Thursday, January 19, 2012

சாதனை அரசிகள்






வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்!

அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.

மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது.

முதலில் ரம்யா தேவி! – இவரை நான் ஒருமுறை அப்துல்லா அண்ணனின் அலுவலகத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன். சில நிமிடங்கள் பேசினோம். ஆனால்..இவ்வளவு சிறந்த பெண்மணியை சந்தித்திருக்கிறோம் என்று இதைப்படித்தவுடன்தான் உணர்ந்தேன்.  13 வயதில் வாழ்வைப் புரட்டிப்போட்ட தீ விபத்திலிருந்து மீண்டு இன்று பலரது வாழ்வை நல்முறையில் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறார். இவர் புதுக்கோட்டையில் படித்திருக்கிறார் என்பது எனக்கு தனிப்பெருமை! ரம்யா தேவி அவர்களே! உங்களைப் பாராட்டுவது சிறியது! வணங்குவதே உரியது!

அடுத்து மோகனா சோமசுந்தரம் – ஆலோசனை சொல்லி வந்த ஆங்கிலக் கடிதத்தை , காதல் கடிதம் என்று எண்ணி அல்வாவில் விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்த குடும்பத்திலிருந்து வந்த சுயம்பு! கல்வியின் மேன்மையால் தன்னையும் சமூகத்தையும் உயர்த்திய உத்தமப் பெண்.! புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இரும்புப் பெண்மணி!

மணிமேகலை – புத்தக வெளியீட்டன்று இவரை நேரிலேயே சந்தித்தேன். நீண்ட நாள் பழகியவர் போல் அன்பாகப் பேசிக்கொண்டிருந்தார். உணவருந்த அமர்ந்த சிறுமி, பக்கத்து வீட்டில் தீ பற்றுகிறது என்று தெரிந்தவுடன், யாரும் சொல்லாமல், நீரை எடுத்துச்சென்று ஊற்றி அணைத்திருக்கிறார். இது போதும்! அவரது உதவும் குணம் சொல்ல! அப்படிப்பட்டவர் இன்று ஒரு பெரிய அரசு அதிகாரி..! தலித் பெண்களின் துயர்துடைக்கும் சாதனையாளர்.!

சாருமதி,தமிழரசி, வெங்கடேசன் – சமூக அக்கறையுடன், வெறுப்பின்றிச் செயல்படும் கூட்டுச் சாதனையாளர்கள்.

மாங்குரோவ் காடுகளைப்பற்றி ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்ற, சூழல் அக்கறை உள்ள ஆஸ்வின் ஸ்டான்லி..

 உடலில் நோய்கள் முற்றுகை இட்டாலும், உள்ளத்தில் உறுதியை முற்றுகையிடவைத்து அரசுப்பள்ளியில் அற்புதங்கள் நிகழ்த்தும் ஆசிரியை லூர்துராணி.!

இருளர் இனத்துப் பெண்களின் இருள் நீக்குவதே குறிக்கொளாகக் கொண்ட வசந்தி!

அன்னையின் மரணச் சோகம் கூட ஆட்டத்தை பாதிக்காத வகையில் வெறியுடன் வெற்றிகண்ட கிரிக்கெட் வீராங்கனை திருஷ்காமினி

இதயநோயுடன் போராடினாலும்,  இன்முகத்துடன் செவிலியராய் வலம் வரும் உமா ஹெப்சிபா!

குழந்தை நட்சத்திரமாய் மிளிர்ந்து, நடனப்பள்ளியை நடத்திவரும் லெஷ்மி என்.ராவ்!

உயிர்போக்க வந்த தன் நோய் தீராமல், உறுப்பு தானம் செய்து பிறர் துயர் தீர்த்த அனுராதா!

அ வில் ஆரம்பித்த வாழ்வை ஆட்டோவால் நிமிர்த்தி, சி ஐ டி யு வின் மாநிலக்குழு உறுப்பினராக உயர்ந்திருக்கும் சாந்தி!

ஐந்து வயதில் தாயை இழந்து, நம்பிக்கையை உரமாக்கிக்கொண்டு, பிறர் வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் ஸ்ரீலேகா!

ஒரு கட்டுப்பெட்டிக் குடும்பத்திலிருந்து ,கனவுகளை மட்டுமே கருவாகக் கொண்டு திரைப்பட இயக்குநராக  திரு திரு துறு துறுவென வெற்றிப் படியேறும் நந்தினி ஜே எஸ்! ( புத்தக வெளியீடு அன்று குட்டிப்பாப்பாவுடன் வந்திருந்தார். மிகவும் எளிமையாகப் பழகும் அன்புக்குரியவர்)

படித்தது கணிப்பொறியாக இருந்தாலும், கவிதைப்பொறியால் கலக்கி, திரைப்படப் பாடலாசிரியராக, கட்டுரையாளராக, தமிழ்ப்பேச்சாளராக வலம்வரும் 25 வயது தோழி பத்மாவதி!

சோதனைகளைக் கடந்து ஆயத்த சீருடை அதிபராய் வளர்ந்து நிற்கும் மகேஸ்வரி!

வாலிபத்திலேயே வால் ஸ்ட்ரீட்டை புரிந்துகொள்ளாதவர்கள் மத்தியில் , வயோதிகத்தில் பங்கு வர்த்தகம் செய்யும் உதாராண ஆச்சி முத்து சபா ரத்தினம்   என சாதனையாளர்களின் சரித்திரங்களால் நிரம்பிக்கிடக்கிறது 80 பக்கங்கள்!

மனம் சோர்வாய் இருக்கும்போது , இதில் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தால், ஒரு சாதனையாளரின் வாழ்க்கை விரியும். அவர் சந்தித்த துன்பங்களும் அதன் மீட்சியும், எழுச்சியும் நம்மைத் தட்டியெழுப்பி, ‘நமக்கு வந்திருப்பதெல்லாம்  ஒரு கஷ்டமா? என்று தெளிவடைய வைத்து அடுத்த செயலை நோக்கிச் செல்ல வைப்பதுதான் இந்தப்புத்தகத்தின் ஒரே சிறப்பு, !

என் தோழி ஒருவருக்கு வாழ்வில் மிகப்பெரிய பிரச்னை ! என்னிடம் சொல்லி அழுதார்! எதேச்சையாக ஊருக்குக் கொண்டு சென்றிருந்த இந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுத்து படிக்கச்சொன்னேன்.. முடித்துவிட்டு அவர் சொன்னது இதுதான்..! எனக்கு வந்திருக்கிறதெல்லாம் ஒரு பிரச்னையா? பி.எச்.டி வேலை அப்படியே கெடக்கு அதைப் பாக்குறேன்..! என்று தெளிவாகிவிட்டார்.

இதுதான்..இந்த நூலின் வெற்றி!

