Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, June 5, 2016

இறைவி - எண்ணங்கள் எனது !











 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது. விமர்சனம் என்பது, ஒரு திரை ஆர்வலன், சினிமா ரசிகனின் பொதுக்கருத்தாக எழுதுவது ! ஆகவே, இதனை ஒரு தனிநபர் பின்னூட்டமாக நினைத்துக்கொண்டால் நன்று!

இறைவி பற்றி எழுதவேண்டும் என்று இரவு முழுவதும் யோசித்த எண்ணங்கள் எழுத்துவடிவம் பெறுவதற்குள் சிந்தனை வேகமெடுத்து எங்கெங்கோ பயணித்து முட்டி நின்று, முன்னோக்கிச் சென்று அலைக்கழிக்கிறது.


கார்த்திக் சுப்புராஜ் ! இவ்வளவு யோசிக்கும் இயக்குனரை வணங்கிவிட்டுத்தான் துவங்கவேண்டும். பெண்களை நேசிக்கும், மதிக்கும் அனைவருக்கும் , நேசிக்காத, நேசிக்கமுடியாத, மதிக்காதவர்கள் மூலமாக கதை சொல்லியிருக்கிறார்.


ஆண் – நெடில்..  பெண்- குறிலை எப்படி நினைத்துக்கொண்டிருக்கிறோம். அல்லது.. நினைத்துக்கொண்டிருக்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வைத்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய சிறையில் ஆயுள்தண்டனைக் கைதிகளுக்கு உளவியல் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது, நிதானம் இழந்ததால், அவர்கள் இழந்தவற்றைச் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

”அன்னிக்கு மழை சார்..! பொண்டாட்டி ஃபோன் பண்ணி, சூடா இட்லி செஞ்சுருக்கேன். பிள்ளைங்க காத்திருக்கு! சீக்கிரம் வந்துருங்கன்னா! சரின்னு சொல்லிட்டு, வண்டியை எடுத்தேன். எனக்கு 40ஆயிரம் தரவேண்டியவன் வேகமா முன்னாடி போனான். ரொம்ப நாளா டபாய்ச்சிக்கிட்டிருந்தான். உடனே அவன் பின்னாடியே போனேன். வீட்டுக்குள் போய் கதவைச் சாத்தினான். உடனே போய் கதவைத் தட்டுறேன். அவன் பொண்டாட்டி வந்து, “அவர் வீட்டில் இல்லைங்கிறா!” மரியாதையா இப்போ வெளிய வரச்சொல்லுங்கிறேன். ஆம்பிளை இல்லாத வீட்டில் தகராறு பண்றியான்னு கேட்டுட்டு பட்டுன்னு கதவைச் சாத்திட்டா! எனக்கு “சுர்”ருன்னு ஏறிடுச்சு! பக்கத்தில் கிடந்த கடப்பாரையை எடுத்து கதவைக் கொத்தினேன். ரெண்டாவது கொத்துக்கு கொஞ்சம் பின்னாடி போய்ட்டு வேகமா வந்தேன்.. அந்த கிறுக்கன் கதவைத் திறந்துட்டான். கடப்பாரை நேரா நெஞ்சுல ஏறிடிச்சு! அவன் போய்ட்டான். நான் வந்துட்டேன்! ஆனா.. என் பொண்டாட்டி ”யாரைப்பத்தியுமே யோசிக்காம அப்படி என்னய்யா கோபத்தைக்கண்ட?”ன்னு கேட்டுட்டுப் போய்ட்டா! அதுக்கப்புறம் என்னைப் பாக்கவே வரலை! 4 வருஷம் ஆச்சு என்றார்.

இப்படி ஒருவர் இல்லை… ஆத்திரத்தில் ஒரு விநாடியில் குற்றம் செய்துவிட்டு, அதனால், குடும்பம் பாதிக்கப்பட்டவர்கள், மனைவியை இழந்தவர்கள், குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட மனைவிகள், வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தும் பெண்கள், கொலை செய்தவர்கள் வீட்டிலேயே வேலை பார்க்கும் சகோதரிகள் என்று பல்வேறு கதைகள்! அன்று அவர்களுக்கு மன அழுத்தம் போக்கச் சென்ற நான், மன அழுத்தத்துடன் வெளிவந்தேன் என்பதுதான் உண்மை. ! திரும்ப வரும்போது, காரில் தெரியாமல் இடித்த ஆட்டோக்காரரிடம் சினேகமாகப் புன்னகைத்ததுதான் என்னுள் ஏற்பட்ட மாற்றம்!

அப்படி ஒரு மாற்றத்தை,  ஆ- நெடில்களிடம் ஒரு மைக்ரோ மீட்டர் அளவுக்காவது இறைவி ஏற்படுத்தியிருக்கும்.

கனியிருப்பக் காய் கவராததால்..படத்தில் சிலாகிக்க நிறைய இருப்பதாகவே உணர்கிறேன். அடிப்படையில் பெண்களைப் பார்த்தாலே நமக்குப் பிடிக்கும். ஆனால், அவர்களை மதித்தால்தான் அவர்களுக்குப் பிடிக்கும். அதைச் செய்யச்சொல்லி ஆண்கள் வழியே வெளிவந்திருக்கிறாள் இறைவி!

     வடிவுக்கரசி ! அவர் , தன் சொந்தங்கள் முன் அவமானப்படுத்தியதைச் சொல்லி வருந்திவிட்டு, கடைசியில் அவர் கண்ணாடியை எடுத்துவைக்கச் சொல்லும் அக்கறை கலந்த நிதானம்தான் – இறைத்தன்மை!

    யாழினி ! சொல்லச் சொல்ல குடிக்கிறான் என்று தெரிந்தும், ஏதோ ஒரு நப்பாசையில், அவனது அப்பா, அம்மாவுக்கும் சேவைகள் செய்துவிட்டு, தன் நேரத்தை குழந்தைக்காகச் செலவழித்து, சொந்தக் கனவுகளைப்புதைத்த நிதானம்தான் – இறைத்தன்மை

    மலர் !  காமம் தேவைப்பட்டது – காதலும் உண்டு! ஆனால், இவனுடன் வாழத்துவங்கினால், சராசரியாக முன் வாழ்க்கைபற்றி கேட்டு ஏதாவது பிரச்னை வந்துவிட்டால்? அவன் புதிய வாழ்க்கை துவங்கட்டும்! நம் பேர் கெட்டதாகவே இருக்கட்டும்! – நம் ஆசைக்கு முடிவெடுத்தால், பின்னர் அவன் குடும்பம் அவனை ஒதுக்க வாய்ப்பிருக்கிறது என்று ஒதுங்கும் நிதானம்தான் – இறைத்தன்மை!

    பொன்னி ! – நிறையக் கனவுகளுடன் ஆரம்பித்தோம். சொதப்புகிறது. ஆனால், அதற்காக விட்டுவிடக்கூடாது. அவனுக்கு பிரச்னை வரும் இடத்திலிருந்து விலகச் சொல்வோம். காதலிக்கிறேன் என்று இன்னொருவன் சொல்கிறான். அது நம் விருப்பமாக இருக்கலாம். ஆனால், இதை நம்பிச்சென்றால், நம்மை நம்புபவன், குழந்தை என்னாவது? விலகிச்செல்வோம். விருப்பம் புதைப்போம்! கணவனாக வந்த ஆணை, சரிப்படுத்தி, கனவு வாழ்க்கையை முயல்வோம் என்று நம்பி நம்பி நொந்து போனாலும், அதற்காக யாரையும் குறைசொல்லிச் சீறாத நிதானம்தான் – இறைத்தன்மை!

    ஆணுடன் சேர்ந்து வாழ்ந்தே ஆகவேண்டும் என்று வலியுறுத்துவதை விட… இதோ பார்! அவளால் தனியாக இன்னும் சிறப்பாக வாழமுடியும். மலர் மாதிரி வாழ்ந்தா, எவ்வளவு வேகமா மழைல நனைஞ்சுகிட்டே பைக்கை எடுத்துக்கிட்டு போற,.. அப்படித்தான் போவ! உன்னை ஒரு இடத்தில் சரியாகப் பயணிக்க வைக்க, அவள் அறுத்துக்கொண்டு போகாமல் இருக்கிறாள் என்று சொல்லியிருக்கிறது இறைவி!

    ராதாரவியின் குற்ற உணர்ச்சி, - வித்தையில் சிறந்தவர், ஆனால் வீட்டில் சரியில்லாமல்தான் இருந்திருக்கிறார். அது அவள் நோயில் படுத்தபின் உணர்ந்து பயனில்லை.

    எஸ் ஜே சூர்யாவின் திசைமாற்றம் – நல்ல படம் எடுத்து, வெளிவராததால், குடிப்பேன். குடும்பம் பற்றிக் கவலை இல்லை!

    விஜய் சேதுபதியின் ஆவேசம் – நல்லவந்தான்.. ஆனா கோவக்காரன்! அதுதான் மூன்று குடும்பங்களைச் சிதைக்கும் ஆயுதம்!

    ஜெகன் – தேவைக்காக சட்டத்தையும், ஒழுக்கத்தையும் மீறலாம் என்ற தைரியம்! இது பெண்ணிடம் இல்லை என்பதை, அவர் வாயாலேயே சொல்லவைத்த அழுத்தம்!


        சித்தப்பா -( சீனு)  அனைவரது தவறுகளையும் ஏற்றுத் தாண்டிச் சென்று, நிதானமாக அனைத்தையும் அணுகும் ஒரே ஆண்! எல்லா ஆணும் மோசமில்லை என்பதற்கான ஒரு சோறு!
    மற்றபடி நிறையக் குறியீடுகள் !!

மைக்கேல், அருள் இருவருக்குமே பெண் குழந்தைகள்தான் ! – பொம்பளப்புள்ள இருந்தும் இப்படி பொறுப்பில்லாம இருக்கானே? என்று சொல்லவைக்கும் யதார்த்தம்!

மழையில் நனைவதைப்பற்றி கவலைப்படாமல், ஆண்கள் நனைவதும்…   நனைந்தால் நனைந்துவிடுவோமே என்று பெண்கள் ஒதுங்குவதும்!  இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், ஆண் – ஆசைப்பட்டு நனையவில்லை..!! பெண் ஆசைப்பட்டும் நனைய இயலவில்லை!

