Friday, April 1, 2011

ஓட்டுச்சாவடி வாசலில்..!





நம் தமிழகத்தின் சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்ளப்போகிறவர்களாக அரசியல்வாதிகளை நாம் பார்க்கிறோம். ஆனால், அத்தனையையும் எதிர்கொள்ளப்போவது நாம்தான்.

     நம்மிடம் ஒரு நிறுவனம் இருக்கிறது. அதனை நிர்வகிக்க, ஒரு ஆளை நேர்முகத்தேர்வு செய்து நியமிக்கிறோம். அவனுக்கு ஐந்தாண்டுகளுக்கான ஒப்பந்தம் அளிக்கிறோம்.ஆனால் அவன் தவறே செய்தாலும், தட்டிக்கேட்கமுடியாத அளவுக்கு அவனுக்கு அதிகாரம் தரப்படுகிறது. அவனும் கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தை நன்றாக அனுபவித்து, ஒரு ஆட்டம் ஆடிவிட்டுத்தான் ஓய்கிறான். பின்னர் ஐந்தாண்டுகளுக்குப்பிறகு அவன் மீண்டும் நம்மை தாஜா செய்து, வேலைக்கு விண்ணப்பிக்கிறான். அவனைப்போலவே இன்னொருவனும் விண்ணப்பிக்கிறான். அந்த இன்னொருவனுக்கும் எந்தத் தகுதியும் இல்லாதபோதும், முன்னவனை பழிதீர்க்க இரண்டாமவனை வேலைக்கு அமர்த்துகிறோம். அவனும் ஆட ஆரம்பிக்கிறான். இதுதான் தொடர்கதையாக இருந்தால், நஷ்டம் யாருக்கு? கண்டிப்பாக நிறுவனத்தை வைத்திருக்கும் நமக்குத்தான்.!

     இதே கதைதான் இப்போது தேர்தல் என்ற பெயரிலும் நடந்துகொண்டிருக்கிறது. களத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் யாராவது உண்மையிலேயே அரசியலில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய தகுதி இருக்கிறதா என்று கேட்டுப்பார்த்துக்கொண்டால் – ஆளவந்தானில் கமல் சொல்வதைப்போல் , கண்ணாடி பிம்பத்தில் முகம் சுளித்துக்கொண்டு – தெரியும். உண்மையிலேயே வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்த நபர்களோ, நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பணக்காரக் குடும்பங்களிலிருந்து வந்தவர்களோ இப்போது அறவே இல்லை.

சைக்கிள் கடை வைத்து நடத்தும் பிழைப்பில் வருமானம் இல்லை. அரசியலில் சேர்,
ஆளைக்கவிழ்,
வெற்றிபெறு,
அமைச்சராகு
ஊழல்செய்,
சொத்து சேர்!
மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இறங்கு!
அடுத்த ஆறு தலைமுறையை வாழ வை!
மக்கள் என்னவானால் நமக்கென்ன? என்று இருக்கும் ஆட்கள்தான் இன்று வேட்பாளர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால் , இவற்றையெல்லாம் மீறி நாம் அவர்களுக்கான ஓட்டுக்களை கையில் வைத்துக்கொண்டு, அவர்களைக்கண்டு பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறோம்.

அதனால்தான் அவர்கள் நமக்கு இப்படி விரல் காட்டுகிறார்கள்.

(எங்கு தவறு நடந்ததென்று தெரியவில்லை. பாவம் இவர்கள் நடுவிரலில் மை வைத்திருக்கிறார்கள்)


     ஒரு சிறு புள்ளிவிபரம். இந்திய அளவில் இன்றைய மக்கள் தொகை 121 கோடி  ,  தமிழகத்தில் 2001 ம் ஆண்டு கணக்குப்படி 6.24 கோடி இப்போது குறைந்தபட்சம் 7 கோடி ஆகியிருக்கும்.


நமது மொத்த அரசியல்வாதிகள்
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் – 234
தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் – 40
மொத்தம் = 234 + 40 = 274
அல்லக்கைகள் – 274 x 100 = 27,400
வட்டம், ஒன்றியம், மாவட்டம், மாநில கட்சிப்பொறுப்பாளர்கள்  = 10000
ஆக., ஒரு வெற்றிபெறும் கட்சியில் மொத்த அரசியல்வாதிகள் = 37,400 என்று வைத்துக்கொள்வோம் . (தோராயமாக)
மற்ற பெரிய கட்சிகள் எல்லாம் சேர்த்து அரசியல்வாதிகள் 
(வட்டத்துணைச்செயலாளர் உட்பட)  = 37400 x 2 = 74800
உதிரிக்கட்சிகள், துண்டு துக்கடா அரசியல்வாதிகள் (கார்த்திக் போன்றவர்கள் எல்லாம் சேர்த்து) = 20000
மொத்தம் 274 + 37400 + 74800 + 20000 = 169600 + உதிரிகள் 400 வைத்துக்கொண்டாலும் ஒரு லட்சத்து எழுபதாயிரம் பேர்தான் வருவார்கள்.



