Monday, February 16, 2009

அப்துல்லாவின் ஆணையை ஏற்று..!


நம்ம அப்துல்லாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பதிவூடகத்தைப்பற்றி, அதன் உறவு மேன்மைகளைப்பற்றி மனமார சிலாகித்துக்கொண்டிருந்தார்! 
நானும் என் பங்குக்கு விலாவாரியாக விளக்கிக்கொண்டிருந்தேன். இதைப்பத்தி ஒரு பதிவு கூட போட்டிருக்கேன்ன்னு சொன்னேன்.
அப்ப மீள்பதிவா போடுங்க புது மக்கள்லாம் படிப்பாங்கன்னு சொன்னதால...

(எழுத மேட்டரோ நேரமோ இல்லைங்கிறது..வேற விசயம்..! அதை வெளீல சொல்வோமா?)

பதிவூடகம் - கொஞ்சம் மேலேதான்.!

எல்லாவகை ஊடகங்களையும் நாம் கடந்துவந்து இங்கே இளைப்பாற தொடங்கியிருக்கிறோம்.எல்லாவற்றிலும் இல்லாத சிறப்பு இதில் இருப்பதை உணர்கிறேன்.

ஒரு படைப்பாளியின் மகிழ்ச்சி, அதை இரசித்தவர்கள், பார்த்தவர்களின் பாராட்டுதல்களில் உள்ளது. ஒரு முதிர்ச்சியடைந்த படைப்பாளிக்கு விமர்சனத்தையும் நல்லதாக எடுத்துக்கொள்ளமுடியும். 

ஒரு புத்தகத்தில் (வெகுஜன பத்திரிக்கையில்) எழுதினால். அது எழுதியது ஒரு காலமாக இருக்கும். அது பிரசுரிக்கப்படுவது மறு காலம். அதன் பிறகு படித்தவர்களில் 2% க்கும் குறைவானவர்கள், விமர்சனமோ பாராட்டோ, அந்த பத்திரிக்கைக்கு எழுதுவார்கள். அதற்கு இவரால் பதில் போட முடியுமா என்பதும் சந்தேகமே!

அதேபோல், வானொலி - இதில் கேட்ட நிகழ்ச்சிகளுக்கான விமர்சனத்தையோ, பாராட்டையோ, உடனே அனுப்பினாலும் அவர்கள் எப்போது அதை படிப்பார்கள் என்று கூற முடியாது. அப்போது நாம் கேட்டால் நமக்கு கொஞ்சம் மகிழ்ச்சி..ஆனால் அதை வழங்கியவரிடமிருந்து பதில் கிடைப்பது மிகவும் அரிது ! (ஆனால் அந்த விமர்சனமும் நம்ம குரலில் , நாம் பேசுவதாக இருக்காது)

தொலைக்காட்சி - அதில் ஒரு நிகழ்ச்சி வழங்கினால். அதன் பின்னூட்டம் அவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்துவிடாது. அப்படியே வந்தாலும் , வார இறுதி விடுமுறை முடித்து...ஊரைச்சுற்றிவிட்டு, அசந்து தூங்கப்போகும் நேரத்தில் அரைமணிநேரம் படிக்கப்ப்டும். வழங்கியவர்களின் பதில்? ம்ஹூம்...
மறந்துட வேண்டியதுதான்.! (நாமே கேமரா முன் அமர்ந்து நம் விமர்சனத்தை படிக்க முடியாது)

சினிமா - படைப்பை வெளியிட்டு விட்டு காத்திருப்பார். விமர்சிக்கலாம். இதற்காக ஒரு சினிமாவே எடுக்கமுடியாது. மற்ற ஊடகங்களில்தான் விமர்சிக்கமுடியும். அதற்கும் அவரும் வேறு ஊடகங்கள் மூலம் பொதுவாக பதில் சொல்லுவார். ஒரு தனி மனிதனின் கருத்தாக விமர்சனமும் சரி, பதிலும் சரி..கண்டிப்பாக ஒலிக்காது.. ( விமர்சனத்துக்காக மட்டும் சினிமா எடுத்தால் அது பிச்சிக்கிட்டு ஓடும்)