கோபம் – அவளுக்கு வந்தால், குடும்பத்துக்குக்கேடு ! அவனுக்கு வந்தால் வீரம் ! இதுதான் பிரச்னை! (அவன் சொல்லாமல் கொள்ளாமல் கொலை செய்யலாம். அவள் வீட்டை விட்டுப் போகக்கூடாது) அதனை சித்தி கதாபாத்திரம் மூலம் ஒற்றை வரியில் சொல்லியிருப்பது.!

யாழினி, மலர், பொன்னி என்று தமிழ்ப்பெயர்கள் வைத்து, இது தமிழ்ச் சமூகத்தில் இந்தப்பெயர் மூலமாகவே நாம் அவர்கள் நடத்தையை நிர்ணயிப்பதைக் கடந்திருப்பது!

அற்புதமாக, கோடிக்கணக்கில் விலைபோகும் பெண் தெய்வச் சிலையை வடிக்கத்தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு, தன் வீட்டில் இருக்கும் பெண்களின் மதிப்புத் தெரியவில்லை. இன்னொருவன் களவாடும்போது ஆத்திரம் வருகிறது. சீண்டுவாரற்றுக் கிடக்கும்போது சோகம் வருகிறது. திருவிழாச் சமயத்தில் ஞானம் வருகிறது.

கொலை செய்யப்பட்ட தயாரிப்பாளரின் மனைவி, அவர் என்ன வாங்கியிருக்கார், எவ்வளவு கடன் இருக்குன்னே தெரியாது. இப்போதான் சொத்தெல்லாம் வித்தோம் , படம்தான் மிச்சம் என்று சொல்லி, படத்தை விற்கும் நிதானம்! இதை அந்த ஆள் செய்திருந்தால் ?

மருத்துவமனையில், நர்ஸ் மூன்று முறை அமைதியாக இருக்கச்சொல்லி கெஞ்சிவிட்டு, நான்காவதுமுறை கொஞ்சம் குரல் உயர்த்தியதும், நோயாளியின் கணவரான பெரியவர் (ராதாரவி) இன்னும் அதிகமாகச் சத்தம்போட, ஒன்றுமே சொல்லாமல் திரும்பச் செல்லும் நடையில் தெரியும் இயலாமையைச் சொல்லியிருப்பது! ( இந்த இடத்தில் ஆண் இருந்தால் என்ன செய்திருப்பான் என்று கொஞ்சம் ஓட்டிப்பார்த்தால்.. அந்த இயலாமை இன்னும் ஆழமாகத் தெரியும்)

இதில்.. கடைசியில் எஸ் ஜே சூர்யாவின் கடைசி நிதானம் மூலம், யாழினிக்கு ஏதாவது நன்மை நடந்துவிடும் என்ற நம்பிக்கையை விதைத்து, அவனிடம் கடைசியாக இறைத்தன்மை புகுந்ததை சொல்லியிருப்பதுதான் நிறைவு!

தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக அவள் நம்மை நிதானிக்கச் செய்கிறாள். நாம்தான் அவளை நிதானமிழக்க வைக்கிறோம் என்று கதைச் சூழல் மூலம் வெளிப்படுத்தியிருப்பதுதான் கார்த்திக் சுப்புராஜ் படைப்பின் அழுத்தம்!

மற்றபடி… ஒரு திரைப்படத்துக்கான அம்சங்களான, திரைக்கதை, இசை , ஒளிப்பதிவு, படத்தொகுப்பு இவற்றைப்பற்றிப் பேச அறிவைப்பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தப்படத்தை நான் உணர்வைப் பயன்படுத்திப் பார்த்ததால், அதனை லூசில் விட்டுவிட்டேன்.


எனக்கு பாகற்காய் பொறியல் பிடித்திருக்கிறது. அவ்வளவுதான் !

Monday, February 18, 2013

உன்னைக் காணாது நானிங்கு..



     



எதை மனதில் வைத்து இந்தப்பாட்டை எழுதினார்களோ தெரியவில்லை. விஸ்வரூபம் தமிழகத்தில் ரிலீஸ் ஆகாதபோது நம் அனைவருக்கும் ஏற்பட்ட உணர்வு அதுதான்.!!

“ உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே” ! ”

பக்கத்து மாநிலத்துக்குச் சென்று பார்க்கும் அளவுக்கு நமக்கு ஆவலைத்தூண்டியிருந்தது இங்கு இருந்த தடையும், படத்தின் மேலிருந்த நமது எதிர்பார்ப்பும்!

     கமலஹாசன் (எனக்கு கமல் சார்) அவர்களின் படங்களும், பாடல்களும் சமீப வருடங்களில் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. தேவர் மகன்  வந்த புதிது! நானும் எனது நண்பர்களும் வேளாங்கண்ணியிலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தோம். அதில்தான் முதலில்  ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் கேட்டேன்.  கேட்டவுடன் பச்சக் என்று ஒட்டிக்கொண்டது. அதில் இருந்த எளிமையும், வார்த்தைகளில் இருந்த வாஞ்சையும், இசையராஜாவின் ஆட்சியும் கலந்து எல்லோரையும் விரும்ப வைத்தது. அந்தப்பாடலை பாடிப்பார்த்து, பாடிப்பார்த்து, மெருகேற்றிக்கொள்ள, அதுவே  நண்பர்களிடையே என்னைப் பிரபலமாக்கியது.

பிறகு.. மாசறு பொன்னே வருக! எனக்கு மிகவும் பிடித்த பாடலானது. அதைக் காட்சியாகப் பார்க்கும்போது தேர்த் திருவிழாவிற்கு ஆகப்பொருத்தமான பாடலாக அமைந்திருந்தது. அதுவும் ’நீலியென, சூலியென தமிழ்மறை தொழும்…என்று முடித்து மீண்டும் மாசறு பொன்னே வருக என்று தொடங்கும் இடம் நம்மை ஒரு அருவியில் குளிப்பாட்டி, தலையும் துவட்டி விடும்.

     பிறகு இடையில் பல படங்கள் வந்திருந்தாலும், ‘சண்டியர்’ எனப்பட்ட விருமாண்டியில்.. ‘உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை’ !! அது.. ‘இஞ்சி இடுப்பழகா’ வின் தம்பி போல் இருந்தது. அதிலும் இசையராஜாவின் ஆதிக்கம்தான். அதிக வாத்தியங்கள் இல்லாமல் ரசனையான வார்த்தைகளால் செதுக்கிய பாட்டு அது! அந்தப்படத்திலும் ’காண்டாமணி ஓசையில’ என்ற சுடலைமாடனுக்கான பாடல் ஒருவித கிராமியத்துடன் பக்தியும் இணைந்து ஈர்ப்பைக்கொடுத்திருந்தது.

     தசாவதாரத்தில் , இரண்டு பக்திப் பாடல்கள். ‘கல்லை மட்டும் கண்டால் மற்றும் முகுந்தா , முகுந்தா… இரண்டுமே அருமையாக இருந்தது. அந்தப்பாடல்கள் பொதுவெளியில் உலா வருவதற்கு முன்னரே நான் கேட்டிருக்கிறேன். கல்லை மட்டும் கண்டால் கேட்டவுடனேயே வேறெங்கோ இந்த இசையைக் கேட்ட நினைவு வந்தது. பின்னர் இணையத்தில் தேடியதில், இதே ராகத்தில் ஒரு மலையாளப்பாடல் வந்திருந்தது. கமல் சாருக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தேதான் அனுமதித்திருப்பார் என்று பேசிக்கொண்டிருந்தோம்.  ஆனாலும் , ‘ராஜல்ஷ்மி நாயகன் சீனுவாசன் தான்.. சீனுவாசன் சேய் இவன் விஷ்ணுதாசன் தான்.. நாட்டிலுண்டு ஆயிரம் ராஜராஜன் தான் ,..ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்’ என்று கவிஞர் வாலி சூசகமாக கமலையும் சொல்லி, தன்னையும் பெருமைப்படுத்திக்கொண்டதை எண்ணி சிலாகித்துக்கொண்டோம்.

     முகுந்தா..முகுந்தா..எல்லோரையும் மயக்கிய பாடல்.! அதைக் காட்சிப்படுத்திய விதத்திலும் கலக்கியிருந்தார்கள். தசாவதாரம் வெளியான பிறகு  கிருஷ்ண ஜெயந்திகளில், வானொலியில் அந்தப்பாடலும் ஒலிபரப்புகிறோம். ‘உன் அவ தாரம் ஒவ்வொன்றிலும் நான் உன் தாரம் ஆனேன்’ என்று தமிழை உடைத்துப் பயன்படுத்தி மிகவும் வியக்கவைக்கும் பாடலாக அது அமைந்துவிட்டது.

     உன்னைப்போல் ஒருவன் படத்தில் ‘அல்லா ஜானே’! உயிரை உருக்கியது. அதில் கமலின் குரலும் , வார்த்தைகளின் ஆழமும் உண்மையிலேயே கேட்கும் மனதுக்குள் சிலீர்க் கத்தியாக ஊடுருவியது. தன் குரலையே கொஞ்சம் கரகரவென நசுக்கிக்கொண்டு , சுவாசக்குழாய் வழியாகப் பாடியிருப்பார். Prelude எனப்படும் முன்னிசையும், Interlude எனப்படும் இடை இசையிலும் வயலின், புல்லாங்குழல் என்று கொஞ்சம் மேற்கத்திய சாயலுடன் இரசிக்க வைத்திருப்பார்கள். ‘வெல்பவர் இல்லா போர்களும்..’ என்ற வரியை கவனித்தால், தன் குரலில் எத்தனை வித்தைகளை இந்த மனிதர் காட்டுகிறார் என்று தெரியும். இது பக்திப்பாடலாக இல்லாவிட்டாலும், வார்த்தைகளால் வசப்படுத்தியது உண்மை!

