Saturday, January 2, 2010

நம்புங்க டீச்சர்! - 2



8ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்துவிட்டு... 9ம் வகுப்பில் தனியார் பள்ளியில் சேர்ந்த அந்த இரண்டு பெண்களும் தாங்கள் அரசுப்பள்ளியிலிருந்து வருகிறோம் என்பதால் ஏற்பட்ட அவமானத்துடன் சென்ற இடம்..

தங்களது அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் வீடு..! அவரிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களைச் சொல்லி..

நம்ம பள்ளியோடம்னா ரொம்ப பெருமையா நெனச்சுக்கிட்டு போனோம் சார்! ஆனா கவருமெண்ட் பள்ளியோடம்னா அவ்ளோ மட்டமா? ன்னு கேட்டு அழுக ஆரம்பித்துவிட்டார்கள்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட.. அந்த தலைமை ஆசிரியர்..

நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு போங்க! நான் பாத்துக்குறேன் என்றார்.

அடுத்தநாள் நேராக அந்தத் தனியார் பள்ளிக்குச்சென்றார்.
தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று ..

'நான் ஒரு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்..தயவு செஞ்சு 9ம் வகுப்புக்கு ஆங்கிலம் மற்றும் கணக்கு எடுக்கும் டீச்சர்களை வரச்சொல்லுங்க சார்..ஒரு பிரச்னை இருக்கு !' என்றார்.

அந்தத் தலைமை ஆசிரியர் கொஞ்சம் விவாதிக்க நினைத்தாலும்....என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் அவர்களை அழைத்துவரச்செய்தார்.

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரம்பித்தார்.

மேடம்..! நீங்க அந்த ரெண்டு பிள்ளைங்களையும் அரசுப்பள்ளில படிச்சதுக்காக அவமானப்படுத்தினீங்களாம். அரசுப்பள்ளிகளைப்பத்தி நீங்க என்ன அபிப்ராயம் வச்சிருக்கீங்க? அதுவும் எங்க ஊரில் இருக்கும் அரசு நடுநிலைப்பள்ளி பத்தி என்ன அபிப்பிராயம் வச்சிருக்கீங்க?

ஆசிரியையகள்...ஏதோ விவகாரம் இருக்கிறது என்று உணர்ந்தாலும்..தன் தவறை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாய்...

எல்லா அரசுப்பள்ளிகளுமே மோசம்தான்..ஆசிரியர்கள் வாங்குற சம்பளத்துக்கு வேலை பாக்குறதில்லை.! பிள்ளைகளின் எதிர்காலத்தில் அவுங்களுக்கு அக்கறையே இல்லை ! எங்களுக்குத்தெரிஞ்சவரைக்கும் எந்த அரசுப்பள்ளியில் படிச்ச பிள்ளையும் எங்க ஸ்கூல்ல வந்து பிக்கப் பண்ணினதே இல்லை... அதுனால எங்க தனிப்பட்ட தேர்ச்சி விகிதம் காட்ட முடியாம போய்டுது...! என்றனர்.

அந்தப்பிள்ளைகளை எந்தப்பாடத்தில் வேணும்னாலும் நீங்க சோதிச்சுக்குங்க! அவுங்க ஜெயிப்பாங்க! ஏன்னா நான் அந்தப்பள்ளிக்கூடத்தை...ஜெயிக்கிற பிள்ளைங்களை உருவாக்குறதாத்தான் நடத்திக்கிட்டிருக்கேன். வேணும்னா ஒரு சவால் விடுறேன். இந்த வருஷம்னு இல்லை. 10வது, 12வது பொதுத்தேர்விலயும் உங்க பள்ளியின் முதல் ரெண்டு இடங்களை அவங்கதான் எடுப்பாங்க! முடிஞ்சா நியாயமா க்ளாஸ் எடுத்துப்பாருங்க! என்றார்.

இல்லை சார் ! நாங்க அதுக்காகச் சொல்ல வரலை!