ஓவியனின் படைப்பை ஒரு கண்காட்சியில் வைத்தாலும் , நாம் செல்லும் நேரத்தில் அவர் சாப்பிடப்போயிருந்தால், நம் விமர்சனம் அவ்வளவுதான்.!
அதையும் மீறி சொல்லிவிட்டாலும் பதிலை காதில் வாங்கிக்கொண்டு வரவேண்டியதுதான். அவருக்கும் பாரட்டுக்களை ஓவியமாக்க முடியாது. விற்கத்தான் முடியும்.

அனேகமாக எல்லா ஊடகங்களுக்கும் இருந்து வரும் சிக்கல் இதுதான்...ஆனால் வலைப்பூ என்ற பெயரில் வந்து கலக்கிக்கொண்டிருக்கும் இந்த பதிவூடகத்துக்கு மட்டும்தான் அற்புதச்சிறப்புகள் அதிகமுண்டு. மற்ற அனைத்து ஊடகங்களும் கவனிக்க ஆரம்பித்துவிட்டன.

நாம் எழுதலாம். சிந்தையில் சிந்தித்ததை நயம்பட, நம்மால் முடிந்தவரை அழகாக எழுதலாம்.
உடனுக்கு உடனே 
விமர்சனம் கிடைக்கும்..
பாராட்டு கிடைக்கும். 
மாற்றுக்கோணம் கிடைக்கும்.
மீண்டும் நாம் பின்னூட்டத்தை மறுத்தோ,. நன்றி சொல்லியோ, வேறுகருத்துச்சொல்லியோ
அதே ஊடகத்தில் தொடரலாம்.
ஒரே விஷயத்தின் ஆழம் வரை செல்லலாம்.
நுனிப்புல்கள் தவிர்க்கலாம்.
படைப்பாற்றலை பெருக்கிக்கொள்ளலாம்.
உலகின் எந்தமூலைக்கும் படைப்பை அனுப்பலாம்.
அதைவிட மேலே..
நல்ல நண்பர்களை அடையலாம்.

முன்னறியாத ஊரில் முகமறியாத
பதிவர் உங்களுக்காக ஓடியாடி உதவிகள் செய்வார்.
உங்கள் உறவுகள் அதை உளம் குளிர வியந்து பார்க்கும்.


ஆக.. ஒரு படைப்பாளி விரும்பும் எல்லா அம்சங்களும் ஒருங்கே இருக்கும் இந்த
பதிவூடகம் ...கொஞ்சம் மேலேதான்.!




Saturday, February 14, 2009

இன்னிக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா?

ஒரு மொக்கைக்கவிதையை திடீர்ன்னு யூத்புல் 

விகடன்ல பாத்துட்டு எழுதுன ஆள் பேர் பாத்தா , அட நம்ம பேரு!

என்னங்க நடக்குது!?

என்னய மாதிரி சின்னப்புள்ளங்க கவிதையையும் 
போட்டு சந்தோசப்படுத்துற யூத்புல் விகடனுக்கு 
ரொம்ப நன்றிங்கோ !

அந்த மொக்கையைப்பாக்க...இங்க போங்க!


இன்னிக்கு மட்டும் http://youthful.vikatan.com/youth/index.asp




கும்மப்போகும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிங்க! :)

Wednesday, February 11, 2009

சிதறிடுச்சு..!

இதோ இந்த விஷயத்தை எழுதிடலாம்னு யோசிச்சு திரும்பிப்பாத்தா ரொம்ப நாளா ஆயிருக்கு! 

மனசுல ஒரு விஷயம் தோணும்போதோ, ஒரு நிகழ்வு நம்மை எழுதத்தூண்டும்போதோ உடனே பதிவா எழுதிடலாம். அப்படியும் சில 
வேலைகள் நம்மை எழுத விடாமல் செய்துவிடுகின்றன.

