Showing posts with label கொசுவத்தி. Show all posts
Showing posts with label கொசுவத்தி. Show all posts

Saturday, May 23, 2015

அருகாமை!

தஞ்சையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது,
அவர் ஒரு ஸ்க்ரீன் பிரிண்ட்டிங் பிரஸ் வைத்திருந்தார். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றை வாங்கி அதற்குத் தவணை முறையில் பணம் கட்டி வந்தார். அவரிடமிருந்து ஒரு மாதமாக தவணை வரவில்லை என்று வசூலிக்கும் நபர் காட்ட, அவரைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் கிளை நிர்வாகியான எனக்கு வந்துவிட்டது.

அன்று மாலை 4 மணி இருக்கும். சென்றபோது நல்ல உயரமான நபர் ஒருவர் தாடி வைத்துக்கொண்டு, பெரிய கண்களுடன் நின்றிருந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பேச ஆரம்பித்தேன். கொஞ்சம் உடம்பு சரியில்லை. இந்த வாரம் வந்துரும் . மொத்தமா குடுத்துர்றேன் கவலைப்படாதீங்க..! வேணும்னா நாளைக்கு சாயங்காலம் ஒரு தொகை வரவேண்டியிருக்கு ! அதையே தந்துர்றேன். நீங்க வாங்களேன். என்றார். சரி சார் ! என்று சொல்லிவிட்டுக் கிளம்பும்போது, அவர் மேசையில் இருந்த புத்தகங்களும், சிற்றிதழ்களும் என்னைக் கவர்ந்தன. ஏனெனில் நானும் எனது நண்பன் எழிலரசுவுடன் சேர்ந்து “விடியல்” என்ற சிற்றிதழ் நடத்திக்கொண்டிருந்தேன்.

            அந்த ஆர்வத்தில் , அவரிடம் பேச ஆரம்பித்தேன். அவரும் குழந்தை போல் இலக்கியம் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டார். அவர் நடத்தும் பத்திரிக்கை பற்றியும் சொன்னார். பேசிவிட்டுக் கிளம்பும்போது, தெற்கு வீதியில் ஒரு கடை மாடியைச் சொல்லி, அங்குதான் இலக்கியக் கூட்டம் நடக்கும். வாங்களேன். அங்கேயே வந்து பணம் வாங்கிக்குங்க என்று சொன்னார்.

      அதேபோல் அங்கு போய்ப் பார்த்தால், நிறையப் பேர் வந்திருந்தார்கள். காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இவர் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். தாடியைத் தடவி விட்டுக்கொண்டே சட்டைப்பையிலிருந்து ஒரு கவரை எடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்டு நானும் ரசீது போட்டுக் கொடுத்தேன். உடனே, என்னை அந்தக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். “ஒரு சிற்றிதழ் நடத்துறார்” என்று சொல்லி ஆரம்பித்தார்.

      நிறையப் பேசினார்கள். கேட்டுக்கொண்டிருந்தேன். கடைசியில் அவரிடம் விடைபெறும்போது, நான்கைந்து புத்தகங்களை எடுத்து கையில் கொடுத்து, நிதானமா படிச்சுட்டு சொல்லுங்க! ஒருநாள் இந்தப் புத்தகத்தைப்பத்தின உங்க கருத்துக்களைப் பாத்துரலாம் என்று உற்சாகமாகச் சொல்லி வழியனுப்பினார்.

அதற்குப்பிறகு பல கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் பெயர் தெரிந்து, அவரும் ஒரு எழுத்தாளர் என்று அறிந்து, அவரது நூல்களையே ஆழமாகப் படித்து, புரிந்துகொள்ளமுடியாமல் சில இடங்களில் தடுமாறி , “தப்பா நினைச்சுக்காதீங்க. எனக்குப் புரியலை” என்று நான் சொல்லி, அவரே அதற்கு விளக்கமும் அளித்து , ஆதுரமாகப் பேசி அனுப்புவார். இசை , கலை, இலக்கியம், வரலாறு, மராட்டிய மன்னர்கள், தஞ்சையின் பாரம்பரியம் என்று அவர் தொடாத விஷயங்களே இருக்காது. அனைத்தையும் ஆழமாக அலசுவார். துவக்க காலங்களில் நான் படித்த பின் நவீனத்துவ இலக்கியங்களை எனக்கு அறிமுகப்படுத்தியதே அவர்தான்.!

அவர் வீட்டில் ஒரு பெரிய நாய் வளர்த்துவந்தார். விபரம் தெரிந்து நான் பார்த்த முதல் மிகப்பெரிய நாய் அதுதான்.

நான் வேலையை விட்டுவிட்டு வெளிநாடு போகும்போது சொல்லிவிட்டுச் சென்றேன்.

பிறகு தொடர்பே இல்லை. சில ஆண்டுகள் கழித்து திரும்ப தஞ்சை செல்லும்போது விசாரித்தேன்.

இறந்துவிட்டார் என்றார்கள்.

அவரது நிறுவனத்தின் பெயர் GML Screen Pirinting என்று தெரியும்.

பழகத் தொடங்கி அவரை பல காலம் “GML பிரகாஷ்’ என்றுதான் நினைவு வைத்திருந்தேன்.

அவர்தான் எழுத்தாளர் “தஞ்சை பிரகாஷ்” என்று பின்னர்தான் தெரியும்.







Friday, January 17, 2014

பொங்கல் - வாழ்த்து




ஒவ்வொரு பொங்கல் விழாவின் போதும், யாராவது பொங்கல் வாழ்த்துச் சொல்லும்போது , அதனை என்னால் வார்த்தையாக மட்டும் எண்ண இயலாது. என்னைப்பொருத்தவரையில் அது ஒரு பொருள்.

அது ஒரு அட்டை , முன்பக்கம் ஒரு அழகான படம் இருக்கும். பின்புறம், ஒரு பாதியில், யார் அனுப்பினார்களோ, அவர்களது வாழ்த்து அவர்களது கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கும். மறுபாதியில், நமது முகவரி எழுதப்பட்டிருக்கும்.

வேறொரு விதமாகவும் அது வரும். ஒரு சிறிய புத்தகம்போல மடிப்புடன் இருக்கும். முன்னட்டையிலும் பின்னட்டையிலும் படங்கள் இருக்கும். சிலவற்றில் முன்னட்டையில் மட்டும் படம் இருக்கும். உள்ளே ஒரு காகிதம் ஒட்டப்பட்டு, அதில், நமக்கான வாழ்த்து, கவிதையாகவோ, வாசகங்களாகவோ அச்சிடப்பட்டிருக்கும். அதற்குக்கீழே, அனுப்பியவர்களும் ஓரிரு வார்த்தைகள் எழுதியிருப்பார்கள். அந்த மொத்த வாழ்த்தும் ஒரு உறைக்குள் வைக்கப்பட்டு, முன்புறம் நமது முகவரியுடன் அனுப்பப்படும்.

பொங்கல் வாழ்த்து என்று அதற்குப் பெயர்!

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல், பொங்கல் சமயத்தில், விழாவை விட அதிகம் எதிர்பார்ப்பது அந்த அட்டைகளைத்தான். பொங்கலுக்கு ஒரு வாரம் இருக்கும்போது நம் வீட்டு முகவரிக்கு வாழ்த்துக்கள் வரத் துவங்கும். ஒவ்வொரு உறவும் தனித்தனி விதங்களில் வாழ்த்துக்களை அனுப்புவார்கள். அதில் பொதுவாக ஒரு கடவுள் படம் இருக்கும். அதிலும், பிள்ளையார், முருகன், ஏழுமலையான், மஹாலெட்சுமி, ஆகியோர்தான் அதிகமாக வருவார்கள். அல்லது இரண்டு கரும்பு, மஞ்சள் கொத்து, ஓவியம் தீட்டப்பட்ட பானையில் பொங்கும் பொங்கல், தூரத்தில் சூரியன், வணங்கும் நிலையில் ஒரு குடும்பம் என ஒரு பக்கம் முழுவதும் நிறைந்து இருக்கும். மேலே அழகான வண்ணத்தில் “பொங்கல் வாழ்த்து” என்று அச்சிடப்பட்டிருக்கும். அடடா, அந்த வழு வழு அட்டையைக் கையில் வாங்கும் சுகமே அலாதிதான்.


சிறுவயதில், பொங்கல் சமயத்தில், எங்கள் தெருவில் மதியம் 12 மணியானால், எனக்கெல்லாம் பரபரவென்றிருக்கும். போஸ்ட் மேன் தெருவுக்குள் நுழையும்போதே, க்ணிங் க்ணிங் என்ற அந்த சைக்கிள் மணி ஓசை கேட்கும். அடுத்த விநாடி, எங்கிருந்தாலும் ஓடிப்போய் ரோட்டில் நின்று, 

“எங்க வீட்டுக்கு தபால் வந்திருக்கா?” என்று கேட்டு.

”இரு பாத்துச் சொல்லுறேன்.” என்று அவர் கடிதங்களைப் பார்க்கும் வினாடிகளை இன்றைய சூப்பர் சிங்கர் முடிவு அறிவிக்கும் நேர டென்ஷனோடு ஒப்பிடலாம்.

”இருக்கு!” என்ற ஒற்றைச்சொல், என்னைக் குதூகலிக்க வைத்து, பரபரத்து கைநீட்டிக்காத்திருக்கும் நொடிகளை இப்போதும் உணர முடியும்.

பொங்கல் நெருங்க நெருங்க, போஸ்ட் மேன் நம் கையில் தரும் வாழ்த்துக்களின் எண்ணிக்கையும் கூடும்.

