Sunday, December 20, 2009

கல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள்


இரு வாரங்களுக்கு முன்பு நீயா? நானா? வில், கோபிநாத் கையாண்ட விஷயம் கல்விக்கடன்.

மாணவர்கள் தரப்பு - எவ்வளவுதான் டாக்குமெண்ட் காட்டினாலும் கடன் தரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா தரமாட்டேங்குறாங்கன்னு பேங்க் மேனேஜர்களை குற்றம் சாட்டினாங்க!

வங்கிகள் தரப்பில் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமா பதில் சொல்லி , தங்கள் இயலாமையை தன்னை அறியாமல் வெளிச்சம் போட்டுக்கிட்டாங்க!

கடைசியா...ஒரு பொண்ணு தனக்கு கடன் கிடைக்காம தான் கஷ்டப்பட்டதை சொல்ல, ஒரு மேனேஜர் நான் தரேன் அந்தப்பொண்ணுக்கு லோன் - ன்னு சொன்னவுடனே எல்லோரும் உணர்ச்சிவசப்ப்டுறமாதிரி, அந்தப்பெண்ணின் கண்ணீரில் உண்மை இருந்தது. கோபியும் அந்த அளவுக்கு அதைப் பெருமையா
கொண்டுபோனார். - அவர் சொன்னது போல் - எதையுமே திட்டமிடாம, ஆனா இயல்பெல்லாம் மீறி ரொம்ப அற்புதமா அந்த நிகழ்வு இருந்தது. அதில் அந்த மேனேஜர்க்கிட்டேருந்து ஒரு வார்த்தையை கோபி வாங்கினார். அது ' ஹ்யூமன் கன்சிடரேஷன்' ! அந்த ' மனிதனை கருத்தில் எடுத்துக்குறது' ங்கிற விஷயத்தில்தான் எல்லா பேங்கும் தோத்துப்போயிடுது.. அதே சமயம் மாணவர்களும் , எல்லாருக்கும் கல்விக்கடன் தந்தே ஆகணும்கிறமாதிரி இதை நினைக்கக்கூடாதுன்னு முடிச்சார்.


இந்த கல்விக்கடன் விஷயத்தில் அதுக்கப்புறம் நான் கொஞ்சம் ஆழமா சிந்திக்கவும், அது சம்பந்தப்பட்டவர்கள்கிட்ட விசாரிச்சு, கருத்துக்கேட்கவும் ஆரம்பிச்சேன்.

முதல்ல.. நான் சிந்திச்சது.. இது கொஞ்சம் ராவா இருந்தாலும்...இதில் அந்த ஹியூமன் கன்சிடரேஷன் இருக்கிறமாதிரிப் பாத்துக்கிட்டேன்.

1. இன்னிக்கு உலக நாடுகள், இந்தியாவின் கலாசார மாற்றங்களை கவனிச்சுப்பாத்துக்கிட்டே வந்து அதுக்கேத்தமாதிரி சந்தைக்கடையை விரிக்கிறாங்க! அதில் அவுங்க கலாசார விஷயங்களையும் புகுத்துறாங்க! அதே சமயம் , நம்ம கலாசார விஷயங்களையும் தொட்டுக்கிறாங்க...!

உதாரணமா... பீஸா , பர்கர் உணவுகள், க்ரெடிட் கார்டுகள் போன்றவை...அவுங்க கலாச்சாரம்.

சோனி ப்ளேஸ்டேஷன்ங்கிற - யாரோடயும் பழகவோ பேசவோ தேவையே இல்லாம, வூட்டுக்குள்ளயே யாரைவேனாலும் அடிக்கலாங்கிற -விளையாட்டுல இப்ப புதுசா கபடி, கில்லியெல்லாம் வந்திருச்சு! - இதுமாதிரி விஷயங்கள் நம்ம கலாசாரத்தை புகுத்துறது. ஆனா இதுலயும், நம்ம கலாசார விளையாட்டிலேயே அவன் குடுக்குற கேம்ஸ் ரூலைத்தான் நம்ம பசங்க கடைபிடிப்பாங்க!
இந்த வகையில் உருவானதுதான்.. எதுக்கெடுத்தாலும் கடன் குடுத்து இந்தியனை கடனாளியாக்கும் பழக்கம்.! ஆனா சேமிச்சு, அதில் செலவு பண்ணி வாழ்க்கை நடத்துறதுதான் நம்ம கலாச்சாரம்னு இன்றைய தலைமுறைக்கு மறந்துபோய் ஒரு மாமாங்கமாயிடுச்சு!

