Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

Friday, July 17, 2015

வெறும் கணக்கு



விகடனில், எஸ்.ராவின் ‘வெறும் கணக்கு’ சிறுகதை எனக்குள் பல
நினைவலைகளையும், நெகிழ்ச்சியையும் உண்டாக்கிவிட்டது.
பண விஷயத்தில், யாராலும் நம்பப்படாத ஒருவர், தன்னை நம்பிய ஒருவரின் மரணச் செலவை பைசா சுத்தமாக அவரது மகனிடம்
ஒப்படைக்கும் நிகழ்வை இத்தனை அற்புதமாக, நுட்பமாக எழுதி எஸ்.ரா எப்போதும்போல் நம் மனதில் தனக்கான சிம்மாசனத்தை இன்னும் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில், எத்தனை பேர் அன்றாடச் செலவுகளை பைசா சுத்தமாக கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பெரும்பாலும் எழுதி எக்ஸலில் பதிவு செய்துவிடுவேன். அது பல விதங்களில் உதவியிருக்கிறது. அதனை நான் சந்திக்கும், பயிற்றுவிக்கும் அனைவருக்கும் சொல்லி வருகிறேன்.
ஏனெனில் செலவில் நமக்கிருக்கும் விழிப்புணர்வே நமது வருமானத்தைப் பற்றிய அறிவை அதிகமாக்கும் என்பது எனது எண்ணம். அதைப் பின்பற்றும் பலரும் கிடைத்த மகிழ்ச்சியையோ, கவன உணர்வையோ பகிர்ந்துகொள்ளும்பொழுது இன்னும் பெருமையாக இருக்கும்.
இந்தக் கணக்கெழுதும் விஷயத்தில் எனது தந்தைதான் எனக்கு
முன்னோடி.எத்தனை அதிக வேலைப்பளு இருந்தாலும், அன்றாட செலவுக்கணக்கை மிகச்சரியாக எழுதிவைத்துவிட்டுத்தான் தூங்கப்போவார்.
மிகக்குறைவான
வருமானத்தில்கூட, அதனை தவறாமல் செய்து வந்து, இன்றும் அந்தக் கணக்கெழுதும் வழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
எத்தனையோ தருணங்களில், அவரது கணக்கு நோட்டின் மூலம், முன் ஆண்டுகளில் புதுக்கோட்டை -
சென்னை பேருந்துக் கட்டணம் 55ரூபாய் ,
வசந்தவிஹார் சாப்பாடு 5ரூபாய்,
ஒரு சீப்பு வாழைப்பழம் 1ரூபாய் ,
சாரதாஸில் வாங்கிய சட்டை 44 ரூபாய்,
திண்ணை பூச கொத்தனாருக்குக் கொடுத்த நாள் கூலி 10 ரூபாய் என்று பல நிகழ்வுகள், பொருட்களின் விலைவாசியைத் தெரிந்துகொள்ளும்போது பொருளியலே படித்த அளவுக்கு சிந்தனை விரிந்திருக்கிறது.
ஒரு திருமண நிகழ்வு மாதிரியான குடும்ப விழாக்களில் அதன் மொத்தச் செலவையும் எழுதி வைத்து, பின்னர் எடுத்துப் பார்க்கும்போதோ, அந்தச் செலவுக்குப் பிறகு , மிச்சமிருக்கும் தொகை சரியாக இருக்கும்போதோ கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதேபோல் அந்த விழா வீட்டினர் , நம்மிடம் கொடுத்த தொகைக்கு சரியான இரசீதுகளுடன் கணக்குக் கொடுத்துவிட்டு, நிமிர்ந்து நடக்கும் பெருமை அதைவிட அலாதி!
பொதுவாக இப்போது நம்மில் எத்தனை பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னால், எல்லா வீடுகளிலும் ஒரு கணக்கு நோட்டு இருந்திருக்கும்.
இந்த நினைவுகள் அனைத்தையும் தூண்டி , நெகிழவும் மகிழவும் வைத்த எஸ்.ராவுக்கு அழைத்துப் பேசியபின்னரும் மீதமிருக்கிறது உணர்வின் மிச்சம்!
நன்றி எஸ்.ரா , இப்படிப்பட்ட உணர்வுகளைப் பதிவு செய்தமைக்கு! நீங்கள் எங்கள் பொக்கிஷம்!