அதையெல்லாம் வாங்கி, வீட்டு வாசலிலிருந்து, வீட்டுக்குள் சென்று சேர்வதற்கு முன், யாரிடமிருந்தெல்லாம் வந்திருக்கிறது என்று பார்த்து, அதனைச் சத்தமிட்டுச் சொல்லி, பாட்டி அல்லது தாத்தா கையில் சேர்ப்பிக்கும்போது ஆஹா.. அது ஒரு தனி மகிழ்ச்சி பாஸ்!

பிறகு, அந்த வாழ்த்துக்கள் பிரிக்கப்படும். அட்டைகளாக இருந்தால், உடனே படித்துப் பார்ப்போம். கவருடன இருந்தால் அதனை மிகவும் கவனமாக ஒரு கத்தி வைத்து தாத்தா கிழிப்பார். ஒவ்வொரு வாழ்த்தும் அனைவரது கைகளுக்கும் சென்று வரும். யார் பெயரெல்லாம் போட்டிருக்கிறார்கள் என்று பார்க்கப்படும். ஒரு சில காலகட்டங்களில் எங்கள் வீட்டில் 12 பேர் வரை ஒன்றாக இருந்தோம். 
அப்போதெல்லாம், அந்த வாழ்த்தில் நம் பெயரும் போட்டிருக்கிறார்களா என்று பார்ப்பதில் இரகசிய ஆசை அனைவருக்கும் இருக்கும். ஒவ்வொரு வாழ்த்திலும் என் பெயரைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ந்திருக்கிறேன்.

ஒவ்வொரு உறவும், அவரவர்கள் விருப்பத்துக்கும் வசதிக்கும் ஏற்றார்போல், அழகாக அச்சிடப்பட்ட பெரிய வாழ்த்துக்கள் வைக்கப்பட்ட கவர்கள், ஒருபக்கம் மட்டும் படம் உள்ள வாழ்த்து அட்டைகள், 15 பைசா போஸ்ட் கார்டில் , கைகளால் வரையப்பட்டு, அழகான எழுத்துக்களைத் தாங்கிவரும் வாழ்த்துக்கள், என விதவிதமாக பொங்கல் வாழ்த்துக்களை அனுப்புவார்கள். அப்பாவின் உறவினர்கள், அம்மாவின் பந்தங்கள், பாட்டிக்குத் தெரிந்தவர்கள், தாத்தாவின் சொந்தங்கள் என பலரிடமிருந்தும் வாழ்த்துக்கள் வந்து குவியும். வங்கியில் சில சொந்தங்கள் இருந்ததால், அந்தக் காலகட்டத்திலேயே வங்கிகளின் பொங்கல் வாழ்த்துக்கள் கூட வீட்டுக்கு வரும். 

ஒவ்வொரு வாழ்த்து வந்ததும், யாரிடமிருந்தெல்லாம் இன்னும் வரவில்லை என்று ஒரு விவாதம் நடக்கும். பொங்கலுக்கு முந்தைய கடைசி நாட்களில், அவர்களெல்லாம் அனுப்பிவிடுவார்கள். சில நேரங்களில் எதிர்பார்க்காத இடத்திலிருந்தெல்லாம் வாழ்த்துக்கள் வந்து உறவுகளை பலப்படுத்தும்.

எல்லா பொங்கல் வாழ்த்துக்களும் ஒரு மேசையின் இழுப்பறையில், வேலை விட்டு வரும் அப்பா உள்ளிட்ட பெரியவர்கள் வந்து பார்க்கும் வகையில் வைக்கப்படும். அவர்கள் பார்த்து முடித்தபின், அவற்றை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்வோம். நான் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் பொங்கல் வாழ்த்துக்களைச் சேகரித்து கறம்பக்குடி வீட்டில், ஒரு மரப்பெட்டியில் போட்டு வைத்திருந்தேன். வேலைக்காக வெளிநாடு சென்று திரும்பும்போது அந்த மரப்பெட்டியை கரையான் தின்றிருந்தது. கண்டதும் ,சில நிமிடங்கள் அழுதுவிட்டேன். அத்தனை வருட உறவுகளின் தொகுப்பின் இழப்பும், அதன் வலியும் இன்றும் உள்ளத்துக்குள் உள்ளது.

பள்ளி நாட்களில் நண்பர்களுக்குள் வாழ்த்துக்கள் அனுப்பிக்கொள்வோம். எனக்கு பல நண்பர்கள் அனுப்பும் வாழ்த்துக்களில், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோர் அதிகம் இடம்பெறுவார்கள். சதாசிவம் என்ற நண்பன் ராமராஜன் படத்தை நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தாக அனுப்பி வைத்ததற்காக , லீவு முடிந்து பள்ளி சென்றபோது அடி நொறுக்கிவிட்டோம். மேலும் சில்க், டிஸ்கோ சாந்தி, அபிலாஷா போன்ற நடிகைகள் படத்தை யாராவது வம்பிழுக்க அனுப்பிவைத்துவிடுவார்கள் வீட்டில் பதில் சொல்வதற்குள் தாவு தீர்ந்துவிடும் .எங்களுடன் படித்த ரேவதி, கனகா வெறியர்கள் தங்கள் பெயருக்கு முன்னால், பெருமையாக ரேவதி பாஸ்கர், கனகா மணிவேல் என்று போட்டே அனுப்புவார்கள். அதனால் பிழைத்தோம். இதில் மணிவேல் ஒரு ஹார்ட்கோர் கனகா வெறியன். அவன் தாவணி மட்டும்தான் கட்டியதில்லை. பாக்கி அனைத்தும் செய்துவிடுவான். அதுவும் தாலாட்டுக் கேட்குதம்மா வந்த புதிதில் அவன் படுத்திய பாடுகள்…அது ஒரு தனி நாவல் எழுதலாம். 

காதலுக்கு உதவுவதில் பொங்கல் வாழ்த்துக்கு பெரும் பங்கு உண்டு. என் வகுப்பில் ஒரு நண்பன், அவன் டாவடிக்கும் பெண்ணுக்கு ஹார்ட்டின் படம் போட்டு, இன்னொரு மாணவியின் பெயர் போட்டு பொஙகல் வாழ்த்து அனுப்பிவிட்டான். அவள் சரியாக இவன் கையெழுத்தை அடையாளம் கண்டுபிடித்து, இவன் முகவரிக்கு, தன் பெயரைக் குறிப்பிட்டு, “நன்றி” கார்டு போட்டுவிட்டாள். நம் ஆளுக்கு வீட்டில் ஆட்டம் காலி! இவனுக்கு தனியாக பொங்கல் வைத்துவிட்டார்கள். இதில் உச்சகட்டம் என்னவென்றால், அவர்கள் இருவரும் இப்போது கணவன் -மனைவி!

மேலும் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் பயன்படும். அஞ்சல் துறை மூலம் அனுப்பும் வாழ்த்தில் ஸ்டாம்ப் ஒட்டாமல் அனுப்பிவிட்டால் போதும். செத்தான் எதிரி! தண்டம் கட்டி, கார்டை வாங்கி வைத்துக்கொண்டு, அனுப்பியவனிடம் வம்படியாக வசூல் செய்வார்கள் அல்லது அந்த உறவே அந்துபோய்விடும்.

பள்ளிக்காலத்தில், எல்லோருக்கும் தனியாக வாழ்த்து அனுப்பும் அளவுக்கு எனக்கு வசதி இல்லாததால், ஒரு போஸ்ட் கார்டில் என்னால் முடிந்த அளவுக்கு டிசைன் செய்து, எங்கள் வகுப்பின் பெயர் போட்டு பள்ளிக்கூடத்துக்கே அனுப்பிவிடுவேன். அதனை நானே போய் ஆஃபீஸ் ரூமில் வாங்கி வகுப்பில் கொண்டு வந்து காட்டுவேன். “கஞ்சப்பய” என்று ஓட்டினாலும், ஐடியாவை மெச்சுவார்கள். 

பதினொன்றாவது படிக்கும்போது, எனக்கு ஒரு பேனா நண்பன் இருந்தான். அவன் அனுப்பிய முயல் படத்தில் அதன் கண்களுக்கு சிவப்பு குந்துமணிகள் ஒட்டிய அந்த வாழ்த்தை பொக்கிஷமாக வைத்திருந்தேன். என் ஓவியத்திறமை(!) அனைத்தையும் காட்டி, வைக்கோலை வெட்டி ஒட்டி ஒரு வாழ்த்தும் நன்றியும் அவனுக்கு அனுப்பியிருந்தேன். காலப்போக்கில் சில நெருங்கிய நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் இருந்தது. அதுவும் இப்போது காணாமல் போய்விட்டது.


பொங்கல் வாழ்த்து அனுப்புவதற்கு அடுத்த கட்டம் ஒன்றிருந்தது. அது “நன்றி” கார்டு அனுப்பும் வழக்கம். வந்திருந்த ஒவ்வொரு பொங்கல் வாழ்த்துக்கும் , நன்றி கார்டு அனுப்பி உங்கள் வாழ்த்து வந்து சேர்ந்தது என்று உறுதிப்படுத்தவும். தங்கள் நன்றியைப் பதிவு செய்யவும் இந்தப்பழக்கம் பயன்பட்டது. அத்தகைய கார்டுகள் விதவிதமாக இருக்கும். ஏர் இந்தியா மஹாராஜா நன்றி சொல்லுவார். ஒரு பெண்ணின் கைகள் மட்டும் நன்றி சொல்லும். ஒரு குழந்தை நன்றி சொல்லும். தலவரின் சல்யூட் கூட நன்றி கார்டுக்குப் பயன்படும். பல விதங்களில் நன்றி கார்டுகள் வலம் வரும். நன்றி கார்டு என்பது எதிர் மொய் வைப்பது போன்ற கௌரவமாகப் பார்க்கப்பட்ட காலங்களெல்லாம் உண்டு. 

