Tuesday, June 19, 2012

ஓமப்பொடி # 6





இடையில் எதுவுமே பதிவிடாமல், ஊர் சுற்றிக்கொண்டு இருந்தாயிற்று. நிறைய வாசிக்க நேரம் கிடைத்தது. எஸ்.ரா, புதுமைப்பித்தன், மௌனி, முகில், பா.ரா, காண்டேகர், கல்கி என்று கலந்து கட்டிப் படித்தாயிற்று... அதைவிட சுவாசிக்க நேசம் கிடைத்தது. அந்த மகிழ்ச்சியில் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை ஓரிரு வார்த்தைகளில் ஆரம்பித்துவிட்டு, கருவாக வளர விட்டாயிற்று.. என்று பிரசவிக்கும் என்பது தெரியவில்லை.

சென்ற மாதம்  ‘கேட்டால் கிடைக்கும்’ வகையில் சில சம்பவங்கள் நடந்தன. நமது வெள்ளிநிலா ‘ஷர்புதீனின்’ குடும்ப நண்பர் ஒருவர் கோவையில் ஆவ்லா மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தில்.. ஒரு இண்டக்‌ஷன் ஸ்டவ் வாங்கியிருக்கிறார். வாங்கி ஒருவாரத்திலேயே அது ரிப்பேர் ஆகிவிட்டது. எடுத்துச் சென்றிருக்கிறார். சரி செய்து தந்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு மாதத்துக்குள் கெட்டுவிட்டது. மீண்டும் சரி செய்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. கடைசியாக அங்கு ஸ்டவ்வை எடுத்துச்சென்று , வேறு ஸ்டவ் மாற்றித்தருமாறு கேட்டிருக்கிறார்கள். அதெல்லாம் தரமுடியாது. என்று கொஞ்சம் அடாவடியாகப் பேசியிருக்கிறார்கள். இவர்களும் போராடிப்பார்த்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
அப்போதுதான்… நமது பேரீச்சை கதையைப் படித்துவிட்டு..ஷர்புதீன் இந்த நிறுவனத்தை என்ன செய்வது என்று கேட்டார். என்னிடம் முழு விபரங்களும் கொடுத்தார்.

உடனே, கோவையில் உள்ள அந்த நிறுவனத்துக்கு தொலைபேசினேன். அதன் மேலாளர் ராஜேந்திரனிடம்.. வாடிக்கையாளரை முட்டாளாக்கினால் என்னன்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சொன்னேன்’. மேலும் நமது கேட்டால் கிடைக்கும் அமைப்பு பற்றியும்.. நான் தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் மனித உரிமைகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் என்பதையும் சொல்லி, அவர்களுக்கு ஸ்டவ்வை மாற்றிக்கொடுக்கும்படியும் சொல்லி வைத்தேன்.

அதற்குப் பிறகு 8 நிமிடங்களில், ஷர்புதீனின் நண்பரிடமிருந்து எனக்கு தொலைபேசி வந்தது.

‘சார்..அந்த ஸ்டவ் கம்பெனிலேருந்து ஃபோன் வந்துருச்சு சார்!  உடனே ஸ்டவ்வை எடுத்துக்கிட்டு வந்து மாத்திக்கச் சொல்லிட்டாங்க சார்! நான் எத்தனை தடவை போய் சத்தம் போட்டும், சரியா பதில் சொல்லாம அலட்சியப்படுத்திக்கிட்டிருந்தாங்க! நீங்க பேசினதுக்கப்புறம் இப்படி பவ்யமா பேசுறாங்க! ரொம்ப நன்றி சார்! ஆமா..அப்படி என்ன சார் சொன்னீங்க?” என்றார்.

’உண்மையைச் சொன்னேன்’ என்றேன். :)

ஆம். ஒரு வாடிக்கையாளரின் உரிமையை தெளிவாக , ஆத்திரப்படாமல், அழுத்தமாகக் கேட்கும்போது…கண்டிப்பாக கிடைக்கத்தான் செய்கிறது. அதுவும் ஒருவரது பிரச்னையை இன்னொருவர் தட்டிக்கேட்கும்போது….தவறு செய்யும் வியாபாரிக்கு…’’ஆஹா..ஒண்ணு கூடிட்டாய்ங்கப்பா’ என்ற எண்ணம் வருவதால்தான் காரியம் நடக்கிறது.

நிச்சயம் ஒன்று கூடுவோம்.


டாட்டா நானோ,- கார் வாங்குவதற்காக, டாட்டா ஃபைனான்ஸ் என்று அவர்களே கடன் தரும் நிறுவனமும் வைத்திருக்கிறார்கள்.

நானே கடன் தரேன். நானோ வாங்கிக்க!’ என்று ஸ்லோகன் வைக்கலாம்!

அதில் நான் கார் வாங்கும்போது , முன் பணமாக 30000 கட்டவேண்டும். மிச்சத்தை மாதத்தவணையாக பிரித்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். நானும் ஒத்துக்கொண்டேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அதற்காக 9 செக்குகள் தரவேண்டும் என்றார்கள். சரி என்றேன். மூன்றில் தொகையை பூர்த்தி செய்துகொள்ளலாம். மற்ற 6 செக்குகளை எதுவுமே பூர்த்தி செய்யாமல், கையெழுத்தை மட்டும் போட்டுக்கொடுக்கவேண்டும் என்றார்கள்.

ஆரம்பித்தது பிரச்னை!

இந்திய அரசியல் சட்டத்திலயோ, இந்திய நிதிச் சட்டத்திலயோ, யாராவது யாரிடமாவது பூர்த்தி செய்யப்படாத செக் கொடுக்கலாம்னு இருக்கான்னு காட்டுங்க ! என்றேன்.

பதில் சொல்லத்தெரியவில்லை..
நான் கண்டிப்பாக ப்ளாங்க் செக் தரமாட்டேன். என் தவணைத்தொகையை பூர்த்தி செய்துதான் கொடுப்பேன் .. இல்லைன்னா.. நீங்க 6 ப்ளாங்க் செக் குடுக்கணும்னு டாட்டா ஃபைனான்ஸ் லேருந்து எனக்கு ஒரு லெட்டர் வாங்கிக்கொடுங்க என்றேன்.


அப்போது லேசாக ஜகா வாங்கினார்கள்.

உடனே நானே, 9 செக்குகளையும் தவணையைப் பூர்த்தி செய்தே கொடுத்துவிட்டேன். அதை வாங்கிக்கொண்டு, சென்னையில் உள்ள ஒரு டாட்டா நிதி அலுவலர் என்னிடம் தொலைபேசினார்.

சார்! என்ன நீங்க எம்ப்டி செக்கே குடுக்காம விட்டுட்டீங்க? அப்படின்னா உங்களுக்கு கார் கிடைக்காது சார்!

சுர்ரென்று ஏறியது.

எம்ப்டி செக்குதானே வேணும் ? பத்து செக்குகூட தரேன். ஆனால் கையெழுத்தும் இருக்காது பரவாயில்லையா?

அப்புறம்..கார் கிடைக்காதுன்னு சொல்ல நீங்க யாரு? கார் வாங்க லோன் கிடைக்காதுன்னு சொல்ற வரைக்கும்தான் உங்களுக்கு அதிகாரம் இருக்கு! அப்ப நீங்கதான் நானோவும் விக்கிறீங்களா? வி.எஸ்.டி மோட்டார்ஸ் கிடையாதா?
என்று சொல்லவும்..