     விஸ்வரூபம் பாடல்கள் வெளியானபோது ‘துப்பாக்கி எங்கள் கையில்’ பாடலின் வரிகள் மிகவும் ஆழமாக இருந்தது. பிறகு.. விஸ்வரூபம்..ரூபம் என்ற பாடலில் ‘ஆளவந்தாஆஆஆன்’… என்று பாடப்பட்ட வரிகளின் சாயல் கொஞ்சம் இருந்ததாக உணர்ந்தேன். ஆனால், அந்தப்பாடலின் PRELUDE ல் வரும் பைப் சத்தம் ஏதோ காட்சியை மனதில் வைத்து இசைத்திருக்கிறார்கள் என்று எண்ணினேன். அது சரியாக இருந்தது. ‘உன்னை காணாது நானிங்கு’ கேட்டபோது பிடித்திருந்தது. ஆனால் அதனை மிகவும் ஈடுபாட்டுடன் முதலில் கேட்கவில்லை.


     
ஆனால், ஒரு பயிற்சி வகுப்புக்காக தடா செல்லும்போது, நண்பர் டாக்டர்.பாலா அவர்கள் ஃபோனில் கேட்டோம். அன்று கார் ஓட்டிக்கொண்டே இரசிக்க ஆரம்பித்ததுதான். இதுவரை 200 முறையாவது கேட்டிருப்பேன். அன்றே திரும்பத்திரும்ப அந்தப்பாட்டைக் கேட்கத்தொடங்கி, வரி வரியாக இரசிக்கத் தொடங்கினால்..ஒவ்வொரு வரியிலும் தமிழை வளைத்து, நெளித்து, குழைத்து ஒரு சிற்பமாகவே உருவாக்கியிருக்கிறார். சங்கர் மகாதேவனின் குரல் ஒரு தேன் தோய்த்த மயிலிறகாக ச்சிலீரென்று வருடிச்செல்கிறது. இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல…! எனும் வரிகளில் சிலிர்க்க வைத்து… உனைக் காணாது என்று மீண்டும் மீண்டும் சொல்லுமிடங்களில்.. கலைஞனய்யா நீர் என்று கன்னம் கிள்ளத் தோன்றுகிறது. கமலும் சளைக்காமல்… ‘சரி வர தூங்கா து வாடும் பல மு றை உனக்கா க ஏங் கும்…என்று சந்தத்துடன் வார்த்தை பொருத்தி விளையாடியிருக்கிறார். இந்தப் பாடலின் மேக்கிங்கைப் பார்த்தால், கமல் அதில் எவ்வளவு லயித்து இருக்கிறார் என்பது விளங்குகிறது.

 


     முன்னர் சொன்னதுபோல், விஸ்வரூபத்தில் இந்தப்பாடலை பக்திக்காகவோ, காட்சிக்காகவோ வைத்திருந்தாலும், ஏகப்பட்ட பிரச்னைகளுக்கிடையில், படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்களுக்குத் தூண்டியவகையிலும், உண்மையிலேயே ஒரு பிரம்மாண்டமான படத்தைக் கொடுத்தவரையிலும்.. அந்தப் பாடல் சொன்னது உண்மைதான்.! ‘உன்னைக் காணாது நான் இன்று நான் இல்லையே! என்று ஒவ்வொருவரையும் நினைக்க வைத்துவிட்டார்.

படத்தில் ”நான் முஸ்லீம்தான் ..ஆனால் நல்ல கலைஞனும்கூட… பாத்திரத்துல ஐக்கியமாகிட்டேன்” என்று கமலே சொல்வதுபோல், அவருக்கு கடவுள் இல்லைதான்.. ஆனால்.. பக்தி இலக்கியம் மற்றும் இசையில் எப்போதுமே பக்தி உள்ளதால்தான்.. இத்தகைய பாடல்களை அவரால் நமக்குத் தர முடிகிறது.!

இதை..இசைக் கமல் நீ செய்த அரும் சாதனை என்றும் சொல்லலாம்.!



Thursday, November 15, 2012

துப்பாக்கி








       தீபாவளி வெளியீடு என்றவுடன், கிராமத்தில்தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்தாயிற்று..!! அங்குதான், இரசிகர்களின் உண்மையான உணர்வுகள் தெரியவரும்.

     அதேபோல் தியேட்டருக்குள் நுழையும்போதே ஆர்ப்பாட்டம்..!! விஜயின் அறிமுகக்காட்சியில் ஐந்து நிமிடங்கள் அனைத்து இரசிகர்களும் ஸ்டாண்டிங் ஓவேஷன் கொடுத்தார்கள்.
    
    முழுக்க முழுக்க முருகதாஸ் படமாக எடுக்க , விஜய் ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பது தெரிய ஆரம்பித்தது. மிகவும் அடக்கி வாசித்து, தனக்கான இடத்தை மிகவும் அழுத்த்தமாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

       சமூகத்தில் சாதாரண மனிதர்களாக இருப்பவர்கள், தீவிரவாதிகளின் மூளைச் சலவையால், மனம் மாறி, அவர்கள் சொல்வதைச் செய்யும்படி தயார் செய்யப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் சமூகத்தில், அவரவர் வேலைகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தலைவனிடமிருந்து கட்டளை வரும்போது (குண்டு வைப்பது) அதை நிறைவேற்றுகிறார்கள். இவர்களுக்கு SLEEPER CELLS என்று பெயர்.!!

   அந்தவகை மனிதர்களின் வேரைக் கண்டுபிடித்து, அதனை அழிப்பதுதான் படத்தின் மையக் கரு! அதாவது, யார் கட்டளை இடுகிறார்களோ அவர்களை அழித்துவிட்டால், தனக்கான கட்டளைக்காக காத்திருந்தே, silent cell கள், தங்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப்போய்விடுவார்கள் என்பதுதான் நோக்கம்..!!

    அப்படி ஒரு Sleeper Cell மனிதன் தன் வேலையை செய்துவிட்டுச் செல்லும்போது, எதேச்சையாக, இராணுவத்திலிருந்து, மும்பைக்கு விடுமுறைக்கு வந்த விஜய், தன் போலீஸ் நண்பன் சத்யனுடன் பஸ்ஸில் செல்ல நேர்கிறது. அங்கு ஒருவரது பர்ஸ் அடிக்கப்பட, அனைவரையும் சோதிக்க விழைகிறார்கள். இதில் அச்சப்பட்ட அந்த Sleeper Cell, ஓட ஆரம்பிக்க, அவனை விஜய் விரட்டிப்பிடிக்க,  அப்போது பஸ்ஸில் குண்டு வெடிக்கிறது. அதற்குள் அவனும் தப்ப முயற்சித்து ஓட, விஜய் துரத்த ஆரம்பிக்கிறார். படம் தடதடத்து வேகமெடுக்கும் இடம் இதுதான்..!!

     அவனைப் பிடித்து அவர் போலீஸில் கொடுக்க, அவன் அடுத்த நாளே தப்பிவிக்கப் படுகிறான். அதனை சத்யன் விஜயிடம் மிகவும் பதட்டத்துடன் சொல்ல, மிகவும் நிதானமாக விஜய், தனது வீட்டின் மாடியறைக்கு வருகிறார். அங்கு அந்த ஆள் அவராலேயே கட்டிவைக்கப்பட்டிருக்கிறான்.
அங்கிருந்து, பலப்பல சாகசங்கள்.. அத்தனையும் வீரமும், விவேகமும் சரிசமமாய்க் கலந்தவை..!! தனது ஆழ்ந்த புத்திசாலித்தனத்தால் ஒவ்வொரு கண்ணியாகக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் கட்டளையிடும் தலைவனை வெளிவர வைத்து, பல்வேறு பூனை, எலி விளையாட்டுகளுக்குப் பிறகு, ‘சஸ்பென்ஸுலேயே சாவுடா!’ என்று சொல்லி அவனைச் சுட்டுத்தள்ளுகிறார்.

     படம் முழுக்க, சாகசங்கள், அதுவும் இயக்குநர் முருகதாஸுக்கு மூளையில்தான் உடலே செய்திருக்கிறார்கள் என்பதைப்போல் விளையாடியிருக்கிறார் மனிதர்..!! (நண்பர் என்பதையும் மீறி உண்மையிலேயே நிறைய நுணுக்கமாகச் சிந்தித்திருப்பதால், இந்தப் பாராட்டு!)

     அதுவும் 12 பேர் பிரித்து ஒவ்வொருவராகப் பின் தொடரும் இடங்கள், சாத்தியங்களை மீறி அற்புதமான திரைக்கதையால் நம்பவைத்துவிடுகிறது. அதுவும் அந்த ஒரே வினாடியில் அனைவரும் வெவ்வேறு இடங்களில் சுடும்போது, ஒரு ’வாவ்’ நம் வாய் வழியே இயல்பாக வந்துசெல்கிறது. அந்த நேரத்தில், துப்பாக்கிச் சத்தத்தை விட விசில் சத்தம் அதிகம் கேட்டது.

  சந்தோஷ் சிவன் இந்தப்படத்தின் மூன்றாவது ஹீரோ எனும் அளவுக்கு கலக்கியிருக்கிறார். சேஸிங் காட்சிகளாகட்டும், பாடல்களாகட்டும், விஜயை சமீபகாலத்தில் இவ்வளவு அழகாக யாரும் காட்டவில்லை என்று நினைக்கிறேன். சூரியனுக்கு எதற்கு டார்ச்…?

  விஜய்…! அந்த அழுத்தமும், லேசான குறும்பும் இப்போதுதான் சரியான கலவையாய் வெளிவந்திருக்கிறது. தன் தங்கையிடம் மிகச்சாதாரணமாய் ‘உயிர் போயிருக்கும்’ என்று சொல்லும்போது – இராணுவ வீரனின் உயிர் பற்றிய எண்ணம் அப்படியே பார்க்கமுடிகிறது. அவரது அழுத்தமான பார்வையையும், இரண்டு வார்த்தை பதில்களையும் பார்த்து, இரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் கும்மாளமிடுகிறார்கள். அதுவும் இடைவேளையில் ‘ஐ அம் வெய்ட்டிங்’ என்று சொன்னதற்கு.. இரண்டு நிமிடம் தொடர்ந்து கூச்சலும், விசிலும் பறந்தது. படம் முடியும்போது, ‘ இதுமாதிரியே நடி தலைவா! ’ என்று உளம் நிறைந்து கோரிக்கை வைக்கிறார்கள். 

