Tuesday, January 3, 2012

உணவு @TIE







ஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடுப்பது பல்வேறு வெளிநாட்டு துணிகள், மணிகள், கனிகள், கணிணிகள் என்று வகைப்படுத்தி விற்றுத்தரும் கடைகளால் கட்டப்பட்ட மால்கள் என்ற மாபெரும் கொள்ளைக் கூடாரத்திற்குத்தான்.!

அங்கு சென்றால்தான் தானும் ஒரு ஆடம்பரன் என்று காட்டமுடியும் என்று அவனாகவே எண்ணிக்கொள்வான் அல்லது இப்படிப்பட்ட கடைகளிலெல்லாம் வாங்கித்தான் நான் உண்கிறேன், உடுத்துகிறேன் என்று உலகுக்கு அறிவிப்பதற்காக இருக்கும்.

இவற்றையெல்லாம் மீறி உண்மையிலேயே அங்கு என்னதான் நடக்கிறது என்ற ஆவலில் வேடிக்கையாளனாகப் போனால், அந்த நுகர்வுக் கலாச்சாரத்தின் வேகம் அவன் பணம்கொள் சட்டைப்பையை, பிய்த்து அவனை பிச்சைக்காரனாக்காமல் விடாது.

இவையெல்லாம் ஒரு பொதுவான கருத்தாக இருந்தாலும், அங்கு செல்லும் வேட்கையை குறைக்கவிடாது அந்தக்கட்டிடங்களின் மின்வாரியச் சலுகைகளின் சாட்சிகளான பல்புகள்! உள்ளே அவன் சென்று வந்தபின் வாங்கிய ’பல்பு’கள்தான் அதில் தொங்குகின்றன என்ற உண்மையே தெரியாமல் வாயையும், பையையும் பிளந்து காட்டிவிட்டு வந்துசேருவான்.

இது என்ன புலம்பல் என்று நீங்கள் யோசித்தால்… மிகச்சரி.!. மறுபடியும் கேட்டால் கிடைக்க வைத்து விட்டார்கள் இந்த எக்ஸ்பிரஸ் அவென்யூவின் ஆட்கள்.!

     ஜனவரி முதல் தேதி எங்காவது சென்றே ஆகவேண்டும் என்ற தங்கமணியின் தவத்திற்கு, வரமாய்ச் செல்ல முடிவெடுத்ததுதான் செம்மொழிப் பூங்காவும் ( அம்மா புதுப்பேரு வைக்காததுனால பழைய பேரையே சொல்லிட்டேன்..) எக்ஸ்பிரஸ் அவென்யூவும்!

     முதலில் சென்றதில், பிரச்னைகள் எதுவுமில்லை. அழகான வாத்துகளைப்பார்த்து அளவளாவிவிட்டு வந்தோம். அடுத்து சென்ற இடத்தில்தான் ஆரம்பித்தது பிரச்னை..!

     பார்க்கிங் கட்டணம் பார்த்தே பல்ஸ் எகிறினாலும், அது தொடர்பான அரசு ஆணையைப் பெற முயற்சித்துக் கொண்டிருப்பதால்,( நிற்க.. அது பற்றி தனிப் பதிவிடுகிறேன்) அதுவரை ஒன்றும் செய்யவேண்டாமென்று, வண்டியை வைத்துவிட்டு மாடி மாடியாய்ச் சுற்றிவந்தோம்.

     ஏதாவது சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்று நாங்கள் முடிவெடுக்க, நீண்ட நாட்களுக்குமுன் உண்ட ஒரு வெஜிடபிள் சாண்ட்விச்சின் சுவை இன்னும் நாக்கிலேயே இருப்பதாக தங்கமணி அறிவிக்க, SUBWAY யில் கைநீட்டுவது என்று முடிவாயிற்று..!!

    அந்த உணவு வளாகம் முழுவதும் கடுமையான கூட்டம். நானும் சப்வேவுக்குச் சென்று, ஒரு சிறு வரிசையில் நின்று என் முறை வரும்வரை காத்திருந்து அருகில் சென்று, பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து கெத்தாக,

’ஒரு வெஜிடபிள் சாண்ட்விச் வித் சீஸ்’ என்று சொன்னேன்.

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,

’சார்.!இங்க கேஷ் கொடுத்து வாங்க முடியாது..கார்டுதான்’ என்றார்.

அந்தக் கொடுமை வேறயா?’என்று நினைத்துக்கொண்டே என்னிடமிருக்கும் கடன் அட்டை ஒன்றை எடுத்து அப்பாவியாய் நீட்ட,

ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்துக்கொண்டே……

சார்! அந்தக் கார்டு இல்லை…! இங்க ஃபுட் கோர்ட்டுக்குன்னு ஒரு கார்டு இருக்கு அதைத்தான் வாங்கணும்.!என்றார்.

ஆஹா..!வருடத்தின் முதல்நாளே இப்படி வெறியேத்துறியே வெங்கடேசா என்று நினைத்துக்கொண்டே..

ஏங்க!நான் உணவுப்பொருள் வாங்கப்போறது இங்க! அப்புறம் ஏன் எங்கயோ போய் கார்டு வாங்கிட்டு வரணும்? என்றேன்.

இல்லை சார்! அதான் இந்த மாலில் உள்ள FOOD COURT ரூல்ஸ் !

இது என்ன வித்தியாசமான ரூல்.? .சரி! எங்க போய் வாங்கணும்?

பக்கத்துல கேஷ் கவுண்டர்ன்னு ஒண்ணு இருக்கும்..அங்க போய் வாங்குங்க என்றார்.

அங்கு போனபின் தான் அடுத்த கட்ட அதிர்ச்சி என்னை வரவேற்றது. அந்த கவுண்ட்டரில் இரு இளைஞர்கள் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களிடம் ’ஏதோ புட் கார்டாமே’ அதைக் கொடுங்க என்றேன்.

’சார் உங்களுக்கு எவ்வளவுக்கு கார்டு வேணுமோ அவ்வளவு ரூபாய் இந்த கார்டில் ஏத்திருவோம். நீங்க அதைக்கொண்டுபோய் இந்தத் தொகைக்குள்ள சாப்பிட்டுக்கலாம். மிச்சமிருந்தால் அடுத்த தடவை வரும்போது கழிச்சுக்கலாம். அதிகமாயிட்டா மறுபடியும் இங்க வந்து டாப் அப் பண்ணிக்கலாம். ஆனா, கார்டுக்கான Non Refundable Charge Rs. 20 இப்போதே கழிச்சுக்குவோம் என்றார்.

இப்போது என் கேள்வி நரம்புகள் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன.

’நான் உங்ககிட்ட ’ஆசைப்பட்டு’ கார்டு வாங்க வரலைங்க! நான் சாப்பிட விரும்பின கடைல இங்க வந்து வாங்கிட்டு வந்தாத்தான் தருவேன்னாங்க ! அதனால் வந்தேன். நான் ஏன் அந்தக் கார்டுக்கு இருபது ரூபாய் அதிகம் தரணும்? இது என்ன புதுக்கொள்ளையா இருக்கு?’ என்றேன்.

ஆனால், பாவம்..அந்த இளைஞன் மிகப்பொறுமையாக பதில் சொன்னார்.
’இப்படித்தான் சார் எங்களுக்கு செய்யச்சொல்லியிருக்காங்க! உங்களுக்கு வேறு ஏதாவது ஆட்சேபணைகள் இருந்தால் எங்க மேலதிகாரிக்கிட்டதான் பேசணும்!’

அப்ப உங்க மேலதிகாரி நம்பர் கொடுங்க!