அந்த ஆள் தடுமாற ஆரம்பித்தார்.

இப்ப சொல்லுங்க..!! உங்க பேச்சை ரெக்கார்ட் பண்ணிக்கிறேன். டாட்டா ஃபைனான்ஸில் நானோ கார் வாங்க கடன் வாங்கணும்னா, ப்ளாங்க் செக் குடுக்கணுமா? அப்படி கொடுத்தால், ப்ளாங்க் செக் வாங்கியிருக்கேன்னு நீங்க லெட்டர் குடுப்பீங்களா என்றேன்.

பப்பப்பா…பப்பராப்பா..!! என்று ஆர்யா, அமலாபால் பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் ஒரு நீண்ட மின்னஞ்சல் ஒன்றை , டாட்டா ஃபைனான்ஸின் தலைமைக்கு அனுப்பினேன்.
அலறிக்கொண்டு அடுத்தநாள் மதியம் , அதே அதிகாரி போன் செய்தார். என்ன சார் நீங்க பாட்டுக்கும் மேல எல்லாம் எழுதிட்டீங்க? உங்க லோன் பேப்பரை நேத்திக்கே ‘நான்’ அப்ரூவ் செஞ்சுட்டேன் சார்..!! சும்மா ஒரு செக்யூரிட்டி பர்ப்போஸுக்காக செக் வாங்குவோம் சார்! நீங்க பணம் கட்டாம விட்டுட்டீங்கன்னா அதை பவுன்ஸ் பண்ணி உங்களை கோர்ட்டுக்கு இழுக்கத்தான் என்றார்.

அதெப்புடி? செக்யூரிட்டி பர்ப்போஸுக்காக, என் சொந்தவீட்டுப் பத்திரத்தைக் கொடுத்துத்தான் கார் வாங்கணுமா? என்று கேட்டுவிட்டு,, எவ்வளவு ரூபாய் போட்டு செக் கொடுத்தாலும்..அதை வச்சு என்னை கோர்ட்டுக்கு இழுக்கலாம். அதைவிட ஒரு மேட்டர் புரிஞ்சுக்குங்க..!! ஏமாத்துறவந்தான் நீங்க சொல்ற இடத்துல எல்லாம் கையெழுத்து போட்டு, கேக்குற செக்கெல்லாம் குடுப்பான். ஏமாத்தாதவன் இப்படித்தான் கேள்விகளா கேட்டு ஒழுங்கா பணத்தை கட்டுவான் என்றேன்.

இப்படியாக, இந்த நீதியே தெரியாமல் நிதி உதவி செய்யும் நிறுவனங்களின் ஆட்டத்துக்கு நடுவே, ஒரு ப்ளாங்க் செக் கூட கொடுக்காமல், நான் நானோ வாங்கிவிட்டேன்.

அடுத்து இன்னொரு கூத்து நடந்தது..!!

வாரக்கடைசில சொல்றேன்.

சென்ற மாதம் வட இந்தியப்பயணம் இனிதே நிறைவுற்றது.
இந்தியாவே சூடாக இருப்பது நன்றாகத் தெரிந்தது. அதுவும் சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா என்ற நரகம் – தெளிவாகத்தான் தட்டச்சினேன். நகரம் அல்ல..! நரகம்தான்..!! காலை4:40க்கெல்லாம் விடிந்து…இரவு 8 மணிவரை கதிரவன் வேலை  பார்க்கிறான். அதுவும் பகல் 12 மணிக்கு…வெளியில் 40 அடி நடந்திருப்பேன். நிழலைப்பார்த்து ஓடிவிட்டேன். இன்னும் 40 அடி நடந்திருந்தால், சுருண்டிருப்பேன். உண்மையான வெய்யிலை அங்குதான் அனுபவித்தேன். சவுதி அரேபியாவின் பாலைவன வெப்பத்தை விட அதிகமாக இருந்தது.

மரங்களை வெட்டுவதையே பிழைப்பாக வைத்திருந்தால், சென்னைக்கும் அந்த கதி வரும் நாள் தூரத்தில் இல்லை என்றே படுகிறது.


இந்தியாவில் அனல் மின் நிலையங்கள்தான் அதிகமாக உள்ளன. அங்கு வேலை பார்க்கும் இளைஞர்கள் மிகவும் தெளிவாகவும், நிதானமாகவும் இருக்கவேண்டியதன் கட்டாயம் இருக்கிறது. மின் உற்பத்தி என்று நாம் சாதாரணமாகச் சொல்லிவிடுகிறோம். அதன் பின்னணியில் எத்துனை இளைஞர்களின் உழைப்பு இருக்கிறது என்று நேரில் பார்க்கும்போதுதான் தெரிகிறது. சம்பளத்துக்காத்தான் வேலைபார்க்கிறார்கள் என்று சாதாரணமாக புறம் தள்ளிவிடமுடியாது. அனல் மின் நிலையம் ஒரு வினாடி நின்றால் கூட, மீண்டும் அதனை உடனே இயங்க வைக்க இவர்கள் பல நாட்கள் தூக்கத்தைத் தொலைக்க வேண்டியுள்ளது. உற்பத்தி, தேவை என்ற இரு பல்சக்கரங்களுக்கிடையில் இவர்களும் அரைக்கப்படுகிறார்கள் என்பது மிகவும்

என்றோ வரப்போகும் போருக்காக, நம் எல்லையில் பாதுகாப்புக்கு நின்றிருக்கும் வீரர்களை விட… தினமும் நம் வீட்டில் விளக்கெரிய, அந்த அனல் காற்றில் போரிடும் இந்த இளைஞர்கள்தான் வணங்கப்பட வேண்டியவர்கள்! ஒவ்வொருமுறை மின்சாரத்தை வீணடிக்கும்போதும் இதை நினைவில் கொள்ளலாம்.! யாரோ ஒரு இளைஞனின் தூக்கத்தை நாம் களவாடிக்கொண்டிருக்கிறோம்
                   ___________________________________

ஷங்காய் என்ற ஹிந்திப்படம் பார்த்தேன்..நிதர்சனத்தை அப்படியே சொன்ன விதமும்.. உண்மையின் குரூரமும் தூங்கவிடாமல் செய்தது. ஷங்காய் என்றால், ‘தவறு செய்யத் தூண்டுவது’ என்று பொருள் வரும். 

உண்மைதான்.. ஒருவனை தவறுசெய்ய என்னவெல்லாம் தூண்டுகிறது. அரசு என்பது எவ்வளவு பெரிய அராஜக வாதிகளால் நிரம்பியிருக்கிறது என்று அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 
‘நக்ஸல்பாரிகள் படமெடுத்தால் இப்படித்தான் இருக்கும்’ என்று லக்கிலுக் எழுதியிருக்கிறார். உண்மைதான்.!! 
கேபிளின் விமர்சனம் படித்துத்தான் படத்துக்குப் போனேன். !!
முக்கியமான விஷயம்..சென்னையில் இந்த மல்டிப்ளெக்ஸ்கள் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பது. !! ஆம்..!

பானிப்பட் சினிமேக்ஸில் ஒரு டிக்கட் 50 ரூபாய்தான்..!! 

