Showing posts with label பாராட்டு. Show all posts
Showing posts with label பாராட்டு. Show all posts

Friday, July 17, 2015

வெறும் கணக்கு



விகடனில், எஸ்.ராவின் ‘வெறும் கணக்கு’ சிறுகதை எனக்குள் பல
நினைவலைகளையும், நெகிழ்ச்சியையும் உண்டாக்கிவிட்டது.
பண விஷயத்தில், யாராலும் நம்பப்படாத ஒருவர், தன்னை நம்பிய ஒருவரின் மரணச் செலவை பைசா சுத்தமாக அவரது மகனிடம்
ஒப்படைக்கும் நிகழ்வை இத்தனை அற்புதமாக, நுட்பமாக எழுதி எஸ்.ரா எப்போதும்போல் நம் மனதில் தனக்கான சிம்மாசனத்தை இன்னும் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில், எத்தனை பேர் அன்றாடச் செலவுகளை பைசா சுத்தமாக கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பெரும்பாலும் எழுதி எக்ஸலில் பதிவு செய்துவிடுவேன். அது பல விதங்களில் உதவியிருக்கிறது. அதனை நான் சந்திக்கும், பயிற்றுவிக்கும் அனைவருக்கும் சொல்லி வருகிறேன்.
ஏனெனில் செலவில் நமக்கிருக்கும் விழிப்புணர்வே நமது வருமானத்தைப் பற்றிய அறிவை அதிகமாக்கும் என்பது எனது எண்ணம். அதைப் பின்பற்றும் பலரும் கிடைத்த மகிழ்ச்சியையோ, கவன உணர்வையோ பகிர்ந்துகொள்ளும்பொழுது இன்னும் பெருமையாக இருக்கும்.
இந்தக் கணக்கெழுதும் விஷயத்தில் எனது தந்தைதான் எனக்கு
முன்னோடி.எத்தனை அதிக வேலைப்பளு இருந்தாலும், அன்றாட செலவுக்கணக்கை மிகச்சரியாக எழுதிவைத்துவிட்டுத்தான் தூங்கப்போவார்.
மிகக்குறைவான
வருமானத்தில்கூட, அதனை தவறாமல் செய்து வந்து, இன்றும் அந்தக் கணக்கெழுதும் வழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
எத்தனையோ தருணங்களில், அவரது கணக்கு நோட்டின் மூலம், முன் ஆண்டுகளில் புதுக்கோட்டை -
சென்னை பேருந்துக் கட்டணம் 55ரூபாய் ,
வசந்தவிஹார் சாப்பாடு 5ரூபாய்,
ஒரு சீப்பு வாழைப்பழம் 1ரூபாய் ,
சாரதாஸில் வாங்கிய சட்டை 44 ரூபாய்,
திண்ணை பூச கொத்தனாருக்குக் கொடுத்த நாள் கூலி 10 ரூபாய் என்று பல நிகழ்வுகள், பொருட்களின் விலைவாசியைத் தெரிந்துகொள்ளும்போது பொருளியலே படித்த அளவுக்கு சிந்தனை விரிந்திருக்கிறது.
ஒரு திருமண நிகழ்வு மாதிரியான குடும்ப விழாக்களில் அதன் மொத்தச் செலவையும் எழுதி வைத்து, பின்னர் எடுத்துப் பார்க்கும்போதோ, அந்தச் செலவுக்குப் பிறகு , மிச்சமிருக்கும் தொகை சரியாக இருக்கும்போதோ கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதேபோல் அந்த விழா வீட்டினர் , நம்மிடம் கொடுத்த தொகைக்கு சரியான இரசீதுகளுடன் கணக்குக் கொடுத்துவிட்டு, நிமிர்ந்து நடக்கும் பெருமை அதைவிட அலாதி!
பொதுவாக இப்போது நம்மில் எத்தனை பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னால், எல்லா வீடுகளிலும் ஒரு கணக்கு நோட்டு இருந்திருக்கும்.
இந்த நினைவுகள் அனைத்தையும் தூண்டி , நெகிழவும் மகிழவும் வைத்த எஸ்.ராவுக்கு அழைத்துப் பேசியபின்னரும் மீதமிருக்கிறது உணர்வின் மிச்சம்!
நன்றி எஸ்.ரா , இப்படிப்பட்ட உணர்வுகளைப் பதிவு செய்தமைக்கு! நீங்கள் எங்கள் பொக்கிஷம்!

Sunday, December 18, 2011

கீசக வதம்





மெரினா காந்தி சிலையில் நடந்த ஒரு பதிவர் சந்திப்பில் அறிமுகமானவர்தான் அந்தப் பதிவர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு சில நாட்களில் என்னைத் தொடர்புகொண்டார். திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் காரணமாக,, திரையுலக நடிப்பு வாய்ப்புகள் பற்றிக் கேட்டார். பேசிக்கொண்டிருந்தோம். நல்ல திறமைசாலியாகத் தெரிந்தது. அடிக்கடி சந்தித்தோம். பல்வேறு விஷயங்களில் தெளிவு நிறைந்தவராகத் தெரிந்தார்.

சினிமாவில் நடிக்கவேண்டும் என்று சும்மா சொல்லிக்கொண்டிராமல், உண்மையான அக்கறை இருந்ததால், கூத்துப்பட்டறையிலிருந்து வெளிவந்த தேவி அவர்கள் நடத்தும், ‘தி விருக்‌ஷா ‘ என்ற நடிப்புப் பட்டறையில் பயிற்சி எடுத்துவருவதாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் பட்டறையின் படைப்பாக ‘கீசக வதம்’ எனும் கூத்தில் தானும் நடித்திருப்பதாகச் சொன்னார். 17ம் தேதி (நேற்று) மாலை , அதன் அரங்கேற்றம் என்று அழைத்தார். என் பங்குக்கு திரு.லிவிங்ஸ்டன் அவர்களை அழைத்தேன். அவரும் வந்தார்.