உடனே கொடுத்தார். அவர் எண்ணுக்கு அடித்தேன் எடுக்கவேயில்லை. காரமாய் ஒரு குறுஞ்செய்தி : நான் ஒரு நுகர்வோர் அமைப்பின் பிரதிநிதி இங்கு ஒரு பிரச்னை உடனே வரவும் என்று இடத்தைக் குறிப்பிட்டு என்று அனுப்பினேன்.

மீண்டும் சப்வே வந்தேன். அவரிடம்

’நான் கார்டெல்லாம் வாங்கத் தயாராக இல்லை! நான் காசுதான் தருவேன். எனக்கு பொருள் தரமுடியுமா ?’ என்றேன்.

’இல்லை சார்! அது எங்களுக்கு அதிகாரமில்லை! ஆனால் நீங்க FOODCOURT மேனேஜரிடம் பேசிப்பாருங்க!’என்று கூறிவிட்டு எண்ணும் கொடுத்தார்.

மேனேஜருக்கு அடித்தேன். உடனே எடுத்தார். விபரம் சொன்னேன்.

’நீங்க எங்க இருக்கீங்க சார்? உடனே வரேன்’ என்றார்!

நான் நடந்துகொண்டே கேஷ் கவுண்டர் சென்றுவிட்டேன். அங்கு வருவதாகச் சொன்னார்.

இரண்டு நிமிடங்களில் வந்தும் விட்டார். மிகவும் அன்பாகவும், பொறுப்பாகவும் பேசினார்.

‘சார்.! இங்க இந்த முறைலதான் நாங்க கடைகளில் உணவு வாங்க வைக்கிறோம். உங்க எண்ணம் புரியுது.! ஆனாலும் இது மேனேஜ்மெண்ட் எடுக்குற முடிவுதான் சார்! இருந்தாலும்..உங்களுக்காக… அந்த இருபது ரூபாயை ரீஃபண்ட் செய்ய வைக்கிறேன்’ என்றார்.

     ’நான் எனக்கு மட்டும் சொல்லலை. எல்லார்க் கிட்டயும் இந்த முறையில் நீங்க கார்டுக்காக கட்டாயப்படுத்தி, பணம் வாங்குறது இந்திய உணவக சட்டத்துக்குப் புறம்பானது தெரியுமா? சாப்பிடணும்னு நினைக்கிறவன் காசைக்குடுத்து சாப்பிட்டுட்டுப் போறான்!’ என்றேன்.

’இதையும், நீங்களே எங்க மேனேஜ்மெண்ட்டுக்கு சொல்லிடுங்க சார்! ஒரு சில நிர்வாகக் காரணங்களுக்காக (அந்த அரசியலை தனிப்பதிவாக எழுதுகிறேன்.) இப்படி பண்ணியிருக்காங்க! நாங்க எதுவும் கமெண்ட் செய்யமுடியாது’. என்று சொல்லிவிட்டு தனது கார்டையும் கொடுத்துவிட்டு, வேறு ஏதாவது சேவை தேவையெனில் தன்னை அழைக்குமாறும், எக்ஸ்பிரஸ் அவென்யூவில் எப்போதும்(!) என்னை அன்புடன் எதிர்பார்ப்பதாகவும் சொல்லி , கூடவே ஒரு ஊழியரையும் எனக்கு உதவிசெய்ய அனுப்பி , விடைபெற்றார்.

நானும், இருநூறு ரூபாய்க்கு கார்ட் வாங்கி SUBWAY வந்து மீண்டும் அதே ஆளிடம் சாண்ட்விச் கேட்டேன்.
அவர் சிரித்துக்கொண்டே , கார்டை வாங்கி மெஷினில் இழுத்தார்.
கூடவே ஒரு டம்ளர் தண்ணியும் கொடுத்துருங்க என்றேன்.
ம்  என்று சொல்லிவிட்டு, ஒரு தண்ணீர் பாட்டிலுக்கான தொகையையும் என் கார்டிலிருந்து கழித்திருந்தார்.

நான் பில் பார்த்தவுடன் அதிர்ந்தேன்.

‘நான் வாட்டர் பாட்டில் கேட்கவே இல்லையே?’

’தண்ணி இப்படித்தான் சார் கொடுப்போம்..’

ஹெ …ஹெ..நாங்கள்லாம் அப்பவே இப்படி! என்று ஆரம்பித்தேன்.

இரண்டு நிமிடங்களில், இரண்டு டம்ளர்களில் தண்ணீர் வந்தது.

அடுத்த ஆச்சர்யம். எனக்கு தண்ணீர் பாட்டிலுக்காக போட்ட பில்லும் திரும்ப என் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

சாப்பிட்டுவிட்டு, மேனேஜரை அழைத்தேன். அவரது ஊழியர் ஒருவரை என்னுடன் அனுப்பி..என் கணக்கில் மீதமிருந்த ஐம்பது ரூபாயை, *(புத்தம்புது நோட்டு) வாங்கிக்கொடுத்து புன்னகையுடன் வழியனுப்பினார்.

அப்போது வாங்கிய கார்டை , அப்போதே தலைமுழுகிவிட்டு மகிழ்ச்சியாய்க் கிளம்பினேன்.

கார்டு வாங்கிய பில்..!




சாண்ட்விச்சும் , தண்ணீர் பாட்டிலும் சேர்த்து போடப்பட்ட பில்



தண்ணீர் பாட்டில் பணம் திரும்பக் கொடுத்த பில்



நன்றாக யோசித்துப்பார்த்தால், இந்த முழுப்பிரச்னையிலும் அந்த நிறுவன ஊழியர்களில் யாரும் தவறாக நடந்துகொள்ளவில்லை. முடிந்தவரை எனக்கு உதவத்தான் முயற்சித்தார்கள். ஒரே ஒருவர் மட்டும் கொஞ்சம் இடக்காக ஆரம்பித்தார். நான் மடக்காக ஆரம்பித்ததும் அடங்கிவிட்டார். 

ஆனால்...பொதுமக்களிடம் எப்படிவேண்டுமானாலும் காசு கறக்கலாம் என்று திட்டம் போட்ட முதலாளிகளைவிட… இதில் மிகப்பெரிய குற்றவாளிகள் யார் தெரியுமா? 

இவ்வளவு பிரச்னை நடந்துகொண்டிருந்த போதும் வேடிக்கையைக்கூட ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, அணிந்திருந்த  ஜீன்ஸின் பின்பக்கம் பேண்ட்டியின் நிறுவனப்பெயரை எல்லோருக்கும் காட்டியபடி ’No Refund? Is It? என்று கேட்டுவிட்டு தலையாட்டிக்கொண்டே காசைக் கொடுத்துச் சென்ற மானமங்கைகளும், சுப்பையா என்ற பெயரில் ஐ.டி கார்ட் இருந்தாலும், சுவிஸ் நாட்டுக் குடிமகன் என்ற நினைப்பில் ‘Seven Chicken Sanwitch !’ என்று வாங்கி அவன் அடாவடியாகக் கொடுத்த 2 வாட்டர் பாட்டில்களையும் வாய் திறக்காமல் வாங்கிச்சென்ற தட்டிக்கேட்க வக்கில்லாத சேர,சோழ, பாண்டியப்பேரன்களும்தான்.!!