     ஆக, 7 கோடி பேர் 1.7 லட்சம் பேரைக்கண்டு அஞ்சுகிறோம். அதாவது 411 பேர் ஒரு ஆளுக்கு பயப்படுகிறோம். அவர்கள் தவறுகளைத் தட்டிக்கேட்பதில்லை. அவர்களைக்கண்டு பம்முகிறோம். அவர்களை வணங்கி மகிழ்கிறோம். அதுவும், இப்போது நாம் தேர்ந்தெடுக்கப்போவது அவர்களில் 234 பேரை! (2,99,145 பேருக்கு ஒருவர்) இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும்!

    நமக்கான ஆட்களைத் தேர்வுசெய்வதில், நாம் என்றாவது நிதானமாகச் சிந்தித்திருக்கிறோமா என்றால், இல்லை என்று அடித்துச்சொல்லலம். ஆட்சியமைக்கப்போவதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் கட்சிக்கு நம் வாக்குகளைப்பதிவு செய்யத் துடிக்கும் வேளையில், நம் தொகுதிக்கு தகுதியான ஆளைத்தான் தேர்ந்தெடுக்கிறோமா என்றும் சிந்திக்கவேண்டும்.
ஒரு அரசியல் கட்சியோ, அதன் கூட்டணித்தலைமையோ தேர்ந்தெடுக்கும் ஆள், நம் பகுதிக்குச் சம்பந்தமே இல்லையென்றாலும் வாக்களித்து,  அவரைப் பிரதிநிதி என்று அழைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றும் தெரியவில்லை.

       இவையெல்லாம் மீறி , பெரிய கட்சிக்காரர்களில் சுத்தமானவர்களை எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை. எனக்கு பிரதிநிதியாகப்போகிற மனிதன்,  ஒழுக்கமுள்ளவனாக, கை சுத்தமானவனாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதிலும் தவறில்லை. அப்படி ஒரு ஆள் சுயேச்சையாக நின்றாலும், அவனை ஆதரிக்க ஆரம்பிப்போம். காலம் மாறும். காட்சிகள் மாறும். நம் எண்ணம் என்றாவது நாடு முழுதும் பரவும். நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள்.

ஓட்டுச்சாவடி வாசலிலாவது சிந்திப்போம்.

Sunday, March 27, 2011

சித்தப்பா




சிறுவயதில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு உறவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அவர்கள் நடை,உடை, பாவனைகள் எல்லாவற்றையும் கவனித்து அதைப்போல நடக்க நினைப்போம் அல்லது அதைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம்.அப்படி ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த மாமா, மூத்த அண்ணன், சித்தப்பா போன்ற உறவுகள் அமைந்திருக்கும்.

அப்படி எனக்கு அமைந்த உறவுதான் அவர்! என் அப்பாவின் கடைசித்தம்பி! என் அப்பாவுக்கு அடுத்து அவர்தான் பையன் என்பதால், என் பெரியப்பா மகன்களுக்கு இரண்டு, மூன்று சித்தப்பாக்கள் இருந்தபோதும், எனக்கு மட்டும் ஒரே ஒரு சித்தப்பாதான்! ஆக, மற்றவர்கள் அவரை ’சின்ன சித்தப்பா’ என்று அழைக்கும்போது, நான் மட்டும் சித்தப்பா என்றே அழைப்பேன்.
     
எனக்கு விபரம் தெரிந்து அவரை நான் பார்த்தது நாங்கள் இருந்த கலியாப்பட்டி என்ற ஊருக்கு அவர் வந்துசென்றபோதுதான்! ஆனால் அப்போது நான் மிகவும் சிறுவன்! முகத்தையோ நடவடிக்கைகளையோ அவ்வளவாக கவனிக்கவில்லை. பின்னர் நான் மூன்றாவது படிக்கும்போது, அவருக்குத் திருமணம் என்ற பேச்சுக்கள் வந்தபோதுதான் அவரை நான் கவனிக்க ஆரம்பித்தேன்.

சொந்த ஊரான கறம்பக்குடிக்கு செல்லும்போது பார்த்தால், கல்யாண மாப்பிள்ளை மீசை இல்லாமல், இளமையாக, கமலஹாசன்போல் தூக்கி வாரிக்கொண்டு, ,எல்லோரிடமும் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார். அவரது உண்மைப்பெயர் நடராஜன். ஆனால் எல்லோரும் அவரை அம்பி என்றே அழைத்துப்பழகினர். அவரது ஒவ்வொரு பேச்சின் முடிவிலும் ஒரு நகைச்சுவை கலந்த கிண்டல் தொனித்தது என்னை ஈர்த்திருக்கலாம்..