சாலிக்கிராமம், எம்.ஜி.ஆர். ஜானகி பள்ளி வளாகத்தில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டு, வித்தியாசமான ஒளி அமைப்புடன் கூத்துக்குத் தயாராக இருந்தது.

சரியாக 7:15க்கு கீசக வதம் கூத்து ஆரம்பமானது.

பாண்டவர்கள், 13 ஆண்டு வனவாசத்தில், கடைசி ஒரு ஆண்டை அஞ்ஞாத வாசம் எனப்படும் , அடையாளம் தெரியாமல் மறைந்துவாழும் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். விராட நாட்டு மன்னரிடம் வந்து கூத்தாடிகளாக அறிமுகப்படுத்திக்கொண்டு, வெவ்வேறு வேலைகளில் அமர்கிறார்கள். விராட மன்னனின் மச்சினன் (மனைவியின் தம்பி) கீசகன். அவன் வருணனையே கட்டுப்படுத்தும் சூரன். அவனுக்கு சைரேந்திரி என்ற பெயரில் வந்திருக்கும் திரௌபதியின்மேல் மோகம்.! தன்னை அடைய முயற்சிக்கும் அவனிடமிருந்து காக்கும்படி – சமையற்காரனாக வாழும் – பீமனிடம் அவள் கேட்க, அவன் கீசகனை தந்திரமாக வரவழைத்து வதம் செய்கிறான்.

இந்தக் கதையை எடுத்துக்கொண்டு மிக இயல்பாக , தேர்ந்த நடிகர்களுடன்  ஒரு மணிநேரம் மிகச்சிறப்பாக நடித்துக்காட்டினார்கள்.

தருமர் (பிரதீப்) தான் கதைசொல்ல ஆரம்பிக்கிறார். தங்கள் நிலையை எடுத்துரைக்கிறார். தன் கூட்டத்தை கூத்தாடிகள் என அறிமுகப்படுத்துகிறார். விராட மன்னனிடம் வேலை கேட்கிறார். மன்னனுடன் விளையாட்டுக்குச் சூதாடுகிறார். நிறைய விபரங்கள் பேசுகிறார். பிரச்னைகளின்போது மட்டும் வாயை மூடி மன்மோகனாய் இருக்கிறார். மது அருந்திவிட்டு சௌமியனுடன் கட்டி உருள்கிறார். சைரேந்திரியை கீசகன் சீண்டுகிறான் என்று தெரிந்து, உள்ளம் குமுறி கூத்தாடிகள் நிலைபற்றி ஒரு பாடல் பாடுகிறார். இந்தப்பாடலை எழுதியதும் ப்ரதீப் தான் என்பது கூத்து முடிந்தபின்தான் எனக்குத் தெரியவந்தது. தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்து, வசனங்களின் ஏற்ற இறக்கங்களில் சரியாகப் பயணித்து கைதட்டல் பெறுகிறார். மது அருந்திவிட்டு, சௌமியனுடன் பேசும் மொழியைக் கண்டு நானும்,லிவிங்ஸ்டன் அவர்களும் மனம் விட்டுச் சிரித்தோம். கூத்தாடிகளின் வாழ்வுபற்றிப் பாடிய பாடலின் முடிவில் எனக்குக் கண்ணில் நீர் வழிந்தது. தென்றல் படத்தின் ‘தாண்டவக்கோனே’ பாடலின் கடைசிவரிகளில் ஏற்படும் அதே உணர்வு எழுந்தது. உயரம் தொட வாழ்த்துக்கள் ப்ரதீப்.!

சுல்தான், வல்லன்(பீமன்) எனப்படும் சமையற்காரனாகவும், விராட மன்னனின் மனைவி அரசி சுதர்சனையாகவும் வருகிறார். அரசியாக வரும்போது அந்த நெளிவுகளும், ஒரு பெண்ணின் பொறாமையை உடல்மொழியில் காட்டியும் பிரமாதப் படுத்துகிறார். மன்னனுக்கு மது ஊற்றிக்கொடுக்கும் வல்லனாக வரும்பொழுது அப்படி ஒரு மாற்றம். கூத்தின் பாதி வரை, அவர்தன் இரு வேடங்களும் செய்கிறார் என்று திரு.லிவிங்ஸ்டனே கண்டுபிடிக்கவில்லை. அந்த அளவுக்கு வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார். கீசகனை வதம் செய்யும்போது உண்மையிலேயே அவரை ஏதாவது செய்துவிடுவாரோ என்று அஞ்சுமளவுக்கு ஆவேசம் காட்டுகிறார்.


டாக்டர். ரஞ்சித் பிரகனளை (அர்ஜுனன்) எனப்படும் திருநங்கையாக வருகிறார். விராட மன்னனைச் சூடேற்றுகிறார். தன்னுடைய நெளிவு சுளிவுகளால் , பின்னுகிறார். விக் வைத்திருந்தால் பெண் என்றே கூட்டம் நம்பிவிடும்.

நகுலன் , சகாதேவனாக முறையே பாலாஜியும், ராஜ்குமாரும் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை. ஆனால் பாலாஜி சூரியக்குஞ்சு எனும் பாத்திரத்தில் வந்து ஒரு ஆட்டம் ஆடிவிட்டுப் போகிறார்.