எதுக்காகச்சொல்லியிருந்தாலும் சரி மேடம்! நீங்கல்லாம் கண்டிப்பா தனியார் பள்ளில படிச்சுட்டு வந்திருக்க வாய்ப்பே இல்லை. அரசுப்பள்ளில படிச்சிருக்கணும். அப்படிப் படிச்சு முன்னேறி..இப்ப ஒரு தனியார் பள்ளில டீச்சரா இருக்கீங்கங்கிற காரணத்துக்காக....அவுங்களை அவமானப்படுத்துறதை நிறுத்துங்க! எல்லாரையும் சமமா பாவிச்சு..சொல்லிக்குடுங்க! யாரு ஜெயிக்கிறாங்கன்னு பாப்போம்..! என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் அந்த தலைமை ஆசிரியர்.

அதேபோல்...10ம் வகுப்பிலும், 12ம் வகுப்பிலும் அந்த இரு மாணவிகளும்தான் முதல் இரண்டு இடங்களைப்பிடித்தார்கள்.

சத்தமில்லாமல் இந்தச்சாதனையைச் செய்துவிட்டு இன்னும் இது போன்ற அற்புத மாணவர்களை அனுப்பிக்கொண்டே பள்ளியை முன்னேற்ற சிந்தித்துக்கொண்டிருக்கிறார் அந்தத் தலைமை ஆசிரியர்..

திருச்சி மாவட்டம்...மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஆ. டேனியல் ஜான் கென்னடிதான் அவர்!

அவர் பள்ளிக்குச் செய்திருக்கும் சாதனைகள்! ....


(தொடரும்..)

Friday, January 1, 2010

முதல் நாள்!



காலப்பெட்டியின்
ஒரு அடுக்கை
திரும்பிப்பார்க்கவும்
அடுத்த அடுக்குக்குள்
நுழைந்து கொண்டு
ஏதாவதுகளை
அடைப்பதற்கும்
எல்லோருக்கும்
ஒரு நாள் தேவைப்படுகிறது!

சென்ற ஆண்டின்
தவறுகளுக்கும்
வாழ்நாள்
தவறுகளுக்கும்
மூடுவிழா நடத்த
எண்ணி
முழுமூச்சாய்
முடிவெடுக்க
எல்லோருக்கும்
ஒரு நாள் தேவைப்படுகிறது.

இனிவரப்போகும்
வாழ்க்கையின்
வரையறைகளை
நோக்கத்தோடு
ஏற்றுக்கொள்ளவும்
நோக்கத்தை
மாற்றிக்கொள்ளவும்
எல்லோருக்கும்
ஒரு நாள் தேவைப்படுகிறது.


நடு இரவை
நாளின் முதலாய்
நிறைய நாட்கள்
பார்த்தாலும்
உள்ளம் கவர்ந்தோரின்
பிறந்தநாள் தவிர
கொண்டாட்டம்
நிறைந்த இரவாக்க
எல்லோருக்கும்
ஒரு நாள் தேவைப்படுகிறது.


அந்த நாள்
இந்த நாளாய்
இந்த நாள்
நம் சொந்த நாளாய்
அமைந்திருத்தல்
அன்பு காட்டவே!

அன்புகாட்டிய
அனைவருக்கும்
நன்றியால்
அன்பு சொல்லி..

அழகான
ஆண்டு ஒன்று
நம் மடியில்
தவழ்கிறது.
அன்புகொண்டு
ஆராதிப்போம்
அத்தனையும்
வெற்றியாக!




Thursday, December 31, 2009

2010ஏ வருக!

இந்த ஆண்டும்
வாழ்வை வளமையாக்கும்
இன்னொரு ஆண்டாக அமையட்டும்.

நல்ல நண்பர்கள்
நல்ல குடும்பம்
நல்ல வாசிப்பு
நல்ல படைப்பு
என எல்லாமே
நம் பதிவர்கள் அனைவருக்கும் தொடரட்டும்..

“The woods are lovely, dark and deep. But I have promises to keep, and miles to go before I sleep.”


- Robert Frost.

2 0 1 0 ஏ வருக..! உனக்கும் நிறைய வேலை இருக்கிறது!


நம்புங்க டீச்சர்!

அந்தத்தனியார் பள்ளியில் போய் 9ம் வகுப்பில் சேர்கிறார்கள் இரண்டு சிறுமிகள். முதல் நாள் ! முதல் வகுப்பு!