அதற்குப்பிறகு அவரை கொஞ்சம் ஆழமாக கவனிக்க ஆரம்பித்தேன். பின்னர் அவர்தான் எங்கள் குடும்பத்தின் முதல் மீசை வைத்த மனிதராகவும் ஆனார். திருமணத்துக்குப்பிறகு கோயம்புத்தூரில் வேலைக்காக செட்டிலானவர், மீண்டும் கறம்பக்குடிக்கே வந்தார். அங்கிருந்து புதுக்கோட்டையில் உள்ள அவரது வங்கிக்கு சென்றுவரத்தொடங்கினார்.

காலையில் சரியாக 7:25 வரும் RSR ஐப்பிடிக்க பஸ் ஸ்டாப்புக்கு சென்றுவிடுவார். ஒவ்வொரு நாள் இரவு உணவும் எங்கள் அனைவருடனும் சேர்ந்து உண்பார். அன்று வங்கியில், பேருந்தில் நடந்த சுவாரஸ்யமான விஷங்களை அழகாகச் சொல்லுவார். புதிய படங்களைப்பற்றி தகவல்கள் சொல்லுவார். வார இறுதியில் அவரது குடும்பம் இருந்த கோவைக்குச் சென்றுவிடுவார்.

                ஆனால் சில வாரங்களில், சனிக்கிழமைகளில் மாலை கொஞ்சம் சீக்கிரமே கறம்பக்குடி வீட்டுக்கு வந்து விடுவார். வந்தவுடன் முகம் கழுவிவிட்டு , அந்த ஊரில் இருக்கும் ஒரே திரையரங்கமான முருகனில் எந்தப்படம் போட்டிருந்தாலும் எங்களைக்கூட்டிக்கொண்டு சென்றுவிடுவார். பின்னர் ஞாயிறு கொஞ்சம் தாமதமாக எழுந்திருப்பார். டிபன் சாப்பிட்டுவிட்டு, துணிகளைத் துவைப்பார். தன் துணிகளை யாரையும் துவைக்க விடமாட்டார். பின்னர் குளித்துவிட்டு வந்து மதிய சாப்பாடு. சாப்பிட்டுவிட்டு படுத்தால், மிக நீண்ட தூக்கம். அப்போது மட்டும் வீடடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.யாரும் சத்தம்போடக்கூடாது. அப்படியும் எங்கள் குடும்பம், ரேடியோவில் மூன்றுமணி நாடகத்தை கேட்டுவிட்டுத்தான் ஓயும்.

அவர் மதியத்தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டார் என்பது குப்புறப்படுத்துக்கொண்டு பின்னங்காலை ஆட்டிக்கொண்டிருப்பதிலிருந்து கண்டுகொள்ளலாம். மாலை காபிக்குப்பிறகு, வீட்டின் உள் திண்ணையில் அயன்பாக்ஸை வைத்து, வேட்டியை மடித்துக்கட்டி, படியில் அமர்ந்துகொண்டு தன் துணிகளை அயன் செய்வார். (அவர் கறம்பக்குடியை விட்டுச்சென்றவுடன் நான் கல்லூரியில் படிக்கும்போது, அதே இடத்தில் வைத்துத்தான் என் துணிகளை அயன் செய்வேன்.)    சில நாட்களில் ஞாயிறு படம் உண்டு. விடுமுறையை பயனுள்ளதாகவும், ரசனையுடனும் கழிக்க வேண்டும் என இவரிடம்தான் கற்றுக்கொண்டேன்


                வெள்ளிக்கிழமையானால், குமுதத்துடன் வீட்டுக்கு வருவார். அதை ஞாயிற்றுக்கிழமை வரை வைத்திருந்து படிப்பார். நான் 7வது படிக்கும்போதே பத்திரிகைகள் படிப்பதில் அதிக ஆர்வம் இருந்ததால், அவர் வருகிறாரோ இல்லையோ, அவர் பையிலிருந்து வெளிவரும் குமுதத்துக்காக காத்திருப்பேன். அவரும் என் ஆர்வத்தை ஆட்டம் காணவைத்து வெளியிலெடுத்துவிட்டு 10 தோப்புக்கரணம் போட்டுவிட்டு வாங்கிக்கோ என்பார். சொன்னதைச் செய்துவிட்டு வாங்கிச்சென்றுவிடுவேன்.

                சமயலறையில், அம்மிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, மிக்ஸியை வீட்டுக்குள் கொண்டுவந்தவர் அவர்தான்! அதேபோல்தான் குக்கரும்!

                வீட்டில் முதன்முதலில் , டேப் ரெக்கார்டர் வாங்கி அதில் எங்கள் அனைவரது குரலையும் பதிந்து காட்டியவர் அவர்தான்!