சைரேந்திரியாக வைஷாலி என்ற ஆந்திரப்பெண்ணை நடிக்கவைத்திருக்கிறார்கள். பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். பூப்பறிக்கும் காட்சியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஆனால், எல்லோரும் நல்ல தமிழ் பேசி நடிக்கும்போது, அவரது தமிழ் மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது.

சௌமியராக வரும் சுரேஷ், பின்னியிருக்கிறார் மனிதர்.. அவரது நடிப்பு ஒரு தேர்ந்த நகைச்சுவை நடிகருக்கான அத்துணை கூறுகளையும் கொண்டிருக்கிறது. அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு அவர் அடிக்கும் குட்டிக்கரணங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன.

கீசகனாக வரும் ராம்குமாரிடம் பசுபதியின் அங்க அசைவுகள் தெரிகிறது. கீசகனாகவே வாழ்கிறார். சைரேந்திரியை மோப்பம் பிடிக்கும்போதும்..போதையில் புலம்பும்போதும் … சிறப்பாகச் செய்திருக்கிறார்.

விராட மன்னனாக நீல் ஆனந்த் , உணர்ந்து நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் திடீரென்று தலைப்பாகை கட்டிக்கொண்டு வந்து சிலம்பம் சுழற்றுகிறார். அரசனாக, மது அருந்தும் காட்சியிலும், பிரகணளையிடம் வழியும் காட்சியிலும் பிரமாதம்.!

அரசியின் தோழியாக விஜயா, உதட்டசைவை வைத்து, பேசுவதைச் சொல்லும் காட்சியில் அங்கதம் நன்றாக இருக்கிறது.

காவலாளியாக புருஷோத்தமன் , ஆரம்பக்காட்சியில் அவர் தனது நகைச்சுவை நடிப்பை நன்கு வெளிப்படுத்தி கவனம் கவர்கிறார்.

    
   சரித்திரக் கூத்துக்களைப் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. தஞ்சையில் இருந்தபோது, மெலட்டூரில் ஒரு முறை ஹிரண்ய வதம் பார்த்தேன். இப்போது கீசக வதம்! கூத்தின் அத்துணை அம்சங்களும் குறையாமல், அதே சமயம் சில இடங்களில் நவீன நாடக அம்சங்களையும் கோர்த்து, அரங்கப் பொருட்களில் ஒன்றாக மைதானத்திலுள்ள மாமரம் ஒன்றைப் பயன்படுத்தி , ஒரு நல்ல கூத்தினை அளித்திருக்கிறார்கள் டி விருக்‌ஷா குழுவினர்.!

எழுத்து - கூத்துப்பட்டறை திரு.முத்துச்சாமி
வடிவமைப்பு – திரு.ஆனந்தக் கண்ணன்
இயக்கம் – செல்வி. G. தேவி

இந்தக்கூத்தில் சிறப்பாக நடித்திருந்து, என்னையும் அழைத்த அந்தப் பதிவர்தான் தருமராக நடித்திருந்த...



Sunday, November 14, 2010

பிரமிக்க ஒன்று! சிரிக்க ரெண்டு!




ஏ.ஆர்.ரஹ்மானை கண்டு பிரமிப்பதற்கான காரணம் இதுவும் ஒன்றுதான்!

  கனடாவில் ஒரு கல்லூரி இசைக்குழு பாடி அசத்துகிறது பாருங்கள்! மேலை உலகைத் தமிழ் பாட வைத்து பிரமிக்கடிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!

இதுதான் பிரமிக்க ஒன்று ! 







ஒரு சிறுபெண்! மொழித் தடுமாற்றம் இல்லாமல், மேடைபயம் இல்லாமல், என்னமாய்ச் சிரிக்க வைக்கிறாள்! அவர்கள் வீட்டில் திருஷ்டி சுற்றிப்போடச்சொல்லவேண்டும்.

இதுதான் சிரிக்க ஒன்று !! 





ஆங்கிலப் புரிதலும், அனைத்து நாட்டார்களும் .....பழைய நிகழ்ச்சியாக இருக்கலாம். சுவை சூப்பர்!
இதுதான் சிரிக்க ரெண்டு!







Thursday, February 18, 2010

ஞானாலயா

புதுக்கோட்டையில் எனக்குத்தெரிந்த நண்பரின் நண்பர் கூப்பிட்டு, நான் சொல்லும் முகவரிக்கு வாருங்கள். கொஞ்சம் கம்ப்யூட்டர் வேலை இருக்கிறது என்றார். நானும் என் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த வீட்டுக்குப்போனபின், பிரமித்துப்போனேன். அந்த வீடு முழுவதும் புத்தகங்கள்! வரிசைக்கிரமமாக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு ஒரு நூலகம்போல் இருந்தது. அப்புறம்தான் உறைத்தது.




அது ஞானாலயா! தமிழகத்தின் தனிச்சிறப்பு மிக்க தனியார் நூலகம்.! புதுக்கோட்டையின் பெருமைகளில் முக்கியமானது! இன்றைய தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும் வந்துபோகும் கோவில்! அந்த நூலகம் எங்கள் பகுதியில்தான் இருக்கிறது என்று எனக்குத்தெரியும். ஆனால் அப்புறம் போய்க்கொள்ளலாம் என்று மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டேன். ( அதற்காக இன்றும் வருந்திக்கொண்டிருக்கிறேன் ). ஆனால் இப்போது நான் ஞானாலயாவின் செல்லப்பிள்ளை! :)



அதன் நிறுவனர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் டோரதி கிருஷ்ணமூர்த்தி தம்பதியர். அவர் பள்ளி தலைமை ஆசிரியராய் இருந்தவர். திருமதி டோரதி அவர்கள் கல்லூரி முதல்வராய் இருந்தவர். இருவரும் பணி ஓய்வு பெற்றுவிட்டு ஞானாலயாவை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள்.