2. கல்வி - மேலை நாடுகள்ல எனக்குத்தெரிஞ்சு ஓவரா தனியார்க்கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன். அப்படி இருந்தா..அது இந்தியா அளவுக்கு தனியார்வசம் இருக்கான்னு விபரம் தெரிஞ்ச நண்பர்கள் சொன்னாங்கன்னா உதவியா இருக்கும். ஆனா.. இன்னிக்கு மனசாட்சிக்கு பயந்து கல்விக்கூடம் நடத்துறவுங்க மிகக்குறைவானவர்கள்தான். அதுவும் இதுல சம்பாதிக்க வேண்டியதில்லைன்னு, நடத்துறவங்களால எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா..இதை ஒரு முழுத்தொழிலா நடத்தும் புண்ணிய...ஸாரி பாவவான்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை! அவுங்க நடத்துற காலேஜ்களை நம்பித்தான் இன்னிக்கு இந்தியாவோட உயர்கல்வியே இருக்கு!

3. முதல் ரெண்டு பாயிண்ட்டும் சேரும் இடம்தான் கல்விக்கடன்....அதாவது.. நல்லாப்படிக்கிற ஒரு ஏழைக்குடும்பத்துப்பையனோ, பொண்ணோ மேற்படிப்பு படிக்கணும்னு ஆசைப்பட்டா.. அரசாங்கம் குறைவான இடமே ஒதுக்குறதால, ஏதாவது ஒரு மொக்கையான தனியார் கல்லூரிக்கு கவுன்சிலிங்கிற பேர்ல தள்ளிவிடப்படுவாங்க! அங்க போய் நின்னா...அரசாங்கம் வாங்குற பீஸே அதிகம்... அதை விட பல மடங்கு அதிகமா இவுங்க ஒரு வவுச்சரை நீட்டுவாங்க! அந்த வவுச்சரை , வவுத்தெரிச்சலோட இவுங்க எடுத்துக்கிட்டுப் போகும் இடம்தான் எதை எடுத்தாலும் கடன் தரேன்னு சொல்லும் வங்கிகள்! அதாவது...இவுங்க கல்விக்கடனா குடுக்குற காசை வாங்கி அந்த தனியார் காலேஜ் மொதலாளிக்கிட்ட குடுத்துட்டு இவுங்க கடனாளியா நிக்கணும். அவர் தான் காலேஜ் கட்டுறதுக்காக வாங்கின கடனை அதை வச்சுக்கட்டிப்புட்டு ஜாலியா திரிவாரு!

இதுல எங்க இருக்கு மாணவர் நலன்?

இன்னும் இதில் பல்வேறு கோணங்கள் இருக்கு! ஒரேயடியா ஒரு தரப்பை குத்தம் சொல்ல முடியாது..!


(தொடரும்)

Saturday, December 19, 2009

சுகம் எங்கே? காண்டேகரின் யுக்திகள்!

சுகம் எங்கே பற்றி இங்கே படித்துவிட்டு தொடர்ந்தால் நலம்...

கதை ஒரு மூன்றாம் மனிதனின் கோணத்தில் சொல்லப்படாமல், கதாபாத்திரங்களின் வாயிலாக சொல்லப்பட்டிருக்கிறது.

அதுவும் ஒரே கதாபாத்திரம் சொல்லாமல் எல்லோரும் சொல்லுமாறு, குழப்பமின்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

முதலில் முத்தண்ணா கதையை ஆரம்பித்து, ஆனந்தன் தொடர்ந்து, உஷா தன்னிலை கூறி என கதை மாந்தர்கள் மூலமாக அவர்கள் நிலையும் எடுத்துரைக்கப்பட்டு, கதையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படுகிறது.

கடைசிவரை இந்த யுக்தியில் சுவாரஸ்யம் குறையாமல் கையாண்டிருக்கிறார் காண்டேகர்.

பல அத்தியாயங்களில்...முதல் கதாபாத்திரம் விட்ட வார்த்தையிலிருந்து , அடுத்த கதாபாத்திரம் அதே வார்த்தையில் ஆனால் வேறொரு கோணத்தில் தொடர்கிறார்.

எடுத்துக்காட்டாக...
முத்தண்ணா கூறுகிறார்...

' விசுவாமித்திர முனிவர் அறுபதினாயிரம் வருஷங்கள் தவம் புரிந்தும் அவருக்கு இந்திரப்பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் முத்தண்ணாவுக்கோ மொத்தம் ஒன்பது வருஷங்களிலேயே..!