      புதிய தொலைக்காட்சியை வாங்கி, அதில் வியாழன் இரவுகளில் ‘World This Week’ ம், வெள்ளி இரவுகளில் ஆங்கிலப்படங்களும் பார்க்கவைத்தவர் இவர்தான்! என்னுடைய திரையுலகப் பிரவேசத்தில் இவருக்கும் ஒரு பங்கு நிச்சயம் உண்டு!
     
      ஒருநாள் என்னையும், என் அத்தைமகன் கண்ணனையும், பட்டுக்கோட்டை சென்று முழுநாளும் படம்பார்த்துவிட்டு வரச்சொல்லி பணம் கொடுத்தனுப்பினார். அன்று நாங்கள் தொடர்ச்சியாக அபூர்வ சகோதரர்கள், சிவா, நினைவுச்சின்னம்  ஆகிய மூன்று படங்கள் பார்த்தோம்..

  எங்கள் பாட்டியைக்கண்டால், எங்கள் குடும்பமே பயந்து நடுங்கும். இவர்மட்டும் சிங்கத்திடம் விளையாடும் முயலைப்போல, அவரை மிகவும் கிண்டல் செய்து , அவரையும் சிரிக்கவைத்துவிடுவார். இவர்தான் பாட்டிக்கு கடைசிப்பிள்ளை என்பதால், பாட்டிக்கும் இவர்மீது பிரியம் அதிகம்.

  என் வாழ்வின்மீது அக்கறையுடன் இருப்பார். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு தவறான காரணத்துக்காக என்னை ஒரு ஆசிரியர் அடித்துவிட்டார் என்பதற்காக, இவர் வீட்டுக்கு வந்தவுடனேயே, என் அப்பாவை அழைத்துக்கொண்டு பள்ளி முதல்வரைச் சந்தித்து அந்த ஆசிரியரை எங்கள் வீட்டுக்கு வரவைத்து மன்னிப்பும் கேட்க வைத்தார்.

  தேர்வு சமயங்களில், அவருக்கும் மார்ச் மாத வங்கி வேலைகள் இருக்கும். இரவு தாமதமாகத்தான் வருவார். இருந்தபோதும், நான் அன்று எழுதிய தேர்வைப்பற்றி விசாரித்துவிட்டுத்தான் தூங்குவார். அண்ணன் மகன்தானே என்ற மேம்போக்கு எண்ணம் இல்லாமல் உரிமை எடுத்துக்கொள்ளுவார்.

  இன்று என் பேச்சில் தொனிக்கும் கிண்டலுக்கு இவர்தான் மூலகாரணமாக இருந்திருப்பார். நகைச்சுவை உணர்ச்சி நிறைந்த மனிதர். சத்தம்போட்டு சிரிக்கமாட்டார். ஆனால் சிரிக்க ஆரம்பித்தால், கண்ணீர் வரும்வரை சிரிப்பார்.

  பக்தி நிறைந்தவர். குடும்பத்துடன் அவர் அதிகம் சென்ற சுற்றுலாத்தலம் திருப்பதியாகத்தான் இருக்கும். என் அப்பாவிடம் மிகப்பெரிய பாசம் வைத்திருக்கிறார்.

  சுத்தம் பேணுவதில் முதன்மையானவர். மூலையில் ஒரு தூசி கிடந்தாலும் தானே கூட்ட ஆரம்பித்துவிடுவார். அடுத்தவர்களின் சிரமம் பொறுக்கமாட்டார். உடனே உதவி செய்துவிடுவார். எங்கள் உறவினர்களில் சிரமப்பட்டவர்கள் அனைவருக்கும் அதிகம் உதவியிருக்கிறார். அதுவும் படிக்கவேண்டுமென்றால் எல்லாச்செலவையும் ஏற்றுக்கொள்பவர்.

எனக்கு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தபோது, நம் குடும்பத்தில் முதல் பொறியியல் பட்டதாரி இவனாக இருக்கட்டும் என்று தன் சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்து என் அப்பாவிடம் கொடுத்து சென்னை அனுப்பிவைத்தார். அன்றைய தினம் அவர் மாமனாரின் அறுபதாம் கல்யாணம் வேறு!

  இப்போதும் என் வளர்ச்சியின் மீது அக்கறையும், பெருமிதமும் கொண்ட அன்பான மனிதர் அவர்! சென்ற வாரம் கூட என் பதிவுகளை உளமாரப் பாராட்டி ஒரு அழகான மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இப்போது கோவையில் அவரும் சித்தியும் மட்டும் வசிக்கிறார்கள். என் இரு தம்பிகளும் நல்ல வேலையில் சென்னை, பெங்களூரில் இருக்கிறார்கள்

      .வேலை வேலை என்று தன் உடல்நிலையை கவனிக்காமல் இருந்துவருகிறார். அனைவரது வற்புறுத்தலுக்குப் பிறகும், வங்கி வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவது என்று முடிவெடுத்துள்ளார். அனேகமாக இந்த மாதத்துடன் ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்துவிடுவார். உடல்நிலையும் சரியாகிவிடும். மீண்டும் அந்த ரசனையான வாழ்வை வாழ..
        