உண்மையிலேயே செய்வதைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்ற முனைப்புடன் தன் எழுத்துலகப் பணியில் வெற்றி நடை போட்டுவரும் -இந்த நூலில் சொல்லப்படாத,- சாதனை அரசியான தேனம்மை லட்சுமணன் அவர்களே! சாதனைப் பெண்களை எங்களுக்கு வெளிக்காட்டியதற்கு நன்றி!

சாதனை அரசிகள் – தேனம்மை லட்சுமணன் – முத்துசபா பதிப்பகம் – ரூ.50.00

கிடைக்குமிடம்:  : நம்ம டிஸ்கவரிதான்

Wednesday, January 18, 2012

புத்தகக் காட்சி – நேற்று அப்படம் கடைசி






     நேற்று (ஜனவரி 17) மதியம் சென்னை வந்து சேர்ந்ததால், புத்தகக் காட்சியின் கடைசி நாளை தரிசிக்கலாம் என்று முடிவெடுத்து, மாலை சென்று, பச்சையப்பன் கல்லூரி வாசலில் இருந்த பழைய புத்தகக் கடைகளை நோண்ட ஆரம்பித்தேன். முன்னரே நிறையபேர் நோண்டியிருப்பார்கள் போலிருக்கிறது. பெரிதாக ஒன்றும் சிக்கவில்லை. இருந்தாலும், முயற்சியைக் கைவிடாமல் தேடியதில்,
குஷ்வந்த்சிங் ஜோக்ஸ் – Rs.10
One Night @ call Center – Rs.20
பொதுக் கட்டுரைகள் – Rs.10
Tamil Nadu – A photographical Journey (Raghubir Singh) – Rs.150
அப்பாலுக்கு அப்பால் (நாவல்) – Rs.10
ஆகியவற்றை அள்ளிக்கொண்டு பு.காட்சிக்குள் நுழைந்தேன்.

நிறைவு நாள் என்ற பிரக்ஞையுடன் கூட்டம் அதிகமாக வந்திருந்தது. தமிழினியில் சிறிது நேரம் மேய்ந்துவிட்டு, ஞானபானு சென்றேன். அங்கு ஞானி அமர்ந்திருந்தார். அரைநிமிடப் பேச்சுக்குப்பின் அங்கிருந்த கூடங்குளம் பற்றிய புத்தகத்தை வாங்கிக்கொண்டு, பாதை பதிப்பகத்தின், ரணம் சுகம், நியான் நகரம் ஆகிய ஒலி நாவல்களைப் பார்த்து, கேட்டுவிட்டு அப்படியே நமது பதிவர் பஸ் ஸ்டாண்டான டிஸ்கவரி புக் பேலஸ் - 334ஐ அடைந்தேன்.

     கேபிள் ,கே.ஆர்.பி, ஷங்கர் ,அவரது நண்பர் ஆகியோருடன் அரட்டை ஆரம்பித்தது. பின்னர் ஷங்கர் & கோ விடைபெற, பேசிக்கொண்டே சில காட்சியரங்குகளுக்கு (ஸ்டால் என்பதன் நல்ல தமிழ்ப்பதம் இதுதானாம்) சென்றோம்.

     பாஸ்கர் சக்தி கடந்து சென்றார். தேனம்மை லட்சுமணன் அவர்கள் வந்திருந்தார். சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர், புத்தக விற்பனை  மற்றும் அதனைச் சந்தைப்படுத்துதல் பற்றி கேபிள் விளக்கம் தந்தார். எட்டரை மணிக்கெல்லாம் சந்தை களையிழக்க ஆரம்பித்தது. ஒரு ஆள் அவசர அவசரமாக எல்லா அரங்குகளையும் அலசிக்கொண்டிருந்தார். அம்மாவுடன் வந்திருந்த ஒரு பெண், கடைசி நிமிடத்தில் புத்தகங்களை அள்ளிக்கொண்டிருந்தாள். ஒரு பாட்டி தமிழ்ப்புத்தகம் பற்றி ஆங்கிலத்தில் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்படியே நாங்களும் ஒரு டீயைக் குடித்துவிட்டு வெளியேற எத்தனித்தோம். சென்ற வாரம் படப்பிடிப்புத் தளத்தில் தொலைந்து போன எனது ‘யூதர்கள்’ புத்தகத்தை மீண்டும் வாங்க கிழக்கு சென்றோம். அப்படியே இந்த ஆண்டு புத்தகக் காட்சியை இனிதே நிறைவு செய்து அரங்கிலிருந்து வெளியேறினோம்.

     அரங்குக்கு வெளியில், லக்கி, அதிஷா, மாமல்லன், காமிக்ஸ் விஷ்வா என ஜமாவில் ஐக்கியமாகி, பேசிக்கொண்டிருந்தோம். காமிக்ஸ் வேட்கை அதிகரித்திருப்பதாக விஷ்வா சொன்னார். கண்காட்சியின் இடையில் அச்சிடப்பட்ட அனைத்து காமிக்ஸுகளும் விற்றுவிட்டதாகச் சொன்னார். நான் எனக்கான லயன் காமிக்ஸ் COME BACK ஐ அவரிடம் கேட்டிருக்கிறேன். சிலபல சிரிப்பு வெடிகளுடன் சங்கத்தைக் கலைத்து கிளம்பினோம்.

சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள்

புத்தகக் காட்சியில் சுமார் 6.5 லட்சம் புத்தகங்கள் விற்றிருக்கின்றன.

4 லட்சம் பார்வையாளர்கள் வந்து சென்றிருக்கிறார்கள்.

முதல்முறையாக, ஒரு முன்னாள் குடியரசுத்தலைவர் வந்துசென்றிருக்கிறார்.

வெளியூரிலிருந்து குறைந்தபட்சம் 1 லட்சம் வாசகர்கள் வந்து சென்றிருக்கிறார்கள்.

சிறுவர் புத்தகங்கள் அதிகம் விற்றிருக்கின்றன.

எப்போதும்போல், சுயமுன்னேற்றம், சுஜாதா சூடான விற்பனை

கவிதைப் புத்தகங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. நா. முத்துக்குமாரின் கவிதைகள் மட்டும் விதிவிலக்கு.!அவரது புத்தகங்கள் சென்ற ஆண்டைவிட அதிகம் விற்றிருக்கிறது.

புதிதாக 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அரங்கிலேயே வெளியிடப்பட்டிருக்கின்றன.


காமிக்ஸ் உலகம் விரிவடைந்திருக்கிறது. முதல்முறையாக அரங்கு வைக்கப்பட்டாலும், காமிக்ஸ் புத்தகங்கள் அனைத்தும் விற்று கல்லாப்பெட்டியை மட்டும் திரும்பக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இப்படியாக புத்தகக் காட்சி 2012 குதூகலமாக நிறைவடைந்திருக்கிறது.
     