      கண்ணுக்கு மை அழகு.! மை என்றால் காஜல்..!!  கண்ணுக்கு அழகாக வருகிறார். பேசுகிறார். ஆடுகிறார். நிறைய காஃபி சாப்பிடுகிறார். ஆனால், அவர்தான் கதையின் முக்கிய ஓட்டத்தை மாற்றுகிறார் என்பது சிறப்பு..!! அவர் சத்யனின் பைக் சாவியை எடுத்துச் செல்லாவிட்டால், விஜய் பஸ்ஸில் செல்லவேண்டிய அவசியமே இருந்திருக்காது.




ஏ.ஆர்.முருகதாஸ்… ரமணாவிலிருந்து எனது உள்ளம் கவர்ந்தவர்..விஜயகாந்துக்கு ஒரு வாழ்நாள் சாதனைப் படத்தை அளித்தவர். விஜய்க்கும் அது பொருந்தும்படிச் செய்திருக்கிறார். படம் பார்த்து முடித்தவுடன் குறுஞ்செய்தியில் வாழ்த்திவிட்டேன். அன்பான நண்பர்!, பணிவான மனிதர்..!  நிதானமாக அடி எடுத்துவைக்கிறார். அடுத்த பிரம்மாண்டத்துக்குத் தகுதியானவர் என்று நிரூபித்திருக்கிறார்.

    துப்பாக்கி என்ற பெயர் மட்டுமல்ல..!! சிறப்பான திரைக்கதை, வேகம் நிறை காட்சிகள் மூலம் தீபாவளி ரிலீஸுக்குத் தகுதியான படமாய் அமைந்துவிட்டது.

Saturday, September 1, 2012

முகமூடி.. – பாத்துட்டோம்ல..!






மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி திரைப்படத்துக்கான டிக்கெட்டை’ அன்புடன் கொடுத்த ஒரு திரையுலகப் பிரபலத்துக்கு எனது நன்றி..!

12 மணி காட்சிக்குச் சென்றேன். கமலா தியேட்டர் நிரம்பி வழிந்தது. ‘நான்’ திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள் நிறைய இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

நான் இணைய ஆதாரத்தைக் காட்ட, எனக்கு ஒரு டிக்கெட் கொடுத்தார்கள். என்னவோ நாந்தான் முகமூடி போல ஒவ்வொருவரும் நாலுமுறை டிக்கட்டைப் பார்த்து செக் செய்தார்கள்.

போய் இருக்கையில் அமர்ந்தேன். படம் பார்த்தேன்.

வில்லனின் பெயரும், ஜீவாவின் அப்பாவின் பெயரும் நரேன் என்று இருப்பதை இரசித்தேன். சிலருக்கு அப்பாதான் வில்லனே..!!

 எனது நண்பரும், மிஷ்கினின் இணை இயக்குநருமான தெய்வா கை நிறைய பாட்டிலை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராகக் கொடுத்துக்கொண்டே வந்து கடைசியில் ஜீவாவுக்கும் ஒரு பாட்டில் கொடுத்ததை இரசித்தேன்.

போதிதர்மர் கற்றுக்கொடுத்ததை, ஜீவா நினைவுபடுத்திக்கொண்டிருந்ததை இரசித்தேன்.

நரேன் வைத்திருந்த ஹார்டுவேர் கடையையும் அதன் உபதளவாடங்களையும் இரசித்தேன்.

அம்பாசிடர் வைத்திருப்பவர்கள்தான் ரோட்டில் வாழைப்பழத்தோலை போடுவார்கள் என்ற கூற்றை இரசித்தேன்.

அன்புநிறை மனிதரும், அதீத நூலறிவும் கொண்டவரான சச்சிதானந்தம் அய்யாவை இரசித்தேன்.

பன்னீர்சோடா குடிக்குமிடத்தில் இருந்த ட்யூட்களை இரசித்தேன்.

குங்ஃபூ பள்ளியில் படிப்பவர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள் என்ற பொதுமையை இரசித்தேன்.

இடைவேளையில் வந்திருந்தவர்களை இரசித்தேன்.  


இடைவேளை வரை சூப்பர் என்று டிவிட்டினேன். அதை முகப்புத்தகத்தில் லைக்கியவர்களை இரசித்தேன்.


என் அருகில் அமர்ந்திருந்தவர் ஆண்ட்ராய்டில் ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாடியதை இரசித்தேன்.

ஒரு சண்டைக்காட்சியில்… செல்வாதான் சூர்யா… நரேந்தான் டாங் லீ என்று மக்கள் ஏழாம் அறிவை இன்னும் நினைவூட்டியதை இரசித்தேன்.

எனக்கு பின்பக்கம் இருந்த ஜோடி முகமூடியே இல்லாமல் இருந்ததை இரசித்தேன். ( அந்தப்பையன் எனக்குத் தெரிந்தவரின் மகன் என்பதையும் சேர்த்து..)

இடைவேளைக்குப்பிறகு ஏ.சியில் வந்த தூக்கத்தையும் இரசித்தேன்.

படம் முடிந்து வெளியில் வந்தேன். ‘நான்’ திரைப்படம் ஃபுல் என்றார்கள். மிகவும் இரசித்தேன்.




பதிவுலகில் இதுபோன்று முகமூடி அணிந்துகொண்டிருந்துவிட்டு, இப்போதுதான் முகத்தைக் காட்டியிருப்பவர் ‘ சேட்டைக்காரன் அண்ணன் அவர்கள்.

அவர் பதிவர் சந்திப்பில் பேசும்போது. நான் தமிழ் இலக்கியத்துக்கு சேவை செய்கிறேன். ஏனெனில் நான் கவிதை எழுதுவதில்லை என்று சொன்னதை இரசித்தேன்.

அவருக்குக் கிடைத்த வரவேற்ப்பைப் பார்த்து, முகமூடி என்பது முக்கியமில்லை. நாம் அதைப்போட்டுக்கொண்டு என்ன செய்கிறோம் என்பது முக்கியம் என்பதை உணர்ந்தேன்

இப்போதும் பதிவுலகில் முகமூடியோடு திரியும் வவ்வால் வெளிவரும் நாளை எதிர்பார்க்கிறேன்..
.
முகமூடி படத்தைப் பற்றி நான் விமர்சிக்கவில்லை..நான் இரசித்தவைகளை மட்டுமே கூறியிருக்கிறேன். மிஷ்கினுக்கும் திரை சறுக்கும் அவ்வளவுதான்...ஆனால் மிஷ்கின் திறமைசாலிதான்!

Friday, July 13, 2012

பில்லா 2 – முதல் காட்சி!





திடீரென்று அதிகாலை 7 மணி ஷோ பார்க்கும் வாய்ப்பு… ! கிளம்பு!…ஓடு…! பட்டாசை வேடிக்கை பார்..! பாலாபிஷேகத்தை போட்டோ எடு! ரசிகர்களின் ஆர்வம் கவனி! அவர்களின் சந்தோஷத்தை இரசி! என்று குதூகலமாக விடிந்தது இன்றைய காலை!
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவன் என்பதால், ஜாலியாகச் சென்று அமர்ந்தேன்.
ஹிந்தியிலிருந்து, தமிழுக்கு சூப்பர் ஸ்டாராக வந்து, மீண்டும் தமிழில் அஜீத்தால் மெருகேற்றப்பட்டு, பலமுறை கல்லா கட்டியவன் தான் இந்த பில்லா! இதுவரை, அந்த பில்லா எவ்வளவு மோசமானவன்…அவன் இறந்தபின் மற்றவர்களைப் பிடிக்க போலீஸ் என்ன யுக்தியைக் கையாணடது என்றுதான் பார்த்திருக்கிறோம்.
ஆனால்..யார் இந்த பில்லா? இவன் எங்கிருந்து வந்தான்? அவன் என்னன்னவெல்லாம் செய்து இவ்வளவு பெரிய டான் ஆனான்.. என்று பின்னோக்கிச் சென்றிருக்கும் கதைதான் இந்த பில்லா2 . டெக்னிக்கலி ஸ்பீக்கிங் இதற்கு பில்லா0 என்றோ பில்லா-1 (மைனஸ் ஒன்று) என்றோதான் பெயர் வைத்திருக்கவேண்டும். J
முதல் காட்சியின், முதல் ஃப்ரேமிலேயே அஜீத் வந்துவிடுகிறார்.( என் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் கைகளை விரித்துக்கொண்டு ‘தல’ என்று கத்திக்கொண்டு திரையை நோக்கி ஓட எத்தனித்தான்) முட்டி போட்டுக்கொண்டு கத்துகிறார். கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு அவரைக் கொலை செய்ய முயற்சிக்கும் நான்குபேரிடம் , கத்திவிட்டு அவர்களைத் துவம்சம் செய்கிறார். அதில் ஒருவனை நோக்கி துப்பாக்கியை எடுத்துச் சுடுகிறார். திரை உடைகிறது… பெயர்கள்…!
பெயர் போடும்போதே கதை ஆரம்பித்துவிடுகிறது… இலங்கையில் ஒரு குடும்பம்..அதில் ஒரு சிறுவனும், சிறுமியும்… அந்தக்குடும்பம் எப்படி பிரிகிறது. சிறுவன் எப்படி வளர்கிறான். என்னன்ன சிறு குற்றங்கள் செய்கிறான் என்று புகைப்படமாக விரிகிறது.
இலங்கை அகதியாக இந்தியா வந்து சேரும் டேவிட் பில்லா… முகாமில் தவறு செய்யும் போலீஸ் அதிகாரியைத் தட்டிக்கேட்பதில் ஆரம்பித்து, வைர வியாபாரம் செய்யும் சைவ ஹோட்டல் முதலாளியிடம் சேர்ந்து, தொழிலை விருத்தி செய்ய போதைப்பொருள் வியாபாரத்துக்காக, அங்கிருந்து கோவா அப்பாஸியிடம் சென்று, ஜார்ஜியாவில் இருக்கும் இன்னொரு ஆயுத வியாபாரி டிமிட்ரியைப் பகைத்துக்கொண்டு, அப்பாஸியைத் தீர்த்துக்கட்டி, தன் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தன்னைக்காத்துக்கொண்டு, மிகப்பெரிய டானாக ஆவதுதான் கதை!
இதற்கிடையில் பில்லாவின் அக்கா சென்னையில் இருப்பதும், அவரது மகள் பில்லாவை ரசிப்பதும், பில்லா அவளை தன் பாதுகாப்பில் வைத்திருப்பதும், அவளை எதிரிகள் கொல்வதும் தனி!
அப்பாஸியின் ஆளை, பில்லா கரெக்ட் செய்து வைத்திருந்து, அவள் இன்னொருவனிடம் கரெக்ட் ஆகியிருப்பது அடுத்த தனி!