டிக்கட் விலையை கண்டுக்காம இருந்துட்டு அப்புறம் தமிழ் சினிமா வாழலைன்னு அடிச்சுக்கிட்டா என்ன அர்த்தம்.? 

அங்கயும் ஒரு பாயாசத்தைப் போட்டுறவேண்டியதுதான்..!!

Thursday, May 3, 2012

ஓமப்பொடி # 5




     விடுமுறைக்காலம் துவங்கிவிட்டது.. தன் வீட்டுப்பிள்ளைகளை எந்த கோடைக்காலப் பயிற்சியில் சேர்க்கலாம் என்று பெற்றோர்கள் பிய்த்துக்கொண்டுள்ளார்கள். அதை வைத்து எத்தனை எத்தனை பயிற்சிகள்..? ஒரு பிட்நோட்டீஸ் பார்த்தேன்..

கையெழுத்துப் பயிற்சி,
கலர் அடிக்கும் பயிற்சி,
காசு எண்ணும் பயிற்சி,
பூஜை செய்யப் பயிற்சி,
புத்தகம் படிக்கும் பயிற்சி,
பாட்டுப்பாடும் பயிற்சி,
படம் வரையப் பயிற்சி,
பறவை பார்க்கப் பயிற்சி
போட்டோ எடுக்கப் பயிற்சி,
முதலுதவிப் பயிற்சி,
பொருள் அடுக்கப் பயிற்சி
இசை கேட்கப் பயிற்சி
இசை வாசிக்கப் பயிற்சி
சதுரங்கப் பயிற்சி
சக்கரக்கால் பயிற்சி
சோறு உண்ணப் பயிற்சி
யோகா பயிற்சி
அபாக்கஸ் பயிற்சி

என்று ஒரு மாதத்தில் பசங்களை மிகப்பெரிய வல்லுநராக்கும் முயற்சியில் ஆங்காங்கே முளைத்துள்ள summer camp ல் சேர்க்கத் துடிக்கிறார்கள்.

இதில் ரொம்ப காமெடி..குழந்தைகளோடு பழகும் பயிற்சி...ஹலோ அதை குழந்தைகள்தான் கத்துத்தரணும்..பெரியவர்கள் என்னத்தை கற்றுத்தரப்போகிறார்கள்? அப்பனிடம் இருது, 2500 ரூவா வாங்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று புலனாகியது. 

 விடுமுறையில் வில்லனாகும் பெற்றோரை எப்படி கதற விடலாம்  என்று சிந்தித்துக்கொண்டே சிறார்கள் சாலையைக் கடப்பது கண்கூடாகத் தெரிகிறது. இவர்களுக்கு பள்ளிக்கூடமே தேவலை.. இந்த லீவு விட்டிருக்கவே வேண்டாம் என்று நினைக்கும் வண்ணம் டார்ச்சரை அனுபவிக்கிறார்கள்.

 பெற்றோரின் ஒரே பிரச்னை.. ஒரு மாசம் வீட்டில் இருந்தால், வீடே ரெண்டு செய்வார்களே என்றுதான்.!! அதற்குத்தான் பிள்ளைகள். ! அதை சகிக்கும் வகையில் ஆக்கிக்கொள்ளும்போதுதான் நம் வாழ்வு இனிக்கும்.! அதைவிடுத்து பயிற்சியில் சேர்த்தே கொல்லும் கலாச்சாரம் பயமுறுத்துகிறது.

நான் என் பையனை போடா! போய் கிராமத்துல ஒரு மாசம் நல்லா புழுதில விளையாடிட்டு வா என்று அனுப்புகிறேன்..! பார்த்துக்கொள்ள இருதரப்பிலும் அன்புநிறை பாட்டி, தாத்தாக்கள் இருக்கிறார்கள். உறவுகளைக் கற்றுக்கொள்ளட்டும்.. சம்மர் கேம்பில் சக்கரக்கால் ஓட்டக்கற்றுக்கொண்டு அவன் ஒன்றும் செய்யப்போவதில்லை. மனிதம் பழகட்டும்.

அவர்களை பயிற்சிக்கு அனுப்புவது இருக்கட்டும்..! குழந்தைகளிடம் நாம் கற்க வேண்டிய அன்புப் பயிற்சியை எந்தக்கோடையில் கற்றுக்கொள்ளப்போகிறோம்?

********************************************************************
சென்ற மாதத்தில் கன்னாபின்னாவென்று வேலை ! மூன்று திரைப்படங்களுக்கு திரைக்கதை பின்னுவதிலும், ஒரு புத்தகம் எழுதுவதிலும் ஆழமாகக் கழிந்தது. இதற்கிடையே பயிற்சி வகுப்புகள் வேறு!

மே ஒன்றாம் தேதி. .தொழிலாளர் தினத்தில் சத்தியம் தொலைக்காட்சியில் தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் அதைச் சரியாகப்பயன்படுத்தவில்லை என்ற விவாதத்தில் பங்கெடுத்தேன். சுவாரஸ்யமாகச் சென்றது.
     என் வாதம் இப்படி இருந்தது. : அரசு தொழிலாளர்களுக்கான நடைமுறைகளையும், உரிமைகளையும் வகுத்த்துக்கொடுத்துள்ளது. அதை நியாயமான முறையில் கேட்டுப்பெற தொழிலாளர்களிடையே ஒற்றுமை இல்லை. ஆகவே நிர்வாகங்கள் மகிழ்ச்சியாக விளையாடுகின்றன. அதற்காக ஒட்டுமொத்த நிர்வாகங்களையும் குறை சொல்வதற்கில்லை. சில நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை மிகவும் சிறப்பாக நடத்துகின்றன என்று பதிவு செய்தேன். தொழிலாளர்களை போலீஸ் அடிக்கிறது என்ற வாதத்துக்கு, அவர்களும் ஒரு வித தொழிலாளர்கள் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களால் சங்கம் தொடங்கமுடியாது என்றேன். முக்கியமாக எதையுமே கேட்டால் கிடைக்கும் என்று வலியுறுத்தினேன். கம்பேனி விளம்பரத்தை அப்புறம் எப்படித்தாம்பா செய்யுறது என்று நினைத்தாலும்.. ஒரு உண்மை பரவட்டுமே என்றுதான்..

அடுத்து வரும் வாரங்களில் ஒரு திங்கள்கிழமை காலை 8 மணிக்கு நான் பங்குபெற்ற சந்தித்த வேளை நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.

*******************************************************************



   நானோ , யாரோ அந்தக்காரை வாங்கியிருந்தாலும், உடனே ’ஓ..அதுவா?’ என்று கேட்கும் வழக்கம் அதிகமாகிவிட்டது. ஆம்.. அதில் ஏறாமலோ, அதை ஓட்டிப்பார்க்காமலோ இருப்பவர்கள்தான் அதைக் குறை சொல்கிறார்கள். உள்ளே மிகவும் ரிலாக்ஸாக உட்கார முடிகிறது. ஆட்டோ போல் குறுகிய பாதைகளில் ஓட்ட முடிகிறது. ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது. மைலெஜும் 20 வருகிறது. பப்பாளி ஆரஞ்சு வாங்கியிருக்கிறேன். பெயர்தான் நானோ என்று இருக்கிறதே ஒழிய.. கார் மெகா தான்..!! விலையும் கொஞ்சமில்லை. ரோட்டில் ஏற்றும்பொழுது 2.6 லட்சம்!