         இரவு உணவை வெளியில் சாப்பிட்டுவிடலாம் என்று கே ஆர் பி உசுப்பேத்த, நானும் பொறுப்பாக தங்கமணியிடம் போன்செய்து , ‘நான் சாப்பிட வரலை! என்று சொல்லிவிட்டு உணவகம் நோக்கிக் கிளம்பினோம். பொங்கல் சார்ந்த விடுமுறை என்பதால் அந்த நெடுஞ்சாலையில் ஒரு உணவகம் கூட திறக்கவில்லை. ஆற்காடு மெஸ் அழுத்தமாகப் பூட்டியிருந்தது. மீண்டும் அவரவர் வீட்டுக்கே சென்று சாப்பிடுவது என்று சங்கம் தீர்மானித்தது. ’இது என்னடா சோதனை?’ என்ற ரீதியில் மேலதிகாரியிடம் பாட்டுவாங்கும் பவ்யத்தோடு , தங்கமணிக்கு மீண்டும் போன் அடித்தேன்.

     ’தூங்கிட்டியாம்மா..! இல்லை! வெளில சாப்பிடலை! வீட்டுக்கே வந்துடுறேன்..!

     ’ஏன்…கடையெல்லாம் மூடியிருக்கா?

     ஹி..ஹி.. ஆமா!

     அதான் தெரியுமே! சவுடாலா வெளில சாப்புடுறேன்னு சொல்லும்போதே நினைச்சேன்.! சரி தானா வரும்னு விட்டுட்டேன்..!

     இப்ப என்னம்மா பண்றது!

     என்ன பண்றது..? வாங்க! உங்க லச்சணம் தெரிஞ்சு ஏற்கனவே தோசை செஞ்சு வச்சிருக்கேன்.

     ரொம்ப தேங்க்ஸ்ம்மா!

     ம்க்கும்!

இவ்ளோ புத்தகம் படிக்கிறோம்.. இந்த ஒரு ம்க்கும்க்கு அர்த்தம் தெரியலையே?






Thursday, January 12, 2012

தெர்மக்கோல் தேவதைகள் - இதுக்கு ஒரு....




  ’தலைவரே! நான் BLOGல் எழுதின சிறுகதைகள் ’உ’ பதிப்பகம் மூலம் தொகுப்பா வருது! அந்த ராஜி, ஜெயா அதெல்லாம்… கதைகளின் தலைப்பையே புத்தகத்தலைப்பா வைக்காம, புதுசா ஒரு தலைப்பு வைக்கணும்..!! ஒரு டைட்டில் பிடிங்க! ‘
இதுதான் அன்பு நண்பர் கேபிள் சங்கர் என்னிடம் போனில் சொன்னது..!

சில தலைப்புகளைச் சொல்ல ஆரம்பித்தேன்..!

அவர் போக்குவரத்தில் இருக்கும்போது, வண்டியை நிறுத்திவிட்டு கேட்க ஆரம்பித்தார்.

மெழுகுப் பாறைகள்
ம்ஹூம்..
தாழம்பூத் தாரகைகள்
ம்ஹூம்..
பாதரசப் பறவைகள்
ம்ஹூம்
மகரந்தச் சாட்டைகள்
ம்ஹூம்..
தீக்குச்சி தேவதைகள்
ம்ஹூம்..
தெர்மகோல் தீபங்கள்!

ம்…இதுல ஏதோ இருக்கே..! இதுக்கு முன்னாடி என்ன சொன்னீங்க?
தீக்குச்சி தேவதைகள்!

கரெக்ட்…அப்ப அதுல இருக்குற தேவதைகளைத் தூக்கி…இதுல போடுங்க…!

எதுல தெர்மக்கோலிலயா?

ஆமா..

தெர்மக்கோல் தேவதைகள்!

இதான்..இதான் ஜி..! என் அடுத்த புக்கோட டைட்டில்!
என்று சடுதியில் முடிவெடுத்துவிட்டார்..!!

அப்படி உருவான தெர்மக்கோல் தேவதைகள் , சுகுமார் சுவாமிநாதனின் அற்புதமான வடிவமைப்பில் புத்தகமாக என் கையில் தவழ்ந்தபோது மிக மிக அழகாக ஆகியிருந்தார்கள்.

சரி..
உள்ளே என்ன எழுதியிருக்கிறார்..? அதில் சில கதைகளை பதிவில் படித்தாகிவிட்டது என்றாலும் மீதமிருக்கும் கதைகளைப் படிக்கும் ஆர்வத்தில் ஆரம்பித்தேன்.

முதல் கதை ஜன்னல்! இதை எப்படி வலைப்பூவில் படிக்க விட்டேன் என்று தெரியவில்லை..!
     ஒரு உதவி இயக்குநன், தன் வீட்டிற்கு எதிரில் இருக்கும் ஜன்னல் நிகழ்வுகளை வைத்து அந்தவீட்டுப் பெண்களைப்பற்றி ஒரு விஷயத்தைக் கணிக்கிறான். அது சரியானதா என்று முடிவு சொல்கிறது…! மிகவும் யதார்த்தமாக, கேபிளின் வர்ணனைகளும், சிறு நக்கல்களும் கதையை நகர்த்துகின்றன. முடிவை நான் அப்படி எதிர்பார்க்கவே இல்லை! ஆரம்பமே அமர்க்களம்..!!

     அடுத்து..பொறுப்பு…! நேரடியாகச் சொல்லாமல் சில விஷயங்களை  சம்பவங்கள் மூலம் சொல்லும் யுக்தி மிக அழகாக வந்திருக்கிறது. அந்த மெக்கானிக் பையன் கதாபாத்திரம் மனதில் பதிகிறது.

அடுத்தடுத்த கதைகள்,
     கப்பல் ராக்கையா – பெயர்க்காரணத்தில் என்ன வேண்டுமானாலும். ஒளிந்திருக்கும் .
     சுந்தர் கடை – சொல்லாமல் சொல்லும் நம்பிக்கை
     ரோடு ராஷ் -  விளையாட்டாய் நாம் உணரும் உண்மைகள்
     காளிதாஸ் – கானமும், கடவுளும் விளையாடிய வாழ்க்கை
     நேற்றுவரை – மனவிகாரத்தின் மௌன நீதி
  மீனாட்சி சாமான் நிக்காலோ – ஆண்டுக்கணக்கில் தெரியாத அடிவாங்கிய காரணம் ! (தலைப்பு ஒட்டவில்லை)
     மகாநதி – காட்சியும், கண்ணீரும்
     கருணை – வாகனம் தவறிய வார்த்தைகளின் ஆழம்!
     வன்மம் – அதனினும் மிலமே!
 ஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை – வைத்தவனை விட எடுப்பவனிடமிருந்து தப்பிக்கும் தந்திரம்.!
     பிரியாணி – ஒரு சொட்டுக்கண்ணீருக்கு உத்திரவாதம்
  சேச்சு பாட்டிதேவதைப் பாட்டி!-  கடைசி வரியின் அதிர்ச்சி – ஜெயமோகனின் ஆயிரங்கால் மண்டபம் சிறுகதைத்தொகுப்பில் ‘ஒன்றுமில்லை’ என்ற கதையை நினைவுபடுத்தியது. 