அஜீத்..அஜீத்…அஜீத்…!! இந்த ஒரு தனிமனிதனை லட்சக்கணக்கான இளைஞர்கள் வெறிபிடித்து ஆராதிக்கிறார்கள் என்றால் , அதற்குக் காரணம், அவரது தன்னம்பிக்கையும், எந்த ஒரு திரையுலகப் பின்னணியும் இல்லாமல் முன் இடத்தைப் பிடித்ததுமாகத்தான் இருக்கும். அவரது குரல் கேட்கும்போதெல்லாம், தியேட்டர் அலறுகிறது..!! அவர் எது செய்தாலும் ஆர்ப்பரிக்கிறது. அதனாலோ என்னவோ, நமக்கும் அஜீத்தைப் பிடிக்கிறது.
படம் முழுமையும் அஜீத் ஆக்கிரமிக்கிறார். அனேகமாக அவர் இல்லாத காட்சிகளை விரல் விடாமலேயே எண்ணிவிடலாம். அவர் பேசும் வசனங்களை ஒரு A4 காகிதத்தில் எழுதிவிடலாம். (அப்படியும், மீதம் இடம் இருக்கும் என்பது தனிச்செய்தி!) அனேகமாக திரு.இரா.முருகன், ஒரு வாரத்தில் மொத்த வசனத்தையும் எழுதிக் கொடுத்திருப்பார்.
கதாநாயகிகள் என்று யாருமில்லை…!! இருவருமே டுபாக்கூர்தான்…!! அதுவும் புருனா அப்துல்லாவுக்கு பதிலாக.. நமது புருனோவும் , அப்துல்லாவும் நடித்திருந்தாலாவது சுவாரஸ்யமாக இருந்திருக்கும்..!
காமெடி! – பில்லா போன்ற ஒரு சீரியஸ்ஸ்ஸ்ஸான கதையில் எதிர்பார்ப்பதுதான் காமெடி! என்று இயக்குநர் சிரிக்காமல் சிந்தித்திருப்பார் போல..! எல்லோரும் சிரிக்க அவகாசமில்லாமல், பெரிய கடுப்புடனேயே அலைகிறார்கள்.  அட..நம்ம ரேணிகுண்டா காமெடியன் கூட , வில்லனாகத்தான் நடந்துகொள்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் உழைத்திருக்கிறார். வினாடிக்கு வினாடி பின்னியிருக்கிறார். ஆங்கிலப்படத்துக்கு இணையான ஒளியமைப்புகளும், நிறச் சேர்க்கையும் பார்க்க பிரம்மாண்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது.
இசை..யுவன் சங்கர் ராஜாவாம்..!! ஏதோ மூட் அவுட்டில் இருந்திருப்பார் போல! ‘பில்லா -1’ன்  ஹார்ட் டிஸ்கை நேராக இதில் கனெக்ட் செய்து……….
மிகவும் சுயநலமான ஒரு தனி மனிதன் எவ்வளவு தவறுகளை வேண்டுமானாலும் செய்வான் என்று சொல்லப்படுகிறது. இப்போது ஹீரோ, நல்லவனாக இருந்தே ஆகவேண்டும் என்ற நியதி உடைக்கப்பட்டிருப்பதால், ‘மங்காத்தா’ பாணி இதிலும் கையாளப்பட்டிருக்கிறது. நடிப்பது அஜீத் என்பதால் அவர் பாத்திரத்தை ஹீரோ என்று எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால், பில்லான்னு ஒருத்தன் இருந்தான்..அவன் என்னன்ன செஞ்சான்னா..என்று சொல்வதாக நினைத்துக்கொள்ளலாம்.
பில்லாவின் நோக்கமோ, அவன் இவ்வளவு கொடூரமான குற்றங்களைச் செய்பவனாக ஆவதற்கான பின்புலமோ, சொல்லப்படவே இல்லை.! அதுவும்..ஒரு இலங்கை அகதி, இந்தியாவில் வந்து, இவ்வளவு பெரிய டானாக ஆகிறான் என்று சொல்வது இலங்கைத்தமிழர்களை இன்னும் கவலைக்குரியதாக ஆக்கும் என்றும் இயக்குநர் சிந்திக்கவில்லை. சரி..! அப்படி ஆகிறான் என்றால் அவனுக்கு யார் எதிரி என்பதும் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அவ்வளவு போலீஸ்களைக் கொன்ற இந்த அகதிகளை அப்படியே சும்மா விட்டுவிட்டார்களா? பெரிய வில்லனாகக் கருதப்படும் டிமிட்ரியின் ஆயுதக்கிடங்கையும் நாசம் செய்துவிட்டால், எங்கு போய் அவர் ஆயுதம் செய்து டானாவது…? இப்படியெல்லாம் கேள்வியெழாமல் இருந்தால், இரசித்துப் பார்க்கலாம்.
அஜீத் ஒருவர் கிடைத்துவிட்டார். பில்லா என்ற பெயர் கிடைத்திருக்கிறது. ஸ்டைலிஷான மேக்கிங்கில் பின்னிவிடலாம் என்று விளையாடியிருக்கிறார்கள்.  மற்றபடி திரைக்கதையில் கொஞ்சம் யோசித்திருந்திருக்கலாம். Super Grey finishing ல் முழுப்படத்தையும் காட்டுவதால், நாம் கதையைப் பற்றி சிந்திக்கமாட்டோம் என்று நினைத்திருப்பார்கள்
. பாவம் அஜீத் இரசிகர்கள்.! இரண்டாம் பாதிக்குப் பின் பெரிய சத்தமே காணவில்லை. அமைதியாகப் படம் பார்த்தார்கள். படம் முடிந்தபின்னரே ஒரு பெரிய ஆரவாரம் வந்தது. ஆனால், அவர்கள் ஏமாற்றப்பட்டவர்களாகவே உணர்ந்திருக்கிறார்கள். கொஞ்சம் நாயகன், புதுப்பேட்டை, ஹிந்தி சர்தார்..போன்ற படங்களைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது.
இந்தப் படத்துக்காக ஜார்ஜியா லொக்கேஷன்களை ஒருங்கிணைத்தபோது நானும் அருகில் இருந்தேன். அந்த நாட்டில், இராணுவமே படப்பிடிப்புக்கு ஹெலிகாப்டர் தந்து உதவியது. இப்படி ஒரு லொக்கேஷன் இருக்கிறது என்று தயாரிப்பாளருக்கு அறிமுகப்படுத்தியது ஒருங்கிணைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாதான்! அந்தப்பகுதிகள் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக, ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. ஆனால் லொக்கேஷன் மட்டுமே கதை இல்லையே?
மொத்தத்தில்…என்னைப் பொறுத்தவரை..
யாரோ பில்லா செய்யும் அத்துனை செயல்களையும், அவன் போக்கிலேயே பார்க்கத் தயார் என்றால்..ஒன்றும் பிரச்னை இல்லை!
இல்லை..எனக்கு கதை சொல்லணும்.. அந்தக்கதையில் ஒரு பிரச்னை இருக்கணும். அதை கதாநாயகன் எப்படி தீர்க்கப்போறானோன்னு தோணனும். அதைத்தீர்க்கும்போது வரும் தடைகளை எப்படி எதிர்கொள்றான்னு இருக்கணும். அப்புறம் வெற்றிகரமா இந்த பிரச்னைலேருந்து அவன் வெளில வந்தான்னு இருக்கணும் என்று திரைக்கதை ரீதியாகச் சிந்தித்தால்…. வீட்டில் குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள்.
நான் எப்போதும், எனக்கு நல்லது என்று தோன்றும் படங்களைப் பற்றித்தான் எழுதுவேன். தவறாகத் தெரிந்தால், கனியிருப்பக் காய் ஏன் கவர்வானேன் என்று எழுதவே மாட்டேன்…
எவ்வளவோ சிரமப்பட்டு எடுத்த படத்தை 650 வார்த்தைகளில் குறை சொல்லக்கூடாதுதான்..! ஆனால், அந்த உழைப்புக்கு நேர்மை என்பது, நம்பி வரும் இரசிகனை திருப்திப்படுத்துவதுதானே? மேலும்.. நான் ஈ என்ற படத்தைப் பார்த்துவிட்டு ‘பில்லா’வைப் பார்த்தால்.. பக்கத்துவீட்டுப்புள்ள என்னமா சாதிக்குது? நம்ம புள்ளை இன்னும் இப்படியே இருக்கேன்னு ரெண்டு சாத்து சாத்தத் தோன்றுவதாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.

பில்லா – 68 கோடி இருந்தால் படமெடுக்கலாம். 120 ரூபாய் இருந்தால் படம் பார்க்கலாம். J




Monday, February 27, 2012

இப்படியாக ஒரு திரைப்பார்வை - ஏழாம் அறிவு







ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு,  விமர்சனங்கள் என்ற ஒரு சிந்தனையை எழுத்தாகவோ, பேச்சாகவோ நாம் ஒவ்வொரு படம் வெளியானபோதும் செய்துவருகிறோம்.

இதில் இரசிகனின் கண்ணோட்டத்தில் நன்றாக இருக்கிறது அல்லது.. இல்லை என்று ஒரே வார்த்தையில் முடிக்கப்படுவது உண்டு. தனது திரைப்பட ரசனையின் எல்லையை விரிவுபடுத்தியதால், அதன் நீள அகலங்களை சிலர் ஆய்வதும் உண்டு. திரைப்பட விமர்சனம் என்பதை இரசித்துச் செய்பவர்கள் ஒருபுறமும் ,தான் பார்த்ததை அப்படியே எழுதுபவர்கள் மறுபுறமும் உண்டு.

அத்தகைய விமர்சனங்கள் , படம் வெளிவந்து முதல் வாரத்தில் வந்துவிடுகின்றன. அதைப்பார்ப்பதா வேண்டாமா என்று வாசகனை முடிவெடுக்கவும் வைக்கின்றன.