திரு,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உடலாலும், அறிவாலும், உள்ளத்தாலும்அளவிடமுடியா உயரமானவர்! மனிதர்களை நேசிப்பவர். நேர்மையை சுவாசிப்பவர். ஒரு செய்தியின் அடி ஆழம்வரை சென்று அலசுபவர்! அங்கு வரும் ஆர்வலர்களுக்கு முகம் கோணாமல் விபரங்களை அள்ளித்தருபவர். அவர் விளக்கம் சொல்லாமல் ஒரு புத்தகத்தை படிப்பது உப்பில்லாப்பண்டம் உண்பதைப்போல! அவர் ஒரு நூலகர் அல்ல.! நல்ல வாசகர்! நீங்கள் எந்த தமிழ்ப்புத்தகம் தேடிக்கொண்டிருந்தாலும் இங்கு இருக்கும் சாத்தியம் அதிகம்! மேலும் அதைப்பற்றிய பின்னணித் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.

திருமதி.டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அன்பான தாய் மற்றும் அறிவுசால் ஆசான்! கணவரின் எல்லாச்செயல்களிலும் துணை நின்று ஒரு நல்ல ஆலோசகராகவும் திகழ்பவர்! மிகவும் அற்புதமாகச் சமைப்பார். (நம்மல்லாம் படிக்க போகச்சொன்னா தின்னுப்புட்டு வர்ற கூட்டம்! என்ன பண்றது? ) தவிர..மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்! அவர் எழுதி பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் மலேசியாவிலும், ஐரோப்பாவிலும் கௌரவப்படுத்தப்பட்டு, விருதுகள் பெற்றிருக்கிறார்கள். ஆனால் நம் மத்திய, மாநில அரசுகளோ...ம்ஹூம்.. !



இங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. தமிழில் அரிய நூல்கள் அனைத்தும் இருக்கின்றன. நான் ஒரு எழுத்தாளர் பற்றியோ, படைப்புகள் பற்றியோ தெரிந்துகொள்ள விரும்பினால், அடுத்து போய் விழும் இடம் அதுதான். இங்கு எல்லா சிற்றிதழ்களும் ஆரம்பம் முதல் உள்ளன. இன்றும் வந்துகொண்டிருக்கின்றன. வட அமெரிக்க FETNA வின் தென்றல் இதழைக்கூட நான் படித்திருக்கிறேன்.டெல்லியிலிருந்து வெளிவரும் வடக்கு வாசல் இங்கு வருகிறது.பல நாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி மாணவர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த அறிவுப்பெட்டகத்துக்கு ஒரு மாதம் அந்துருண்டை வாங்கவே அவர்களுக்கு ஒரு தொகை செலவாகிறது. மேலும் இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல கணிணி மயமாக்குவதும், புத்தகங்கள் அனைத்தையும் மின்புத்தகமாக மாற்றுவதும், அதை இணைய நூலகமாக்கி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த வைப்பதும் காலத்தின் கட்டாயம்.! . இவர்கள் இன்றுவரை தங்கள் சொந்த ஓய்வூதியத்தையும், சேமிப்பையும் வைத்தே நூலகத்தை பராமரித்து வருகிறார்கள். ஆர்வலர்கள் நிறைய புத்தகங்களைத் தந்து குவிக்கிறார்கள். ஆனால் பொருளுதவிக்காக இப்போதுதான் மத்திய, மாநில அரசுகளிடம் திட்ட முன்வரைவு வைக்கப்பட்டுள்ளது.

நாம் ஏதாவது இந்த நூலகத்துக்குச்செய்யவேண்டும்.! என்ன செய்யலாம்?

ஏதாவது ஒரு நல்ல நோக்கத்தோடோ, பாராட்டவோ, அவரைத்தொடர்பு கொள்ள விரும்பினால்.. +91 99656 33140

Tuesday, February 2, 2010

பரிசலுக்கும்...கேபிளுக்கும்....!!

சூப்பரா ஆரம்பிச்சிருக்கு பிப்ரவரி!
எனக்கு பல வித மகிழ்ச்சிகள்!
அதுக்கு பல காரணங்கள்!


முதல் காரணம், !
நண்பர்கள் இருவரின் புத்தகங்கள் 'காதலர் தினமன்று' ரிலீஸ்!


இதுதான் புத்தகங்கள்!









மற்ற விபரங்களுக்கு....இங்கே போய் கட்டாயம் பாருங்க!

புத்தக ஆசிரியர்கள் பரிசல் மற்றும் கேபிளுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

இது..
பரிசலுக்கும்..கேபிளுக்கும் எல்லோரும் வாழ்த்துச்சொல்லும் நேரம்!
கூட்டம் போடாம வரிசையா வந்து வாழ்த்திட்டுப்போங்க! :)

Saturday, January 2, 2010

நம்புங்க டீச்சர்! - 2



8ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்துவிட்டு... 9ம் வகுப்பில் தனியார் பள்ளியில் சேர்ந்த அந்த இரண்டு பெண்களும் தாங்கள் அரசுப்பள்ளியிலிருந்து வருகிறோம் என்பதால் ஏற்பட்ட அவமானத்துடன் சென்ற இடம்..

தங்களது அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் வீடு..! அவரிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களைச் சொல்லி..