இவர்கள்தான் தங்களை பெரிய எச்சிக்கலை ஃபேமிலி போல் எண்ணிக்கொண்டு பக்கி முண்டங்களாக வரிசையில் நின்று சமூகத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்கும் ஹீரோவின் படத்தைப் பார்த்துவிட்டு, மீண்டும் வரிசைகட்டி, 20ரூபாய் கொள்ளைக் கார்டை ,300 ரூபாய் மதிப்பேற்றி வாங்கி 240க்கு மூன்று காபிகள் குடித்துவிட்டு மிச்சமிருக்கும் 40 ரூபாயை எப்போது செலவழிப்பது என்று தெரியாமல், அதற்காகவே மீண்டும் வந்து கீழே நிறுத்திய வண்டிக்கு பார்க்கிங் கட்டணமாக அதே 40 ரூபாயை தண்டம் அழுதுவிட்டு, I Support India Against Corruption என்ற பனியனை வாங்கி அணிந்துகொண்டு, அன்னா ஹஜாரேவை இணையத்தில் லைக்கும் ,இந்தியாவில், முதலில் நசுக்கப்பட வேண்டிய முதுகெலும்பில்லாத கரப்பான்பூச்சிகள் !

நேர்மையான தைரியத்துடன், உங்கள் உழைப்பு உண்மையென்றால், உங்கள் பணம் நியாயமானதென்றால், உங்களுக்குள் இருக்கும் ஹீரோவுக்கு வேலைகொடு்த்து, உங்கள் அடிப்படை உரிமையைக் கேட்டுப் பாருங்கள்!

கேட்டால்....கிடைக்கும்!






Sunday, January 1, 2012

HERO - இனிமையான பழமை









DUSTIN HOFFMAN  TOOTSIE யிலிருந்தே மிகவும் பிடிக்கும்.
அப்புறம் RAIN MAN WAG THE DOG   என்று தேடித்தேடிப் பார்த்தேன். 
இன்னும் அதிகமாக வியக்க வைத்தார்.

அந்த வரிசையில், நீண்ட நாட்களாகப் பார்க்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்த படம்தான்..HERO, 1992ல் வெளிவந்தது. அவரது மற்ற எல்லாப் படங்களையும்விட ஒரு அழகான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும்.

பெர்னார்ட் லாப்ளேண்ட் (டஸ்டின் ஹாஃப்மேன்) சிறு சிறு திருட்டுவேலைகள் செய்யும் ஒரு ஆள். தன் வக்கீலிடமே பணத்தை அபேஸ் செய்யும் ஒரு டுபாக்கூர்..! அவருக்கு விவாகரத்து ஆகியிருந்தாலும், முன்னாள் மனைவியுடன் இருக்கும் தன் மகன்மேல் அதிகப் பாசம்.! ஒருநாள் அவனை படத்துக்குக் கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அன்று இரவு வீட்டுக்கு செல்லும் வழியில், மழையால், கார் மக்கர் செய்கிறது. அப்போது இவர் கண்ணெதிரிலேயே திடீரென்று ஒரு விமானம் தரையில் மோதி இறங்குகிறது. மெதுவாக தீப்பிடிக்கவும் ஆரம்பிக்கிறது.

      அதைப்பார்த்துக்கொண்டே இருக்கும்போது, உள்ளிருந்து விமானத்தின் பிரதான வாசலைத் திறக்கமுடியாமல் திணறி, இவரது உதவியைக் கேட்கிறார்கள். புதிதாக போட்டிருக்கும் 100 டாலர் ஷூவைக் கழட்டி வைத்துவிட்டு, புலம்பிக்கொண்டே பெர்னார்டும் கதவைத் திறக்க உதவுகிறார். எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு இறங்குகிறார்கள். தீ மேலும் பரவ ஆரம்பிக்கிறது.

      அப்போது ஒரு சிறுவன் தனது தந்தை விமானத்துக்குள் மாட்டிவிட்டதாகச் சொல்லி இவரிடம் அழுகிறான். அவனை சமாதானப்படுத்த பற்றியெறியும் விமானத்துக்குள் சென்று சிக்கியிருக்கும் அனைவரையும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றுகிறார்.   அப்படி காப்பாற்றப்பட்டவர்களில் பிரபல டிவி சேனலின் நிருபர் கெய்லும் (Geena Davis) ஒருவர். அவரது கைப்பையை பெர்னார்ட் சுட்டுவிடுகிறார். பின்னர் தீயணைப்பு வீரர்களும், மருத்துவக்குழுவும் வந்துவிட, விட்டுச்சென்ற இடத்தில் தனது ஷூவைக் காணாமல் தேடி, அதில் ஒன்று மட்டும் கிடைக்க, அதை எடுத்துக்கொண்டு, கூட்டத்திலிருந்து வெளியேறுகிறார் பெர்னார்ட்..!

      பிறகு தாமதமாக வீட்டுக்குச் சென்றால், அங்கு மகன் தூங்கிவிட்டான் என அவரது முன்னாள் மனைவி, இவரிடம் என்ன நடந்தது என்றே கேட்காமல், திட்டி வெளியேற்றுகிறார். பின்னர் ஒரு ப்ளாட்ஃபார்ம் வாசியான ஜான் பப்பரை (Andy García) சந்திக்கிறார். ஜானின் காரில் பயணிக்கும்போது அந்த விமான சம்பவத்தைப் பற்றிச்சொல்லி, தனக்குப் பிரபலமாவது பிடிக்காது என்றும்,  தனது காணாமல் போன ஷூவைப்பற்றியும் புலம்புகிறார். ஜானிடம் அந்த ஒற்றை ஷூவை அவரது ஒற்றைக்கால் நண்பருக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு செல்கிறார்.

      காப்பாற்றப்பட்ட கெய்ல், தங்கள் எல்லோர் உயிரையும் காத்த அந்த ஹீரோவை மீடியா முன் கொண்டுவர ஆசைப்படுகிறார். கையில் உள்ள எந்த வீடியோவிலும் சரியாக பெர்னார்டின் முகம் பதியாததால் அது இயலவில்லை. ஆனால் விபத்து நடந்த இடத்தில் கிடந்த ஒரே ஒரு ஷூவை ஆதாரமாக வைத்து, விமான விபத்தில் 54 உயிர்களைக் காப்பாற்றிய அந்த ஹீரோவுக்கு 1 மில்லியன் டாலர் என்று சேனல் 4ல் பரிசு அறிவிக்கிறார்கள்.

      அதே நாளில், பெர்னார்டின் திருட்டுக்காக போலீஸ் இவரைக் கைது செய்கிறது. அப்போது கெய்லின் கிரெடிட் கார்டுகளும் சிக்குகின்றன. அன்றே அவர் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார். இந்த ஒரு மில்லியன் மேட்டர் தெரிந்திருந்தாலும் பெர்னார்டால் ஒன்றும் செய்யமுடியாத நிலைமை!

      நாடே எதிர்பார்க்கும் அந்த தன்னலமற்ற ஹீரோ யார் என்று தெரியாமல் அனைவரும் தவிக்கும் வேளையில், தான்தான் அந்த ஹீரோ என்று ஜான், தன்னிடமிருக்கும் பெர்னார்டின் ஒற்றை ஷூவுடன் வந்து நிற்கிறார். மீடியா பற்றிக்கொள்கிறது. ஜான் ஒரே நாளில் கோடீஸ்வரராகிறார். எல்லோருக்கும் நன்மை செய்வதே தன் நோக்கம் என்கிறார். அதேபோல் மிகவும் நல்லவராகவும் இருக்கிறார். கெய்ல் , ஜானைக் காதலிக்கவே ஆரம்பித்துவிடுகிறாள் அமெரிக்காவே அவரை ஹீரோவாகக் கொண்டாடுகிறது. அவர் முன்னாள் வியட்நாம் வீரர் என்பதும் மிகப்பெரிய பலமாக ஆகிறது..