ஆனந்தன் தொடங்குகிறார்.

ஒன்பது வருஷங்கள் ! ஒன்பது வருஷங்களாக நான் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த ஒன்பது வருஷங்களில் ஒருமுறையாவது திரும்பிப்பார்க்கவில்லை. போர் வீரனுக்கு பின்னே திரும்பிப்பார்க்க ஓய்வு ஏது?

இப்படி மிகவும் அற்புதமாக ஒரு நாவலைக்கையாண்டிருக்கிறார் காண்டேகர்.

இவற்றையெல்லாம் மீறி, வாழ்வியல் வார்த்தைகள் எவ்வளவோ கொட்டிக்கிடக்கின்றன. இணையத்தில் ஒரு வரி படித்தேன்.
காண்டேகரின் நாவலைப்படிக்க உட்காரும்போது ஒரு பென்சிலையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதாக! அது உண்மைதான்! நானும் அடிக்கோடிட்டேன். அந்த வார்த்தைகள் இதோ!

'பெண் தீவிரமான அன்பினால் வாழ்கிறாள். ஆனால் அத்தகைய அன்பு உலகத்தில் எங்கே இருக்கிறது.? பெண் அன்பின்றி உயிர் வாழ்வதில்லை. ஆனால் சாவுதான் அவள்மீது உண்மையான அன்பு செலுத்தமுடியும்'

'உலகம் என்றாலே உயிர்களை மாய்க்கும் பெரிய ஆலை போலிருக்கிறது. எலிகளைப்பூனை கொன்றுவிடுகிறது. மனிதனை மனிதன் வாழவிடுவதில்லை. இந்த ஆலையை ஆண்டவன் எதற்காக அமைத்திருக்க வேண்டும்.'

'நம்முடைய மனத்துக்குத்தான் காதல், சினேகம், உறவு - இவற்றில் அற்புத ஆசை! இறந்த பின்புங்கூடத்தன்னோடு யாராவது இருக்கவேண்டுமென்று அது விரும்புகிறது..

உண்மையான அன்பு என்பது அக்கினியைப்போல் தெய்வீகமான பொருள். தியாகமின்றி, அகங்காரத்தை மறந்தாலன்றி, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தாலன்றி, உண்மையான அன்பு செய்ய முடியாது.


லட்சியத்துக்காக உயிரைக்கொடுக்கவேண்டும். உயிருக்காக உயிரைக்கொடுக்க வேண்டும். மண்ணுக்காக அல்ல!

காதல் என்பது ஒரு ரப்பர் பலூன். காற்றை நிரப்ப நிரப்ப அது அழகாகத் தோன்றும். நன்றாக உப்பும். ஆனால் அது எப்போது உடையும் என்பது மட்டும் நிச்சயமில்லை.

ஆண் பெண்ணின் உடலைக்காதலிக்கிறான். பெண் ஆணின் பணத்தைக்காதலிக்கிறாள்

வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம்

தனக்காக வாழ்வது என்பது தற்கொலை!

சுகம் பற்றற்ற தொண்டில் இருக்கிறது. சுகம் உயிருக்காக உயிரைத்தரும் மனிதர்களை நேசிப்பதில் இருக்கிறது. வாழ்க்கைச்சங்கீதம் இரு கம்பிகளால் இசைக்கப்படுகிறது. ஒன்று தொண்டு. மற்றொன்று அன்பு. தொண்டு உலகத்தைக் களிக்கச்செய்கிறது. அன்பு மனத்தைக் களிக்கச்செய்கிறது.

வாழ்க்கை என்பது கணிதப்புத்தகமல்ல. விசித்திரமான நாவல்..!

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

வேற்றுமொழி நாவல் என்ற எண்ணமே ஏற்படாத அளவுக்கு இதை மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்களுக்குத்தான் தமிழ் உலகம் தன் நன்றியைச்சமர்ப்பிக்கவேண்டும்.

இன்னும் நிறைய காண்டேகர் படிக்கவேண்டும்...

Thursday, December 17, 2009

'ஆனந்த' மகிழ்ச்சி!


இன்று ஒரு ஆனந்தம்..!

என் கவிதை ஆனந்தவிகடன் இதழின் 44ம் பக்கத்தில் வந்திருக்கிறது.



இதில் இன்னுமொரு மகிழ்ச்சி என்னவென்றால்.. அன்புநிறை நர்சிம் அண்ணனின் கவிதை உள்ள பக்கத்திலேயே என் கவிதையும் வந்திருப்பதுதான்.