நம்ம பள்ளியோடம்னா ரொம்ப பெருமையா நெனச்சுக்கிட்டு போனோம் சார்! ஆனா கவருமெண்ட் பள்ளியோடம்னா அவ்ளோ மட்டமா? ன்னு கேட்டு அழுக ஆரம்பித்துவிட்டார்கள்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட.. அந்த தலைமை ஆசிரியர்..

நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு போங்க! நான் பாத்துக்குறேன் என்றார்.

அடுத்தநாள் நேராக அந்தத் தனியார் பள்ளிக்குச்சென்றார்.
தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று ..

'நான் ஒரு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்..தயவு செஞ்சு 9ம் வகுப்புக்கு ஆங்கிலம் மற்றும் கணக்கு எடுக்கும் டீச்சர்களை வரச்சொல்லுங்க சார்..ஒரு பிரச்னை இருக்கு !' என்றார்.

அந்தத் தலைமை ஆசிரியர் கொஞ்சம் விவாதிக்க நினைத்தாலும்....என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் அவர்களை அழைத்துவரச்செய்தார்.

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரம்பித்தார்.

மேடம்..! நீங்க அந்த ரெண்டு பிள்ளைங்களையும் அரசுப்பள்ளில படிச்சதுக்காக அவமானப்படுத்தினீங்களாம். அரசுப்பள்ளிகளைப்பத்தி நீங்க என்ன அபிப்ராயம் வச்சிருக்கீங்க? அதுவும் எங்க ஊரில் இருக்கும் அரசு நடுநிலைப்பள்ளி பத்தி என்ன அபிப்பிராயம் வச்சிருக்கீங்க?

ஆசிரியையகள்...ஏதோ விவகாரம் இருக்கிறது என்று உணர்ந்தாலும்..தன் தவறை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாய்...

எல்லா அரசுப்பள்ளிகளுமே மோசம்தான்..ஆசிரியர்கள் வாங்குற சம்பளத்துக்கு வேலை பாக்குறதில்லை.! பிள்ளைகளின் எதிர்காலத்தில் அவுங்களுக்கு அக்கறையே இல்லை ! எங்களுக்குத்தெரிஞ்சவரைக்கும் எந்த அரசுப்பள்ளியில் படிச்ச பிள்ளையும் எங்க ஸ்கூல்ல வந்து பிக்கப் பண்ணினதே இல்லை... அதுனால எங்க தனிப்பட்ட தேர்ச்சி விகிதம் காட்ட முடியாம போய்டுது...! என்றனர்.

அந்தப்பிள்ளைகளை எந்தப்பாடத்தில் வேணும்னாலும் நீங்க சோதிச்சுக்குங்க! அவுங்க ஜெயிப்பாங்க! ஏன்னா நான் அந்தப்பள்ளிக்கூடத்தை...ஜெயிக்கிற பிள்ளைங்களை உருவாக்குறதாத்தான் நடத்திக்கிட்டிருக்கேன். வேணும்னா ஒரு சவால் விடுறேன். இந்த வருஷம்னு இல்லை. 10வது, 12வது பொதுத்தேர்விலயும் உங்க பள்ளியின் முதல் ரெண்டு இடங்களை அவங்கதான் எடுப்பாங்க! முடிஞ்சா நியாயமா க்ளாஸ் எடுத்துப்பாருங்க! என்றார்.

இல்லை சார் ! நாங்க அதுக்காகச் சொல்ல வரலை!

எதுக்காகச்சொல்லியிருந்தாலும் சரி மேடம்! நீங்கல்லாம் கண்டிப்பா தனியார் பள்ளில படிச்சுட்டு வந்திருக்க வாய்ப்பே இல்லை. அரசுப்பள்ளில படிச்சிருக்கணும். அப்படிப் படிச்சு முன்னேறி..இப்ப ஒரு தனியார் பள்ளில டீச்சரா இருக்கீங்கங்கிற காரணத்துக்காக....அவுங்களை அவமானப்படுத்துறதை நிறுத்துங்க! எல்லாரையும் சமமா பாவிச்சு..சொல்லிக்குடுங்க! யாரு ஜெயிக்கிறாங்கன்னு பாப்போம்..! என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் அந்த தலைமை ஆசிரியர்.

அதேபோல்...10ம் வகுப்பிலும், 12ம் வகுப்பிலும் அந்த இரு மாணவிகளும்தான் முதல் இரண்டு இடங்களைப்பிடித்தார்கள்.

சத்தமில்லாமல் இந்தச்சாதனையைச் செய்துவிட்டு இன்னும் இது போன்ற அற்புத மாணவர்களை அனுப்பிக்கொண்டே பள்ளியை முன்னேற்ற சிந்தித்துக்கொண்டிருக்கிறார் அந்தத் தலைமை ஆசிரியர்..

திருச்சி மாவட்டம்...மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஆ. டேனியல் ஜான் கென்னடிதான் அவர்!

அவர் பள்ளிக்குச் செய்திருக்கும் சாதனைகள்! ....


(தொடரும்..)

Thursday, September 3, 2009

அறிந்து கொள்க - அடடே! புத்தகம்!



             காவல்துறையின் மீது வெவ்வேறு விதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், நல்லவர்கள் இருந்துகொண்டும் , நல்லவைகளை நிகழ்த்திக்கொண்டும் இருக்கத்தான் செய்கிறாகள்!