காரில் பிரச்னை இல்லை! அது என்னை வந்தடைவதற்குள்… ஒரு கேட்டால் கிடைக்கும் நடந்துவிட்டது. அடுத்த பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது.
             *******************************************************************
வாயுதூதனின் வாஞ்சையால், சென்னையில் மின்வெட்டு இல்லாமல் இரண்டு நாட்கள் கழிந்துவிட்டது.. என்று அவர் பீஸைப்பிடுங்குவார் என்று தெரியவில்லை. அரசு செய்யததை இயற்கை செய்கிறது….. இப்போதுகூட அதைப் புரிந்துகொள்ளாவிட்டால்….சுனாமிதான்..!


               *******************************************************************

மே மாதத்தில் 7 ம் தேதியிலிருந்து 20 நாட்கள் வட இந்தியப் பயணம், ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீஹார், ராஜஸ்தான் என்று பல்வேறு மாநிலங்கள்… பல்வேறு மின் உற்பத்தி நிலையங்கள்! ஒரே வேலை! பயிற்சி வகுப்புகள்..!!
வாணலியிலிருந்து தப்பித்து…அடுப்பில் விழாமல் இருக்கவேண்டும்! J  

நான் அவர்களைச் சொன்னேன்.. !




Saturday, April 28, 2012

ஒரு பேரீச்சையும் , இரண்டு மிக்ஸிகளும்..!!





     இரண்டு மிக்ஸிகளைப்போட்டு ஒரு பேரீச்சை வாங்கின கதையான்னு நினைக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு…

மறுபடியும் கேட்டால் கிடைக்கும் என்று நிரூபித்திருக்கிறது இந்த உலகம்.!
இந்த ஏப்ரல் 14 அன்று புதுக்கோட்டை சென்றிருந்தேன். அங்கு ஒரு லயன் டேட்ஸ் பேரீச்சை அரைக்கிலோ பெட்டி ஒன்று வாங்கிக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தாயிற்று.!

பெட்டியை பிரிக்காமலேயே வைத்திருந்து, 19ம் தேதி அதைப் பிரித்து ஒரு பழம் எடுத்து தின்னலாம் என்று பார்த்தால், முதல் பழத்திலேயே வாலைக்குழைத்துக்கொண்டு, மூக்கை நீட்டியது ஒரு குட்டி வெண் புழு ஒன்று!

திடுக்கிட்டுப் போனேன். சரி.. ஒரு பேரிச்சையில் தான் இருக்கும்போல என்று அடுத்ததை எடுத்தால் அதில் ஒரு கருப்பு நிற குட்டீஸான வண்டு.. புழுவின் பெரியக்கா போலிருக்கிறது. அப்புறம் சில பழங்கள் சுத்தமாக இருந்தது. மீண்டும் புழு..!

ஆஹா.. பழைய சரக்கை வாங்கிவிட்டோம் போலிருக்கிறதே என்று நினைத்து டப்பாவைப் பார்த்தேன். தெளிவாக மார்ச் 2012 என்று போட்டிருந்தது. ஆக இன்னும் ஒரு மாதம் கூட முடியவில்லை. அதில் நான்கு மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று போட்டிருந்தது.

இதை இப்போது எப்படி மாற்றுவது என்று யோசிக்கும்போதே, தங்கமணி,
‘அவ்வளவுதான்! குப்பைல போடவேண்டியதுதான்..! இதுக்காக எடுத்துக்கிட்டு புதுக்கோட்டைக்கா போவீங்க? ம்….நீங்க போனாலும் போவீங்களே? என்று கறுவினார்.

இது என்னடா சோதனை என்று எண்ணிக்கொண்டே, அந்த டப்பாவை சுற்றி சுற்றிப் பார்த்தேன். கஸ்டமர் கேர் எண் கிடைக்கும்..அதில் கேட்கலாம் என்று! ஆனால் அப்படி ஒரு எண் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. மீண்டும் மிகவும் கூர்ந்து தேடியதில் ஒரு எண் அச்சிடப்பட்டிருந்தது. அதில் , யாரும் அவ்வளவு சீக்கிரம் படித்துவிடக்கூடாது என்பதில் அவர்களுக்கிருந்த கவனம் தெளிவாகத் தெரிந்தது.

பரவாயில்லை என்று அதையும் லென்ஸ் வைத்து எண்ணைக் குறித்துக்கொண்டு அவர்களுக்கு போன் அடித்தேன். ஒரு பெண்மணி எடுத்தார். விபரம் சொன்னேன்.  

உடனே, உங்களுக்கான தீர்வு இன்னும் இரண்டு நாளில் கிடைக்கும் சார்! என்று சொல்லி, என் பெயர் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை வாங்கிக்கொண்டார்..

இரண்டு நாட்களுக்குப்பிறகு ஒன்றும் நடக்கவில்லை. மீண்டும் மூன்றாவது நாள் அழைத்தேன். அந்தப் பெண் விடுப்பில் போய்விட்டார். (அனேகமாய் நான் அழைப்பேன் என்று நினைத்திருப்பாரோ? J ) வேறொரு பெண் எடுத்தார். அவரும் விபரம் கேட்டார். எனக்கு மூக்கு வாசலில் நின்றிருந்த கோபம் வாயில் படி ஏறியது.

‘டெய்லி உங்களுக்கு பிரச்னையை சொல்ல நான் இல்லை..! உங்களுக்கு மேலதிகாரி யாரேனும் இருந்தால் போனைக்கொடுங்க இல்லையென்றால், நான் என்ன செய்யணுமோ செஞ்சுக்குறேன் என்றேன்.

அடுத்தவினாடி போனில் ஒரு ஆண்குரல் கேட்டது. அவர் மிகவும் தன்மையாகப் பேசினார்.

நான் பெயர் மட்டும்தான் சொல்லுவேன். என் பிரச்னையை ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. இதற்குமேல் நான் சொல்லமாட்டேன் என்றேன்.
ஓக்கே சார்..! என்று சிலவினாடிகளில்.. நீங்கள் வாங்கிய டேட்ஸ் டேமேஜ் என்று போட்டிருக்கு சார்.. ! என்னவிதமான டேமேஜ் என்று தெரிந்துகொள்ளலாமா? என்றார். நானும் சொன்னேன்.

உங்கள் நியாயம் புரியுது சார். ! கட்டாயம் உங்களுக்கு உதவுறோம். இன்னும் ரெண்டு நாளில் தீர்வு வந்துடும் என்றார்.

மீண்டும் இரண்டு நாள் ஆனது. அப்போதுதான் எனக்கும் இணையதளத்தில் லயன் டேட்ஸின் தலைமை அலுவலகத்தைத் தேடினால் என்ன என்று நினைத்தேன். அதேபோல் திருச்சி லயன் டேட்ஸின் முகவரியும், எண்ணும் கிடைத்தது. அதற்கு உடனே அழைத்தேன். அப்போது மாலை 4 மணி..!!

ஒரு பெண்மணி எடுத்தார். விபரம் சொன்னேன்.  கொஞ்சம் அதிக டோஸும் விட்டேன்.