     ஜெயா, ராஜலட்சுமி, ராஜி, ப்ரியா…. உண்மையான தெர்மகோல் தேவதைகள்! ….தேவதைகள் என்றால் நல்லவர்களாக மட்டும்தான் இருக்கவேண்டும் என்று அர்த்தமில்லை. துர்தேவதைகளும் இருப்பார்கள். தெர்மகோலைப்போல…. வெப்பத்தையும் பாதுகாக்கும்…! தட்பத்தையும் பாதுகாக்கும்! இந்த தேவதைகளும், தான் செய்வது நியாயம் என்பது போலவே எண்ணிக்கொண்டு ஓரிரு இதயங்களை ஏறி மிதித்துவிட்டுச் செல்கிறார்கள்.

     கதைகள் பெரும்பாலும், நிதர்சனத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பது வாசகனை தன்னுடன் நெருக்கமாக உணரச்செய்கிறது. பெண்களின் சில அணுக்க உணர்வுகள் கதைகளின் ஊடே பாய்ந்து செல்கிறது. திடீரென காண்டேகரின் கதாநாயகிகள் கண்முன்னே வந்து செல்கிறார்கள். ஆண்களையும் ஒரு கை பார்க்கிறது ! அதுவும் ‘நேற்றுவரை’ படித்துவிட்டு…..வெலவெலத்துப்போனேன்.

   வார்த்தை விளையாட்டுகள் கிடையாது. பின், முன், நடு நவீனத்துவங்கள் கிடையாது. சந்தோஷமாக ரஜினி படம் பார்த்த திருப்தி இருக்கும். அதேபோல், இந்தப்புத்தகமும் படிக்க எடுத்தால், பையில் வைத்துக்கொண்டே திரியவேண்டியதில்லை.

    இதையேத்தான் எல்லா புக்குக்கும் சொல்றீங்க! என்பவர்களுக்கு…. நாங்கள் எடுக்கும் புத்தகம் அப்படி அமைந்துவிடுகிறது. அல்லது…அப்படி இல்லாத புத்தகத்தைப் பற்றி நாங்கள் எழுதுவதில்லை..! நண்பர் மீது அன்பு இருக்கலாம். படைப்புக்கான பார்வைகளில் சமரசங்கள் இருப்பதில்லை.

வேண்டுமானால்,ஒரு காஃபி டேயில் சென்று ஒரு கேப்பச்சினோ லார்ஜ் ஆர்டர் செய்துவிட்டு இந்த நூலை ஆரம்பியுங்கள். 80 பக்கங்களையும்,  வெவ்வேறு மனிதர்களின் வாழ்வையும் , ஒரு சுவையான காஃபியையும் அருந்தியிருப்பீர்கள்.!

     எல்லாக் கதைகளிலும் சங்கர் நாராயண் என்ற எழுத்தாளர் தெரிகிறார். பல இடங்களில் நம்மை தலைதடவி அமரவைத்து, தட்டிக்கொடுத்து, தோள்தட்டி, கன்னம்தொட்டு கதை சொல்கிறார். சில இடங்களில் இப்படியெல்லாம் இருக்கு தெரியுமா? என்று இயம்புகிறார். மீச்சிறு இடங்களில் அது நான் தான் என்று உண்மைக்குள் சென்று வருகிறார். கொஞ்சம் கிச்சு மூட்டுகிறார். பொதுவாக எல்லாக் கதைகளும் நம்மை சடுதியில் ஈர்க்கின்றன. நான் இணையத்தில் படித்திருந்த கதைகளே புத்தக வடிவில் படிக்கும்போது வேறு சிந்தனை, வேறு காட்சிகள் விரிகின்றன. முக்கியமாய், எல்லாக் கதைகளிலும் உணர்வுகளுடன் தான் விளையாடியிருகிறார். தர்க்கம், சட்டம், குற்றம் , விசாரணை என்று எதையுமே தொடாமல் தனது பாதை எது என்பதை நமக்குக் காட்டியிருக்கிறார்.

     இந்த ஆளுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதை நான் பல இடங்களில், பல தருணங்களில் கண்டு வியந்திருக்கிறேன். அதன் உண்மை இந்த தொகுப்பில் உறுதியாகிறது. கதை சொல்லும் நேர்த்தி, கதையில் தெரியும் நியாயம், காமத்தைத் தூவும் லாவகம், எங்கு முடிக்கவேண்டுமோ அங்கு முடிக்கும் தணிக்கை, வளவளப்பு இல்லாத வார்த்தைகள் என்று வெகுஜன எழுத்தாளராக ஒரு இடத்தைத் தக்கவைத்திருக்கிறார்.

தெர்மக்கோல் தேவதைகள் - இதுக்கு ஒரு... ‘ஓ’ போடுங்க!!
    
வெளியிட்ட ’உ’ பதிப்பகத்துக்கு ரெண்டு ’ஓ’ போடலாம்!! (அழிக்கப்பிறந்தவனுக்கும் சேர்த்து)
    
    


Tuesday, January 10, 2012

நான்காம் நாள் நடப்புகள் – புத்தகக் காட்சி






பத்தொன்பது நிமிடங்களாக, பச்சை விளக்கே போடாமல் பாம்புபோல் வாகனக்கூட்டத்தை நிற்கவைத்த, பச்சையப்பா கல்லூரிக்கருகிலேயே யோசித்திருக்கவேண்டும். இன்று அப்துல் கலாம் அவர்கள் வருகிறாரே உள்ளே நுழைவதற்குள் நாக்கு,பேக்கு என அனைத்து உறுப்புகளும் தள்ளிவிடும் என்று! வாகனத்தை உறுமிக்கொண்டே நின்று, நின்று, சென்று சென்று விருகம்பாக்கத்திலிருந்து, புத்தகச்சந்தையில் சென்று வாகனம் யதாஸ்தானத்தை அடைவதற்குள் 1 மணி நேரம் 42 நிமிடங்கள் ஆகியிருந்தது. மொத்த தூரம் 6.8 கிலோமீட்டர் என்று கூகிள் சொல்கிறது. இதே நேரத்தில் பைக்கில், புதுகையிலிருந்து மதுரை (109கி.மீ)சென்று விடலாம்.!! வாழ்க சென்னைப் போக்குவரத்து…!! 