Wednesday, November 16, 2011

ஓமப்பொடி # 3



சென்ற மாதம் திரையுலகப் பிரபலங்களை , கிரண்பேடியுடன் சந்திக்கவைத்து , யதார்த்தமான நிகழ்ச்சி ஒன்று இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது.. அதன்படி, சுவாரஸ்யமான, விளையாட்டான, அழுத்தமான சில கேள்விகள் அவரிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கேட்கப்பட்டன. அவை அனைத்தையும் தொகுத்து, அன்புடன் கிரண்பேடி என்று பெயரிட்டு, ‘விஜய் டிவி’யில் இரு பாகங்களாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்தோம். அதன்படி முதல் பாகம் சென்ற ஞாயிறு (13.11.2011) அன்று ஒளிபரப்பானது. அடுத்த பாகம் வரும் ஞாயிறு (20.11.2011) அன்று காலை 9:30க்கு வருகிறது. கிரண்பேடியைப்பற்றிய வித்தியாசமான தகவல்கள் ,அவர் மூலமாகவே, கேட்கும் வாய்ப்பிருக்கிறது. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்
அதன் முன்னோட்டம்….இதோ!

 இந்நிகழ்ச்சியின் தலைப்புக் கணிணி வரைகலையை (TITLE GRAPHICS)  நமது பதிவர் சுகுமார் சுவாமிநாதன் செய்திருக்கிறார். அவருக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.!
                           ***

 சவால் சிறுகதைப்போட்டி -2011 முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். போட்டி நடுவர்களால், என் கதைக்குக் கொடுக்கப்பட்ட விமர்சனம் கீழே!

16    கண்ணனும் கண்ணனும்    -சுரேகா   
வித்தியாசமான கதைக்களன்கதையையும் கதை போட்டியையும் இணைத்து பின்னியிருக்கிறார்ஆனால் 'கண்ணனும் கண்ணனும்' என்று ஏன் தேர்ந்தெடுத்து சென்னைக் கண்ணன், திருப்பூர் கண்ணன் என்றெல்லாம் சுற்ற வேண்டும் எனப் புரியவில்லை. கதைப் போட்டியை நன்றாகவே கிண்டல் அடித்திருந்தார். பரிசலும் ஆதியும் கவனிக்க வேண்டும்நல்ல முயற்சிஆனால் முழுமையடையவில்லை.


மிக அழகாக, நேர்மையாக விமர்சித்திருக்கும் நடுவர் குழுவுக்கு உளமார்ந்த நன்றிகள்!,

போட்டியை நடத்திய பரிசல்காரனின் உண்மையான பெயர் கிருஷ்ணகுமார்!, ஆதியின் பெயர் ஆதிமூலகிருஷ்ணன். இருவர் பெயரிலும் கிருஷ்ணன் இருப்பது ஒரு எதேச்சையான , ஆனால், அழகான ஒற்றுமை! அதைத்தான் ’கண்ணன்’ என்று எடுத்துக்கொண்டேன். அதேபோல், ஒரு கதையில், ஒரே பெயரில் கதாபாத்திரங்கள் இருப்பதும் வித்யாசமாக இருக்கட்டும் என்று நினைத்தேன்.  துப்பறிவதாகத்தான் கதை இருக்கவேண்டுமா என்று எண்ணியதின் விளைவு….. இப்படி வந்து நின்றது.!
’ஓட்டப்பந்தயத்தை வேடிக்கை பார்ப்பதை விட ஓடித் தோற்பது எவ்வளவோ மேல்’ என்ற நினைப்பில் கலந்துகொண்டதால்…...(சரி..சரி.. மீசையில் மண் ஒட்டலை..விடு! )
வெற்றிகரமாக போட்டியை நடத்திய நண்பர்கள் ஆதி மற்றும் பரிசலுக்கு வளமான வாழ்த்துக்கள்!!   
                         