அன்புகாட்டும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இந்தக்கவிதைப்பக்கம் சமர்ப்பணம்.

நன்றி நண்பர்களே !

சுகம் எங்கே?


கதைசொல்லிகளால்தான் கதைகள் எப்பவும் மெருகடையும் என்பதில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு. சொல்லும் விதத்தில் உள்ள வேறுபாட்டால், ஒரு நல்ல கதையை சுவாரஸ்யமாகவும் ஆக்கலாம். அப்படியே சொதப்பவும் செய்யலாம்.

இந்தக்காலகட்டத்தில் பல யுக்திகள் கையாளப்படுகின்றன. ஆனால், 1940 களில் மராட்டிய எழுத்தாளர் வி.ஸ. காண்டேகர் (1898 - 1976) இந்த அற்புதத்தை சுலபமாகச்செய்துவிட்டுப்போயிருக்கிறார்.

ஞானாலயா நூலகத்தின் (இந்த நூலகத்தைப்பற்றி இன்னொரு சமயம் விரிவாக எழுதுகிறேன்) நிறுவனர் திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், 'சினிமால வேலை பாக்குறேங்கிறீங்க! இதைப் படிச்சுப்பாருங்க! ' என்று கொடுத்ததுதான் வி.ஸ.காண்டேகரின் 'சுகம் எங்கே?' என்ற நாவல்.
இதை தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்த்துள்ளார்.
இவரைப்பற்றி மேலதிக தகவல்களை முவளர் என்ற பதிவர் குறிஞ்சி எனும் வலைப்பூவில் அழகாக எழுதியுள்ளார். சுட்டி இதோ!


சுகம் எங்கே நாவலின் பாத்திரங்கள் ஆனந்தன், முத்தண்ணா, உஷா, மாணிக்கம்(பெண்), சஞ்சலா,தனஞ்சயன் ஆகியோரைச்சுற்றி பின்னப்பட்டது.

ஆனந்தன் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் , வக்கீலுக்குப்படித்திருக்கிறான். அவன் அண்ணன் முத்தண்ணா..அவர் சமூகப் பிரசங்களில் காலம் கழிப்பவர். குடும்பத்தைப்பற்றி சிறிதும் நினைப்பதில்லை. மனைவியை இழந்தவர். மீரா, பாலு என்ற இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை. ஆனந்தனும் முத்தண்ணாவும் தங்களது தாயுடன் சேர்ந்து வாழ்ந்துவருகிறார்கள். முழுக்குடும்பமும் ஆனந்தனின் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறது.

ஆனந்தன் ஒரு வேலையாக பயணிகள் படகில் செல்லும்போது, கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயலும் உஷாவைக்காப்பாற்றுகிறான். அவளுடன் பேசி தன் வீட்டுக்குக்கூட்டி வருகிறான். உஷா சிறுவயதிலேயே பெற்றோரையும் , திருமணமானவுடனே கணவனையும் இழந்து, மைத்துனரால் பாலியல் பாதிப்புக்குள்ளாகி வாழ்க்கை வெறுத்துப்போய் தற்கொலை முடிவெடுத்தவள். அன்றிலிருந்து ஆனந்தனை தெய்வமாகவே வழிபட ஆரம்பித்துவிடுகிறாள். உள்ளத்துக்குள் உண்மையான காதலும் துளிர்க்கிறது.

ஆனால், ஆனந்தனுக்கு, முத்தண்ணா தான் பிரசங்கம் செய்யுமிடங்களில் பார்த்த புத்திசாலிப்பெண் மாணிக்கத்தை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அது ஆனந்தனின் சம்மதத்துடன் நடந்தும் விடுகிறது. ஆனந்தன் ரசனை மிக்கவன். மாணிக்கமோ நடைமுறை வாழ்க்கையில் பிடிப்பானவள். பிரசங்கி, அதிகம் படித்த மமதை கொண்டவள். அவள் ஆனந்தனை இம்மியளவும் மதிக்காமல், அவனது ரசனையான அணுகுமுறைகளை, தன் உணர்வால் பார்க்காமல், அறிவால் பார்த்து முட்டாள்தனமென்று சொல்லி அவமானப்படுத்திக்கொண்டே இருக்கிறாள். உஷாவின் இருப்பு அவளுக்கு இன்னும் எரிச்சலை ஏற்படுத்தி அவளை அவமானப்படுத்துகிறாள். ஆதலால், உஷா ஒரு மகளிர் விடுதியில் போய் தங்கிக்கொள்கிறாள்.