விமர்சனங்களுக்கு இன்னொரு கோணம் ஏற்படவேண்டும் என்பது எனது அடிப்படை நோக்கம். அதைப் படம் வெளிவந்த உடன் செய்யாமல், சிறிது நாட்கள் கழித்து செய்து பார்த்தால் என்ன என்று நினைத்திருக்கிறேன். நாம் வாசித்த புத்தகங்களைப் பற்றி  விமர்சிக்கும்போது, அது வெளியான கால தேச வர்த்தமானங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. ஆனால், அது திரைப்படத்துக்கு அப்படியே பொருந்தாது எனினும், ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனையை உருவாக்க காரணியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

முதலில்...


ஏழாம் அறிவு




சீனாவுக்குச் செல்லும் பல்லவ மன்னன் அங்கு அவர்களது தற்காப்புக் கலைகளின் மஹா குரு போதிதர்மனாக ஆகிறான். அவன் கற்றுக்கொடுத்த வித்தைகளை வைத்தே இந்தியாவை அந்த நாடு நோண்டப்பார்த்தால் என்ன ஆகும்? … தமிழகத்தில் அதே குருவின் வம்சத்தில் ஒருவன் அதை முறியடித்தால் எப்படி இருக்கும்? என்ற What If… அணுகுமுறைதான் இந்தக் கதை…!!


அதன் நிறை குறைகள் பலவிதங்களில் பேசப்பட்டிருக்கிறது. ஆனால்.. என்ன செய்திருந்தால் இன்னும் சுவைபட இருந்திருக்கும் என்பதுதான் இந்த அலசல்..! கதையின் மூலமும், அது சார்ந்த விஷயங்களும் சிதைக்கப்படாமல் எப்படி மாற்றமுடியும் என்று சிந்தித்ததின் விளைவுதான் இது..!!


பல்லவ மன்னன் விஷயங்கள் காட்டப்படுகிறது. (சீனர்கள் நமக்கு எதிராகப் பயன்படுத்தினால்…என்று சொல்லும் அந்தப்பகுதி மட்டும் இல்லாமல்) அவரது வம்சாவளி DNA மூலம் மீண்டும் போதி தர்மனைக் கொண்டுவரலாம் என்று அது முடியும்போது ,அதை டாக்குமெண்ட்ரியாக எடுத்த ஸ்ருதி ஹாசன் தனது ப்ரொஃபஸரிடம் போட்டுக்காட்டுகிறாள். அந்த ஆள் ஒரு மெயில் அடிக்கிறான்.

சீனாவில்..அந்த மெயில் திறக்கப்படுகிறது. மீட்டிங் நடக்கிறது. அவர்கள் ஒரு ஸ்ருதியைக் கொன்று அவள் ஆராய்ச்சியைக் குலைக்கவும், இந்தியாவில் கிருமிகளைப் பரப்பவும் நோக்கு வர்ம, குங்ஃபூ விற்பன்னனை அனுப்புகிறார்கள். அவனும் இந்தியா வந்து இறங்குகிறான்.

ஸ்ருதி காஞ்சிபுரம் போய் பல்லவ வம்சாவளி குடும்பங்களைச் சந்திக்கிறாள். அவர்களில் ஒருவரது வீட்டில் கிடைத்த முடி மூலம், போதிவர்மனின் DNA ஒத்துப்போன சூர்யாவின் போட்டோவைப் பார்க்கிறாள். அவன் எங்கே என்று கேட்டால், சர்க்கஸில் இருக்கிறான் என்கிறார்கள். சர்க்கஸ் விளம்பரத்துக்காக சூர்யா சாலையில் ஆடி அறிமுகமாகிறார்.

சென்னை வந்து இறங்கிய டாங் லீ… நாய்க்கு ஊசி போடுகிறான்.

ஸ்ருதி, சர்க்கஸுக்கு வந்து சூர்யாவை சந்திக்கிறார். சூர்யா, ஸ்ருதியைக் கண்டவுடன் காதல் வயப்படுகிறார். அதை நண்பர்களும் ஆதரிக்கிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில், ஸ்ருதி சொல்ல வருவதையே சூர்யா கண்டுகொள்வதில்லை.

டாங் லீயால் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விசாரணை தொடங்குகிறது. அவனைப் போலீசார் தேட ஆரம்பிக்கிறார்கள்.

சூர்யா தன் காதலை ஸ்ருதியிடம் சொல்கிறார். அதை அவர் மறுத்து, அவரது முன்னோர் பற்றி சொல்லி தான் பல நாள் சொல்ல வந்த நோக்கம் பற்றிச் சொல்கிறார். சூர்யா அதற்கு ஒத்துழைக்க ஆரம்பிக்கிறார். ஸ்ருதிக்கும் சூர்யாவின் மேல் காதல் வருகிறது.

டாங் லீ ஸ்ருதியைத் தேடி வரும் இடங்களிலெல்லாம் அவள் மிஸ் ஆகிறாள். அவள் ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்தில் போதிதர்மனின் வாரிசையும் கண்டுபிடித்துவிட்டாள் என்று ப்ரொஃபசரிடம் சொல்கிறாள். அவரும் விசுவாசமாக சீனாவுக்கு தகவல் கொடுக்கிறார்.

டாங் லீ ஸ்ருதியைத்தேடி வந்தபோது தானாகவே சுட்டுக்கொண்டு இறந்தவர்கள் பற்றி, சிசிடிவி வீடியோ மூலம் பார்த்து போலீஸிடம் ஸ்ருதி அந்த வித்தை நோக்கு வர்மம் என்று விளக்குகிறாள். மீடியா அலறுகிறது.

      தனது தகவல்கள் எப்படி வெளிச்சென்றது என்று ஸ்ருதி கவலைப்பட, சூர்யா ப்ரொஃபஸர் மேல் சந்தேகம் கொள்கிறார். அதே போல், ப்ரொஃபஸரின் தகிடுதித்தம் கண்டுபிடிக்கப்படுகிறது. இடையில் டாங் லீயிடம் மாட்டும் சூழலில் அவன் கண்ணில் படாமல், ஆனால் அவனால் பார்க்கப்பட்டவர்களால் இருவரும் தாக்கப்படுகிறார்கள்.

      டாங் லீ கண்ணில் படாமல் ஒரு இடத்தில் வைத்து, ஸ்ருதி, சூர்யாவுக்கு மரபணு ஊட்டம் செய்ய முயற்சிக்கிறாள். அவளைத் தேடும் முயற்சியில் வில்லன் அவளது நண்பர்களைக் கொல்கிறான். போலீஸ் அவனைத் துரத்த, அவன் பல்வேறு சாகசங்கள் செய்து போலீஸிடமிருந்து தப்பிக்கிறான்.

      கடைசியில், ஆய்வுக்கூடத்திலிருந்து சூர்யாவை , ஸ்ருதி மீட்டுச்செல்லும்போது அவருக்கு நினைவு திரும்புகிறது. என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள், டாங் லீ குறுக்கிடுகிறான். அவன் கண்ணில் முதலில் சூர்யா படுகிறான். அவனிடம் நோக்கு வர்மம் பலிக்கவில்லை. ஸ்ருதி கண்ணில் படுகிறாள். அவளைப் பார்க்கிறான். இப்போது ஸ்ருதி , சூர்யாவைக் கொல்லத் துரத்துகிறாள். சூர்யா தன்னையும் காத்துக்கொண்டு டாங் லீயையும் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்ருதியுடன் சண்டை போடுகிறான். அப்போது அவனுக்கு நோக்கு வர்மம் வேலை செய்ய ஆரம்பித்து, அவளை சாந்தமாக்குகிறான். பின்னர் டாங் லீயுடன் சண்டை போட்டு முடிக்கிறான்.

      இப்படி இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று எண்ணியதன் விளைவு..இந்தப்பதிவாக வந்திருக்கிறது. இன்னும் சில படங்களை இப்படி விமர்சிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.!

ஒரு படைப்பாளியின் படைப்பை, அவரது படைப்பாகவே வைத்திருந்து சிறு மாற்றங்களைச் செய்து பார்ப்பதுதான் இதன் நோக்கம்..! அவர் படத்தை என் படமாக்கும் முயற்சி அல்ல..!! விமர்சனத்தையும் விமர்சனம் பண்ணுவேன்னு யாராவது கோதாவில் இறங்கினால்…வுடு ஜூட்..!!






Sunday, January 1, 2012

HERO - இனிமையான பழமை









DUSTIN HOFFMAN  TOOTSIE யிலிருந்தே மிகவும் பிடிக்கும்.
அப்புறம் RAIN MAN WAG THE DOG   என்று தேடித்தேடிப் பார்த்தேன். 
இன்னும் அதிகமாக வியக்க வைத்தார்.

அந்த வரிசையில், நீண்ட நாட்களாகப் பார்க்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்த படம்தான்..HERO, 1992ல் வெளிவந்தது. அவரது மற்ற எல்லாப் படங்களையும்விட ஒரு அழகான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்லவேண்டும்.

பெர்னார்ட் லாப்ளேண்ட் (டஸ்டின் ஹாஃப்மேன்) சிறு சிறு திருட்டுவேலைகள் செய்யும் ஒரு ஆள். தன் வக்கீலிடமே பணத்தை அபேஸ் செய்யும் ஒரு டுபாக்கூர்..! அவருக்கு விவாகரத்து ஆகியிருந்தாலும், முன்னாள் மனைவியுடன் இருக்கும் தன் மகன்மேல் அதிகப் பாசம்.! ஒருநாள் அவனை படத்துக்குக் கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அன்று இரவு வீட்டுக்கு செல்லும் வழியில், மழையால், கார் மக்கர் செய்கிறது. அப்போது இவர் கண்ணெதிரிலேயே திடீரென்று ஒரு விமானம் தரையில் மோதி இறங்குகிறது. மெதுவாக தீப்பிடிக்கவும் ஆரம்பிக்கிறது.