                          ***

’அன்னா கரீனா’, -    டால்ஸ்டாய் - தமிழில் – தர்மராஜன். (Dharmarajan)

தமிழ் இலக்கிய வரலாறு, - டாக்டர் பூவண்ணன்

உயிர்த்தெழு! -             டாக்டர் தமிழ்நாகை

அகிலத்திற்கோர் அருட்கொடை (முகம்மது நபி) – டாக்டர் இனாயத்துல்லாஹ் சுப்ஹானி

The Descent of Man, and Selection in Relation to Sex.  – டார்வின்


இவையெல்லாம் நான் கடந்த இரண்டு மாதங்களில் படித்த புத்தகங்கள்… பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், அனைத்து புத்தகங்களின் ஆசிரியர் பெயர்களும் தமிழில் ‘டா’ என்ற எழுத்தில் துவங்குகின்றன. இதை என்னவென்பது?  ஆங்கிலத்தில் ‘D’ என்று துவங்குவதாகவும் கொள்ளலாம். முதல் புத்தகத்தை எழுதியது தர்மராஜன் எனக்கொண்டால்…!

இவற்றில், அன்னா கரீனா – காட்சிகளும், சம்பவங்களும் புனைவுடன் பிணைத்து எழுதப்பட்ட பிரபலமான கதை!

தமிழ் இலக்கிய வரலாறு – ஒரு அதிவேக ராக்கெட்டில் , தமிழ் இலக்கியங்களைச் சுற்றிய அனுபவம்.!

உயிர்த்தெழு ! – இலங்கை இனவெறியையும், போராட்ட நிலைகளையும் புகைப்படங்களுடன், வரலாறாக முன்வைக்கும் ஆவணம்.

அகிலத்திற்கோர் அருட்கொடை – முகம்மது நபி அவர்களைப் புரிந்துகொள்ள, இயல்பான நடையில் எழுதப்பட்ட சிறந்த நூல்.!

டார்வினின் புத்தகம் , மனித இன வளர்ச்சிநிலைகள், பாலினக் கவர் சாகசங்கள், அது தொடர்பான மனநிலைகள் பற்றிய அவரது 2வது நூல்..! பின்னியிருக்கிறார் மனிதர்!
                     ***

கடந்த ஆறு மாதங்களாக, என் எண்ணுக்கு வெவ்வேறு ஊர்களிலிருந்து அழைப்புகள் வருகின்றன.
‘சாமி நிகழ்ச்சி பாத்தேன்!. சாமி அப்பாயிண்ட்மெண்ட் வேணும்!’
‘இல்லீங்க அது நான் இல்லை!’
இது பொதுவான உரையாடல்… என்ன குழப்பமென்றால், ஒரு சாமியார், தனது தொலைக்காட்சி விளம்பர நிகழ்ச்சியில் தொடர்புகொள்ளச் சொல்லும் எண்ணாக , என் எண் வந்துகொண்டிருக்கிறது.

இது தொடரத்தொடர, ஒரு அழைப்பின்போது நான்..

‘சாமிக்கிட்ட எதுக்கு உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வேணும்?

’நல்லா ஜாதகம் பாப்பாரு! அதான்! – எதிர்முனை.

ஓஹோ..அவரை நேர்ல பாத்து, முதல்ல தன் செல்போன் நம்பரை ஒழுங்கா பாக்கச்சொல்லுங்க! அப்புறம் ஜாதகம் பாக்கலாம்..!!

-    கட் -

”காசு செலவழித்து, அடுத்தவர் எண்ணைப் போடும் இவர்களையெல்லாம் சீக்கிரம் கூட்டிக்கொண்டுபோய் பக்கத்துல வச்சுக்க கறம்பக்குடி பெரிய கருப்பு சாமியோவ்!!”

