நமக்கு கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மனிதத்தன்மையையும் ,கொன்னு குழம்பாக்கி...மதிய சாப்பாட்டுக்கு பரிமாறிடும்போல இருக்கு இந்த பாழாப்போன கோபம்!
அப்ப கோபமே கூடாதா?-
யாரு சொன்னா? நல்லா கோபப்படணும்!
எப்போதும் கோபப்படுபவன் முட்டாள் !
எப்ப்போதுமே கோபப்படாதவன் மண்ணு !
பாரதியார் கூட ரௌத்திரம் பழகு ன்னார். பழகுதல் என்றாலே ஒரு பயிற்சி இருக்கணும். பயிற்சின்னா அது போலியாக்கூட இருக்கலாம். ஒத்திகை மாதிரி.! ஆனா அதை மனிதர்கள் மேல திருப்புவதில்தான் நாம் தோற்றுவிடுகிறோம்.
நாம் ஒரு விருந்துக்குப்போறோம். நமக்கு கத்திரிக்காயில் செய்த எந்த உணவுப்பொருளும் பிடிக்காது. ஆனா அங்கு அதை போட்டு விடுகிறார்கள். ஒன்றும் சொல்லாமல் ஒதுக்கி வைத்துவிட்டு பிடித்தவற்றை மட்டும் சாப்பிட்டுவிட்டு வருவோம். சாப்பிடும் பொருளில் நல்லவை அல்லவை பார்க்கத்தெரிந்த நமக்கு வார்த்தைகளில் மட்டும் அப்படி ஒரு கரிசனம். எல்லா வார்த்தைகளையும் எடுத்துப்போட்டுக்கொண்டு.. பதில் ஆக்ரோஷமாய் சொல்கிறேன் பேர்வழி என்று உணர்விடம் தோற்றுப்போய் நிற்போம்.
ஒருவர் சாதாரணமாக...'நாயே' என்று திட்டிவிட்டால்...ஐயோ பாவம் எதிரில் இருப்பவர் மனிதர் என்றுகூட என் நண்பனுக்கு தெரியலையே! அவ்வளவு பரிதாபமாகப்போய்விட்டானே என்று நினைத்துக்கொண்டு, மனதுக்கு இதமளிக்காத ,பிடிக்காத வார்த்தைகளை எடுத்துக்கொள்ளாமல் இருந்தால்,
பிழைத்தோம். அதே சமயம், நானா நாய்..நீதான் நாய்..உன் குடும்பமே நாய்..என்று வார்த்தைகளை தடிக்கவிட்டு கிட்டத்தட்ட நாய்க்குரலுக்கு மாறி குரைக்க ஆரம்பித்துவிட்டாலே...சொன்னவனின் நோக்கத்தை பூர்த்தி செய்துவிடுகிறோம். அவன் புன்முறுவலுடன்.நிற்பான். .! ஆஹா என்னமாய் குரைக்கிறான் என்று ! (அல்லது அவனும் சேர்ந்து ஆரம்பித்துவிடுவான்)
குழந்தைகள் கூட , கோபப்படும் கடைக்காரரையோ, பக்கத்து வீட்டுக்காரரையோதான் -போட்டுப்பார்க்கும்!
பாலகுமாரன்...கல்லூரிப்பூக்களில் கூறுவார்.
'கோபம் அடக்குவது என்பது ஒரு ரசவாதம். அதை பொறுமையில் ஊறப்போடவேண்டும். அதற்கு வெறியேற்றவேண்டும். வாழ்வில் ஜெயித்துக்காட்டுவதன் மூலமே கோபத்தை வெளிப்படுத்தமுடியும்' என்று!
ஆனால் இன்று கோபம் சேமிக்கப்பழகவில்லை நாம் ! அது ஒரு காட்டாறு..அதை அப்படியே விட்டுவிட்டால் உங்கள் ஊருக்குள் புகுந்து எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிடும். ஒரு அணை போடுங்கள். மெதுவாக அதன் மதகுகளைத்திறந்துவிடுங்கள். ! கோபத்தில் அழகு மிளிரும்.