             புதுக்கோட்டை காவல் துறைத்தலைமை அலுவலகத்துக்கு வருபவர்களுக்கு சில ஆச்சர்யங்கள் காத்திருக்கும். தினம் ஒரு திருக்குறள் என்ற பலகை, தினம் ஒரு தமிழ் வார்த்தை என்ற பலகை, பொதுமக்கள் குறைதீர் கணிணி மையம் - மனுதாரர்கள் தங்கள் குறைகளின் அவசியத்திற்கேற்ப நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்ட ஒரு ரசீது!  முறையே 15 நாட்கள், 7 நாட்கள், 24 மணிநேரம் என கெடு வைத்து பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன! உண்மையிலேயே எல்லோருக்கும் திருப்தியான நடைமுறை ! காரணம் அப்படிப்பட்ட தலைமை !

        புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக திரு.பா.மூர்த்தி அவர்கள் பதவிவகிக்கிறார் ! மிகவும் எளிமையான மனிதர். சிறந்த சிந்தனாவாதி! பிரச்னைகளை அதன் ஆணிவேருக்கு சென்று அறுக்கவேண்டுமென்று நினைப்பவர்! சகமனிதர்களுக்கு மதிப்பளிப்பவர்! இவரைப்போன்ற நேர்மையாளர் இருப்பதால், உண்மையில் மாவட்டத்தில் உள்ள லஞ்சம் விரும்பும் காவலர்களுக்கு சிரமம்தான்! முக்கியமாக - நல்ல படிப்பாளி!

அவர் இப்போது 'அறிந்து கொள்க' என்ற தலைப்பில் -அரசாங்க அனுமதியோடு - ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்.

          தமிழகக்காவல்துறையின் அறிமுகம், காவல்துறையின் செயல்பாடுகள், அதன் அதிகார வரம்பு,தெரிந்துகொள்ளவேண்டிய குற்றவியல் சட்டங்கள், விதிமுறைகள், குற்றத்தடுப்புமுறைகள், ஆகியவற்றை மிகவும் எளிய முறையில், நல்ல தமிழில் எழுதியிருக்கிறார்.அது தவிர, மகளிருக்கெதிரான குற்றங்களும் தண்டனைகளும், சாலைவிபத்து, தீ விபத்தைத் தடுக்கும் முறைகள், சுற்றுச்சூழல் சீர்கேடுகளைத்தடுக்க என்ன செய்யலாம்? என்றும் விளக்கியிருக்கிறார்.

         கிராமங்களில்- நகரங்களில் கூட - காவல்நிலையத்துக்குச்சென்று, அங்கு அமர்ந்திருக்கும் எல்லாக்காவலரையுமே 'ஏட்டய்யா' என்றழைக்கும் கலாச்சாரம் இன்று இருக்கிறது. ஆனால் ஒரு காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்களின் உடையை வைத்தே அவர்கள் எந்தப்பதவியில் இருக்கிறார்கள் என்பதை அறியமுடியும். அதை மிகத்தெளிவாக, உடையிலும், இலச்சினையிலும் உள்ள மாற்றங்களை வைத்து, ஆய்வாளர், தலைமைக்காவலர், காவலர் என தெரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது.

          மேலும் ஒருவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டால், அவரது உரிமைகள் என்னென்ன என்று விளக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டை சோதனை செய்யும்போது என்னனென்ன விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு அடிப்படைத் தகவல்கள் நறுக்குத்தெரித்தாற்போல் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற தகவல்கள் தெரியாமல்தான் பொதுமக்கள் ஒரு சில காவல்துறை அதிகாரிகளை தட்டிக்கேட்க முடியாமல் திணறுகிறார்கள். அதற்கு அவர்கள் தரப்பிலிருந்தே ஒரு அஸ்திரம், இந்தப்புத்தகம் !

          ஒரு காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு உள்ள பணிச்சுமைக்கிடையில், இத்தகைய புத்தகம் எழுதுவது என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயம்.! அதற்கு பணி மீறிய ஈடுபாடு வேண்டும். அது அவரிடம் நிறையவே இருந்திருக்கிறது. இன்னொரு சிறப்பு என்னவென்றால், இதற்கு முன் ' பெண்மை வாழ்க' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். மனிதர் படிப்பிலும் கலக்கியிருப்பார் போல, புள்ளியியலில் முதுகலைப்பட்டம், பின்னர் அதில் எம்.பில். , மேலும், பி.எல் முடித்து, இப்போது சட்டத்தில் எம்.பில் படித்துவருகிறார்.

         கிழக்கு பதிப்பகத்தின், தரமான கட்டமைப்பைப்போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த 64 பக்க புத்தகத்தின் விலை எவ்வளவு தெரியுமா? - இலவசம்!

         எல்லா இடத்திலும் நல்லவங்க இருக்காங்கப்பா , நாமதான் தேடித்தெரிஞ்சுக்கணும் !

Wednesday, March 18, 2009

நானா...? அவ்வளவு கூலா?


நம்ம சக பதிவர்...
அன்புச்சகோதரி..
பல்வேறு விஷயங்களில் சர்வசாதாரணமாக
மாற்றுக்கோணம் யோசிக்கும் எங்கள் ஊர் தந்த இனிய
தென்றல்,
தமிழ்மண விருதுகளில் இடம்பிடித்த பதிவுப்புயல்

....புதுகைத்தென்றல்
திடீர்ன்னு என்மேல் இருக்கும் அன்பினாலோ,

இனிமேலாவது கூலா இருக்கணும்கிற எண்ணத்தினாலோ...இந்த பட்டாம்பூச்சி விருதை எனக்கு கொடுத்திருக்காங்க!


மிக்க நன்றிங்க!
இதுக்கு நான் தகுதியான்னு தெரியாது!
இனிமேயாவது ஒழுங்கா எழுதுறேன் !

சொன்னதுக்காக கொஞ்சம் கூல்...
வெயிலுக்கு இதமாக..!