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் , கால ஓட்டத்தில் பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் வேறு தளத்துக்கு வந்து, முதலில் நம்மை அழைக்கும், தொலைபேசி வாழ்த்தாகி, பின்னர் நம் மின்னஞ்சலுக்கு வரும் மெயில் வாழ்த்தாகி, அதற்கடுத்து, மொத்தமாக குழுவுக்கு அனுப்பும் குறுஞ்செய்தி வாழ்த்தாகி, அதுவும் மாறி இணைப்பிலிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரே வார்த்தையில் வாழ்த்துச்சொல்லும் முகநூல் வாழ்த்தாக வந்திருக்கிறது. நேர சேமிப்பாகத் தெரிந்தாலும், பொங்கல் வாழ்த்து அனுப்பிய காலத்திலிருந்த ஒட்டுதல் குறைந்ததாகவே உணர்கிறேன். தபால் அனுப்பும் நேரத்தை விட முகநூலில் அதிகம் நேரம் செலவழிக்கிறோம் என்பதும் உண்மை! உணர்வுகளால் சூழப்பட்ட என்னைப்போன்ற ஆட்களுக்கு, அழகான படங்களுடனும், எழுதியவரின் கையெழுத்து இது என்று தொட்டுணரும் பொங்கல் வாழ்த்துடன் எதையும் ஒப்பிட இயலவில்லை. எண்ணங்களில் பல்வேறு கேள்விகள்!

அச்சிடப்பட்டு, விற்காமல் மீதமுள்ள பொங்கல் வாழ்த்துக்களெல்லாம் எங்கிருக்கும்?

இதை நம்பித் தொழில் செய்தவர்களெல்லாம் என்ன செய்துகொண்டிருப்பார்கள்?

எங்கள் ஊர் தபால்காரர் பொங்கல் நேரத்தில் எத்தனை கடிதங்களை டெலிவரி செய்வார்?

என் போன்று யாராவது பழைய பொங்கல் வாழ்த்துக்களை சேகரித்து வைத்திருப்பார்களா?

இன்றைய பள்ளிச் சிறுவர்களுக்கு அப்படி ஒரு பொருள் இருந்தது தெரியுமா?

இப்போதைய ஒவ்வொரு பொங்கலும் , அந்த ‘பொங்கல் வாழ்த்து, நன்றி கார்டு ‘ இல்லாமல்தான் கழிகிறது. அதனால்தானோ என்னவோ, பெரிய சுவாரஸ்யம் இல்லை. நமக்கென்று வயலில்லை, வரப்பில்லை, விவசாயமில்லை, கரும்புத் தோட்டமில்லை. கடைசியில் பொங்கல் வாழ்த்தும் இல்லாமல் போய்விட்டது.

இதையெல்லாம் எண்ணிப்பார்த்து, நான் மீண்டும் பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பத் துவங்கலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம். என் பேச்சை நானே கேட்கிறேனா என்று ?


டிஸ்கி: 

இந்த பதிவுக்காக பொங்கல் வாழ்த்து அட்டையின் படங்களை இணையத்தில் தேடும்போது மிக அரிதாகத்தான் புகைப்படங்கள் கிடைத்தன.

அப்படிப்பட்ட ஒரு படம்தான் இங்கு இருப்பதும்... ஆனால்,  அதை விட அரிதான கட்டுரை, இதே எண்ணத்தைப் பிரதிபலித்தது. பட உதவியும் அந்தத் தளம்தான் செய்தது.!

அதனை இங்கு பதிவதில் பெருமையடைகிறேன்.





Sunday, March 31, 2013

சர்க்கஸ்









அந்த ஞாயிறுதான் கடைசி என்று போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். ‘சர்க்கஸ் கூட்டிக்கிட்டு போப்பா’ என்று மகள் வேறு அனத்திக்கொண்டே இருந்தாள். அவர்கள் பள்ளி வாசலில் கொடுக்கப்பட்டிருந்த தள்ளுபடி கூப்பனை வேறு பத்திரமாக வைத்திருந்து எனக்கு எடுத்துக்காட்டிக்கொண்டே இருந்தாள்.

எனக்கே சர்க்கஸ் பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருந்தது. சனிக்கிழமை கிளம்பி, குழந்தைகளிடம் எங்கு செல்கிறோம் என்று சொல்லாமல் இன்ப அதிர்ச்சியாய், சென்னை சென்ட்ரலுக்குப் பின்னால், ஜெமினி சர்க்கஸ் வாசலில் காரை நிறுத்தியபோது, அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை வைத்து இந்த மாநிலத்துக்கு ஒரு ஆண்டுக்கு மின்சாரம் கொடுக்கலாம். J

உள்ளே நுழையும்போது சாகஸங்கள் தொடங்கியிருந்தன. பார்வையாளர்கள் குறைவாகத்தான் இருந்தார்கள். கீழே ஒரு வலை கட்டி, மேலே திறமையாளர்கள் பார் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்கள் திறமைமேல் நம்பிக்கையுடன், மக்களை மகிழ்விக்கத்தான் இதைச் செய்கிறோம் என்ற திருப்தியுடனும் வேலை பார்த்தார்கள். நான் ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் ஆசையுடன், சிறுவயது குதூகலத்துடன் பார்க்கத் தொடங்கினேன்.

பல்வேறு நிகழ்வுகளை மாற்றி மாற்றி செய்து காட்டினார்கள். ஒவ்வொரு கலைஞருக்கும் 16லிருந்து 40 வயதுக்குள்தான் இருக்கும்.  மேலும் ஆப்பிரிக்கக் கலைஞர்களும் விதவிதமான நடன அசைவுகளுடன் சாகஸங்கள் நிகழ்த்தினார்கள்.



 மரணக்கிணறு என்ற பைக் ஓட்டும் சாகஸம் பார்க்கும்போது என் மகள் அலறிவிட்டாள்.  பெண் கலைஞர்கள் விதவிதமான சாகசங்களை அநாயாசமாகச் செய்தார்கள். ‘இப்படியெல்லாம் செய்றதாலதான் உடம்பு ஸ்லிம்மா வச்சிருக்காங்க! என்று தங்கமணி சொல்ல, சாப்பாடு இல்லைன்னாலும் உடம்பு ஸ்லிம்மாத்தான் இருக்கும் என்று பதில் சொல்லி, ஒரு முறைப்பை பரிசாக வாங்கினேன்.

 ஒட்டகம், கிளிகள், நாய்கள், குதிரை போன்றவைதான் விலங்குத் திறமையாளர்கள். அவைகளும் தங்கள் கடமையை சிறப்பாகச் செய்தன. கிளிகள் சைக்கிள் ஓட்டின. நாய்கள் சறுக்கு விளையாட்டுக் காட்டின. ஒவ்வொரு நிகழ்வையும், அதன் கலைஞர்கள் பெயருடன் ஒருவர் அறிவித்துக்கொண்டிருந்தார். அவர் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். ‘நாளைதான் எங்களது கடைசி காட்சி!’ நாங்கள் உங்களிடமிருந்து பிரியா விடை பெறுகிறோம்!’

இந்த வார்த்தைகள் ஒரு பிய்த்தெரிய இயலா சுயிங்கத்தைப் போல என் மனதில் சோகம் பூசி ஒட்டிக்கொண்டுவிட்டது.  இனி, அவர்களை கவனிக்க யாருமில்லை என்பதை அவர்களை அறியாமல் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

நான் இலுப்பூரில் படித்துக்கொண்டிருந்தபோது, பேருந்து நிலையத்துக்கு எதிரில் ஒரு சிறிய வளாகம் அமைத்து கேலரிகள் கட்டி, ஒரு கரடி, குதிரை, கிளி, நாய் போன்றவற்றை வைத்து ஒரு சிறிய சர்க்கஸ் நடைபெற்றது. அதற்கு மதியக் காட்சிக்கு பள்ளியிலிருந்தே 50 பைசா வாங்கிக்கொண்டு அழைத்துச் சென்றார்கள்.  அதுதான் நான் கண்ட முதல் சர்க்கஸ்..! அதில் ஹீரோ போன்ற ஒரு மனிதர் சைக்கிள் ஓட்டினார். கரடியுடன் ஆடிப்பாடினார், குதிரையை அந்தச் சிறிய பரப்புக்குள், பரபரப்பாக ஓட்டிக் காட்டினார். அவர் எங்களை உற்சாகப் படுத்த ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினார்.

“ராயாரோ…ரம்ப்பம்போ’’ ராயாரோ ரம்ப்பம்போ’!  அந்த வார்த்தை இன்றுவரை என்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

அதற்குப்பிறகு, இலுப்பூரிலேயே இரு வேறு சர்க்கஸ்கள் பார்த்திருக்கிறேன். அவர்களது ஈடுபாடு, சாதாரண மனிதர்களால் செய்யமுடியாததை அநாயாசமாகச் செய்யும் பாங்கு போன்றவை கண்டு சிறுவயது முதல் வியந்துகொண்டிருக்கிறேன்.