நீங்க என்ன நடவடிக்கை எடுக்கப்போறீங்கன்னாவது சொல்லுங்க! இல்லைன்னா நான் என்னிடம் உள்ள பேரீச்சையை ஒரு லேபில் கொடுத்து நச்சுப்பொருள்னு சான்றிதழ் வாங்கி உங்களை கவனிச்சுக்குறேன் என்றேன்.

உங்களை இன்னும் பத்துநிமிடத்தில் கூப்பிடுறேன் சார்! என்று அந்தப்பெண் சொன்னார்.
சரியாக 8வது நிமிடம் அழைத்தார்.

சிரமத்துக்கு மன்னிக்கணும் சார்.! உங்களுக்கு நாங்கள் மாற்று பேரீச்சம்பழ டப்பா அனுப்புகிறோம். பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கொரியர் எண்ணை மாலையில் அழைத்து சொல்கிறேன் என்றார். அதேபோல் மாலை அழைத்து சொன்னார்.

அடுத்த நாள் காலை 11 மணிக்கு ஒரு முழுமையாக பேக் செய்யப்பட்ட, அரைக்கிலோ லயன் டேட்ஸ் பேரீச்சை என் வீடுதேடி வந்தது.

அதில் ஒரு அற்புதமான கடிதமும் இருந்தது.

அதன் சாராம்சம் இதுதான்.

எங்கள் தயாரிப்பை வாங்கியதற்கு நன்றி!
அதில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு மிகவும் வருந்துகிறோம். அப்படி எப்போதும் நடப்பதில்லை. ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது. மன்னிக்கவும். உங்களுக்கு அரைக்கிலோ பேரீச்சை அன்பளிப்பாக அனுப்பிவைத்துள்ளோம். பெற்றுக்கொள்ளவும்.

தங்கமணி அப்போதுதான்…கேட்டால் கிடைக்கும் என்று நம்பினார்.

  இந்த விஷயத்தில் லயன் டேட்ஸ் சிறந்த சேவைதான் செய்திருக்கிறார்கள். நான் உண்மையில் இங்கு ஏதாவது ஷோரூமில் கொண்டு கொடுத்துவிட்டு மாற்று பெட்டி வாங்கிக்கொள்ள சொல்வார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், புதிதாக ஒரு பொருளே அனுப்பிவிட்டார்கள்.

  ஒரு வாடிக்கையாளர் பொய் சொல்லமாட்டார் என்று அவர்கள் நம்பியதற்கு இதுவே சாட்சி! அவர்களை நான் கூப்பிட்டு முதலில் அன்பாகக் கேட்டு, பின்னர் கொஞ்சம் அதட்டி என்று அனைத்தும் நடந்தது கஸ்டமர் கேர் கால் செண்டரில்தான். அவர்கள் அனேகமாக லயன் டேட்ஸின் அவுட் சோர்ஸிங் கால் செண்ட்டராக இருக்கலாம். அதனால் அவர்களது பதிலில் கொஞ்சம் கவனமின்மை இருந்தது.

  தலைமை அலுவலகத்துக்குப் போன் போட்டபின் உடனே மாற்றுப்பொருள் வந்தது மிகவும் திருப்தியை ஏற்படுத்தியது.

இது…கேட்டதால்தான் கிடைத்தது. இல்லையேல் , புழு வந்த பேரீச்சையை தூக்கிப்போட்டுவிட்டு மற்ற வேலையைப்  பார்க்கப் போயிருக்கலாம். ஆனால் ஒரு வாடிக்கையாளரின் உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று நினைத்ததால், கேட்டேன். கிடைத்தது.
ஆதலால்தான்..மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்… கேட்டால்..கிடைக்கும்!


அடுத்து மிக்ஸிக்கு வருவோம்.


ராஜமாணிக்கம் என்ற திருப்பூர் நண்பர்..

இரண்டு ப்ரீத்தி மிக்ஸிகள் வாங்கியிருக்கிறார். அதில் ஐ எஸ் ஐ முத்திரை இல்லை. அப்போதே கேட்டிருக்கிறார். அதுக்கு ஏன் சார் கவலைப்படுறீங்க! ப்ரீத்திக்கு நாங்க கேரண்ட்டி என்று சொல்லியிருக்கிறார்கள்.

அரைகுறையாக ஏற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்று போட்டுப்பார்த்தால், புஸ்ஸென்று புகைவந்து மிக்ஸி மண்டையைப் போட்டுவிட்டது.

உடனே அவர்களிடம் கொண்டு சென்றால்…

அது கம்பெனி வாரண்ட்டிதான். அங்கு கொண்டு சென்று கொடுங்கள் என்றார்களாம்.

அங்கு கொண்டு சென்றால் அந்த மிக்ஸியை வாங்கி வைத்துக்கொண்டு ரிப்பேர் செய்து தருவதாக 15 நாட்கள் அலைய விட்டிருக்கிறார்கள். 

பின்னர்தான் எங்கள் கேட்டால் கிடைக்கும் முகப்புத்தக பக்கத்தில்…அதைப்பற்றி புலம்பியிருந்தார்.

நான் உடனே ப்ரீத்தியின் இணையதளத்துக்குப் போய், திருப்பூர் கிளையின் மின்னஞ்சலை எடுத்து.. கீழ்க்கண்ட மெயில் அனுப்பினேன்.

//   வணக்கம்..
  
எங்களுக்கு உங்கள் நிறுவனம் பற்றி ஒரு புகார் வந்திருக்கிறது.
அதனை சரி செய்யவும் 
அப்படி சரி செய்தபிறகு பதில் மின்னஞ்சலும் செய்து விடவும்.

வாடிக்கையாளர் பெயர் : வீரா ராஜமாணிக்கம்
ஊர் : திருப்பூர்

வாங்கிய இடம் : பிக் பஜார்.

அவரது முதல் புகார். . உங்கள் மிக்ஸியில் ISI முத்திரை இல்லை என்பது.. அது உண்மையெனில்.. உங்கள் நிறுவனத்தையே சட்டத்தின் முன்னால் இழுக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.

இரண்டாவது புகார் , வாங்கிய உடனேயே மிக்ஸி புகைந்தது என்பது... அதற்கு நீங்கள் கேள்வியே கேட்காமல், புதிய மிக்ஸி மாற்றித்தந்திருக்கவேண்டும்.

இன்னும் அந்த வாடிக்கையாளரை அலைய விடுகிறீர்கள் என்று தெரிகிறது

இதற்கு மேலும் உங்கள் கவனமின்மை தொடர்ந்தால்,  கட்டாயம் மிக்ஸி விலையை விட அதிகமாக நீங்கள் நஷ்ட ஈடு தரவேண்டியிருக்கும்.

உடனடியாக இதை கருத்தில் கொள்ளவும்

நன்றி

சுரேகா
கேட்டால் கிடைக்கும் //

மேலும் நமது கேட்டால் கிடைக்கும் நண்பர்களையும், இது சம்பந்தமாக அந்த எண்ணுக்கு அழைத்து விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அன்று நம் நண்பர்கள் போன் போட்டு அவர்களைப் பின்னி எடுத்துவிட்டார்கள்.