      இவற்றையெல்லாம் சிறையிலிருக்கும் டிவியில் பார்த்த பெர்னார்ட் கொதித்துப்போகிறார். தனக்கு வரவேண்டிய அத்துனை பணத்தையும், புகழையும் இன்னொருவன் அனுபவிக்கிறானே என்று பொருமுகிறார். சில நாட்களில் அவருக்கு ஜாமீன் கிடைக்கிறது.

      வெளியில் வந்தவுடன், புகழ்வெளிச்சத்தில் இருக்கும் ஜானைச் சந்திக்க முயல்கிறார். ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியடைகின்றன. அவர் சொல்வதை யாரும் கேட்கவும் தயாராக இல்லை. ஆனால் ஜான் பெர்னார்டைப் பார்த்துவிடுகிறார். அதுமுதல் நிலைகொள்ளாமல் தவிக்கிறார். இந்நிலையில், ஜானுக்கும், பெர்னார்டுக்கும் விமானத்தில் காணாமல் போன தனது பை மூலமாக ஏதோ தொடர்பு இருப்பதை கெய்ல் உணர்கிறாள். ஜான் கைதவறுதலாக தன் பையை எடுத்து, அதை பெர்னார்டிடம் விற்க, அதை வைத்து ஜானை திருடனென்று காட்ட பெர்னார்ட் ப்ளாக்மெயில் செய்கிறார் என்று தவறாகக் கணிக்கிறாள்.




      இந்நிலையில், தான் ஆள்மாறாட்டம் செய்தது மிகப்பெரிய தவறென்று உணரும் ஜான், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, தனது ஹோட்டல் அறையின் வெளியே குதிக்கத் தயாராகிறார். மீடியா, போலீஸ் , தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள்.அவரைப்பார்க்க பெர்னார்டும் அழைத்துவரப்படுகிறார். அங்கு மெதுவாக அவர் அருகில் சென்று, நீதான் நல்ல ஹீரோ..! நான் ஏதோ சந்தர்ப்பவசத்தால் நல்லது செய்பவன்! அடிப்படையில் நான் ஒரு சுயநலவாதி! ஆகவே நீ அப்படியே பிரபலத்தை அனுபவி! நான் இப்படியே இருந்துவிட்டுப்போகிறேன். என் மகனுக்கு உன்னைப்போன்ற ஒரு முன்னுதாரணம்தான் தேவை! என்னைப்போல் அவன் ஆகவேண்டாம் என்று சொல்லி, தற்கொலையைத் தடுத்து வெளிவருகிறார்.

      கெய்லுக்கும், தங்களை விமானவிபத்தில் இருந்து காப்பாற்றியது பெர்னார்ட்தான் என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் அதை அவரே சொல்ல விரும்பாதபோது தான் ஏன் வெளிக்காட்டவேண்டுமென்று மீடியாவில் சொல்லாமல், அவரிடம் மட்டும் நன்றி சொல்லிவிட்டு நகர்கிறாள்.

      மீண்டும் தன் மகனுடன் மிகச்சாதாரணமான வாழ்வை வாழத் துவங்குகிறார் பெர்னார்ட்.!



 பெர்னி என்று அழைக்கப்படும் பெர்னார்ட் லாப்ளேண்ட் ஆகவே வாழ்ந்திருக்கிறார் ஹாஃப்மேன். ! என்ன ஒரு பார்வை? உடல்மொழி? பின்னியிருக்கிறார். ஒருமாதிரி வெறுப்புடன் உதவ ஆரம்பித்து பின் ஆழமாகச் செய்யும் காட்சிகளிலும், தன்னை யாரும் நம்பவில்லை எனும்போது ஏற்படும் வெறுப்பைக் காட்டும் காட்சிகளிலும் கலக்கல்.! தன்னையும் உணர்ந்து , தன் நண்பனையும் காக்கும் அந்த ஹோட்டல் தற்கொலைக் காட்சியில் உண்மையில் அவர்தான் ஹீரோ என்று நம்மை உணரவைக்கிறார். ஒருமுறை அவரை நேரில் பார்க்கும் ஆவல் அதிகரிக்கிறது.

      அதேபோல், ஜான் பப்பராக நடித்திருக்கும் Andy Garcia  முதலில் ஒரு ப்ளாட்பார வாசியாக இருப்பதற்கும், பின்னர் ஒரு ஹீரோ போல் முக அமைப்பே மாறியபின் வரும் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். பணம் பற்றிப் பேசும்போதும், தன் குற்ற உணர்ச்சியைக் காட்டும்போதும் கதாபாத்திரத்தை நியாயப்படுத்தியிருக்கிறார்.


     

கெய்லாக ஜீனா டேவிஸ் அடுத்த உயிர்நாடி..! உயிர்காத்த ஹீரோவைக் கண்டுபிடிக்கக் காட்டும் ஆர்வம், கண்டுபிடித்தபின் ஏற்படும் சிற்சில சந்தேகங்களில் ஏற்படுத்திக்கொள்ளும் சமரசம், அவனிடம் ஏற்படும் மயக்கம், உண்மையான ஹீரோவைக் கண்டறிந்தபின் ஏற்படும் ஏமாற்றம், தன் தொழிலுக்கு துரோகம் செய்யாத நேர்மை என்று பல்வேறு உணர்ச்சிகளில் சதிராடியிருக்கிறார் அம்மணி!


      



ஒளிப்பதிவும், இசையும் படம் வெளியாகி 20 ஆண்டுகளைத் தொடுவதை மறக்கடிக்கின்றன. 

 ஒரு நல்ல , தரமான படத்தைப் பார்த்த உணர்வைக்கொடுத்த இயக்குநர் Stephen Frears  க்குத்தான் நன்றிகளைச் சொல்லவேண்டும்.



Friday, December 30, 2011

பயணச் CHEAT







         

          இந்த மாதத் தொடக்கத்தில், விருதுநகர் செல்லவேண்டிய வேலை இருந்தது. உடனடிப்பயணம் என்பதால், எந்த முன்பதிவும் செய்யவில்லை. அப்படியே கிளம்பி கோயம்பேடு சென்று மதுரை செல்லும் பேருந்தில் சென்றுவிடலாம் என்று திட்டமிட்டேன். அதன்படி கோயம்பேடு சென்றால்,  அங்கு போக்குவரத்தை திருப்பி விட்டிருந்தார்கள். பேருந்து நிலையத்தின் உள்ளிருந்து , பிரதான வாசலை நோக்கி, எல்லா ஊர்களுக்குமான பேருந்துகளும் வந்துகொண்டிருந்தன. வரிசையாக, திருச்சி, சிதம்பரம் என்று படித்துக்கொண்டே வந்தபோது, மதுரை என்று போட்டு ஒரு ULTRA DELUXE பேருந்து நகர்ந்து வந்துகொண்டிருந்தது.
          
          உடனடியாகக் கை காட்டி, மதுரைக்கு இருக்கை இருக்குமா? என்று கேட்டேன். முன்னால் அமர்ந்திருந்த நடத்துனர்,

ஒரு சீட்தான் இருக்கு! ஏறுங்க என்றார்…

உடனே ஏறினேன். வண்டி நகர ஆரம்பித்தது. நான் உள்ளே செல்வதற்குள் , நடத்துனர் என்னை அழைத்து,

’மதுரைக்கு 400 ரூபாய் ஆகும்’ என்றார்.

பேருந்து கட்டண உயர்வுக்குப்பிறகு இவ்வளவு ஆகிவிட்டதா? என்ற அதிர்ச்சியில்
’அவ்வளவா? அடேயப்பா!’ என்றேன்.

’இல்லை..டிக்கட் + முன்பதிவுக்கட்டணம் 350 ரூபாய் வரும். அப்புறம் 50 ரூபாய் எங்களுக்கு?’ என்றார்.