      WELCOME HOME CHITHAPPA!!



Tuesday, March 8, 2011

பெண்மையே.. பெண்களே..வாழ்க நீங்கள்!




    நம் உலகத்தை அன்புமயமாக்கிய அத்தனை பெருமையும், பெண்களையே சேரும். அவர்களது தாய்மை, சகோதரத்துவம், நட்பு பாராட்டுதல், பாசம்,அன்பு, நேர்த்தி இல்லாமல் ஆண்களின் வாழ்வு சூன்யமாகவே இருந்திருக்கும்..
என் வாழ்வில் நட்பாக, உறவாக உள்ள பெண்களின் பட்டியலில்..
2008 
2009 
2010 

இவர்கள் போக,
மேலும், இந்த ஆண்டில்
நட்பு காட்டும்

ரேவதி வர்மா
தேஜாஸ்ரீ

நமீதா
ஆருஷி
கவிதா
ரம்யா

மற்றும்
அன்புநிறை பதிவர்கள்

அகிலா ஸ்ரீராம்
மதார்
உமா
மற்றும் வேலையிட நண்பர்கள்
ரமணி
சித்ரா
ஜானகி
சுதா
சௌம்யா
ஆகிய …
என் வாழ்வை அர்த்தப்படுத்தும் அத்துனை பெண்களுக்கும் இந்த பெண்கள் தினத்தில்  எனது உளமார்ந்த அன்பையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்.


பெண்களே..பெண்மையே வாழ்க நீங்கள்!

Wednesday, March 2, 2011

மூன்று வரித்திரைப்படங்கள்


திரைப்படங்களை மூன்றுவரிகளில் எழுதிப்பார்க்கும் ஆர்வம் இன்னும் குறையவில்லை. அதன் பாதிப்பாக.....

சேவல் சண்டையில் குருவின் அடிமை!
அவரின் துரோகம் தெரிந்ததே கொடுமை!
காட்டிக்கொடுக்காத சிஷ்யனின் நேர்மை

இவனின் தொழிலே திருட்டு!
போலீஸென நினைத்து எதிரியின் விரட்டு!
அவராய் மாறி வில்லனை மிரட்டு!

ஊர்சுற்றி லூட்டி அடித்தான்
டுட்டோரியலில் தொழில் படித்தான்
காதலியைக் கைப்பிடித்தான்!


பொது இடத்தில் வெட்டுண்ட கை
போலீஸால் தேடப்படும் மெய்!
பழிவாங்கும் குடும்பத்தை உறுதி செய்!





கண்டுபிடித்ததை பின்னூட்டமிடுங்கள்

Monday, February 21, 2011

இளைஞர்கள் இரண்டுபேர்!



       ஒரு சில விஷயங்கள்  நடக்கும்போது கேயாஸ் தியரிபோல், ஒன்றுக்கொன்று சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள மனம் தானாக முயல்கிறது.


         ஊழல் நிறைந்துபோய், எதற்கெடுத்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடி, ஒவ்வொரு சராசரிக் குடிமகனும் நொந்துபோய் வாழ்ந்துகொண்டிருந்த துனிசியாவில், இராணுவ வேலைக்கு முயன்று அதுவும் லஞ்சமில்லாமல் முடியாது என்ற நிலையில் காய்கறிவண்டி வைத்து பிழைப்பு நடத்துகிறான் Mohamed Bouazizi  என்ற அந்த இளைஞன். அன்று அங்கு வந்த பெண் போலீஸ் அதிகாரி, மாமூல் குறைவாகக் கொடுத்தான் என்று அவனது வண்டியை பறிமுதல் செய்து, இன்னும் இரு பெண் போலீஸ்களுடன் சேர்ந்து காறி உமிழ்ந்து அவமானப்படுத்துகிறார்கள்.வெகுண்டுபோன அவன் கிளம்பி கவர்னர் அலுவலகம் சென்று முறையிடுகிறான். அங்கும் அவமானமே மிஞ்ச, தான் கொண்டு சென்ற பெயிண்ட் தின்னரை ஊற்றிக்கொண்டு தன்னையே கொளுத்திக்கொள்கிறான். இது மக்களிடையே வெறியேற்றுகிறது. அரசின் அகம்பாவத்தை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். தன்னை எரித்துக்கொண்ட பதினெட்டு நாட்களில் அந்த இளைஞன் இறந்துபோகிறான். அவன் ஏற்றிவைத்த பொறி பற்றிக்கொள்கிறது. மக்கள் புரட்சி வெடிக்கிறது. ஒரு சர்வாதிகாரி அதிபராக அநியாய ஆட்சி நடத்திய பென் அலியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இவை அனைத்தும் அந்த இளைஞன் தன்னை எரித்துக்கொண்ட் டிசம்பர் 17 ம் தேதி ஆரம்பித்து, ஜனவரி 17ம் தேதியில் நடந்துவிடுகிறது.