அடுத்த நாள் காலை, புதிய மிக்ஸி ஒன்று அவரது வீட்டுக்கே சென்று கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது மிக்ஸியும் அதற்கடுத்த நாளே கொண்டுபோய் கொடுத்திருக்கிறார்கள்.

அது தவிர.. அந்த நிறுவனத்தின் AGM எனக்கு கீழ்க்கண்டவாறு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

//Dear Sir


We are in receipt of your e mail dt.25th April 2012 about Mr Raja manikkam Preethi Mixie issue  and regret to note the contents. We are committed to quality, customer service and satisfaction and it is our constant endeavor to meet the changing needs of our customers.

Regarding your specific query, (a) We have already replaced the motor on the same day, (b) We have replaced the Mixie unit by this day, to satisfy the consumer requirement, even though, at present there is no fault in the Mixer and (c) attached customer satisfied report for your reference.


This is for your information.


Thanking you,

Yours faithfully

For Preethi Kitchen Appliances (P) ltd.//


மேலும் அவர் வீட்டில் டெலிவரி செய்த சலானும் எனக்கு ஒரு பிரதி வந்திருக்கிறது.

ஊர்கூடித் தேரிழுத்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்று இந்த சம்பவம் உணர்த்தியிருக்கிறது.

இந்த சம்பவத்தில் தொலைபேசிய நண்பர்கள் அனைவருக்கும் கேட்டால் கிடைக்கும் சார்பாக, கேபிள்சங்கர், சுரேகா சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த மாசத்துக்கு ஒரு பிரச்னை ஒய்ந்தது என்று நினைத்தால்..

கார் ஆடியோ பிரச்னை ஒன்று வரிசையில் நிற்கிறது..!! அதை முடிச்சுட்டு சொல்றேனே..!!

Monday, April 2, 2012

குதிரை(க்கொம்பு) யாவாரம் -2






என் மகளுக்கு தன் பள்ளியில் இடம் இல்லையென்று அந்த முதல்வர் சொன்ன பின், தங்கமணி அழ ஆரம்பித்துவிட்டார். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத முதல்வி அவர்கள் எங்கள் இருவரையும் பார்த்து, ‘பட்டாக்’ என்று இருகரம் கூப்பி வணங்கி….தயவுசெஞ்சு போய்ட்டு வாங்க என்றார். ‘Get out’ என்று நாகரீகமாகச் சொன்னதை மனம் ஏற்க மறுத்தது. மேலும் நான் பேச ஆரம்பிக்க..

ஒரு பிரின்ஸிபால்…நானே இறங்கி வந்து உங்ககிட்ட கைகூப்புறேன். அதுக்கப்புறமும் என்ன இது ….திரும்பத்திரும்ப கேக்குறீங்க? என்று குரலை உயர்த்த… அந்த ‘நானே’ வில் இருந்த அகந்தை, என்னை அசைத்துப்போட்டது. குரலை உயர்த்தலாம் என்று நினைக்கும்போது, காலைக்கட்டிக்கொண்டு தான் படித்த அத்தனையையும் உளறிக்கொண்டிருந்தாள் என் வீட்டு தேவதை..!!

எப்போதும் கொண்ட கொள்கையில் மனம் தளராமல் ருத்ர தாண்டவமாடும் சுரேகா என்ற மானஸ்தன், ’பவ்’ என்றுகூடக் கத்தமுடியாமல் நொந்துகொண்டே வெளியில் வந்தான் .

நடந்தவை எவற்றையும் விளங்கிக்கொள்ளமுடியாமல்,
நாளைலேருந்து ’அண்ணன் ஷூல்லதான் நானும் பதிக்கப் போதேனா?’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் மாணவியாக வேண்டிய மகள்!

தங்கமணியின் கண்ணீரை வைத்து ஆறு டம்ளர் உப்புக்கரைசல் தயார் செய்யலாம்போல் இருந்தது. அதைப்பார்த்து எனக்கே உலகம் அவுட் ஆஃப் போகஸில் தெரிய ஆரம்பிக்க.. கர்ச்சீப்பை எடுத்து லென்ஸைத் துடைத்து ஃபோகஸை சரி செய்துகொண்டேன். # ஆம்பளை அழக்கூடாது சுரேகா! மனசாட்சி வேறு மல்லுக்கட்டியது…

‘என்ன இப்படி பண்ணிட்டாங்க… என்று இருவரும் கறுவிக்கொண்டே வர..

இன்னா சார்! பாப்பாக்கு சீட் வோணுமா என்று ‘ஆட்டோ வோணுமா! என்பது போல் ஒரு குரல் இரகசியமாய்க் கேட்டது.

திரும்பிப் பார்த்தால்..அந்தப் பள்ளியின் கடை..கடை..கடை…நிலை ஊழியர்..!!
உன் நம்பர் குடு சார்… வெளில வந்து மிஸ்டு கால் தரேன்.. வெவரம் பேசுவோம்..!!

என்ன வெவரம் பேசணும்?

ம்மா..சொல்லும்மா சாராண்ட !  சீட் வேணுமா..வேணாவா?

நான் நம்பர் சொல்றேன் என்று என் எண்ணை ஒளிவேகத்தில் சொல்லிமுடித்தார் தங்கமணி..!! பதிலுக்கு அவர் எண்ணையும் வாங்கிக்கொண்டு அந்த தொடர்பை பூர்த்தி செய்தார். Completion of Communication Theory நினைவில் வந்து தொலைத்தது… # இவர் பெரிய மேனேஜ்மெண்ட் குருவாம்..!!

அவரை வெளியில் வந்ததும் தொடர்புகொண்டோம். ட்விட்டரை மிஞ்சும் வகையில் 100 எழுத்துக்களுக்குள் பேசினார்…

குழந்தைக்குக் கட்டவேண்டிய முழுக் கட்டணத்தொகையை… அப்படியே தனது கட்டிங்காகக் கேட்டார். அதற்குப் பிறகு நாம் பள்ளிக்கட்டணம் தனியாகக் கட்டவேண்டும். இது சேவைக்கட்டணம் மட்டுமே! (இங்கு லஞ்சம் என்பது கடமையை மீற எனக் கொள்க!) அந்த சமூக சேவகர். ! (அந்தப்பள்ளியில்தான் சீட் வேண்டும் என்று கல்விக்குத் தத்தளிக்கும் சமூகத்துக்கு சீட் வாங்கிக்கொடுக்கும் சேவகர் சமூக சேவகர்தானே…? )

‘சீட் கெட்சப்புறம் பணம் குடு சார்.. எல்லாம் மேல உள்ளவங்க பண்றது..நம்ப கைய்ல எதுவ்மே கெடியாது.!  .என்று நியாயம் வேறு சொன்னார்.

நான் முதலில் கட்டாயமாக மறுத்தேன்..!! அரிச்சந்திரன் ஆக யத்தனித்தேன். ஆனால்..
அதற்குப்பிறகு காட்சிகள் மாறின..

பல்வேறு மறுத்தல்கள், ஒப்புதல்கள், சண்டைகள்,
படிப்பைத்தவிர வேற என்ன செய்யப்போறோம்..

நமக்குத்தான் நேர்வழில சீட் வாங்க துப்பு இல்ல!

அவனவன் லட்சக்கணக்குல பணம் கட்டி பிள்ளைங்களைப்படிக்க வைக்கிறான்..!

