப்படி இருக்கிறது என்று நாடிபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக மட்டுமன்றி, இந்தச் சமூகத்துக்கோ, குறைந்தபட்சம் நமக்கோ என்ன செய்யப்போகிறோம்? செய்துகொள்ளப்போகிறோம்.?

     நாம் அனைவரும் குறைந்தபட்ச அறிமுகம் ஆகியிருக்கிறோம். என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்று எல்லோரையும் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்திருக்கிறோம். எழுதும் கருத்தை வைத்து, ஆட்களை நாமே கற்பனை செய்துவிட்டு, எதிரில் பார்த்தவுடன், வியந்திருக்கிறோம். ஏமாந்திருக்கிறோம். சிரித்திருக்கிறோம். ( எடுத்துக்காட்டு – சேட்டைக்காரனைப் பார்த்துவிட்டு மெர்சலாகியவர்கள் . சேட்டை நாஞ்சில் வேணு அண்ணனை நான் கற்பனையே செய்துவைக்காததால், அவரை அப்படியே ரசித்தேன்)

     இவையெல்லாம் மீறி, இந்த அறிமுகங்களும், இந்தக் குழு நடவடிக்கைகளும் என்ன செய்யப்போகிறது? என்று கொஞ்சம் யோசிப்பது அவசியம் என்று எண்ணுகிறேன். ஏனெனில், பதிவர் சமூகம் மட்டும்தான், வெவ்வேறு தளத்தில், வேலையிலும், திறமையிலும் பல நிலைகளில் உள்ளவர்கள் வலைப்பூ என்ற ஒற்றை ரசனையில் ஒன்றுபட்டு, நட்புகளாய், உறவுகளாய் மாறி நின்று, ஒரு வலிமையான அமைப்பாக உருவாகிக்கொண்டிருக்கிறது.


 இவற்றைப் பயன்படுத்தி நாம் என்னன்ன சாதிக்கலாம்..?

     அலசுவோம் வாருங்கள்….           (தொடரும்)





நிகழ்வைப்பற்றி நிறைய பேர் மிகவும் பாராட்டி எழுதியிருக்கிறார்கள்.
அவைகளில் சில...


http://veeduthirumbal.blogspot.com/2012/08/blog-post_27.html

http://www.valaimanai.in/2012/08/blog-post.html

http://www.rahimgazzali.com/2012/08/blogger-meeting_27.html

http://kudanthaiyur.blogspot.in/2012/08/blog-post_27.html

http://www.tamilvaasi.com/2012/08/tamil-bloggers-meet-2012-at-chennai.html

                  


Friday, August 24, 2012

இரண்டு பஸ்களும் ஒரே தீர்வும் !



சென்ற ஜூலை முதல் வாரத்தில், கேட்டால் கிடைக்கும் குழும உறுப்பினர் சண்முகம் அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதன் சாராம்சம் இதுதான்:



   கடந்த ஜூலை 1ம் தேதி இரவு அவர் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் ஏறவேண்டும். ஆகவே அன்று காலையில் புறப்பட்டு சேலத்திலிருந்து சென்னை வருவதற்காக Redbus.com ல் பஸ்ஸில் வர டிக்கெட் முன்பதிவு செய்கிறார். அதன்படி பஸ் காலை 11 மணிக்கு கிளம்பும் என்று தெளிவாகப் போட்டிருக்கிறது. அவரும் பத்து மணிக்கெல்லாம் கிளம்பி ஏறவேண்டிய இடத்துக்கு வந்து நின்றுகொண்டு, பஸ் கம்பெனிக்கு போன் செய்கிறார். அவர்களும் 11 மணிக்கு வந்துவிடும் காத்திருங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் 11 மணி தாண்டியும் வண்டி வந்த பாடில்லை. மீண்டும் கம்பெனிக்கு போன் அடித்து , நான் காத்திருக்கிறேன் பஸ் வரவில்லையே என்கிறார். அப்போதுதான் அவர்கள் அந்த குண்டைப் போடுகிறார்கள். நீங்கள் செல்லவேண்டிய பஸ் இரவு 11 மணிக்குத்தான் கிளம்புகிறது. இப்போது ஏன் காத்திருக்கிறீர்கள்?. அதிர்ச்சியடைகிறார். மீண்டும் ரெட்பஸ்ஸின் டிக்கெட்டைப் பார்க்கிறார். தெளிவாக 11AM என்று போட்டிருக்கிறது. ரெட்பஸ்ஸுக்கு போன் செய்து விசாரிக்கிறார். அவர்களிடம் சரியான பதிலில்லை. தனக்கு நேரமாகிவிட்டது என்று உடனே ஒரு டாக்ஸி பிடித்து 6000 ரூபாய் கொடுத்து சென்னை வந்து சேர்கிறார்.

அவர் அமெரிக்கா சென்றபின் , இதை எனக்கு ஜூலை 4 அன்று மின்னஞ்சல் அனுப்புகிறார்.

நானும், அவரிடம் தேவையான ஆவணங்களை வாங்கிக்கொண்டு, ரெட்பஸ்ஸின்  support@redbus.in  க்கு ஒரு மின்னஞ்சல் ஜூலை  5ல்  அனுப்பினேன்.