அந்த தீக்குச்சி இளைஞன் முகமது பௌ அஸீஸி
     
ஒரு தனி இளைஞன் பற்றவைத்த நெருப்பு, பற்றிக்கொண்டு ஒரு நாட்டின் ஊழல் நிறைந்த ஆட்சியை முடிவுக்குக்கொண்டுவர 31 நாட்கள் எடுத்துக்கொண்டு, ஒரு ஓய்வுபோல், இடையில் 8 நாட்களுக்குப்பிறகு ஜனவரி 25ம்தேதி எகிப்தில் புரட்சியாக வெடிக்க ஆரம்பிக்கிறது. மக்கள் லட்சக்கணக்கில் ஒரே மைதானத்தில் கூடுகிறார்கள். போராட்டங்களின் உயிரிழப்புகளுக்குப்பிறகு புரட்சி இன்னும் வேகம்பிடித்து அதிபர் முபாரக்கை பதவியிறக்கி, தலைமறைவாக ஆக்குகிறது. இந்த இரண்டு புரட்சியிலும், பொதுமக்களின் கொந்தளிப்பும், பங்களிப்பும்தான் இப்படி ஒரு முடிவைத் தந்திருக்கிறது. மேலும் இதில் இணையத்தின் பங்கும் அதிகம் இருக்கிறது. இதோ அடுத்து பஹ்ரைனில் தொடங்கியிருக்கிறது. இது தொடரும் எனத்தெரிகிறது.




     இந்தப்படத்திலுள்ள இளைஞனும் ஒரு அராஜகத்தை நிறுத்துவதற்காகத்தான் உயிர் மாய்த்துக்கொண்டான். கொஞ்சம் கூட அசரவில்லையே நாம்! ஒரு நாள்கூட அவன் நோக்கத்துக்காக எல்லோரும் ஒன்று கூடவில்லையே?  அவன் நோக்கத்தை புதைத்துவிட்டு, ஆண்டுக்கணக்கில் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம். அதுக்கும்மேல, தமிழ்நாட்டு மீனவனைக் கொன்னா என்ன குறைஞ்சா போவுது? புரட்சியாவது..பொடலங்காயாவது…போங்க பாஸு! போய் ஓட்டுக்கு 1000 ரூபா சேத்துக்குடுப்பாங்களான்னு கேட்டுச்சொல்லுங்க!! நம்ப வீட்டில் நாலு ஓட்டு இருக்கு! 

Monday, February 7, 2011

யுத்தம் செய்!

காட்சியமைப்புகளில் ஜப்பானியத்திரைப்படங்களையும், ஜெர்மானியப்படங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி, ஒரு உள்ளூர் திரைக்கதையில் மக்களை அமரவைப்பதில் மிஷ்கின் வெற்றி கண்டிருக்கிறார்.




சேரனொரு 
சிறந்த காவலர்!
புலனாய்வில் 
தேர்ந்த ஆர்வலர்!
பொது இடங்களில்
வெட்டப்பட்டகைகள் கிடக்க,
இவ்வழக்கை எடுத்து ஆய்கிறார்!
காணாமல் போன தன்
தங்கையையும் தேடி நோகிறார்!

கைகள் கிடந்த வழக்கில்
கட்டம் கட்டமாய் நகர
பொய்கள் கூறும் போலீஸை
புலனாய்ந்து இவரே பகர

துணிக்கடை அதிபரின்
துச்சாதன லீலை விளங்க
அதனால் பாதித்த 
மருத்துவர் குடும்பமே நொறுங்க,
அவர்களின் தற்கொலையே
அடிநாதமாய்த் துலங்க,
சேரனுக்கு தங்கையின்
இருப்பிடம் தெரிய
குற்றத்தின் கொடுமையான
காரணமும் புரிய
நேர்மையான காவலனும்,
நீதிபெறா கொலையாளியும்
நின்றாடும் சதிராட்டத்தில்
இரத்தம் பெய்கிறது.
தீமை கண்டு கொதித்தெழும்
யுத்தம் செய்கிறது!!

சேரனுக்கு ஒரு அமர்த்தலான ஆக்‌ஷன் படம்.!
அதுவும் அந்த இடைவேளை சண்டைக்காட்சியில் விசில் பறக்கிறது!