பின்னர் திருச்சியில் ராயல் சர்க்கஸ் என்று ஒன்று வந்திருப்பதாகச் சொன்னார்கள். அந்த கூடாரத்தில் போடப்படும் மின் விளக்கு, திருச்சிக்கே தெரியும் வகையில் வைத்திருந்தார்கள். இரவில் இலுப்பூரிலேயே தெரியும் என்றார்கள். அந்தச் சமயத்தில் திருச்சி சென்றிருந்தபோது, உண்மையிலேயே இரவு 8 மணி வாக்கில் ‘சங்கிலியாண்டபுரத்தில் இருந்து வானத்தைப் பார்த்தால் கலங்கரை விளக்கம்போல் ஒரு ஒளி பாய்ந்து சென்றது.  சர்க்கஸுக்கு பஸ்ஸெல்லாம் விட்டார்கள். மக்கள் கூட்டம் அலைமோதி, அடுத்த காட்சிக்கு முன்னரே செல்லவேண்டும் என்ற அளவுக்கு அந்த சர்க்கஸ் பிரபலமாக இருந்தது. சிங்கம், புலி, யானை என்று பெரிய விலங்குகள் திறமை காட்டுகின்றன என்று குழந்தைகளும் மிகவும் ஆர்வமாக சென்றார்கள்.

பிறிதொரு நாளில் கரூரில் ஜம்போ சர்க்கஸ் பார்க்க எனது சக ஊழியர்களை அடம் பிடித்து அழைத்துச் சென்று மகிழ்ந்தேன். அங்குதான் முதன்முதலில், பீரங்கிக்குள் ஆள்வைத்து பறக்கவைத்துக் காட்டினார்கள். மிகவும் அற்புதமாக இருந்தது.



கறம்பக்குடி வள்ளுவர் திடலுக்கு அருகில் சங்கு ஊதும் இடத்துக்குக் கீழ் ஒரு சிறிய சர்க்கஸ் நடந்தது. அதை ஒரு ரூபாய் டிக்கெட் கொடுத்து பார்த்தோம். நான் 9 வது படித்துக்கொண்டிருந்தேன். அதில் திறமை காட்டிய என்னைவிட வயதில் சிறிய ஒரு பெண் பளபளப்பான நீல நிற உடை அணிந்து அழகான தேவதை போல் தெரிந்தாள். மிகவும் பிடித்துப்போய் மீண்டும் ஒருமுறை அவளைப்பார்த்துவிடவேண்டும் என்று ஆவல். ஆனால் காசில்லை. என் நண்பன் ஒருவன் புரவலனாக, மீண்டும் அவளைக் காண்பதற்காகவே  சென்றேன். அன்று அவள் வரவே இல்லை. தேடல் அதிகமாகி, அவள் அந்தக்கூடாரத்தில் எங்காவது கண்ணில் படுவாளா என்று சுற்றிச் சுற்றித் தேடினேன். ஒரு ஓரத்தில், ஒரு கருப்பு மிடியும், ஆண்கள் சட்டையும் அணிந்துகொண்டு, அமர்ந்து பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்தாள். தேவதைகளுக்கும் வீட்டு வேலை இருக்கும் என்று அன்றுதான் உணர்ந்தேன்.

எனக்கு சர்க்கஸின் சாகஸங்களும், அந்த மனிதர்களின் ஒற்றுமையும், ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு பயணித்து, அந்த ஊரில் தங்கள் திறமையைக் காட்ட இடம் தேடி அதில் வளாகம் அமைத்து, தங்கள் காட்சிகளை வடிவமைத்து, அதற்கேற்ற திறமையாளர்களுக்கு பயிற்சிகொடுத்து, விலங்குகளைப் பயிற்றுவித்து, தங்கள் வரவை அந்த ஊரில் பிரபலப்படுத்தி, மக்களை வரவைத்து, அவர்களை மகிழ்வித்து, வாய்மொழி விளம்பரத்தால், நல்ல பெயரைச் சம்பாதித்து, அந்தக் கலையை தலைமுறைகளாகக் கட்டிக்காக்கும் பாங்கும் பேரன்பைத் தோற்றுவித்திருக்கிறது.

எனது சர்க்கஸ் ஆசை அப்படியே இருக்கிறது. எனது குழந்தைகளுக்கு அவற்றைக் கடத்தப் பார்க்கிறேன். முழு சர்க்கஸும் பார்த்த என் மகள் சொன்னாள்.

“போப்பா..! சர்க்க்ஸுல யானை, புலி, சிங்கமெல்லாம் இருக்காதா? அவங்களே விளையாடுறாங்க! எங்களையும் உள்ள வந்து விளையாடச் சொல்லலாம்ல!”

நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தபோது,  ஒரு இளைஞன் தன் நண்பனிடம் பேசிக்கொண்டு சென்றான்.

’டிவியில பாக்குறதை விட இங்க நல்லா இருக்குல்ல மச்சான்!’ சின்னவயசுலேருந்து பாத்ததே இல்லை! நம்ம ஹீரோவெல்லாம் டூப் போட்டு பண்றதை, இங்க நிஜமா பண்றாங்க… நாளைக்கு நம்ம ஃப்ரெண்ட்ஸெல்லாம் கூட்டிட்டு வருவோமா?


இப்போது சர்க்கஸ் நிறுவனங்களின் நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது அந்த வளாகத்தைப் பார்த்தபோதே புரிந்துகொள்ளமுடிந்தது. தன் உடலை வருத்தி, நம்மால் இயல்பாகச் செய்யமுடியாத ஒரு செயலைச் செய்துகாட்டி நம்மை மகிழ்விக்கும் அவர்களை நாம் மகிழ்விக்கிறோமா?

விலங்குகளைப் பாதுகாக்கிறோம் என்று சர்க்கஸ்களில் நமக்குக் கிடைத்த குதூகலத்தை நம் அரசு குறைத்துவிட்டதா?

ஊடகங்களின் ஆதிக்கம், நேரடியாக இந்தக் கலையை சென்று பார்க்கும் அளவுக்கு நம்மை ஆச்சரியப்படுத்தவில்லையா?

நம் வாழ்வியல் சூழலே நிரந்தர சர்க்கஸாக  இன்று  நம்மை அலைக்கழிக்கிறதா?

இந்தக் கலையை நாம் எங்கு இழந்தோம்?

எப்போது இந்த மனிதர்களை நாம் கைவிடத் தொடங்கினோம்.?

இனி எப்படி அவர்களைப் பாதுகாக்கப் போகிறோம்?

விடை காண்கிறோமோ இல்லையோ...அடுத்த முறை நம் ஊருக்கு சர்க்கஸ் வந்தால், ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வருவோம்.


Friday, December 21, 2012

திரைப்பாடல் நினைவுகள்





     

 திரைப்படப்பாடல்கள் இந்தச் சமூகத்தில், நம்முடன் பிணைந்துவிட்டதாகவே உணர்கிறேன். ஏதோ ஒரு காலகட்டத்தில் நமக்கு அறிமுகமான பாடலை இப்போது கேட்கும்போது அதே காலகட்டம் நினைவுக்கு வந்து ஒரு ரம்மியத்தையோ, சோகத்தையோ கிளறிவிட்டுவிடுகிறது.

        நான் சிறுவயதில் பல ஊர்களில் படித்த நினைவுகள் பாடல்களோடு ஒன்றிப்போய் , அந்தக் காலகட்டங்கள் இன்றும் ஸ்லைட் ஷோக்களாகவும்,. சில நேரங்களில் 16mm படங்களாகவும் ஓடுகின்றன.

குழந்தைப்பருவத்தில்.. ‘ என்னடீ ராக்கம்மா..பல்லாக்கு நெளிப்பு’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதையே பாடிக்கொண்டிருப்பேன் என்று அம்மா சொல்லுவார்கள். அதிலும் நான் சொல்லும் என் நெஞ்சு குலுங்குலடி..! என்ற வார்த்தைக்காக எல்லோரும் திரும்பத் திரும்பக் கேட்பார்களாம்.

       ’மலர் கொடுத்தேன்..கைகுலுங்க வளையலிட்டேன்’ – இந்தப்பாடலை திருச்சி வானொலி நிலையத்தின் திரைகானம் நிகழ்ச்சியில் கேட்டதும் ..அந்த வளையலிட்டேன் என்ற வார்த்தை உள்ளேயே நுழையாமல்…நான் பட்ட அவஸ்தை..அப்பப்பப்பா…! தனியாகச் சொல்லிவிடுவேன். பாட்டோடு சேர்த்துப் பாடும்போது.. கை குளுங்க என்று வந்துவிடும். பின்னர் அதைச் சரி செய்து, கைகுலுங்க என்றால்…வலையலிட்டேன் என்று வரும்.. பல நாட்கள் அதை வகுப்பறையில் பாடிப்பார்த்திருக்கிறேன். ரத்னாபாய் டீச்சர்.. நான் ஏதோ அறிவியல் பாடத்தைச் சொல்லிப்பார்க்கிறேன் என்று நம்ம்ம்பி விட்டுவிடுவார்கள். பின்னர் நீண்ட நாட்களுக்குப்பிறகு, அந்தப்படம் –திரிசூலம்- கறம்பக்குடி முருகன் தியேட்டரில் பார்க்க நேரிட்டபோது.. அடுத்த கவலை பீரிட்டது.

     சிவாஜி..இந்தப்பாட்டை, மிகவும் அநாயாசமாக பாடுகிறாரே.. அதான் இந்த ஆளை நடிகர் திலகம் என்கிறார்கள் என்று நினைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது..அந்த அநாயாசத்துக்குச் சொந்தக்காரர் டி.எம்.எஸ் என்று..

       பிறகு.. தகிட ததிமி தகிட ததிமி தந்தானா… என்னைக் கட்டிப்போட்ட பாடல், அதை முதலில் கேட்டது, இலுப்பூரில்  4ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது , ஒரு சலூன் ரேடியோவில் . அதுவும் பாடிப்பார்க்கவே முடியாமல் பல நாள் என்னை அலைக்கழித்தது.. தகிட தகிமி என்று வரும்.. பின்னதை சரி செய்ய நினைத்தான் ததிட ததிமி என்று வந்து அலைப்பறை செய்யும்.
     