                    ***

Sunday, November 6, 2011

யுடான்ஸ் நன்றி




வாய்ப்பு நல்கி
வாசிக்க உள்ளங்களும் நல்கி
காய்ப்பு இல்லாத மரமாய் இருந்ததை
கல்லால் அடிக்காமல்
கனிவாய்க் கொஞ்சம் காய்க்க வைத்து,
இரண்டு மாதப் பதிவுகளை
ஏழு நாளில் போட வைத்து,
எழுதும் ஆர்வம் தூண்டிவிட்டு
எத்தனையோ பதிவருக்கு
எளியோனை அறிமுகப்படுத்தி,
என்னைக்கொஞ்சம் ஆடவைத்த
யுடான்ஸுக்கு என்
உடான்ஸ் இல்லாத நன்றி!


Tuesday, December 28, 2010

நீங்கதான் சாவி - புத்தகவெளியீட்டு விழா புகைப்படங்கள்!

 புத்தகத்தை திரு.சீமான வெளியிட, திரு.மனோஜ் கிருஷ்ணா பெற்றுக்கொள்கிறார்.

அனைவரும் கையில் புத்தகங்களுடன்...

 புத்தகத்தில், தான் படித்தவற்றைப்பற்றி, தெளிவாகவும், அழகாகவும் திரு.சீமான் பேசினார்.

 வந்திருந்த அன்பு நண்பர்களும், பதிவர்களும்.... ( சீமான வருவதற்கு முன்)

கூட்டத்தில் ஒரு பகுதி... (சீமான் வந்து சென்ற பின்)


புத்தகவெளியீட்டுவிழாவுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள்! மின்னஞ்சல் மூலம் வாழ்த்துத்தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

Thursday, May 6, 2010

இன்றே சொல்லவேண்டிய நன்றி!










திருமணம் மீது எனக்கிருந்த பயத்தைவிட, அதற்குப்பின் தேவைப்படும் பொறுப்புணர்ச்சியின் மீதுதான் அதிக ஐயம் இருந்தது.சரியான நேரத்துக்கு வீட்டுக்குத்திரும்பமுடியுமா? சொல்லும் பொருட்களை வாங்கிவர முடியுமா? ஓவராகப் பேசினால் சமாளிக்கமுடியுமா? இவற்றை மீறி, நம்மால் ஒரு பெண்ணுக்கு எந்த ஒரு கெடுதலும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

அவர்கள் வீட்டிலிருந்து தாயும், தந்தையும் ஒரு பரபரப்பான மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்து என் பெற்றோரைச்சந்தித்தார்கள். நாங்கள் ஒரு நாள் அவர்கள் வீட்டுக்குச்சென்றோம். போனால் ' சரி ' என்றுதான் சொல்லுவேன் என்ற நிபந்தனையுடன் போனேன். ஒரு பெண்ணைப் பார்த்து உன்னை எனக்கு ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்கவில்லை என்று கூறுவதில் எனக்கு எப்போதும்
விருப்பமிருந்ததில்லை. நிராகரிப்பின் வலியை நானும் உணர்ந்திருந்ததால்...!


திருமணமும் நடந்தது.

அவள் வீட்டுக்குள் வந்ததிலிருந்து எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் என் வாழ்வில் ஏற்படுத்திவிடாமல் சகஜமான வாழ்க்கையை அப்படியே வாழவைத்தாள். என் பெற்றோரிடம் தகுந்த மரியாதையுடனும், அன்புடனும் வித்தியாசமின்றியும் பழகினாள். அவர்களும் அப்படியே! நான் சொல்வதை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக கவனித்தாள். தன் விருப்பு வெறுப்புகளை தெளிவாக என்னிடம் கூறினாள். ஆனால் அதை வலியுறுத்தாமல், அவளுக்கு சில வலிகள் இருந்தபோதும் அதனுடனேயே சிரித்துக்கொண்டே பழகினாள்.

என்னை, என்னைவிட அதிகம் கவனித்துக்கொண்டாள்.

எனக்கான வேலைகளை சிரமேற்கொண்டாள்

எங்கள் வாரிசுகளை கண்ணும் கருத்துமாக வளர்க்க ஆரம்பித்தாள்.

தாய்வீட்டில் காலை எட்டுமணிக்குக்குறையாமல் தூங்குபவள், அதிகாலை எழுந்து பம்பரமாகச் சுழன்றாள்.