     உள்ளே நுழைந்தவுடன் மீண்டும் புத்தகப் பட்டியல் எடுக்க ஆரம்பித்தேன். நேற்று விட்ட இடத்திலிருந்து தொடங்கினேன். மீண்டும் நான்கு வரிசைகள்! அப்போது பலாபட்டரை ஷங்கர் அவர்கள் வந்து லந்தினார்.  நான் நேற்று எழுதியிருந்த கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் புத்தகம் வாங்கவேண்டும் என்றார். அதை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அந்த நூலின் ஆசிரியர் திரு.முத்துக்கிருஷ்ணன் அவர்களே எதிரில் வந்தார். நான் ஓடிச்சென்று அவரை மனம் நிறைந்து பாராட்டினேன். ஏனெனில் அந்தப் புத்தகம் எனக்கு பல அதிர்ச்சிகளை அளித்திருந்தது. தூத்துக்குடி மக்கள் மட்டும் பாவம் என்று நினைத்திருந்திருப்போம். அது தவறு ! நாமும் பாவம்! ஏனெனில் கூடங்குளத்தினால் நாமும் பாதிக்கப்படப்போகிறோம் என்ற உண்மையை அந்த நூல் உணர்த்தியிருந்தது. அதை அவருடன் பகிர்ந்துகொண்டேன். அவரும் மிகவும் ஈடுபாட்டுடன் பேசினார். பின்னர் ஷங்கரும் நானும் சென்று, அவருக்கான அந்த நூலை வாங்கினோம்.


தேனம்மை லட்சுமணன் அவர்களின் ’சாதனை அரசிகள்’ நூல் வெளியீட்டுக்கு அழைத்திருந்தார்கள். டிஸ்கவரியின் ஸ்டாலுக்குச் சென்றேன். அங்கு பல சாதனைப் பெண்கள் அமர்ந்தும், உலவிக்கொண்டும், உரையாடிக்கொண்டும் இருந்தார்கள். நான் இயக்குநர் நந்தினியுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு, அவர்களது குட்டிப்பாப்பாவுடன் விளையாடினேன்.

 பின்னர் பெருந்தலைகளெல்லாம் திரளாக வர ஆர்மபித்தார்கள். தேனம்மை லட்சுமணன், அவர்களின் புத்தக வெளியீட்டுவிழாவுக்கான முஸ்தீபுகளில் இருந்தார். அப்போது அண்ணன் அப்துல்லா கையில் பையும், பை நிறைய காமிக்ஸுமாக வந்தார்.  டெல்லியில் டேரா அடித்துவிட்டு வந்திருந்தார். அரட்டையை ஆரம்பித்தோம். டிஸ்கவரி வாசலில் ஒரு மினி பொதுக்கூட்ட அளவில் நான் கேபிள், கே ஆர் பி, லக்கி, MSK, ரோமியோ, இயக்குநர் நவீன், இன்னும் சில பதிவர்கள் என்று கச்சேரி களை கட்டியது. புத்தக வெளியீடு தாமதமானதால் கொஞ்சம் சுற்றிவிட்டு வருவோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினோம். அடுத்த வரிசை செல்லும்போது, திரு.பாரதி மணி அவர்கள் எதிரில் டிஸ்கவரி ஸ்டாலை தேடிக்கொண்டு வந்தார். நாங்கள் அவரைப்பார்த்து வரவேற்று, கடையை நோக்கி கூட்டிச்சென்றோம். புத்தக வெளியீட்டு விழா இனிதே நடந்தது. இந்திகழ்ச்சியை ஒரு தொலைக்காட்சிக்குழு ஒளிப்பதிவு செய்து, பேட்டிகளெல்லாம் எடுத்தது.


பின்னர் சங்கம் கலைக்கப்பட்டு, நான் தனியனாக மீண்டும் என் வேட்டையைத் தொடர்ந்தேன். நண்பர் செல்வக்குமார் இணைந்தார். அவருடன் ஸ்டால் எண்: 99 க்கு சென்றோம். அங்கு அஜயன் பாலாவின் குழந்தைகளுக்கான திரைப்பட புத்தகம் வெளியீடு நடந்து முடிந்திருந்தது. அப்படியே மீண்டும் பிரிந்து நான் விசில் ஊதும் வரை வேட்டையைத் தொடர்ந்தேன்.


வெளியில் வந்து கேபிள்,யுவகிருஷ்ணா,கே ஆர் பி, அவரது நண்பர் என ஒரு ஒதுக்குப்புறத்தில் அமர்ந்து பேசிவிட்டு , பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆற்காடு மெஸ்ஸில்,லக்கி தவிர மற்றவர்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்


வாசிக்க நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள்
1.   பிரமிள் கவிதைகள் – விலை 165.00 -அடையாளம்- கடை எண்: 323
2.   கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்- அ.முத்துக்கிருஷ்ணன் – ரூ.15 – பூவுலகின் நண்பர்கள் – கடை எண்: 71
3.   வெள்ளை மொழி – விலை 200 – அடையாளம் – 323
4.   சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் – ப.முருகன் – ரூ.60 –அடையாளம் - 323
5.   நியான் நகரம் – ஷம்மீர் - ரூ.200 - பாதை – கடை எண் 318
6.   இந்தியா ஒரே நாடா ?-பெரியார் – ரூ. 5 – எதிர் – கடை எண்: 222
7.   மார்லன் பிராண்டோ – அஜயன் பாலா- பரிசல் -கடை எண் – 123
8.   பூமி மூழ்கிக்கொண்டிருக்கிறது –விஞ்ஞானி பொன்முடி –ரூ.70- நியூ செஞ்சுரி – கடை எண்: F53
9. ஒரு தலைமுறை தெலுங்குச் சிறுகதைகள் – தொகுப்பு : டி.ராமலிங்கம் – பூ.அ. துரைராஜ் - ரூ.80 (உண்மை விலை: 160)- சாகித்ய அகாடெமி –கடை எண்: 166
10. மலையாளச் சிறுகதைகள் –புஷ்பவேணி கோவி – ரூ.35 (உ.விலை: 70)- சாகித்ய அகாடெமி
தெர்மோகோல் தேவதைகளும், கூடங்குளமும் படித்தாயிற்று…பார்வை விரைவில்..

அனேகமாய் இனி புத்தகக்காட்சி செல்ல இயலாது என்று எண்ணுகிறேன். பார்ப்போம்.





     

Sunday, January 8, 2012

மூன்றாம் நாள் புத்தகக் காட்சி




உண்மைத் தமிழன் அண்ணாச்சியுடன் உள்ளே நுழையும்போது மணி 6 ஆகிவிட்டிருந்தது. முரட்டுக் கூட்டம்..! உள்ளே சென்றதும் ,நேராக கிழக்கில் கால்கள் நின்றன. அப்புறம்தான் தெரிந்தது. பாரா இருக்கிறார். அவருடன் பேச ஆரம்பித்தால், பல்வேறு தகவல்கள் தந்தார். அப்போது ட்விட்டர் புகழ் சுப்புடுவும் வந்தார். Samsung, iPhone தொழில்நுட்ப சுவாரஸ்யங்கள் பகிர்ந்துகொண்டோம்.