ஆங்கில ஆசிரியை வருகிறார்.. அனேகமாக எல்லோரும் அந்தப்பள்ளியிலேயே 8ம் வகுப்பு படித்துவிட்டு 9ம் வகுப்புக்கு வரும் மாணவிகள். புதிதாகச்சேர்ந்த சொற்ப மாணவிகளை எழுந்து அறிமுகப்படுத்திக்கொள்ளச்சொல்கிறார் ஆசிரியை ! அதில் இந்த இருவரைத்தவிர மீதமுள்ளவர்கள் எல்லோரும் முன்னர் படித்ததாக,ஒரு தனியார் பள்ளியின் பெயரைச்சொல்கிறார்கள். இவர்கள் முறை வரும்போது..எழுந்து தங்கள் பெயர் சொல்லிவிட்டு...8ம் வகுப்பு படித்தது...அரசு நடுநிலைப்பள்ளி என்று சொல்கிறார்கள்.

உடனே அந்த ஆசிரியை எகத்தாளமாக சிரிக்கிறார். கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சுட்டு வந்துட்டு...எந்த நம்பிக்கைல இந்த் ஸ்கூல்ல வந்து சேந்த? எங்க ஸ்டாண்டர்ட் என்னன்னு தெரியுமா?

இல்ல டீச்சர்..நாங்க நல்லா படிப்போம்.!

ஆமா..கிழிச்சீங்க! எங்க நான் ஒரு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லுங்க பாப்போம். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!
ஆங்கில உயிரெழுத்துக்கள் எல்லாம் வர்ற மாதிரி ஒரு வார்த்தை சொல்லு!

EDUCATION என்று பட்டென்று பதில் வருகிறது..

ஆமா.. இது மட்டும் சொல்லிக்கொடுத்திருக்காங்க...அந்த ஸ்கூல்ல இங்கிலீஷ் டீச்சர் மட்டும் நல்லா நடத்தி இருப்பாங்க! போகப்போக பாப்போம்! ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டா புத்திசாலின்னு அர்த்தமாயிடுமா?
அமிலமாய்த்தெரிக்கின்றன வார்த்தைகள்!

அடுத்த பாட நேரம்...
இப்போது கணித ஆசிரியை..

முதலில் எல்லாம் அச்சுப்பிறழாமல்... இதே விசாரிப்புகள், இதே நக்கல்கள்...இதே சாடல்கள்..!

கணிதம் நடத்த ஆரம்பித்து....ஏதோ ஒரு வழிமுறையில் ஆசிரியை திணறி நின்று....கரும்பலகையையே முட்டிக்கொண்டு நிற்க...

அழகாக எழுந்து சென்று...டீச்சர்..என்று அருகில் சென்று அழைத்து..அவர்கள் செய்த தவறைச்சுட்டி அந்த இடத்தில் திருத்துகிறாள் அந்த அரசுப்பள்ளியிலிருந்து வந்த பெண்ணில் ஒருத்தி!

இவரும் அதையே சொல்கிறார்.... ஆமா..உங்க கவர்மெண்ட் ஸ்கூல்ல கணக்கு டீச்சர் மட்டும் ஒழுங்கா நடத்தி இருப்பாங்க!

ஏற்கனவே அரசுப்பள்ளி என்றால் மட்டம் என்பதுபோல் அனைவரும் பார்த்திருக்க...இரண்டாவது ஆசிரியையும் இவ்வாறு கூறுவதைக்கேட்ட மறுவிநாடி...அந்தப் பெண் பிள்ளைகள் இருவரும் ஓ..என அழுக ஆரம்பிக்கின்றனர்...

அன்று முழுவதும்...பல்லைக்கடித்துக்கொண்டு ஓட்டிவிட்டு...மாலை நேராக அவர்கள் சென்ற இடம்..!?

(தொடரும்)


Wednesday, December 30, 2009

கல்விக்கடன்..ஒரு பின்னூட்டமே.. பதிவாக...


கல்விக்கடன் குறித்த...என் முந்தைய பதிவுகளைப்படித்துவிட்டு..திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பின்னூட்டமாக எழுதியிருந்த கருத்துக்களே இந்தப் பதிவாகிறது.....! ஒரு முன்னாள் வங்கியாளராக தனது கருத்துக்களை மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளார். திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ! இடையிடையே எனது விளக்கம் மட்டும்....

