Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Monday, February 4, 2008

மரம் தங்கசாமி

அந்த நகரத்தில் வந்து இறங்கி தன் நண்பர்களைப்பார்த்துவிட்டு பேருந்து நிலையத்தில் வந்து தேனீர் அருந்திக்கொண்டிருக்கிறார் அவர்!

அவர் அருகில் ஒரு இளம் வயது ஆள் வந்து பிச்சை கேட்கிறார்.

'அய்யா காசு குடுங்கய்யா!'

ஏம்ப்பா நல்லாத்தானே இருக்க? ஏதாவது வேலை  செய்யலாமில்ல?

'என் உருவத்துக்கும் அமைப்புக்கும் யாரும் வேலை தர்றதே இல்லைங்க.! அதுவும், பிச்சை எடுக்கறது பழகிப்போச்சு!'

அதெல்லாம் பண்ணாத..! நான் உனக்கு வேலை தர்றேன். பாக்குறியா?

நல்லா பாக்குறேன் அய்யா

'அப்ப இந்தா...! 'தன் சட்டைப்பையில் இருந்து 10 ரூபாயை எடுத்துக்கொடுக்கிறார்.

கையில ஏதாவது காசு வச்சிருக்கியா...?

ம். 18 ரூவா இருக்குங்க!

சரி அந்த காசுக்கு ஏதாவது சாப்பிடு... (தன் பெயரும் முகவரியும் கொடுக்கிறார்) அப்புறம் சேந்தங்குடிக்கு வந்து சேரு..8 ரூபாதான் டிக்கெட்டு...கொத்தமங்கலம் தாண்டி, கீரமங்கலத்துக்கு முன்னால இருக்கு! தெரியுமில்ல?

சரிங்கய்யா..!

என்று விட்டு அவன் நகர...குடித்த தேனீருக்கு சில்லறை எடுத்துக்கொடுக்கும்போதுதான் தெரிந்தது..! கையில் மீதி 5 ரூபாய்தான் இருக்கிறது.ஊருக்குப்போவதற்குக்கூட பணம் இல்லை என்று!

உடனே ஒரு உள்ளூர் நண்பருக்கு செல்பேசியில் பேசி , பத்து ரூபாய் வாங்கிக்கொள்கிறார். இப்போது அவர் கையில் இருப்பது 15 ரூபாய்.!

ஒரு போன் வருகிறது. அய்யா..! நான் கீரமங்கலத்திலேருந்து சீனிவாசன்
பேசுறேன்.

சொல்லுங்க!

உங்ககிட்டதான் நம்ம வீடு கட்டும்போது தேக்கு மரம் வாங்கினேன்..இப்ப நம்ம சகலை வீட்டுக்கும் அதேமாதிரி.2 தேக்கு மரம் வேணுங்கய்யா!

சரி! தந்துட்டா போச்சு! ஒரு மரம் 25000 ரூவா ஆகும்! கிளையெல்லாம் கிடைக்காது.! நடுமரம் மட்டும்தான் தருவேன் பரவாயில்லயா?

தெரியுங்கய்யா.! எப்ப வாங்கிக்கலாம்?

உங்களுக்கு எப்ப வேணும்?

இன்னைக்கு கிடைச்சாக்கூட பரவாயில்லங்கய்யா?

அப்படியா? அப்ப ஒரு லாரியை எடுத்துக்கிட்டு கீரமங்கலத்துலயே காத்திருங்க..! இன்னும் ஒரு மணி நேரத்துல நான் அங்க வரேன். ! தோட்டத்துக்குப்போய் வெட்டிக்கலாம்.!

என்று கூறிவிட்டு...

கண்டக்டர்...கீரமங்கலம் ஒண்ணு குடுங்க! என்று 13 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்கிறார்.

இப்போது அவர் கையில் இருப்பது 2 ரூபாய்.!

கீரமங்கலம் சென்று சீனிவாசனை சந்தித்து மரம் வெட்டும் ஆட்களுடன் லாரியில் சென்று தேக்குமரங்களை வெட்டிக்கொடுத்துவிட்டு, அந்த இடத்திலேயே மீண்டும் இரண்டு மரக்கன்றுகளை , வெட்டியவர்களை விட்டே நடச்சொல்லிவிட்டு, அவர்கள் கொடுத்த தொகையான ரூபாய் 50000த்தை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்குள்
நுழைகிறார்.!