வேற எந்த ஸ்கூல்லயும் இனிமே சேக்க முடியாது.. ரெண்டு ஸ்கூல்..ரெண்டு வேன்னு நான் திண்டாட முடியாது..!

‘ஒங்களுக்கு பிள்ளைங்க எதிர்காலத்துல அக்கறையே இல்லையா?

என்ற பிரம்மாஸ்திரம் உட்பட அத்தனை அம்புகளையும் வாங்கிக்கொண்டு…கர்ணன் தேருக்கடியில் அமர்ந்திருந்த கோலம் நினைவில் வந்தது. தான தர்மத்தைக் கொடுப்பதுபோல்….சீட் வாங்கிக்கொடுக்கும் கண்ணனுக்கு… பணம் தருகிறேன் என்று சொன்னதுதான் தாமதம்..!! படாரென்று குழந்தையின் அப்ளிகேஷன் எண் மற்றும் பெயர் வாங்கிக்கொண்டார்..அன்று இரவு தூக்கமே வரவில்லை..! #உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது பாட்டு வேறு…!! இவர் கர்ணனாமாமாம்..!!

அடுத்த நிகழ்வுகள் சட சட வென சடுதியில் நடந்தேறியது.

   அதேபோல் இரண்டே நாட்களில் நேர்முகத்தேர்வு அழைப்பு… அது கண் துடைப்பு என்று தெரிந்தே சென்றதால்..எங்கள் அலைப்பறைக்கு அளவே இல்லை..

  குட்டிக்கு இது டகால்ட்டி இண்டர்வ்யூ என்று எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. அவளும்.. ஆ வைக்காட்டி எ என்றாள். P ஐக் காட்டி D என்றாள். கருப்பை , வெள்ளை என்றாள். அனைத்துக்கும்.. அந்த டீச்சர் ஓ.. அப்படியா என்று மிகச்சரியாக பதில் சொன்னதுபோல், அன்பாக ஆமோதித்து,..அப்படியே ரைட் சைட் போனீங்கன்னா பிரின்ஸிபால் ரூம்…அங்கபோய் அவங்களைப் பாத்துருங்க! என்றார்.


பிரின்ஸிபால் ரூமுக்குச் செல்லும் தூரம் அதிகமாவதுபோல் இருந்தது. லேசாக தடுமாற்றம் வேறு..ஆனால்..பணம் கொடுத்து சேர்த்திருக்கோம். ஏன் பயப்படணும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு, லந்தாக உள்ளே நுழைந்தோம்.

எங்களைக் கண்டதும், அவர் கண்ணில் மிக மிக மைக்ரோவாக ஒரு ஜெர்க்..

பின்னர் சுதாரித்துக்கொண்டு..

சந்தோஷம்..பாப்பாவை சேத்தாச்சா!

இதான் இந்தப்பள்ளிக்கூடத்தோட சட்டதிட்டங்கள். இத்தனாந்தேதி ஓப்பன் பண்றோம். இங்க போய் யூனிபார்ம் வாங்கிக்குங்க என்று இதுவரை பார்த்தேயிராத இருவரிடம் பேசுவதுபோல் சிறப்பாக நடித்தார்..#ஊரில் நடிக்க ஆள் கிடைக்காம தடுமாறுது எங்க சினிமா இண்டஸ்ட்ரி..!!

நான் செய்த அளும்பு அதற்கு மேல்.!.அவர் முன் கால் மேல் கால் போட்டுக்கொண்டு,.. அவர் ரூமையே சுற்றிப்பார்த்துக்கொண்டு.. அவரை உற்றுப் பார்த்துக்கொண்டு… என வஞ்சம் அனைத்தையும் தீர்த்துக்கொண்டேன்.

அறையைவிட்டுக்கிளம்பும்போது…இரு கைகளையும் பட்டார் என்று கூப்பி வணக்கம் வைத்து.. ’ போய்ட்டு வரோம் மேடம்’ என்றேன். என்னால் செய்யமுடிந்த ஒரே பழிவாங்கல்! ஆனால்..விலைதான் மிக அதிகம்..!! ஆனால், தங்கமணியின் சிரிப்பின் வெளுப்பில்… ஒரு டே நைட் ஐபிஎல் மேட்சுக்கு ஒளி கொடுக்கலாம் போலிருந்தது.

வாசலில், நம்ப புண்ணியவான் சொன்ன இடத்தில் சொன்ன தொகையை சொன்ன மாதிரி கொடுத்துவிட்டு பிரின்ஸிபாலுக்கு வைத்திருந்த வணக்கத்தை அவருக்கு வழங்கினேன். ஏனெனில் சீட் வாங்கிக் கொடுத்தவர்தான் என்னைப் பொறுத்தவரை அந்தப் பள்ளியின் முதல்வர்!

மொத்தத்தில்..குட்டிப்பாப்பா LKGயில் சேர்ந்துவிட்டாள்.

இப்படியாக முதல் வாரம் சீட் இல்லையென்று துரத்திவிடப்பட்டு அழுதுகொண்டே வெளியேறிய நாங்கள்…அடுத்த வாரத்துக்குள் ஒரு ஆண்டுக்கான கட்டணத்தை அதிகப்படியாக அழுதுவிட்டு சீட் கிடைத்த பெருமிதத்துடன் அதே பள்ளியிலிருந்து சிரித்துக்கொண்டே வெளியில் வந்தோம்..

சொந்தங்களுக்கு ஃபோன் பறந்தது.

‘ பாப்பாவை ஸ்கூல்ல சேத்தாச்சு! ஒரு பிரச்னையுமில்லை…ஸ்வீட் எடு கொண்டாடு! …!!

ஆனால்…இதன் பின்னணிப் பிரச்னைகள் அனைத்தும் எனக்கு பூதாகரமாகத்தெரியவந்துள்ளது. எவ்வளவு பெரிய குதிரை வியாபாரம்.. அதன் கொம்பாக மாற்றப்பட்டு, வியாபாரத்தின் விலை இன்னும் அதிகமாக்கப்படுகிறது என்பதும் புரிந்திருக்கிறது. 

சிரித்துக்கொண்டே இதைக் கடந்து போகிறவனில்லை நான்..!! என்ன செய்யப்போகிறேன் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்..! இந்தப் பிரச்னையை மிகவும் லாவகமாகக் கையாள வேண்டியிருப்பதால்.. இது ஒரு இடைவேளைதான்..!! பல மாதங்கள் கழித்து, வெடிக்கும்போது அனேகமாக ஒரு செய்தித்தாளில் என் சிரிக்கும் புகைப்படத்தை நீங்கள் கண்டாலும் ஆச்சரியமில்லை.





Saturday, March 31, 2012

குதிரை(க்கொம்பு) யாவாரம்











      சென்னையில் பள்ளிகள் தேர்வுகளை முடித்து, விடுமுறை விட ஆரம்பித்துவிட்டன. ஆனால், பெற்றோர்களுக்கு மிகப்பெரிய தேர்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு சீசனிலும், ஒவ்வொரு செயலில் நாம் அதிகம் ஈடுபடவேண்டியிருக்கிறது. அதுவும், பிள்ளையை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது என்பது ஒரு பேயடித்தல்தான்..!!