மேலாண்மையில் ஒரு விஷயம் சொல்லுவார்கள்...
கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடுதான் அமர்வான் என்று.!
நம் கோபத்தின் ஆழம் எப்போதாவது வெளிப்படும்போதுதான் விளங்கும். எப்போதும் கோபிப்பவர்கள் கேலிக்குரியவர்களாகவே ஆகிவிடுகிறார்கள்.
நான் சின்ன வயதில், அதிக சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சத்தம்போட்டு அடிக்கத்துரத்தி என, கோபப்படுவார்கள் . என் அம்மாவை கோபப்படுத்தி பார்ப்பதற்காகவே, சேட்டைகள் செய்திருக்கிறேன் என்று இப்போதுதான் விளங்குகிறது. என் குடும்ப மனிதர்களின் கோபங்களும் சச்சரவுகளும் கோபத்தின் மீது எனக்கு ஒரு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அதை அடக்கப்பழகி, பின்னர் அதை வெளிப்படுத்தவும் பழகி..ஓரளவுக்கு சமாளித்து ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.
அந்த ஹரி சாடு....விளம்பரம்....கோபப்படுபவனின் ஊழியர் மன நிலையை சிறப்பாகச்சொல்லும்!
எனக்குத்தான் பேசத்தெரியும் , எழுதத்தெரியும், இப்போதெல்லாம்...டைப் பண்ணத்தெரியும் என்றால்...நாம் உதாசீனப்படுத்தப்படுவது உறுதியாகிவிடும் ! கருத்து மோதல்களின் கோபம் கருத்துகளிலிருந்து பயணம் செய்து மனிதர்களை அடையும்போது கொஞ்சம் அயர்ச்சியாகத்தான் ஆகிவிடுகிறது. கோபக்காரர்கள் நல்லவர், கெட்டவர் என்ற இரு தகுதிகளிலிருந்தும் விடுபட்டு....இப்படி விமர்சிக்கப்படுகிறார்...அவர் நல்லவர்தான்...ஆனா கொஞ்சம் கோவக்காரர்.! இது எந்த டைப்?
கோபப்படுவதே எதிராளிக்கு தெரியாமல், கோபப்படுவது ஒரு கலை..! ஆனால் அதை ஒரு சாதாரண உணர்ச்சியாக விடாமல், மதித்து..தலையில் வைத்து தூக்கி ஆடும்போதுதான், அது முடிந்தவரை ஆடி ஓய்கிறது. அப்போதுமட்டும் வார்த்தைகளைத்தேர்ந்தெடுத்து வழங்கிவிட்டால். பின்னர் வாங்குப்பட தேவையே இருக்காது.!
அதுக்கு நான் பயன்படுத்தும் ஆயுதம்...- 'நீங்க போய் இப்படி செய்யலாமா? உங்களை இப்படி நினைச்சே பாக்கலையே? உங்க தகுதி என்ன? நீங்களா இப்படி?'.......இப்படி போகும்.! :)
உங்கள் எதிரிக்கு பரிசளிக்க வேண்டுமென்றால் - பிழை பொறுங்கள் (மன்னிப்பு - போர்ச்சுக்கல் வார்த்தையாம் :) )
உங்கள் எதிரியை தண்டிக்கவேண்டுமென்றால் - உதாசீனப்படுத்துங்கள் !
இரண்டும் செய்யாமல் வார்த்தைகள் காதில் நுழைந்து வாய்வழியே வேறு வடிவம் பெற்று அடுத்தவர் கைகளுக்குப்போய், ஆயுதமாகவும் மாறி, வயிற்றுக்குள் சொருகப்படும்போதுதான் தெரியும். (சொருகியவருக்கும் தூக்குதானே) -சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி - சரியாத்தான்
சொல்லியிருக்காங்களோ? என்று..!