ஒரு முன்னாள் வங்கியாளனாக இந்த மூன்று பதிவுகளையும் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தேன்.

முதலில், இந்த மூன்றாம் பகுதியில் இருக்கும் சில விஷயங்களைப் பற்றி....

என்ன வரையறைக்கு உட்பட்டு , கடன் கொடுக்கலாம் என்பதை யாரும் சொல்லவே இல்லை என்று சொல்லியிருப்பது சரியல்ல.

வரையறைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், அன்று நிதியமைச்சராக இருந்த பானா சீனா என்ன செய்தார்? கல்விக் கடன் கொடுக்க மறுக்கிறார்களா, எனக்கு ஒரு போன், தபால் கார்ட் போடுங்கள், தலையைச் சீவுகிறேன் என்ற மாதிரி மிரட்டல்கள்! கொஞ்ச நாட்களில், அதுவும் அலுத்து விட்டது.

இதைத்தான் வாய்மொழி என்று நாசூக்காகச்சொன்னேன்...! :) நீங்கள் போட்டு உடைத்துவிட்டீர்கள்.

கல்விக் கடன் என்பது ஒரு அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகத் தான் ஆரம்பித்தது!

அடுத்ததாக, நம்முடைய மக்களுக்கும் சரி, அரசியல்வாதிகளுக்கும் சரி, ஒரு அடிப்படை விஷயம் எப்போதுமே புரிவதில்லை.

கடன் என்பது திருப்பிச் செலுத்தவேண்டிய ஒன்று. தர்மம், இலவசம் என்பது வேறு! வங்கிகள், கடன் கொடுப்பதை, ஒரு தொழிலாகச் செய்கின்றன. அதுவும் தவிர, அப்படிக் கொடுக்கப் படும் பணம், வங்கியுடையதோ அல்லது அரசின் சொத்து ஒன்றும் இல்லை. அது வங்கிகளில் முதலீடு செய்து வைத்திருக்கும் முதலீட்டாளர்களுடையது.


ஆம்.. இதுவும் முதல்பாகத்திலேயே...தள்ளுபடி என்ற கோணத்தில் சொன்னேன்..ஆனால் உங்கள் வரிகளில் நிறைய உண்மை தெறிக்கிறது.


இந்த இடத்தில் இரண்டு விஷயங்கள் தெளிவுபடச் சொல்லப்பட வேண்டும்.

இப்படி சமூகப் பொறுப்புடன், வழங்கப்படும் கடன்களுக்கு, இந்திய அரசு, உத்தரவாதம் எதையாவது அளித்திருக்கிறதா?

இல்லை!

கடன் வாங்கும்போது ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்து வாங்கும் அத்தனைபேருமே, தங்களுடைய கடன் திருப்பிச் செலுத்தப்படவேண்டியது என்ற உணர்வோடும் பொறுப்போடும் இருக்கிறார்களா?

இல்லை!

ஆக, வங்கிகள் தட்டிக் கழிக்கின்றன என்ற குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்னால், கல்விக்கடன் என்பது, வங்கித் தொழிலின் மற்ற கடன்களைப் போலத் தானா, அல்லது அரசினால் மறைமுகமாக, எவருடைய பணத்தையோ எடுத்து, அரசியல் ஆதாயத்திற்காகச் சூறை விடப்படும் தேங்காய் தானா?

வங்கிகள் செய்வது ஒன்று வியாபாரமாக இருக்க வேண்டும் அல்லது வங்கித் தொழிலை விட்டு விட்டு அரசு நடத்தும் தர்ம சத்திரமாக இருக்க வேண்டும். இந்த ஒன்று தான் அரசினால் வரையறை செய்யப் படாமல் இருப்பது!

கல்விக் கடன் என்று மட்டுமில்லை, எந்தக் கடனாக இருந்தாலும், திருப்பிச் செலுத்தும் சக்தி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

பொதுத்துறை வங்கிகள் பாவம்!

அப்புறம் கடைசிப்பாராவில் சொல்லியிருப்பது,அதற்கும் மாற்று இருக்கிறதே!

எண்பது சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுப் பொருளாதார ரீதியாக அதாவது பெற்றோரின் வருமான அடிப்படையை வைத்து, கல்வி நிறுவனங்கள் குறைந்தது இருபத்தைந்து சதவீத இடங்களையாவது இலவசமாகத் தான் ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கலாமே!