      அந்த சலூன் அண்ணன், கமல் போலவே முடி வெட்டியிருப்பார். அவருக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு போஸ்டர் கிடைக்குமோ தெரியாது. அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமாக ஓடும் படத்தின் போஸ்டர் , அவரது கடைக்குள் ஒட்டியிருக்கும். அதன்படி சலங்கை ஒலி பட போஸ்டர் ஒட்டியிருக்க, அதில் கமல் காலைத்தூக்கி ஆடும் ஒரு போஸ் இருக்கும். அதைக்காட்டி, இந்தப்பாட்டுல ஆடும்போது எடுத்த போட்டாவைத்தான் நான் போஸ்டராக்கி ஒட்டினேன் என்று சொன்னார். அன்றிலிருந்து அவரையே கமலாக எண்ணி வியக்க ஆரம்பித்தேன். பிறிதொரு நாள் சலங்கை ஒலி பார்க்கும்போதுதான் தெரிந்தது, அந்த போஸ் தகிட ததிமிக்கு ஆடியது இல்லை. நாத வினோதங்களுக்கானது என்று… பயபுள்ள பொய் சொல்லியிருக்கு!

       சங்கீத ஜாதிமுல்லையை மிகவும் லேட்டாகத்தான் கேட்டேன். அப்போது நாங்கள் கறம்பக்குடியில் இருந்தோம். எஸ்.பி.பி என்பவர் மேல் வெறிபிடித்து அலைந்த காலகட்டம் அது..!! அந்தப் பாடல் முதன்முதலில் கேட்ட கதையே மிகவும் நீளம்..!! பள்ளியிலிருந்து, மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்துவிட்டு, திரும்பச் செல்லும்போது தாமதமாகிவிட்டால், சீனி கடைமுக்கத்திலிருந்து NNL (முன்னால் அதன் பெயர் PTR) பஸ்ஸில் தொற்றிக்கொண்டு பேருந்து நிலையத்தில் இறங்கிவிடுவது வழக்கம். செக்கர் அண்ணன் டிக்கெட்டெல்லாம் கேட்கமாட்டார். அப்படி ஒருநாள் பஸ்ஸில் ஏறிவிட்டேன்…

        ‘திருமுகம் கண்டு பழகுமோ…அறிமுகம் செய்து விலகுமோ? என்ற வரியில் கேட்க ஆரம்பித்து கலக்கி எடுத்துவிட்டது அந்தப்பாடல்..! பாட்டு ரொம்ப பெரிசு..! ஒரு நிமிடப் பயண தூரத்தில் என்ன கேட்டுவிடமுடியும்..? பள்ளிக்கூட பெல் அடிக்கவில்லை.. முடிந்தவரை நின்று கேட்டுவிட்டுத்தான் நகர்ந்தேன். பிறகு அந்தப்பாடலை எங்கெல்லாம் கேட்டேன் என்று ஒரு மிகப்பெரிய பட்டியலே உண்டு.

      குழலூதும் கண்ணனுக்கு குயில்பாடும் பாட்டுக்கேட்குதா? – முதல் முறையே வசீகரித்த பாடல், அதை மிகவும் சிலாகித்து வகுப்பறையில் பேச…என் நண்பன் ஒருவன் தன் வீட்டு டேப் ரெக்கார்டரில் கேட்கலாம் என்று அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அன்று மாலை , அவன் அக்கா அந்தப்பாடலை போடவே விடவில்லை. சரியாக 5 மணிக்கு போடச் சொன்னார். நாங்களும் தினம் தினம் கேட்டு ரசித்தோம். சில நாட்களுக்குப் பிறகு, எதேச்சையாக அவர்கள் வீட்டைக் கடக்கும்போது அதே பாடல்..!! நேரம் 5 மணி! அப்புறம்தான் தெரிந்தது.. எதிர்வீட்டு ஆசிரியரின் மகனுக்கும் அந்தப்பாடலை கேட்கப் பிடிக்கும் என்று..!!

     ’தேவதை இளம் தேவி! என்னைச் சுற்றும் ஆவி..!! ‘ இந்தப்பாடல் தென்காசியில் கேட்டது…! அணைக்கரைத் தெருவின் கடைசி வீடு லிப்டன் டீ மாமாவுடையது. அந்த வீட்டு ஹரீஷ் அண்ணன் ஒரு சிறிய பெட்டி ஒன்றிலிருந்து கிளம்பும் ஒயர்களை தனது காதில் வைத்துக்கொண்டு , தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். அவர் தலையசைக்கும் அழகுக்காகவே நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். கேக்குறியாடா? என்று அவர் சொன்னதும்.. பாய்ந்து சென்று அருகில் நின்றேன். காதில் வைத்தார்…அப்போது..கேட்ட வரிகள்… ‘’தேவமுல்லையே….!! என்று ஆரம்பித்தது…பின்னர் ஒரு முறை அந்தப்பாடலை…கேசட்டை ரீவைண்ட் செய்து கேட்கவைத்தார். அதன்பிறகு.. நான் வானொலியில் பணியாற்றும்போது தேடித்தேடி மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது ஒலிபரப்புவேன். ஆனாலும்..முதல் முறை கேட்ட வாக்மென் அனுபவம் இன்னும் காதுக்குள்ளேயே இருக்கிறது.

      இன்னும் பல பாடல்கள் நினைவுகளை வருடி.. சில நேரங்களில் அந்த நேரத்தில் சாப்பிட்ட உணவுகூட நினைவுக்கு வருகிறது.. அதே வாசனையுடன்..!! அம்மா என்றழைக்காத உயிரில்லையே - பாடல் அறந்தாங்கி அம்மா மெஸ்ஸின் சாம்பார் வாசனையையும் சேர்த்தே வைத்திருக்கிறது. 

ஜுலி ஐ லவ் யூ – தென்காசியில் , நான் கர்ச்சீஃபில் கொட்டிக்கொண்ட பாண்ட்ஸ் பவுடர் வாசனை..!!

தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே ! - இலுப்பூர் ஆர்.ஸி பள்ளியின் மடத்துக்குள் இருக்கும் கொய்யாப்பழ வாசனை..!

    ராசாவே!  உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க.. – எங்கள்  லட்சுமிப் பசுவின் கன்றுக்குட்டி வீட்டுக்குள் ஓடிவந்தபோது பரவிய கன்றுக்குட்டி வாசனை இன்னும் நாசிக்குள்…
      


     இன்றும் இந்தப்பாடல்கள் நினைவுகளைக் கிளறி…சில நேரங்களில் சின்னப்பிள்ளையாகவே இருந்திருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது.

       இதயக்கோவில் படத்தின் அனைத்துப்பாடல்களும் மனதை வருடினாலும், வானுயர்ந்த சோலையிலே - பாடல் மிகவும் நெருக்கமானது. அது எனக்கு பாட்டுப்போட்டியில் முதல் பரிசு பெற்றுத்தந்த பாடல். ! அந்தப்படத்தின் கேசட்டை என் நண்பன் சத்யா வாங்கினான். அவனுக்காக ஒரு ஆம்ப்ளிஃபயர் நான் செய்து தந்தேன். அதைக் கேட்டுவிட்டு, பாப்புலர் சலூனில் இருப்பதுபோல் சில் சில் என்று வரவேண்டும் எனக் கேட்டான். நானும் பல பாஸ்-ட்ரபிள் போர்டுகளை மாற்றி மாற்றி முயற்சி செய்துபார்த்தேன்.  அப்புறம் ச்சில்லிங் எஃபட்டுக்காக ட்வீட்டரும் வாங்கி மாட்டியாயிற்று. மீண்டும் பாப்புலர் சலூன் சென்று கேட்டால், அந்த எஃபக்ட் நம்மிடம் இல்லை. பின்னர்தான் எனக்குத் தெரிந்தது. சலூனில் சப்-ஊஃபரே இல்லை. அனைத்துமே ட்வீட்டர்தான் என்று..!! கடைசிவரை சத்யாவுக்கு சலூன் எஃபக்ட் வரவில்லையே என்று வருத்தம்தான்!


     காரணமே இல்லாமல், வாய் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் ஒன்று உண்டு.    பூந்தேனில் கலந்து…பொன்வண்டு எழுந்து..சங்கீதம் படிப்பதென்ன..?  ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தருணத்தில் நான் முணுமுணுத்துவிடும் பாடல் இது…!  இதன் நினைவுதான் மிகவும் ஆழமானது. இலுப்பூரில் வேல்முருகன் தியேட்டரில் ஏணிப்படிகள் பார்த்துவிட்டு வரும்போது அந்த அக்காவைப் பார்த்தேன். ஷோபா போலவே தெரிந்தாள். இரண்டு நாட்களில் பள்ளியில் சர்க்கஸ் கூட்டிச் சென்றபோது அந்த அக்கா  அங்கு, கம்பியில் நடந்து காட்டிக்கொண்டிருந்தாள். அடுத்த வாரத்தில் இலுப்பூர் பேருந்து நிலையத்தில் அவளும், ஒரு இளைஞனும் பிணமாகக் கிடந்தார்கள். 

   ஒவ்வொரு பாடலும் ஜீவனைக் கட்டிப்போட இதுபோன்ற நினைவுகளும் கயிறாகிறது என்று எண்ணுகிறேன்.



Thursday, May 26, 2011

நாடா நினைவுகள் - தொடர்ச்சி....