வெளியில் நான் எப்படி ஒழுங்கைக் கடைப்பிடித்தாலும், வீட்டில் என் ஒழுங்கின்மையைச் சகித்துக்கொண்டு சரிசெய்தாள்.

வீட்டுக்குள் நுழையும்போது உள்ளத்தில் பூப்பூக்குமாறு எப்போதும் பார்த்துக்கொண்டாள்.

தவறுகள் செய்துவிட்டு, அழகாக மன்னிப்புக்கேட்டு மறக்கச்செய்தாள்.

எல்லாவற்றையும் மீறி, நான் என்ன சம்பாதித்தாலும், அதைப்பற்றி கவலையே படாமல், என்னிடம் இன்றுவரை இதை வாங்கு அதை வாங்கு என்று என் உயிரை வாங்காமல் கொடுத்ததை வைத்து குறைவின்றி குடும்பம் நடத்துகிறாள். என் லட்சியத்திலும் கூட நிற்கிறாள்.

நான் தொழில் மீதான அக்கறையைக்குறைத்துக்கொண்டு, திரைத்துறைக்குப் போகிறேன் எனும்போது ' உங்களுக்கு எது சரின்னு படுதோ செய்யுங்க' என்று எனக்கான பாதையில் ரத்தினக்கம்பளமாய் விரிகிறாள்.

அவளுக்கென்று நான் என்ன செய்திருந்தாலும், அவளுக்காக ஒதுக்காத நேரத்துக்கு வருந்துகிறேன். என்றாவது எனக்கும் அவளுக்கும் மட்டுமே ஒதுக்க கொஞ்சம் நேரம் தா! என்று காலத்திடம் கடன் கேட்டு நிற்கிறேன்.


இதோ.. திருமணமாகி, நாளையுடன்...ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன.

ஹேமா.... எனக்கு மனைவியாக வந்த தோழியே! உன்னோடு வாழும் இந்த வாழ்வுக்கு நன்றி!!





Wednesday, March 17, 2010

'ஆனந்தி'யில் எதிரி!

ஐரோப்பிய தமிழ் மாத இதழான ஆனந்தியில் என் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது.




படத்தை க்ளிக்கி பெரிதாகப்பார்க்கலாம்.



நான் எழுதி அனுப்பிய கட்டுரை:

எதிரி மேலாண்மை

நம் எல்லோருக்கும் அதிகபட்சமா தூக்கத்தைக் கெடுப்பது, சந்தோஷமான விஷயங்களை விட வருத்தமான விஷயங்கள் தான்! அதுவும் நமக்குப்பிடிக்காத ஒருத்தர் செஞ்ச செய்கையை நினைச்சே பல நாள் தூக்கம் தொலைச்சிருப்போம். அவுங்கதான் வாழ்க்கையிலேயே முதல் எதிரின்னு நினைப்போம்.ஒரு விழாவுக்குப்போனால் நாம் அதிகம் நினைச்சுக்கிட்டு போவது நமக்குப்பிடிக்காத அந்த எதிரியும் அங்க வந்திருப்பாங்களோன்னுதான்.! ஒரு நாளின் அதிக நேரத்தை அவுங்களைப்பத்தின நினைப்புதான் எடுத்துக்கும்!

ஆனா உண்மையா எதிரிங்கிறது யார்? உங்களிடம் பழகி, உங்களுக்கு தெரிஞ்சவராகவோ, நண்பராகவோ இருந்தவர்தான். திடீர்ன்னு ஒரே ஒரு சம்பவத்தால் அவரை எதிரியா பாவிக்க ஆரம்பிச்சுடுறோம். ஒரு மனிதனின் வாழ்வில் வளர்ச்சியைத்தடுப்பவர்கள் மட்டுமே எதிரியாகப் பார்க்கப்படணும். இதைத்தவிர கோபத்தில் திட்டினவுங்க, அவசரத்துக்கு பணம் தராதவங்க, கொடுத்த பணத்தைத் திருப்பித்தராதவங்க, உங்க சொந்தங்களுக்கிடையே சண்டை மூட்டினவங்க, புறம் சொன்னவர்கள், அலுவலகத்தில் மேலதிகாரிகிட்ட நீங்க செஞ்ச தப்பை போட்டுக்குடுத்தவர்கள் இப்படி வகை தொகையில்லாம எல்லாரையும் எதிரியா நினைச்சு, இவுங்களை என்ன செய்யலாங்கிற நினைப்பில் வாழ்வைத்தொலைச்சுட்டு நின்னுரக்கூடாது.