அப்படித்தான், சென்றமாதம்  முதல் , இந்த வாரம் வரை CRY (Child Rights and You) நடத்திய போட்டிக்காக , இருபது நிமிட ஆவணப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து, அதற்காக அலைந்து திரிந்து , காட்சிகள் சுட்டு, எடிட்டிங் முடித்து, அதை சமர்ப்பித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால் இத்தனை நாள் ஓடியிருக்கிறது.
இதில் இன்னொரு சேதியும் இருக்கு! அந்தப்போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்த மத்த படங்கள் நம்ம படத்துக்கு போனா போகுதுன்னு விட்டுக்கொடுத்துட்டாங்களா, இல்லை அந்த குலோப்ஜாமூன் விளம்பரம் மாதிரி கலந்துக்கிட்டதே ரெண்டுபேரான்னு தெரியலை! நம்மை முதல் தகுதிக்கு தேர்வு பண்ணியிருக்காங்க! 

அது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் செய்திருந்ததால், எனக்கே முழுத்திருப்தி இல்லை. தமிழ்ல இன்னும் ஆழமா செய்திருக்கலாமோன்னு தோணிச்சு!  

இந்தியாவால் நமது குழந்தைகளுக்கு கல்வியளிக்க இயலுமா? ன்னுதான் கேள்வி.! நேரமிருந்திருந்தா பதிவில் ஒரு விவாதம் வச்சு முடிவெடுத்திருக் கலாம். நிறைய பேரை பேட்டியெடுத்து, குழந்தைகளின் தரத்தை சோதிச்சு, அவுங்க மனநிலையையும் கேட்டுக்கிட்டு , ஒரு முடிவுக்கு வந்து படத்தை எடுத்து முடிச்சோம். 

அதுக்கு, நீண்ட யோசனைக்குப்பிறகு ஒரு தலைப்பு வச்சேன்.  'EDU-CAN-DIA' ங்கிறதுதான் அது.. ! வேற ஒண்ணும் இல்லை! தலைப்பிலேருந்தே மேட்டரை எடுத்து , முடிவு என்னங்கிறதையும் சூசகமா சொல்றமாதிரி இருக்கணும்னுதான் இப்படி வச்சது..!
தலைப்பு நடுவர்களுக்கு பிடிச்சுப்போச்சாம். (தலைப்புக்கும் அவுங்களுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்திருக்கும்போல! ) :)

இப்படியே இவ்வளவு நாள் ஓடிக்கிட்டிருக்கும்போதே,

மகனுக்கு பள்ளிக்கூடத்தில் மாறுவேடப்போட்டிக்கு சர்தார்ஜி வேடம்தான் போடணும்னு தங்கமணி அடம் பிடிச்சதால, ஒரு பியூட்டி பார்லரில் போய் நின்னா, சுத்தி சர்தார்ஜியா திரியுது...! இந்த வேஷம்தாங்க யாரும் போடமாட்டாங்க...- இது , கூட்டிச்செல்வதற்கு முன்னால்,தங்கமணி அடித்த டயலாக். நான் சொன்னேன். ' இதே டயலாக்கை இவ்வளவு அம்மாக்கள் சொல்லியிருப்பாங்க போல' :)

பைக்கில் போய்க்கிட்டிருக்கும்போது, எதிர் சாரியில் வந்த பஸ் ஒண்ணு மெதுவா வரும் லாரியை ஓவர் ட்டேக் செய்ய என் வழி முழுசையும் அடைச்சிக்கிட்டு வர, என்னால் இடது புறம் திடீர்ன்னு இறங்கமுடியாது. இரண்டடி பள்ளம்...! நடு ரோட்டில் வண்டியை நிறுத்தி இறங்கி நின்னுட்டேன். வேகமா வந்த பஸ் என்னை இடிப்பதுபோல் வந்து நிற்க, டிரைவர் அவருக்குத்தெரிந்த எல்லா தகாத வார்த்தைகளையும் பிரயோகிக்க,   உன் ஓவர் டேக் ஆசைக்கு யார் உயிர் போனாலும் பரவாயில்லையா? ன்னு கேட்டு விட்டேன் ஒண்ணு செவுட்டுல! ஹைவே பேட்ரோலுக்கு தகவல் கொடுத்து , அவர்கள் டிரைவரை திட்டி அனுப்பும் வரை நான் வண்டியை நகர்த்தவில்லை! அன்னிக்கு நிம்மதியா தூங்கினேன்..! :)