அப்போது சொல்கிறார்..
நான் வளத்த மரங்கள்தான் எனக்கு ஆதாரம்...2 ரூபாயோட பஸ்ஸில் வந்தவனுக்கு....50000ரூபாயோட காத்திருக்குதுங்க என் புள்ளைங்க! இந்த மரங்க! இதுங்களை இத்தனை ஆண்டுகளா வளக்குறதுனாலதான். அதுங்க என்னை வளக்குதுங்க! -இப்படி சிலாகித்துப்பேசுகிறார்.!

அவர்...தங்கசாமி!

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தங்குடியைச்சேர்ந்த இவர்...கடந்த 30 ஆண்டுகளாக மரம் வளர்ப்பதையே ஒரு தவமாகச் செய்துவருகிறார். தன் பெயரான தங்கசாமி என்பதையே மரம்
தங்கசாமி என்று எல்லோரும்அழைக்கும்படி, ஊருக்கு மரங்களால் புகழ்சேர்த்தவர்!

தன் சொந்த நிலத்தில் மரக்கன்றுகளை மட்டுமே நட்டு அவற்றை, குழந்தைகளை விட அற்புதமாய் பராமரித்து.. அவைகளே உலகம் என்று வாழ்ந்து வருபவர்.!

மரத்தைப்பற்றி பேச ஆரம்பித்தால், ' இத்தனை தகவல்களா?' என்று வியக்க வைப்பவர்!

அவரைப்பார்க்க வருபவர்களுக்கு அவர் தரும் முதல் மரியாதை.. ஒரு மரக்கன்றும் .,.அதை நடும் இடமும் காட்டி...நம் கைகளாலேயே நட வைத்து ஒரு நோட்டில் எழுதி அதனைப் பதிவு செய்வது.!

இங்கு 100க்கும் மேற்பட்ட வகை மரங்களை வளர்ப்பதாகச்சொன்னார்.

செஞ்சந்தனம் மரங்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.!

சந்தன மரங்கள் நிமிர்ந்து நிற்கின்றன...!

தேக்கு மரங்கள் சிலிர்த்து நிற்கின்றன! ( எல்லா மரங்களையும் நேர்க்கோட்டில் வளர்ப்பது எப்படி என்றுசொல்லித்தந்தார்)

..அய்யா! இதுங்களோட மதிப்பு யாருக்குமே தெரியல.! சுற்றுச்சூழலுக்கு மட்டுமில்ல!சாதாரணமா பாத்து வளத்ததுக்கு..ஒரேநாளில்ஐம்பதாயிரம் ரூவா யாரு குடுப்பா? இந்த மரங்கள் குடுக்கும்ங்க!

நான் கிராமத்தான்...என்று ஆரம்பித்து.,பல்கலைக்கழகமாணவர்களுக்கு, 3 மணி நேரம்
வகுப்பெடுக்கும் அளவுக்கு யதார்த்தமான பேச்சு நடை!எளிமை! இப்படிப்பட்டவர்கள் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்யுதுன்னு...

இவரைப் பார்த்து தாராளமாகச் சொல்லலாம்..!


இவரைப்பார்க்கச்சென்றபோது....இன்னொரு அதிர்ச்சிகாத்திருந்தது..!

ஆம்...இவர்...கடவுளை கண்முன்னேகாட்டினார்..அது...........

(தொடரும்)

Tuesday, January 22, 2008

தொப்பைக்கு லீவு - குசும்பனுக்காக...!

இந்தப்பதிவு என் லிஸ்ட்லயே இல்ல!

ஆனாலும் நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா இதை செஞ்சா தப்பில்லன்னு..வேலு நாயக்கர் சொன்ன மாதிரி...நண்பர் குசும்பனுக்காக!