     அப்படியே ஒவ்வொரு கடையாக மேய ஆரம்பித்தேன். சில புத்தகங்களின்மீது நாட்டம் ஏற்பட்டபோது தலைப்பு-ஆசிரியர்-பதிப்பகம்-கடை எண்ணை எழுதிக்கொண்டேன். பொறுமையாக ஒரு பகல் நேரத்தில் வந்து தேவையான புத்தகங்களை வாங்க உத்தேசம்..! முன்னோட்டமாக எல்லாக்கடைகளையும் வரிசையாக பார்வையிடும் நோக்கம்! முழுமையாக பார்த்துமுடித்தபின் நாளை புத்தகப் பட்டியல் பதிவிடலாம் என்று இருக்கிறேன்.

     இந்த புத்தகக் காட்சியின் மிகப்பெரிய ஆச்சர்யமாக, தொடங்கி மூன்றே நாட்களில் , காமிக்ஸ் விற்பனைசெய்துவந்த கடையில், எல்லா காமிக்ஸும் விற்றுத்தீர்ந்துவிட்டது. விஷ்வாவும், ரகுவும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். உண்மையில் இவ்வளவு காமிக்ஸ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வரும் மார்ச் மாதத்தில் அச்சிடவேண்டிய காமிக்ஸ்களை, இப்போதே அச்சிடுவதற்காக லயன்ஸ் காமிக்ஸின் திரு.அசோகன் இரவே சிவகாசிக்கு ரயிலேறுகிறார் என்று ரகு சொன்னார். இது ஒரு சாதனைதான்..!!

     எல்லாக் கடைகளையும் யாரையும் கூட்டுச் சேர்க்காமல், தனியனாக மேய்ந்தேன். சாகித்ய அகாதெமியில் உண்மையிலேயே மலிவுவிலையில் பல்வேறு படைப்புகள் கிடைக்கின்றன. மதி நிலையம் பாராவின் குற்றியலுலகம் என்ற கீச்சுத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. தேடலில் பொறுமையாக 50 நிமிடங்கள் கழிந்தன. மூன்று வரிசைகள்தான் முடிக்க முடிந்தது. பட்டியலில் 24 புத்தகங்கள் சேர்ந்தன. ( எதுவும் வாங்கவில்லை.!.)  

அப்புறம், பூவுலகின் நண்பர்கள் கடைக்கருகில் பதிவர் காவேரி கணேஷ், அன்பழகன் வீரப்பன் ஆகியோர் சந்தித்துப் பேச ஆரம்பித்தோம். ஒரு வார்த்தை கூட வெட்டியாகச் செலவழிக்காமல், உண்மையான சமூக, பதிவுலக அக்கறையுடன் உரையாடல் அற்புதமாக நீண்டது. அப்போது பூவுலகின் நண்பர்கள் குழுவின் திரு.ரமேஷ் கருப்பையா வந்தார்.நிறைய சுற்றுச்சூழல் தகவல்கள் சொன்னார். அவர் கொடுத்த ஒரு மரம் வளர்ப்பு விழிப்புணர்வுத் தாளில் இருந்த கீழ்க்கண்ட படம் என்னை மிகவும் கவர்ந்தது.





கூடங்குளம் அணுமின் நிலைய ஆபத்தை மக்களிடையே பரவலாக எடுத்துச்செல்லும் திரு.முத்துக்கிருஷ்ணன் வந்திருந்தார். பூவுலகின் நண்பர்கள் குழு உண்மையான அக்கறையுடன் செயல்பட்டுவருகிறார்கள்.    

அந்தக்குழுவில் அனைவரும் தன்னார்வலர்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு தளங்களில் இயங்கு பவர்கள். புவிகாக்கும் நோக்கத் துக்காக ஒன்றிணைந்திருக்கிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை பற்றி சிந்தையைத் தூண்டும் ஒரு சிறந்த 64 பக்க விளக்கப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். விலை: ரூ15.மட்டுமே! 



 
மிகக்குறைந்த விலையில், நம் அடுத்த தலைமுறைக்கு , ஓரளவு கெடாத பூமியை விட்டுச்செல்லும் அத்துனை உண்மைகளையும் சிறு சிறு நூல்களாக்கி வழங்குகிறார்கள். அவர்கள் கடைக்கு மறக்காமல் செல்லுங்கள்.!

பக்கத்திலேயே, ஆல் இந்தியா ரேடியோவின் கடை இருந்தது. என்னத்தைச் சொல்ல? போய்ப் பாருங்கள்! என்ன விற்கிறார்கள் என்று தெரியும்.

கடைசியாக, டிஸ்கவரி வாசலில்..(கடை எண்:334) கேபிள், கே.ஆர்.பி.செந்தில், ஓ.ஆர்.பி ராஜா அண்ணன், பிலாஸபி பிரபாகரன், மெட்ராஸ்பவன் சிவக்குமார், மேலும் பாண்டியிலிருந்து கேபிளைச் சந்திப்பதற்காகவே வந்திருந்த வாசகர் என்று ஜமாவில் சங்கமித்தேன். பதிவுலகின் பலம் குறித்து பேசிக்கொண்டிருந்துவிட்டு சங்கத்தைக் கலைத்தோம்.




Saturday, January 7, 2012

சென்னை புத்தகக் கண்காட்சி நாள் # 2




முதல் நாள் கட்டுரையைத் தேடாதீர்கள். நான் போகவில்லை. புத்தகக் கண்காட்சியின் நாள்தான் தலைப்பு ! எனக்கு, இன்றுதான் முதல் நாள்!

உள்ளே நுழையும்போதே…..பார்க்கிங்கில் நாம் டென்ஷனில் reflect ஆகக்கூடாதென்று, தானே reflect ஆகும் உடை அணிந்து ஏழெட்டு ஆட்கள் வண்டிகளை நிறுத்தி வலுக்கட்டாயமாக சீட்டு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஏற்கனவே கேபிள் எழுதியதைப் படித்திருந்ததால், பத்தை எடுத்து நீட்டி ‘இங்கயும் ஆரம்பிச்சுட்டீங்களா உங்க அராஜகத்தை’ என்று சொல்லி, அவன் முறைப்பை சோடியம் விளக்கொளிக்கு தின்னக் கொடுத்துவிட்டு வண்டியை நிறுத்தினேன்.

வாசலை நோக்கி நடக்கத்தொடங்கிய வினாடி, என்னைக் கடந்து சென்ற பைக்கை ஓட்டியவர் ’மஜக்’கென்று சென்றுகொண்டிருந்தார். அட..! இது நம்ப மாமல்லன் சாராச்சே என்று நினைத்து.. உள்ளேஏஏஏ செல்லும்வரை நடைத்துணைக்கு வேண்டுமே என்று அவருக்காக நின்று, பேசிக்கொண்டே உள்நுழைந்தோம். பேராசிரியர் ஞானசம்பந்தன் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தார். ‘நிலவு சொல்கிறது..ஏ..! மனிதா!’ என்று ஆரம்பித்தார். அடுத்த நொடி மாமல்லன் சார் ஒரு கமெண்ட் அடித்தார் பாருங்கள்..!! குபீர்ச் சிரிப்பிவிட்டேன். கமெண்ட் மட்டுறுத்தல் செய்யப்படுகிறது.