முத்துக்குமரன் தீக்குளிப்பு, தமிழினத்தலைவரின் டகால்ட்டித்தனங்கள், மற்ற தலைவர்களின் டுபாக்கூர்த்தனங்கள், மத்திய அரசின் மரண மௌனம், ஒற்றைக்குரலெடுத்து ஓங்கிக்கத்த முடியாத நாம் என்று உலகம் அமைதிக்காக கதறிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் சூத்திரதாரியாக இருக்கும் ஆளைக்கொல்லப்போகும் தோட்டாவாகவாவது பிறந்திருக்கலாம்...!  :(

Friday, January 23, 2009

படிச்சாச்சு லக்கிலுக்!

கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் வடிவமைப்புக்காகவும், உள்ளடக்க நேர்த்திக்காகவும் வாங்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக தொற்றிக்கொண்டுவிட்டது. நான் வாங்கிய முதல் 'கிழக்கு' - அடுத்த விநாடி(நாகூர் ரூமி) என்று நினைக்கிறேன்.

இப்போது தமிழ்மணத்திலும், லக்கிலுக்கின் பதிவிலும் கூறியிருந்ததால், அவருடைய-சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்-புத்தகத்தை வாங்கி, இதோ...படித்துமுடித்தாகிவிட்டது.

விளம்பரத்துறையைப்பற்றி இதுவரை தமிழில் தகவல்களுடன் புத்தகம் வெளிவந்திருப்பதாக நான் அறியவில்லை. அதுவும் நம் சக பதிவர் (கொஞ்சம் ஓவர்தான்...அவர் சக பதிவர் என்பதைவிட சூப்பர் பதிவர் எனலாம்) எழுதிய புத்தகம் என்ற பாசத்துடன் படித்தேன்.

முதலில், அவரது இந்த சுலபமான, அழகான, சகஜமான எழுத்து நடைக்கு இது ஒரு சிறந்த விளம்பரம்!

அப்புறம் அதன் சாராம்சம்.... வாசகனை மிகவும் குழப்பாமல், மிகவும் ஆழமான தொழில்நுட்பத்தகவல்களும் தெளிக்காமல், கவானமாகக்கையாண்டு கலக்கியுள்ளார்.
படித்துமுடிக்கும்போது விளம்பரத்துறையைப்பற்றி ஒரு அடிப்படை அறிவு ஏற்பட்டுவிடும் என்பது திண்ணம்.

புத்தகத்தின் பல்வேறு பகுதிகள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. அதுவும் அந்த அழகி படம், செப்டம்பர் 2, 4ல் ஒவ்வொன்றாக களையப்படும் என்ற தகவல் , இதயம் நல்லெண்ணெய் விளம்பர நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை , இல்லாத பீர் கம்பெனி விளம்பரம் என்று சுவாரஸ்யமாக வழங்கியிருக்கிறார்.

ஒரு நாட்டுக்கே விளம்பரம், உள்ளூர் விளம்பரம் என்று எல்லாவற்றைப்பற்றியும் விலாவாரியாக சிறு சிறு எடுத்துக்காட்டுகள் மூலம் போகிறபோக்கில் கூறியிருக்கும் பாங்கு சிறப்பாக உள்ளது.

விளம்பரம் என்றதும் நினைவுக்கு வரும் எல்லா ஊடகங்களையும் ஒரு சிறு அலசல் அலசியிருக்கிறார். எந்தந்த விளம்பரங்கள் எங்கெங்கு செல்லும் என்றும் விபரம் தருகிறார்.