அதுவும் சரிதான்..என் கோணமே அதுதான்..! நல்லாப்படிக்கிறியா? ஏழையா? எங்கவேணும்னாலும் சேந்து படி...பணம் கட்டவேணாம்னு சொல்லும் அளவுக்கு அரசுக்கு திராணி இல்லை!

இங்கே மாற்றம் நிறைய விஷயங்களில் தேவைப்படுகிறது!

கண்டிப்பா சார்...!


கல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள் - பாகம் 3



கல்விக்கடன் ஏன் ?...கல்வி என்ன ஆச்சுன்னு முதல்ல இங்கயும்...அடுத்து இங்கயும் இருக்கு..

இப்ப வங்கிகள் பக்கம் வருவோம்.

ப.சிதம்பரம் நிதி அமைச்சரா இருந்தபோது, கல்விக்கடனைப்பற்றி ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவந்து, எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அதைக் கொடுக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தாரு!

ஆனா...என்ன ஒரு பெரிய காமெடின்னா..எந்த ஒரு வங்கிக்கும் , இன்னின்ன வரையறைகளில் கல்விக்கடன் குடுக்கலாம்னு அரசாங்கம் கடைசிவரைக்கும் சொல்லவே இல்லை! எல்லாம் வாய்மொழி உத்தரவுதான்..!

அதுனால, அந்தந்த வங்கி மேனேஜர்கள் தலையில் பொறுப்பு விழுந்துச்சு! அவுங்க நினைச்சா கொடுக்கலாம். இல்லைன்னா இல்லை! அதிலயும் அடுத்த ரெண்டு வருஷங்களில் ரிட்டையராகப்போற எந்த மேனேஜரும் கல்விக்கடன்னாலே காத தூரம் ஓடினாங்க! ஏன்னா, அது அவுங்க ரிட்டையர்மெண்ட் சமயத்தில் வராக்கடன் லிஸ்டில் வந்து நின்னுரும். அதையும் மீறி குடுத்தா, நம்ம பையனோட ஏதாவது ஒரு பேப்பரில் தப்பு இருந்திருக்கும். அதை வச்சு அந்த மேனேஜரைக் குடையுவாங்க !

இதுக்கு பயந்துக்கிட்டே, கூடை வச்சிருக்கவுங்களுக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் தர்றதில்லைங்கிறமாதிரி என்ன உங்க அப்பா உயரமா இருக்காரு.. நீ என்ன கண்ணாடி போட்டிருக்க...உன் வீட்டில் ஏன் ஆறு பேர் இருக்கீங்கன்னு ஏதாவது சொத்தைக் காரணம் சொல்லி தட்டிக்கழிக்க ஆரம்பிச்சாங்க! அப்ப இது வங்கி மேலாளர்கள் தப்பும் இல்லை. அந்த வங்கி அந்த லட்சணத்தில், அரசாங்கத்தோட அறிவுறுத்தலின் பேரில் சும்மா உலுலுவாங்காட்டிக்கும் கடன் கொடுக்குறமாதிரி இங்கொண்ணும் , அங்கொண்ணுமா பாவ்லா காட்டிக்கிட்டிருக்கு! அதிகாரிகளும் அதைக் கண்டுக்கிறதில்லை. உண்மையிலேயே.. இதுவரை கொடுக்கப்பட்ட கல்விக்கடன் எதிலயும் எந்த வங்கிக்கும் விருப்பமே இல்லைங்கிறது, அந்தந்த உயரதிகாரிகளோட கருத்து!