     நுழைவுச்சீட்டினை எனக்கும் சேர்த்து அவரே எடுத்தார். உள்ளே அவருடன்  கிழக்கு பதிப்பகம் வரை வந்தேன். அங்கு ஹரன் பிரசன்னாவுடன் சந்திப்பு..! பேசிக்கொண்டே.. நான் நம்ப மக்களைத் தேடிப் போறேன் சார் ! என்று அவரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அவரும்..நான் சுத்திக்கிட்டிருப்பேன். நீங்க போங்க! என்றார். அவருடன் வயிறுவலிக்க அளவளாவிய சென்ற ஆண்டு நிகழ்வை நினைத்துக்கொண்டே நகர்ந்தேன்.

     எதிரில் எஸ்.ரா வந்துகொண்டிருந்தார். அவரிடம் நலம் விசாரித்துவிட்டு பின்னர் 334ம் எண் கடையான வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸில்  ஜாகை..! கேபிள் இருந்தார். பேசிக்கொண்டிருந்தோம்.  திரு.பாஸ்கர் சக்தி வந்தார். அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேச்சு..! பின்னர் முகப்புத்தக நண்பர் ராகுல் செந்தில் வந்தார். புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. பின்னர் என் ஆவலான மலிவுவிலை சுஜாதா கதைகளும், காமிக்ஸும் பார்க்கச் செல்கிறேன் என்று சொல்லி, நான் அங்கிருந்து கூடாரத்தைத் தூக்கினேன். அப்போது விருபா.குமரேசன்அவர்கள் அழைத்தார். அவரது ஸ்டால் எண்: 149ல் நிறைய புதிய புத்தகங்கள் உள்ளதாகச் சொன்னார். நாளை போகவேண்டும்.

     அடுத்து, மீனாட்சி பதிப்பகம் வந்தால், அழிக்கப்பிறந்தவனை ஆக்கியவரும்..அவர் இணைபிரியாதவரும் நின்றுகொண்டிருந்தார்கள். மொத்தமாக சுஜாதாவை அள்ளிக்கொண்டிருந்தார் அதிர்ஷ்டக்கார லக்கி! J நானும் கொஞ்சம் தேற்றி ரூபாய் 115க்கு 5 புத்தகங்கள்! பின்னர் லக்கியிடமே காமிக்ஸ் விற்குமிடம் கேட்டேன். எதிர்சாரிக் கடையைக் காட்டினார்.

     காமிக்ஸ் கடையில் நுழைந்தேன். ஆஹா..!! 7ம் வகுப்புப் படிக்கும்போது இனிக்க இனிக்கப் படித்த காமிக்ஸ் ஹீரோக்கள் வரிசைகட்டி நின்றார்கள். அப்போதெல்லாம் வீட்டுக்குப் பயந்து ஒளித்துவைத்துப் படித்த மாடஸ்டி ப்ளைஸியும், இரும்புக்கை மாயாவியும், மந்திரவாதி மாண்ட்ரேக்கும்..வாடா! என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்? என்று வரவேற்றார்கள். ஒவ்வொரு புத்தகமாய் ஆசையாய்ப் பார்த்தேன். (காமிக்ஸ் உலகம் பற்றி ஒரு பதிவு போடணும் என்று நினைத்துக்கொண்டேன்) ராணி காமிக்ஸில் வந்த ஜேம்ஸ்பாண்டை மட்டும் காணவே இல்லை.! டிடெக்டிவ் காமிக்ஸ், இரும்புக்கை மாயாவி போன்ற காமிக்ஸ்களின் 28 புத்தகங்கள் ரூபாய் 150ரூபாய்க்கு வாங்கினேன்.

   அப்போதுதான் அன்புடன் அறிமுகமானாரகள் திரு.ரகுவும், திரு.விஷ்வாவும்…!! இருவருக்கும் காமிக்ஸை வாழ வைப்பதுதான் வேலை போலிருக்கிறது. காமிக்ஸின் மறுவாழ்வுக்காக ஒரு இயக்கம்போல் செயல்படுகிறார்கள். அடடா..! நான் சிறுவயதில் படிக்க ஆரம்பித்து பாதியில் விட்ட ஒரு ஸ்பைடர்மேன் காமிக்ஸ் பற்றி சொல்ல ஆரம்பித்ததும் அதன் தலைப்பைச் சொல்லி அசத்தினார்கள். ஒவ்வொரு காமிக்ஸைப் பற்றியும் குட்டிப்பசங்களைப் போல் ஆர்வமாக, ஆச்சர்யமாக, உற்சாகமாக, குதூகலமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அந்தக்கடையில் அமர்ந்திருந்த பெரியவர் ஒரு சுவாரஸ்யர்..! அவர் லயன்ஸ் காமிக்ஸ் ஆரம்பித்த நாளிலிருந்து அங்கு வேலை பார்க்கிறாராம். பிரமிப்பாக இருந்தது. பின்னர் விசில் ஊதி கடையை அடைக்கும்வரை அங்கு நின்று அளவளாவிக்கொண்டிருந்தோம். கேபிளும் அங்கு வர பேசிக்கொண்டே ஜூட் விட்டால், வாசலில் காவல்கோட்டம் வெங்கடேசனும், நாஞ்சில் நாடன் அய்யாவும் நின்றுகொண்டிருந்தார்கள். பாராட்டு,சந்தோஷக் கைகுலுக்கல்கள், நலவிசாரிப்புகளுடன் வெளியேறினோம்.

     எப்படித்தான் நிகழ்வுக்கு நிகழ்வு யோசித்து எழுதினாலும்.உண்மைத்தமிழன் அண்ணாச்சி லெவலுக்கு  வரமுடியவில்லை.  இப்பதான் நினைவுக்கு வருது! நான் ,சுகுமார் சுவாமிநாதன், கேபிள் ஆகியோர் உ.த அண்ணாச்சியுடன் வாஆஆசலில் அளவளாவினோம். அப்போது ஒரு குண்டைப் போட்டார். அந்த பிரபல ஈரோட்டு நிகழ்வுப் பதிவு அவர் அடித்தபடி, முழுமையாக வலையேற்றவில்லையாம்.  நாம் சிரமப்படுவோமே என்று அவரால் பாதியாகச் சுருக்கப்பட்டதாம். படிக்கிற உங்களுக்கே ’பக்’ குங்குதே!  கேட்ட எங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? J


வுடு ஜூட்!! 





Thursday, January 5, 2012

அழிக்கப்பிறந்தவன் - இப்படியா பண்றது?