நீங்கள் ஒரு வியாபார நிறுவனத்தை நடத்திவந்தால், நீங்கள் எந்த வகையில் விளம்பரம் செய்தால் உங்கள் விற்பனையில் ஏற்றம் வரும் என்பதைத்தெரிந்துகொள்ள இந்தப்புத்தகம் ஒரு ஆலோசனை முதலீடாகப் பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் மிகவும் பயனுள்ளதாகவும், ரசிக்கும்படியும் எழுதி -விற்பனையில் சக்கைப்போடு போடப்போகும்படி - வெளியிட்டிருக்கும் நமது லக்கிலுக் என்ற யுவகிருஷ்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகுக !

ஆமா..' கிழக்கு' மக்களே...! எப்புடிப்பா இப்படிப்பட்ட ஆட்களை வளைச்சு வளைச்சுப் பிடிச்சு தூள் கிளப்புறீங்க!

Thursday, January 22, 2009

என்னப்பா இது அநியாயம்?


நாம பாட்டுக்கும் யாருக்கும் தொந்தரவு தராம ஏதோ மனசுல தோணினதை நம்ம புள்ளைங்களுக்குள்ள பொலம்பிக்கிட்டு , சந்தோசப்பட்டுக்கிட்டிருக்கோம். அது எந்த மவராசனுக்கோ பிடிக்காம போச்சுபோல! நம்ம புள்ளைங்க வலைப்பூவெல்லாம் சுடுறாய்ங்களாம்..! நம்ம அப்துல்லா, அவர்பாட்டுக்கும் சந்தோசமா எழுதிக்கிட்டிருந்தார். அவர் வலைப்பூ காணாம போயிருக்கு!
என்னப்பா இது அநியாயம்?

வூடு பூந்து கொள்ளை அடிக்கும் இப்படிப்பட்ட செயல்களை எந்தவகைத்தீவிரவாதத்தில் சேர்ப்பது?

மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ! 

இனி இப்படி நடக்காம இருக்க, எல்லா வல்லுநர்களும் நிறைய வழிமுறைகள் சொல்லிக்குடுங்க!

அதன் முதல் படியை நட்புடன் ஜமால் ஆரம்பிச்சு வச்சிருக்கார்!

இன்னும் எவ்விதமான பாதுகாப்பு வழிமுறைகள் இருந்தாலும் நம்ம மக்களுக்கு பயனுள்ளதா பின்னூட்டலாம். அல்லது பதிவாவே போடலாம்..!

Saturday, January 17, 2009

தீவிரவாத(த்துக்கு) மருத்துவம் - ஒருவழியா முடிச்சாச்சு!

தனிமனிதனின் ஒரே ஒரு குணத்தால்தான் எல்லா வித தீவிரவாதங்களையும் முடிவுக்குக்கொண்டுவரமுடியும் என்பது என் கருத்து!

அது....தவறுகளை தட்டிக்கேட்கும் மனோபாவம் !

ஒன்று யோசித்துப்பாருங்கள் !

இன்றுவரை இந்தியாவில் ஏதாவது ஒரு குக்கிராமத்தில் குண்டு வெடித்தி ருக்கிறதா?எல்லாமே பெரிய நகரங்களில்தான்..!ஏனெனில் அங்குதான் மக்கள் கூட்டம் அதிகமாக சேதமாகும் என்று கூறலாம். கிராமங்களிலும், சந்தை, திருவிழா என்று கூட்டம்  கூடும் நிகழ்வுகள் உண்டே..! அங்கு குண்டு வைக்கலாமே? 

வைக்கமுடியாது .! ஏன் தெரியுமா? கிராமத்து ஆட்களுக்கு தட்டிக்கேட்கும் மனோபாவம் அதிகமாக இருக்கிறது. கிராமத்துக்குள் புதிதாக ஒரு ஆள் நுழைந்தாலும், தொடர்ந்து வந்து ' நீங்க எங்க போகணும்? யாரைப்பாக்கணும் ? என்று கேட்டு ஆள் தெரியாவிட்டால் துரத்திவிடும் மனோபாவம் இன்னும் இருக்கிறது ! பக்கத்துவீட்டில் இன்று எத்தனை பேருக்கு உலை கொதிக்கிறது என்று தெளிவாகத்தெரிந்து வைத்திருக்கும் மனிதர்கள் கிராமத்தில் அதிகம்! ரேஷன் கடையிலோ, அரசு மருத்துவமனையிலோ ஒரு அநீதி நடந்தால் உடனே தட்டிக்கேட்பது கிராமத்து மனிதர்கள்தான்..!