தங்கள் வீட்டுக் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முனைப்புடன், யாருடனாவது பேசிக்கொண்டோ, சிந்தித்துக்கொண்டோ, மண்டை காய்ந்துகொண்டோ செல்லும் தந்தைகளை, தாய்களை அல்லது தம்பதிகளை சாலைப்பயணங்களில், அலுவலக வளாகங்களில், வணிகக் கூடங்களில் இந்தக்காலகட்டத்தில் எல்லோரும் சந்திக்கலாம். அது நாமாகக்கூட இருக்கலாம்.

ஏன் இவ்வளவு பீடிகை என்று கேட்பதற்கு முன்னால்…நிற்க!
உங்கள் நினைப்பு சரிதான். எங்கள் வீட்டின் குட்டிப்பெண்ணை பள்ளியில் சேர்க்கும் நிலை வந்துவிட்டது. அவள் பள்ளி செல்ல அழுவதற்கு முன்னால், நம்மை அழுக அடிக்கிறார்கள்.

      ஒரு தனியார் பள்ளியில், அதுவும், அவள் அண்ணன் படிக்கும் பள்ளியிலேயே சேர்க்கும் ஆவலில்… நவம்பரிலிருந்தே நடையாய் நடந்து, விண்ணப்பம் வாங்க ஒரு டோக்கன் கொடுத்தார்கள். அதை வைத்துக்கொண்டு அவர்கள் சொன்ன தேதியில் ஜனவரியில் ஒரு புதன்கிழமை சாலை வரை நின்ற வரிசையில் தேவுடு காக்கவேண்டியிருந்தது. அப்போது நம்மை நான்காவது கூட படித்திராத செக்யூரிட்டி…’இப்டிக்கா நில்லு சார்! அப்டீக்கா நில்லு சார்..! பட்ச்சவங்கதானே நீயி..! என்று வரிசையில் நிற்பவர்களை சரமாரியாகத்திட்டி நம் கல்விச்சான்றிதழ்களை வாயாலேயே கிழித்தெறிந்தார். சரி.. வேதாள உலகத்துக்குள் போக இது ஒரு கட்டம் போலிருக்கிறது என்று பொறுத்துக்கொண்டு, உள்ளே சென்றால்.. அன்று விண்ணப்ப நேரம் முடிந்தது என்று சொல்ல ‘ கேட்டால் கிடைக்கும்’ நரம்பு வேலை பார்த்தது.

        கொஞ்சம் அழுத்திக் கேட்டதில். தானாக விண்ணப்பம் கை நோக்கி வந்தது. ஒரு விண்ணப்பத்துக்கு நான் கொடுத்த தொகையை வைத்து, A4 டம்மி ஷீட்டில், இரண்டு கலர்கள் கொண்ட அப்ளிக்கேஷன்கள் 500 காப்பிகள் அடிக்கலாம். அந்த வரிசையில் என்னைப்போன்று 600 பேர் நின்றுகொண்டிருந்தோம். ஆக, அப்ளிக்கேஷன் காசை வைத்துத்தான் அவர்கள் அடுத்த வகுப்புக் கட்டிடம் கட்டப்போகிறார்கள் என்பது உள்ளங்கை வெள்ளைத்தாளாகத் தெரிந்தது.

        அய்யோ..அடித்தல் திருத்தல் இல்லாம எழுதுங்க! பாத்து..பாத்து என்று விமானத்தை தரையிறக்கும் லாவகத்துடன் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தன்னை மாங்காட்டில் அருள்பாலிக்கும் அம்மனாகவே நினைத்துக்கொண்டு அதிகாரம் செய்துகொண்டிருந்த ஒரு அம்மாவிடம் (அந்தப்பள்ளியின் அலுவலர்) பவ்யமாக, காலில் விழுந்தால்கூடத்தவறில்லை எனும் அளவுக்குத் தவழ்ந்து கொடுத்துவிட்டு வந்தாயிற்று.!

      நம் மகன் அந்தப்பள்ளியில் படிப்பதால், கண்டிப்பாக சீட் கிடைத்துவிடும் என்று அன்றே பாயசம் தயாராகியது.

எப்போது நேர்முகத்தேர்வுக்கு அழைப்பார்கள் என்று தெரியாமல், தினமும் அ முதல் ஃ வரையிலும் ஆங்கில எழுத்துக்களையுமே மூன்றுவேளையும் ஊட்டி, ஒரு கொதிநிலையிலேயே மூன்றுவாரங்களுக்கு வீடு இருந்தது.

வரும் ஞாயிறன்று நேர்முகத்தேர்வு என்று ஒரு குறுஞ்செய்தி அந்தப் பள்ளியிலிருந்து வர, வீடே அல்லோகலப்பட்டது. எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று ஒரு கேன் கோல்ட் வின்னர் எண்ணையை ஹாலில் கொட்டிவிட்டு அதில் வழுக்கி விளையாடிக்கொண்டிருந்தாள் பள்ளிசெல்லவேண்டிய பைங்கிளி!

ஞாயிறும் வந்தது.
பள்ளியிலும் கூட்டம் அலைமோதியது.

நம் குழந்தைக்கு எங்கே நேர்முகத்தேர்வென்று நாங்கள் தேடி அலைய…அங்கிருக்கும் பள்ளி ஊழியர்கள் ஒருவருக்குமே உண்மையில் LKGக்கான நேர்முகத்தேர்வு எங்கு நடக்கிறது என்று தெரியவில்லை.

இது என்னடா சோதனை என்று மீண்டும் விட்ட இடத்துக்கே வந்தால்.. ஓ..நீங்க எல்.கே.ஜி அட்மிஷனுக்கு வந்தீர்களா? அது போனவாரமே முடிஞ்சுபோச்சே என்று சொல்லி…சாவதானமாக ஒரு லிட்டில்பாயை ஹிரோஷிமா மீது போட்டதுபோல் போட்டுவிட்டு அந்த ஆசிரியை சென்றுவிட்டார். ஜப்பானைவிட மோசமான நிலையில் நாங்கள் காட்சியளித்தோம்.

அப்போதும் மனம் தளராமல், நான் பள்ளி முதல்வரை பார்க்கவேண்டும் என்று அடம்பிடித்து, சந்தித்தால், அந்த அம்மா வீராவேசமாக..
சார். 3000 பிள்ளைங்க படிக்கிறாங்க.. ஆனா..மொத்தமே 40 பிள்ளைங்கதான் டி.ஸிக்கு எழுதிக் கொடுத்திருக்காங்க.. வேக்கன்ஸியே இல்லை.. ! உங்க பையன் இங்க படிக்கிறாங்கிறதுக்காக எல்லாம் நான் க்ளாஸ்ரூம் கட்டமுடியாது என்று ‘ உங்களுக்கு சீட் இல்லை’ என்பதை வெவ்வேறு காரணச்செங்கல்களால் அடுக்கினார்.

என் புத்திக்கு அந்தச்சூழலில்.. வடிவேலு சொல்லும் ‘ எலவு காத்த கிளி கதையில்..அந்தக் கருப்பு வேற..இந்தக்கருப்பு வேற..எனும் டயலாக் ஞாபகம் வந்தது.. இடுக்கண்ணில் நகைத்தும் தொலைத்தேன்.

அப்புறம் ஆரம்பித்தது பிரச்னை …..

ரெண்டு நாள் கழிச்சு சொல்றேனே….!

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...