எனக்குச் சுரீரென்றது.
’என்னது? எதுக்கு நான் உங்களுக்கு 50 ரூபாய் அதிகமா குடுக்கணும்?’

’400 ரூபாய் கொடுக்கிறதா இருந்தா உள்ள போங்க! இல்லைன்னா எறங்குங்க! அண்ணே! வண்டியை நிறுத்து…!’ என்றார்.

நானும் சிரித்துக்கொண்டே..
’ஆமாம்.அண்ணே!வண்டியை நிறுத்துங்க! அவர் மேலதிகாரிக்கு போனைப்போட்டு விபரத்தைப் பேசிட்டு கிளம்புவோம்.’என்றேன்.

கொஞ்சம் அதிர்ந்தார். ஆனாலும்.. அவர் ’இதெல்லாம் பேசாதீங்க! குடுக்க முடியலைன்னா கீழ எறங்குங்க!’ என்றார்.

’ஹாஹா..நான் இப்போ காலியா இருக்குற சீட்டில் போய் உட்காருவேன். டிக்கெட் காசு மட்டும்தான் தருவேன்’ என்றேன்.

’அதெல்லாம் ஒத்துவராது. நான் சொல்லாம எப்படி நீங்க எப்படி உட்கார முடியும்? அடாவடி பண்றீங்களா? உங்களையெல்லாம் போலிஸில் சொன்னால்தான்…’.என்று எழுந்தார்.

நான் அவரை மதிக்காமல், உள்ளே சென்று காலியாய் இருந்த 7ம் எண் இருக்கையில் அமர்ந்தேன். பின்னாலேயே ஆவேசமாக வந்த அவர்!
’ஹலோ..வண்டில சீட் இல்லை! இது வி.ஐ.பி .சீட் ..நீங்க எறங்குங்க !’ என்றார்.

’அதெப்படி? உள்ளே ஆளை ஏத்தும்போது மட்டும் இது வி.ஐ.பி சீட்டுன்னு தெரியலையா? அப்படியே இருந்தாலும்…நான் வி.ஐ.பிதான் அதுவாவது தெரியுமா? இல்லைன்னா…மினிஸ்டரை விட்டு உங்களுக்குப் பேசச்சொல்லவா? அப்புறம்..ஏதோ போலீஸ்…ன்னீங்களே…நீங்க கூட்டிக்கிட்டுப் போகவேண்டாம்.. நான் உங்களை கூட்டிக்கிட்டுப் போறேன். இப்ப்வே சொல்றேன். டிக்கட்டுக்கு மேல காசு கேட்டு என்னை பஸ்ல இருந்து இறக்கிவிடறேன்னு மிரட்டுறாருன்னு சொல்றேன்’ என்றேன்.

’அதெல்லாம் தெரியாது நீங்க எறங்குங்க’ என்றார்..

இப்போது நான் சிரிக்க ஆரம்பித்தேன்.
’சார்..! நீங்க இப்ப என்கிட்ட வலுவா மாட்டிக்கிட்டீங்க! டிக்கெட் காசை விட அதிகமா கேட்டது லஞ்சம்.! நான் இப்பவே உங்க SETC விஜிலென்ஸ் கமிஷ்னருக்கு போனைப் போடப்போறேன். நீங்க முடிஞ்சதைச் செஞ்சுக்குங்க! அனேகமா இதுதான் உங்களுக்கு கடைசி வேலை நாளாக இருக்கும்’ என்று சொல்லிவிட்டு என் போனில் எண்ணைத் தேட ஆரம்பித்தேன்.

அதற்குள் அவர்..
’சார்..அது ரிஸர்வேஷன் சீட்டு சார்.. ஆள் ஏறலைன்னா நீங்க உக்காந்துக்குங்க’ என்று கொஞ்சம் இறங்குவதுபோல் பேசினார்.

’அதெப்படி..ரிஸர்வேஷன் சீட்டுன்னு ஏறும்போது தெரியாதா? ஓஹோ..400 ரூபாய் எவன் குடுக்குறானோ அவன்தான் ரிஸர்வ் செஞ்சவன்…அவன் தான் வி.ஐ.பியும் கூட…!’ என்று கத்த ஆரம்பித்தேன்.

‘சரி.உக்காருங்க!’என்று கோபமாக என்னை முறைத்துவிட்டு, தன் இருக்கையில் போய் அமர்ந்துகொண்டார்.

உடனே நண்பர் கேபிள் சங்கருக்கு அழைத்துப் பேசினேன். நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டேன்.

பேருந்து போய்க்கொண்டே இருந்தது. செங்கல்பட்டு தாண்டும்போது, என் அருகில் வந்தார். ஒரு டிக்கெட்டை எடுத்துக்கொடுத்தார்.

அதை வாங்கிப் பார்த்தேன். ரூபாய். 325 என்று போட்டிருந்தது.

இது இன்ப அதிர்ச்சி.! .நடத்துநர் என்னிடம் 50ரூபாய் அதிகம் என்று சொன்னதும் பொய்..! நிமிர்ந்து அவரைப்பார்த்தேன் அவசரத்துக்கு ஏறும் பயணியிடமிருந்து 75 ரூபாய் கறக்க முயற்சிக்கும்..ரத்தக்காட்டேரியாக எனக்குத் தெரிந்தார்.  இதில் கொடுமை என்னவென்றால்..சபரிமலைக்கு மாலை வேறு போட்டிருந்தார்.
சிரித்துக்கொண்டே, பணத்தை எடுத்துக்கொடுத்தேன். அப்போது சொன்னேன்.
’எப்புடி? வருஷம் முழுக்க இப்படி கொள்ளையடிக்கிற பாவத்தைக் கழுவத்தான் சபரிமலைக்குப் போறதா?’

பதிலே இல்லை!

இடையில் வண்டி ஓரிடத்தில் நின்றபோது… என்னருகில் வந்து நடத்துநர் கேட்டார்.. 
‘சார்…எந்த டிப்பார்ட்மெண்ட்டு?’

‘ம்…பப்ளிக் டிப்பார்ட்மெண்ட்!’

’இல்லை சார்..! இந்த சம்பவத்தை பெரிசு பண்ணிடாதீங்க ! இனிமே இப்படி நடக்காது!’

’இன்னிக்குத்தானேங்க உங்களுக்கெல்லாம் சம்பளம் அதிகமாக்கி முதல்வர் அறிவிச்சிருக்காங்க! (அன்றுதான் போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு பற்றிய செய்தி படித்திருந்தேன்.)அதுவே எங்க காசை அடிச்சுப்பிடுங்கித்தானே கொடுக்குறாங்க..அப்புறம் என்ன மறுபடியும் ஸ்பெஷலா நீங்க வேற அடிச்சுப்பிடுங்குறீங்க?’ என்று சொல்லிவிட்டு…அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

இதில் மிகப்பெரிய அவலம்.. அந்தப் பேருந்தில் என்னுடன் பயணம் செய்த மற்ற 35 பேரும் நடந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, வாயை மூடிக்கொண்டு இருந்ததுதான்!

ஒன்றுமட்டும் நிச்சயம்!

தட்டிக்கேட்க வக்கில்லாத சமூகம் நாசமாய்த்தான் போகும்!
ஆனால்..தட்டிக்கேட்டால்….எல்லாமே கிடைக்கும்!

ஆம்..கேட்டால்.. கிடைக்கும்!