முழு விபரத்தையும், சுருக்கமாகச் சொல்லி, தவறான தகவலுடன் டிக்கெட் புக் செய்தது உங்கள் தவறு.! அவரது பயணச்செலவுக்கு நீங்கள்தான் பொறுப்பு.! இந்த விஷயத்தை உடனடியாக தீர்க்கவில்லையெனில்… ரெட்பஸ்ஸுக்கு எதிராக சுமார் 1500 மின்னஞ்சல்கள் ஒரே நாளில் வரும் என்றும்.. இது சம்பந்தமாக சட்டப்படி அணுகுவதற்குமுன் ஒரு நல்ல முடிவை எடுங்கள் என்று ஒரு நுகர்வோரின் சார்பாகவும், ஒரு குழுமத்தின் நிர்வாகியாகவும் எழுதியிருந்தேன்.

ஜூலை  10 ம்தேதி அன்று ரெட்பஸ்ஸின் Alok Goel - Chief Product Officer, சண்முகம் அவர்கள் செலவழித்த தொகை அனைத்தையும் திரும்பத்தருவதாகச் சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டார். அதாவது ரூபாய் 6000 +700 = 6700.

கேட்டால் கிடைக்கும் என்று போராடியதால்தான் சாதிக்க முடிந்தது என்று சண்முகம் மிகவும் மகிழ்ச்சிப்பெருக்குடன் நன்றி சொல்லி மின்னஞ்சலிட்டார்.

முடிந்தது.

அடுத்து..


மயில்சாமி அவர்கள் கடந்த ஆகஸ்டு 12ம் தேதி திருச்சியிலிருந்து சென்னை வர அபி&அபி ட்ராவல்ஸ் பஸ்ஸுக்காக, MAKEMYTRIP.COMல் நான்கு டிக்கெட்கள் புக் செய்திருக்கிறார். அவர்களுக்கான பஸ்ஸில் ஏறும்போதுதான் தெரியவருகிறது. அவர்களது சீட்டில் வேறு சிலர் அமர்ந்திருப்பது…! அதை அபி & அபியிடம்  கேட்டபோது, ‘இந்தப்பயணிகள்தான் எங்களிடம் புக் செய்தவர்கள்’ நீங்கள் வைத்திருக்கும் டிக்கெட் எங்கள் டேட்டாபேஸில் ஆகஸ்ட் 22ம் தேதிக்கானது. நீங்கள் சொல்லும் MAKEMYTRIP.COMக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இந்தப் பிரச்னை இவர்கள் 4 பேருக்கு மட்டுமல்ல. இதேபோல் 15 பேர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், இரக்கப்பட்டு, அபி&அபி மீண்டும் பணம் வாங்கிக்கொண்டு ஒரு சிறப்பு(!) பேருந்தை சென்னைக்கு இயக்கியிருக்கிறார்கள். மிச்ச டிக்கெட்டை பஸ் ஸ்டாண்டில் சென்று நிரப்பிய கதை தனி! ஆக.. மிகவும் போராடி சென்னை வந்து சேர்ந்திருக்கிறார். மேலும், மேக் மை ட்ரிப்பை அணுகி பேசியபோது சரியான பதில் சொல்ல ஆள் இல்லை. அல்லது இதோ அதோ என்று இழுத்திருக்கிறார்கள். பின்னர் ஆகஸ்டு 18 அன்று என்னிடம் பேசினார்.
இது முழுக்க முழுக்க MAKE MY TRIP ன் தவறுதான். அவர்கள்தான் நஷ்டத்தை ஏற்கவேண்டும் என்றேன். மேக் மை ட்ரிப்புக்கும் தனக்கும் எந்த ஒரு நேரடித் தொடர்பும் இல்லை என்று அபி& அபியிடம் ஒரு மின்னஞ்சலும் வாங்கியாயிற்று.!
அதன்படி அந்த அனைத்து ஆதாரங்களையும் இணைத்து,  அவரும் ஒரு மின்னஞ்சல் அனுப்ப, நானும் ஆகஸ்டு 21ம் தேதி காலையில் busservice@makemytrip.comக்கு எப்பவும்போல, விளக்கம்சொல்லி, நுகர்வோரின் பலம் சொல்லி, மேக் மை ட்ரிப்புக்கு எதிராக ஆன்லைனில் போராட்டம் நடத்தப்படும் என்று லைட்ட்ட்டாக மிரட்டி, .ஒரு மின்னஞ்சல் அனுப்ப..

அடுத்த நாளே மயில்சாமி போன் செய்தார்.

”தேங்க்யூ சுரேகா! மேக் மை ட்ரிப்பிலிருந்து எங்கள் டிக்கட் பணத்தை திரும்பத் தருவதாக மெயில் வந்திருக்கிறது.” என்றார்.

இதுவும் முடிந்தது.


     
       நானும், கேபிளும் எதேச்சையாக செய்யும் விஷயத்தை எல்லோரும் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டதன் விளைவு இன்று பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்பதை நினைக்கும்போது பெருமையாய் இருக்கிறது.

   நமது தனிமனித தட்டிக்கேட்கும் குணம் குறைந்து போயிருப்பதால்தான் இதுபோன்ற அமைப்புக்கள் தேவைப்படுகின்றன என்று நினைக்கும்போது வெட்கமாகவும் இருக்கிறது.

  எங்கள் ஊரில் மிகப்பெரிய அன்னதானக்கூடம் இருக்கிறது 1 லட்சம் பேர் தினமும் சாப்பிடுகிறார்கள் என்று சொன்னால் அது பெருமை இல்லை. 1 லட்சம் பேர் பட்டினியாக இருந்திருக்கிறார்கள் என்றும் அர்த்தப்படும். எனினும்..

  தொடர்ந்து போராடுவோம். நம் ஊரின் சாக்கடை நாற்றத்துக்கு செண்ட் அடிக்கமுடியாது. இறங்கித்தான் அள்ளவேண்டும்.

கை கோர்ப்பவர்களுக்கு மீண்டும் நன்றி!


இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...