தெரியாம குடுத்துட்டோமோ? - புதுகைத்தென்றல் மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருக்கிறார் !

காலம் கடந்தாலும்... இந்த விருதை நான் கொடுக்க விரும்பும் பதிவர்கள்॥

அவர் என் நண்பர் என்று பதிவுலகமே கொள்ளும் அன்பு எம்.எம்.அப்துல்லா

சினிமாச்செய்திகளை அலட்டிக்கொள்ளாமல் அள்ளித்தரும் முரளிகண்ணன் அண்ணன்!

விருதெல்லாம் இவருக்கு மேட்டரே இல்லையென்றாலும் நம்ப டெம்ப்ளேட் சிங்கம், டெக்னாலஜி தங்கம்...சஞ்சய் ஜி

Monday, February 16, 2009

அப்துல்லாவின் ஆணையை ஏற்று..!


நம்ம அப்துல்லாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பதிவூடகத்தைப்பற்றி, அதன் உறவு மேன்மைகளைப்பற்றி மனமார சிலாகித்துக்கொண்டிருந்தார்! 
நானும் என் பங்குக்கு விலாவாரியாக விளக்கிக்கொண்டிருந்தேன். இதைப்பத்தி ஒரு பதிவு கூட போட்டிருக்கேன்ன்னு சொன்னேன்.
அப்ப மீள்பதிவா போடுங்க புது மக்கள்லாம் படிப்பாங்கன்னு சொன்னதால...

(எழுத மேட்டரோ நேரமோ இல்லைங்கிறது..வேற விசயம்..! அதை வெளீல சொல்வோமா?)

பதிவூடகம் - கொஞ்சம் மேலேதான்.!

எல்லாவகை ஊடகங்களையும் நாம் கடந்துவந்து இங்கே இளைப்பாற தொடங்கியிருக்கிறோம்.எல்லாவற்றிலும் இல்லாத சிறப்பு இதில் இருப்பதை உணர்கிறேன்.

ஒரு படைப்பாளியின் மகிழ்ச்சி, அதை இரசித்தவர்கள், பார்த்தவர்களின் பாராட்டுதல்களில் உள்ளது. ஒரு முதிர்ச்சியடைந்த படைப்பாளிக்கு விமர்சனத்தையும் நல்லதாக எடுத்துக்கொள்ளமுடியும். 

ஒரு புத்தகத்தில் (வெகுஜன பத்திரிக்கையில்) எழுதினால். அது எழுதியது ஒரு காலமாக இருக்கும். அது பிரசுரிக்கப்படுவது மறு காலம். அதன் பிறகு படித்தவர்களில் 2% க்கும் குறைவானவர்கள், விமர்சனமோ பாராட்டோ, அந்த பத்திரிக்கைக்கு எழுதுவார்கள். அதற்கு இவரால் பதில் போட முடியுமா என்பதும் சந்தேகமே!

அதேபோல், வானொலி - இதில் கேட்ட நிகழ்ச்சிகளுக்கான விமர்சனத்தையோ, பாராட்டையோ, உடனே அனுப்பினாலும் அவர்கள் எப்போது அதை படிப்பார்கள் என்று கூற முடியாது. அப்போது நாம் கேட்டால் நமக்கு கொஞ்சம் மகிழ்ச்சி..ஆனால் அதை வழங்கியவரிடமிருந்து பதில் கிடைப்பது மிகவும் அரிது ! (ஆனால் அந்த விமர்சனமும் நம்ம குரலில் , நாம் பேசுவதாக இருக்காது)

தொலைக்காட்சி - அதில் ஒரு நிகழ்ச்சி வழங்கினால். அதன் பின்னூட்டம் அவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்துவிடாது. அப்படியே வந்தாலும் , வார இறுதி விடுமுறை முடித்து...ஊரைச்சுற்றிவிட்டு, அசந்து தூங்கப்போகும் நேரத்தில் அரைமணிநேரம் படிக்கப்ப்டும். வழங்கியவர்களின் பதில்? ம்ஹூம்...
மறந்துட வேண்டியதுதான்.! (நாமே கேமரா முன் அமர்ந்து நம் விமர்சனத்தை படிக்க முடியாது)

சினிமா - படைப்பை வெளியிட்டு விட்டு காத்திருப்பார். விமர்சிக்கலாம். இதற்காக ஒரு சினிமாவே எடுக்கமுடியாது. மற்ற ஊடகங்களில்தான் விமர்சிக்கமுடியும். அதற்கும் அவரும் வேறு ஊடகங்கள் மூலம் பொதுவாக பதில் சொல்லுவார். ஒரு தனி மனிதனின் கருத்தாக விமர்சனமும் சரி, பதிலும் சரி..கண்டிப்பாக ஒலிக்காது.. ( விமர்சனத்துக்காக மட்டும் சினிமா எடுத்தால் அது பிச்சிக்கிட்டு ஓடும்)

ஓவியனின் படைப்பை ஒரு கண்காட்சியில் வைத்தாலும் , நாம் செல்லும் நேரத்தில் அவர் சாப்பிடப்போயிருந்தால், நம் விமர்சனம் அவ்வளவுதான்.!
அதையும் மீறி சொல்லிவிட்டாலும் பதிலை காதில் வாங்கிக்கொண்டு வரவேண்டியதுதான். அவருக்கும் பாரட்டுக்களை ஓவியமாக்க முடியாது. விற்கத்தான் முடியும்.