அதுக்கும்மேல ஒண்ணு இருக்கு....நம்ம கடன் வாங்குற பெருமக்கள்...சரி.. நீ படிக்கணும்னு ஆசைப்படுற..! தனியாரில்தான் சீட் கிடைக்குது...! அவுங்களுக்கு பீஸ் கட்டணும்..! அதுவும் சரி! அதுக்காகத்தான் வங்கில ரொம்ம்ம்ம்ப போராடி கடன் வாங்குற! அந்தக்கடனைக்கொண்டாந்து காலேஜுலயும் கட்டியாச்சு! அதுக்கப்புறம்.........???? இனிமே என்ன கவலை...படிக்கவேண்டியதில்லைன்னு நினைச்சுக்கிட்டு...சரியா படிக்காம...50-60% மார்க் எடுத்துட்டு, ஏதாவது ஒரு சுமாரான வேலைல ஒட்டிக்கிட்டு வாங்கின கல்விக்கடனுக்கு வாய்தா சொல்லிக்கிட்டு...அப்புறம் என்னிக்காவது ஒருநாள்.. கல்விக்கடன் வாங்கி நொடிச்சுப்போயிட்டேன். அதைத்தள்ளுபடி பண்ணனும்னு ரோட்டுக்கு வந்து போராடுவான். ஆனா அதே சமயம் அந்தக் கல்விக்கடனை நல்லபடியா பயன்படுத்தி நல்ல வேலைல சேந்து அதைக்கட்டின பையன் இளிச்சவாயனாய்டுவான். மேலும் அவன் தம்பிக்கு கல்விக்கடன் கிடைக்காம போயிடும்.

ஆக... ஒரு தீர்வு தேடிப்போகும்போது எல்லாத்தரப்பும் இறங்கி வரணும். அரசாங்கம் ஒரு வரையறை வைக்கணும். 90 சதவீதத்துக்கு மேல் மார்க் வாங்கியிருக்கியா? ஏழையா? அப்ப எந்த காலேஜ்ல வேணும்னாலும் சேந்துக்க! நான் கல்விக்கட்டணத்தை பாத்துக்குறேன். நீபாட்டுக்கும் படிங்கணும்.

அடுத்து 70-90 எடுத்து ஏழையா இருக்கியா? உனக்கு வட்டியில்லாக்கடன் ! அடுத்த 10 வருஷத்தில் அதை அடைக்கணும்னு எந்த நிபந்தனையும் இல்லாம குடுக்கணும். ஒரே ஒரு நிபந்தனை..அதை கண்டிப்பா தள்ளுபடி பண்ணச்சொல்லி கேக்கமாட்டேன்னு சொல்லணும்.

அடுத்து 50-60 மார்க் எடுத்து ஏழையா இருக்கியா? உனக்கும் கடன் தரேன் . ஆனா வட்டி உண்டு.. ஆனா இந்தப்படிப்பில் 90% எடுத்தா.. எல்லாமே தள்ளுபடின்னு சொல்லிப்பாருங்க ! நம்ம நினைக்கிற விஷயம் நடக்கும்..

ஆனா..என்ன ஒரு சோகம்னா...நோக்கத்தை விட்டுட்டு வேற ரூட்டைப்பிடிச்சுப்போய் எங்கயாவது முட்டிக்கிட்டு நிக்கிறதுதான் நம்ம நாட்டோட தலையெழுத்து...! கல்விக்கடன் தப்பிச்சுருமா என்ன?

Sunday, December 27, 2009

கல்விக்கடன் - கோபிநாத்- சில எண்ணங்கள் 2



கல்விக்கடன் குடுக்குறதே ஒருவிதமான கடனாளியாக்கும் தன்மைன்னு முதல் பகுதில சொல்லியிருந்தேன்.


உண்மையிலேயே ஒரு மாணவன் நல்லா படிக்கிறான். அவன் குடும்பமே அவன் படிப்பால் சிறப்படையும்னு தெரியும்போது, அரசாங்கம் அவனுக்கு , இலவசக்கல்வியைத்தான் கொடுக்கணும். கடனை இல்லை. இப்படிக்கொடுக்குறதால , பெரிசா பயனடையப்போறது தனியார் கல்லூரிகள்தான்..! அல்லது.. அவனுக்கு கடன் கொடுக்கும்போதே, பீஸை குறைச்சுக்கச்சொல்லி அந்தக் கல்லூரியை வலியுறுத்தலாம். ஆனா இது ரெண்டுமே பண்ணாம, தனக்குன்னு ஒரு அளவுகோல் வச்சிக்கிட்டு கடன் கொடுத்து , மறுபடியும் மக்களை தள்ளுபடி எதிர்பாக்குறவுங்களா ஆக்குது அரசாங்கம்!


சரி...யாராவது ஒருத்தர்தான் இதுக்கு காரணம்னா.. அதுவும் சொல்ல முடியலை!

இப்ப முதல்ல...கல்வியை எடுத்துக்குவோம்.