      யுவகிருஷ்ணாவின் அழிக்கப்பிறந்தவன் நாவல் நேற்று மாலை ’உ’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டவுடன் உடனே படிக்கவேண்டுமென்ற ஆவல் எனக்கிருந்தது. ஏனெனில், அவரது வலைப்பூவில் முதல் 6 அத்தியாயங்களை எழுதியிருந்தார். அந்த சுவாரஸ்யம் என்னை, புதிதாக வாங்கிய சட்டையை உடனே அணிய ஆர்வம் காட்டும் சிறுவனைப்போல் ஆக்கியிருந்தது. அதற்கேற்றார்ப்போல் இரவே எனக்கு வானொலி ஒலிபரப்பு இருந்தது. அது இரவு 11 மணிமுதல் அதிகாலை 3 மணிவரை இருக்கும். அந்த நான்கு மணி நேரங்களும், திரைப்படப்பாடல்களை ஒரு சிறு முன் ஜோடனையுடன் ஒலிபரப்புவது என் வழக்கம்.!

       பாடல்களை வரிசையாக முன்னரே எடுத்துவைத்துவிட்டால், பின்னர் ஒவ்வொரு பாடலுக்கிடையிலும் பேசினால்மட்டும் போதும். ஆக..ஒவ்வொரு பாடல் இடைவெளியிலும் ‘அழிக்கப்பிறந்தவனைப் படித்துவிடலாம் என்று எடுத்துச்சென்றேன்.
     ஏற்கனவே படித்த ஆறு அத்தியாயங்களிலும் வேறு ஏதாவது சேர்த்திருக்கிறாரா என்ற ஐயம் இருந்ததால், முதலிலிருந்து ஆரம்பித்தேன். 

     இயக்குநர் ஷங்கரின் ‘நண்பன்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. ஆனால் அதன் திருட்டு டிவிடி 15 நாட்களுக்கு முன்னரே பஜாரில் வந்துவிட்டதாக ஒரு தகவல். உடனே ஷங்கர் , கமிஷ்னரை வந்து சந்தித்து விபரம் சொல்கிறார். அதை ரகசியமாக விசாரிக்க ஆரம்பிக்கிறார் கமிஷ்னர்.
     அதேசமயத்தில், சென்னை பர்மா பஜாரின் மிகப்பெரிய வியாபாரியான வாப்பா கொலைசெய்யப்படுகிறார். தொடர்ச்சியாக பஜாரின் சிலர் கொல்லப்படுகிறார்கள்.
     இந்த கேஸும், நண்பன் பட திருட்டு டிவிடி கேஸும் வெவ்வேறானதா, அல்லது ஒன்றுதானா என்பதை சுவாரஸ்யமான சம்பவங்களால், விறுவிறுப்பாக கதையை நகர்த்தி, ஒரு அட்டகாசமான க்ரைம் த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார் யுவகிருஷ்ணா.! அனேகமாய் ஷங்கர் சாருக்குக் கூட இந்தப் புத்தகம் கூடியவிரைவில் சென்று சேரும்!

     என் மூளை முழுவீச்சில் இயங்கியது நேற்றாகத்தான் இருக்கும் ஐந்து நிமிடத்துக்கொருமுறை அறிவிப்பு…மீண்டும் கதை.. ,மீண்டும் அறிவிப்பு..கதை..விரட்டி விரட்டிப் படித்துவிட்டுத்தான் ஓய்ந்தேன். இப்படியா பண்றது?...மனுஷன் கிறுக்குப் பிடிச்சுப் படிச்சு கெறங்கிப்போனேன் மக்கா!

     நாங்கள் சினிமாவில் பேசிக்கொள்ளும் வார்த்தை..டீட்டெய்லிங்..! ஒரு கதைப்பின்னணியை எடுத்துக்கொண்டால், அதன் நுணுக்கங்களைக் காட்சிகளில் வைக்கவேண்டும்.போகிறபோக்கில் அது வந்து செல்லவேண்டும். அப்போதுதான் காட்சியின் சுவாரஸ்யம் அதிகரிக்கும். அதேபோல், பாலகுமாரன், சுஜாதா ஆகியோரது நாவல்களில் ஒரு துறையின் பின்னணி  இருந்தால், அதன் நுணுக்கங்கள் கதையில் நிரவலாகத் தூவப்பட்டிருக்கும் அதேபோல், இந்த நாவலில், பர்மா பஜாரின் தொழில் விபரங்களை மிகவும் ஆழமாகச் சொல்லியிருக்கிறார் யுவகிருஷ்ணா! இதற்கும் மேல், இன்னும் ஆழமாகச் சொன்னால், கண்டிப்பாக பஜார் வியாபாரிகளுக்கே பிரச்னை வரக்கூடிய அளவு கத்திமேல் நடப்பு! அதுவும் அந்த மீன் பிடிக்கப்போதல், கரைக்குக் கொண்டுவரும் தந்திரம் என்று உண்மையில் பஜார் சென்று விபரம் விசாரித்திருக்கிறார்.

     இதில் விஜய்ஷங்கர் என்றொரு பாத்திரம் வருகிறது. அனேகமாய் விஜயும் ஷங்கரும் இணைந்த படத்திற்கான கதைக்கள அடிப்படை  என்பதால் அந்தப் பெயர் வைத்திருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். அந்தக் கதாபாத்திரச் சித்தரிப்பும் மிகவும் அருமை.! அதுவும் அவன் ஊரிலுள்ள சொத்தெல்லாம் விற்று படம் விநியோகிக்க வந்து, ஒரு சந்தர்ப்பத்தில், புரோக்கர் முருகன்  அவனுக்கு போன் செய்யும்போது உண்மையில் என் சொத்தே போகும் நிலைபோலப் பதறினேன்.

     கதையின், நடை நம்மை உள்ளிழுத்துக்கொள்ள பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. விலைமாது வரும் காட்சிகளிலும் அத்துமீறாமல் அடுத்த காட்சிக்குத்தாவும் சந்தர்ப்பங்களில் கதையின் போக்கில் நம்மை கவனப்படுத்தி விளையாடுகிறார் யுவா!  மிகச் சாதாரணமான வார்த்தைகள். சம்பவங்களின் அனாயாசமான வேகம்.! ஏதோ ஒரு இடத்தில் இது உண்மையிலேயே நடந்துகொண்டிருக்கிறதோ என்று எண்ணவைக்கும் காட்சிக்கோர்வைகள் என நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ் நாவலைப் படித்த உணர்வு எழுந்தது.

    தலைப்புதான் அழிக்கப்பிறந்தவன்...!! ஆனால்..கதை ஆளப்பிறந்ததாகத் தான் இருக்கிறது.

    ஒரு மசாலாப்படத்துக்குரிய அனைத்து அம்சங்கள் இருந்தாலும், அது எல்லோருக்கும் பிடித்திருக்கவேண்டும். அப்போதுதான் அது வெற்றிப்படம்! அப்படிப்பட்ட வெற்றிப்படம் பார்த்த திருப்தி தனிதான்..!!

அந்தவகையில்…..இது சூப்பர் டூப்பர் வெற்றிப்படம்!!


வெளியீடு - உ பதிப்பகம்
விலை - ரூ. 50.00
புத்தகக் கண்காட்சியில் கடை எண்; 334 டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும்.



இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...