படிக்கறப்ப ஒல்லிப்பிச்சானாவோ..கொஞ்சம் பூசினமாதிரியோ இருந்துட்டு, ஒரு நல்ல வேலைக்குச்சேரும்போதுதான்..இந்த தொப்பச்சாமி நம்மகிட்ட லேசா ஒரு இடம் கேக்கும். நம்பளும்..இருந்தா நல்லதுதானேன்னு இடம் கொடுத்துருவோம். அப்புறம்தான் இருக்கு தீபாவளி! அது மெதுவா சுற்றுவட்டாரத்தை ஆக்கிரமிச்சு, ஒரு பழைய பேண்டை 'டர்' றாக்கும்போதுதான் தெரியவரும்..ஆஹா..வில்லன் வீட்டுக்குள்ள பாய் போட்டு படுத்துட்டாண்டான்னு..!

விருந்தாளி வீட்டு ஓனராகும் வாய்ப்பு ஆரம்பிக்கும்.!

அது சொல்றபடியெல்லாம் நாம கேக்குறமாதிரி ஆரம்பிக்கணும். துணி அதிகமா தேவைப்படுவதால், மணியும் அதிகமா தேவைப்பட்டு...

தொப்பை சரணம் கச்சாமின்னு ஆகிடுவோம்...

அப்பதான்..வீட்டுல கல்யாண பேச்ச ஆரம்பிப்பாங்க! அதுவரைக்கும் கூடவே இருந்த ஆள கழட்டிவிடும் பழக்கம் மனைவி வருவதற்கு முன்னரே ஆரம்பிக்கிற கால கட்டம் இதுதான்..!எப்படியாவது இந்த தொப்பச்சாமியை கழட்டிவிட்டுடலாம்னு முடிவுக்கு வந்துடுவோம். அதுக்கான வழிமுறைதான் இப்ப வருது.!

1. யோகாசனத்தில் ஒரு முறை இருக்கு !
2. உணவுப்பழக்கத்தில் ஒரு முறை இருக்கு!

1. யோகாசனம்

அ. கால்களை நன்கு நீட்டி தரையில் படுக்கவும் ( கட்டிலுக்கும்.மெத்தைக்கும் அனுமதியில்லை)
ஆ. இரு கால் கட்டைவிரல்களும் ஒன்றை ஒன்று தொடவேண்டும்,
இ. உடலை 'ட 'வடிவத்தில் மாற்ற வசதியாக கால்களை மேலே தூக்கவேண்டும்.
ஈ. இப்போது , முழங்காலின் பின்புறத்தில் இரு கைகளாலும் இறுக்கவேண்டும்.
உ. தானாக கால் மார்புப்பகுதியை நோக்கி வரும். இறுக்கிப்பிடித்துக்கொள்ளவேண்டும்.
ஊ. இதே அமைப்புடன் மெதுவாக எழுந்திருக்கவேண்டும்.
எ. மீண்டும் படுக்கவேண்டும்.
ஏ. அ...முதல் எ..வரை 20 முறைக்கு குறையாமல் செய்யவேண்டும்.

நேரம் : அதிகாலை....அல்லது காலையில் தூங்கி எழுந்தவுடன்..!
மாலை...அல்லது இரவு உணவுக்கு முன்.!
40 நாட்களில் பலன் நிச்சயம்.!

2. உணவுப்பழக்கம்

காலையில் ராஜா மாதிரி.,
மதியம் மந்திரி மாதிரி
இரவு பிச்சைக்காரன் மாதிரின்னு சொல்லுவாங்க!
(இதை வச்சு நிறைய காமெடி பண்ணலாம்.. ஆனா இது நல்ல தகவல்)

இரவு உணவு முழுமையான இயற்கை உணவா இருந்தாத்தான் முழுப்பலனும் கைமேல...மன்னிக்கவும்..வயித்துமேல கிடைக்கும்.!அதுக்கும் நல்ல காய்கறிகள் இருக்கு.!

முட்டைக்கோஸ், பரங்கிக்காய், பீட்ரூட், தக்காளி, வெள்ளரி, வெங்காயம், வெண்டைக்காய் ஆகியவற்றை பல விதமான உணவுகளா செஞ்சு சாப்பிட்டா....நல்ல பலன் உண்டு.