பின்னர் முதன்முறையாக வீட்டிற்கு ஒரு பிலிப்ஸ் டேப் ரெக்கார்டரை சித்தப்பா வாங்கி வந்தார்..,எம்.எஸ்ஸின் சுப்ரபாதம்,கந்தர் சஷ்டி கவசமும், ஒரு டி எம் எஸ்ஸின் முருகன் பாடல்கள் கலெக்‌ஷனும் , நினைவே ஒரு சங்கீதம், வேலைக்காரன் படப்பாடல்களையும் கேசட்டாக வாங்கி வந்திருந்தார். அதற்கு ஒரு துண்டைப்போட்டு மூடி ஒரு மேசையில் வைத்தபின் வீட்டுக்கே அழகு வந்தது.


ஆஹா! நம் வீட்டிலும் கேசட் வந்துவிட்டது என்று புளகாங்கிதமடைந்தேன். வேலைக்காரன் படப்பாடல்கள் மொட்டை மனப்பாடம் ஆனது.! ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் –திருச்சி வானொலியில் – சூரியகாந்தி என்ற தலைப்பில் வரும் நாடகங்களைக் கேட்டுவிட்டு, சித்தப்பாவின் ஏற்பாட்டின்படி ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோவின் பவ்யத்தோடு, ஒவ்வொருவரும் உள்ளறைக்குச் சென்று அந்த டேப் ரெக்கார்டரில் எங்கள் குரல் வளத்தைக்காட்டி பாட்டுப்பாடி பதிந்துவிட்டு வந்தோம். நண்டு சிண்டுகள் வரை அனைவருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் என் தங்கை பாடிய ‘சுந்தரி சௌந்தரி நிரந்தரியே….! ‘ சூப்பர் ஹிட்!

பின்னர், வீட்டில் கேசட் புழக்கம் என்னால் அதிகரித்துவிட்டது. நண்பன் ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்து, ‘சம்சாரம் அது மின்சாரம்’ வசன கேசட் வாங்கிவந்து கேட்டேன். ஏன் ஓசியில் வாங்கி வந்தாய் என்று பாட்டு கிடைத்தது. இருந்தாலும், அந்த கேசட்டை ஓடவிட்டு கேட்பதில் ஒரு சுகம்தான். பின்னர் அதன் நுணுக்கங்கள் பிடிபட ஆரம்பித்தது. மெதுவாக கையில் இருக்கும் காசிலிருந்து, கேசட்டுகள் வாங்கத்துவங்கினேன். சித்தப்பாவின் டேப்ரெக்கார்டரை ஒப்பேற்றிய பெருமையும் என்னையே சேரும்!
கல்லூரி சென்றபின், கேசட் வாங்குவது அதிகமானது. நான் கேசட் வாங்காத பஸ் ஸ்டாண்டே இல்லை எனலாம். டி சீரிஸ், ராஜா, எக்கோ, வாணி, வீணா என பல்வேறு கம்பெனி கேசட்டுகள்! டூயட் பட கேசட் – நீலக்கலரில் வந்தது. மிகவும் அழகாக இருக்கும்.
பின் மைக்கேல் ஜாக்ஸனின் டேஞ்ஜரஸ்! 99ரூபாய்க்கு கருப்பு கலரில் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருந்தது.  வந்தே மாதரம் கேசட்டின் வடிவமைப்பும் மிகவும் அழகாக இருக்கும். அந்த கேசட்டின் கவர் மட்டும் மொழுக்கையாக கையில் கீறாமல் வடிவமைக்கப்பட்டிருந்தது.
காமெடி கலெக்‌ஷனாக, சுருளிராஜன், கவுண்டமணி செந்தில், ‘மூர்த்தி-கோபியின் காமெடி கேசட்டுகள்! மயில்சாமி-லக்‌ஷ்மணனின் ‘முப்பத்தாறு மொட்டைகளின் அட்டகாசங்கள்’ கேட்டு , அதன்படி கல்லூரியில் மிமிக்ரி செய்து பரிசுகள் வாங்கியது அந்த கேசட்டுகள் செய்த உதவி!
நான் படித்தது எலக்ட்ரானிக்ஸ் என்பதால், முதலில் நான் முயன்றது ஒரு ASSEMBLED டேப் ப்ளேயர்தான். அதற்கான கேஸிங், ட்ரான்ஸ்பார்பர், டையோடு, ஆம்ப்ளிபயர் போர்டு, டேப் மெக்கானிஸம், பி டி போர்ட் , ஈக்வலைஸர் போர்ட், அதற்கான எல் இ டி டிஸ்கோ லைட்  என பார்த்துப்பார்த்து வாங்கி அதில் லயித்துப்போய் வீட்டையே இரண்டு செய்திருக்கிறேன். அந்தக்காலகட்டத்தில் எங்கள் வீட்டில் ஆறு ஸ்பீக்கர்கள். தெருவில் தண்ணீர் எடுப்பவர்கள், என்னம்மா? தம்பி காலேஜ்லேருந்து வந்திருச்சுபோல? என்று கேட்கும் அளவுக்கு என் ஒலி(அலறல்)பரப்பு பிரபலம்!
வேலைக்குச் செல்லும் காலகட்டத்தில், கன்னாபின்னாவென்று கேசட்டுகள் வாங்கி, அதற்கு எண்கள் போட்டு ஒழுங்குபடுத்தி , தேடும்போது உடனே கிடைக்குமாறு ஒரு நோட்டில் எழுதிவைத்து என, அதற்காக நான் செலவழித்த நேரம் அதிகம்!
ஒரு பாடலை டீக்கடையில், பேருந்தில் கேட்டுவிட்டு, மிகவும் பிடித்துப்போய்விட, அந்தப்பாட்டு நமக்கே சொந்தமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று மனம் ஆசைப்படும். அப்போது நாம் இருக்கும் ஊரில் இருக்கும் ரெக்கார்டிங் கடைக்குப்போய், தேவைப்படும் பாடல்களை பட்டியலாக எழுதிக்கொடுத்து, ஒரு புதிய TDK 90 கேசட் வாங்கி அதில் இருபுறமும் பதியச்சொல்லி , என்று தருவீர்கள் என்று கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்து நகம் கடித்துக்காத்திருப்பேன். அவர் சொன்ன தேதியில் சொன்னதைவிட கொஞ்சம் முன்னாலேயே சென்று ரெக்கார்டிங் ஆகிவிட்டதா என்று போட்டுக்கேட்டுவிட்டு ஒரு நிமிடம் பதிசெய்யப்படாமல் மிச்சம் இருக்கும்போது..
அண்ணே! தளபதி படத்தில் யமுனை ஆற்றிலே மட்டும் போட்டுருங்க! என்று நைசாகக் கேட்க,
வசந்தம் மியூசிக்கல் ஓனர் அண்ணன், அந்த ஒரு நிமிசம் ஒங்க டேப்பில் சும்மா ஓடக்கூடாதாக்கும்? 90க்கு காசு குடுத்திருக்கீங்க? அதானே! நல்ல வெவரம்டா தம்பீ! நல்லா வருவ! என்று முன்கூட்டியே கணித்து வாழ்த்தினார் . J

நாம் அழகாக கலெக்ட் செய்த பாடல்களை போட்டுக்கேட்டுவிட்டால், வேறு எங்கு அதில் உள்ள ஒரு பாடலைக் கேட்டாலும், அடுத்தபாடலாக, நம் கேசட்டில் உள்ள பாடலைத்தான் வாய் முணுமுணுக்கும். மேலும், பேருந்துகளில், நம் கேசட்டைக்கொடுத்து, அதை டிரைவர் போட்டுவிட, பயணிகள் ரசிக்கும்போது, அனைவரது முகத்தையும் (குறிப்பாக கல்லூரிப்பெண்கள்)  பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டே பயணிக்கும் சுகம் இருக்கிறதே…..அனுபவிக்கணும் பாஸு!
அதில் இன்னும் சில டிரைவர்கள், அந்த கேசட்டை அப்படியே பதிந்துவிட்டு தருவதாக வாங்க, நானும் நம்ம்ம்பிக்கொடுக்க, அவர் அப்படியே அந்தக் கேசட்டை ஆட்டையப் போட்டுவிடும் சோகம் இருக்கிறதே…அதையும் அனுபவிக்கணும் பாஸு!
அப்படிச்சேர்ந்துபோன 500க்கும் மேற்பட்ட கேசட்டுகளை விட்டுவிட்டு நான் வெளிநாடு போய்விட்டு வந்தபின், என் குடும்பம் அதைப் பாதுகாத்து வைத்திருந்தது. இடையில் திருச்சி வானொலிக்காக, ‘எங்கிருந்தோ வந்தான், படத்தின் ஒரு பாடலான, ‘மௌனம் என்பது கவிதை மொழி’ என்ற அருமையான மெலடி இணையத்திலும் கிடைக்காமல், என்னிடம் இருந்த கேசட்டிலிருந்து எடுத்துக்கொடுத்தபோது, அவைகளைப்பாதுகாத்ததற்கு நன்றியாக உணர்ந்தேன்.
இதோ, கேசட்டுகள் மீண்டும் என்னுடன் சென்னைக்கு வந்துவிட்டன. ஒரு நாள் ஒதுக்கி அந்த நாடாக்களில் கேட்ட அத்துனை ஓசைகளையும் மீண்டும் கேட்க காதுகள் துடிக்கின்றன. தற்காலிக நிவாரணத்துக்கு…நாடா நினைவுகளாக !!