      அதைப்பார்த்துக்கொண்டே இருக்கும்போது, உள்ளிருந்து விமானத்தின் பிரதான வாசலைத் திறக்கமுடியாமல் திணறி, இவரது உதவியைக் கேட்கிறார்கள். புதிதாக போட்டிருக்கும் 100 டாலர் ஷூவைக் கழட்டி வைத்துவிட்டு, புலம்பிக்கொண்டே பெர்னார்டும் கதவைத் திறக்க உதவுகிறார். எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு இறங்குகிறார்கள். தீ மேலும் பரவ ஆரம்பிக்கிறது.

      அப்போது ஒரு சிறுவன் தனது தந்தை விமானத்துக்குள் மாட்டிவிட்டதாகச் சொல்லி இவரிடம் அழுகிறான். அவனை சமாதானப்படுத்த பற்றியெறியும் விமானத்துக்குள் சென்று சிக்கியிருக்கும் அனைவரையும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றுகிறார்.   அப்படி காப்பாற்றப்பட்டவர்களில் பிரபல டிவி சேனலின் நிருபர் கெய்லும் (Geena Davis) ஒருவர். அவரது கைப்பையை பெர்னார்ட் சுட்டுவிடுகிறார். பின்னர் தீயணைப்பு வீரர்களும், மருத்துவக்குழுவும் வந்துவிட, விட்டுச்சென்ற இடத்தில் தனது ஷூவைக் காணாமல் தேடி, அதில் ஒன்று மட்டும் கிடைக்க, அதை எடுத்துக்கொண்டு, கூட்டத்திலிருந்து வெளியேறுகிறார் பெர்னார்ட்..!

      பிறகு தாமதமாக வீட்டுக்குச் சென்றால், அங்கு மகன் தூங்கிவிட்டான் என அவரது முன்னாள் மனைவி, இவரிடம் என்ன நடந்தது என்றே கேட்காமல், திட்டி வெளியேற்றுகிறார். பின்னர் ஒரு ப்ளாட்ஃபார்ம் வாசியான ஜான் பப்பரை (Andy García) சந்திக்கிறார். ஜானின் காரில் பயணிக்கும்போது அந்த விமான சம்பவத்தைப் பற்றிச்சொல்லி, தனக்குப் பிரபலமாவது பிடிக்காது என்றும்,  தனது காணாமல் போன ஷூவைப்பற்றியும் புலம்புகிறார். ஜானிடம் அந்த ஒற்றை ஷூவை அவரது ஒற்றைக்கால் நண்பருக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு செல்கிறார்.

      காப்பாற்றப்பட்ட கெய்ல், தங்கள் எல்லோர் உயிரையும் காத்த அந்த ஹீரோவை மீடியா முன் கொண்டுவர ஆசைப்படுகிறார். கையில் உள்ள எந்த வீடியோவிலும் சரியாக பெர்னார்டின் முகம் பதியாததால் அது இயலவில்லை. ஆனால் விபத்து நடந்த இடத்தில் கிடந்த ஒரே ஒரு ஷூவை ஆதாரமாக வைத்து, விமான விபத்தில் 54 உயிர்களைக் காப்பாற்றிய அந்த ஹீரோவுக்கு 1 மில்லியன் டாலர் என்று சேனல் 4ல் பரிசு அறிவிக்கிறார்கள்.

      அதே நாளில், பெர்னார்டின் திருட்டுக்காக போலீஸ் இவரைக் கைது செய்கிறது. அப்போது கெய்லின் கிரெடிட் கார்டுகளும் சிக்குகின்றன. அன்றே அவர் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார். இந்த ஒரு மில்லியன் மேட்டர் தெரிந்திருந்தாலும் பெர்னார்டால் ஒன்றும் செய்யமுடியாத நிலைமை!

      நாடே எதிர்பார்க்கும் அந்த தன்னலமற்ற ஹீரோ யார் என்று தெரியாமல் அனைவரும் தவிக்கும் வேளையில், தான்தான் அந்த ஹீரோ என்று ஜான், தன்னிடமிருக்கும் பெர்னார்டின் ஒற்றை ஷூவுடன் வந்து நிற்கிறார். மீடியா பற்றிக்கொள்கிறது. ஜான் ஒரே நாளில் கோடீஸ்வரராகிறார். எல்லோருக்கும் நன்மை செய்வதே தன் நோக்கம் என்கிறார். அதேபோல் மிகவும் நல்லவராகவும் இருக்கிறார். கெய்ல் , ஜானைக் காதலிக்கவே ஆரம்பித்துவிடுகிறாள் அமெரிக்காவே அவரை ஹீரோவாகக் கொண்டாடுகிறது. அவர் முன்னாள் வியட்நாம் வீரர் என்பதும் மிகப்பெரிய பலமாக ஆகிறது..

      இவற்றையெல்லாம் சிறையிலிருக்கும் டிவியில் பார்த்த பெர்னார்ட் கொதித்துப்போகிறார். தனக்கு வரவேண்டிய அத்துனை பணத்தையும், புகழையும் இன்னொருவன் அனுபவிக்கிறானே என்று பொருமுகிறார். சில நாட்களில் அவருக்கு ஜாமீன் கிடைக்கிறது.

      வெளியில் வந்தவுடன், புகழ்வெளிச்சத்தில் இருக்கும் ஜானைச் சந்திக்க முயல்கிறார். ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியடைகின்றன. அவர் சொல்வதை யாரும் கேட்கவும் தயாராக இல்லை. ஆனால் ஜான் பெர்னார்டைப் பார்த்துவிடுகிறார். அதுமுதல் நிலைகொள்ளாமல் தவிக்கிறார். இந்நிலையில், ஜானுக்கும், பெர்னார்டுக்கும் விமானத்தில் காணாமல் போன தனது பை மூலமாக ஏதோ தொடர்பு இருப்பதை கெய்ல் உணர்கிறாள். ஜான் கைதவறுதலாக தன் பையை எடுத்து, அதை பெர்னார்டிடம் விற்க, அதை வைத்து ஜானை திருடனென்று காட்ட பெர்னார்ட் ப்ளாக்மெயில் செய்கிறார் என்று தவறாகக் கணிக்கிறாள்.




      இந்நிலையில், தான் ஆள்மாறாட்டம் செய்தது மிகப்பெரிய தவறென்று உணரும் ஜான், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, தனது ஹோட்டல் அறையின் வெளியே குதிக்கத் தயாராகிறார். மீடியா, போலீஸ் , தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள்.அவரைப்பார்க்க பெர்னார்டும் அழைத்துவரப்படுகிறார். அங்கு மெதுவாக அவர் அருகில் சென்று, நீதான் நல்ல ஹீரோ..! நான் ஏதோ சந்தர்ப்பவசத்தால் நல்லது செய்பவன்! அடிப்படையில் நான் ஒரு சுயநலவாதி! ஆகவே நீ அப்படியே பிரபலத்தை அனுபவி! நான் இப்படியே இருந்துவிட்டுப்போகிறேன். என் மகனுக்கு உன்னைப்போன்ற ஒரு முன்னுதாரணம்தான் தேவை! என்னைப்போல் அவன் ஆகவேண்டாம் என்று சொல்லி, தற்கொலையைத் தடுத்து வெளிவருகிறார்.

      கெய்லுக்கும், தங்களை விமானவிபத்தில் இருந்து காப்பாற்றியது பெர்னார்ட்தான் என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் அதை அவரே சொல்ல விரும்பாதபோது தான் ஏன் வெளிக்காட்டவேண்டுமென்று மீடியாவில் சொல்லாமல், அவரிடம் மட்டும் நன்றி சொல்லிவிட்டு நகர்கிறாள்.

      மீண்டும் தன் மகனுடன் மிகச்சாதாரணமான வாழ்வை வாழத் துவங்குகிறார் பெர்னார்ட்.!



 பெர்னி என்று அழைக்கப்படும் பெர்னார்ட் லாப்ளேண்ட் ஆகவே வாழ்ந்திருக்கிறார் ஹாஃப்மேன். ! என்ன ஒரு பார்வை? உடல்மொழி? பின்னியிருக்கிறார். ஒருமாதிரி வெறுப்புடன் உதவ ஆரம்பித்து பின் ஆழமாகச் செய்யும் காட்சிகளிலும், தன்னை யாரும் நம்பவில்லை எனும்போது ஏற்படும் வெறுப்பைக் காட்டும் காட்சிகளிலும் கலக்கல்.! தன்னையும் உணர்ந்து , தன் நண்பனையும் காக்கும் அந்த ஹோட்டல் தற்கொலைக் காட்சியில் உண்மையில் அவர்தான் ஹீரோ என்று நம்மை உணரவைக்கிறார். ஒருமுறை அவரை நேரில் பார்க்கும் ஆவல் அதிகரிக்கிறது.

      அதேபோல், ஜான் பப்பராக நடித்திருக்கும் Andy Garcia  முதலில் ஒரு ப்ளாட்பார வாசியாக இருப்பதற்கும், பின்னர் ஒரு ஹீரோ போல் முக அமைப்பே மாறியபின் வரும் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். பணம் பற்றிப் பேசும்போதும், தன் குற்ற உணர்ச்சியைக் காட்டும்போதும் கதாபாத்திரத்தை நியாயப்படுத்தியிருக்கிறார்.


     

கெய்லாக ஜீனா டேவிஸ் அடுத்த உயிர்நாடி..! உயிர்காத்த ஹீரோவைக் கண்டுபிடிக்கக் காட்டும் ஆர்வம், கண்டுபிடித்தபின் ஏற்படும் சிற்சில சந்தேகங்களில் ஏற்படுத்திக்கொள்ளும் சமரசம், அவனிடம் ஏற்படும் மயக்கம், உண்மையான ஹீரோவைக் கண்டறிந்தபின் ஏற்படும் ஏமாற்றம், தன் தொழிலுக்கு துரோகம் செய்யாத நேர்மை என்று பல்வேறு உணர்ச்சிகளில் சதிராடியிருக்கிறார் அம்மணி!


      



ஒளிப்பதிவும், இசையும் படம் வெளியாகி 20 ஆண்டுகளைத் தொடுவதை மறக்கடிக்கின்றன. 

 ஒரு நல்ல , தரமான படத்தைப் பார்த்த உணர்வைக்கொடுத்த இயக்குநர் Stephen Frears  க்குத்தான் நன்றிகளைச் சொல்லவேண்டும்.