Sunday, December 18, 2011

கீசக வதம்





மெரினா காந்தி சிலையில் நடந்த ஒரு பதிவர் சந்திப்பில் அறிமுகமானவர்தான் அந்தப் பதிவர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு சில நாட்களில் என்னைத் தொடர்புகொண்டார். திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் காரணமாக,, திரையுலக நடிப்பு வாய்ப்புகள் பற்றிக் கேட்டார். பேசிக்கொண்டிருந்தோம். நல்ல திறமைசாலியாகத் தெரிந்தது. அடிக்கடி சந்தித்தோம். பல்வேறு விஷயங்களில் தெளிவு நிறைந்தவராகத் தெரிந்தார்.

சினிமாவில் நடிக்கவேண்டும் என்று சும்மா சொல்லிக்கொண்டிராமல், உண்மையான அக்கறை இருந்ததால், கூத்துப்பட்டறையிலிருந்து வெளிவந்த தேவி அவர்கள் நடத்தும், ‘தி விருக்‌ஷா ‘ என்ற நடிப்புப் பட்டறையில் பயிற்சி எடுத்துவருவதாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் பட்டறையின் படைப்பாக ‘கீசக வதம்’ எனும் கூத்தில் தானும் நடித்திருப்பதாகச் சொன்னார். 17ம் தேதி (நேற்று) மாலை , அதன் அரங்கேற்றம் என்று அழைத்தார். என் பங்குக்கு திரு.லிவிங்ஸ்டன் அவர்களை அழைத்தேன். அவரும் வந்தார்.

சாலிக்கிராமம், எம்.ஜி.ஆர். ஜானகி பள்ளி வளாகத்தில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டு, வித்தியாசமான ஒளி அமைப்புடன் கூத்துக்குத் தயாராக இருந்தது.

சரியாக 7:15க்கு கீசக வதம் கூத்து ஆரம்பமானது.

பாண்டவர்கள், 13 ஆண்டு வனவாசத்தில், கடைசி ஒரு ஆண்டை அஞ்ஞாத வாசம் எனப்படும் , அடையாளம் தெரியாமல் மறைந்துவாழும் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். விராட நாட்டு மன்னரிடம் வந்து கூத்தாடிகளாக அறிமுகப்படுத்திக்கொண்டு, வெவ்வேறு வேலைகளில் அமர்கிறார்கள். விராட மன்னனின் மச்சினன் (மனைவியின் தம்பி) கீசகன். அவன் வருணனையே கட்டுப்படுத்தும் சூரன். அவனுக்கு சைரேந்திரி என்ற பெயரில் வந்திருக்கும் திரௌபதியின்மேல் மோகம்.! தன்னை அடைய முயற்சிக்கும் அவனிடமிருந்து காக்கும்படி – சமையற்காரனாக வாழும் – பீமனிடம் அவள் கேட்க, அவன் கீசகனை தந்திரமாக வரவழைத்து வதம் செய்கிறான்.

இந்தக் கதையை எடுத்துக்கொண்டு மிக இயல்பாக , தேர்ந்த நடிகர்களுடன்  ஒரு மணிநேரம் மிகச்சிறப்பாக நடித்துக்காட்டினார்கள்.

தருமர் (பிரதீப்) தான் கதைசொல்ல ஆரம்பிக்கிறார். தங்கள் நிலையை எடுத்துரைக்கிறார். தன் கூட்டத்தை கூத்தாடிகள் என அறிமுகப்படுத்துகிறார். விராட மன்னனிடம் வேலை கேட்கிறார். மன்னனுடன் விளையாட்டுக்குச் சூதாடுகிறார். நிறைய விபரங்கள் பேசுகிறார். பிரச்னைகளின்போது மட்டும் வாயை மூடி மன்மோகனாய் இருக்கிறார். மது அருந்திவிட்டு சௌமியனுடன் கட்டி உருள்கிறார். சைரேந்திரியை கீசகன் சீண்டுகிறான் என்று தெரிந்து, உள்ளம் குமுறி கூத்தாடிகள் நிலைபற்றி ஒரு பாடல் பாடுகிறார். இந்தப்பாடலை எழுதியதும் ப்ரதீப் தான் என்பது கூத்து முடிந்தபின்தான் எனக்குத் தெரியவந்தது. தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்து, வசனங்களின் ஏற்ற இறக்கங்களில் சரியாகப் பயணித்து கைதட்டல் பெறுகிறார். மது அருந்திவிட்டு, சௌமியனுடன் பேசும் மொழியைக் கண்டு நானும்,லிவிங்ஸ்டன் அவர்களும் மனம் விட்டுச் சிரித்தோம். கூத்தாடிகளின் வாழ்வுபற்றிப் பாடிய பாடலின் முடிவில் எனக்குக் கண்ணில் நீர் வழிந்தது. தென்றல் படத்தின் ‘தாண்டவக்கோனே’ பாடலின் கடைசிவரிகளில் ஏற்படும் அதே உணர்வு எழுந்தது. உயரம் தொட வாழ்த்துக்கள் ப்ரதீப்.!

சுல்தான், வல்லன்(பீமன்) எனப்படும் சமையற்காரனாகவும், விராட மன்னனின் மனைவி அரசி சுதர்சனையாகவும் வருகிறார். அரசியாக வரும்போது அந்த நெளிவுகளும், ஒரு பெண்ணின் பொறாமையை உடல்மொழியில் காட்டியும் பிரமாதப் படுத்துகிறார். மன்னனுக்கு மது ஊற்றிக்கொடுக்கும் வல்லனாக வரும்பொழுது அப்படி ஒரு மாற்றம். கூத்தின் பாதி வரை, அவர்தன் இரு வேடங்களும் செய்கிறார் என்று திரு.லிவிங்ஸ்டனே கண்டுபிடிக்கவில்லை. அந்த அளவுக்கு வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார். கீசகனை வதம் செய்யும்போது உண்மையிலேயே அவரை ஏதாவது செய்துவிடுவாரோ என்று அஞ்சுமளவுக்கு ஆவேசம் காட்டுகிறார்.


டாக்டர். ரஞ்சித் பிரகனளை (அர்ஜுனன்) எனப்படும் திருநங்கையாக வருகிறார். விராட மன்னனைச் சூடேற்றுகிறார். தன்னுடைய நெளிவு சுளிவுகளால் , பின்னுகிறார். விக் வைத்திருந்தால் பெண் என்றே கூட்டம் நம்பிவிடும்.

நகுலன் , சகாதேவனாக முறையே பாலாஜியும், ராஜ்குமாரும் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை. ஆனால் பாலாஜி சூரியக்குஞ்சு எனும் பாத்திரத்தில் வந்து ஒரு ஆட்டம் ஆடிவிட்டுப் போகிறார்.

சைரேந்திரியாக வைஷாலி என்ற ஆந்திரப்பெண்ணை நடிக்கவைத்திருக்கிறார்கள். பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். பூப்பறிக்கும் காட்சியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஆனால், எல்லோரும் நல்ல தமிழ் பேசி நடிக்கும்போது, அவரது தமிழ் மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது.

சௌமியராக வரும் சுரேஷ், பின்னியிருக்கிறார் மனிதர்.. அவரது நடிப்பு ஒரு தேர்ந்த நகைச்சுவை நடிகருக்கான அத்துணை கூறுகளையும் கொண்டிருக்கிறது. அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு அவர் அடிக்கும் குட்டிக்கரணங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன.

கீசகனாக வரும் ராம்குமாரிடம் பசுபதியின் அங்க அசைவுகள் தெரிகிறது. கீசகனாகவே வாழ்கிறார். சைரேந்திரியை மோப்பம் பிடிக்கும்போதும்..போதையில் புலம்பும்போதும் … சிறப்பாகச் செய்திருக்கிறார்.