Wednesday, May 25, 2011

நாடா நினைவுகள்







     வீடு மாற்றும்போது, பழைய பொருட்களை பரணில் இருந்து இறக்கிக்கொண்டிருந்தேன். ஒரு பெரிய அட்டைப்பெட்டி கண்ணில் பட்டது. அட! என்று ஆசையுடன் அதை இறக்கிவைத்து விட்டு, திறந்து காட்டி, இதையும் சென்னை கொண்டு போறோம். என்று தங்கமணியிடம் சொல்ல, ”ஹ்க்க்ம்!” என்ற ஒரு கனைப்பு வந்தது. அதற்கு என்ன அர்த்தம் என்று அவரிடம் கேட்கவும் முடியாது.
பாட்டு கேட்பது என்பது இப்போது மிகவும் எளிமையான செயல். கேட்க நினைக்கும் பாடலை இணையத்தில் தேடி, நமது இசைபாடும் கருவியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் கேட்கத்தொடங்கிவிடலாம். இதில் இருக்கும் வேகமும், எளிமையும் நம்மை பரவசத்தில் ஆழ்த்துவது உண்மைதான்!
ஆனால்,ஒரு காலத்தில், திருவிளையாடல் படத்தின் அனைத்துப்பாடல்களும், ஒரு கருப்பு வட்டத்தட்டில் இருக்கும். அதற்கு இசைத்தட்டு என்று தமிழிலும், ரெக்கார்ட் என்று ஆங்கிலத்திலும் கூறினார்கள். இந்த வார்த்தைகளை நான் மனப்பாடம் செய்துகொள்ள பலமுறை சொல்லிப்பார்த்திருக்கிறேன். அதனை ஒரு பெரிய அட்டை உறையில் போட்டு வைத்திருப்பார்கள். ஒவ்வொருமுறை பாடலை ஒலிக்கவிடும்போதும், ஒரு பெரிய கிராமபோன் பெட்டியில் போட்டு சுழல விடுவார்கள். இப்போதுபோல் பாடலை உடனே தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், இலுப்பூர் பிடாரிகோயிலில் இசைத்தட்டு போடும் அந்த அண்ணன் இப்ப பாக்குறியா? கரேட்டா ‘பாட்டும் நானே’ போடுறேன் என்று ஓரளவு அதற்கு அருகில் போய் முள்ளை வைத்துவிடுவார். அது ’பாத்தா பசுமரம்’ என்று ஆரம்பிக்கும். எப்படி மாறிப்போச்சு என்று முனகிக்கொண்டே, மீண்டும் முயற்சித்து பாடவைத்துவிடுவார்.
லேசான கொரகொரப்புடன் அது ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என ஆரம்பித்து ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்று ஆரம்பிக்கும்போது, நான் அவ்வையார் இதற்குள் எப்படிப் போனார் என்று பலமுறை வியந்திருக்கிறேன். ஆனால், கிராமபோன் வாங்கித்தாருங்கள் என்று அப்பாவிடம் கேட்க எனக்கும் தைரியமில்லை. வாங்கிவந்தால், மூன்றாவது நாள் அதை நோண்டாமல் ஒழுங்காக வைத்திருப்பேனா என்று என்மேலும் நம்பிக்கையில்லை. ஆனால், அதில் அவ்வளவு ஆசை இருந்தது.
பின்னர் பாடல்கள் கேட்கும் ஆர்வம் , வானொலியிலும், எங்காவது செல்லும் விழாக்களிலுமாக சுருங்கியிருந்த வேளையில், பக்கத்துவீட்டு லைப்ரேரியன் வீட்டில், சிங்கப்பூரிலிருந்து ஒரு பெரிய பெட்டிபோன்ற வஸ்து வந்து அமர்ந்திருந்தது. சிறுவர்கள் அனைவரும் அதைச்சென்று பார்த்தோம். அதன் பெயர் நேஷனல் டேப் ரெக்கார்டர் என்றார்கள். அது என்ன ஒற்றுமை என்று தெரியவில்லை. அதில் நான் கேட்ட முதல் பாடல் ‘ இசையால் வசாமாகா இதயமெது?’. அன்றே அந்த டேப் ரெக்கார்டரில், என்னைப்பாடச்சொல்லி, பதிவுசெய்வதாகச் சொன்னார்கள். நான் பாடிய முதல் பாடல் ‘ புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!’
பாடல்கள் பெட்டியிலேயே இருக்குமா? அல்லது வெளியில் எடுக்கலாமா? இசைத்தட்டு எங்கே வைப்பார்கள்? முள்ளை எப்படி நகர்த்தி வைப்பது? பட்டனெல்லாம் எதுக்கு? செவப்பு பட்டனை ஏன் அமுக்கினீங்க? என்று நான் கேட்ட கேள்விகளால் அந்த கருப்பையா மாமா திணறித்தான் போயிருப்பார். சொல்றேன் என்று கூறிவிட்டு, ஒரு பட்டனை அழுத்தினார். பிளந்த எங்கள் வாய்கள் போலவே ஒரு சிறிய கதவு திறந்தது. அதிலிருந்து, ஒரு பொருளை எடுத்தார்.  



இருபுறமும் துளைகளுடன் ஒரு செவ்வகப்பெட்டி. அதில் ஒருபக்கம் மட்டும் வெளியில் தெரியும் காப்பிப்பொடி நிற நாடா. அதைச்சுற்றிக்கொள்ள இரு துளைகளிலும் சுழலுமாறு இரு சக்கரங்கள் என மிகவும் அழகாக இருந்தது. அதனுள் இருக்கும் நாடாவில்தான் பாடல் இருக்கும் எனவும், அது ஒருபக்கம் சுற்றிமுடித்தபின் திருப்பிப்போட்டால், வேறு பாடல் கேட்கலாம் எனவும் தெரிந்துகொண்டேன். அது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஏனெனில், நம் குரலையும் அதில் பதிந்துகொள்ளலாம் என்ற இன்னொரு அம்சம்! அதற்கு கேசட் என்று பெயர் சொன்னார்! ‘சட்டுன்னு பாட்டு கேட்கலாம் என்று யோசித்து ‘கேள்-சட்’ ஐத்தான் இப்படி வைத்திருக்கிறார்கள் என்று நானாகவே ஒரு காரணம் யோசித்துவைத்துக்கொண்டேன்.


அப்போதிலிருந்து ஆரம்பித்தது கேசட் மோகம். கேசட்டுகளை எங்கு பார்த்தாலும் ஆசையாக இருக்கும். வெளிவரும் எல்லா கேசட்டுகளையும் வாங்கிவிடவேண்டும் என்று லட்சியம் வைக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கேசட் கடைக்காரர்கள் மீது பொறாமையாக இருக்கும். பிடாரிஅம்மன் கோயில் அண்ணன் கேசட் ப்ளேயருக்கு மாறியதும் கேசட்டுகளின் நெருக்கம் அதிகமானது. தெரிந்த விழாக்களுக்குச்செல்லும்போது, முதலில் மைக் செட் அண்ணனை நட்பாக்கிக்கொள்ளுவது அத்தியாவசியமாகிப்போனது.


                                     நாடா நினைவுகள் தொடரும்....!

Sunday, March 27, 2011

சித்தப்பா




சிறுவயதில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு உறவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அவர்கள் நடை,உடை, பாவனைகள் எல்லாவற்றையும் கவனித்து அதைப்போல நடக்க நினைப்போம் அல்லது அதைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம்.அப்படி ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த மாமா, மூத்த அண்ணன், சித்தப்பா போன்ற உறவுகள் அமைந்திருக்கும்.

அப்படி எனக்கு அமைந்த உறவுதான் அவர்! என் அப்பாவின் கடைசித்தம்பி! என் அப்பாவுக்கு அடுத்து அவர்தான் பையன் என்பதால், என் பெரியப்பா மகன்களுக்கு இரண்டு, மூன்று சித்தப்பாக்கள் இருந்தபோதும், எனக்கு மட்டும் ஒரே ஒரு சித்தப்பாதான்! ஆக, மற்றவர்கள் அவரை ’சின்ன சித்தப்பா’ என்று அழைக்கும்போது, நான் மட்டும் சித்தப்பா என்றே அழைப்பேன்.
     
எனக்கு விபரம் தெரிந்து அவரை நான் பார்த்தது நாங்கள் இருந்த கலியாப்பட்டி என்ற ஊருக்கு அவர் வந்துசென்றபோதுதான்! ஆனால் அப்போது நான் மிகவும் சிறுவன்! முகத்தையோ நடவடிக்கைகளையோ அவ்வளவாக கவனிக்கவில்லை. பின்னர் நான் மூன்றாவது படிக்கும்போது, அவருக்குத் திருமணம் என்ற பேச்சுக்கள் வந்தபோதுதான் அவரை நான் கவனிக்க ஆரம்பித்தேன்.

சொந்த ஊரான கறம்பக்குடிக்கு செல்லும்போது பார்த்தால், கல்யாண மாப்பிள்ளை மீசை இல்லாமல், இளமையாக, கமலஹாசன்போல் தூக்கி வாரிக்கொண்டு, ,எல்லோரிடமும் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார். அவரது உண்மைப்பெயர் நடராஜன். ஆனால் எல்லோரும் அவரை அம்பி என்றே அழைத்துப்பழகினர். அவரது ஒவ்வொரு பேச்சின் முடிவிலும் ஒரு நகைச்சுவை கலந்த கிண்டல் தொனித்தது என்னை ஈர்த்திருக்கலாம்..