   இசையும், ஒளிப்பதிவும் மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. கே, சத்யா இருவருமே மிஷ்கினின் தேர்வில் தவறில்லை என்று நிரூபித்திருக்கிறார்கள்.
நம்மைப்பார்த்து ஜெயப்பிரகாஷ் கூறும் வசனங்கள் உண்மை ஊசியாய்க் குத்துவதை தவிர்க்கமுடியாது. போலீஸாக வரும் கண்ணும்,கண்ணும் இயக்குநர் மாரிமுத்து மிக நன்றாக நடித்திருக்கிறார். கொலைசெய்யபப்ட்டவனை லாட்ஜில் கண்டவுடன் சேரன் ஓட ஆரம்பிப்பது, போலீஸ் ஸ்டேஷனில் ப்ளாஷ்பேக் ஆரம்பித்து, வாசலுக்குச் சென்றுவிட்டு, அப்படியே டீ வாங்கிவரும் காவலரில் முடிவது என சின்னச்சின்ன காட்சிகள் கவனம் கவர்கின்றன.

   காட்சியமைப்புகளில், மிஷ்கின் டச் இருந்தாலும், வித்தியாசமான கோணம் என்ற பெயரில் அதிகமாக காலைமட்டும் காட்டும் காட்சிகள் வருவது அயர்ச்சி ஏற்படுகிறது. அதேபோல் சேரனை ஒரு சில இடங்களில் தலை குனிந்து நிற்க வைத்திருப்பது மிஷ்கினின் அடிப்படைக்காட்சியாக எண்ண வைக்கிறது. முதல் பாதியில் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வைத் தவிர்த்திருக்கலாம். இவையெல்லாம் மீறி, அந்த கிளைமாக்ஸ் காட்சிகளிலும், கொலைகாரர்கள் யார் என்பதிலும் நல்ல வித்யாசம் காட்டி,  காமெடி, டூயட்,காதல், சென்ட்டிமெண்ட் என்று எந்த மாவையும் தொடாமல், புதிய விதத்தில் படம் கொடுத்ததற்காகவே இந்தப்படத்தை இன்னொருமுறை பார்க்கலாம். 

Saturday, January 8, 2011

சத்தியமாகக் கடவுளைப்பார்த்தேன்.!







பயணங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை ! கவனம் கவர்பவை! 
எனக்கு எவ்வளவோ கற்றுக்கொடுத்திருக்கின்றன எனக்கான பயணங்கள் ! ஆகவே ஒவ்வொரு பயணத்திலும் என் விழிப்புணர்வு (தூங்காதபோது) கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்!

அது ஒரு குறுகிய தூரப் பேருந்துப் பயணம். பேருந்தில் உட்கார இடம் கிடைப்பது, அதுவும் நாமே தேர்ந்தெடுக்கும் வகையில் கிடைப்பது ஒரு மகிழ்வான அனுபவம். கொஞ்சம் குழப்பமானதும் கூட..! நாம் தேர்ந்தெடுத்த இருக்கையை விட இன்னும் கொஞ்சம் நல்ல இருக்கை பக்கத்தில் இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றும்..! கூட்டமாக இருந்தால் குழப்பமே இல்லை. எந்த இருக்கை கிடைக்கிறதோ அதுதான் சொர்க்கம்! எப்போதுமே எந்த அவசரமாக இருந்தாலும், நின்றுகொண்டு பேருந்துப்பயணம் செய்வதில், எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை!

அப்படி ஒரு குழப்பம் ஏற்படாதவகையில் -சொர்க்கமாக - மூன்று பேர் அமரும் இருக்கையின் உள் ஓர இடம் எனக்குக்கிடைத்தது. மெதுவாக கூட்டம் சேர ஆரம்பித்து, பேருந்தும் நகர ஆரம்பித்தது.
வழக்கம்போல் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கியும் போனேன்.

ஒரு குலுக்கலில் , கண்விழித்தபோது கூட்டத்தில் நெருக்கிக்கொண்டு ஒரு பத்து வயதுச்சிறுவனும், அவன் இடுப்பில் மூன்றுவயதுச்சிறுவனும் இருந்தார்கள். அந்தப்பத்துவயதுச்சிறுவன் நல்ல கறுப்பாக, ஒரு பச்சை நிற பள்ளி பெயரிட்ட பனியனும், வறுமையைப்பறைசாற்றும் ஒரு ஜீன்ஸும் அணிந்திருந்தான். குட்டிச்சிறுவன் இன்னும் கறுப்பாக, ஆனால் அழகாக, ஒரு வெள்ளை டிராயரும், இரண்டு மேல் பொத்தான்கள் இல்லாத சட்டையும் அணிந்திருந்தான். இதுதவிர பெரியவனின் இன்னொரு கையில் ஒரு ஜவுளிக்கடையின் அழுக்கேறிய கட்டைப்பை இருந்தது. இவர்கள், தன் உடல்நலமில்லாத தாயுடன் வந்திருந்தார்கள். தாய் என் அருகில் நின்றிருந்தாள். சிறுவன் எனக்கு முன் இருக்கையின் அருகில் நின்றுகொண்டிருந்தான். 