நகரம்?

சொல்லவே வேண்டியதில்லை. என் நண்பர் ஒருவரது அடுக்குமாடிக்குடியிருப்பில், எதிர்வீட்டை, திருடர்கள் சாவகாசமாக -டெம்ப்போவில் சாமான்களை ஏற்றி-காலி செய்யும் வரை எதுவுமே தெரியாமல் இருந்துவிட்டு , வீட்டுக்காரர்கள் வந்து குய்யோ முறையோ எனும்போது, oh! my god! என்று சர்வசாதாரணமாகக்கூறிவிட்டு சொந்த வேலைகளில் மூழ்கிவிடும் புத்திசாலிகள் இருக்கும் இடம்தான் நகரம். !அதுதான் குண்டுவெடிப்பு மற்றும் பயங்கரவாதச்செயல்களை நிகழ்த்துபவர்களுக்கு சாதகமாகப்போய்விடுகிறது.

நமக்குள் எத்தனையோ சங்கங்கள், சமூக அமைப்புகள், சேவை மையங்கள் வைத்திருந்தாலும், இதை அடுத்தவர் நன்மைக்காக செய்யவேண்டும் என்று மனதாரச் செய்யும் எண்ணம் நகரங்களில் மிகக்குறைவு!

எத்தனை நகரப்பேருந்துகளில், நடத்துநரின் அராஜகப்போக்கை தட்டிக்கேட்கும் சக பயணிக்கு ஒருவரும் ஆதரவளிக்காமல் வேடிக்கை பார்க்கும் மனநிலை இருக்கிறது? இதுவும் ஒரு வித தீவிரவாதம் என்பதை எப்போது உணரப்போகிறோம்?

எத்தனை வங்கிகளில் , தனக்கு ஏற்பட்ட ஒரு சேவைக்குறைபாட்டைப்பற்றி கேள்விகேட்கும் ஒரு வாடிக்கையாளரை , புழுவைப்போல் பார்க்கும் சக வாடிக்கையாளர்கள் நாம் பார்த்திருக்கிறோம்.?

அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்குறைபாட்டால் அநியாயமாக இறந்துபோன குழந்தையை வைத்துக்கொண்டு போராடும் ஒரு கும்பல் சாலையை மறித்து நியாயம் கேட்கும்போது, எத்தனைமுறை அவர்களிடையே கிடைக்கும் சந்துகளைப்பயன்படுத்தி வாகனங்களில் அவர்களைக்கடக்கிறோம்.

எல்லாவற்றிற்கும் காரணம்...நம்மிடம் நீர்த்துப்போன போராட்ட குணம்! நமக்கென்ன வந்தது? எதுக்கு இம்சை? இருக்கும் பிரச்னையே போதும்! என்ற உளுத்துப்போன சிந்தனைகள்தான் மும்பை தாக்குதல்வரை நம்மை கொண்டு நிறுத்தியிருக்கிறது. எல்லாத்தனிமனிதனுக்குள்ளும் கதாநாயகனுக்கு அவ்வப்போது வேலை கொடுத்தாலே போதும்! நகரவாசிகளுக்கு பிரச்னையே ஏற்படாது!

எப்படித்தெரியுமா?
இப்போது ஒரு வேற்று நாட்டு மனிதன் நம் அண்டை வீட்டில் குடியிருக்கிறான் என்றால், உடனே அவனை யாரென்று நேரடியாகக்கேட்டு விசாரித்து, அதிலும் சந்தேகம் கொண்டால், - உண்மையிலேயே தட்டிக்கேட்கும் மனிதர்களால் அமைந்த காவல்துறையும் இருந்தால் - காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உடனே அவர்களைப்பற்றிய முழுவிபரங்களையும் நோண்டினால் சுலபமாக பேரிழப்புகளைத் தவிர்க்கலாம்!