இந்தியாவில்...அதுவும் தமிழ்நாட்டில்... தனியார் கல்லூரிகள் அதிகமாப்போச்சு! அரசுக்கல்லூரிகள் கொஞ்சமாத்தான் இருக்கு! அதுவும் பாடாவதியா இருக்கு! நான் பள்ளிப்படிப்பை முடிக்கும்போது, எனக்கு அரசு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைக்கலை...தனியாருக்கு போகலாம்னா, எங்க ஏரியாவில் ஒரே ஒரு தனியார் பொறியியல் கல்லூரிதான்.. அதுலயும் சீட் இல்லைன்னு நான் அரசு பாலிடெக்னிக்கில் போய் படிச்சேன். ஆனா இப்ப நிலைமை அப்படி இல்லை! எங்க ஏரியாவுலயே எட்டு தனியார் பொறியியல் கல்லூரிகள் இருக்கு! எவ்வளவு குறைவா மார்க் எடுத்திருந்தாலும், ஏதாவது ஒரு கல்லூரியில் கண்டிப்பா சீட் கிடைச்சுடும். ஆக, உயர்கல்வி இன்றைய மாணவர்களுக்கு சுலபமாயிடுச்சு!

அரசாங்கமே, எல்லாக்கல்லூரிகளையும் ஆரம்பிக்கணும்னு காத்திருக்க ஆரம்பிச்சோம்னா, பல நடுத்தரக்குடும்பங்கள்ல, இன்னும் 10 வருஷம் ஆனாலும் ஒரு இஞ்சினியரையும் பாக்க முடியாது. அரசாங்கம் செய்யாததை...தனியார் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க! ஆனா இந்த கல்லூரி நடத்துறதை தொழிலாக்கினவுங்க யாருன்னு பாத்தா.. தன்னிடம் இருக்கும் அளவுக்கு மிஞ்சின பணத்தை வெள்ளையாக்கும் முயற்சில இருக்கும் கனவான்கள்தான்! அவுங்க எந்த நோக்கத்துக்காக பண்ணியிருந்தாலும் கல்வி ன்னு ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டா அது ஒரு விதத்தில் பிரமிக்கவும், பாராட்டவும் தக்க வளர்ச்சிதான். ! இப்படி நிறைய தனியார் கல்லூரிகள் இருந்ததாலதான் நிறைய IT இளைஞர்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சர்வசாதாரணமா கொடுக்க முடியுது!

இந்தியாவிலேயே கர்நாடகாவிலும், தமிழகத்திலும்தான் தனியார் கல்லூரிகள் அதிகமா இருக்கு! அதுனால நிறைய நல்லதும் நடக்குது! எழுத்தறிவில் 100 சதவீதம்னு சொல்லிக்கிற கேரள மாநில மாணவர்கள் நிறைய பேர் தமிழ்நாட்டு தனியார் கல்லூரிகள்லதான் படிக்கிறாங்க! ஆக, தனியார் கல்லூரிகளால் கல்வியின் தரம் உயர்ந்திருக்குங்கிறதை மறுக்க முடியாது.
பல தனியார் கல்லூரிகள் தங்கள் தரத்தால், இந்த மாநிலத்துக்கே நல்ல பேரை வாங்கிக்கொடுத்திருக்கு! பல கல்லூரிகளோட பேரைச்சொன்னாலே பெரிய கம்பெனிகளின் நேர்முகத்தேர்வில் உடனே consider பண்றாங்க! சில கல்லூரிகளின் கேம்பஸ் தேர்வுகளில் எல்லா மாணவர்களுக்குமே வேலை கிடைச்சிருக்கு! அதனால், இந்தக்கல்லூரிகள் இல்லைன்னா கண்டிப்பா தமிழ்நாடு இந்த அளவுக்கு கல்வில வளந்திருக்க முடியாது.

இந்தக் கல்லூரிகளை நாடித்தான் நம்ம பசங்க படிக்க வராங்க! இந்தக் கல்லூரிகள் கேக்கும் கட்டணத்தை கட்டத்தான் பசங்க வங்கிகளை நாடுறாங்க!

ஆக்சுவலா, வங்கிகள் என்ன பண்ணுது?

மறுபடியும் தொடரும்தான்....!

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...