அப்போதுதான் எனக்கு முன் இருக்கைப்பயணியை கவனித்தேன். 
அவள் ஒரு கல்லூரி மாணவி, சுடிதார் அணிந்துகொண்டு, ஒரு சிறு பையை வைத்துக்கொண்டு, காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இருந்தாள். அது செல்போனாக இருக்கலாம், ஐ பாடாகவும் இருக்கலாம்!

இப்போது அந்த பெரிய சிறுவன் கூறினான்..

டேய்! தம்பி! வழுக்குதுடா..!

டேய் தம்பி! வலிக்குதுடா ..!

அவன் வயதுக்கு அந்தக்குட்டிச்சிறுவனை தூக்கி வைத்துக்கொண்டு ஓடும்,-நம்மூர் சாலையில் ஆடும்- பேருந்தில் நிற்பது என்பது கொஞ்சம் கடினம்தான்.! இதை நான் நினைத்துக்கொண்டிருக்கும்போதே...
அவன் அந்தப்பெண்ணிடம்..

அக்கா! தம்பியை உக்கார வைச்சுக்கிறீங்களா? -என்று கேட்க,

ஹெட்போனை காதிலிருந்து எடுத்து அவன் சொன்னதை மறுபடியும் கேட்டு, பின்னர் ஆக்ரோஷமாக மறுத்தாள்..அவளது முழு முக அசைவும் தெரியாவிடினும், திரும்பிச்சுளித்ததை தெளிவாக கவனித்தேன். என்ன பொண்ணு இவள்!? ஒரு சின்னப்பையன் இப்படிக்கேட்கிறான். கூப்பிட்டு வைத்துக்கொள்ளாமல் , பெரிய அலம்பல் பண்ணுகிறாளே? என்று வருந்தினேன்.

எனக்கென்னமோ குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரிப் பார்க்கத்தோன்றும். ஆகவே , அவள் மறுத்த மறுவினாடி, என்கிட்ட குடுடா..என்று கேட்டு வாங்கினேன். சில நெருக்கல்களுக்குப்பிறகு, அந்த வானமே எல்லை அழகன், என் மடிக்கு வந்தான். ஆனால் அவனுக்கு என்னைப்பிடிக்கவில்லை. சிறிது முறைத்துக்கொண்டு, அண்ணனிடம் மழலையில் பேசிக்கொண்டே வந்தான். அம்மாவிடம் குடும்ப நிலைமைகள் பற்றியும், பள்ளியில் கேட்ட கட்டணம் பற்றியும் முதிர்ந்த மனிதனாக அந்த பத்துவயதுப்பையன் பேசிக்கொண்டு வந்தான். 

நான் இறங்கவேண்டிய நிறுத்தத்துக்கு இரண்டு நிறுத்தம் முன்னால் வண்டி வந்தபோது, அடுத்த நிறுத்தத்தில் இறங்க என் முன்னிருக்கை கல்லூரிமாணவி வேகமாக எழுந்தாள்....

டர்ர்ர்ர் !

அவள் அணிந்திருந்த சுடிதாரின் கீழ்ப்பகுதி (கால்சட்டை) மேலிருந்து கீழாக தொடைப்பகுதியில் ஒரு அடி நீளத்துக்கு கிழிந்துவிட்டது. அப்படியே அவளது தொடை மற்றும் உள்ளாடை பளீரெனத்தெரிந்தது. ஒரு வினாடி அவளுக்குத்தன் உடை கிழிந்தது தெரியவில்லை. நான் நேர் பின்னால் என்பதால் உடனே பார்த்துவிட்டேன். அவள் மானம் போவதை எண்ணிப்பதறுவதை மீறி, கடவுள் இருக்கான்ப்பா! ஒரு குழந்தையை வச்சுக்க மாட்டேன்ன்னு சொன்னவளுக்கு உடனே கூலி குடுத்துட்டான் என்று ஒரு சாத்தான் குரல் எனக்குள் ஓடியது.அவளுக்கு அருகில் இருந்த பெண் 'அய்யய்யோ! சுத்தமா கிழிஞ்சிருச்சுப்பா!' என்றாள். இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் நிறுத்தம் வந்துவிட்டது.

அந்தப்பத்துவயதுக்காரனும் பார்த்துக்கொண்டிருந்தான்.
படீரென்று தன் கட்டைப்பையைத்திறந்தான்.
ஒரு சிகப்புத்துண்டை எடுத்தான்! அவள் இடுப்பில் ஒருபக்கமாக சுற்றி, அவள் கையில் திணித்தான்.
அக்கா! ஸ்டாப்பிங் வந்துருச்சு ! எறங்குக்கா! கவலப்படாம போக்கா!
அவள் விழிகள் என்ன சொன்னதென்று எனக்குப்படிக்க முடியவில்லை!

நான் அவனையே கண்ணீர் முட்டப்பார்த்துக்கொண்டிருந்தேன்..

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...