ஒன்றாகச்சேர்ந்து நலிந்தவர்களுக்கு உதவுவது என்பது வேறு! 
 
ஒன்றாகச்சேர்ந்து தவறுகளுக்கு எதிராக குரல் கொடுப்பது என்பது வேறு!

கண்முன் நடக்கும் எந்த ஒரு தவறையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மண்புழுச்சமுதாயத்தில் இருந்துகொண்டு தீவிரவாதத்தை ஒழிப்பது என்பது மல்லாக்கப்படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதாகத்தான் அமையும்!

எப்போது எல்லாத்தவறுகளையும் நாம் தட்டிக்கேட்கவோ, தட்டிக்கேட்பவருக்கு ஆதரவாகவோ செயல்படத்துவங்குகிறோமோ, அப்போது சமூகம் பலப்படும். தீவிரவாதத்துக்கு மிகச்சரியான தீர்வாக இதுவாகத்தான் இருக்கமுடியும் என்பது எனது தாழ்மையான கருத்து!

எந்தத்தவறையும் உடனே தட்டிக்கேட்கும் சமூகத்தில் தீவிரவாதத்துக்கு இடமே இல்லை!
அனைவருமே நிம்மதியாக இருக்கலாம்!



தீவிரவாத(த்துக்கு) மருத்துவம் - 4



தீவிரவாதத்தின் ஆணிவேர் தனிமனிதன் தான் !


உலகம் , நாடு, அரசு எல்லாவற்றின் நடவடிக்கையிலும் ஒரு தனி மனிதனின் ஆசையும்,வக்கிரமும், ஆதிக்கவெறியும், தன்முனைப்பும், சினமும் கட்டாயம் வெளிப்பட்டுவிடுகிறது.

எங்கோ ஒரு மனிதனுக்கு நேர்ந்த அவமானமோ, அநீதியோ அவனைப் பொங்கவைத்து , அவனது தனிக்கோபம் சமூகத்தின்மீது காட்டப்பட்டு ஒரு பாவமும் அறியாத மனிதர்களையும் பலிவாங்கிவிடுகிறது.
இது இப்போது மட்டும் நடக்கும் செயல் அல்ல.!  தன் கணவன் அநியாயமாக (அவன் மிகவும் யோக்கியனாக இல்லாதபோதும்) கொல்லப்பட்டதை எதிர்த்து ஒரு தனி ஆளாக ஒரு நகரையே எரித்த முதல் தீவிரவாதி, கண்ணகிதான் ! அவளைத்தான் நாம் பத்தினித்தெய்வம் என்று கொண்டாடுகிறோம்.

 ஆனால் என்ன ஒரு ஆச்சர்யமெனில் , காப்பியத்தில் மன்னனையே தட்டிக்கேட்ட பெண் இருந்த இந்த தேசத்தில்தான் என்னைச்சுற்றி என்ன நடந்தாலும் பரவாயில்லை. என் வேலையைப்பார்த்துக்கொண்டு போகிறேன் என்று கொஞ்சம் கூட சொரணை இல்லாத புண்ணியவான்களின் எண்ணிக்கை பன்மடங்காக இருக்கிறது.

தன் வீட்டுக்குப்பைகளை எந்தப்பொறுப்பும் இல்லாமல் சாலையோரத்தில் வீசிவிட்டுப்போகும் மனிதர்களின் செயலில் இருப்பது எந்தவித மிதவாதம்?

என்பெயரை ஏன் கருத்துக்கணிப்பில் குறைத்து மதிப்பிட்டீர்கள் என்று வெறிகொண்டு, தன் கூட்டத்தை ஏவிவிட்டு சொந்தக்காரன் நிறுவனத்திலேயே மூன்று பேரை பலியிட்டது எந்தவித அஹிம்ஸாவாதம்?  ஒரு தனிமனிதனின் அப்பட்டமான தன்முனைப்பு வெறி!