இந்நிலையில், ஆண் வர்க்கமே தனக்கு அடிமை என்று தன் அழகில் பெருமை கொண்ட சஞ்சலா என்ற நடிகையை இன்ஷூரன்ஸ் பாலிஸி விஷயமாக ஆனந்தன் சந்திக்கிறான். அவனது அலட்சியம் அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தி, அவனை வசியம் செய்ய தன்னாலான எல்லா முயற்சிகளும் எடுத்து மயக்கிவிடுகிறாள்.

மாணிக்கத்துக்கு ஒரு செல்வந்தரான, படித்த நண்பன் தனஞ்செயன். அவனும் சேர்ந்துகொண்டு ஆனந்தனின் குடும்பத்தையே அவமதிக்கிறார்கள். இதை முத்தண்ணா மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. அதே தனஞ்செயன் சஞ்சலாவின் வீட்டுக்குள்ளும் தன் செல்வத்தை வைத்து நுழைந்து, ஆனந்தனை சஞ்சலாவை வைத்து கேவலப்படுத்துகிறான்.

இந்நிலையில், சஞ்சலாவே கதி என்று ஆனந்தன் மதுவின் பிடியில் மயங்கிக்கிடக்க, இதை அறிந்த உஷா, அவனை சஞ்சலாவின் வீட்டிலிருந்து வெளியில் கொண்டுவந்து புதிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறாள். ஆனந்தன் ஒரு குடிசைப்பகுதி மக்களுக்கு உதவும் வக்கீலாக உருவெடுக்கிறான். இருவரும் அதே குடிசைப்பகுதியில் புதிய வாழ்க்கை வாழத்துவங்குகிறார்கள். என்றாவது மாணிக்கத்துக்கு ஆனந்தனை தாரை வார்க்க வேண்டியிருக்கும் என்று உஷா பயந்துகொண்டே இருக்கிறாள். இந்நிலையில் ஒருநாள் மாணிக்கத்திடமிருந்து ஒரு கடிதம் வருகிறது.

அதில் தனஞ்செயன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அதனால் தான் கர்ப்பமடைந்துவிட்டதாகவும், இப்போதுதான் ஆனந்தன், உஷாவின் நற்பண்புகள் தெரியவந்ததாகவும், சுகம் என்பது அறிவில் இல்லை என்பதைப்புரிந்துகொண்டதாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்துவாழ்வதே நியாயம் என்றும், தனக்குப்பிறக்கும் குழந்தைக்கு ஆனந்தன் அல்லது உஷா என்றே பெயர் வைக்கப்போவதாகவும் எழுதியிருக்கிறது என்று முடிகிறது நாவல்.

இந்தக்கதையில் பல்வேறு யுக்திகளை மிகவும் அற்புதமாகக்கையாண்டிருக்கிறார் காண்டேகர். அவை..... .


(தொடரும்)

Saturday, November 28, 2009

என்ன செய்யலாம்?

லவ்டேல் மேடியின் திருமணம், ஈரோட்டில்..

கண்டிப்பாகப்போய்விடவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். திருமண கொண்டாட்டங்களை மீறி அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. ஆனால் இப்போது செய்ய ஆரம்பித்துள்ள வேலையின் திடீர் அழைப்பால் , போக இயலவில்லை. நிறைய பதிவர்கள் வருவதாக வால்பையன் கூறியிருந்தார். நண்பர்களைச் சந்திப்பதில் வெறி பிடித்தலையும் எனக்கு இது மிகப்பெரிய வாய்ப்பை நழுவவிட்டதில் பெருத்த ஏமாற்றம்தான்.

பதிவர்களின் நட்பு மிகவும் அன்பும், ஆச்சர்யமும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், உதவும் எண்ணமும் நிறைந்ததாக உணர்கிறேன். பள்ளி, கல்லூரிக்கால நண்பர்கள்கூட எங்கெங்கிருக்கிறார்கள் என கண்டுபிடித்து நட்பைத்தொடர்வது மிகவும் இயலாத சூழலாக உள்ளது. ஆனால் பதிவர் நட்பு, உலகம் முழுக்க வியாபித்து, எல்லாத்துறைகளிலும் கோலோச்சி, நம்மை வேறொரு தளத்துக்குக்
கொண்டுசெல்வதை நான் பலமுறை அனுபவித்துள்ளேன்.