விராட மன்னனாக நீல் ஆனந்த் , உணர்ந்து நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் திடீரென்று தலைப்பாகை கட்டிக்கொண்டு வந்து சிலம்பம் சுழற்றுகிறார். அரசனாக, மது அருந்தும் காட்சியிலும், பிரகணளையிடம் வழியும் காட்சியிலும் பிரமாதம்.!

அரசியின் தோழியாக விஜயா, உதட்டசைவை வைத்து, பேசுவதைச் சொல்லும் காட்சியில் அங்கதம் நன்றாக இருக்கிறது.

காவலாளியாக புருஷோத்தமன் , ஆரம்பக்காட்சியில் அவர் தனது நகைச்சுவை நடிப்பை நன்கு வெளிப்படுத்தி கவனம் கவர்கிறார்.

    
   சரித்திரக் கூத்துக்களைப் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. தஞ்சையில் இருந்தபோது, மெலட்டூரில் ஒரு முறை ஹிரண்ய வதம் பார்த்தேன். இப்போது கீசக வதம்! கூத்தின் அத்துணை அம்சங்களும் குறையாமல், அதே சமயம் சில இடங்களில் நவீன நாடக அம்சங்களையும் கோர்த்து, அரங்கப் பொருட்களில் ஒன்றாக மைதானத்திலுள்ள மாமரம் ஒன்றைப் பயன்படுத்தி , ஒரு நல்ல கூத்தினை அளித்திருக்கிறார்கள் டி விருக்‌ஷா குழுவினர்.!

எழுத்து - கூத்துப்பட்டறை திரு.முத்துச்சாமி
வடிவமைப்பு – திரு.ஆனந்தக் கண்ணன்
இயக்கம் – செல்வி. G. தேவி

இந்தக்கூத்தில் சிறப்பாக நடித்திருந்து, என்னையும் அழைத்த அந்தப் பதிவர்தான் தருமராக நடித்திருந்த...



Wednesday, December 14, 2011

அணைக்க வேண்டுமா அணைக்காக?




      ஆற்றுநீரைத் தேக்கி வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்பதோ, இந்த அளவுக்குமேல் தேக்க விடமாட்டேன் என்பதோ, உன் பராமரிப்பில் உள்ள அணையை உடைத்துவிட்டு, நான் புது அணை கட்டிக்கொள்வேன் என்பதோ  ஏதோ ஒரு விதத்தில் அண்டை மாநிலங்கள் நம்மை ஒரு மாநிலமாகக் கூட மதிக்காமல் அராஜகப்போக்கை காட்டிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் நாம் இன்னும் ஒற்றுமை..தெருப்புழுதி என்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறோம்.

         அணைக்காக உங்களை நாங்கள் அணைத்துப்போவதாக இல்லை என்றால். பின்னர் நாம் மட்டும் ஏன் அணைக்கவேண்டும்? அதுவும் அரவணைக்க வேண்டுமாம். தவறு இரு மாநிலத்தின் மேலுமில்லை. மத்திய அரசு என்ற போர்வையில்..அடித்துக்கொண்டு சாகட்டும். அப்போதுதான் நம் குற்றம் வெளியில் தெரியாது என்று 2ஜி, க்வோத்ரோச்சிகளை கக்கத்தில் அதக்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் அயோக்கிய அரசுதான் காரணம்.!

யார் பேச்சையும் கேட்காமல், பொது தேசத்தின் நீதிமன்றத்துக்கும் கட்டுப்படாமல், எப்போது உனக்கு ஒன்றும் தருவதற்கில்லை என்று ஓரங்கட்டிவிட்டார்களோ, அப்புறம் என்ன அண்டை மாநிலம்..?   ஆனாலும்.. நம் சொரணை கெட்டத்தனத்தில் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கைதான்..!!

       தமிழனை அடிக்கவேண்டுமென்று முடிவெடுத்து அவர்கள் அடிக்கிறார்கள் என்றால், திருப்பி அடிப்பதிலாவது கொஞ்சம் மாற்று அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்கலாம்.

       ஆனால்..அதற்கு உண்மையில் உணர்வு வேண்டும். முல்லைப் பெரியாரைக் காக்கவேண்டும் என்று போராடிவிட்டு..அக்கா மகள் திருமணத்துக்கு ஆலூக்காஸில் நகை வாங்கினால்..அந்தக்காசை அவர்கள் ஊருக்கனுப்பி இன்னும் நான்கு உருட்டுக்கட்டைகள் வாங்கி நம் வண்டியைத்தான் அடிப்பார்கள்.

        ஆனால்..இங்கு அவர்கள் நடத்தும் எந்த ஒரு கடைக்குள்ளும் நுழையாமல் சிரித்துக்கொண்டே கடந்து பார்ப்போம்.வியாபாரம் இல்லாமல் வேகவைத்தல்தான் அடிக்காமல் நொறுக்காமல், அழவைக்கும் அணுகுமுறை! ஏன் கடைக்குள் வரவில்லை என்று நம்மை போலீஸ் கேள்வி கேட்கமுடியாது.

      அதேபோல், அவர்களுக்கான பொருட்களை அனுப்புவோம். அதற்கான வருமானத்தையும் அள்ளுவோம். அதை அவர்களாகப் புறக்கணிக்கவே முடியாது.

தங்கம் வாங்குவதைத் தவிர்க்கலாம்..காய்கறிகளை? அரிசியை?....

       அப்போதுதான் வாங்காமலும் இருக்கமுடியாமல், தன் பொருளை விற்கவும் முடியாமல் வித்தியாசமான கண்ணியில் சிக்கும்  அதிர்ஷ்டம் கேரளர்களுக்கு வாய்க்கும்.!

      கொடுக்கிறேன்.ஆனால் வாங்கமாட்டேன்.. என்று ஆரம்பித்தாலே ஆட்டம் களைகட்டுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அணைப்பது பலவீனத்தைப் பறைசாற்றும்!  
அடிப்பது, வாதத்தின் பலம் நீக்கும்!

இப்படி நாம் என்னதான் தீர்வுக்காகப் புலம்பினாலும்..

இந்த அரசியல்வாதிகளின் அமோக ஆதரவில்…..கன்னித்தீவுக்கு இனி முல்லைப்பெரியாறுதான் கடுமையான போட்டி!

ஒன்றுமட்டும் நிச்சயம்!!

காந்தித்தனம் நன்றுதான்…
எதிராளி ஆங்கிலேயனாக இருக்கும் பட்சத்தில்..! 

இந்தியனென்ற போர்வையிலிருக்கும் எவனுக்கும் ...
டையர்த்தனம்தான் நன்று! 

Saturday, November 26, 2011

ட்விட்டுரை





பல்வேறு காலகட்டங்களில் நான் ட்விட்டிய உரைகளின் தொகுப்பு 


தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் டைப் செய்து , அதைப்படிக்கும்போது கண் கன்பியூஸ் ஆகுது. ! அடித்தவர் கையை கடித்துவிடலாம்போல் உள்ளது

காந்தி எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்று யாருக்கும் தெரியாது.ஆனால் நாம் சம்பாதிக்கும் எல்லா பணத்திலும் காந்திதான் இருக்கிறார். சுரேகாத்துவம்!


சும்மா இருக்கும்போது அயன் பண்ணியிருக்கலாமுல்ல? - தங்கமணி! அப்ப அயன் பண்ணினா நான் எப்ப சும்மா இருக்குறது? - #அடி தாங்கலை!


என்னது? முகப்புத்தகத்தில் அவர் பெயர் ஹாரிஸ் ஜெயராஜ் நாடார்ன்னு இருக்கு!! இது வேறயா? #கலைஞனுக்கும் ஜாதி உண்டு!