கையூட்டு கொடுத்தால் போதும் காரியம் சாதித்துவிடலாம் என்ற நப்பாசையில் சட்டப்பூர்வமாக எந்த ஒரு செயலையும் செய்யாமல் திமிராகத்திரியும் நமக்குள் எத்தனைபேர் மிதவாதிகள்?
லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் இந்தக்காரியத்தைச்செய்வேன் என்று , - அரசுப்பணியில் இருக்கும் மமதையில்- வெறிபிடித்து 
அலையும் அதிகாரியை எந்த வித காந்தியவாதி என்பது?

தான் வேகமாகப்போனால் போதும் , எனக்கு மட்டும் போக்குவரத்து விதிகள் கிடையாது என்று விருட்டென்று வண்டியோட்டி, தான் இறந்து அல்லது தன்னால் பயந்தவர்களை இறக்கவைக்கும் தனிமனிதர்களிடம் இருப்பது பயங்கரவாதம்தானே?

பின்லேடன் என்ற தனிமனிதனின் ஆதிக்க மற்றும் மத வெறிதான் இன்று அல்-கொய்தாவாக வளர்ந்து நிற்கிறது.
புஷ் என்ற தனிமனிதனின் தன்னைக்காப்பாற்றிக்கொள்ளும் பதவிவெறிதான் ஈராக் போராக வந்து நிற்கிறது.
கருணாநிதி என்ற தனிமனிதனின் சொத்து சேர்க்கும் வெறிதான் பல்வேறு அரசியல் கொலைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.
ஜெயலலிதா என்ற தனிமனிதரின் தன்முனைப்புதான் 3 கல்லூரி மாணவிகளின் மரணமாக மாறி இருக்கிறது. (பல்வேறு ஆசிட் வீச்சுகள், செருப்படிகளும் அடக்கம்)
மோடி என்ற தனிமனிதனின் மத மற்றும் பதவி வெறிதான் குஜராத்தை கலவர பூமியாக்கி இருக்கிறது.
ராஜபக்ஷே என்ற தனிமனிதனின் அரசியல் காழ்ப்புணர்ச்சி மிகுந்த இனவெறிதான் ஈழத்தில் தமிழர்களை இழக்கவைக்கிறது.

எல்லா அழிவுகளுக்குள்ளும் காரணத்தை நோண்டிக்கொண்டே சென்றால் தனிமனிதன் தான் அப்பட்டமாக வந்து நிற்பான்.


பத்துபேராகத்திட்டமிட்டாலும், மனிதவெடிகுண்டாகச் செயல்படும் எல்லோருமே தனிமனிதர்கள் தானே?

திரைப்படங்களில் வரும் கதாநாயகர்கள் தனிமனிதனாக எல்லா கெட்டவர்களையும் போட்டுத்தள்ளுவதை நாம் மிகவும் விரும்புகிறோம். அதே அளவு தனிமனிதனாக நாம் எந்த அளவுக்கு நல்லவர்களாக, தெளிவானவர்களாக, நியாயத்தை நிலைநாட்டுபவர்களாக இருக்கிறோம்.? 

ஒருபக்கம் தனிமனிதனின் வெறியால் பல்வேறு தவறுகள் நடக்கின்றன !
இன்னொருபுறம் தனிமனிதனின் எதையும் கண்டுகொள்ளாத மெத்தனத்தால் பலப்பல தவறுகள் நடக்கின்றன..!

இதில் மிகப்பெரிய ஆபத்து என்னவெனில், எதையும் கண்டுகொள்ளாத மெத்தனவாதிகளால்தான் , வெறிபிடித்த தனிமனிதர்கள் அழிவுகளை ஏற்படுத்துகிறார்கள்!

ஆக...எல்லாத் தீவிரவாதத்துக்கும் அடிப்படை - தனிமனிதன் தான்! அவனது எந்த குணம் இவ்வளவுக்கும் காரணம்?

(தொடரும்)

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...