உங்களுக்கு எதிரியாகுறதுக்கு , யாரா இருந்தாலும் அவுங்களுக்கு ஒரு தகுதி வேணும்னு முதலில் நினைங்க ! இவுங்க நமக்கு எதிரின்னு முடிவெடுக்குறதுக்கு முன்னாடி சில விஷயங்களை சரி பாருங்க! அவர் நம் வளர்ச்சியையோ , வாழ்க்கையையோ கெடுக்க இந்தக்காரியம் பண்ணியிருக்காரா? அவர் மனசுல நம்மளை எதிரியா நினைச்சுக்கிட்டிருக்காரா? அவருக்கு நாம ஏதாவது மனசு நோகும்படியோ, அவர் வளர்ச்சியை பாதிக்கும்படியோ ஏதாவது செஞ்சிருக்கோமான்னு யோசியுங்க! அப்படி ஏதாவது லேசா சந்தேகம் வந்தாலும் நேரா அவரிடமே பேசுங்க! ஒரு நண்பரை— நண்பராகவே தக்கவைக்க முயற்சி பண்ணுங்க!

இப்படித்தான் மொக்கச்சாமிக்கும் அவர் எதிர் வீட்டுக்காரருக்கும் எப்பவுமே தகராறு நடக்கும். ரெண்டு பேரும் ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் அடிச்சுக்குவாங்க.! ஒரு நாள் மொக்கச்சாமி , ஊர்க்காரங்களைக்கூப்பிட்டு நம்ம வீட்டில் விருந்து எல்லாரும் வந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும்னார். என்ன விசேஷம்னு கேட்டதுக்கு எதிர் வீட்டுக்காரனுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்குன்னார். யாராலயும் நம்ப முடியலை. எதிரிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்குன்னதும் ஊருக்கே விருந்து குடுக்குறாரே ! நண்பர்களாயிட்டாங்களோன்னு ஊரெல்லாம் பேச்சு! அடேயப்பா! மொக்கச்சாமி! எதிரியா இருந்தாலும் அவன் சந்தோஷத்துல பங்கெடுத்துக்கணும்னு நினைச்சே பாத்தியா! நீதான்யா மனுஷன்னு எல்லாரும் பாராட்டும்போது...மொக்கச்சாமி சொன்னாரு! அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை! எதிர்வீட்டுக்காரனுக்கு லாட்டரி விழுந்தது வாஸ்தவம்தான்.. ஆனால் அந்தப்பணத்தை வாங்குறதுக்கு டிக்கட் வேணுமில்ல! அதைக்காணும்னு ரெண்டு நாளா திண்டாடிக்கிட்டிருக்கான். அந்த சந்தோஷத்தைக்கொண்டாடத்தான் இந்த விருந்துன்னாரு! இப்படி இருந்தா யாருதான் எதிரியாக மாட்டாங்க!

வேலை இடத்தில் நம்மை விட நல்லா வேலைபாத்து முன்னேறணும்னு நினைக்கிறவுங்க, தொழிலில் நம்மைவிட வேகமா செயல்பட்டு ஜெயிக்கிறவுங்க இவுங்களையெல்லாம் மறந்து போய்க்கூட எதிரி லிஸ்டில் சேத்துடக்கூடாது. அவுங்களெல்லாம் போட்டியாளர்கள் ! போட்டியாளர்கள் என்னிக்குமே நம்மை விட நல்லா முன்னேறணும்னு நினைப்பாங்களே ஒழிய நம்மை கீழே தள்ளணும்னு நினைக்கமாட்டாங்க! அப்படி நம்மை கீழே தள்ளும் அந்த விநாடியிலிருந்து அவுங்க போட்டியாளர்ங்கிற நல்ல தகுதியை இழந்து நமக்கு எதிரியா ஆகிடுவாங்க!

மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்த் தனக்கு ஒரு டெண்டர் கிடைக்குறதுக்காக சத்யராஜ் அலுவலகத்தில் கோல்மால் செஞ்சு அவரைவிட ஒருரூபாய் அதிகமா போட்டு அந்த டெண்டரை வாங்கிடுவாரு! சத்யராஜ் , ரஜினியை போட்டியாளாரா நி்னைச்சுக்கிட்டிருக்கும்போது, ரஜினியோ சத்யராஜை எதிரியா முடிவெடுத்து அவரை முடக்க நினைச்சு அதுக்கான வேலைகளில் இறங்கிக்கிட்டிருப்பாரு! ஆனா சத்யராஜ் அவரை போட்டியாளராவே நினைச்சு ஏமாந்துபோவாரு!

நாமும் யாருக்கும் போட்டியாளரா இருக்குறது ரொம்ப ஆரோக்கியமான விஷயம். ! நம் வாழ்க்கைக்கு எது நல்லதோ அதை எடுத்துக்கிட்டு நடை போடலாம். ஆனா அதில் ஒரு சின்ன நடவடிக்கை கூட அடுத்தவுங்களை பாதிக்கிறதா இருக்கக்கூடாது. எதிரி விஷயத்தில் இது ரொம்ப முக்கியம். நீங்க அழுவதைப்பாத்து யாருமே சிரிச்சுடக்கூடாது. உங்க சிரிப்பால் ஒருத்தர் கூட அழுதுடக்கூடாது. எதிரி இந்தப்புள்ளியில்தான் உருவாகிறார்கள்!

எதிரிங்கிறவங்க நம் வளர்ச்சியைத்தடுக்கிறவங்களா இருந்தா பதிலுக்கு அவுங்க வளர்ச்சியைத்தடுக்க முயலும்போதுதான் நாம் அவுங்களுக்கு எதிரியாகுறோம். அதுக்குப்பதிலா.. அவுங்க முயற்சிகளைப்புறந்தள்ளிட்டு நம்ம சக்தி முழுவதையும் நம் வளர்ச்சிக்கு செலவழிச்சோம்னா நம்மைவிட புத்திசாலி யாரும் இருக்க முடியாது.

எதிரிக்கும் பரிசளிக்கணும்னா மன்னிச்சுப்பழகுங்க! எதிரியை தண்டிக்கணும்னா வாழ்ந்துகாட்டுங்க..! வாழ்ந்துகாட்டுதலைவிட மிகச்சிறந்த பழிவாங்குதல் வேற எதுவுமே இல்லை! போட்டியாளர்களை இனங்கண்டு எதிரிகளைப்புறந்தள்ளி வாழ்வில் வெற்றிபெற உளமார்ந்த வாழ்த்துக்கள்.

சிறு மாறுதல்களுடன் வெளிவந்திருக்கிறது.

ஆனந்தி குழுமத்திற்கும், அன்பு நண்பர்களுக்கும் நன்றிகள்!



Monday, February 15, 2010

ஓடுமீன் ஓட...

ஒரு நல்ல களம்....
முழுமையாக ஏழு நாட்கள்.
நீங்கள் எது எழுதினாலும் முகப்பில் வரும்.
கொஞ்சம் அதிகமாக பதிவர்களின் கவனம் பெறும்.
உங்கள் எழுத்தின் பிம்பம் பெரிதாகவோ சிறிதாகவோ ஆகும்.
இப்படி படிப்படியான காரணங்களுடன் தமிழ்மண நட்சத்திர வாய்ப்பு!

நண்பர்களும், நலம்விரும்பிகளும், இமாலய திறமைசாலிகளும், பரந்துபட்ட வாசிப்பு தாகம் மிக்கவர்களும் நிறைந்த சபையில் ஒரு ஓரமாகக் கைகட்டி நிற்கும் எனக்கு திடீரென்று மேடையில் தோன்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஏற்படும் உதறலுடன் தான் இதை அணுகுகிறேன்.