அடுத்த பிறவியில் புரோட்டா செய்யத்தெரிந்த பெண்ணை மணக்கவேண்டும். புதல்வனின் புரோட்டா வெறிக்கு........முடியலை!


பெரிய கடைகள் புறக்கணித்து...சிறிய கடையொன்றில் துணிகள் அள்ளினோம். உபசரிச்சு மகிழ்ந்தார் வியாபாரி! தி நகரில் மரியாதை தெருவில் திரிகிறது.


காசும், கண்ணியமும் கொடுத்தால், கடைச்சரக்கு வீட்டுக்கு வரும்.. பிரம்மாண்டமாய்களில்...!


இளைய தலைமுறை படிக்கட்டும்னு அய்யா நினைச்சார்..இல்லை.. மொதல்ல படுக்கட்டும்னு அம்மா முடிவெடுத்திருக்காங்க! #இனிமே ஓட்டுப் போடுவ?


நல்லவேளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பாலெல்லாம் லிட்டர் கணக்கில் விக்கலை! இல்லைன்னா திருக்குறள் இன்னிக்கு என்னா விலை விக்கும்?


நம்மை ஏதோ காமக்கொடூரன்போல் பாவித்து ஒரு பாதுகாப்புக்காக என்றெண்ணிஅண்ணாஎன்று அழைப்பவர்களை எப்படிக் கொன்றால் தகும்?


கடினமாக உழையுங்கள். ஆனால், குடும்பம், நட்பு ஆகியவற்றுக்கு நேரம் ஒதுக்குங்கள். செத்தால் எவனும் நமது PPT நினைவு கொள்வதில்லை.


பிச்சை: ஒருரூவா குடுங்க சாமி! ஆசாமி: நாளைக்குத் தரேன்! பிச்சை: இப்புடீ சொல்லி சொல்லியே இந்த ஏரியாவில் எனக்கு லட்சரூபாய்க்கிட்ட வரணும்!


மாயாவதி, மம்தா, ஜெயலலிதா, சோனியா! இவ்வளவு பேரும் பண்றதைப் பாத்துட்டும்... இன்னும் தாய் நாடுன்னு சொல்லி கன்னத்துல வேற போட்டுக்குறோம்.

நாலாய்ப் பிரித்த மாநிலத்தில், மற்ற மூன்றிலும் என் சிலை ஆளும் - யாரு? யாரோ!!


இலவசமா கிடைக்கிற மிக்ஸி, கிரைண்டரை அம்மா வூட்டுல குடுத்து அஞ்சு வருஷ பஸ் பாஸ் தரச்சொல்லி கேக்கலாமா?


எங்க அப்பா இப்புடி அடிச்சு வளத்திருந்தாருன்னா, இப்புடி இந்த சர்தார்ஜிசளுப்புன்னு இழுத்திருப்பானா? - #யாரு? யாரோ!

திரையுலக வெற்றியை நினைத்தால் பெருமையில் நெஞ்சம் விம்முகிறது # லத்திகா 175வது நாள்!

இனிமே பவர் கட் பத்தி பேசுவ? இதுவரை செலவழிச்ச யூனிட்டுக்கு முதல்ல பணம் சம்பாதிக்கிற வழியப்பாரு! அடுத்தவாரம் இருக்குடீ ஆப்பு! #யாரு
யாரோ!


அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்வாழ்க! அப்ப அண்ணா!? போடா வெண்ணை! சமச்சீரை நசுக்கினப்பவே மாத்தியாச்சே ! தெரியாதா? #யாரு? யாரோ!


இனி தமிழில் புது வார்த்தைகள் உருவாகும். ட்விதை, ட்விறுகதை, ட்விச்சுவை, ட்விட்டூழியம், ட்விட்டுரை,..இன்னபிற..!


அப்பா! இன்னிக்கு கிருஷ்ணர் பாப்பா வருவராமே? எந்த ஜட்டி போட்டுக்கிட்டு வருவார்? என் பொம்மையை பிடுங்கிக்க மாட்டாரே? - சின்ன தேவதை!!


மரியாதையா சீக்கிரம் ரெடியாகுறீங்களா இல்லையா? - வரலட்சுமி நோம்பு மரியாதை!


ஆட்டாம்புழுக்கை போல் ஒரு நாடு ஆட்டம்போடுகிறது. கூட்டணி கொள்ளை காக்க தமிழன் வெட்டுப்பட்ட ஆடாகிறான்! #tnfisherman


திருப்பதியில் எங்களுடன் வரிசையில் வந்த ஆள்..பாவம்! பரம ஏழையாம். 2000 கோடி ரூபாய்தான் வருட வியாபாரம் என்று 8000 டாலர் உண்டியலில் போட்டார்.


வானத்துக்கூரையில பொத்தல் யாரு போட்டுவச்சா? வெளிச்சமெல்லாம் வழியுதுங்க! விண்மீனாப் பொழியுதுங்க!


ட்விட்டுதல் ட்வீட்டர்க்கு அழகு அன்றில் ஃபாலோயர் பத்துக்கும் கீழ்வரும்.


நின்னு சம்பாதிச்ச பாலாஜிய விட, படுத்து சம்பாதிச்ச பத்மநாபந்தான் கிங்கு! அதுனால வேலைக்குப்போகச்சொல்லாத! படுத்திருக்கேன்! #கொய்யால

அலைவரிசைத்தொழில் - கலைஞர் ராசா, கொலைவரிசைத்தொழில்- இலைங்கை ராசா! - இரு அரசும் நட்புகொள்ளக் கூசா!#tnfisherman


மாட்டுப்பொங்கலும்...மாடில்லாமல் கழிந்தது...! இனிவரும் காலத்தில் தைப்பொங்கல், பொங்கலில்லாமலும் கழியும்!


சட்டைப்பையில் கனமில்லாமல், புத்தகக்காட்சி போகும்போது, மற்றவர்களை கையில் புத்தகக்கனம் பார்த்து....மனம் கனக்கிறது!


கட்டெறும்பை நசுக்கினா, அது அடுத்த ஜென்மத்தில் நம்பளை நசுக்குமாம்! டேய்! போன ஜென்மத்தில் நான் எறும்பு! அது என்னை நசுக்கினுச்சு தெரியுமில்ல?


நான் சோகமாக இருக்கும்போது பாடத்தொடங்குவேன். சுற்றியிருப்பவர்கள் சோகமாகிவிடுவார்கள் #புலம்பல்

எப்போதும் கையில் ஒரு சுத்தியோடே திரிந்துகொண்டு இருந்தால், சுற்றி இருப்பதெல்லாம் ஆணிகளாகத்தான் தெரியும்! அப்ப கையில் ஆணிகளோட திரிந்தால்?


சீக்கிரமாக எழுந்திருக்கும் பறவைக்குதான் புழு கிடைக்கும். அப்ப சீக்கிரமா எழுந்திருக்கும் புழு? கோவிந்தாவா? #தத்துவ சந்தேகம்!


புன்னகை புரியுங்கள். நாளை இதைவிட மோசமாகத்தான் இருக்கும் # புலம்பல்

சென்னை உப்பி வெடித்துவிடும் போலிருக்கிறது. திண்டிவன மனை வியாபாரிக்கு....அவர் வீட்டுமனை சென்னைக்கு மிக அருகிலாம்..!!!


இன்ஸ்பெக்டர் அய்யா! வீட்டுல பூட்டை ஒடைச்சு எடுத்துட்டுப்போயிட்டாங்க! ஒடஞ்ச பூட்டை எடுத்துட்டுப்போய் என்னய்யா பண்ணுவான்?

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...