Thursday, November 24, 2011

பண்பலை அரசியல்





சிறிய திரைப்படங்கள் திரையரங்குகளை எட்டுவதே மிகவும் கடினமான சூழலாக இன்று இருக்கிறது. அது எல்லோராலும் பரவலாக விவாதிக்கப்பட்டாலும், சிறிய படங்கள் எனப்படும், நட்சத்திர அந்தஸ்து இல்லாதவர்கள் இயக்கியோ, நடித்தோ எடுத்த படங்கள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கின்றன. அப்படி முடித்து, வெளியிடவே முடியாத படங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் 60 ஐத் தாண்டுகிறது. இந்த விஷயத்தில், திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என்று பலருக்கும் பங்கு இருக்கிறது. பேசப்படும் நடிகர்கள் இருந்தால்தான் அந்தப்படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கின்றன. சிறிய படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இயலாத காரியமாகிவிட்டது. இவையெல்லாம், எல்லா ஊடகங்களும், திரைப்படத்துறையில் உள்ளவர்களும் துவைத்துத் தொங்கவிட்ட தகவல்கள்.!



இவையனைத்தையும் மீறி, பண்பலை எனப்படும் தனியார் FM வானொலிகள் சிறு படங்களுக்கு எதிராக ஒரு அரசியலைச் செய்துவருகின்றன. ஒரு படத்தின் இசை வெளியிடப்படுகிறது. அதன் பாடல்கள் நன்றாக இருந்தால், அவை வானொலியில் திரும்பத்திரும்ப ஒலிபரப்பப்படுகிறது. அதன்மூலம் அந்தப் பாடலுக்கான விற்பனை அதிகரிக்கலாம். அந்தப்பாடலை அலைபேசியின் அழைப்பு ஒலியாக பலரும் வைத்துக்கொள்ளலாம். அந்தப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரிக்கலாம்.

ஆனால், அனைத்து வானொலி நிலையங்களும், எந்தப்படத்தின் இசை வெளியிடப்பட்டாலும், எந்தவித பாரபட்சமும் இன்றி ஒலிபரப்ப முயற்சிக்கிறார்களா என்றால், அங்குதான் ஒரு புதுவித அரசியலை அவர்களும் அரங்கேற்றுகிறார்கள். ஒரு பெரிய படம், பெரிய இசையமைப்பாளரின் இசை வெளியீட்டு விழா நடந்த அன்று மாலையே அந்தப்படத்தின் பாடல்கள் அனைத்து வானொலிகளிலும் ஒலிபரப்பப்பட்டுவிடும். ஒரே நாளில் பத்துமுறை எட்டு சேனலிலும் வந்து கிழித்தெடுக்கும். ஆனால், அதுவே ஒரு சிறிய படம், புதிய இசையமைப்பாளர் என்றால் அவர்கள் ஒலிபரப்புவதே இல்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ’ அந்தப்படமெல்லாம் ரிலீஸே ஆகாது சார்!’  அல்லது ‘ படம் ரிலீஸ் ஆனவுடன் தான் பாட்டுப்போடவேண்டுமென்பது உத்தரவு!”( இது எங்கள் சென்னை அகில இந்திய வானொலிக்கும் பொருந்தும். ஆனால் அவர்கள் கொஞ்சம் பரிசீலிப்பார்கள்! ) அப்படியென்றால், இன்னும் ரிலீஸாகாத பெரிய படத்தின் பாடலை ஏன் ஒலிபரப்பினீர்கள் என்றால் ‘ஹி..ஹி..ஹி..!’ அல்லது ’அது கட்டாயம் ரிலீஸ் ஆகிடும் சார்! என்றுதான் பதில் சொல்கிறார்கள்.

இவர்கள் ஏன் இப்படி புரியாதவர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு திரைப்படத்தின் பாடல்கள் என்பது வேறு ! அதை ஆல்பம் என்கிறோம். அதாவது ஒரு படத்துக்கான பாடல்களை இசையமைப்பாளர் மூலம் வடிவமைத்து, பாடலாசிரியர் கொண்டு வார்த்தைகள் கோர்த்து, பாடகர்களை வைத்துப் பாடி அவற்றை ஒரு ஆல்பமாக்கி, இந்தப்பாடல்களுக்கான காட்சிகள் , மேற்கண்ட படத்தில் படமாக்கப்பட்டுள்ளன என்பதை அறிவிப்பதுதான் இசை வெளியீட்டுவிழா! அதாவது , தனிப்பட்ட முறையில், அதிகாரப்பூர்வமாக பாடல்கள் வெளியிடப்பட்டுவிட்டன.

அதற்கும், அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கும் சம்பந்தமே இல்லை.! இதைப்பற்றி கவலைப்படவேண்டியவை தொலைக்காட்சிகள்..! அவர்களால்தான் காட்சி இல்லாமல் பாடலை ஒளிபரப்ப முடியாது. ஆனால், சிறுபடங்களை முற்றிலும் ஓரங்கட்டும் கூட்டமாகவே தனியார் வானொலிகளும் இருக்கிறார்கள்.

80,90 களில், எனக்குத்தெரிந்து, வெளிவராத படங்களின் பாடல்கள் பல பிரபலமாகியிருக்கின்றன. ராமராஜன் நடித்து ‘காவலன்’ என்ற படம் தயாரானது. அதில்தான் பிரபலமான ‘ ஒட்டடை ஒட்டடை கம்பத்துல மாமா!’ எனத்தொடங்கும் பாடல் பதிவாகியிருந்தது. அதேபோல்…’சோலைப்பூந்தென்றலில் ஊஞ்சலாடும் செல்லப்பைங்கிளி..! இது பூவே பொன் பூவே என்ற படம் என்று நினைவு! அதனை இலங்கை வானொலி ஒரு நாளைக்கு மூன்று முறை ஒலிபரப்பி பிரபலப்படுத்தினார்கள்.‘ ‘ஒரு ஆலம்பூவு அத்திப்பூவைப்பாத்ததுண்டா! ‘ போன்ற பாடல்கள் வெளிவராத படங்களில் பிரபலமானவை! இன்னும் பல பாடல்கள் உண்டு.

இன்றும், நான் பார்த்த வகையில், இசை வெளியீட்டு விழா முடிந்து, ஆனால் படம் வெளிவராத பல பாடல்கள் மிகவும் இனிமையான இசையுடன் உள்ளன. ஆனால், அவை மக்கள் கேட்கும் அளவுக்குச் சென்றடையாமல் உள்ளன. காரணம் அவை பிரபலப்படுத்தப் படாததுதான்.!! ‘வர்ணம்’ என்றொரு படம் வந்தது. அதில் ஒரு பாடல் மிக நன்றாக இருந்தது. ஆனால், ஒரு வானொலி கூட ஒலிபரப்பவில்லை.

திரைப்படம் இல்லாமல், திரை இசை இல்லாமல் ஒரு நாள் கூட நமது பண்பலை வானொலிகள் நிகழ்ச்சிகள் நடத்த முடியாது. ஆனால், அவர்களும் பெரிய படங்கள், பெரிய இசையமைப்பாளர்கள் என்று சாய்ந்துவிட்டு, பின்னர் சிறிய படங்கள் ஏன் தோற்கின்றன? என்று கேட்டு நேயர்களை SMS செய்யச்சொல்லி, காசு பார்க்கிறார்கள்.

இந்த விவகாரத்தில், பல ரேடியோ ஜாக்கிகள் மிகப் பெரிய காரணிகள்.! அவர்கள் தாங்கள் விரும்பும் பாடல்களை ஒலிபரப்புவது…! அல்லது தங்களுக்குத் தெரிந்த பாடல்களை ஒலிபரப்புவது என்ற வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். சிறு படங்களின் பாடல்களைக் கேட்பதுகூட இல்லை. எல்லா சிறுபடங்களின் பாடல்களும் நன்றாக இருப்பதில்லை. அதில் சர்வ மொக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெரிய படங்களிலும் அது சாத்தியம்தானே! ஆனால், ஒரு சிறு படத்தின் இசை வெளியிடப்பட்டுவிட்டால், அதன் பாடல்களில் ஏதாவது நல்ல பாடல் சிக்கினால், அவற்றை ஒலிபரப்புவதால் எந்த நேயரின் காதும் கெட்டுப்போய்விடாது. இவர்களாகவே முன் முடிவு எடுத்துக்கொண்டு, பாடல்களை ஒதுக்குவது, திரை உலகின் வளரும் எத்தனையோ கலைஞர்களை தன்னால் இயன்றவரை கீழே அழுத்தும் முடிவாகத்தான் இருக்கும். 

இதற்கு பல தீர்வுகள் இருக்கின்றன. ஒரு நாளில், சிறு படங்களுக்கென்று ஒரு மணி நேரம் ஒதுக்கலாம். அதில் 5 முதல் 8 பாடல்களை ஒலிபரப்பலாம். இடையில் அந்தப்படங்களின் விளம்பரங்கள் வாங்கிக்கொள்ளலாம். அந்த படக்குழுவினரை பேட்டி எடுக்கலாம். இப்படி ஒரு படம் வர இருக்கிறது அல்லது இப்படி ஒரு படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது என்றாவது நேயர்கள் தெரிந்துகொள்வார்கள்.

என் திரையுலக நண்பர் ஒருவர் கூறுவார். ‘கட்டுச்சோத்தை பிரிச்சு வைங்க! ‘ பிடிச்சவன் தின்னுட்டுப்போறான்’ என்று! அதுபோல்,  பாடலை ஒலிபரப்பினால், பிடித்தவர்கள் மீண்டும் அழைத்துக் கேட்டுவிட்டுப் போகிறார்கள். தமிழில் நிறையப்பாடல்கள் வருவதற்கான வாய்ப்புகளும் வரும். புதிய இசையமைப்பாளர்களும் உற்சாகத்துடன் வேலை பார்ப்பார்கள்.

எல்லா அனிருத்துக்கும் 3, தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கிடைத்துவிடமாட்டார்கள். அவர்களையும் அலட்சியப்படுத்தாமல் ஆதரிக்கட்டும் நமது FM வானொலிகள்!

ஏனெனில்…எறும்புகளும் சேர்ந்ததுதான் உயிர்க்கோளம்.!

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...