அனேகமாக எல்லா ஊடகங்களுக்கும் இருந்து வரும் சிக்கல் இதுதான்...ஆனால் வலைப்பூ என்ற பெயரில் வந்து கலக்கிக்கொண்டிருக்கும் இந்த பதிவூடகத்துக்கு மட்டும்தான் அற்புதச்சிறப்புகள் அதிகமுண்டு. மற்ற அனைத்து ஊடகங்களும் கவனிக்க ஆரம்பித்துவிட்டன.

நாம் எழுதலாம். சிந்தையில் சிந்தித்ததை நயம்பட, நம்மால் முடிந்தவரை அழகாக எழுதலாம்.
உடனுக்கு உடனே 
விமர்சனம் கிடைக்கும்..
பாராட்டு கிடைக்கும். 
மாற்றுக்கோணம் கிடைக்கும்.
மீண்டும் நாம் பின்னூட்டத்தை மறுத்தோ,. நன்றி சொல்லியோ, வேறுகருத்துச்சொல்லியோ
அதே ஊடகத்தில் தொடரலாம்.
ஒரே விஷயத்தின் ஆழம் வரை செல்லலாம்.
நுனிப்புல்கள் தவிர்க்கலாம்.
படைப்பாற்றலை பெருக்கிக்கொள்ளலாம்.
உலகின் எந்தமூலைக்கும் படைப்பை அனுப்பலாம்.
அதைவிட மேலே..
நல்ல நண்பர்களை அடையலாம்.

முன்னறியாத ஊரில் முகமறியாத
பதிவர் உங்களுக்காக ஓடியாடி உதவிகள் செய்வார்.
உங்கள் உறவுகள் அதை உளம் குளிர வியந்து பார்க்கும்.


ஆக.. ஒரு படைப்பாளி விரும்பும் எல்லா அம்சங்களும் ஒருங்கே இருக்கும் இந்த
பதிவூடகம் ...கொஞ்சம் மேலேதான்.!




Friday, January 23, 2009

படிச்சாச்சு லக்கிலுக்!

கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் வடிவமைப்புக்காகவும், உள்ளடக்க நேர்த்திக்காகவும் வாங்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக தொற்றிக்கொண்டுவிட்டது. நான் வாங்கிய முதல் 'கிழக்கு' - அடுத்த விநாடி(நாகூர் ரூமி) என்று நினைக்கிறேன்.

இப்போது தமிழ்மணத்திலும், லக்கிலுக்கின் பதிவிலும் கூறியிருந்ததால், அவருடைய-சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்-புத்தகத்தை வாங்கி, இதோ...படித்துமுடித்தாகிவிட்டது.

விளம்பரத்துறையைப்பற்றி இதுவரை தமிழில் தகவல்களுடன் புத்தகம் வெளிவந்திருப்பதாக நான் அறியவில்லை. அதுவும் நம் சக பதிவர் (கொஞ்சம் ஓவர்தான்...அவர் சக பதிவர் என்பதைவிட சூப்பர் பதிவர் எனலாம்) எழுதிய புத்தகம் என்ற பாசத்துடன் படித்தேன்.

முதலில், அவரது இந்த சுலபமான, அழகான, சகஜமான எழுத்து நடைக்கு இது ஒரு சிறந்த விளம்பரம்!

அப்புறம் அதன் சாராம்சம்.... வாசகனை மிகவும் குழப்பாமல், மிகவும் ஆழமான தொழில்நுட்பத்தகவல்களும் தெளிக்காமல், கவானமாகக்கையாண்டு கலக்கியுள்ளார்.
படித்துமுடிக்கும்போது விளம்பரத்துறையைப்பற்றி ஒரு அடிப்படை அறிவு ஏற்பட்டுவிடும் என்பது திண்ணம்.

புத்தகத்தின் பல்வேறு பகுதிகள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. அதுவும் அந்த அழகி படம், செப்டம்பர் 2, 4ல் ஒவ்வொன்றாக களையப்படும் என்ற தகவல் , இதயம் நல்லெண்ணெய் விளம்பர நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை , இல்லாத பீர் கம்பெனி விளம்பரம் என்று சுவாரஸ்யமாக வழங்கியிருக்கிறார்.

ஒரு நாட்டுக்கே விளம்பரம், உள்ளூர் விளம்பரம் என்று எல்லாவற்றைப்பற்றியும் விலாவாரியாக சிறு சிறு எடுத்துக்காட்டுகள் மூலம் போகிறபோக்கில் கூறியிருக்கும் பாங்கு சிறப்பாக உள்ளது.

விளம்பரம் என்றதும் நினைவுக்கு வரும் எல்லா ஊடகங்களையும் ஒரு சிறு அலசல் அலசியிருக்கிறார். எந்தந்த விளம்பரங்கள் எங்கெங்கு செல்லும் என்றும் விபரம் தருகிறார்.

நீங்கள் ஒரு வியாபார நிறுவனத்தை நடத்திவந்தால், நீங்கள் எந்த வகையில் விளம்பரம் செய்தால் உங்கள் விற்பனையில் ஏற்றம் வரும் என்பதைத்தெரிந்துகொள்ள இந்தப்புத்தகம் ஒரு ஆலோசனை முதலீடாகப் பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் மிகவும் பயனுள்ளதாகவும், ரசிக்கும்படியும் எழுதி -விற்பனையில் சக்கைப்போடு போடப்போகும்படி - வெளியிட்டிருக்கும் நமது லக்கிலுக் என்ற யுவகிருஷ்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகுக !

ஆமா..' கிழக்கு' மக்களே...! எப்புடிப்பா இப்படிப்பட்ட ஆட்களை வளைச்சு வளைச்சுப் பிடிச்சு தூள் கிளப்புறீங்க!

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...