சில விஷயங்களை எழுதவேண்டும் என நினைப்பேன்.
இல்லை..இதை தமிழ்மண நட்சத்திர வாரத்தில் எழுதிக்கொள்ளலாம் என சேர்த்துவைப்பேன்.
( ஒரு அசட்டு நம்பிக்கைதான்....என்னையும் நட்சத்திரமாக்கிடுவாங்கன்னு! ) :-)

எழுதத்தூண்டிய இயற்கைக்கும், சமூகத்துக்கும், நட்புக்கும், தமிழ்மணத்துக்கும் நன்றியுடன்....
உறுமீனுக்காக வாடி நின்றிருந்து... எழுத நினைத்த பதிவுகளை எழுதுகிறேன்.
(ரொம்ப பெரிசா எதிர்பார்க்காதீங்க! சட்டியில இருக்குறதுதான் வரும் :) )

ஒரு முன்னோட்டமாக.. இந்தவாரம் வரப்போகும் பதிவுகள் !

கலியாப்பட்டி !
போட்டுக்கொடுத்த பொடிப்பையன்!
எதிர்(ரி)வினை
கறம்பக்குடி!
மறைக்கிறான் சார்!
சாராள் இல்லம்
இலுப்பூர்!
கைகொடுக்கும் கை
ஞானாலயா
அறந்தாங்கி!
தென்காசி!
புதுக்கோட்டை!



உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்!

Thursday, December 17, 2009

'ஆனந்த' மகிழ்ச்சி!


இன்று ஒரு ஆனந்தம்..!

என் கவிதை ஆனந்தவிகடன் இதழின் 44ம் பக்கத்தில் வந்திருக்கிறது.



இதில் இன்னுமொரு மகிழ்ச்சி என்னவென்றால்.. அன்புநிறை நர்சிம் அண்ணனின் கவிதை உள்ள பக்கத்திலேயே என் கவிதையும் வந்திருப்பதுதான்.

அன்புகாட்டும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இந்தக்கவிதைப்பக்கம் சமர்ப்பணம்.

நன்றி நண்பர்களே !

Wednesday, March 18, 2009

நானா...? அவ்வளவு கூலா?


நம்ம சக பதிவர்...
அன்புச்சகோதரி..
பல்வேறு விஷயங்களில் சர்வசாதாரணமாக
மாற்றுக்கோணம் யோசிக்கும் எங்கள் ஊர் தந்த இனிய
தென்றல்,
தமிழ்மண விருதுகளில் இடம்பிடித்த பதிவுப்புயல்

....புதுகைத்தென்றல்
திடீர்ன்னு என்மேல் இருக்கும் அன்பினாலோ,

இனிமேலாவது கூலா இருக்கணும்கிற எண்ணத்தினாலோ...இந்த பட்டாம்பூச்சி விருதை எனக்கு கொடுத்திருக்காங்க!


மிக்க நன்றிங்க!
இதுக்கு நான் தகுதியான்னு தெரியாது!
இனிமேயாவது ஒழுங்கா எழுதுறேன் !

சொன்னதுக்காக கொஞ்சம் கூல்...
வெயிலுக்கு இதமாக..!


தெரியாம குடுத்துட்டோமோ? - புதுகைத்தென்றல் மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருக்கிறார் !

காலம் கடந்தாலும்... இந்த விருதை நான் கொடுக்க விரும்பும் பதிவர்கள்॥

அவர் என் நண்பர் என்று பதிவுலகமே கொள்ளும் அன்பு எம்.எம்.அப்துல்லா

சினிமாச்செய்திகளை அலட்டிக்கொள்ளாமல் அள்ளித்தரும் முரளிகண்ணன் அண்ணன்!

விருதெல்லாம் இவருக்கு மேட்டரே இல்லையென்றாலும் நம்ப டெம்ப்ளேட் சிங்கம், டெக்னாலஜி தங்கம்...சஞ்சய் ஜி

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...