மு.கோஸ், தக்காளி, வெங்காயம், வெள்ளரி ஒரு காம்பினேஷன்.! முடிந்தவரை சின்னதாக நறுக்கி, உப்புமட்டும் சேர்த்து..உண்ணலாம்.!

பீட்ரூட்டை மட்டும் நறுக்கி..மோர் கலந்து பிசைந்து உண்ணலாம்.

பரங்கிக்காயை சிறு துருவல்களாகத்துருவி, உப்புப்போட்டு பிசைந்த்து உண்ணலாம்.

வெண்டைக்காயை அப்படியே தொட்டுக்கொள்ளலாம்.

இதெல்லாம் அடுப்பிலேயே ஏத்தக்கூடாது !
காரமெல்லாம்...மூச்!
இப்படில்லாம் நடந்துக்கிட்டா...ஆத்தா ஸ்லிம்மாயி அருள் உங்களுக்கு கிடைச்சு...தொப்பச்சாமிக்கு லீவு கொடுத்து அனுப்பிடலாம்.தொடர்ந்து..(இடையிடையேயாவது) கடைபிடிக்கலைன்னா..லீவு முடிஞ்சு நச்சுன்னு வந்து ஜாயின் பண்ணிருவாரு.!

ஆக...40 நாளில் முழுமையான பின்பற்றுதலில்..தொப்பையற்ற பதிவர்..ரெடி!

டிஸ்கி : இது முழுக்க முழுக்க சொந்த அனுபவம்..பலன் 100% கிடைத்தது.

Wednesday, December 26, 2007

அந்தக் கோரம் நடந்த நாள்..!

டிசம்பர் 26...

கிருஸ்துமஸ் முடித்த மகிழ்வோடு சந்தோஷமாக இருந்த பல குடும்பங்களில், இயற்கை தன் இன்னொரு முகத்தை அதிகக் கோரமாக காட்டிய நாள்.!

அன்று கேட்ட அவலக்குரல்கள்..! வேளாங்கண்ணி கடற்கரையில் நாங்கள் அள்ளிப்போட்ட மனித உடல்கள் !

இன்றும் கனவில் வந்து காப்பாற்றச் சொல்லும் உயிர்கள் !

உடைகள், உறவுகள், உடைமைகள் அனைத்தையும் இழந்து சொந்த நாட்டில் அகதியாய் நின்ற குடும்பங்கள் !

அய்யா ! பழைய துணி தருவதை நிறுத்திவிட்டு வாழ்வதற்கு வழி காட்டுங்கள் ! நாங்கள் இதே பூமியில் கோடிகளோடு வாழ்ந்தவர்கள் என்று எழும்பிய தன்மானக்குரல்கள்.!

நானும் குழிக்குள் விழுந்துவிடுகிறேன்.. என்னையும் புதையுங்கள் என்று குதித்த பெண்ணின் மரண வேட்கை!

நடந்த கொடுமை அறியாமல் உணவு வாங்க வரிசையாய் நின்றபோது அடுத்த பெண்ணின் சடை இழுத்து விளையாடியஅந்த மூன்று வயது சிறுவன்!

தன் குழந்தை இழந்துவிட்டு பிழைத்த சிறு குழந்தைகளில் 3 பேருக்கு பால் கொடுத்த அந்த தாய் தேவதை !

பல கிராமங்களை ஒன்றுமில்லாமல் சுருட்டிவிட்டு ஒன்றுமே தெரியாததுபோல் அமைதியாய் காட்சிதந்த சமுத்திரத்தின் வில்லத்தனம் !

மறக்கமுடியா நினைவுகள்...! வேடிக்கை பார்க்கவும், உதவிகள் செய்யவும் சென்றவர்களுக்கே இப்படியென்றால் , பாதிக்கப்பட்டவர்களுக்கு..?

அவர்களுக்காய் பிரார்த்திப்போம்.! கடவுளை நம்பவில்லையென்றால் இயலாதவர்க்கு ஒரு கை கொடுத்தாவது துயர் துடைப்போம்.!

ஆனால்.. இது மீண்டும் நிகழாமல் தடுக்க, என்னன்ன செய்யலாம்..?

பதிவளிப்போம்.!

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...