இத்தகைய சந்திப்புகளை, நம் நட்பை பலப்படுத்தும் நிகழ்வாக மட்டுமின்றி, நமக்குள் இருக்கும் சமூக அக்கறைக்கு செயல்வடிவம் கொடுக்க ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்தவேண்டும் என்று விரும்புகிறேன்.

நாம் பல்வேறு செயல்பாடுகளால் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த முனையலாம். எனக்குத்தோன்றிய சிலவற்றை (ஈரோட்டில் பகிர நினைத்தவை) இங்கு பகிர்கிறேன்.

1. பதிவர்கள் அனைவரும் லஞ்சம் கொடுப்பதில்லை (வாங்குவதில்லை) என உறுதி எடுப்பது...அதை செயல்படுத்துவது!

2. பதிவர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகையில் விவசாயத்துக்கு தன் பங்களிப்பை அளிப்பது. (அதற்கான திட்டம் தயாராக உள்ளது)

3. அந்தந்தப்பகுதி பள்ளி , கல்லூரி இளைஞர்களின் படைப்புத்திறனை அதிகப்படுத்த கூட்டுப்பயிற்சிகள் அளிப்பது.

4 பதிவர் சமூகம் மூலம் ஒரு சிறு காட்டையே உருவாக்குவது ( இது சாத்தியம் )

5. நுகர்வோர் விழிப்புணர்வை நாம் இருக்கும் பகுதிகளில் நாள்தோறும் ஏற்படுத்துவது. (குறைந்தபட்சம் MRP க்கு மேல் விற்கும் பொருட்களை புறக்கணிப்பது அல்லது போராடி நியாய விலைக்கு வாங்குவது)

6. நம் பகுதி இளைஞர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அல்லது அதிகப்படுத்துவது.

7. கல்விக்கூடங்களில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகளை - ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து மின்னஞ்சல் மூலம் - அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வது.

8. இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைப்பயிற்சிகள் அளித்து அவர்களின் சுயஒழுக்கத்தை மேம்படுத்துவது.

9. எல்லாத்துறைகளிலும் நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்க்க , நாமே ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி ஆலோசனை அளிப்பது. - ( இணையம்வழிதான் )

10. இது சாத்தியமா என்று தெரியவில்லை...கொஞ்சம் ஓவராகவே இருந்தாலும்.....பதிவர்கள் பொது இடங்களில் புகைப்பதை நிறுத்துவது.


இவற்றில் சிலவற்றை சாத்தியப்படுத்தினால்கூட...மீதமுள்ளவை தானே சாத்தியமாகும் காலம் சீக்கிரம் வந்துவிடும். பின்னர்தான் என் 11 வது விஷயமான மிகப்பெரிய திட்டத்தைக் கூற முடியும்.


இது முதலில் படிக்கும்போது சிறுபிள்ளைத்தனமாகவோ, லூசுத்தனமாகவோ இருந்தால்....மன்னிக்கவும்!

எனக்கு நம்பிக்கையிருக்கிறது.







Friday, November 27, 2009

வாழ்த்துக்கள் மேடி


நமது அன்புப்பதிவர், நண்பர் லவ்டேல் மேடிக்கு இன்று திருமணம்...!




அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற்று



அன்பே அரசாய்
அறிவே அமைச்சாய்
அறமே அரணாய்
இல்வாழ்க்கை அமைய
எல்லோரும் வாழ்த்துவோம்....!




Saturday, November 7, 2009

மகிழ்துக்கம்...!


மறுபடியும் யூத்புல் விகடனில்...கவிதை!

இன்னிக்கு யூத்ஃபுல் விகடனில் என் கவிதை வந்திருக்கு! ஆச்சர்யமா இருக்கு!




கவிதை இதுதான்..!


காணாமல் போன
தோழியைத் தேடும் முயற்சியில்
காவலர்கள் வந்து
பார்க்கச்சொன்ன,
விபத்தில் இறந்த பெண்ணை
அடையாளம் காட்டும்
அந்த விநாடியில்
அவளில்லை என்று
சொல்லும்வரை
பரிதவித்த மனம்
அகமகிழ்ந்தாலும்
அடுத்து
யாரோ ஒருவனுக்கு
அந்தப் பெண்ணை
’அவள்தான்!’
என்று கூறவேண்டியதன்
அவலம் கொஞ்சம்
அதிகமாகவே கனத்தது.

நன்றி: யூத்ஃபுல் விகடன்.காம்

இறைவி - எண்ணங்கள் எனது !

 ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...