அதற்குப்பிறகு அவரை கொஞ்சம் ஆழமாக கவனிக்க ஆரம்பித்தேன். பின்னர் அவர்தான் எங்கள் குடும்பத்தின் முதல் மீசை வைத்த மனிதராகவும் ஆனார். திருமணத்துக்குப்பிறகு கோயம்புத்தூரில் வேலைக்காக செட்டிலானவர், மீண்டும் கறம்பக்குடிக்கே வந்தார். அங்கிருந்து புதுக்கோட்டையில் உள்ள அவரது வங்கிக்கு சென்றுவரத்தொடங்கினார்.

காலையில் சரியாக 7:25 வரும் RSR ஐப்பிடிக்க பஸ் ஸ்டாப்புக்கு சென்றுவிடுவார். ஒவ்வொரு நாள் இரவு உணவும் எங்கள் அனைவருடனும் சேர்ந்து உண்பார். அன்று வங்கியில், பேருந்தில் நடந்த சுவாரஸ்யமான விஷங்களை அழகாகச் சொல்லுவார். புதிய படங்களைப்பற்றி தகவல்கள் சொல்லுவார். வார இறுதியில் அவரது குடும்பம் இருந்த கோவைக்குச் சென்றுவிடுவார்.

                ஆனால் சில வாரங்களில், சனிக்கிழமைகளில் மாலை கொஞ்சம் சீக்கிரமே கறம்பக்குடி வீட்டுக்கு வந்து விடுவார். வந்தவுடன் முகம் கழுவிவிட்டு , அந்த ஊரில் இருக்கும் ஒரே திரையரங்கமான முருகனில் எந்தப்படம் போட்டிருந்தாலும் எங்களைக்கூட்டிக்கொண்டு சென்றுவிடுவார். பின்னர் ஞாயிறு கொஞ்சம் தாமதமாக எழுந்திருப்பார். டிபன் சாப்பிட்டுவிட்டு, துணிகளைத் துவைப்பார். தன் துணிகளை யாரையும் துவைக்க விடமாட்டார். பின்னர் குளித்துவிட்டு வந்து மதிய சாப்பாடு. சாப்பிட்டுவிட்டு படுத்தால், மிக நீண்ட தூக்கம். அப்போது மட்டும் வீடடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.யாரும் சத்தம்போடக்கூடாது. அப்படியும் எங்கள் குடும்பம், ரேடியோவில் மூன்றுமணி நாடகத்தை கேட்டுவிட்டுத்தான் ஓயும்.

அவர் மதியத்தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டார் என்பது குப்புறப்படுத்துக்கொண்டு பின்னங்காலை ஆட்டிக்கொண்டிருப்பதிலிருந்து கண்டுகொள்ளலாம். மாலை காபிக்குப்பிறகு, வீட்டின் உள் திண்ணையில் அயன்பாக்ஸை வைத்து, வேட்டியை மடித்துக்கட்டி, படியில் அமர்ந்துகொண்டு தன் துணிகளை அயன் செய்வார். (அவர் கறம்பக்குடியை விட்டுச்சென்றவுடன் நான் கல்லூரியில் படிக்கும்போது, அதே இடத்தில் வைத்துத்தான் என் துணிகளை அயன் செய்வேன்.)    சில நாட்களில் ஞாயிறு படம் உண்டு. விடுமுறையை பயனுள்ளதாகவும், ரசனையுடனும் கழிக்க வேண்டும் என இவரிடம்தான் கற்றுக்கொண்டேன்


                வெள்ளிக்கிழமையானால், குமுதத்துடன் வீட்டுக்கு வருவார். அதை ஞாயிற்றுக்கிழமை வரை வைத்திருந்து படிப்பார். நான் 7வது படிக்கும்போதே பத்திரிகைகள் படிப்பதில் அதிக ஆர்வம் இருந்ததால், அவர் வருகிறாரோ இல்லையோ, அவர் பையிலிருந்து வெளிவரும் குமுதத்துக்காக காத்திருப்பேன். அவரும் என் ஆர்வத்தை ஆட்டம் காணவைத்து வெளியிலெடுத்துவிட்டு 10 தோப்புக்கரணம் போட்டுவிட்டு வாங்கிக்கோ என்பார். சொன்னதைச் செய்துவிட்டு வாங்கிச்சென்றுவிடுவேன்.

                சமயலறையில், அம்மிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, மிக்ஸியை வீட்டுக்குள் கொண்டுவந்தவர் அவர்தான்! அதேபோல்தான் குக்கரும்!

                வீட்டில் முதன்முதலில் , டேப் ரெக்கார்டர் வாங்கி அதில் எங்கள் அனைவரது குரலையும் பதிந்து காட்டியவர் அவர்தான்!

      புதிய தொலைக்காட்சியை வாங்கி, அதில் வியாழன் இரவுகளில் ‘World This Week’ ம், வெள்ளி இரவுகளில் ஆங்கிலப்படங்களும் பார்க்கவைத்தவர் இவர்தான்! என்னுடைய திரையுலகப் பிரவேசத்தில் இவருக்கும் ஒரு பங்கு நிச்சயம் உண்டு!
     
      ஒருநாள் என்னையும், என் அத்தைமகன் கண்ணனையும், பட்டுக்கோட்டை சென்று முழுநாளும் படம்பார்த்துவிட்டு வரச்சொல்லி பணம் கொடுத்தனுப்பினார். அன்று நாங்கள் தொடர்ச்சியாக அபூர்வ சகோதரர்கள், சிவா, நினைவுச்சின்னம்  ஆகிய மூன்று படங்கள் பார்த்தோம்..

  எங்கள் பாட்டியைக்கண்டால், எங்கள் குடும்பமே பயந்து நடுங்கும். இவர்மட்டும் சிங்கத்திடம் விளையாடும் முயலைப்போல, அவரை மிகவும் கிண்டல் செய்து , அவரையும் சிரிக்கவைத்துவிடுவார். இவர்தான் பாட்டிக்கு கடைசிப்பிள்ளை என்பதால், பாட்டிக்கும் இவர்மீது பிரியம் அதிகம்.

  என் வாழ்வின்மீது அக்கறையுடன் இருப்பார். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு தவறான காரணத்துக்காக என்னை ஒரு ஆசிரியர் அடித்துவிட்டார் என்பதற்காக, இவர் வீட்டுக்கு வந்தவுடனேயே, என் அப்பாவை அழைத்துக்கொண்டு பள்ளி முதல்வரைச் சந்தித்து அந்த ஆசிரியரை எங்கள் வீட்டுக்கு வரவைத்து மன்னிப்பும் கேட்க வைத்தார்.

  தேர்வு சமயங்களில், அவருக்கும் மார்ச் மாத வங்கி வேலைகள் இருக்கும். இரவு தாமதமாகத்தான் வருவார். இருந்தபோதும், நான் அன்று எழுதிய தேர்வைப்பற்றி விசாரித்துவிட்டுத்தான் தூங்குவார். அண்ணன் மகன்தானே என்ற மேம்போக்கு எண்ணம் இல்லாமல் உரிமை எடுத்துக்கொள்ளுவார்.

  இன்று என் பேச்சில் தொனிக்கும் கிண்டலுக்கு இவர்தான் மூலகாரணமாக இருந்திருப்பார். நகைச்சுவை உணர்ச்சி நிறைந்த மனிதர். சத்தம்போட்டு சிரிக்கமாட்டார். ஆனால் சிரிக்க ஆரம்பித்தால், கண்ணீர் வரும்வரை சிரிப்பார்.

  பக்தி நிறைந்தவர். குடும்பத்துடன் அவர் அதிகம் சென்ற சுற்றுலாத்தலம் திருப்பதியாகத்தான் இருக்கும். என் அப்பாவிடம் மிகப்பெரிய பாசம் வைத்திருக்கிறார்.

  சுத்தம் பேணுவதில் முதன்மையானவர். மூலையில் ஒரு தூசி கிடந்தாலும் தானே கூட்ட ஆரம்பித்துவிடுவார். அடுத்தவர்களின் சிரமம் பொறுக்கமாட்டார். உடனே உதவி செய்துவிடுவார். எங்கள் உறவினர்களில் சிரமப்பட்டவர்கள் அனைவருக்கும் அதிகம் உதவியிருக்கிறார். அதுவும் படிக்கவேண்டுமென்றால் எல்லாச்செலவையும் ஏற்றுக்கொள்பவர்.

எனக்கு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தபோது, நம் குடும்பத்தில் முதல் பொறியியல் பட்டதாரி இவனாக இருக்கட்டும் என்று தன் சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்து என் அப்பாவிடம் கொடுத்து சென்னை அனுப்பிவைத்தார். அன்றைய தினம் அவர் மாமனாரின் அறுபதாம் கல்யாணம் வேறு!

  இப்போதும் என் வளர்ச்சியின் மீது அக்கறையும், பெருமிதமும் கொண்ட அன்பான மனிதர் அவர்! சென்ற வாரம் கூட என் பதிவுகளை உளமாரப் பாராட்டி ஒரு அழகான மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இப்போது கோவையில் அவரும் சித்தியும் மட்டும் வசிக்கிறார்கள். என் இரு தம்பிகளும் நல்ல வேலையில் சென்னை, பெங்களூரில் இருக்கிறார்கள்

      .வேலை வேலை என்று தன் உடல்நிலையை கவனிக்காமல் இருந்துவருகிறார். அனைவரது வற்புறுத்தலுக்குப் பிறகும், வங்கி வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவது என்று முடிவெடுத்துள்ளார். அனேகமாக இந்த மாதத்துடன் ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்துவிடுவார். உடல்நிலையும் சரியாகிவிடும். மீண்டும் அந்த ரசனையான வாழ்வை வாழ..
        
      WELCOME HOME CHITHAPPA!!



இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...